யதேச்சை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 20, 2017
பார்வையிட்டோர்: 7,840 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

மகா சமுத்திரத்தில் மிதக்கும் இரண்டு சிறு மரத்துண்டுகள் தற்செயலாக ஒரு கணம் தொட்டு மீண்டும் பிரிவது போல யதேச்சையாக சில சம்பவங்கள் நடந்து விடுகின்றன. இவை சமயங்களில் பாரதூரமான விளைவுகளக்கும் காரணமாகி விடுகின்றன. இவற்றின் பெறுபேறுகளை முன்கூட்டியே சொல்லும் வல்லமை யாருக்கு இருக்கிறது?

தொண்டுக்கிழவி கையை முண்டு கொடுத்து எழுப்புவதுபோல மெதுவாகத்தான் அன்று விடிந்தது. அது ஒரு வெள்ளிக்கிழமை. பங்குனி மாதத்தின் முற்பகதி. ஆப்கானிஸ்தானின் தெற்கு மலைச்சிகரங்கள் வெள்ளி முடிதரித்து கண்ணைப்பறித்துக் கொண்டிருந்தன. அனாதிகாலமான ‘அறக்கூஸ’யா’ என்று அழைக்கப்பட்டு அலெக்ஸாந்தரால் கண்டஹார் என்று நாமம் சூட்டப்பெற்ற அந்த நகரம் சலசலத்துக்கொண்டிருந்தது. ஷார்வாலி மைதானத்தை நோக்கி சனங்கள் எல்லாம் ஒருவித பதட்டத்துடன் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள். தாலிபான் படையினர் அங்கங்கே முச்சந்திகளிலும், நாற்சந்திகளிலும் நின்றவாறு வாகனங்களையும், பயணிகளையும், பாதசாரிகளையும் பரிசோதித்து மைதானத்துக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள். சனக்கூட்டம் சேரச்சேர அந்த இரைச்சல் ஓவென்று எழுந்துகொண்டிருந்தது. இந்த ஆரவாரங்களுக்கெல்லாம் பரபரப்பான ஒரு காரணம் இல்லாமலில்லை.

ரஸ்ய துருப்புகள் படு தோல்வியடைந்த பிறகும் நாஜிபுல்லாவின் ஆட்சி சிறிது காலம் நீடித்தது? ஒரு நாள் அவரும் கீழிறக்கப்பட்டு குரங்கு அப்பம் பிரித்த கதையாக ஆப்கானிஸ்தான் துண்டு துண்டாகப் பங்கு போடப்பட்டது. அப்போது நடந்த மாணவர் புரட்சியில் சில இடங்கள் தாலிபான் வீரர்கள் வசம் சிக்கின. அப்படிச்சிக்கிய நகரங்களில் ஒன்றுதான் கண்டஹார்.

தாலிபான் வீரர்களுக்கு ஓர் அதிசயமான கட்டளை. அதை நிறைவேற்றுவதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். குறைந்தபட்சம் நாலு விரற்கடை நீளம் தாடி உள்ளவர்களே அந்த மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். நீளமான தாடி வாய்ந்தவர்கள் கைகளை வீசிக்கொண்டே உல்லாசமாக உள்ளே போனார்கள். கொஞ்சம் குறைந்த தாடிக்காரர்கள் தாலிபான் வீரர்களால் மேலும் கீழும் துப்புரவாக ஆராயப்பட்டனர். இன்னும் சிலரோ தங்கள் குறும்தாடிகளின் வீரப்பிரதாபங்களை எவ்வளவோ எடுத்துரைத்தும் நிர்த்தாட்சண்யமாக விரட்டி அடிக்கப்பட்டனர்.

அனுமதி மறுக்கப்பட்டவர்கள் திரும்ப மனமில்லாமல் துடக்கு வீட்டுக்கு வந்தவர்கள்போல எட்டத்தில் நின்று எட்டியெட்டிப் பார்த்தார்கள். மாடு மேய்க்கும் சிறுவர்கள் தங்கள் காரியத்தை மறந்துவிட்டு இந்த விசேஷத்தில் மனதைப்பறிகொடுத்து அங்கேயே நின்றார்கள். இன்னும் சில சவலைப்பிள்ளைகள் ‘வெக்கத்தைக் காட்டிக்கொண்டு’ அங்கங்கே அரைப் புள்ளிகளாகவும், கால் புள்ளிகளாகவும் சிதறிக்கிடந்தனர்.

இந்தச் சந்தடிகளில் அகப்படாது வெகுதூரத்தில் இருந்த ஒரு வீட்டின் தாழ்வாரத்திலே நின்று அந்தக் கிழவர் வெளியே செல்வதற்கு சாவதானமாக தன்னை ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். இன்று நடக்கப்போகும் விழாவில் அவர்தான் நாயகன்; சிலர் அவரை எதிர் நாயகன் என்றும் சொல்லக்கூடும். கிழவனாருக்கு வயது அறுபதைத் தாண்டிவிட்டது என்றாலும் என்ன கம்பீரமான உருவம்!

நாற்சார் வீடு ரஸ்யக் குண்டுவீச்சின் அனுக்கிரகத்தால் ஒருசார் வீடாக மாறியிருந்தது. பழைய காலத்து மன்னர்கள் கட்டியது போல சற்சதுர ஓட்டைகள் அங்கங்கே துப்பாக்கியால் சுடுவதற்கு வாகாக விடப்பட்டிருந்தன. முற்றத்தை ஓட்டியபடி இருக்கும் குடிசைதான் பெண்களின் ராச்சியம். கிழவரின் ஆட்சி தாழ்வாரத்தோடு முடிந்துபோகும்.

