எரிமலையாய் வெடித்துக் கொண்டிருந்தார் மேனேஜர் ஏகாம்பரம். அவர் எதிரே நடுங்கிக் கொண்டிருந்தான் டிரைவர் நடராஜன்.
“வண்டி என்ன உன் அப்பன் வீட்டு வண்டின்னு நெனைப்பா ?”
“இல்லே சார். .. சின்னப்புள்ளே ரோடிலே மயக்கமா கெடந்துச்சு”
“நீ இரக்கப்பட்டு நம்ம கம்பெனி வண்டியில ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்ச் சேர்த்தியாக்கும் ?. . அப்புறம் எங்கே போனே ?”
“வேற எங்கேயும் போவலீங்க. வர்ற வழியிலே அந்தப் புள்ளையோட அம்மாவை ஆஸ்பத்திரியிலே கொண்டு விட்டுட்டு நேரே இங்கே தாங்க வரேன் ?”
“ஏய்யா.. . நாம என்ன தரும ஆம்புலன்ஸா வச்சு நடத்தறோம் கம்பெனியிலே ?”
“ரோடிலே வேறே வண்டி எதுவும் போகலியா ? வேறே மனுசங்களே இல்லியா ? பெட்ரோல் வெலை தெரியுமில்ல உனக்கு ? கம்பெனிக் கணக்குதானேன்னு ஊருக்கெல்லாம் உபகாரமா ? எவன் பணமோதானே, நமக்கென்னங்கற அலட்சியமா ?”
“ஏழைக்கு ஏழை இதுகூடப் பண்ணலேன்னா எப்படிங்க ?”
“அதுசரி, மயங்கி விழுந்த அந்த ஏழைதான் வந்து உன் வேலையைக் காப்பாத்தித் தரப் போறானா உனக்கு ?”
“நீங்கதான் ஐயா கொஞ்சம் இரக்கம் காட்டணும். ”
“நான் என்னப்பா இரக்கம் காட்டறது.. .? கம்பெனி வண்டியை நீ மிஸ் யூஸ் பண்ணியிருக்கே. இதுக்கு உன்னைப் பத்து நாள் சஸ்பெண்ட் பண்றேன். மெமோ வரும். போ !”
“அய்யா.. . இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சிருங்கய்யா !”
“மன்னிக்கிறதுக்கு நான் யாருப்பா ? ஆஸ் எ மானேஜர் நான் என் டியூட்டியைத்தான் செய்யறேன். போ !”
தலைகுனிந்து திரும்பி நடந்தான் நடராஜன் கதவருகில் சென்றவன் தயங்கி நின்று, திரும்பி வந்தான்.
“மறந்துட்டேங்கய்யா… இந்தாங்க, நீங்க வாங்கிட்டு வரச்சொன்ன நாலு பால்கனி டிக்கெட், சினிமா ஏழு மணிக்கு ஆரம்பம். போக வர கார்ல ஃபுல்லா பெட்ரோல் போட்டிருக்கேங்கய்யா. மீதிக்காசை வீட்டுல அம்மா கிட்டே கொடுத்துட்டேங்கய்யா!” என்றபடி பைக்குள் கையை விட்டு நாலு சினிமா டிக்கெட்டுகளை எடுத்து மேஜையில் ஏகாம்பரத்தின் முன்னால் வைத்துவிட்டு நகர்ந்தான் நடராஜன்.
– ஆகஸ்ட் 25 2005