கதையாசிரியர்:
தின/வார இதழ்: மணிக்கொடி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 9, 2023
பார்வையிட்டோர்: 2,794 
 
 

(1933 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘காடே, கவுதாரி, மைனா வாங்கலியோ, ஆயாளோ!’ என்று தகரச் சோடாவைத் தட்டிக் கொண்டு பாடி, காடை, கவுதாரி, மைனா இவைகளை அடியோடு மறந்துபோய், ‘ஊசி வேணுமா. சாமி, ஊசி” என்று ஊசி வியாபாரம் செய்யும் ஆசாமி மைக் குறத்தியல்ல. அவளுக்கு நரித் தொம்பச்சி என்று நாகரிகப் பெயர். அவளுக்கு வலது கையில் தகரச் சோடாவும், இடது தோளில் தரித்தோல் பையும், வலது தோளில் ஒரு குழந்தையும் இருக்கும்.

‘கூடை முறம் கட்டலியோ!” என்று அழுகை ப்ராஸம் செய்து கொண்டு, கூடையில் பளை ஆக்குகளையும் ஒரு முழ நீள அரிவாளையும் கொண்டு வந்து, கூடை முறம் கட்டுவதில் ஊர் ஸ்திரீகளிடம் பேரம் செய்கிறாளே, அவளும் மைக்குறத்தி அல்ல. அவள் உப்புக் குறவன் பெண்சாதி – உப்புக் குறத்தி. வீட்டார் அயர்ந்து போனால், இவள் மூலமாய்ப் பித்தளைச் செம்புக்கு ஆபத்து என்று கிராமத்திலே சொல்லிக் கொள்ளுகிறார்கள். உப்புக் குறத்தியின் ‘கைப்பிடி நாயகனுக்கு’க் காடாறு மாதம், வீடாறு மாதம்; அதாவது, வருஷத்திலே ஆறு மாதம் வெளியே இருப்பான்; ஆறு மாதம் சிறையிலிருப்பான்.

‘பச்சை குத்தணுமா, குறி சொல்லணுமா, காட்டுக் கருவேப்பிலை வாங்கலியோ!’ என்று ஒய்யாரமாய்ச் சொல்லி வருகிறாளே. அவள்தான் மைக்குறத்தி. பாரதியார் சொல்லுவது போல, அவள் நிறம் ‘நேர்த்தியான மைக்கறுப்பு.’ ‘சொல்லினைத் தேனில் குழைத் துரைப்பாள், சிறு வள்ளி’யின் குலத்தைச் சேர்ந்தவள்தான் என்று மைக் குறத்தி பெருமையாகச் சொல்லிக் கொள்ளுவாள். ‘பச்சைமலை பவளமலை எங்கள் மலைநாடு’ என்று அவள் பாடத் துவங்கி விட்டால், நமது வாய்கள் தாமாகவே ஏற்றச் சால்களைப் போல விரிந்து போகும்.

மலைநாட்டு வாசிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்கள் சதா ‘ஏறி இறங்கும் திருமேனி’களாய் வாழ வேண்டியிருப்பதால், உயரமாய் வளருவதில்லை. எப்பொழுதும் உணவுக்கு வேலை செய்து கொண்டு இருக்க வேண்டுமாகையால், உட்கார்ந்து உயரமாய் வளர்வதற்கு நேரம் இல்லையோ என்னவோ! உயரம் என்ற விஷயத்தில் அவர்கள் மோசம் போனார்களே யொழிய, கனத்தில் மோசம் போகவில்லை. அவர்கள் ‘கட்டைக் குட்டை. தேகம் குண்டுக் கல். ஆனால் தூக்கிப் போட்டால் உடைந்து போக மாட்டார்கள்.

பட்டரைப் பலகையில் நாள் முழுவதும் உட்கார்ந்து வியாபாரம் செய்பவர்களின் உடம்புகளும் கனத்துத்தான் இருக்கும். ஆனால் அந்தத் தேகங்கள் நீர் கோத்துக் கொண்டிருக்கிற வெள்ளரிப் பழங்கள், பரங்கிப் பழங்கள். தொப்பென்று விழுந்தால் நீராய் ஓடும். அடைமழையில் ஊறின தோல் எப்படியிருக்கும்? இரவு முழுதும் தொண்டை வரண்டு போகும்படி கத்தின நீர்த் தவளை எப்படி ஊதியிருக்குமோ அப்படி யிருக்கும் சுகவாசிகளின் உடம்பு. லங்காபட்டணம் தாண்டின ஹனுமானைப் போல, மலைவாசிகள் தாண்டித் தாண்டி நடக்க வேண்டியிருப்பதால், அவர்கள் உடம்பு கெட்டிப்பட்டுப் போவதில் என்ன ஆச்சரியம்?

நாகரிக ராஜாங்கக் கொடி பறக்காத காடுகளில் மலைக் குறவர்களுக்கு வாசம். ஏதோ நினைப்பு வந்த காட்டு யானைகள், சில சமயங்களில், நாட்டிலிருக்கும் கிராமங்களில் தங்கள் பார்வையைச் செலுத்தி, அங்கே வேண்டுமளவு சேஷ்டைகள் செய்து கொள்ளுவது போல, மலைக் குறவனும் குறத்தியும், குடும்ப சகிதமாக, காட்டுக் கருவேப்பிலை, பச்சை குத்தும் ஊசி, மை, குறி சொல்லும் கோல் – இவைகளை உடன்கொண்டு, நாட்டில் இறங்குவார்கள்.

நடு நெற்றியிலே நீண்ட ரேகைப் பச்சையோட, அதனடியில் பச்சைப் பொட்டு அதைத் தாங்கி நிற்க, சட்டுச் சட்டு என்று அடி எடுத்து வைத்து நடந்து வரும் குட்டைக் குறத்தியின் சத்தத்தைக் கேட்டால், ஊராருக்கு ஆனந்தம். புதுப் பேர்வழி வந்தால், கிராமத்திலே எல்லோருக்கும் சந்தோஷம். வெடுக்கு வெடுக் கென்று துடுக்குப் பேச்சை அடுக்கு அடுக்காய்க் கொட்டிப் பேசும் மலைக் குறத்தியினிடம் ஆண், பெண், குழந்தை, கிழங்கள் யாருக்குத்தான் காதல் உண்டாகாது? மலைக் குறத்திகளுக்குக் கிராமத்தில் ‘விருந்து வேட்டை’; காடுகளில் காட்டு மிருகங்கள் வேட்டை.

‘காட்டுக் கருவேப்பிலை வாங்கு, அம்மா குழம்பிலே போட்டுத் தாளித்தால், குருணிச் சோறு சாப்பிடலாம். ஆறு மாசத்துக்குக் குழம்பு ஊசிப் போகாது. ராசாத்தி மாதிரி பாக்கிறயே!’ என்பாள் மைக் குறத்தி, மலைக் குறத்தி வள்ளியின் தங்கை.

‘வீட்டுப் புருஷன் சரியாயிருந்தால்தானே, காட்டுக் கருவேப்பிலை வாங்கி, குழம்புச் சாதம் உருட்டி உருட்டித் தின்பதற்கு? கருவேப்பிலை இருக்கட்டும். எல்லோரும் கூடுவதற்கு முன் என் கையைப் பார்த்துக், குறி சொல்லடி!’ என்பாள் வீட்டுப் பெண்.

‘கொண்டைச் சொருக்கி ஒத்தி உன் புருஷளைத் துண்டு துண்டாய் வெட்டிவாராள். அந்த ஐயனுக்குச் சொந்தப் புத்தி யில்லை. காசு கரியாச்சு, காயம் பொய்யாப் போச்சு. நெஞ்சு உனக்குப் பொடிப் பொடியாப் போச்சு. நல்ல நாள் வருது. சொல்லுகிறேன், கேளம்மா!’ என்று மைக் குறத்தி அடுக்கிக் கொண்டே போவாள்.

‘எப்போ நல்ல காலம் வருது? எப்படி வருது?’ என்பாள் வீட்டு அம்மணி.

‘மைக் குறத்தி கையாலே, மருந்து போட்டால் நல்ல காலம்!’ என்பாள் குறத்தி.

‘உன் கிட்ட இருக்கா?’ என்பாள் அம்மணி. பேரம் முடிவதற்குள் கூட்டம் கூடிவிடும்.

இதற்குள் ஒரு சிறு பெண் தன் கையை நீட்டுவாள். கையைப் பார்த்த மைக்குறத்தி, அதைச் சத்தம் போட்டு முத்தமிடுவாள். ‘என்ன ஒண்ணும் சொல்லாமலே முத்தம் இடுகிறாய்?’ என்பாள் ஒரு கிழவி.

‘கையைப் பாரு அம்மா, ராஜாத்தி கை! ராஜாக் கள்ளன், மந்திரிக் கள்ளன் இரண்டு பேரும் வரான். மந்திரிக் கள்ளன் மலையேறிப் போளான். ராஜாக் கள்ளன் இந்த ராஜாத்தி வள்ளியைக் கொண்டோடிப் போனான். ஆறு மாசம் பொறுங்க!’ என்பான் குறத்தி,

வரப் போகிற புருஷன் எந்தப் பெண்ணுக்கு ராஜாவாகத் தோற்றுவான் என்பதைக் கூட்டத்தார் மறந்து போவார்கள். ஆனால் குறத்தி அதை மறப்பதில்லை. குறத்திக்குக் கொண்டாட்டத்தானே!

வண்டிக்கார அழகப்பன் வந்து தோன்றுவான். வண்டிக் காரனுக்கு எந்த இடத்திலும் சலுகை. பெண்கள் அவனைக் கண்டு கூச்சப்பட மாட்டார்கள். ‘ஆயா! நீ குறி சொன்னது போதும். என் வள்ளாங் கையிலே (இடது கையிலே) நான் எப்போதும் பார்க்கும்படியாய் அழகான பெண்பிள்ளையை எனக்குப் பச்சை குத்து பார்ப்போம்!’ என்பான் அழகப்பன்.

‘பொம்பளைக்குச் சேலை கட்டியா, அல்லாட்டி…’ என்று அவனைப் பார்த்துச் சிரிப்பாள் குறத்தி. மலைக் குறத்தி இருக்கிற இடத்தில் வெட்கம் என்பதே தலை காட்டாது.

கிடைக்கும் சம்மானங்களைப் பெற்றுக் கொண்டு குறத்தி அப்புறம் நகர்வாள். இளங் காளைகள் கூட்டமொன்று அவளைப் பிடித்துக் கொள்ளும். ‘ஏ, வள்ளியக்கா! உன்னை வெகு நாளாக இந்தப் பக்கம் காணோமே!’ என்று ஏக காலத்தில் எல்லோரும் கூச்சல் போடுவார்கள்.

‘என்னைப் பெத்த ராசாக்களே! ஒத்தியைப் பார்த்து எல்லோரும் மோகிக்கலாமா? உங்க சாதி வழக்கமோ?’ என்று சொல்லிச் சிரிப்பான்.

‘குறத்தி ராஜாத்திக்குக் கோபம் வருதுடோ!’ என்பார்கள் எல்லோரும்.

‘வீட்டுச் சோறு இப்படித்தான் உங்களைப் பேசச் சொல்லும்!’ என்று சொல்லிவிட்டு மேலே செல்லுவாள்.

பொக்கை வாயை மென்று கொண்டிருக்கும் கிழவர் ஒருவர். அவளைக் கைதட்டிக் கூப்பிடுவார். ‘சாமி, சுகமா?’ என்பாள் நேர்த்தியான மைக்குறத்தி.

‘உன்னைக் காணாமல் என் கண் பூத்துப் போச்சடி!’ என்பார் கிழவர்.

‘என்ன சாமி! கட்டின பெண்டாட்டி மாதிரி அடி போட்டுச் சொந்தம் கொண்டாடுறே!’ என்று சிரிப்பாள்.

‘எனக்கு எப்போ காலம்? கையைப் பார்த்துக் குறி சொல், பார்ப்போம்.’ என்பார் கிழவர்.

‘காலம் கிட்ட கிட்ட வருது; நீ எட்ட எட்டப் போய்விடறயே!’ என்பாள்.

என்னவென்று அவனை வெறித்துப் பார்ப்பார் கிழவர், காமக் கண்களுடன்.

‘சாமி, என்னை வெறிச்சுப் பார்க்காதே. அதோ என் புருஷன் வாரான்!’ என்று சொல்லிவிட்டு ஓட்டமெடுப்பாள், சுந்தரிக் குறத்தி. மைக் குறத்தியின் ஜாலக் கண் வேடிக்கையிலும், சாது சேஷ்டைகளிலும், மகிழ்ச்சி ததும்பும் பேச்சிலும் ஈடுபடாதவர்கள் யார்? இஷ்டமிருந்தால் பதில் சொல்லுங்கள்.

– 1933, மணிக்கொடி

வாழ்க்கை வரலாறு பிறப்பு தமிழ் உரைநடை உலகில் தனிச் சிறப்பு உடையவர் வ.ரா. என்று அழைக்கப்படும் வ.ராமசாமி ஐயங்கார் ஆவார். பாரதியாராலே உரைநடைக்கு வ.ரா.' என்று பாராட்டுப் பெற்றவர் அவர். தஞ்சை மாவட்டத்தில் திருப்பழனத்திற்கு அருகில் திங்களூர் என்னும் சிற்றூரில் 1889 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் பதினேழாம் நாள் அவர் பிறந்தார். அவருடைய தந்தையார் வரதராஜ ஐயங்கார்; தாயார் பொன்னம்மாள். அவரோடு உடன் பிறந்தோர் எழுவர்; வ.ரா. மூத்த…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *