மௌனம் கலைகிறது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 21, 2024
பார்வையிட்டோர்: 581 
 
 

மருத்துவமனைக் கட்டிலில் உறவுகள்  சுற்றவர நிற்கின்றனர். உழைப்பு உழைப்பு என்று பம்பரமாய்ச் சுற்றி வந்த கால்கள் படுக்கையில் விழுந்து நான்கு மாதங்களாகிவிட்டன. 56 வயதான பிரேம் ஒட்சிசன் வயருக்குள் அடிமையாகி விட்டான். புகைக்கும் மதுவுக்கும் அடிமையானவர்கள் மத்தியில் செயற்கை ஒட்சிசனுக்கு அவனுடைய மூளை அடிமையாகிவிட்டது. சிறிது சிறிதாகத் தொடங்கிய வியாதி ஒவ்வொரு உறுப்புகளுக்குள்ளும் பாதிப்பைத் தந்து கொண்டிருக்கின்றது. உடலிலே இதுதான் முக்கிய உறுப்பு என்று இருக்கிறதா? ஒவ்வொன்றும் ஒவ்வொன்றுக்கு முக்கியமாகப்படுகிறது. உறுப்புக்களை ஒன்றாய்ச் சேர்த்து இயங்க வைக்க ஒட்சிசன் என்னும் முக்கிய காரணி போதுமான அளவில் இருக்க வேண்டுமே.  

பிரேம் அருகே அவனுடைய கட்டிலின் அருகாமையில் அமர்ந்திருக்கிறாள் சுருதி. வீட்டுக் கூரையில் மழை ஓய்ந்து துளி துளியாகக் கொட்டுவதுபோல் சுருதி கண்களில் இருந்து கண்ணீர் கொட்டுகின்து. ஷஷஅழுது அழுது நீயும் உடம்பைக் கெடுக்கப் போகின்றாயா? ஆவதைப் பார். நானில்லாத உலகத்தில் வாழப் பழகிக் கொள்|| பிரேமுடைய வார்த்தைகள் கேட்ட மாத்திரத்தில் சுருதி மனத்தை யாரோ பிய்த்து எடுப்பதுபோல் உணர்கின்றாள். 

அன்று அவள் வேலை நிமித்தம் வேறு ஒரு இடத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இந்தது. 3 நாட்கள் கருத்தரங்கு. விடுதியில் தங்க வேண்டும். பிரேமிடமிருந்து தன்னைப் பிய்த்துக் கொண்டு போக வேண்டிய சூழ்நிலை. அன்றும் பிரேம் சொன்னான்.  

“நானில்லாத உலகத்தில் வாழப் பழகிக் கொள்”  

அப்போது அவன் வாயைத் தன்னுடைய கைகளால் பொத்தினாள்.  

“ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும். வாயில் இருந்து வருகின்ற சொற்களுக்கு எவ்வளவு வலிமை இருக்கின்றது என்று தெரியுமா? இப்பிடிச் சொன்னால் நான் போக மாட்டேன்” என்று சொல்லி அவள் ஆர்ப்பாட்;டம் பண்ணியதை இன்று நினைத்துப் பார்க்கிறாள்.  

இருவருடைய வாழ்க்கையிலே தம்முடைய அன்பைக் கூறுபோட ஒரு குழந்தை என்னும் பந்தம்கூட இருந்ததில்லை. பணத்தோடு பண்பும் பரிவும் அன்பும் ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்ளும் வகையிலே சிறப்பாகவே கிடைத்திருந்தது. இந்த நாட்டில் இருவருக்கும் உறவினருக்குத்தான் பஞ்சம் நட்புக்குக் குறைவேயில்லை. உனக்கு நான் எனக்கு நீ என்னும் அற்புத பந்தத்தை இந்த உறவு கொடுத்தது. பூமிக்குள் விழுந்துவிட்டால் என்றோ ஒரு நாள் வெளியே வரத்தானே வேண்டும். ஆளுக்காள் தேதியில் மாற்றம் இருக்கும். ஆனால் அனைவரும் பூமிக்கு விடை கொடுக்க வேண்டியவர்களே. கைகளில் தாங்கிய சுருதியை டப்பென்று கீழே போடுவது என்றால், இலகுவான காரியமா? ஆனால், அவளை அவன் போட்டுத்தான் ஆக வேண்டும்.  

நீண்ட நாளைக்கு இந்த செயற்கைச் சுவாசம் கொடுக்க முடியாது சுருதி. செயற்கை சுவாசத்தை அகற்றுவதற்கு உங்களுடைய ஒப்பிதல் தேவை. உறவினர்களுக்கு சொல்லி அனுப்புங்கள் என்று வைத்திய சாலையில் சொல்லிவிட்டார்கள். அவருடைய உறுப்புக்கள் விடைபெறத் துடிப்பதையும் அவை அழுகின்ற காட்சியையும் மருத்துவர்கள் அவதானிக்கின்றார்கள் போலும். சுவிஸ், கனடா, இங்கிலாந்து, பரிஸ், இலங்கை, ஜெர்மனி என்று எல்லோரும் வந்தாயிற்று. அண்ணன்மார், தங்கை, மாமன் என்று சுற்றி வர கண்ணீர் மல்க நிற்கின்றனர்.  

பியாற்றா மட்டுமே அங்கு பம்பரமாய்ச் சுழலுகின்றாள். அவளுடைய கண்களும் பனித்துப் போய்த்தான் இருக்கின்றன. இருவருக்கும் உறவில்லாச் சொந்தமாக இருந்தவள் அவள்தான். நாள்தோறும் வீட்டுக்கு வந்து அனைத்து பணிவிடைகளும் பார்க்கின்ற போலந்து இனத்தவள். வீட்டிற்கு வேலைக்காரி. ஆனால் இருவருக்கும் அன்புத் தோழி. அவளுடைய வேலை முடித்து வீட்டிற்குப் போகும் முன்பு பிரேம், சுருதி இருவரும் வேலைத் தளத்திலிருந்து வீட்டுக்கு வந்துவிடுவார்கள். மூவரும் ஒன்றாக அமர்ந்திருந்து பலதும் பத்தும் பேசிக் கொண்டே காபி அருந்துவார்கள். அன்பும் பணமும் ஒரு இடத்தில் கிடைப்பதாக இருந்தால், யார்தான் மனத்தை தாரை வார்க்காமல் இருப்பார்கள். பியாற்றா தயாரித்து வைத்த இரவுணவை இருவரும் உண்பார்கள். ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே அவளுக்கு தன்னுடைய வீட்டில் நிற்பதற்காக விடுமுறை கொடுத்திருந்தார்கள். சனிக்கிழமை சுருதியும் பியாற்றாவும் சேர்ந்து இலங்கை உணவு சமைத்து உண்பார்கள்.  

இத்தனை உறவுகள் பிரேமுக்கும் சுருதிக்கும் இருப்பதை இன்று தான் பியாற்றா காணுகின்றாள். கடைசி காலத்தில்தான் உறவுகள் வரும் என்பது புலம்பெயர்ந்த மக்களுக்கு ஒன்றும் புதிய வாசகம் இல்லை. இன்றாவது புலனம் உறவைத் தக்க வைத்துக் கொள்ளத் துணையாக இருக்கிறது. எல்லோருக்கும் காபி பரிமாறுகிறாள்.  

ஆனால், சுருதி உணவு உண்டு மூன்று நாட்களாகி விட்டது. வாயில் நீர் படுவதற்கு பியாற்றாவே வர வேண்டும். மரத்துப் போன அவள் உணர்வுகளுக்கு ஆதரவு நீரும் அவளே பாய்ச்ச வேண்டும். காபியைக் கையில் கொடுத்துவிட்டு அருகே அமருகின்றாள். பியற்றா! என்று அழைக்கும் பிரேமை நிமிர்ந்து பியாற்றா பார்க்கிறாள்.  

“நீ சுருதியுடன் எப்போதும் கூட இருப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பியாற்றா இருப்பியா.. .. .. ?  என்று பிரேம் கேட்ட போது அவனுடைய கைகளைப் பிடித்து மௌனமாய் கலங்குகின்றாள்.  

திடீரென்று நீண்ட காலத்தின் பின் குடும்பப் பிரச்சினையால் பிரிந்து போன சுருதியினுடைய அண்ணன் குடும்பம் உள்ளே நுழைகின்றார்கள்.  

“என்ன இது சுருதி! வராதவர்கள் எல்லாம் வருகிறார்கள். ஒட்சிசன் வயரை எனக்குக்  கழட்டிவிடப் போகிறார்களோ? என்று பிரேம் கேட்ட போது  

“அவர்கள் உங்களைப் பார்க்க வரவேண்டும் என்று சொன்னார்கள் அதுதான் வரச் சொன்னேன்” என்று சுருதி சமாளித்தாள்.  

“பார் சுருதி எங்களுக்கு எவ்வளவு சொந்தக்காரர்கள். இவ்வளவு பேர் இருந்தும் நாங்கள் தனிமையாகத்தானே இருந்திருக்கிறோம். நீ எத்தனை தடவை சொல்லியிருக்கிறாய். யாரை நம்பி இந்தப்பூமியில் பிறந்தோம். வாழ்ந்து காட்டவில்லையா? என்று அதுபோலத்தான் நீ நல்லா இருப்பாய். உனக்குத் தைரியத்தை நிறையவே நான் தந்திருக்கிறேன்.  

அருகே வந்தவர்கள் பிரேமுடைய கைகளைப் பிடித்து எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்;ட போது. 

 “பார்க்கிறீர்கள் தானே ஏதோ உயிரோடு இருக்கிறேன். மருத்துவம் என்னை உயிரோடு வைத்திருக்கிறது” என்கிறான்.  

சுருதிக்கு 35 வயதாக இருக்கும் போது அறுவைச் சிகிச்சை மூலம் அவளுடைய கர்ப்பப்பையை அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போது பல விடயங்களை நினைத்து அவள் கலங்கிப் போகிறாள். அப்போது அவன் கூறிய வார்த்தைகள் அவளுக்கு ஆறுதல் அளித்தன.  

“எப்படி சுருதி இருக்கிறாய்?  

என்று பிரேம் கேட்ட போது ஏதோ உயிரோடு இருக்கிறேன். என்று அவள் சொன்ன போது  

“அதுபோதாதா சுருதி. கருப்பை பிள்ளை உருவாக்கும் ஒரு இயந்திரம். அவ்வளவுதான். எனக்குத்தான் நீ நல்ல பிள்ளையாக இருக்கிறாயே. வேலையால் வந்தால் என்ன வாங்கி வந்தீர்கள் என்று கேட்கிறாய்? சிலவேளை அடம்பிடிக்கிறாய். அங்கே இங்கே கூட்டிப் போகச் சொல்லி கரைச்சல் தருகிறாய். என்று பிரேம் சொல்ல. அது இல்லை உங்களுக்கு வாரிசு .. .. .. என்று அவள் வாயெடுத்த போது “கொஞ்சம் வாயை வைத்துக் கொண்டு இருக்கிறீயா? நாம் இருக்கும் வரைதான் அதெல்லாம். நாம் போய்விட்டால் இந்த உலகத்தில் நாம் ஒரு கழித்தல் கணக்கு. இதெல்லாம் உலகத்தில இருக்கும் வரைதான் போனாப்பிறகு ஒன்றுமே இல்லை. உடம்பு ஒரு கூடு. உயிர் எங்கேயோ எதுவாகவோ யாராகவோ.. .. .. இதெல்லாம் என்னிடம் சொல்லாதே. தைரியமாக குணமாகி வீட்டுக்கு வா என்று ஆறுதல் கூறினான்.  

இன்று அவன் கூறியது போல் அவனுடைய இடம் வெற்றிடமாகப் போகப் போகிறது. இந்த உலகக் கணக்கிலே அவன் ஒரு கழித்தல் கணக்கு. மருத்துவர் வருகிறார்.  பிரேமுடைய காலன் வைத்தியர் வடிவில் உள் நுழைகிறார். பிரேமைச் சுற்றியுள்ள வயர்களைப் பார்க்கிறார். இதயத் துடிப்பைக் காட்டும் இயந்திரம் ஓடிக் கொண்டிருக்கின்றது.  

“ஹலோ பிரேம். வீ கேட்ஸ்  எப்படி இருக்கிறாய்” என்று கேட்டபடி அவனைத் தடவுகின்றார். இது அவனுடைய வாழ்க்கையின் கடைசிக் கட்டம். இறப்பின் நேரம் யாருக்கும் தெரிவதில்லை. தெரியாமல் இருப்பதுதான் சிறப்பு. தெரிந்துவிட்டால் உலகத்தை விட்டுப் போக யாருமே விரும்ப மாட்டார்கள். புரியாத கவலை, தவிப்பு, ஏக்கம் எல்லாம் கூடவே வரும். பிரேம் விடயத்தில் பிறருக்கு இறுதி நாள் நிச்சயமாகத் தெரிந்து விட்டது. ஆனால் நேரம் தான் தெரியவில்லை.  

சுருதி மனதுக்குள் வேண்டாத தெய்வங்கள் எல்hலவற்றையும் இன்று வேண்டுகின்றாள். அதிசயம் நடக்காதா? மிராக்கில் என்று டொக்டர் சொல்ல மாட்டாரா என்ற தவிப்பு. இதே தவிப்பு பியாற்றாவிடமும் இருந்தது. ஏனென்றால், பிரேமுடைய நோய் இன்ப துன்பங்களுக்கும் நெருக்கமாக இருந்த உறவுகள் இவர்கள் இருவரும்தானே. டொக்டர் உள்ளே வந்ததில் இருந்து நெஞ்சுக்குள்ளே ஒரு பாறாங்கல்லால் அழுத்துவது போல ஒரு உணர்வு. இவ்வளவுதானா வாழ்க்கை! இதற்குத்தானா இத்தனை காலம் இவருடைய வாழ்க்கை எனக்குச் சொர்க்கத்தைக் காட்டிவிட்டுப் போகின்றது! இவரில்லாமல் எப்படி நான் வாழப் போகின்றேன். சுருதியின்  மனதிலும் ஒருவித வெறுமை.  

மருத்துவர் சுருதியைத் திரும்பிப் பார்க்கிறார். ருற் மியர் லைட் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்றபடி பிரேம் அறியாதபடி வயரைக் கழட்டுகின்றார். தன்னுடைய ஒரு நோயாளிக்கு நிரந்தர உறக்கத்தைக் கொடுத்து அவருடைய உயிரின் வலிக்கு விடுதலை கொடுத்த பெருமூச்சுடன் வெளியேறுகின்றார். இவை வைத்தியர் பணியின் கசப்பான பக்கங்கள். ஒருவிதத்தில் இதுவும் ஒரு கொலையாகவே இநதச் சமூகம் பார்க்கின்றது. அதனாலேயே கருணைக் கொலை என்று அற்புதமான பெயரில் கருணையைச் சேர்த்திருக்கின்றது.  

சுருதி கண்ணீரைத் தடுக்கத் தடுக்கப் பார்க்கின்றாள். அவள் கண்கள் அவளை மீறி கொந்தளிக்கின்றன. விழிநீர் தாரைதாரையாக வழிகின்றது. சுருதியைப் பார்த்த பிரேம் ஏன் இப்படி அழுகின்றாய்? தடக்கித் தடக்கி வருகின்ற வார்த்தைகளை வெளிவிட்டபடி சுற்றியுள்ள அனைவரையும் பார்க்கின்றான். பேச்சு முதலில் தடைப்படுகின்றது. யாருடைய முகத்திலும் உணர்ச்சியில்லை. ஒரு மரணத்தின் ஒவ்வொரு நொடியையும் பார்த்துக் கொண்டிருக்கின்ற கல் நெஞ்சக்காரர்களாக எல்லோரும் இயலாமையின் விளிம்பிலே நிற்கின்றார்கள். 

இமைகள் மெல்ல மெல்லத் திரையிடப்படுகின்றன. அந்தப் பார்வைக்குள் இரு உருவங்கள் மட்டுமே இறுதி வரை உச்சியிருந்து உள்ளங்கால்கள் வரை பார்க்கப்பட்டு முடிக்கப்படுகின்றன. பிரேம் கண்களை முதலில் மூடுகின்றான். இதயத் துடிப்பு மெல்ல மெல்ல அடங்குகின்றது. மூச்சு தன் பயணத்தின் விசையை மெல்ல மெல்ல இழக்கிறது. இறுதியில் நின்று விடுகின்றது. ஓ… … என்று பெரிய சத்தத்துடன்  வெடிக்கிறது சுருதியினுடைய அழுகை. அவளை இறுக்கி அணைக்கிறாள் பியாற்றா. திறந்த வாயை அடித்து மூடுகின்றாள்.  

அருகே வந்து அனைவரும் இறுதி அஞ்சலியைச் செலுத்துகின்றார்கள். சுருதியை அணைத்து அனுதாபம் தெரிவிக்கின்றார்கள். பிரேமினுடைய உடலை வைத்தியசாலை தொழிலாளிகள் கட்டிலுடன் எடுத்துச் செல்கின்றார்கள். நடைப்பிணமான சுருதி மற்றவர்களுடன் விடைபெறுகின்றாள். ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்தின் முடிவுரையைக் கண்ட கனத்த மனத்துடன் உறவுகள் புடைசூழ பியாற்றாவின் அணைப்புடன் மருத்துவமனையை விட்டு சுருதி வெளியேறுகின்றாள். 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *