(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நான்தான் மேஜர் ரஹ்மான். என்னை உங்களுக்குத் தெரி யாது; ஆனால் உங்கள் அனைவரையும் எனக்குத் தெரியும்.
தமிழ் மொழி எட்டாத இந்தத் தொலை தூரத்தில், மலைச் சாரலில், ஒரு கூடாரத்தினுள் உட்கார்ந்து சிந்தனை செய்யும் போது, ‘நீங்களே தான் நான்’ என்ற உணர்வு எனக்குத் தோன்றுகிறது.
அன்னை காவிரி, கடலுக்குள் கலப்பதற்கு முன்னால் ஐந்து கிளைகளாகப் பிரிந்து பூம்பொழில் விளையாட்டு ஆடுகிறாளே; அந்த மாவட்டத்தில் பிறந்தவன் நான். என்னுடைய ஊர் பாபநாசத்திற்கும் ஐயன்பேட்டைக்கும் இடையே உள்ளது. அங்கேயுள்ள பூவரசு மரங்கள், தாமரைக் குளம், வாழைக் கனி, வெற்றிலைக் கொடிக்கால், ராஜன் வாய்க்கால், பிள்ளையார் கோயில், வெண்ணிற மசூதி எல்லாம் எனக்குச் சொந்தம். அவை என்னுடைய உதிரத்துடன் தொடர்பு கொண்டவை. அவைகளிலிருந்து என்னைத் தனியே பிரித்துவிட்டால் நான் வெறும் கட்டை, உயிரற்ற சவம்!
அரபு, தமிழ், ஸம்ஸ்கிருதம் ஆகியவற்றின் கலப்பான கொச்சை மொழி ஒன்றை வீட்டில் நாங்கள் பேசுவோம். சோழ மன்னர்கள் காலத்தில், நாகப்பட்டினத்திற்கு அருகில் கரை தட்டிய மரக்கலம் ஒன்றில் வந்த அரபுப் பெண் ஒருத்தியை என் மூதாதையர் மணந்ததாக என் நானி – அதுதான் பாட்டி- கூறுவது வழக்கம். என் நானிக்கு மதம் என்று ஒன்றும் கிடையாது. அவளுக்குக் குமரன் ஆவேசம் வரும்; மாரியம்மன் கோயிலுக்குப் போய் வருவதும் உண்டு. ரம்ஜான் மாதங்களில் நோன்பும் இருப்பாள். பல ஏழைகளுக்கு ‘தக்காத்’ கொடுப் பாள். அவர்களில் முஸ்லிம் அல்லாதவர்களும் உண்டு. ஆனால் என் தாத்தா அப்படி இல்லை. ‘பஞ்ச் நமாஜி அதாவது, திருக்குர்ரான் ஷெரீஃபில் கூறியுள்ள வகைப்படி ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுகை புரிபவர். எந்த வேலை செய்துகொண் டிருந்தாலும் தொழுகை நேரத்தில் அவருடைய மனம் ஒருமுகப் பட்டுவிடும். அந்த வேளையில் அவரை யாராவது காயப்படுத்தி னால் கூடத் தெரியாது, மெய்ப்பொருள் நாயனாரைப் போல.
நான் ஒரு மெளல்வியாக வேண்டும் என்று என் பாட்ட னாருக்கு ரொம்ப ஆசை. அதற்காகவே அவர் என்னைச் சிறு வயதில் ஜப்பார் தாத்தாவிடம் அனுப்பினார். ஜப்பார் தாத்தா பெரிய கல்விமான். பேசும்போதெல்லாம் அவருடைய நீண்ட வெண் தாடி அசைவது வேடிக்கையாக இருக்கும் என்றாலும் நான் கற்றுக்கொண்ட ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வாதுமை அல்லது ஒரு கல்கண்டு கொடுப்பார். அவற்றை எல்லாம் வாங்கி நான் கைலியில் கட்டிக்கொள்ளுவேன். எங்கள் சந்தில் வசித்த மீனாவுக்கும் அதில் பங்கு உண்டு. மீனா யார் என்றும் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். அவள் என் இளமைத் தோழி. ஆப்பம் சுட்டு விற்கும் பட்டாச்சியின் ஒரே மகள். வாளை மீனைப்போன்ற அவளுடைய சலிக்கும் கண்கள் மிகுந்த அழகாக இருக்கும்.
ஜப்பார் தாத்தா உருது பாஷையைப் பற்றிச் சொன்னது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. அஜீஸ் பாயி’-அவர் என்னை அப்படித்தான் அழைப்பார். இந்த மொழி சௌர்சேனி பிராகிருதத்திலிருந்து கிளைத்தது. டெல்லியின் சுற்றுப்புறத்தில் மொகலாய அரண்மனையை ஒட்டிப் பிறந்ததால் இதற்கு தேஹ் லாவி என்று பெயர். பிறகு அவர்கள் ஆட்சியில் இது தழைத்து வளர்ந்தது; கடிபோலி என்று பெயர் பெற்றது. பின்னால் உருது ஆயிற்று…”
… உலகத்திலுள்ள மொழிகள் பெரும்பாலும் ‘அ’வைத் தொடக்கமாகவும் ‘ல’வை இறுதியாகவும் கொண்டும் பிறந் தவை. ‘ஆலிப்’ என்கிறது உருது. ‘ஆல்ஃபா’ என்பது கிரீக்; ‘ஆல்பபெட்’ என்று ஆங்கிலம் சொல்லுகிறது. ‘ஆலோ அந்த் யக்ஷர,’ என்கிறார் பாணினி!…அவர் பேசிக்கொண்டே போவார். நான் கோலியாடுவதற்கு மெல்ல நழுவி விடுவேன்? புளியடி மைதானத்தில் மஜீத், வஹ்ஹாப், சிங்காரம் எல்லோரும் எனக் காகக் காத்திருப்பார்கள்.
எனக்கு அவர் சொல்லிக்கொடுத்தது அதிகம் பிடபடவில்லை என்றாலும் ஷேக்ஸாதி, ஜமாலுத்தீன் ரூமி, ஃபர்தௌஸி, காலிஃப்,மீர் ஆகியவர்களைப் பற்றி மட்டும் இன்னும் நினைவிருக் கிறது. தாத்தாவுக்குத் தமிழ்நாட்டுச் சமய ஆசாரியர்களைப் பற்றியும் நிறையத் தெரியும். வடநாட்டுக் கஜல், கவ்வாலி, தாத்ரா, தும்ரி ஆகியவைகளில் எவ்வாறு மனத்தைப் பறிகொடுத் தாரோ, அதே அளவு ஈடுபாடு அவருக்குப் பழந்தக்க ராகத்தி லும், புற நீர்மையிலும் இருந்தது, ‘நேநெந்து வேதகு தூரா’ ‘நான் உன்னை எங்கே தேடுவேனடா?’ என்ற கீர்த்தனையின் சங்கதி வரிசைகளில் மத்திமம், தைவதம், நிஷாதம், மேல், கீழ் ஷட்ஜமம், கடைசியில் மேல் பஞ்சமம் வரையில் சென்று இறை வனைத் தியாகையர் தேடியதை அவர் விவரிக்கும்போது என் உடல் சிலிர்த்துப் போகும்.
‘நோக்கரிய நோக்கே, நுணுக்காய நுண்ணுணர்வே’ என்ற திருவாசகத்தைத் திரும்பத் திரும்பக் கூறி என் இதயத்தை ஆனந் தத்தால் நிரப்பிவிடுவார். உமறுப் புலவனின் சீறாப் புராணத்திற்கு ஆதாரமாக இருந்தது கம்பனின் ஆற்றுப்படலம் என்று செவிகுளிர வர்ணிப்பார்:
இதையெல்லாம் எதற்காகச் சொல்லுகிறேன் என்றால், ஒருவனுடைய இளமைப் பருவத்து நினைவுகள், சொந்த ஊர், மொழி ஆகியவை எந்த அளவு அவனை ஆட்கொண்டு விடுகின்றன என்பதை நிரூபிப்பதற்காகத்தான்:
என் பாட்டனாரின் கனவு நிறைவேறவில்லை. நானும் மற்ற வர்களைப் போலத்தான் படித்தேன்: வேங்கடராகவன் ரத்தின வேலு, தங்கராஜ் ஆகிய என் நண்பர்களைப் போலத்தான் நானும் பள்ளியில் எதிர்காலத்தைப் பற்றி விசேஷமான நம்பிக்கை ஏது மின்றிப் படித்தேன். எனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடியும் தறுவாயில், என் மாமா தாஜ்மல் ஹுஸ்ஸேன் பர்மாவிலிருந்து வந்தார். அவர் ஒரு ஹாஜி-அதாவது, புனித ஹஜ் யாத்திரை போய் வந்தவர். பர்மாவில் வசதியாக வாழ்ந்துவந்த அவர், அங்கு ஏற்பட்ட அரசியல் மாறுதல்களினால் சொந்த ஊருக்குத் திரும்பும்படி ஆயிற்று. அவர்தான் முதன் முதலில் இந்த யோசனையைச் சொன்னார் : தம்பி அஜீஸை டாக்டருக்குப் படிக்க வைக்கவேண்டும்’ என்று. நானும் ஆசைப்பட்டேன். எதற்கு? * சென்னைக்குப் போனால் நிறைய ஹிந்திப் படம் பார்க்கலாம்! இங்கே எப்போதாவது பாலக்கரைப் பக்கம் சென்றால்தான் பார்க்கமுடியும்!”
மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பது கஷ்டம் என்றார்கள். மனுப்போட்டு வைத்தேன். நண்பன் வேங்கட ராகவன் நிறைய மார்க்குகள் வாங்கியிருந்தான் என்றாலும் எனக்குத்தான் இடம் கிடைத்தது. ஜனநாயக அரசியலில் பிற்போக்கு இனத்தினருக்குக் கொடுக்கப்படும் சலுகை அது. கல்லூரியிலும் சுமாராகத்தான் படித்தேன்; அதிக மதிப் பெண்கள் பெறவில்லை. பொட்டாஸியமும் நைட்ரஜனும் மனித உடலில் விளைவிக்கும் மாறுதல்களைவிட, மால் கௌஸும், ஹிமன் கல்யாணும் உள்ளத்தில் அதிக பலனை விளைவிக்க முடியும் என்ற என் நம்பிக்கைதான். மேன்மேலும் வலுப்பட்டது.
வஞ்சகச் சீனன் அப்போதுதான் நமது வட எல்லையை முழு வலிமையுடன் தாக்கினான். நாட்டைக் காக்கும் படை வெள் ளத்தில் நானும் ஒரு சிறு துரும்பானேன். நான் பெற்றிருந்த கல்லூரிப் படிப்பின் விளைவாக எடுத்தவுடனேயே எனக்கு உயர்ந்த பதவி கிடைத்தது. இரண்டு ஆண்டுகள் ஹவுஸ் சர்ஜனாகப் பணியாற்றிவிட்டு, ஐயன்பேட்டையில் பெயர்ப் பலகை மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படாமல், எடுத்ததுமே பெரிய ஆஸ்பத்திரியில் பணி புரியும் பெரிய வாய்ப்பு அது. நம்பவே இயலாத வசதிகள் ; பெருந்தொகை ஊதியம்; திரும்பும்போதெல்லாம் சலாம் வைக்கும் சிப்பாய்கள் – தலை கிறுகிறுக்கத்தான் செய்தது?
ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளிடம் உறவாடிய பிறகு எனக்குத் தோன்றியதெல்லாம் இதுதான். படை வரிசையின் கீழ்ப்படியில் உள்ளவர்களுக்குத் தேவையானது பரிவுணர்ச்சியே தவிர மருந்தல்ல, என்பதுதான் அது. நான் மருந்துச் சீட்டை எழுதும்போதெல்லாம் என் பாட்டியைத்தான் நினைத்துக் கொள்ளுவேன். அவள் கொடுப்பதெல்லாம் ஒரே மருந்துதான். மசூதியிலிருந்து வரும் நாட்டுச் சர்க்கரை – அதைத்தான் இன்ஷா அல்லா’, என்று கூறி அவள் தருவாள். பண்டார வாடைக் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வைத்தியர் எங்கள் பாட்டிதான். நானும் மனதிற்குள் சொல்லிக் கொள்ளுவேன். இன்ஷா அல்லா? – இறைவனின் திருவுள்ளப்படி.
இந்த உல்லாச வாழ்வு நிலைத்திருக்கவில்லை ஆயிரம் படை யினர் கூடிய ரெஜிமெண்ட் ஒன்றிற்கு நான் மருத்துவனாக நியமிக்கப்பட்டேன். அந்தப் படைப் பகுதி நாட்டின் வடகிழக்கு எல்லைக்குச் சென்று, அங்குள்ள மலைச் சாரலில் முகாம் இட்டது. உயர்ந்து அடர்த்தியான வனங்களிடையே நாங்கள் மூங்கில் வீடுகளில் குடியிருந்தோம். வெகு தொலைவில் கீழேயிருந்த ஒரு சுனையிலிருந்து குடி தண்ணீர் வரவேண்டும். செதில் செதிலாகப் பனிப்பாறை படர்ந்த மலைப் பிளவுகளுக்கிடையே, குளிர் உடை தரித்துக்கொண்டு, வெறும் கட்டாந்தரையைக் காவல் காக்கும் சிப்பாய்கள். இரவும்,பகலும் சோர்வைத்தரும் ஒரே மாதிரியான காட்சியில் பார்வையைச் செலுத்திக் கொண்டிருக்கும் அந்த வீரச் சிலைகளை நினைக்கவே நெஞ்சு கூசுகிறது. அந்தக் காவலருக்குப் பக்கத்தில் ஒரு கணப்புச் சட்டி, கொடும் பனியினால் வெடித்து மரத்துப் போய் ரத்தம் கசிந்து நிற்கும் அந்தச் சிப்பாய்களின் புண்களை என் பணியாள் ஹர்கீரத் வெந்நீரினால் கழுவுவான். நான் மருந்தைப் பஞ்சில் தேய்த்துத் தடவுவேன். அப்போது என் அன்னையின் புண்களுக்கே மருந்திடுவது போன்ற ஒரு மெல்லுணர்ச்சி என்னைக் கவ்வும். அந்த வீரர்களுக்கு உற்ற தோழன், தாய் சகோதரி எல்லாம் நான்தான்.
என் பணிமகன் ஹர்கீரத் சிங், தாடியில்லாத ஒரு சீக்கியன்: நாட்டுப் பிரிவினையின்போது கலகக்காரர்களிடமிருந்து தப்பு வதற்காக வேஷம் மாறியவன், அப்படியே இருந்துவிட்டான். அமைதியே வடிவான பேருரு. அவனைக் காணும்போதெல்லாம் என் மனத்தில் உணர்ச்சி உண்டாகும். ஹர்கீரத்துக்குக் கோபம் வந்து நான் பார்த்ததே கிடையாது. சதா ஒரு பஜனைப் புத்தகத்துடன் அவனைக் காணலாம்.
எங்கள் படை முகாமுக்கு மறுபடியும் மாற்றல் உத்தரவு வந்தது. உடனடியாகப் பட்டாண்கோட்டிற்குப் புறப்பட்டோம். எங்கள் படையினர் காவல் புரிந்த இடத்தை அஸ்ஸாம் போலீ ஸார் ஏற்றுக் கொண்டார்கள். சர்க்கஸ் கம்பெனியைப்போல நாங்கள் குடி பெயர்ந்தோம்.
மறுபடியும் மெஸ் ஆடலரங்கு, ரெஃப்ரிஜிரேட்டர்,ஜின், டைட் கம் மீஸ், ஹேர்டூ, ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ், லாவண்டர், ஸோஷல் நைட் ! – ஆனால் இப்போது எனக்கு இவைகள் அவ்வளவு இதம் தரவில்லை. கட்டாயப் படுத்தப்பட்டாலொழிய மெஸ்ஸிற்குப் போவதையே நிறுத்திக்கொண்டேன்: ஹர்கீரத் சிங், ஜப்ஜீயும் சுக்மனியும் படித்தான். வாரிஸ் ஷாவின் ஹீர், ராஞ்சாவைப்பற்றி எனக்குக் கூறினான். செனாப் நதிக்கரையில் வாழ்ந்த அமரகாதலர்களான ஸஸ்ஸிபுன்னு, மீர்ஜா ஸாஹி பான் ஆகியோர் என் கனவில் உலாவினர். அவனுடன் பேசிக் கொண்டிருப்பதே எனக்குப் பெரும் பொழுதுபோக்காக இருந் தது. அப்போது காஷ்மீர எல்லையில் புகைந்துகொண்டிருந்த கனல் கொழுந்துவிட்டது; சற்றே பரபரப்பு-எங்கள் படை முகாமைப்பற்றிக் கவலையில்லை; நாங்கள்தான் ஓய்வில்இருக்கிறோமே!
1965 செப்டம்பர் நான்காம் தேதி என்று நினைவு: எங்கள் முகாம் இலேசாக ஆட்டம் கொடுத்தது; அண்மையில் வெடிச் சத்தம் கேட்கத் தொடங்கிற்று. நாங்கள் அம்யூனிஷன் பூட்ஸு களைத் தேடலானோம். செப்டம்பர் ஏழாம் தேதி நாங்கள் புறப்படுவதாக முடிவாயிற்று. ஹர்கீரத்துக்கு உடல் நலம் சரி யில்லை. அவனை ரியர் பார்ட்டியில் விட்டு வரும்படி கமாண்டிங் அதிகாரி உத்தரவிட்டார். அதை ஹர்கீரத்திடம் கூறியபோது, அவனுடைய கண்கள் கலங்கின. “காப்டன் ஸாஹிப், நான் உங்களோடு தான் வருவேன். உங்களை விட்டால் எனக்கு வேறு துணை ஏது?” என்றான் அவன், தழதழத்த குரலில். நான் நெகிழ்ந்து போய்விட்டேன். ‘‘ எனக்கு மட்டும் உன்னை விட்டால் வேறு உதவி ஏது ஹர்கீரத்? நீ என்னோடு வா! உன் உடல் நிலையையும் வயதையும் எண்ணித்தான் அவ்வாறு முடிவு செய்தோம். நாம் இப்போது எங்கே போகப் போகிறோம் என்று தெரியுமல்லவா?” என்றேன் நான்.
ஹர்கீரத் தன்னுடைய அகலமான மோவாயைத் தடவி விட்டுக்கொண்டான். அது தெரிந்து என்ன ஆக வேண்டும், ஸாஹிப்? என்றைக்குமே நான் நாளையைப் பற்றிக் கவலைப்பட வில்லையே! இந்த நாட்டில் தர்ம ராஜ்யம் நடக்க வேண்டும் என்றால், சுதந்திரம் பறி போகாமல் காக்க வேண்டும். அதற்காக ஒவ்வொரு சிப்பாயும் செய்யும் பணி மகத்தானதல்லவா? என்று சொல்லிக்கொண்டே அவன் வானத்தை நோக்கினான். பிறகு, “அவர்களுடைய துயரத்தை நீங்கள் போக்குறீர்கள். அத்தகையவர்களுக்கு என்னால் ஆன உதவியைச் செய்கிறேன் என்ற திருப்தி மட்டும் எனக்குப் போதுமே?” என்றான்.
ஹர்கீரத்தின் தத்துவம் முழுவதும் எனக்குப் புரியவில்லை தான். என்றாலும் அவனுடைய முக பாவமும் குரலும் என்னை இளக்கிவிட்டன.
இந்தப் பிராந்தியத்தில் தசராவுக்கு முந்திய பருவம் மிகவும் ரம்மியமானது: கடும் வெய்யிலின் கொடுமை தணிந்து, மழை பெய்து, புழுதி அடங்கி, குளிர் காலம் தொடங்குவதற்கான பெய்து,புழுதி அறிகுறிகள் தலை காட்டும். வாதுமை முதிரும்; அக்ரோட் உதிரும்; செக்கச் சிவந்த ஆப்பிள்பழங்கள் கன்னியரைப் போல் நாணிச் சிவக்கும். பப்புகோஷா, நாஷ்பதி, ப்ளம், பீச், க்ளாஸ் என்று பலவகைக் கனிகள். அவைகளைச் சுவைக்க மத்திய ஆசியாவிலிருந்து கூடப் பல வண்ணப் பறவைகள் இங்கு வரும். பீர்பஞ்சால் மலையின் உச்சியிலுள்ள மூன்று தெய்வ சிகரங்களும் இந்தப் பருவத்திற்குரிய அலங்காரமான வெண்பனி மகுடம் தரிக்கத் தயாராக நிற்கும். காற்றிலே ஒரு நைப்பு ; ஈரத்தின் கனம்: உயிரினம் துணையை நாடும் தாபம் எழும் அந்தந் தாபத்தை இந்தச் செனாப் நதிக் கரையில் வாழ்ந்த கவிஞர்கள் அற்புதமாக வர்ணித்திருக்கிறார்கள். ஆத்ம லயம் பெறக்கூடிய பேரின்பத்திற்கு அடிக்கல்லாகச் சரீர தர்மத்தை அடிப்படை யாகக் கொண்டு, உள்ளத்தைக் கிளர்ந்தெழச் செய்யும் அழகுக் கவிதைகளை அவர்கள் யாத்தார்கள். அவற்றை மனத்தை உருக்கும் பண்களில் அமைத்துப் பாடினார்கள்: இப்படி எத்தனையோ மதுர பாவக் காட்சிகளைக் கண்டுள்ள பனிநீர் ஆறு, இப்போது வேறு விதமான அனுபவத்தைப் பெற இருந்தது.
நிர்வாகத் திறனும், படை அனுபவமும் கொண்ட பாகிஸ் தானின் அதிபர் இத்தகைய தவற்றைச் செய்திருக்க வேண்டாம். சீனப் படையெடுப்பு நம்மை நிலை குலையச் செய்தது உண்மை தான். என்றாலும் அது நம்மை விழிப்படையவும் செய்து விட்டது. கட்ச் பிரதேசத்தில் நம்மைக் கலக்கி ஆழம் பார்த் தார் அயூப். நிலைமை அவருக்குச் சாதகமாக இருப்பதைப் போல் தோன்றியது. ஆகவே, சற்றும் எதிர்பாராத மூலையில் தமது படை ஆப்பைச் செலுத்தித் தேவா, சம்ப், சக்ராணா ஆகிய பகுதிகளில் இந்திய எல்லைக் காவலைத் தடுமாறச் செய்து, மனோவர் நதியைக் கடந்து, ஜௌடியான் வரையில் மின்னல் வேகத்தில் பாகிஸ்தான் படைகளை முன்னேற விட்டார். இன்னும் இரண்டு நாட்கள் தாமதித்திருந்தால் இந்திய நாட்டின் ஒரு பெரும் பகுதி துண்டாகியிருக்கும். பஞ்சாப்பைத் தாக்கும் ரகசியத் திட்டம் ஒன்றும் அவரிடம் இருந்தது.
கொல்லாமைத் தத்துவத்தை மேற்கொண்ட காந்தியடிகள், சமாதான நோக்கைக் கொண்டிருந்த நேருபிரான் ஆகியோரிடம் பயிற்சி பெற்ற குற்றுருவப் பெருமகன் லால்பகதூர் சீறி எழுந் தார். வேரும் வேரடி மண்ணுமில்லாமல் வெந்து போகும் படி பகைவனைச் சாட உத்தரவிட்டார் !
மலை அசைந்தது!
அது எப்படி நிகழ்ந்தது என்று என்னால் விவரிக்க இயல வில்லை. ஆனால், அது நடந்தே விட்டது. படையினரின் கவனம் எல்லாம் பாகிஸ்தானின் திசையை நோக்கியே இருந்தது? கேம்கரன், அமிர்தசரஸ், குருதாஸ்பூர், ரணபீர்சிங்புரா-இப்படிப் பல இடங்களிலிருந்து பாரதப் படைகள் முன்னேறிய வண்ணம் இருந்தன. ஒரே கோஷம் வானை அளாவிற்று: ‘சலோ லஹோர்!’
பாகிஸ்தானிகளும் இதே மண்ணினால் ஆனவர்கள் தானே? அவர்களும் பதிலடி கொடுத்தார்கள். இந்தியப் படையினர் முன்னேற முடியாமல் டேராபாபா நானக் என்ற இடத்தில் ராவி நதிப் பாலத்தையே தகர்த் தெறிந்தார்கள். இரவோடிரவாக அதைக்கட்டி முடித்து நதியைக் கடந்த இந்திய என்ஜினீயர் படைகளை எப்படிப் புகழ்வது ? என்ன கூறி வாழ்த்துவது ?
பாகிஸ்தானின் களஞ்சிய நகரம் என்று கூறத் தக்க சியால் கோட் முற்றுகைக் குள்ளாகியிருந்தது. சவிண்டா என்ற கேந் திரத்தை எங்கள் ரெஜிமெண்ட் கைப்பற்றிவிட்டது. நாரோன் வால் ஸ்டேஷனும் எங்கள் கையில். சியால்கோட்டுக்கு எத்தகைய உதவியும் போக முடியாது. அங்கிருந்து யாரும் வெளியேற முடியாது. நிலையிழந்து போன பாகிஸ்தான் படை யினர் சர்வதேசப் போர் உடன்பாடுகளை மீறி, நேபாம் வெடி குண்டுகளை வானத்திலிருந்து வீசத் தொடங்கினார்கள். அவற்றி னால் இந்தியப் படைகளுக்கு நேர்ந்த ஆட்சேதம் கொஞ்ச நஞ்சமல்ல. உடல் முழுவதும் தீப்புண்கள் பட்டு முகாம் ஆஸ்பத்திரிக்கு வந்த வீரர்களுக்கு எங்களால் அதிக வைத்திய வசதிகூட அளிக்க முடியவில்லை ; முகாம் ஆஸ்பத்திரி அவ்வளவு சிறியது.
பகலெல்லாம் நோயாளிகளைக் கவனித்துவிட்டுச் சிறிது நேரம் நாற்காலியில் அமர்வேன்: நிறையச் சீனி போட்டு, ஒரு குவளைத் தேநீரை எனக்குக் கொடுப்பான் ஹர்கீரத். மாலை நெருங்கும்; மறுபடியும் ஒரு ஸ்ட்ரெச்சர் வண்டி வரும். அதில் இருப்பவர்களை இறக்கி,மோசமான கேஸ்களைப் பெரிய ஆஸ்பத் திரிக்கு அனுப்புவதற்குள் அபாய அறிவிப்பு விட்டு விட்டு ஒலிக் கும். கையில் ஸர்ஜிகல் ஸ்பேட்டுலாவுடன் பதுங்குக் குழியில் ஒளிவேன், நீண்ட குழல் ஒலி கேட்ட பிறகுதான் வெளியே வருவேன். மறுபடியும் நோயாளிகள், முனகல், வலி, வேதனை. ரத்தம் – நின்றபடியே உறங்குவேன்; உறங்கிக்கொண்டே ஊசி போடுவேன். என்னை எந்தச் சக்தி ஊக்கிற்று ? எனக்கே தெரி யாது. என்னுடைய கைகள் இரண்டும் வேலையில் ஈடுபட்டிருக் கும் தருணத்தில் சூடான தேநீரை என் உதட்டருகில் கொண்டு வருவான் ஹர்கீரத். அதை உறிஞ்சி விட்டு மேலே பணியைத் தொடர்வேன். இறைவனின் கருணை இப்படித் தான் இருக்குமோ?
செப்டம்பர் பதினான்கு என நினைக்கிறேன். இந்தியப்படை எதிர்பாராத முறையில் தர்க்கப்பட்டது. பெரும் சேதம் இரு தரப்பிலும். அன்று வந்த காஷுவாலிடிகளில் பாகிஸ்தானி களும் இருந்தனர். அழகிய இளைஞன் ஒருவன் எனது ஆபரேஷன் மேஜையில் படுத்திருந்தான். அவனுடைய இடது தோளில் குண்டு பாய்ந்திருந்தது. ப்ளேடினால் அவனுடைய சட்டையைக் கிழித்தான் ஹர்கீரத். அங்கே ஒரு வெள்ளித் தாயத்து பள பளத்தது. அதை மெல்ல நீக்க முற்பட்டான் அவன்.
“தொடாதே!”-அரை மயக்க நிலையிலும் அந்த வாலிபன்’ அதைத் தடுத்தான். ஹர்கீரத் சிங்கின் உடல் பதறிற்று. அந்த இளைஞனின் தலையை அன்புடன் கோதிவிட்டான். அப்போது அவனுடைய ரோமங்கள் பொடித்து நின்றதை நான் கவனித் தேன். ஒரு கணம் செயலற்று நின்றுவிட்டு, வெந்நீர் கொண்டு வர உள்ளே ஓடினான். ஐந்து நிமிஷங்கள் கழிந்தன. நான் பொறுமை இழந்து பின்னறைக்குச் சென்றேன். இரு கைகளி டையே முகத்தைப் புதைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுத வாறு இருந்தான் ஹர்கீரத் சிங். அவன் அழுவதை நான் அன்று தான் பார்த்தேன். அதற்கு மேல் அங்கு நிற்க நேரமில்லாமல் முன்னறைக்கு வந்தேன்.
துப்பாக்கி ரவை அதிக ஆழத்திலில்லை. அதை வெளியே எடுத்துக் கட்டுப் போட்டுவிட்டு, அடுத்த நோயாளியைக் கவனித்தேன். அடுத்தடுத்து அவர்கள் வந்தவண்ணமிருந்தார் கள்; எனக்கு ஓய்வே இல்லை.
அந்த இளைஞனின் மறுநாள் காலை முகத்தில் தெளிவு கண்டிருந்தது. ஹர்கீரத்தின் உதவியுடன் அவனுடைய உதடு களை விலக்கி, நான் மருந்தை உள்ளே செலுத்தினேன். அவன் அதை வாயில் அடக்கி வைத்திருந்து, என் முகத்தில் ‘தூ’ வென்று உமிழ்ந்தான். அவனது கண்களில்தான் அப்போது எத்தனை குரூரமான பாவனை!
“என்ன அஹமத்?”
அவனுடைய பெயர் எனக்குத் தெரிந்திருந்தது. பதறிப் போன ஹர்கீரத், ஏப்ரனின் உதவியால் என் முகத்தைத் துடைத்தான்.
“காஃபரின் கை தொட்டு நான் எதுவும் சாப்பிட மாட்டேன்!” என்றான் அவன்.
‘தாருல் லார்ப்-தாருல் இஸ்லாம்!’ -எனக்கு எங்கள் ஜப்பார் தாத்தாவின் நினைவு வருகிறது.
ஹர்கீரத் இள நகை புரிகிறான்; ‘மகனே! காப்டன் சாகிபும் இஸ்லாமானவர் தான்!’ என்கிறான்:
வலது கை விரல்களை ஒன்று சேர்த்துக் குவித்து நெற்றியில் வைத்து நான் சலாம் செய்கிறேன் :
‘ரஹம துல்லா வராகத்! ‘
அஹமதின் கண்கள் வியப்பினால் மலர்கின்றன. ஆம், இந்தியாவில் முஸ்லிம்கள் எல்லாம் காலில் விலங்குப்பட்டு உலாவுகிறார்கள்’ என்று அவனுக்குப் போதனை செய்யப் பட்டிருந்தது!
இஸ்லாமானவர், இந்தியாவில் ஒரு போர்ப் படை அதிகாரி: அதுவும் முன்னணியில். பாகிஸ்தான் படையிலோ ஹிந்துக்களே கிடையாது!
அஹமதின் கண்கள் அயர்கின்றன ; ஹர்கீரத் அவனுடைய நெற்றியை வருடுகிறான்….
அப்போது நான் தங்கியிருந்தது ஒரு பள்ளிக்கூடக் கட்டிடம். சுவரில் பெரிய கரும் பலகை பதித்திருந்தது. அடுத்ததொரு சிற்றறையில் ஹர்கீரத் தங்கியிருந்தான். பல இடங்களில் சுவர் வெடித்திருந்தது. துப்பாக்கி ரவையினால் ஏற்பட்ட துளைகள் வேறு அங்கங்கே காணப்பட்டன.
மாலைத் தொழுகையை முடித்து விட்டு என் சிறிய பாயை நான் சுருட்டிக் கொண்டிருந்தேன். ஏனோ எனக்கு ஹஸரத் அலிகான் நினைவு வந்தது. போர்க்களத்தில் அவருடைய உடலில் ஓர் அம்பு பாய்ந்துவிட்டது. அதை நீக்கினால் அலி அவர்களுக்கு மிகுந்த வேதனையும் உதிரச் சேதமும் உண்டாகும் என்று கூட வந்திருந்த ஹக்கீம்கன் கருதினார்கள். அவர் தொழுகைக்கு அமரும் சமயத்தில் அந்த அம்பை நீக்கிவிடுவது என்று அவர்கள் முடிவு செய்தார்கள். அதாவது, ஹஸரத் அவர்களுக்கு பிரார்த்தனை நேரத்தில் தன் நினைவே இராது என்பதை அவர்கள் கண்டு வைத்திருந்தார்கள். ஏக தெய்வம், ஏகாக்ரதை ஆகிய கொள்கைகளை ஒரு போர் ஆவேசத்துடன் பரப்பியதை நபிநாயகம் (ஸல்) அவர்களின் மிகப் பெரிய சாதனை என்றுதான் கூறவேண்டும். அதனால் தான் அந்தத் தரத்திற்கு மிகச் சிறிய சலனம் ஏற்படுவதையும் இஸ்லாமியர் தீவிரமாக எதிர்க்கிறார்கள்.
நம் நாட்டிலும் நெஞ்சில் குண்டு பட்டு ஆவி பிரியும்போது காந்தியடிகள் கூறிய கடைசி வார்த்தை ‘ஹே ராம்’ என்பது தான். அந்த இரண்டரை அட்சரம் கடைசி வினாடியில் நினைவுக்கு வர வேண்டுமானால், வாழ்நாள் முழுவதும் அதை உருப்போட்டிருக்க வேண்டும். பக்கிரி கபீர் அப்படித்தான் கூறுவார். இஸ்லாமியத் தத்துவங்களை அடியாழம் வரை ஆராய்ந்த அவர், ராம நாமத்தை ‘டாயி அட்சர் ‘- இரண்டரை அட்சரம் என்றுதான் குறிப்பிடுவார். என்னைப் பொறுத்த வரையில் அத்தகைய ஒரு முனைப் பாங்கு ஏதும் என்னிடம் கிடையாது. ஆனால், தொழுகை முடிந்தபின்னர் மனத்தில் மணமிக்க நல்லெண்ணங்கள் தோன்றுவது வழக்கம். ஆனால் தொழுகையின் போதோ?- அது ஒரு தனி அத்தியாயம்…
வெளி வராந்தாவிலே நிழல் ஆடிற்று. செண்ட்ரி உள்ளே வந்து ஸலாம் வைத்தான். ஸாஹிப், யாரோ ஒரு புர்க்கா ஸ்திரீ வந்திருக்கிறாள். உங்களை உடனடியாகப் பார்க்க வேண்டு மாம்!” என்றான்.
எனக்கு வியப்பாக இருந்தது. பாசறை. முன்னிரவு நேரம். என்னைப்பார்க்க ஒரு பெண் !…
என் அறையில் அப்போது ஒரே ஒரு மெழுகுவத்தி மட்டும் எரிந்துகொண்டிருந்தது. என்னை அவள் எதற்காகப் பார்க்க வேண்டும்?…
“கூட யாரும் இல்லையா!”
என் நாவு ஏனோ தடுமாறுகிறது.
“ஒரு சிறு பையனும் வந்திருக்கிறான்!”
நான் நெட்டுயிர்க்கிறேன்.
“உள்ளே வரச்சொல்!”
முதலில் ஒரு சிறுவன் உள்ளே வந்து உடலை வளைத்துத் தன் பிஞ்சுக் கரங்களால் வணக்கம் தெரிவித்தான். ஜரிகை தைத்த மெல்லிய மஸ்லின் குர்த்தா. அதனுள்ளிருந்து இடது கையில் ஒரு தாயத்து தெளிவாகப் புலப்படுகிறது. தலையில் பெரிய ஃபெஸ் தொப்பி. அவனுக்குப் பின்னால் பர்தா அணிந்த மாது: மருக்கொழுந்தின் இனிய மணம்; அவளுடைய கால் களில் அழகிய செருப்புக்கள்; செம்பஞ்சுக் குழம்பு பூசிய சந்தன வண்ணப் பாதங்களில் வெள்ளி ஆபரணங்கள்…
நான் எழுந்து நிற்கிறேன். அறையில், என் முகாம் கட்டிலைத் தவிர ஒரே ஒரு ஸ்டூல் மட்டும் உள்ளது. முகத்திற்கு முன்னா லிருந்த வலைச் சன்னல் வழியாக அவள் என்னைப் பார்த்துப் பேசுகிறாள்:
“ஐயா, எனக்கு உங்கள் அனுமதி வேண்டும். என் தம்பி அஹமதை நான் பார்க்க வேண்டும்! “
எடுத்தவுடனேயே வந்த காரியத்தைப்பற்றிக் கூறுகிறாள் அவள்.
“உட்கார்ந்துகொண்டு பேசலாமே?”
நான் பணிவுடன் என் கட்டிலைக் காட்டுகிறேன்; அவள் அந்தச் சிறுவனுடன் அமர்கிறாள்.
“என் பெயர் ரஹ்மான். என்னையும் உடன் பிறந்தவனாக மதிக்கலாம், ஆப்பாஜான்! அண்ணனின் முன்பு தங்கை பர்தா அணிவது வழக்கமில்லையே?’
நான் தழதழத்த குரலில் அவளை உற்றுப் பார்த்தவாறு கூறுகிறேன்.
அவள் முகத்திரையை அகற்றுகிறாள். பாஞ்சால நாட்டின் வளமான மண்ணும் தட்ப வெட்பமும் அவளுடைய உடலுக்கு மெருகூட்டியிருந்தன. ஒவ்வொரு அங்க வளைவும் எழிலைப் பறை சாற்றின. என் கண் முன்னால் பனிக் காலத்துச் செனாப்நதி தென்பட்டது. தேநீருடன் வந்த ஹர்கீரத் வாயிற்படியில் ஒரு கணம் தயங்கி நிற்கிறான். கோப்பையைக் கையில் வாங்கிக் கொண்டு, “இன்னும் கொஞ்சம் தேநீர் வேண்டும், கொஞ்சம் பிஸ்கட்டும்கூட” என்று கூறுகிறேன். புர்க்காவினால் தன்னை மறைத்துக் கொள்ளும் முன்பு அந்த யுவதியை மறுபடியும் அவன் ஏறிட்டுப் பார்க்கிறான். பிறகு, அவன் திரும்பி நடக்கும் போது ஏனோ அவனுடைய நடை தளர்கிறது.
அந்த யுவதி தேநீர் அருந்தியவாறு சொன்ன வரலாறு இது:
வல்லியான் என்ற அந்தக் கிராமத்தில் அவர்கள் குடும்பம் பல தலைமுறைகளாக வசித்து வருகிறது. ரெஹானாவின் – அது தான் அவள் பெயர் – தந்தை பல கரும்பு வயல்களுக்குச் சொந்தக் காரராக இருந்தார். அவர் ஒரு சீக்கியர். அவளுடைய தாய் ஒரு முஸ்லிம்; ஷரீன் என்று பெயர். அவளுடைய பெற்றோர் களின் கூட்டுறவைச் சமுதாயம் ஏற்கவில்லை. அவளுடைய தந்தையோ பெரிய செல்வந்தர்; ஆள் கட்டும் செல்வாக்கும் உடையவர். அதனால் யாரும் எதிர்த்துப் பேச முன் வரவில்லை. ஆனால் நாட்டுப் பிரிவின்போது ஊரார் அவர் மீது குரூரமாகப் பழி தீர்த்துக்கொண்டார்கள். அந்தக் கிராமத்தில் முஸ்லீம் அல்லாதவர்களே இருக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. அதன் விளைவாக அவளுடைய தந்தையும் ஊரை விட்டே போய் விட்டார். இன்று பதினெட்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
“உன் தாயார் நலமாக இருக்கிறாரா?”
நான் வினவுகிறேன்.
அவள் உச்சி முகட்டை நோக்கினாள். கண்களை நீர்த்திவலை மறைத்தது. தேநீர்க் குவளையைக் கீழே வைத்தாள்.
மறு நாள் பிற்பகலில் வந்தால் தப்பி அஹமதைச் சந்திக்க லாம் என்று கூறி, ரெஹானாவை அனுப்ப முற்பட்டேன்.
சிறுவன் எழுந்திருந்து தலையைக் குனிந்து வலது கையை நெற்றிக்கு உயர்த்தினான்:
“குதா ஹாஃபீஸ் சாச்சாஜீ ! ”
“குதா ஹாஃபீஸ்! உன் பெயரை எனக்குச் சொல்லவே யில்லையே?”
அவனுடைய முதுகை வருடினேன்.
“என் பெயர் இப்ராஹிம்!”
ரெஹானாவின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தான் அவன். வெளி வேலிவரை சென்று அவர்களை வழி அனுப்பி விட்டுத் திரும்பி வந்தேன். ஹர்கீரத் சிங் மெழுகுவத்தி வெளிச் சத்தில் ராகம் போட்டுக் குருவானியைப் படித்துக் கொண்டிருந் தான். அவனுடைய வலது கை, தன் இடது தோளிலிருந்த தாயத்தைத் தடவிய வண்ணமிருந்தது.
“தேஹோ ஷிவா (ஹ்)வர்
மோஹே யஹே
ஷுப் கர்மண் தே
கப்ஹு நடரூ(ன்)…”
(“உலக நன்மைக்கான நற்பணிகளைச் செய்ய முற்படும் போது எத்தகைய தயக்கமும் எனக்கு ஏற்படாதிருக்க அருள் இறைவா!” – குரு கோவிந்தர்.)
மற்ற நாட்களாக இருந்தால் நானும் அவன் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொள்ளுவேன். அவன் பாபா நானக்கின் பேருரைகளை உணர்ச்சி பொங்கப் படித்துக்காட்டுவான். ஸத்னா, ஃபரீத், மர்தானா, பாலா ஆகிய இஸ்லாமியர்கள்கூட அவருக்குச் சீடர்களாக ஆன விவரத்தை அவன் எனக்குக் கூறும்போது அவனுடைய கண்கள் கலங்கிவிடும். ஃபரீதின் மணி மொழிகள் கூட. குரு கிரந்த சாஹிப்பில் உள்ளன என்று அவன் பெருமை யோடு கூறுவான். அப்போது அவனுடைய விழிகள் கண்ணீரில் மிதக்கும்.
ஆனால் இன்று என் மனம் ஒரு நிலையில் இல்லை. செனாப் நதி சுழிப்புடன் ஓடும் காட்சிதான் தென்பட்டது. கட்டிலில் படுத்தேன்; இரவு முழுவதும் நான் உறங்கவே இல்லை.
போர் உச்ச நிலையை அடைந்தது!
தனது நெஞ்சில் வந்து உட்கார்ந்து சதையைப் பிறாண்டிக் கொண்டிருக்கும் பாரதப் படைகளை எப்படியாவது விலக்கிவிட வேண்டும் என்று பாகிஸ்தான் தீவிரமாக முயன்று பார்த்தது. அந்த முயற்சியில் அது இழந்த படைக்கலன்கள் கொஞ்ச நஞ்ச மல்ல ! ஐ.ந.கவின் செயலாளர் இந்தத் துணைக் கண்டத்திற்கு வந்து நிராசையுடன் திரும்பிச் சென்றார். வெற்றியடைந்த நிலையிலும் இந்தியா போர் நிறுத்தத்திற்குத் தயார் என்று உலகிற்கு அறிவித்துத் தன் பெருந்தன்மையைக் காட்டிக் கொண்டது. ஆனால் காயமடைந்த புலியோ, படுத்தவாறே சீறிற்று. நிணம், தீ, உதிரம், பேயரவம்,இடி பாரதம் அங் குலம் அங்குலமாகப் பாகிஸ்தானிய மண்ணில் முன்னேறிற்று.
ஹர்கீரத் சிங்கின் நடத்தையில் சிறிய மாறுதலைக் கண் டேன். அவன் ஒரு போதும் பாசறை முகாமை விட்டு வெளி யேறுவது வழக்கமில்லை. ஆனால் தற்போது அவன்! மாலையில் படை வீட்டிற்குள் தங்குவதில்லை. எங்கே போகிறானென்றும் தெரியாது. ஆனால் அவன் திருப்பி வரும்போது அவனுடைய முகத்தில் அசாதாரணமானதோர் அமைதி நிலவக் கண்டேன். அவனது செயல்களில் ஒரு புதிய வேகம் மிளிர்வதைப் பார்த் தேன். இரவு வேளையில் அவன் மெழுகுவத்தியின் ஒளியில் வெகு நேரம் வரை படித்துக்கொண்டிருந்தான். குரு கோவிந்த ரின் அந்த வேண்டுகொள் என் மனதிற்குள் புகுந்து ரீங்கார மிட்டது.
“அத்ஹீ ரண்மே தப்
ஜ்யூஜ் மரூ(ன்)…”
செப்டம்பர் இருபத்து நாலு. கடைசியாகப் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது. அது ஏற்படப் போகிறது என்று தெரிந் தும், அந்தக் கடைசி எல்லை நேரத்திற்கு இரண்டு மணி நேரம் முன்பு நிராதரவான அமிர்தஸரஸ் குடிகளின்மீது குண்டு மழை பொழிந்தது. பாகிஸ்தான் ஆனாலும் பாஞ்சாலம் கலங்கவில்லை. சிக்கந்தரின் நாளிலிருந்து எத்தனை எதிரிகளை அது சமாளித்திருக் கிறது!
எங்களைச் சுற்றியிருந்த இரும்பு வளையம் சற்றே தளர்ந்தது. இரவில் பிரகாசமான விளக்குகள்; ரேடியோ-படை வீரர்கள் முகாமை விட்டுச் சற்று விலகி, விளை நிலங்கள் வரை சென்று உலாவி வர அனுமதி.
எங்கள் படைத் தலைவர் வெகு கண்டிப்பான பேர்வழி. பாகிஸ்தானி கிராமவாசிகளுக்கோ, அவர்களுடைய பயிர்வகை, கன்று காலிகளுக்கோ, தம் படையினர் எத்தகைய ஊறும் விளைவிக்கக் கூடாது என்ற கொள்கையைத் தீவிரமாகக் கடைப் பிடித்து வந்தார். எங்கள் முகாமைச் சுற்றி முற்றிய கதிருள்ள விளை நிலங்கள். வல்லியான் கிராமத்தின் நம்பர்தார் வயல்களை அறுவடை செய்துகொள்ள அனுமதி வேண்டினார். உடனடியாக அதை அளித்ததுடன், அவற்றைக் கிராமத்தினுள் கொண்டு சேர்க்க வாகன உதவியும் தந்தார், எங்கள் டிவிஷன் கமாண்டர்.
செப்டம்பர் முப்பது. போர் நின்றுவிட்டாலும் அந்தச் சூழ்நிலை முற்றிலும் விலகவில்லை. இரு தரப்பிலும் மறுபடியும் பொறி விழுந்து தீப்பற்றிக் கொள்ளாமல் இருக்க வேண்டுமே என்று எனக்குக் கவலைதான் !
அன்று மாலை நான் கேஸ் குறிப்புகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, ஏதோ ஒரு மருத்துவ வார்த்தையின் அர்த்தத்தில் சந்தேகம் வந்தது. அதைக் குறித்து எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் என்னையறியாமலேயே வலது கை ஏதோ கிறுக்கிற்று.
‘சரியாகச் சீர் செய்யப் பெறாத குழல் கற்றைகள், பிறை நிலா நுதல், வாதுமைக் கண்கள், காஷ்மீர நாசி, செப்பு வாய், செதுக்கி எடுத்த தாவாங்கட்டை, சங்குக் கழுத்து, செழுந்தோள்கள், கம்மீஸிலிருந்து விம்மிப் புடைத்த தனங்கள் ஒடுங்கிய இடை ! ‘- சே, இதென்ன? மனத்தின் அடியாழத்தில் புதைந்த எண்ணம் எந்த வகையிலாவது வெளிப்பட்டே தீர்கிறது. ரெஹானாவை அதற்குப் பிறகு ஒரே ஒருதரம்தான் பார்த்தேன். அதாவது மறுநாள் தன் தம்பியைக் காண வந்தபோது. அடுத்த இரண்டு நாட்களில் மற்றக் கைதிகளுடன் என்றாலும் அஹமதையும் டெல்லிக்கு அனுப்பி விட்டேன். அவளுடைய உருவம் நெஞ்சிலிருந்து நீங்கவில்லை!
“டாக்டர் ஸாஹிப்!”
வெளியே பரபரப்பான குரல் கேட்டது. திடுகிட்டு எழுந்து ஓடினேன். சுபேதார் அட்ஜுடண்ட் கையைப் பிசைந்தவாறு நின்றுகொண்டிருந்தார். அவருடைய உடல் நடுங்கிற்று.
“ஐயா, நிராயுதபாணியாக உலாவச் சென்ற ஹர்கீரத் சிங்கின்மேல் யாரோ குறி பார்த்துச் சுட்டுவிட்டார்கள். அது உள்ளூர் வாசியாகத்தானிருக்க வேண்டும். ”
என் மனம் தவித்தது. ”எங்கே அவன்? கொண்டு வந்திருக்கிறீர்களா?” என்றேன்.
“இல்லை!”
அட்ஜுடண்ட் ஆத்மராம் கூறினார் : “அவன் வர மறுத்து விட்டான். விலாவில் குண்டு பாய்ந்திருக்கிறது. ஒரே உதிர வெள்ளம். ஊருக்கு வெளியே இருக்கும் கல்லறைகளின் பக்கத் தில் அவன் கிடக்கிறான். ‘என்னை இங்கேயே சாகவிடுங்கள்; நான் பிழைக்க மாட்டேன் ‘ என்று கூறுகிறான்!” என்றார். அவர்.
நான் ஓடுகிறேன்; என்னைப் பலர் பின் தொடருகின்றனர். நீல ஆகாயத்திலிருந்து பஞ்சு மேகம் ஒன்று இளஞ் சிவப்பு நுனியுடன் பசுமலையைத் தழுவ வருகிறது.
ஹர்கீரத் சிங் சலனமின்றிக் கிடந்தான். அவனுடைய முகத்தில் எத்தகைய கடூரமான பாவனையும் இல்லை. அவனது தலைப்புறத்தில் ஒரு கல்லறை; அதன் மேல் நட்டிருந்த சலவைக் கல்லில் உருது மொழி எழுத்துக்கள். அதைப் படித்ததும் என் வயிற்றில் குழி விழுகிறது.
“ஷரீன்! ”
ஹர்கீரத் சிங்கை எப்படி அடக்கம் செய்வது என்பதைப் பற்றி எங்கள் முகாமில் சிறு விவாதம் எழுந்தது. இறுதியில் எனது முடிவைப் படைத் தலைவர் ஏற்றுக் கொண்டார். அவ னுடைய உடலைத் தகனம் செய்து அஸ்தியின் சிறு பகுதியை செனாப் நதியில் கரைத்தோம். மிகுதியை ஒரு செப்புக் கலசத்தி லிட்டு, ஷரீனின் கல்லரைக்குப் பக்கத்திலேயே புதைத்து, இன்னும் ஓர் அழகிய கட்டிடம் கட்டினார்கள் ராணுவ எஞ்ஜிm யர் படையினர்.
ஃபர்தௌஸியின் கவிதை வாசகம் ஒன்றை அதில் பொறிக்கச் செய்தேன் நான்:
‘அன்பு-எந்த வடிவிலிருந்தாலும் சரி, அதுதான் ஆண்ட வனின் செயல் முறை!’
ஹர்கீரத் சிங், தன் கையில் தரித்திருந்த தாயத்தை மட்டும் நான் என்னுடன் வைத்துக் கொண்டுவிட்டேன்.
‘தேஹோ ஷிவாஹ் வர்
மேஹே யஹே…!’
இனி மேஜர் ரஹ்மான் பேசுகிலேன்!
– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.