இப்படியான வீடுகளில் இன்ன பிராயத்தினருக்கு இன்ன வேலை என்று ஒரு வரைமுறையிருக்கும் இருபதுபேர்கொண்ட கூட்டுக்குடும்பம் அது. கிழவி வாசலிலே குந்தியிருந்து தயிர்க்கட்டிகளை உருட்டி உருட்டி வெய்யிலில் காயவைத்துக் கொண்டிருந்தாள். நல்ல கற்களாய் பொறுக்கி வைத்து ‘உறக்ஷா’ கிழவிக்கு ஒரு கண் குருடு. அண்டங்காக்கா ஒன்று தலையைச் சாய்த்துக்கொண்டு அடிக்கடி வந்து கிழவியை ஏய்க்கப்பார்த்தது. கிழவி விடுவதாக இல்லை; ஒற்றைக் கண்ணும் கருத்துமான இருந்தாள். இது பார்க்க வேடிக்கையாக இருந்தது.

இந்த நேரத்திலே வழக்கமாக வீட்டிலே உள்ள ஆண்கள் வயல்வெளிக்கும், சிறுபிள்ளைகள் சுள்ளி பொறுக்கவும் போய்விடுவார்கள். அந்த வீட்டுப் பெண்களுக்கோ தாங்கள் பெற்றுப்போட்ட பிள்ளைகளைப் பார்க்கவே நேரம் சரியாக இருக்கும். யௌவன வயதிலே விதவையான பெண்களுக்கென்று விதிக்கப்பட்ட தொன்றுதொட்ட வேலைகள் ரஸ“மாவுக்காக காத்திருக்கம் நாள்தோறும் சூரியன் முதுகிலே அடிக்கும் வரை துணிகளை கைவலிக்க அடித்து அடித்து துவைத்துக்கொண்டிருப்பாள். அது முடிந்ததும் தலை நிமிர்த்த முடியாத சமையல் வேலைகளில் மூழ்கிவிடுவாள்.

ஆனால் இன்று அவளுக்கு இன்னுமொரு முக்கிய வேலை இருந்தது. சாக்குப்பையில் கட்டி கூரையில் தொங்கவிட்டிருக்கும் ‘லாண்டி’ இறைச்சியில் கிழவருக்கு மனம் லயித்துவிட்டது. குளிர்காலம் முடிகிறது காரணமாயிருக்கலாம்; அல்லது விசேஷமான இந்த நாளைக் கொண்டாடுவதற்காகவும் இருக்கலாம்.

உப்புப்போட்டு வெய்யிலில் காயவைத்து முறுகிப்போன இறைச்சிக் கீலங்களை ஒவ்வொன்றாக எடுத்து ஒரு கனமான தடியினால் அடித்து மெதுவாக்கிக்கொண்டிருந்தாள். பெரிய சட்டியில் ‘ஷோர்வா’ என்று சொல்லப்படும் சூப் காய்ச்சும்போது இந்த இறைச்சித் துண்டுகளும் போடப்படும். சூப் கொதித்த பிறகு இறைச்சியைத் தனிய எடுத்து வைத்துக்கொண்டு சட்டியிலே சோளரொட்டியை போட்டு நனைய வைத்து ஆண்கள் எல்லாரும் சுற்றிவர இருந்து சாப்பிடுவார்கள். அதற்குப் பிறகு இறைச்சித் துண்டுகளை பங்குபோட்டுக் கொண்டு சுவைப்பார்கள்.

பெண்கள் சாப்பாடு பிறகுதான். அல்லாவின் கடாட்சம் இருந்தால் இன்று ரஸ“மாவுக்கு ஒரு கீலம் இறைச்சி கிடைக்கக்கூடும்.

கிழவி எறிந்த கல்லிலே காகம் ஒன்று எவ்விப்பறந்தது. கிழவி கல்லாலே எறியும் போதெல்லாம் ரஸ“மாவின் நெஞ்சிலேபட்டதுபோல இருந்தது. ஆணையும் பெண்ணையும் நிறுத்திவைத்து கல்லாலே எறிந்து கொல்வார்களாம். தாலிபான் ஆட்சியில் அப்படித்தான் என்று பேசிக்கொள்கிறார்கள். அதோடு ஒப்பிடும்போது இன்று நடக்கும் நாடகம் எவ்வளவோ மேல் என்று அவளுக்கு தோன்றியது.

ஒரு நிக்காஹ் வீட்டிற்கு போவதுபோல அவ்வளவு நிதானமாக கிழவர் தன்னை அலங்கரித்துக்கொண்டார். நீண்ட வெண்தாடியை நீவிவிட்டு, வெள்ளைச் சல்வாரைப் போட்டு இடைக்கயிற்றை இறுக்கி முடிச்சுப்போட்டார். ஸ்வத்துவில் இருந்து அவர் வரவழைத்த பச்சைக்கரை போர்வையை எடுத்து வலது தோளில் போட்டு இடது கக்கத்தில் இடுக்கிக்கொண்டார். ஷாம்ளா துணியை நாலு சுற்றுச்சுற்றி தலைப்பாகை கட்டி குஞ்சம்போல மீதித்துணியை இடது தோள்மேல் தொங்கவிட்டார். விசிறி மடிப்பு உயரமாகவும் கலாதியாகவும் இருக்கவேணும் என்பதில் கிழவருக்கு மிகுந்த கவனம். ‘கலையாத கம்பீரத்துக்கு குலையாத விசிறி மடிப்பு’ என்ற புஷ்து பழமொழியை நன்றாக அறிந்தவர் அவர்.

ரஸ“மா இவருடைய எடுப்புச்சாய்ப்புகளை தலையை மூடியிருந்த சாதர் துணியின் இடுக்கு வழியாக ஓர் அருவருப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் மனத்திலே அடித்த பிரளயத்தை அவள் கண்கள் காட்டவில்லை. அவளுடைய மாமனாரின் இந்த அட்டகாசமான அலங்காரம் அவளுக்கு எரிச்சலாக இருந்தது.

வீட்டில் உள்ள மற்றப்பெண்களும், பிள்ளைகளும் ஓர் அதிசயமான எதிர்பார்ப்புடன் இவரை வழியனுப்பிவைக்க வந்தார்கள். சுவரிலே மாட்டியிருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டார். பல்லுத்தீட்ட கரியிருக்கும் வீடுகளிலெல்லாம் துப்பாக்கியும் இருக்கும். பரம தரித்திரத்தின் என்றாலும் அன்றாட பாவிப்புக்கு ஒரு துப்பாக்கி அவனிடம் இல்லமலிருக்காது. இந்தத் துப்பாக்கியே ஒரு பால் மாட்டை விற்று அவர் வாங்கியதுதான். கிழவனார் அதைத் தூக்கிக்கொண்டு வெளியே போகக்காலடி வைத்தார். ரஸ“மாவின் மனம் வேதனையில் வெடித்துவிடும் போல் பொங்கியது. கையிலே இருந்த கனமான தடியினால் ‘லான்டி’ இறைச்சியை பலம்கொண்ட மட்டும் அடிக்கத்தொடங்கினாள்.

அந்தத் திடல் இப்படியான நெரிசல் கூட்டத்தை இதற்குமுன் கண்டதில்லை. இதுமாதிரி விவகாரமும் அங்கே நடந்ததில்லை. சனங்களின் பதட்டத்துக்கும், ஆவலுக்கும் ஈடுகொடுக்கக்கூடியதாக அந்த மைதானம் அமைந்திருக்கவில்லை. ரஸ்ய விமானங்கள் விளைவித்த அழிவுகளை, தாலிபான் தேசப்பிதாக்கள் மேலும் விருத்தியாக்கியிருந்தனர். கட்டிடங்களும், சுவர்களம் சுற்றிவர அரை இடிபாடுகளுடன் நின்றன. நடுவிலே பஷகனா மரம் ஒன்று மெலிந்துபோய் நின்றுகொண்டிருந்தது. ஒலிபெருக்கிக்காரர்கள் ஒலி பெருக்கியின் வாய்களை மரங்களிலும், சுவர்களிலும், பஸ்களின் கூரைகளிலும் கட்டிவைத்து சரிபார்த்தார்கள்.

சனங்கள் மத்தியில் கலகம் மூளாதவாறு காருண்யத்தோடு பார்த்துக்கொண்டார்கள் படைவீரர்கள். இந்தக்காரியத்தை அவர்கள் திமிசுக்கட்டை பூட்ஸ் ஒலியாலும், கனமான துப்பாக்கியின் அடிப்பாகத்தாலும் நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள். எந்தத்திசையிலிருந்து மரணத்தைதியைக் கொண்டுவருவார்கள், எங்கே நிறுத்துவார்கள் என்ற விபரம் ஒருவருக்கும் தெரியாததால் சனக்கூட்டம் தங்கள் இருப்பிடங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டிருந்தது.

அப்போது புழுதி அப்பிய லாரியொன்று வந்து சடக்கென்று நின்றது. நீண்ட தாடிகளோடு மூன்று தாலிபான் நீதிபதிகள் இறங்கினார்கள். ஒருவருக்கு வெண்தாடி, அடுத்தவருக்கு வெள்ளையும் கறுப்பும் கலந்த தாடி, அதற்கடுத்தவருக்கோ முற்றிலும் கறுப்பு நிறத்தாடி. இப்படியாக ஒரு ascending order ல் இந்த தாடிச்சங்கதி இருந்தது. அவரவர்களுக்கு நியமித்த இடங்களில் போய் இருந்து கொண்டார்கள். மூத்தவராய் தெரிந்தவர் எழுந்து ஒலி பெருக்கியில் பேச்த்தொடங்கினார்.

‘பிஸ்மில்லா அ ரஹ“மான். படுபாதகமான ஒரு கொலையைச் செய்த காசிம் அலேமி என்பவருக்கு தண்டனை கொடுப்பதற்காக நாங்கள் இங்கே கூடியிருக்கிறோம். தாலிபான் நீதி மன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்திருக்கிறது.’

அவர் கையை உயரத்தூக்கிக்காட்டியதும் இரண்டு தாலிபான் வீரர்கள் பலியாட்டை கொண்டு வருவதுபோல் மரணக்கைதியை இழுத்து வந்தனர்.

காசிம் அலேமி ஓர் அழகன். நிமிர்ந்த முதுகு, சிவந்த தேகம், நேரான தாடி, நீலநிறக்கண்கள். இன்று அவனை இழுத்து வந்தபோது அவன் உடம்பு கூனிக்குறுகி உருக்குலைந்துபோய் இருந்தது. இளைத்து எலும்புகள் தெரிந்தன. கைகள் பின்னுக்கு கட்டப்பட்ட நிலையில் பரிதாபமாக இருந்தான்.

கைகளைத்தான் கட்டமுடியுமேயன்றி அவன் மனதைக்கட்ட முடியவில்லை. விட்டகுறை தொட்டகுறை போலத்தான் அவர்களுடைய சிநேகம் இருந்தது. அந்தச்சிறு வயதிலேயே ரஸ“மாவுக்கு அவனிடத்தில் ஒரு தீராத பிரேமை. சுள்ளி பொறுக்கும் சாட்டில் அவனுடனேயே சுற்றிக்கொண்டிருந்தாள். விவரம் தெரியாத அந்தப்பிராயத்தில் அவர்களக்குள் பேசி எத்தனையோ முடிவுகள் எடுத்துக்கொண்டார்கள். விளையாடுவதை விட்டுவிட்டு காசிம் சில சமயம் ரஸ“மாவை உற்றுப்பார்த்தபடியே இருப்பான். அப்போதே அவளுக்கு ஒரு சிறு அசைப்பில் கன காரியம் சொல்கிற கண்கள்.

அவள் மொட்டவிழித்ததும், காரியங்கள் கிறுகிறுவென்று ஒப்பேறின. காசிம் சிறுவன்தானே. அவனை யாரும் கணக்கில் சேர்த்துக்கொள்ளவில்லை. அஹமத் அப்பொழுதே ஒரு முழு ஆம்பிளை. அஹமத்துக்கு ரஹ“மாவை மணமுடித்து வைக்கும் போது அவளுக்கு வயது பதின்மூன்றுதான் அஹமத்துக்கு ஒரு தம்பி இருந்தான், நியாஸ’ என்று பேர். நியாஸ’க்கு அப்போது மூன்று வயது. ரஸ“மாவுக்கும் நியாஸ’க்கும் இடையில் பத்து வயசு வித்தியாசம். மணமுடித்த புதிதில் ரஸ“மாவுடைய பொழுது நியாஸ’யை தூக்கிவைத்து விளையாட்டுக் காட்டிக் கொண்டிருப்பதிலேயே கழிந்தது.

இரண்டு வருடம் போனபிறகு அவள் தலையிலே ஒரு பெரிய இடி வந்து விழுந்தது. அவள் கணவன் அஹமத் கண்ணிவெடி ஒன்றிலே சிக்கி இறந்துவிட்டான். போர்க் காலத்தில் ரஸ்ய விமானங்கள் போட்ட கண்ணிவெடிகள் முழுவதையும் அகற்ற அறுபது வருடம்வரை எடுக்கும் என்று கணக்கு சொல்லிக்கொண்டார்கள். மாதத்திற்கு ஒருவராவது கண்ணிவெடிக்கு பலியாவது வழக்கம். இந்தமுறை கொசுவத்திச் சுருள்போல கிடந்த வெடி ஒன்றில் அஹமத் மாட்டிவிட்டான்.

அவர்கள் வழக்கப்படி இனி அவள் நியாஸ’க்குத்தான் வாழ்க்கைப்படவேண்டும். விதவையான ரஸ“மா, ஐந்து வயதான நியாஸ’யை இடுப்பிலே தூக்கி வைத்துக்கொண்டு திரிந்தாள். ஊர்ப்பெண்கள் எல்லாம் ‘என்னடி, உன்ர புருஷன் இடுப்பையே விட்டு இறங்கமாட்டாரோ? என்று கேலி செய்வார்கள். ‘வடலி வளர்த்து கள்ளுக்குடிப்பதுபோ’ நியாஸ’யை வளர்த்து சீக்கிரத்திலே அவள் தனக்கு ஒரு மணவாளனைத் தயார் செய்து கொண்டுவிடவேண்டும்.

சொட்டு சொட்டாக பால் கறந்து பாத்திரம் நிறைவது போல நியாஸ’க்கு பதினெட்டு வயது முட்டிக்கொண்டு வந்து நின்றது. அடுத்த அறுவடையோடு அவளுக்கும் நியாஸ’க்கும் நிக்காஹ் என்று பெரியவர்கள் பேசிக்கொண்டார்கள். அப்பொழுது அவள் பெண்மையின் உச்சக்கொப்பில் இருந்தாள்.

இரவானதும் வேலைக்களைப்பில் இமைகள் கனத்துவிடும். நீண்டு கழுத்து தண்­ர் பானைக்கும், ‘தண்டூர்’ அடுப்புக்கும் இடையில் ஊர்ந்து வந்து படுத்தால் அவளுக்கு நித்திரை வராது. ஆசுஆசென்று வெப்பமான மூச்சுக்காற்று வந்தபடி இருக்கும். போர்வையை உதறிவிட்டு ‘வெளிக்கு’ போகும் சாக்கில் அரவமில்லாமல் வெளியிலே வருவாள். அண்ணாந்து ஆகாயத்தை பார்த்தபடியே நிற்பாள். சந்திரன் எவ்வளவுதான் உக்கிரமாகக் காய்ந்தாலும் ஏன் சுடுவதில்லை என்று குழம்புவாள். மனம் அமைதியிழந்து ரணம் வடியும். அவளுடைய திரேகம் எதையோ தேடித்தவிக்கிறது என்று புரிந்துகொள்வாள். அந்த நேரங்களில் காசிம் அவள் மனதிலே வந்து தொந்தரவு கொடுக்கத்தொடங்கினான்.

அப்போதுதான் ஒருநாள அது நடந்தது.

காதல் வேகமாக வளருவது நகரங்களில்தான் என்று சொல்லிக்கொள்கிறார்கள். அது சுத்தப்பொய் உண்மையில் குடிசைகளிலும், குக்கிராமங்களிலும், காடுகளிலும் வனாந்தரங்களிலும்தான் காதல் கண்கடை தெரியாத வேகத்தில் வளர்கிறது.

நகரங்களிலே என்றால் கண்ணால் பார்த்து கைகளால் பேசி ஆற அமர பழகுவதற்கு அவகாசம் கிடைக்கும். ஆனால் அந்த வரப்பிரசாதம் ஏழைக் கிராமவாசிகளுக்கு கிடைப்பதில்லை. ஒரு சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் அதேமாதிரி ஒரு சமயத்துக்கு இன்னொரு இருபது வருடங்கள் வரை காத்திருக்க வேண்டி நேரலாம்.

சமுத்திரத்திலே மிதக்கும் இரண்டு சிறு மரத்துண்டுகள் எதேச்சையாக ஒருகணம் முட்டி மறுபடியும் பிரிவதுபோல மிகவும் தற்செயலாகத்தான் அது நடந்தது.

வாசல் படியில் காலை வைத்துக்கொண்டு நின்றது பனிக்காலம். அவசர அவசரமாக பனிக்காலத்துக்கு வேண்டிணு உணவு வகைகளைச் சேகரிப்பதிலேயே அந்தக்கிராமம் மும்முரமாக இருந்தது. பெண்களை வெளியே வேலைக்கு அனுப்பும் வழக்கம் அவர்களிடம் கிடையாது. ஆனால் இந்த அவசர நாட்களிலே மாத்திரம் வயல்வெளிக்கு பெண்கள் போய்வருவார்கள். சோளக்காட்டில் இன்னும் கொஞ்ச வேலை இருந்தது.

அந்தச் சிறுமி மட்டும் ரஸ“மாவுக்கு துணையாக வந்துகொண்டிருந்தான். தாலிபான் சட்டம் ஒன்பது வயதுப்பிராயம் தாண்டிய பெண்கள் பள்ளிக்கூடத்திற்கு போகக்கூடாது என்று சொன்னது. அந்த வாய்ப்பை பயன்படுத்திய முதல் சிறுமி அவள்தான். வேலை முடிந்து மற்றவர்களெல்லாம் முன்னே போய்விட்டார்கள். பத்துமணி நேரம் உழைத்ததற்கு கூலியாக ஒரு கடகம் சோளக்கட்டு அந்தச்சிறுமியின் தலைமேல் இருந்தது. சிறுமிகளுக்கே இயல்பாக இருக்கும் சுறுசுறுப்புடன் அவள் முன்னாலேயே வீட்டுக்கு ஓடிவிட்டான்.

ரஸ“மாவின் மனம் என்றுமில்லாத குதூகலத்தில் இருந்தது. காரணம் தெரியவில்லை. இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு முகத்தை மறைத்திருந்த சாதர் துணியை எடுத்துவிட்டாள். இளைத்துப்போன காற்று அவள் முகத்தை வந்து மெத்துமெத்தென்று தட்டியது.

காற்றும் சூரியனும் அவளுக்கு அன்னியமானவை. ஆண்டவன் கொடுத்த அந்த செல்வத்தை அவன் அனுபவித்ததில்லை. முகத்தை ஆகாயத்தை நோக்கி உயர்த்தி மடிந்துபோகும் சூரியனுடைய செல்லக்கதிர்கள் அவளை மெல்ல ஸ்பரிசிக்க, சில்லென்ற காற்று முகத்தை வருட, தன்னிலையில் இல்லாமல் ஓர் ரகஸ்ய உலகில் அவள் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.

நான் முழுக்க குகைக்கிணற்றில் வேலை செய்துவிட்டு களைப்போடு மேலே வந்த காசிம் அலேமி இந்த அதிசயக் காட்சியைக் கண்டான். குக்குறுப்பான் குருவியைப்போல மிதந்துகொண்டிருந்த ரஸ“மா அவனைக்காணவில்லை.

அவன் அவளுடைய பால்யதோழன். பதினொரு வயதில் முக்காடு போட்டபோது அவள் பார்வையிலிருந்து மறைந்தவன். வாலிபனானதும் முஜாஹ’தீன் இயக்கத்தில் சேர்ந்து ரஸ்யப்படைகளை விரட்டியடித்து போர் முடிவில் திரும்பியவன்.

காசிம் அவள் முன்னே திடுதிப்பென்று தோன்றினான். பொங்கி வரும் பாலில் தண்­ர் தெளித்தவுடன் கப்பென்று பால் அடங்குவதுபோல ஓர் அமைதி. பாதாளக்கிணற்றுக்கு பக்கத்தில் இருந்த மறைவுக்கு அவள் கையை மெள்ளப்பற்றி அழைத்துவந்தான். மறுக்காமல் பின்னே வந்தாள் அவள்.

ஆகாயத்தில் பறவைகள் சோபன சமிக்ஞைகள் எழுப்பின. பனிக்காலத்தில் சமைந்துபோய் இருந்த சிற்றாறு சூரியனைக்கண்டு வெட்கத்தைவிட்டு கிளர்த்தெழுந்தது போல அவள் திரேகம் சிலிர்த்தது. ஆயிரம் மடைகளை ஒரே நேரத்தில் திறந்துவிட்டது போல வெள்ளம் பொங்கியது.

அழகை எப்படியும் அமுக்கிவிடவேண்டும் என்ற தீவிர கொள்கையில் பாரம்பரியமாக சிருஷ்டிக்கப்பட்டவை அந்த முரட்டு உடைகள். மலைப்பாம்புபோல அவள் உடலை ஈவிரக்கமில்லாமல் சுற்றிக்கிடந்தது. பனங்குருத்து ஓலைபோல மடித்து மடித்து ஒன்றன்மேல் ஒன்றாக செய்த சால்வார் கமிஸ் அது. சிறிய உடலை மூட இவ்வளவு துணிக்குவியலா? அவனுக்கே பிரமிப்பாக இருந்தது.

வானம் வழிவிட்டது. காற்று கைகட்டி ஒதுங்கியது. அந்த மோகனமான நிசப்தத்தைக்கலைக்க ஒரு வார்த்தைதானும் அங்கே பேசப்படவில்லை. மேகக்கூட்டத்தைப் பார்த்தபடி கிடந்தாள் அவள். அவன் தழுவிய அந்தக்கணத்தில் முகில் குடம் ஒன்று உடைந்தது. அந்த மழையில் இருவரும் நனைந்தார்கள்.

இருட்டு முழங்கால் அளவுக்கு வந்துவிட்டது. வீட்டுக்கு எப்படி வந்தாளென்பது அவளுக்கு ஞாபகமில்லை. எல்லோரும் சோளத்தை சுட்டு எடுப்பதில் மும்முரமாய் இருந்தனர். முகத்திரையை நன்றாக முன்னுக்கு இழுத்துவிட்டாள். உள்ளத்தின் பிரகாசம் கண் வழியாகத்தெரியாமல் இருக்க கண்களை மூடிக்கொண்டாள். ஆயிரம் தீப்பந்தங்களைத் கொளுத்தி வைத்து ஒரேடியாக ஊதி அணைத்துவிட்டது போல அது இருந்தது.

ரஸ“மாவின் மாமனார் வெள்ளைத்தாடி பிரகாசிக்க இப்போது களத்தில் பிரவேசித்தார். அவர் கையிலே ஒரு AK47 துப்பாக்கி இருந்தது. கிழவனாருடைய கண்கள் ஒரு கணம் காசிமின் கண்களை எரித்துவிடுவது போலப்பார்த்தன. பதினெட்டே வயதான அவருடைய மகன் நியாஸ’யைக் கொன்றவனை, ஒரு குரோதத்தோடு பார்த்து மனதிலே பதிந்துகொண்டார்.

காசிமின் கண்களைக் கறுப்புத்துணியினால் இறுக்கிக் கட்டினார்கள். தாலிபான் வீரன் ஒருவன் அவனை மரத்தினருகே கொண்டுபோய் நிறுத்தினான். பின்கைகள் கட்டப்பட்ட நிலையில், கண்களும் மறைக்கப்பட்டு செய்வதறியாது சிறிது நேரம் நின்றான்; பிறகு கர்ப்பநிலைக்கு வந்து குந்திய வாக்கில் இருந்துகொண்டான்.

கிழவனார் துப்பாக்கியின் விசையைத் தானியங்கி நிலையிலிருந்து ஒவ்வொரு தோட்டாவாகச் சுடும் நிலைக்கு மாற்றினார். தாலிபான் நீதிபதிகள் அவருடைய துப்பாக்கியை வாங்கி மேலும் கீழுமாக சோதித்தார்கள். மூன்று துப்பாக்கி ரவைகளை கிழவர் போட்டார். காசிமின் உயிரை மூன்று தோட்டாக்களில் எடுப்பதற்கு அவருக்கு அனுமதியிருந்தது.

இப்போது சனத்திரள் கட்டுக்கடங்காமல் போகத்தொடங்கியது. இந்த ஆலாபனைகளை எல்லாம் சகிக்கும் பொறுமையில் அவர்கள் இல்லை. ‘சுடு, சுடு, சுடு, கொலைகாரனைச் சுடு’ என்ற ஓசை மெதுவாக எழும்பியது. வர வர இந்த ஒலி கடல் அலைபோல வளர்ந்து பெரும் இரைச்சலாக மாறியது.

கடவுளுக்கும் காற்றுக்கும் மட்டுமே தெரிந்திருந்த அந்த ரகஸ்யம் இன்னும் ஒருவனுக்கும் தெரிந்திருந்தது. அவள் தூக்கி வளர்த்த நியாஸ’, பதினெட்டு வயது நிரம்பியவன், அவனுக்கு எப்படியோ இது தெரிந்து போய்விட்டது.

மறுநாள் நியாஸ’க்கும், காசிமுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. அது கூட தற்செயலாகத்தான் நடந்தது. இரண்டு தரப்பும் முன்கூட்டியே ஆயத்தம் செய்து இந்தச்சண்டையில் இறங்கவில்லை. வழக்கம் போலக் கூடிய ஷ”ரா கூட்டத்தில் வாய்க்கால் தகராறில்தான் இது ஆரம்பமாகியது.

ஊர் முன்னிலையில் நடந்த இந்த விவகாரத்தில் ரஸ“மாவின் பேரே பிரஸ்தாவிக்கப்படவில்லை. சண்டைக்கான உண்மைக்காரணம் இப்படி மறைக்கப்பட்டுவிட்டது. வார்த்தைகள் முற்றி வசவுகள் வெடித்தன. நியாஸ’தான் வேண்டுமென்றே சண்டையைத் தொடக்கினதாக பலரும் அபிப்பிராயப்பட்டார்கள். சண்டையின் உச்சக்கட்டத்தில் நியாஸ’யைத் துப்பாக்கியால் கட்டுக்கொன்றுவிட்டான், காசிம்.

தாலிபான் நீதிபதிகள் நடத்திய விசாரணையில் குற்றத்தை முற்றாக ஒப்புக்கொண்டான் காசிம். அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ரஸ“மாவின் விவகாரம் வெளியே தெரிய வந்திருந்தால் தாலிபான் சட்டப்படி இருவரும் கல்லால் எறிந்து கொல்லப்பட்டிருப்பார்கள். உயிர்போனாலும் அவன் ரஸ“மாவை காட்டிக்கொடுக்கமாட்டான். ஒரு முஜாஹ’தீன் போராளி செய்யக்கூடிய காரியமா அது.

‘அல்லாவின் கருணை அளப்பாரியது. குற்றம் செய்வது மனித இயல்பு. மன்னிப்பது அல்லாவின் செயல். கொலையாளியை மன்னிப்பது இப்போது உங்கள் கையில் இருக்கிறது. நீங்கள் அவரை மன்னீப்பீர்களா? என்றார் நீதிபதி.

அப்பொழுது கிழவனார் தாடியைத் தடவிவிட்டுக் கொண்டு நடுமைதானத்துக்கு வந்தார். வலது கையைத்தூக்கி நெஞ்சிலே வைத்துக்கொண்டு, ஒலிபெருக்கியில் இப்படி அறிவித்தார்: ‘ஈவிரக்கமில்லமல் கொலை செய்யப்பட்ட நியாஸ’யின் தந்தை நான். இந்தப்பாபியை நான் ஒருபோதும் மன்னிக்கமாட்டேன். மன்னிக்கமாட்டேன், மன்னிக்கமாட்டேன்.’

ஆயிரக்கணக்கானவர்களின் நெஞ்சங்கள் ‘பட்பட்’ என்று அடிக்கும் சத்தத்தை தவிர வேறு ஒன்றும் கேட்கவில்லை. ஒரு பத்தடி தூரத்தில் கிழவனார் துப்பாக்கியைத் தூக்கிவைத்து குறி பார்த்தார். அந்த நிசப்தம் பயங்கரமாக இருந்தது.

கண்கட்டிய நிலையில் திசை அறியாத காசிம் சனங்கள் இருந்த பக்கம் தலையைத் திருப்பி தீனமான குரலில் கத்தினான். ‘ஓ! ஹாஜி சாஹ’ப்! ஹாஜி சாஹ’ப்! என்னை மன்னித்துவிடுங்கள்!’ கிழவரின் மனம் கல்லாக இருந்தது.

அவர் துப்பாக்கியை நிதானமாக நிமிர்த்தி துளையின் மூலம் பார்த்தார். ஙப்போல அவன் வளைந்திருந்தான். வலது கண்ணுக்கும், காதுக்கும் இடையிலான பிரதேசத்தில் குறிவைத்தார். துப்பாக்கியை ஆடாமல் பிடித்துக்கொண்டு விசையின்மேல் விரலை வைத்தார்.

சனங்களின் ஓய்ச்சல் அறவே நின்றுவிட்டது. மூச்சை உள்ளே எடுத்தவர்கள் வெளியே விடவில்லை; வெளியே விட்டவர்கள் உள்ளே இழுக்கவில்€லை. கிழவனார் விசையை இழுத்தார். ‘பஸ்க்’ என்று ஒரு சத்தம் மட்டுமே கேட்டது. தோட்டா பறந்ததோ, தாக்கியதோ யார் கண்ணுக்கும் புலப்படவில்லை. என்ன நடந்ததென்று விளங்காமல் ஒருவரை ஒருவர் பார்த்தனர். அந்தத்தோட்டா பொய்த்தோட்டா போலப்பட்டது. சத்தம் கேட்டதே ஒழிய ஒரு சேதமும் விளைவிக்கவில்லை. கிழவனாரும், சனங்களும், நீதிபதிகளும் இதை உணரச்சிறிது நேரம் பிடித்தது.

இப்போது கிழவனார் இரண்டாவது தடவையாக குறிபார்க்கத்தொடங்கினார். காசிம் தலையை மேலும் கீழும் அசைத்தபடி பைத்தியக்காரன் போல கத்திக்கொண்டிருந்தான். அவ்வளவிற்கும் திடமாக இருந்த கிழவனார் முகத்தில் லேசாக பயப்பிராந்தி அரும்பியது. சனங்களின் எதிர்பார்ப்பு வேறு. அந்த நிசப்தம் அவரைத் தடுமாற வைத்தது. கிழவனார் பார்த்தார். முதுகுத்தண்டு பெரிய பரப்பாகத்தெரிந்தது. அதிலே குறிவைத்து வீழ்த்திவிட்டால் பிறகு நிதானமாக மூன்றாவது குண்டை தலையிலே சுட்டு காரியத்தை முடித்துவிடலாம்.

முதுகைக் குறிபார்த்து சுட்ட அந்தவேளை காசிம் தலையைப்பலமாக சாய்த்தபடி ஒரு துள்ளுத்துள்ளினான். குண்டு அவனுடைய தோள்பட்டையைச் சிராய்த்துக்கொண்டு போனது. மெல்லிய ரத்தக்கசிவு ஏற்பட்டது.

‘செத்துக்கொண்டிருக்கிறோம்’ என்ற நினைப்பில் காசிம் குந்தியிருந்த வாக்கிலேயே துள்ளித் துள்ளிப் பாய்ந்தான். தலையறுத்த கோழிபோல இவன் நாலாபக்கமும் குதித்தான். எல்லோரும் கொஞ்சநேரம் இதை ஆடாமல் அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இவன் இப்படியே நகர்ந்து நகர்ந்து சனத்திளுக்கு பக்கத்திலே வந்து விழுந்தான். சனங்கள் அப்போது அவனைச் சூழ்ந்துகொண்டார்கள்.

கிழவர் பாடு திண்டாட்டமாகிவிட்டது. ‘சுடாதே! சுடாதே! அல்லா மன்னித்துவிட்டார், சுடாதே! என்று கத்தத்தொடங்கினான் ஓருத்தன். அதைத்தொடர்ந்து மற்றவர்களும் கூச்சல்போட்டார்கள். கிழவர் கொஞ்சநேரம் செய்வதறியாது நின்றார். மூன்றாவது தோட்டாவை நிலத்தை நோக்கிச்சுட்டார். சுட்டுவிட்டு துப்பாக்கியைத் தூக்கிப்பிடித்தபடியே நடக்கத்தொடங்கினார். அவர் மனதிலே இருந்த பெரிய பாரம் தோட்ட கிளப்பிய புழுதிபோல பறந்துபோனது.

சனங்கள் கலையத்தொடங்கினார்கள். அல்லாவின் அற்புதத்தை வியந்து கதைத்தபடியே அவர்கள் ஷ”ஹர் தொழுகைக்கு புறப்பட்டார்கள். மூன்று தோட்டக்களக்கு தப்பிய காசிம் அல்லாவினால் மன்னிக்கப்பட்டுவிட்டான். மாட்டுக்கார சிறுவர்கள் உதிர்ந்த தோட்டக்களை புழுதியில் விழுந்து விழுந்து தேடினர். சனங்கள் கலைந்தபிறகும் துப்பாக்கியின் புகை மணம் நெடுநேரமாக அந்த இடத்திலேயே படிந்து நின்றது.

ரஸ“மாவின் வீடு வெறிச்சென்று இருந்தது. ஆண்கள் எல்லோரும் மைதானத்துக்கு போய்விட்டார்கள். பெண்கள் எல்லாம் வேலையில் மும்முரமாக இருப்பதுபோல் ஒருவருக்கொருவர் போக்குக்காட்டியபடி இருந்தார்கள்.

ரஸ“மா தலைத்துணியை இழுத்து விட்டுக்கொண்டு தன் வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்தாள். அவள் கைகள் ‘குரூத்’ பலகையை ஓர் ஆவேசத்துடன் தேத்துக்கொண்டிருந்தாலும் அவள் காதுகள் மட்டும் கூர்மையாக இருந்தன.

மைதானத்தின் நடுவே கண்கட்டப்பட்டு அவன் நிற்கும் ரகஸ்யம் அவள் ஒருத்திக்கே தெரியும். ஒரு நாள் சிலகணங்களை அவளோடு பாதாளக் கிணற்றின் மறைவில கழித்தவன்; இன்னும் சில வினாடிகளில் இறந்துவிடுவான்.

அவ்வப்போது ஒலிபெருக்கி அவளுக்கு கேட்டுக்கொண்டிருந்தது. தாலிபானுடைய பேச்சுரை கேட்டது. பிறகு மாமனாருடைய கம்பீரமான குரல். அதைத்தொடர்ந்து தீனமான குரலில் காசிம் உயிருக்கு மன்றாடுவது காற்றில் வந்தது. அவளுக்கு தொண்டையை அடைத்துக்கொண்டது. கிழவர் அவனை மன்னித்துவிட மாட்டாரா என்று மனம் பதறியது.

வேட்டுச் சத்தங்களை ரஸ“மா எண்ணியபடியே வந்தாள். முதலாவது வேட்டு மிகச்சன்னமாக ஒலித்தது; அதைத் தொடர்ந்து இரண்டாவது சத்தம் பலமாகக்கேட்டது. பிறகு சனங்களின் ஆரவாரம் ஓவென்று காற்றிலே வந்தது. கடைசியில் மூன்றாவது வேட்டு.

ரஸ“மா துப்பட்டாவை வாய்க்குள் அடைத்துக்கொண்டு விம்மத்தொடங்கினாள். அவள் உடம்பு முழுக்கக் குலுங்கியது. அடக்க அடக்க துக்கம் கொப்பளித்துக்கொண்டு வந்தது. எல்லாமே முடிந்துவிட்டது.

லான்டி இறைச்சி இப்போது கொதி நிலையை அடைந்திருந்தது. அவளுடைய மனக்கொந்தளிப்பை அறிந்திருந்ததுபோல ஒரு வேக்த்தோடு அது பொங்கிப்பொங்கி கொதித்தது. நிற்கவில்லை.

ரஸ“மாவின் விக்கலும் நிற்கவில்லை. கொலைபட்டு இறந்துபோன கொழுந்தனை நினைத்து அழுகிறாள் என்று சிலர் நினைத்துக்கொண்டார்கள். கணவன் ஞாபகம் வந்துவிட்டது போலும் என்று இன்னும் சிலர் நினைத்தார்கள்.

காசிம் மரணதண்டனையில் இருந்து தப்பிய விஷயம் அவளுக்குத்தெரியாது. அந்தரங்கமான இடத்தில் அவன் பதித்த நகக்குறி காயுமுன்பு இறந்துவிட்டான் என்ற எண்ணத்தை அவளால் தாங்கமுடியவில்லை. அடக்கி அடக்கி விம்மிக்கொண்டிருந்தாள்.

அந்த ஒலி வெகுநேரமாகக் கேட்டுக்கொண்டிருந்தது.

சமுத்திரத்திலே மிதக்கும் இரண்டு மரத்துண்டுகள் ஒன்றையொன்று ஒரு கணம் தொட்டு மீண்டும் பிரிவதுபோல அவளுடைய வாழ்விலே அவனை சந்திக்கும் சந்தர்ப்பம் இனிமேலும் ஒருமுறை வரக்கூடும். இன்னொரு பதினைந்து ஆண்டுகள் அதற்காக அவள் காத்திருக்கவேண்டி நேரிடலாம்.

அது ஒரு பெரிய காரியமாக இருக்காது.

– 1996-97, வடக்கு வீதி (சிறுகதைத் தொகுப்பு), மணிமேகலைப் பிரசுரம், நவம்பர் 1997

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

1937 ஜனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாணம் அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அ. முத்துலிங்கம், அப்பாத்துரை ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் சாட்டர்ட் அக்கவுண்டனாகவும், இங்கிலாந்தின் மனேஜ்மெண்ட் அக்கவுண்டனாகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *