கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 23, 2023
பார்வையிட்டோர்: 1,568 
 

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆழிப் பேரலையின் அட்டகாசங்கள் நடந்து முடிந்து இரண்டு மாதங்கள். எங்கும் பயங்கர அமைதி!

“இன்னும் நன்றாக ஓய்வெடுத்த பிறகுதான் நடமாட வேணும்….” என்ற வைத்திய ஆலோசனையை உதாசீனம் செய்துவிட்டு கிராமத்திற்கு வந்து சேர்ந்துவிட்டான் ஆதம்பாவா.

ஒரு வித்தியாசம் கடல்கோள் அவனுடைய வலதுகாலை முற்றாகப் பறித்துச் சென்று அவனை ஊனமாக்கிவிட்டிருந்தது.

கால் போன பிறகு உடம்பின் ஒருபக்க முழுப்பாரத்தையும் சுமந்து நடப்பதற்கு தாங்குக் கட்டையைத்தான் பயன்படுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை.

“இது பொருத்தமில்ல, ஒரு முச்சக்கர இருக்கை வண்டிதான் மிகச் சௌகரியமாயிருக்கும்….?” என்று டாக்டர் வலியுறுத்தியிருந்தார். ஆனால் மனைவி மக்களுக்கு என்னவாயிற்றோ என்ற ஆதங்கமும், கவலையும், தேடலும்தான் அவனை மருத்துவமனையிலிருந்து துரத்தியது.

ஆதம்பாவா கிராமத்திற்கு வந்து ஒரு வாரமாகிறது. சோபை இழந்த கிராமத்தை வெறித்துப் பார்க்கும் போதெல்லாம் அவனது கண்கள் கலங்குகின்றன. “சே! எப்படி மாறிப் போச்சு”

இப்பொழுது ஆழ்கடலின் அந்தக் கருமையான வெறியாட்டம் அடங்கி முற்றாக அமைதி நிலவியிருந்தது. மீண்டும் வெடிக்குமோ என்று மீனவரைக் கௌவிப் பிடித்துக் கொண்டிருந்த அச்ச உணர்வு மெல்ல மெல்ல விடுபட்டுக் கொண்டிருந்தது. எனினும் சோகமயமான சூழல்தான்! சொந்த பந்தங்களை இழந்து என்ன சுகம்?

அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டிருந்த “ஓ”வென்ற பயங்க அலையோசை மட்டும் ஓயவில்லை. அது என்றும் ஓயப்போவதில்லை.

சாதாரண நாட்களிலும் அலைவீச்சு இருந்ததுதான்! ஆனால் இப்பொழுது அவன் பாதிக்கப்பட்டவன்! நிரந்தரமாக அவன் மனக்கடலில் ஒரே கொந்தளிப்பு.

இந்தக் கடலுக்கு ஏன் இவ்வளவு கோபமும் சீற்றமும்…!

எத்தகைய துன்பங்களைச் சந்தித்தாலும் பொறுமையாகவும், நிதானமாகவும் எதிர்நீச்சல் போடுவதில் வல்லவனான ஆதம்பாவாவை விரக்தியும் மனக்கிலேசமும் சுழற்றியடித்து விட்டிருந்தது.

அவன் வாழ்க்கைப் படகு கவிழ்ந்துவிட வேண்டுமென்பது பொல்லாத விதியின் தீர்ப்போ ……!

அன்று அவனிடமிருந்து கையடக்க டிரான்சிஸ்டர் கடல்கோள் ஆய்வாளர்கள் முன்னெச்சரிக்கையாக விடுத்திருந்த செய்தி அலறி ஓய்வதற்கு முன்பே அந்தப் பொல்லாத விதியின் தீர்ப்பு நிறைவேறிவிட்டிருந்தது.

இந்தோனேசியா, சுமத்ரா போன்ற தீவுகளை ஈவிரக்கமின்றித் தாக்கிய அந்தச் சுனாமிப் பேரலையின் பார்வை இலங்கைக்குப் பட்டுவிட்டது. அவனும் அன்று கடலுக்குப் போனவன்தான். ஆனால் அவன் சென்ற தோணி சற்று நேரத்தோடு கரையை வந்தடைந்தது.

அந்தத் தோணியில் சென்ற அனுபவசாலியான மூத்த மீனவன் கடலில் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்துவிட்டான்.

“அப்ப கன நேரம் சொணக்க வாணாம் திரும்புவம்….” தோணியில் சென்றவர்கள் உடன்பட்டதும், அவர்கள் திரும்பிவிட்டிருந்தனர். வந்ததும் வராததுமாக ஆதம்பாவா வீட்டில் பிளேன்ரி அருந்திக் கொண்டிருந்தான். மகன் ரமீஸ் இளவட்டத்தினரோடு மோட்டார் படகில் போனவன்தான் அது எங்கே காணாமல் போனதோ! இன்னும் காணவில்லை. மனைவி மரியமும், மகள் றிம்சியாவும் வழக்கம் போல் கரையில்தான். இரவு கடலுக்குப் போன சொந்த பந்தங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் கும்பலாகவிருந்து சுவாரஸ்யமாக கேளிக்கை செய்து சிரித்து மகிழ்ந்து கும்மாளமடித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரேயொரு விசேஷம்.

முதல் நாள் கிறிஸ்மஸ்! கத்தோலிக்கப் பெண்பிள்ளைகள் கொண்டு வந்திருந்த பலகாரத்தை சுவாரஸ்யமாகச் சுவைத்துக் கொண்டிருந் திருக்கிறார்கள். அவர்களுடைய சிரிப்பும் மகிழ்ச்சியும் கடலைப் பிளந்திருக்க வேண்டும். அன்று கத்தோலிக்க மீனவர்கள் பெரும்பாலாக கடலுக்குப் போகவில்லை.

ஆதம்பாவா நேரத்தோடு வீட்டுக்கு வந்திருந்த செய்தியை மரியமும் றிம்சியாவும் அறிந்திருந்தார்களோ என்னவோ! திடுதிப்பென்று எல்லாமே நடந்து முடிந்து கிராமத்தின் தலையெழுத்தை மாற்றிவிட்டிருந்தது. அனர்த்தங்கள் நடந்து முடிந்து ஒரு சில மணித்தியாலங்களுக்கப் பிறகுதான் உணர்வற்ற நிலையில் மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்க்கப்பட்டு, இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் அவனுக்கு மயக்கம் தெளிந்து எல்லாமே தெரிய வந்தது.

அப்போதே அவனுக்கு எழுந்தோடி வரவேண்டும் என்ற உணர்வுதான்…. ஆனால் முடியவில்லை. உடம்பில் எதையோ ஒரு பாகத்தை இழந்திருக்கிறோம் என்ற உணர்வு இலேசாகத் தட்டியது. “கால் ….. கால் …..”லென்று புலம்பிக் கொண்டிருந்தான்.

நாட்கள் மிக வேகமாக ஓட ஓட மனைவி மக்களைத் தேடிக் கிராமத்திற்குப் போக வேண்டும் என்ற இராட்சஷ உணர்வு விருட்சமாக வளர…. ஏதேதோ ஒழுங்குகள். ‘தாங்குக்கட்டை கிடைத்தது. “இது தற்காலிகமானதுதான். அதிகமாக நடமாடக் கூடாது” என்ற நிபந்தனையில் தான் அதுவும். ஆனால் மனம் கேட்குமா….? கடலில் மூழ்கிக் கொண்டிருப்பவனுக்குக் கிடைத்தது ஒரு துரும்பு. வைத்திய ஆலோசனைகளை உதறித் தள்ளிவிட்டு அவன் கிராமத்தில் வலம் வந்துகொண்டிருந்தான்.

அதிகம் களைத்துப் போனதைத் தவிர ஒரு தகவலும் கிடைக்கவில்லை . உயிர் தப்பியிருந்தால் கிராமத்தில்தான் இருந்திருப்பார்கள். அவன் நெஞ்சத்தை என்னவோ செய்தது. துளி நம்பிக்கையும் இழந்து, இனியும் தேடல் பிரயோசனம் தராது என்ற எண்ணம்தான் வலுவடைந்தது.

உடனிருந்த கும்பலில் அரைவாசிக்கு மேல் அலைகளில் மூச்சுத் திணறி கரையை மறந்திருக்கக் கூடும். சுனாமியின் தீர்ப்பு வீடு, வாசல், சொத்து, சுகம் சொந்த பந்தங்கள் இப்படி அனைத்தையுமே பறித்துவிட்டதோடு ஒரு ஊன்றுகோலின் உதவியுடன் அவனை நடைப்பிணமாய் நடக்கச் செய்து விட்டிருந்தது.

இனிமேல் மீன்பிடித் தொழிற் பகற் கனவு. கிளைகள் இழந்த மொட்டைப் பனையாய் நிற்க வைத்து வேடிக்கை பார்ப்பதில் கடலுக்கு அப்படியொரு அலாதியான இன்பம்!

ஆதம்பாவுக்கு இப்பொழுது நாற்பத்தைந்து. பரம்பரை பரம்பரையாக வயிற்றைக் கழுவிக் கொண்டிருந்த கடற்தொழில் இனி இல்லை என்றாயிற்று.

அவன் அறிந்திருந்த வரைக்கும் அப்படியொரு ஆழிச் சீற்றம் இந்தக் கடலோரக் கிராமத்திற்கு வந்ததேயில்லை! மூன்றாவது முறையாக மிகவும் நெருக்கமான நட்புக்குரிய மிஸ்கீனை நினைத்துப் பார்த்தான்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்குரிய ‘கிரிந்தை’ மலாய்க் கிராமத்தி லிருந்து தொழில் நிமித்தம் இரு தசாப்தங்களுக்கு முன்பே இந்த மீனவக் கிராமத்தில் ஐக்கியமாகி, தள்ளுவண்டியில் ‘சுண்டல்’ வியாபாரம் செய்து திருப்தியாக வாழ்ந்து வந்த நண்பன் மிஸ்கீனுக்கு என்ன நடந்திருக்கும்?

கடல் அனர்த்தங்கள் நிகழ்வதற்குச் சில நாட்களுக்கு முன்பே சொந்த ஊருக்குப் போயிருந்தான். மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது ஊருக்குப் போய் வந்துவிடுவான். மனைவியைக் காணவில்லை. மகனையோ… மகளையோ… நட்புக்குரியவர்களையோ… தேடல் பலனளிக்கவில்லையோ!

எதிரே நின்ற மரத்தில் ஒரேயொரு ஒற்றைப் பனையைப் போல…..

ஆதம்பாவாவும் ஒண்டிக்கட்டையாய் ஒற்றைக்காலில் நின்று கொண்டிருந்தான். கரையில் இருந்த அனைத்தையுமே துடைத்துக் கொண்டு போனதுதான்…..

மனிதர்கள், மிருகங்கள், மனைகள் என்று…. தரைமட்டமாகிப் போன காட்சியை தான் மட்டும் சாட்சியாய் நின்று விழிக்கும் நிலையில்…. கிரிந்தைக்குப் போன மிஸ்கீன் மிகவும் பதட்டத்துடன் திரும்பிவிட்டான்.

தான் ஒரு புதிய கிராமத்திற்குள் பிரவேசிக்கிறோமோ என்ற சந்தேகம்தான் முதலில் அவனை நிலைகுலையச் செய்தது.

ஆங்காங்கே தென்னை மரங்கள் வேருடன் இருந்த இடமே இனங்காண முடியாமலும், பல கல் வீடுகள் இடிந்தும், கூரை இழந்தும், கட்டிடங்கள் உடைந்தும், சரிந்தும், சிதைந்தும்… மிஸ்கீனின் தலை சுற்றியது.

ஓட்டமும் நடையுமாக ஆதம்பாவை தேடிச் சென்றான். அவனது சிறு கல்வீடும் விதிவிலக்கல்ல. சிதிலமடைந்த முன் அறையில் அவன் நிலையைக் கண்டான்.

“ஆதம்பாவா…… ஆதம் ….. ஆதம்… உனக்கென்ன இப்படி…..?”

ஆதம்பாவாவின் சோகம் கலந்த மௌனம் அவனுக்கச் சகலதையும் ஒருகணத்தில் உணர்த்தியது. ஆதம்பாவாவுக்கு இப்பொழுதுதான் ஓரளவுக்கு இதமாகவும் இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் நண்பர்கள் கட்டித்தழுவி நாடளாவிய ரீதியில் ஆழிச் சீற்றத்தினால் ஏற்பட்ட விளைவுகள் பற்றி கருத்துக்கள் பரிமாறிக் கொண்டார்கள்.

குடும்பத்தை, குடியிருப்பை, தொழிலுக்காக ஓடித்திரியும் கால்களில் ஒன்றை…. இப்படி எல்லாமே இழந்து நிர்க்கதியாகி நிற்கும் ஆதம்பாவாவின் மனக்கொந்தளிப்புக்கள் ஓயுமா…?

மிஸ்கீனும் சிந்தனைக் கடலில் மூழ்கிக் கொண்டிருந்தான்.

அவனுக்கு முதல் வேலையாகத்தான் இதுவரை காலமும் வாழ்ந்த வீட்டின் சுவர்களைத் திருத்தி, கிடுகி வாங்கிக் கூரையை வேய வேண்டும். ஆதம் பாவாவின் வீட்டைப் பொறுத்தவரையில் ஒன்றும் உதவ முடியாது. தகரங்கள் பறந்த கூரை, சிதிலமடைந்த சுவர்கள், இடிந்து போன முன் விறாந்தை, தரை மட்டமாகிப் போன சமையலறை. நான்கு தசாப்தங்களாக குடும்பத்தோடு வாழ்ந்த பெரிய வீடு அது. முன் விறாந்தையை மட்டும் ஒரு நல்ல அறையாக மாற்றிக் கிடுகு வேய்ந்தால் ஆதம்பாவாவுக்குச் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்.

மிஸ்கீனின் குடிலில் பெறுமதியான உடைமைகள் எதுவும் இருக்கவில்லை.

சுண்டல் விற்கும் தள்ளுவண்டி மட்டும் வீட்டிற்கு அருகிலேயே மணலில் புதையுண்டு கிடந்தது. பெரிய திருத்தங்கள் ஒன்றும் இல்லை. உருட்டிக் கொண்டு போய் நகரில் கந்தையா கராஜில் கொடுத்து துப்புரவு செய்துவிட்டால் மென்மையாக ஓடும்.

வந்த ஓரிரு நாட்களிலேயே இரவு பகலாய் இந்த விடயங்களில் தீவிர கவனம் செலுத்தியதும் மீண்டும் கடலோரத்தில் சுண்டல் மணம் கமகமத்தது. ஆனால் முன்பு போல் வியாபாரம் சூடு பிடிக்கவில்லை. வண்டியை ஒரு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள நகரத் தெருக்களிலும் தள்ளவேண்டியிருந்தது. என்ன செய்தாலும் மிஸ்கீனின் சிந்தனை முழுக்க முழுக்க ஆதம்பாவாவையே சுற்றிக் கொண்டிருந்தது.

‘வலது காலை முற்றாக இழந்தவனுக்குக் கிடைத்த ஒரேயொரு நிவாரணம் அந்த ஊன்றுகோல் தானா? எப்படி இருந்தவன், இப்படிப் போனான்! இனி வருங்காலமெல்லாம் அவன் நொண்டியாக அந்தத் தாங்குக் கட்டையில்தான் தொங்கிக் கொண்டிருக்க வேண்டுமா? இந்த அவலங்களுக்கு கிடைக்கப் போகிற சன்மானந்தான் என்ன….?’

மிஸ்கீன் தீவிரமாக யோசித்தான். கிராமத்தில் முக்கியமானவர்களுடன் இணைந்து அழிவு விபரங்களைத் திரட்டினான். சான்றுகளுடன் சம்பந்தப்பட்ட நிவாரண அதிகாரிகளுக்குச் சமர்பித்தான்.

மனதிற்கு திருப்தியாக இருந்தது. இனியும் விதியின் தீர்ப்பு எந்த ரூபம் எடுக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பசி வந்ததும் பத்தும் பறந்தன. பொன்னான தேடல் நேரம் உட்பட இப்பொழுது பாடசாலைக்குப் போனால் தனக்கென ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கும் பகலுணவுப் பொட்டலத்தை எடுத்துக்கொண்டு வரலாம்.

சுனாமியினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பகலுணவு சமைத்துப் பகிர ஊர்மக்கள் ஒழுங்கு செய்திருக்கிறார்கள்.

தூரத்தில் ஆளரவம். யாரோ வருவது போல் தெரிகிறது. தெளிவில்லை . தூரப்பார்வையும் மங்கிவிட்டதோ!

தாளித்த காரமும் மணமும், அவித்த சுண்டல் கடலைக்காரனின் வருகையை முன்மொழிகிறது. “நம்மாள்தான் மிஸ்கீன் திரும்பி வாரார். பசிக்குது அவித்த கடலை தாப்பா…. என்று முணுமுணுத்தாலே போதும். வாரிக் கொடுப்பதில் பாரிதான். நண்பனாயிருந்தாலும்… வாய் திறந்து கேட்பது…. ச்… சீ…. அது யாசகமாச்சே….. எனக்கு எப்படி இந்தப் புத்தி வந்திச்சி….?”

“குந்தியிருந்து ஆழ்கடலை விழித்துக்கொண்டு என்ன அப்படி யோசனை?”

“சுதந்திரத்துக்குப் பின்பு எங்கட மாவட்டந்தான் ஆகக்கூடிய அமைச்சர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசமாக விளங்குகின்றது என்று பெருமைப்பட்டுக் கொண்டு என்ன பிரயோசனம்?” ஆதம்பாவாவின் மனம் கிலேசமடைந்து உதிர்ந்த வார்த்தைகள் மிஸ்கீனைச் சிந்திக்க வைத்தது. “அவசரப்படாதே ஆதம்…. ஒரேயொரு அமைச்சர் வீடமைப்புத் திட்டத்தில் தீவிரமாகத்தானே இருக்கிறார்? அது சரி… இனியும் எங்கள் முயற்சி பலன் தருமா….?” மனக்கடலில் கொந்தளிப்பு.

கடற்தொழிலுக்குப் போன ஆட்கள் உயிரோடில்லா விட்டாலும், சடலங்களாவது கரை சேர வேண்டுமே என்ற அங்கலாய்ப்பு மறுபக்கம். அப்புறம் என்ன நினைத்தானோ மெல்ல எழுந்து நின்றான். குனிந்து ஊன்றுகோலைத் தடவியெடுத்து கக்கத்தோடு பொருத்திக் கொண்டு ஊன்றியூன்றி நடந்தான். வேகமாக நடப்பதுபோல் ஒரு நினைப்பு.

சற்று தூரத்தில் தரையில் ஏதோ ஒரு சிறு விரிப்பு. உப்புக்காற்றடித்துப் பறந்துவிடாமல் மேலால் சற்றுப் பாரமான ஒரு கல். விரிப்பின்மையத்தில் பிஸ்கற் பக்கட். சீஸட்டின், அழகிய பிரயாணப் பை, செய்தித்தாள் இணைந்த ஒரு கட்டு. இத்தியாதி காற்றுக்குப் படபடத்துக் கொண்டிருக்கின்றன. நூறடி தூரத்தில் ஒரு வெள்ளைக்கார ஜோடி ஆணும் பெண்ணுமாக தோற்பட்டையை இறுக அணைத்தவாறு வெறித்துப் போயிருந்த கடலையே விழித்துக் கொண்டிருந்தனர்.

அந்த இளம் ஜோடிகள் உல்லாசப் பயணிகளா? கடல் அனர்த்தங்களை ஆய்வு செய்ய வந்தவர்களா? என்று அறிய முடியவில்லை.

ஆதம்பாவாவுக்கோ கோரப் பசி. அந்த விரிப்பிலிருந்து ‘கிறீம் கிரக்கர்’ பிஸ்கற் இரண்டை எடுத்தால் என்ன…? அவர்கள் சாப்பிட்டு முடித்துவிட்ட மீதங்கள் தானே! ச்சே…. ச்சே மீண்டும் இப்படியான எண்ணங்களைப் பொசுக்கிவிட்டு, மெல்ல மெல்ல சென்று அவர்களை அவதானித்தான்.

அலைகள் மண்டியிட்டன.

என்ன செய்வதென்றே தெரியவில்லை. மீண்டும் திரும்பினான். விரிப்பில் ஒரு கள்ளக் கண்ணோட்டம். இரண்டு பிஸ்கற்றுகள்தான் இருக்க வேண்டும். டின் காலியாக இருந்தது. இவர்கள் தேசத்தில் ஏற்பட்ட திருப்பங்களையும், மற்றும் கடற்கோள் சார்ந்த புதிய தகவல்களையும் சேகரிப்பதற்காக வந்தவர்களாகத்தான் இருக்க வேண்டுமென்று ஊகித்துக் கொண்டான். ஆனால் நிச்சயமாக பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென்ற மானுடநேய அணுகு முறைக்காக வந்தவர்களல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டான்.

வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்ததில் கடலை வண்டிக்காரனுக்கு ஒரே களைப்பு. உட்கார்ந்து களைப்பாறினான்.

“தள்ளிவிடட்டுமாமிஸ்கீன்?” இவன் கேட்டான் உதவும் நோக்கில். அவன் சிரித்தான். அது விரக்திச் சிரிப்பு. “உன்னால் ஏலாவிட்டாலும் கேட்டதற்கு நன்றி ஆதம்…”

“தள்ளிக்கொண்டு வந்த சொந்தங்களைத்தான் இழந்து விட்டோமே. இனி என்னத்துக்கு புதிய பங்காளிகள்…”

அவன் மனதிற்குள் கறுவிக்கொண்டான். இணைபிரியாத பயண ஜோடிகள் எதிரில். கையில் பேப்பர் கட்டுப் பொதி. அவனைப் பார்த்து புன்முறுவல் தீத்தனர்.

அவன் நிலைமையைப் பார்த்துப் புரிந்து கொண்டதும், அந்தப் புன்முறுவல் ‘பட்’டென்று வாடி விட்டது. முகப்பரப்பெங்கும் கழிவிரக்கம் சூழ, மெல்ல அப்பால் நகர்ந்து கைப்பையின் சிப்பைத் ‘கிறீச்சென்று இழுத்துத் துழாவி எடுத்து ஒரு கவரில் போட்டு, அவன் கையில் திணித்தாள், அந்த வெள்ளைக்கார மாது.

“கொம்ப்லிமன்ட்ஸ்” என்று அவள் வார்த்தைகள் சிந்த, அவனுக்கு கண்கள் கலங்கி, தொண்டையை அடைத்தது.

சிரமப்பட்டு “தெங்யூ மெடம்” சொல்ல,

அவளும் “ஓ… டோன்ட் மென்ஸன் ப்ளீஸ்” என்ற வார்த்தை உதிர்வுகளுடன் அவர்கள் அப்பால் சென்று மறைந்தனர்.

மிகுந்த உற்சாகத்துடன் மீண்டும் பழைய இடத்திற்கே வந்து சேர்ந்தான் ஆதம்பாவா. திடீரென்று ஒரு விழிப்புணர்வு.

ஏதோ அரவம் கேட்டு பூரிப்படைந்தான். கடலில் அது சொந்தங்களின் குரலா? போய்த்தான் பார்ப்போமே.

தாங்குக் கட்டை ஒத்துழைத்தது.

விரைந்து சென்று பார்வையை அலைய விட்டான். சே!

பிஸ்கற் சிதறல்களுக்கு இரண்டு நாய்கள் போட்டி. மீண்டும் தொடர்ந்த நடையில் பசியும் களைப்பும் காரணமாகத் தளர்வு ஏற்பட்டிருந்தது. வெள்ளைச் சோடி கொடுத்த பேப்பர் பொதியைக் கக்கத்தில் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தான். ஐநூறு ரூபா கவர் ‘சேட்’ பொக்கற்றில் பத்திரமாக சிறைப்பட்டிருந்தது.

எத்தனை தரம் பார்த்து பார்த்து பரவசமடைந்தானோ!

நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு ஐநூறு ரூபா தாள் சொத்தாகி விட்டது.

ஒரு பாதுகாப்புக்காகச் சுற்றிச் சுற்றி மீண்டும் கடலைக்காரன் மிஸ்கின் எதிரே வந்தான்.

“என்ன ஆதம் …. வெள்ளைக்கார அம்மா கொடுத்த நிவாரணப் பொருளா…?”

“அட இல்லப்பா… உள்நாட்டு வெளிநாட்டு பேப்பர் கட்டு. இன்னொரு விசயம் வெள்ளைக் கவர்ல ஐநூறு ரூபா நோட்டு… மனுஷி அன்பளிப்பாதந்தா…”

“அப்படியா…?” மிஸ்கின் துள்ளிக் குதித்தான். அவனோடு சேர்ந்து ஆதம்பாவாவுக்கும் குதிக்க ஆசைதான்.

“ஆதம் கடலைச் சுருள் செய்ய நல்ல தரமான தாள்…” அவன் ஆர்வமெல்லாம் சுருள் செய்வதில்.

“இதில் சுனாமி செய்திகளும், படங்களும், தகவல்களும் இருக்கும். மேலோட்டமா பார்த்துட்டு தர்றேன்.”

“அப்ப நம்ம கிரிந்தை கிராமத்து ஜனங்க போன தோணியப் பத்தியும் செய்தி வந்திருக்கும் கவனமாப் பார்….”

“சரி…. சரி… நீ ஒரு சுத்து சுத்திட்டு வா நா கட்டிவைக்கிறன்…..”

இப்பொழுது அவன் ஆர்வமெல்லாம் குந்தியிருந்து பேப்பர் படிக்க வேண்டுமென்பதே. செய்திகளைத் தேடித் தேடிப் படித்தான்.

அது உலகப் படத்தில் தனது சிறு கடலோரக் கிராமத்தைத் தேடுவது போன்ற முயற்சி.

அவர்கள் கிராமத்தைப் பற்றியோ, கிரிந்தை கிராமத்திலிருந்து போனவர்களைப் பற்றியோ ஒருசெய்தியோ, படமோ இல்லை. அவன் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த விடயத்தில் மண் விழுந்தது போல் அந்த ஒரேயொரு செய்தி அவன் உள்ளத்தைத் துளைத்தது.

அந்த ஒரேயொரு அமைச்சரின் உழைப்பினால் வெளிநாட்டு உதவியைக் கொண்டு பிரதேசத்துக்கு அத்தியாவசியமான வீடமைப்புத்திட்டம் நடைமுறையில் சாத்தியப்பட்டும்…. எல்லாருக்கும் நிச்சயமாக கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்….

இதற்கு எதிராக பெரும்பான்மை சமூகத்தினரால் எதிர்ப்பும் குழப்பமும் விளைவிக்கப்பட்டு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதவாறு எல்லாமே நடந்து முடிந்துவிட்டது.

ஆங்கில பத்திரிகைச் செய்தியை வாசித்துப் புரிந்து கொள்ள அவனுக்குச் சற்று சிரமமாகத்தான் இருந்தது. புரிந்து கொண்டதும் பெரிய ஏமாற்றமாய் இருந்தது அவனுக்கு.

மனக்கொந்தளிப்பு அடங்காமல் மீண்டும் ஆழ்கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு கடற்கரையை ஒட்டிய கிராமத்துச் சாலையில் நடந்து கொண்டிருந்தான்.

ஒற்றையாய் நின்ற இடதுகாலும் உளைச்சலெடுத்தது. ஒருவாறு குடிலை வந்தடைந்தான்.

நண்பன்மிஸ்கீன் திருத்தித்தந்த முன்விறாந்தை அறையில்தான் சாக்குக் கட்டில், படுக்கையும், பெட்டியும்.

மனம் போல் திறந்த வாசல். யாரும் வரலாம், போகலாம்.

இப்பொழுதெல்லாம் ராசாவுக்கு விறாந்தை திண்ணைதான் பெரும்பாலும் இருக்கை கொள்ளும் சிம்மாசனம்.

இராக் காலங்களில் உள்ளே அந்த உடைந்த பெட்டியின் மீது ஒரு சிமினி விளக்கு எரிந்து கொண்டிருக்கும். எப்பொழுதும் திண்ணையில்தான் குறட்டை விடுவார்.

“இவர்தான் வெளிநாட்டவரை சந்தித்துவிட்டு வந்த பிரமுகர்.” மீனவர்கள் பேசிக் கொண்டனர். அதுவும் ஒரு தனி மௌசுதான். வழக்கத்திற்கு மாறாக ஆங்காங்கே ஆள் நடமாட்டம் இவரைக் கண்டு புதினம் விசாரிக்க ஒரு சிலர்.

மீண்டும் பேப்பர் கட்டைக் கிளறினான். கடல்கோள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிறைய நிறைய உதவிகள் கிடைக்கப் போவதாகக் கொட்டை எழுத்துச் செய்திகள் மெய்சிலிர்க்கச் செய்து வாசிக்கச் சுவையாகத்தான் இருக்கின்றன. நுனிப்புல் மேய்ந்து முடிந்தவுடன் சிதறிப்போன செய்தித் தாள்களை எல்லாம் ஒன்றிணைந்து கட்டிக் கொண்டிருக்கும் போது சொல்லி வைத்தாற் போல் மிஸ்கீன் வந்து சேர்ந்தான்.

“இந்தாடாப்பா பேப்பர் கட்டு…” தனியாகக் கிழித்து வைத்திருந்த வீடமைப்புத் திட்ட செய்தியைக் கொடுத்தான்.

மிஸ்கீனுக்கு ஆங்கிலம் பரவாயில்லை . மிக அவசரமாகப் படித்து மனம் நொந்தான். அதை அவன் காட்டிக் கொள்ளாமல்…

“…அதைவிடு ஆதம்…எல்லாம் இறைவன் நாட்டம்தான்….” என்று நண்பனை ஆசுவாசப்படுத்தினான். அப்புறம்,

“ஆதம்! இன்றைக்கு பாடசாலையில் சமைக்கில்ல. ஒரு ஹாஜியாரின் கொம்பனி வேன் வந்து பகலுணவுப் பொட்டலங்கள் கொடுத்தாங்க….. நான் உன்ட பங்கையும் எடுத்து வந்தன். இந்தா பிடி….”

ஆதம்பாவாவுக்கு இன்றைக்கு அதிர்ஷ்டம். “ஜசாகல்லாஹ்”

“ஹாஜியார் இந்த வருடம் மூன்றாவது முறையாக ஹஜ்ஜூக்குப் போக இருந்தாராம். சுனாமி அவர் மனதை இளகச் செய்திருக்கிறது. கிராமம் கிராமமாய்ப் போய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யப் போகிறாராம்….”

“மாஷால்லாஹ்…. நல்ல முன்மாதிரியாக இருக்கே…..” அவனுக்கு ஓரளவு ஆறுதல்.

ஒரு கிழமையாக ஒழுங்கான உணவு இல்லை. ‘கமகம’வென்று மணக்கும் பிரியாணியை சிம்மாசனத்தில் இருந்தவாறே சாப்பிட்டான்.

ஹாஜியாருக்கு மானசீகமாக நன்றியைத் தெரிவித்துக் கொண்டது மனம்.

சிறிது நேரத்தில் திண்ணையின் மறுபுறத்தில் சுருண்டு நித்திரையாகிப் போனான் ஆதம்பாவா. மீண்டும் விழிப்படைந்ததும் புறம்பாக எடுத்து வைத்திருந்த அந்தப் பத்திரிகைத் துண்டை மீண்டும் படித்தான். கொந்தளிப்புகள் உயிர் பெறுகின்றன.

கடலோரத்தில் அந்த ஒற்றைப் பனைமரம் பரிதாபமாக நின்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. மீண்டும் தளைத்து வளர அதற்கு வாய்ப்பில்லைதான்.

– மல்லிகை 44வது ஆண்டு மலர் ஜனவரி-2009

– கொங்கணி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: 2014, எஸ்.கொடகே சகோதரர்கள் பிரைவேட் லிமிடெட், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *