அந்த இளைஞன் சங்கரனைப் பார்க்கிற போதெல்லாம் புதிராகத் தெரிந்தான் ராமசாமிக்கு. அவனது உள்மனசைக் கிளறி உண்மையை உதடுகளுக்கு வரவழைக்க வேண்டும் என வதைக்கிற சந்தேகச் சித்ரவதை. நல்ல உயரம், ஓரளவு நிறம் வளையாத பனைமரம் போல உறுதியுடன் சீரான தேகம். எந்த நேரமும் ஏதோ தேடலுடனான பார்வை. எதையோ பறிகொடுத்தவன் போல இயல்பின்றி இறுக்கமான முகம். வார்த்தை கொடுத்தாலன்றி வலிய வராது விலகியே செல்கிற சுபாவம். இது ஒரு பக்கமிருக்க, இதையெல்லாம் மிஞ்சுவது போலவும், அவனைப் பற்றிய அனுமானம் அடிவயிற்றைக் கலக்கி அஜீரணமாவது போலவும் ‘அந்தப் பயல் சங்கரன் எங்க ஊரு தான். பழக்கமில்ல; ஆனா நல்லாத் தெரியும். தேவையில்லாத பிரச்சினைகள்ல மூக்கை நுழைச்சு வீண் விவகாரம் பண்ணுவான். ஊர்ப்பிரச்சினை அது இதுன்னு கண்டவங்க கூட விவகாரம் பண்ற சண்டியர். எதுக்கும் அவன் மேல ஒரு கண்வையுங்க’ என நேற்று சங்கரனின் சொந்த ஊரிலிருந்து இந்த அலுவலகத்தில் தங்குவதற்காக வந்திருக்கிற அரசு ஊழியர் தேவதாஸ் சொல்லியிருந்த வார்த்தைகள் நெற்றியடியாய் கிறுகிறுக்கச் செய்கிறது. ‘அந்தப் பையன் ராத்திரி வரவும், ‘நீங்க இங்க தங்கினது; போதுமப்பா. இனி வேற எடம் பாரு’ ன்னுச் சொல்லிற வேண்டியதுதா’ என்று தீர்மானம் பண்ணியவாறு அலுவலகத்தில் அங்கிட்டும் இங்கிட்டுமாக நடந்து கொண்டிருந்தார் அறுபது வயசு ராமசாமி.
இந்தப் பொது அலுவலகத்தில் தங்கிக் கொள்வதற்காக தனது சொந்த ஊரிலிருந்து இந்த அலுவலகத்திற்கு நெருக்கமான தொடர்புடைய ஒருவரிடமிருந்து வாங்கி வந்திருந்த சிபாரிசுக் கடிதத்தைத் தவிர, சங்கரனுக்கும் இந்த அலுவலகத்திற்கும் வேறெந்த சம்பந்தமும் இல்லை.
அவன் இங்கு வந்து தங்க ஆரம்பித்து பத்து நாட்களுக்கும் மேல் ஆகி விட்டிருந்தது தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து குளித்து முடித்து, ஆறு மணிக்கெல்லாம் வெளியில் கிளம்பிப் போகிற அவன், இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் திரும்ப வருகிறான். இடைப்பட்ட நேரத்தில் ஒருநாள் கூட வந்தது இல்லை. இரவு வந்ததும் படுப்பதும் இல்லை. ஏதேதோ சிந்தித்த வண்ணமிருக்கிறவன், நடுநிசிக்கு மேல் உறங்குவதுண்டு.
‘இங்கு வந்த முதல்நாளே சென்னைக்கு வந்த நோக்கம், இங்கு பல தினங்கள் தங்கப் போவதின் அவசியம் பற்றித்துருவி விசாரிக்காமல் விட்டது தப்போ?’ என்று தோன்றியது ராமசாமிக்கு. இந்த அலுவலகத்திற்கு அவன் இந்த கோலம் அப்படி. அந்தக் கணத்தில் அவனுக்கு உதவ வேண்டுமெனத்தான் தோன்றியதேயன்றி துருவி விசாரிக்க மனமில்லை.
அன்று – காலை ஏழரை மணி.
பெருத்த இரைச்சலுடன் பேய்மழை குமிறிக் கொட்டிக் கொண்டிருக்க, வேகமாய் வந்த ஆட்டோ ஒன்று அலுவலக வாசலில் நின்றது. முகமெங்கும் மழை நீர் சொட்டச் சொட்ட அந்த ஆட்டோவுக்குள்ளிருந்து முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞன் சங்கரன் சிறிய தோள்பை ஒன்றைச் சுமந்தபடி அலுவலகத்திற்குள் வந்து நின்றான்.
ராமசாமிக்கு ஒன்றும் விளங்கவில்லை. “யாரப்பா நீ? என்ன விஷயம்?” எனக்கேட்டார்.
நெற்றியில் வழிந்தோடிய மழை நீரை ஆள் காட்டி விரலால் நீவி வழித்தபடி, ‘ நா கூடலூருக்குப் பக்கத்திலிருந்து வாறேன். மெட்ராசுக்கு வேல விஷயமா வந்திருக்கேன். சில தினங்கள் இந்த ஆபிசுல தங்கணும்.’ என்றான், பின் தோள் பையைத் திறந்து பளுப்பு நிறக்கவர் ஒன்றை எடுத்தவன் ‘இதோ சிபாரிசுக் கடிதம்’ என்றபடி அவரிடம் நீட்டினான்.
வானவிலை மனசில் உறுத்த, சேரிதம்பி.. ரெண்டாவது மாடியில போயித்தங்கிக்க’ என்று அனுமதித்தார்.
சங்கரனின் மழை நீரால் கசங்கிய முகத்தில் மலர்ச்சி. பிளாட் பாரவாசிகள் பெருத்த நகரில் புகழிடம் கிடைத்தப் பூரிப்பு. மறு நொடியே மாடிப்படிகளில் தாவி ஏறியவாறு மேலே போனான். அப்புறம் சிறிது நேரத்திலேயே குளித்து முடித்து, உடை மாற்றி மழைத்தூறலில் நனைந்தவாறே வெளியில் போனான்.
‘வந்ததும் வராததுமா இந்தத் தூரல்ல நனைஞ்சிட்டுப் போறளவுக்கு அப்படி அவனுக்கு என்ன தான் தலைபோற அவசரம்னு தெரியல’ என்று முழித்தார் ராமசாமி.
நாட்டு நடப்பு அவரது உள்மனசை உலுக்குகிறது. அவனைப் பரிவுடன் தங்கிக் கொள்ள அனுமதித்தது, அவசரப் புத்தியோ?’ என அங்கலாய்ப்பு, ‘நாட்ல எங்க பாத்தாலும் குண்டு வெடிப்புக் கதியா இருக்குது. முன்பின் தெரியாதவங்களயெல்லாம் இப்டி அனுதாபப்பட்டு தங்கிக்க அனுமதிச்சுடறோமே… ஏதாவது ஏடாகூடமாயிட்ட எனக் குழம்பிப் போயிருந்தவருக்கு, அவன் வந்த முதல் நாளே தூக்கம் துப்புரவாக இல்லை. விரித்திருந்த ‘பெட்ஷ“ட்’ட்டில் அங்கிட்டும் இங்கிட்டுமாக புரண்டு புரண்டு படுத்தார். தலைக்கு மேல் சுற்றுகிற காற்றாடியைப் போலவே, மூளைக்குள் ஆற்றாமை ராட்டினமாய் சுற்றியது. பின், ‘சரி… விடியட்டும் அந்தப் பையன்கிட்டத் தீரமா விசாரிச்சுடலாம்’ என தனக்குள் சமாதானம் பண்ணிக் கொண்ட பிறகே உறக்கம் வந்திருந்தது.
மறுநாள் காலை சங்கரன் குளிப்பதற்காக சோப்பு டப்பா, டவல் சகிதமாய் கீழ்தளத்திற்கு வந்த போது, திடுமென்று விழித்துக் கொண்டபடி எழுந்து உட்கார்ந்தார். அவனைப் பற்றிய முழு விபரங்களையும் அலசிக் கேட்பதற்காக நாவில் ஆவல். கடுந்தவம் போலான விபரம் அறிவதற்கான இரவு விழிப்பினால் தூக்கக் கலக்கத்தில் இமைச் சொக்குதலையும் மீறி அகலக் கண் விரித்து அவனைப் பார்த்தார். விசாரிக்க இதயம் எத்தணிக்கிறது. ஆனால், உள்ளுக்குள் தயக்கம். சில மாதங்களுக்கு முன்பு இந்த அலுவலகத்தில் தங்கியிருந்த ஒருவரை விசாரிக்க, அவன் வெடித்து விட்டான். ‘நாந்தான் இந்த சங்க அலுவலகத்து முக்கியமான ஆளுகிட்டேயிருந்து கடிதம் வாங்கி வந்திருக்கேனே! அப்புறம் எதுக்கு, ஏதோ திருடனக் கண்டது கணக்கா இப்படித் துருவித் துருவி விசாரிக்கிறீங்க?’ என்று.
ராமசாமிக்கும் கோபம் வந்துவிட்டது. ‘நாங் கேக்காமெ வேறெந்தப் பய கேப்பான்? இங்க நாந்தான பொறுப்பாளி?’ என்று முதியவரானாலும் முறுக்கி நின்று கேட்டார்.
பக்கத்திலிருந்தவர்கள் சமாதானம் பண்ணிவிட்டிருந்தார்கள்.
– அந்தச் சம்பவம் மனசில் சலனமிட, ‘அந்த ஆளப் போல சங்கரணும் கோவிச்சிட்டா? தர்மசங்கிடமாயிருமே!’ என்றெண்ணிப் பேசாமலிருந்து விட்டார்.
ஆனாலும், சங்கரன் மீதான சந்தேக மன அரிப்பு மட்டும் சன்னங்கூட மட்டுப்படாதிருந்தது. ஓயாது உள்ளுக்குள் புலுங்கினார். அவன் மீது தினமும் சந்தேக வலை பின்னியபடியே இருந்தது அவரது பார்வை. ‘முன்னூறு மைல்களுக்கப்பால் இந்தப் பெரிய நகரத்துல வந்து என்னத்தப் பண்ணப் போறானோ?’ துவம்சம் செய்கிற புலப்படாத புதிர்க் கேள்விகள். ‘உள்ளூர் பயல்கள் படிச்சிட்டு ஆயிரமாயிரமா வீதியில அலையுறப்போ, எதுக்கு இப்டி இங்க வந்து அழுக்குச் சட்டை, வறண்ட தலையுமா அலையணும்? என்னதான் படிச்சவனாயிருந்தாலும் அவ்வளவு சுலபமா வேல கெடைச்சிருமா என்ன? இந்தப் பட்டிக்காட்டானுக்கு யார் வேல தருவாங்க?’ புழுதியும், புகைச்சலுமாய் நெஞ்சு நிம்மதியின்றி அற்றலைந்து கொண்டிருந்தது.
‘சங்கரன் வரவும் இனி இந்த ஆபீஸ்ல தங்க வேணாம்… வேற ஏதாவது எடம் பாத்துத் தங்கிக்கோனு தறாராச் சொல்லிறணும்’ என்று மனசுக்குள் அசை போட்டபடி அவனது வருகைக்காக அவன் தங்கியிருக்கிற இரண்டாவது மாடியில் அவனை எதிர்பார்த்து, மரப்பெஞ்சில் பத்திரிகை ஒன்றைப் புரட்டியபடி உட்கார்ந்திருந்த ராமசாமி.
அந்த அலுவலகத்துக்குக் கீழ் வீதியில் திடீரென மனிதக் குரல்களின் மல்லுக்கட்டுகிற சலசலப்பு ஓசை செவிகளில் வந்தறைய, எதுவும் விளங்காது மாடிப்படியிறங்கி அப்படியே கீழே வந்து வாசலில் நின்று பார்த்தார்.
அலுவலகத்தின் முன்பிருக்கிற சுவரின் ஓரம் பெரிய கும்பல் நின்றிருக்க, அவரும் அந்தக் கும்பலுடன் வந்து நின்று கொண்டார்.
அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.
ஆபாச சினிமா போஸ்டர் ஒட்டுகிற ஆசாமி ஒருத்தன், எதிரே உள்ள சுவரில் அந்தப் போஸ்டரை ஒட்டப் போக ஆயத்தப்படுவதும்,
சங்கரன், “டேய்… ஒனக்கெல்லாம் கொஞ்சமாவது அறிவிருக்குதா? நீ மனுஷன்தானா? பார்டா நல்ல. எதிர்த்தாப்ல இருக்குறது ஒரு பொது அலுவலகம். இந்த மாநிலம் பூராவிலிருந்தும் அந்தச் சங்கத்தச் சேர்ந்த பெண் ஊழியருங்க அடிக்கடி வந்து போறாங்க. அப்டி இருக்கையில், இந்த ஆபீஸ் முன்னால – பல குடும்பங்க பொழைக்கிற இந்த எடத்துல வந்து ஆபாச சினிமா போஸ்டர் ஒட்றியே” என்று அதிரும் குரலில் கூறியவாறு அவனை ஆபாச போஸ்டர் ஒட்ட விடாது இடை மறித்து நிற்பதும் தெரிகிறது.
அந்த ஆள், “நா போஸ்டர் ஒட்டாமப் போக மாட்டேன். நீ என்னடா பண்ணுவ?” என்று சங்கரனை முறைத்து எகிற,
“நீ ஒட்றதுக்கு நா விடவேமாட்டேன். அதனால என்ன எதிர் விளைவு வந்தாலும் சரித்தான்” கூறிக் கொண்டே மீண்டும் அவனை சுவரை நெருங்க விடாது மறித்து நிற்கிறான், சங்கரன்.
இப்படியாக இருவருக்குமிடையில் காரசாரமான வாக்குவாதம்! போஸ்டர் ஒட்டப் போவதும்; ஒட்ட விடாததுமாய் அவரவர் குறிக்கோளில் எள்ளளவும் இறங்கி வராத உடும்பின் உறுதி.
இறுதியில், “என்ன எதிர் விளைவு வந்தாலும் சரித்தான்” என்ற சங்கரனின் வீர்யமான துணிச்சலில், ஆபாச போஸ்டர்காரனின் அற்ப முயற்சி அப்பளமாய் நொறுங்கிப் போனது. அவன் மீண்டும் பசை வாளியையும், போஸ்டரையும் சைக்கிளில் வைத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகன்றான்.
கும்பலும் கலையத் துவங்கியது.
நடந்தவற்றையெல்லாம் நங்கூரப் பார்வையால் ஆழ்ந்து விழுங்கி நெகிழ்ந்து போனார் ராமசாமி. அவ்வளவு சீக்கிரமாய் மீள முடியாத ஆச்சர்யம். ‘நமக்கேன் வம்பு?’ என இந்தத் தெரு வாசிகளே ஆபாசப் போஸ்டரை அனுசரித்துப் போயிருக்க, நூற்றுக்கணக்கான மைல்களுக்கப்பால் இருந்து வந்த சங்கரன், அதை மறுதலித்து மல்லுக்கு நிற்கிற தைரியம் அவரை நெஞ்சுருகச் செய்தது. வேகமாய் அவனுக்கு அருகில் போனவர், அவனைப் பற்றிய கலங்கலான எண்ணத்தைக் கழுவித் துடைத்தபடியும் நெஞ்செல்லாம் நிம்மதிவாசம் மணக்கவுமாய்,
அவனது கைகளை இருகப் பற்றினார். “என்னப்பா சங்கரா? பிரச்சினை முடிஞ்சதா? ஆபாசப் போஸ்டர்காரன் திரும்பிப் போயிட்டான் போல. சங்கரன், ரியலி யூ ஆர் அவுட் ஸ்டாண்டிங் யூத் ஆஃப் திஸ் கன்ட்ரி” என்றவர். “வா நம்ப ஆபீஸ்ல தங்கிக்கிறலாம். நான் அனுமதி வாங்கித் தாறேன்” என்றவாறு அவனை அரவணைத்தபடி அலுவலகம் நோக்கி நகர்ந்தார். ‘இதைத்தான் ஒங்க ஊர்ல சண்டியர்த்தனம்னு சொல்றாங்களா? இது மட்டுமில்ல தம்பி இதே ரோட்ல கேடிகளோட மாமூல் வசூல் அது இதுன்னு நிறையக் கோளாறு இருக்குது. நிறையக் கோளாறு இருக்குது. ஒன்னப் போல இளைஞர்களாலதான் அதுக்கெல்லாம் ஒரு விடிவு வரும்’ – சொல்லிக் கொண்டே அவனுடன் அலுவலகத்திற்குள் நுழைந்த ராமசாமியின் கண்களில் சங்கரனைப் பற்றி புகார் கூறிய அரசு ஊழியர் தேவதாஸ்!
வெட்கிக் குனிந்திருந்த அந்த ஆள் முகத்தில் உயிரில்லை.