மோகத்தைக் கொன்றுவிடு!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 7, 2024
பார்வையிட்டோர்: 4,433 
 
 

தாம் வாழும் சூழல், பிறந்த குடியின் மரபுகள், வாழ்க்கைத் தேவை போன்றவற்றால் மனிதர்களுக்கு விருப்பும், வெறுப்பும் தாமாகவே உண்டாகும். வசதிக்காகச் சிலவற்றைச் சிலர் வேறு பெயரிட்டழைத்துக் கொள்வர்.

பிடிவாதம் நல்லதில்லை. ஆனால், அதையே கொள்கைப் பிடிப்பு என்று வேறு பெயரிட்டு அழைத்தால் அந்தச் சொல்லுக்குள் ஓர் உயர்வு இழைவதைக் காணலாம். நீரிழிவு நோய் கொண்ட ஒருவர் அன்றாடம் ஆசை ஆசையாய் இனிப்புகளை அதிகம் உண்டால் அதனைக் கொள்கைப் பிடிப்பு என்றா கூற முடியும்?

உலக வரலாற்றில் மிகுதியாகிப்போன விருப்பங்களால் பல பேரரசுகள் உருண்டன;  பலரின் வாழ்க்கை சரிந்தது. புகழின் உச்சியில் உலவிக் கொண்டிருந்த பலர் புதைகுழிக்குள் அடக்கமானார்கள்.

பற்று என்பது விருப்பத்தின் அழுத்தமான வெளிப்பாடு. மொழிப்பற்று, ஊர்ப்பற்று, நாட்டுப்பற்று இவையெல்லாம் நன்மைக்கு உரியவை. கொடிகாத்த குமரனை ஓர் எடுத்துக்காட்டாகக் கூறலாம். ஆனால், தனிமனித விருப்பம் தீயனவற்றை விளைவிக்குமானால் அது மோகம் ஆகிவிடும்.

இதற்குச் சரியான சான்று சிலப்பதிகாரக் காப்பிய நாயகன் கோவலன். மாதவியின் இல்லத்துக்குப் போன அவன் மிகுதியான வேட்கையால் தன் மனைவியையே மறந்தான் என்பதுதான் கதை. அதனை விளக்கும்போது இளங்கோவடிகளின் எழுதுகோல் தீட்டும் வரி: “விடுதலறியா விருப்பினன் ஆயினான்’.

ஒன்றின்மேல் அல்லது ஒருவரின்மேல் ஏற்பட்ட விருப்பம் அதிலிருந்து அல்லது அவரிடமிருந்து விடுதலை பெற முடியாதவண்ணம் உடும்புப்பிடியாகி இறுகும்போது அது காதலில்லை; அன்பு இல்லை; பற்று இல்லை; மோகம் மட்டுமே. சொந்த மனையை மறக்கடிக்கச் செய்த மோகம்தான் கோவலனைப் பாழ்படுத்தியது;  கண்ணகியைக் கலங்கடித்தது.

இன்றைய மனிதர்களைப் பீடித்துள்ள மோகங்கள் பலப்பல. குதிரைப் பந்தயம், சீட்டாட்டம் போன்ற சூது கவ்வும் மோகம்; பிறமொழி மோகம்; பெண் மோகம்; பதவி மோகம்; குடி மோகம் போன்று பற்பல மோகங்கள் மனிதர்களை கவருகின்றன. விட்டில் பூச்சிகளாகப் போனவர்களின் வாழ்க்கை, பிறருக்குரிய பாடங்களாவதும் உண்டு.

சிறிது நேரம், சிலகாலம் மட்டும் பற்றிக்கொள்ளும் சின்னச்சின்ன மோகங்களும் உண்டு. நடிகர் ஒருவரின் பெயரைத் தம்பெயருக்கு முன்னால் இணைத்துக் கொள்வது;

அடிக்கடி இரு சக்கர, நான்கு சக்கர வண்டிகளை மாற்றிக் கொண்டிருப்பது.

பெண்களில் சிலர் தங்க நகைகளை அவ்வப்போது புதிய வடிவுகளுக்காக உருக்கிஉருக்கித் தங்களின் சேமிப்பினைச் சேதாரமாக்கிக் கொள்வர். சுற்றுலா செல்வதில் சிலரின் மோகம் வெளிப்படும். இவை போன்றவற்றால் பெரிய தீமைகள் ஏற்படுவதில்லை. ஆனால், சில மோகங்கள் பேருரு (விசுவரூபம்) எடுத்து எல்லாத் திசையிலும் சிக்கல்களைப் பயிராக்கும்.

இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது. அதைப் பெறத் தம்மைக் கரைத்துக் கொண்டவர் அண்ணல் காந்தியார். புதிய இந்தியா அரும்பியதும் காங்கிரஸ் கட்சியைக் கலைக்கச்

சொன்னதைவிடத் தமக்கு எந்தப் பதவியும் வேண்டாமென்று சொன்னதுதான் அவருக்கு மகாத்மா என்ற உயர்வை வழங்கியது.

இன்றைக்குப் பதவி மோகத்தால் எல்லா நடுகளிலும் நிகழ்கின்ற கொடுமைகளை எண்ணி முடியாது. யாராவது ஓர் அரசியல் தலைவர் நெஞ்சைத் தொட்டு, “நான் இந்தக் கட்சியிலிருந்து அந்தக் கட்சிக்கு மாறுவது மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற தூய நோக்கத்துக்காக மட்டுமே’ என முழங்குவாரா?

தன் அரியணைக்கு ஆசைப்படும் இரண்டாம் கட்டத் தலைவர்களை ஓரங்கட்டுவது அல்லது ஒழித்துக்கட்டுவது ஒரு காட்சி. ஒருவரே கட்சி தாவிக் கட்சிதாவித் தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தித்தனம் இன்னொரு காட்சி. நேற்றுவரை எந்தத் தலைவரை அல்லது எந்தக்கட்சியைச் சாடிநின்றாரோ அந்தத் தலைவரின் காலடியில் வீழ்வதும் அந்தக் கட்சியில் இணைவதும் எதில் சேர்த்தி?

கடைசிவரை எந்தப் பதவியிலாவது இருக்கவேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் ஒரு பக்கம். மறுபக்கம் அந்தத் தலைமைபோலத் தமக்கும் ஒரு தலைமை வேண்டுமெனக் கருதியவர்களால் புதுக்கட்சிகளின் புறப்பாடு.

கட்சி உடைப்பு,  பொய் வழக்குகள், ஆட்சிக் கவிழ்ப்பு, வாரிசு அரசியல், அதிகார போதை, பொய்யான வாக்குறுதிகள், மர்மக் கொலைகள் இவையெல்லாம் பதவிமோகம் காரணமாக அரசியலரங்கில் அரங்கேற்றப்படும் அன்றாட நிகழ்வுகளாகிப் போயின.

தன்னுடைய ஆட்சியில் தானே தவறு செய்தமைக்காகக் கண்ணகிக்கு முன் தன் ஆயுளை முடித்துக்கொண்ட பாண்டிய மன்னன் முதல், அரியலூரில் ஏற்பட்ட விபத்துக்காகத் தான் வகித்துவந்த தொடர்வண்டித்துறை (தஹண்ப்ஜ்ஹஹ்) அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிய நடுவணரசு அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி வரை பலரையும் இந்த நாடு கண்டதுண்டு.

வெளிநாடு ஒன்றில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கம். பலநாட்டுத் தமிழர்கள் ஒருங்கு கூடியிருந்த நிகழ்ச்சி. இரவில் தூங்கி விடிகாலையில் எழுந்து சிறிது நேரம் சென்றபின் ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்ந்த பொழுது, தமிழகத்திலிருந்து அங்கே வந்திருந்த ஓரன்பர் வெளிநாட்டுத் தமிழர்களிடம் கேட்ட கேள்வி “என்னங்க பிரேக்பாஸ்ட் முடிஞ்சுதா’ என்பதுதான். பக்கத்திலேயே மலேசிய நாட்டிலிருந்து வந்த தமிழர்கள் தமிழக அன்பர்களிடம் முன்வைத்த வினா: “ஏனுங்க பசியாறிட்டீங்களா?”.

இரவில் உறங்கி, காலையில் எழுந்து, கடமைகள் முடிக்கப்பட்ட சூழலில் மனிதர்கட்குப் பசி ஏற்படும். காலையுணவு உண்டபின் பசி நீங்கும். அதனை அழகு தமிழில் “பசியாறிட்டீங்களா’ என வினவும் அயலகத் தமிழர்களால்தான் தமிழ் வாழ்கிறது.

ஆசுகார் விருது பெற்றபோது அந்த அரங்கிலிருக்கும் எவருக்கும் தமிழ் தெரியாது என்ற போதும் “எல்லாப் புகழும் இறைவனுக்கே’ எனத் தமிழில் சொன்ன ஏ.ஆர். இரகுமானையும் தமிழர் திருநாளான பொங்கலன்று என ஆங்கிலத்தில் எழுதிவைக்கும் தமிழக மக்களையும் பக்கத்தில் வைத்து ஒப்பீடு செய்து பாருங்கள். உண்மை சுடும்.

சோறு என்பது நல்ல தமிழ்ச் சொல். சீவகசிந்தாமணி “சொல்லரும் சூர்ப்பசும்’ என்ற தொடரை வழங்கும். சொல் என்பது நெல்லின் மாற்றுச் சொல். சொல் (நெல்) கொண்டு ஆக்கப்படுவது சோறு ஆனது (கெடுதி கேடு ஆவதைப்போல).

ஆனால், சோறு என்பது தீண்டத்தகாத சொல்லாக, பாமரர் சொல்லாக, கிராமப்புற சொல்லாகக் கருதப்பட்டது, அதற்கு நிகராகச் சாதம் என்ற சொல் பரிமாறப்பட்டது. பந்தி நடைபெறும் இடத்தில் நின்று கொண்டு கொஞ்சநேரம் கவனியுங்கள்.

சாப்பிடுபவர்களின் இலைகளில் சோறு இல்லையென்றால் அல்லது குறைவாக இருந்தால் பந்தியைக் கவனிப்பவர்கள் “இங்கே கொஞ்சம் ரைஸ் கொண்டாங்க’, “யார் கிட்டரைஸ் இருக்கு?’ என்றெல்லாம் கூவக் கேட்கலாம். இது நடப்பியல்.

ஒருமுறை தேவநேயப் பாவாணர் உணவருந்திக் கொண்டிருந்தபோது பக்கத்திலிருந்த நண்பர் உணவு பரிமாறுபவர்களிடம் கொஞ்சம் ரைஸ் போடுங்க என்றார். பரிமாற வந்தவரைத் தடுத்த பாவாணர், கிடுகிடுவெனப் பண்டசாலைக்குப் போனார். ஒரு பிடி அரிசியை எடுத்தார். உணவு கேட்டவரின் இலையில் இட்டார். “இதுதான் நீங்க கேட்ட ரைஸ் சாப்பிடுங்க’ என்றார். ரைஸ் என்பதற்கு அரிசி என்பதுதான் அகராதிப் பொருள்.

பெண் மோகம். பலபேரின் சறுக்கல்கள், வீழ்ச்சிகள், களங்கங்கள், உயிரிழப்புகள் போன்றவை இம்மோகத்தினால்தான் ஏற்பட்டன. தன்னுடைய ஆசை நங்கைக்காகத் திருடப்போய், காலிழந்து நொண்டியாகிப்போன ஒருவன் காம மோகம் காரணமாகத் தனக்கேற்பட்டதை விவரிக்கும் நாட்டுப்புற நாடகம் நொண்டி நாடகம் எனப்படும்.

ஒற்றையாள் அரங்கு அது.

பெண் பித்து, ஆசைப் பேய், காமப் பிசாசு என்ற சொல்லாட்சிகள் பெண் மீதான காம வெறியை எடுத்துக்காட்டும். “பொம்பளை பொறுக்கி’ என்பது கிராமப்புற வழக்கு. வெளியே தெரியாதவாறு எத்தனைபேர் பல குடும்பங்களை அமைத்துள்ளனர்.

ஆடவர்களைப் போலவே பெண்களிலும் சிலர் (சூர்ப்பநகை போலத்) தென்படலாம்.

பெரும்பான்மையான தவறுகளுக்கு இந்தப் பெண் மோகமே காரணமென்கின்றனர் சமூகவியலார். வருவாய்க்கு மேல் தகாத வழியில் பொருளீட்டுபவர்களின் பின்னணியில் பெண்களின் இருப்பு இருப்பதை இன்றைய சூழல் தெளிவுறக்காட்டும். ஆடவர்களின் மேனித்தினவுக்காக இரையாகும் நங்கைகள் எத்தனை பேர்?

வறுமைக்காகத் தம் உடலை விற்கும் பெண்ணொருத்தி கொடியபாவி என்றால், தன் உடற்பசிக்காகப் பல மங்கைகளைப் பாழ்படுத்தும் ஆடவரை என்ன சொல்லிக் குறிப்பது?

ஊடகங்கள், செய்தி ஏடுகளில் அன்றாடம் “கள்ளக்காதல்’ என்பது இடம்பெறுவதை மறுக்க இயலுமா?÷

நலமான வாழ்வை நாசப்படுத்தும் இவைபோன்ற மோகங்களைக் கண்டுணர வேண்டும். எல்லாத் திசைகளிலிருந்தும் வரும் இத்தகைய மோகங்களை வேரறுக்க விழைபவர்கள் உரத்து ஒலிக்க வேண்டிய பாரதியின் வரி ஒன்றுண்டு அதுதான் – “மோகத்தைக் கொன்றுவிடு’.

– அக்டோபர் 2014

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *