(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கிராமத்திலிருந்து வந்த ஒரு கிழமைக்குள்ளேயே திணறிப் போய் விட்டான், சுப்பிரமணி என்ற வினைதீர்த்த முருகேச சுப்பிரமணியன். மாமா கழுகாசலந்தான் அவனை சென்னைக்குக் கூட்டிக் கொண்டுவந்து திருவல்லிக்கேணி அருணாசலம் தெருவில் ரூம் ஒன்றில் குடியமர்த்தியது. சிலருடைய பெயரைக் கேட்டுவிட்டு அவருக்கும் பெயருக்கு முள்ள தொடர்பை நினைத்தால் விழுந்து விழுந்து சிரிக்கத் தோன்றும். ஆனால் பெயரைப் போல அர்த்தமுள்ளவர் கழுகாசலம்.
“ஆபீஸ்… ரூம்… சாப்பாட்டுக்கு ஹோட்டல்.. அவ்வளவுதான்… அப்புறம் எனக்கு திருட்டு சமாசாரம் பிடிக்காதப்பா… தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்ற பழமொழியெல்லாம் நான் நம்புறதில்லை…”
“சரிங்க, மாமா….”
“என்ன சரிங்க ….?”
கழுகாசலம் பளபளவென்று மின்னுகிற வழுக்கைத் தலையைத் தடவியபடியே சுப்பிரமணியை நேருக்கு
நேராகப் பார்த்தார்.
“அது தாங்க… நீங்க சொன்னது…”
“அப்புறம் பீடி, சிகரெட் பழக்கமுண்டா?”
கூச்சமாக அவரைப் பார்த்தான்: “இல்லிங்க மாமா…”
“என்கிட்ட பொய் பேசக் கூடாது… அப்புறம் எனக்கு நெறைய கோபம் வரும்… உன்னோட அம்மா காலைப் பார்த்திருக்கியா?”
சுப்பிரமணி விழித்தான்.
“இனிப் பார்த்துக்கோ கணுக்கால்ல பெரிய வடு இருக்கும்… பொய் சொன்னா… அதுக்கு நான் அடிச்ச அடி…”
கழுகாசலம் பயங்கரமாகச் சிரித்தார். உருண்டை யான முகம் இப்போது மேலும் விரிந்து பெருகிற்று. சதைக்குள்ளே கண்கள் கொஞ்ச நேரம் இடுங்கிப் போய் பின்னர் மெல்ல வெளித்தெரிந்தன.
“சினிமா பார்ப்பியா?”
“இல்லிங்க மாமா…”
“இல்லை?”- ஆச்சரியத்தோடு அவனைப் பார்த் தார் கழுகாசலம். அந்தத் தீட்சண்யமான பார்வை, அவனது நெஞ்சினுள்ளே மூலை முடுக்கெல்லாம் துரு வித் துருவி ஆராய்வதை அவன் உணர்ந்து கொண்டான்.
“சுப்ரமணி…”
“மாமா…”
“எனக்குப் பொய் பிடிக்காதப்பா. முதல்லே சொன்னேன் இல்ல…”
“சரிங்க…”
“என்னோட பொய் பேசாதை…”
“சரிங்க மாமா…”
அவர், அந்த அறையிலிருந்து வெளியே போன வுடனே தன் மேல் அழுத்தியிருந்த பெரிய பாறாங்கல், லொன்று கீழே உருண்டு போனாற் போல ஆசுவாச மடைந்தான் சுப்பிரமணி. அப்படியே கட்டிலிலே துள்ளி விழுந்து படுத்துக் கொண்டான். பிறகு எழுந்து ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். கழுகாசலம் பறந்து கொண்டிருந்தது. கையைத் தூக்கி கழுகாசலத்தின் பிடரியில் ஓங்கிக் குத்துவது போல பாவனை செய்து மிகுந்த சந்தோஷத்துடன் உரக்க சிரித்துக் கொண்டான். அதே சந்தோஷத்துடன் கட்டிலின் கீழே பாதுகாப்பாக வைத்திருந்த சார்மினாரையும் தீப்பெட்டியையும் எடுத்தான். ஸ்டைலாக சிகரெட்டை வாயில் பொருத்தினான்.
புகை வளையங்கள் விரிந்து மிதந்து அழிந்து மணமாய் அறையெங்கும் மிஞ்சிக் கொண்டிருந்தன.
“மை டியர் கழுகு… பாத்தியா நம்ம பயல் என்ன ஜோரா புகை விட்றான்…ஹூப்…எங்க அம்மாவை அடிச்சிருக்கிறாயா…. பார்ரா ஒரு நாளைக்கு உன் மொட்டையிலை நான் மத்தளம் வாசிக்கிறன். கழுகு….”
ஜன்னலருகே மீண்டும் போனான். “கழுகு…என்ன கேட்டே …சினிமா பார்ப் பியான்னா….பார்ரா இண்ணைக்கு மூணு ஷோவும் பார்க்கிறன்…”
சுப்பிரமணி கண்ணாடியின் முன்னே தனது முகத்தைப் பார்த்துச் சிரித்தான். பின்னர் இஸ்திரி போட்டிருந்த ஆடைகளை அணிந்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.
தெருவெல்லாம் நிறைந்து பெருகி வழிகின்ற ஜனக் கூட்டம். ஜோல்னாட் பையைப் பத்திரமாகப் பிடித்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தான் சுப்பிரமணி. வீதிமருங்கிலே பிரமாண்டமாய் தெரிகிற சினிமாப் பட கட் – அவுட்டுகளை இடையிடை வேடிக்கை பார்த்தான். அதிலே அரைகுறை ஆடைகளோடு நிற்கிற பெண்களை நேராக நிமிர்ந்து பார்க்கவே வெட்கமாயிருந்தது. ஆனாலும் கட்டிடங்களைப் பார்ப்பது போல திருட்டுத் தனமாகப் பார்த்துக் கொண்டான். பார்த்து விட்டு ஓரமாக மீண்டும் நடந்து கொண்டிருந்தபோது தனக்குப் பக்கத்திலேயே ஒருவன் தொடர்ந்து வந்தபடியிருப்பதை கவனித்தான். சந்தேகத்தோடும் இலேசான அச்சத் தோடும் அவனைத் திரும்பிப் பார்த்தான். அவனுக்கு ஐம்பது வயதிருக்கலாம். கருகருவென்று அடர்ந்த தலை மயிரை வாரி விட்டிருந்தான். பூனைக்கண்கள். ஹிட்லர் மீசை. கசங்கிப் போயிருந்த கட்டம் போட்ட சர்ட். அது போலவே கசங்கிய பழுப்பு நிற பாண்ட், இவன் பார்த்ததும் பவ்வியமாகச் சிரித்தான் ஹிட்லர் மீசை.
“என்ன?” – துணிச்சலை வரவழைத்துக் கொண்டே கேட்டான் சுப்பிரமணி.
ஹிட்லர் மீசை மீண்டும் இளித்தான். பின்னர் மிக உரிமையோடு சுப்பிரமணிக்கு அருகாக வந்தான். குரல் கிசுகிசுத்தது.
“வாங்க சார் போகலாம்… பக்கம் தான்…”
இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தான்: “என்ன…என்ன விஷயம் இது?”
ஹிட்லர் மீசையின் வாயெல்லாம் பல்லாகியது. “காலேஜ் கேர்ள்ஸ் சார். சிகப்பா லட்டாட்டம் இருக்கும். பயப்பட ஒண்ணுமில்லே … வாங்க சார்….”
சுப்பிரமணியின் பிடரியில் ஓங்கி அறை விழுந்தாற் போல அதிர்ந்து போனான். கணங்களின் பின்னரே ஹிட்லர் மீசை கூறியது மனதினுள் அர்த்தமாயிற்று. பயமும் எரிச்சலும் பிதுங்க அவனை முறைத்துப் பார்த் தான். ஹிட்லர் மீசை அதே இளிப்போடு தலையைச் சொறிந்து கொண்டான்.
“ஸ்டூடண்ட் லேடீசும் உண்டு சார்… பக்கம்தான்……”
சுப்பிரமணி சுற்றுமுற்றும் பார்த்தான். அவர்களைக் கவனியாமலே ஜனவெள்ளம் பிரவகித்தோடிக் கொண்டி ருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டே அதட்டுகிற குரலில், “நானெல்லாம் அப்படியான ஆளில்லை. போய்யா” என்று விட்டு சுப்பிரமணி விறு விறுவென்று அங்கிருந்து அவனை முந்திக் கொண்டே நடந்து போய் ஜனத்திரளில் மறைந்து போனான். சினிமாவுக்கு போகிற எண்ணம் மறைந்து போய் விட்டது. ஒரு ஞாயிற்றுக்கிழமை இப்படி வீணாகிப் போய் விட்டதே என்று மனதினுள் குமைந்து கொண்டான்.
2
சுப்பிரமணிக்கு தூக்கமே வரவில்லை. ஹிட்லர் மீசையே மாறி மாறி மனந்தனிலே தோன்றிக் கொண்டிருந்தான். தன்னைப் பார்த்து என்ன தைரியத்திலே அவன் அப்படிக் கேட்டானென்று நினைத்துக் குழம்பிக் கொண்டிருந்தான். தன்னைப் பார்த்தால் பெண்வெறி பிடித்து அலைகிறவன் போலவா தெரிகிறது என நினைத்தவாறே எழுந்து கண்ணாடியில் தனது மூகத் தைப் பார்த்துத் கொண்டான். அவன் முகத்திலே இன்னமும் குழந்தைத்தனமிருந்தது. இப்போதுதான் மீசை அரும்பியிருந்தது. ஷேவ் கூட எடுத்ததில்லை இன்னமும். அந்த ஹிட்லர் மீசை தன்னை ‘அப்படியான ஒரு ஆளாக’ நினைத்து விட்டானே என நினைத்தபோது கவலையும் ஆத்திரமும் மனதிலே பெருகிப் புரண்டன.
மீண்டும் கட்டிலில் படுத்தான். கழுகாசல மாமா தற்செயலாய் மனதிலே வந்தார். ஹிட்லர் மீசை தன் னிடம் கேட்டதை அவர் அறிந்தால் என்ன நடக்கு மென்று கற்பனை செய்து பார்த்தான், ஹிட்லர் மீசை யின் மீசையையே பிடுங்கியெடுத்துவிட்டு போலீஸில் அவனை ஒப்படைத்திருப்பார். சுப்பிரமணிக்கு சிரிப்பு வந்தது. மத்தியானம் கழுகாசலமாமாவை கிண்டல் பண்ணியமைக்காக அவனையறியாமலே இப்போது கவலைப்பட்டான். என்ன இருந்தாலும் அவர் சொன்ன தெல்லாம் எனது நன்மைக்காகத்தானே என நினைத்துக் கழிவிரக்கப்பட்டுக் கொண்டான். ஆனால் அவரின் அதட்டலுக்காக சிகரெட்டையும் சினிமாவையும் இழந்து விட அவன் தயாராக இல்லை .
கட்டிலிலிருந்து எழுந்து கட்டிலினடியிலிருந்த சார்மினாரை எடுத்தான். சிகரெட்டை வாயில் பொருத் திக் கொண்டே கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தான். கிராமத்திலே தென்னந்தோப்புக்குள் திருட்டுத்தனமா யிருந்து அவனும் கிருஷ்ணனும் ஒவ்வொரு நாள் அந்திக் கருக்கலிலும் சிகரெட் பிடிப்பார்கள். என்ன ஆனந்த மான சுகம், பரவசம், சந்தோஷம் அந்தப் பொழுதினிலே கிருஷ்ணன் வெகு அழகாக வளையங்கள் விடுவான். சின்னச்சின்ன வளையங்கள் அடுக்கடுக்காக மிதக்கும். மூக்கால் புகை விடுவான். அப்போதெல்லாம் சுப்பிரமணி அவ்வளவாக புகை வளையங்கள் விடமாட்டான். பாதி பயம். இங்கே வந்து மூன்று நாட்களில் என்னமாய் வளையங்களை மிதக்க விடுகின்றான். ஆனாலும் தென்னைமர மறைவிலிருந்து சிகரெட் பிடித்தபோது உண்டான இன்பமும், த்ரில்லும் இங்கே கொஞ்சமும் கிடைக்கவில்லை என அவனது மனம் உணர்ந்தது. திருட்டுத்தனமாகக் கிடைக்கிற சுகத்தில் தனியான இன்பமிருப்பதாய் நினைத்தான்.
நகரத்திற்கு ‘பாங்க்’கில் வேலை கிடைத்துப் புறப்படு முன் ஒரு வாரமாக கிருஷ்ணன் அவனை இணை பிரியாமலே இருந்தான். பத்தொன்பது வயது வரை அவர்களிருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்திருந்ததில்லை” இதுதான் முதற்தடவை. கிருஷ்ணன் மிகவும் கவலை யோடு காணப்பட்டான். கருஷ்ணனின் தங்கை வேணியும் அப்படித்தானிருந்தாள்.
கிருஷ்ணன் இப்போது என்ன செய்து கொண்டிருப் பான்? அக்கா வனஜா வாங்கிக் கொடுத்த கைக்கடிகாரத்தை எடுத்து நேரத்தைப் பார்த்தான் சுப்பிரமணி. சரியாக நாலரை மணி. நாலரை மணிக்கு வழக்கமாக ஏரிக்கரையில்தான் அவனும் கிருஷ்ணனும் நிற்பார்கள். ஏரிக்கரையில் எப்போதும் மோகனமான தொருசூழ் நிலைகைகளை விரித்துப் பாடிக் கொண்டிருப் பதாய் அவன் எண்ணுவதுண்டு. மௌனமான ஏகாந்தம். எப்போதாவது இடையிட்டு கூக்கூ குக்கூ’ என்கிற குயில் பேச்சு. தென்னைமரங்களில் அங்குமிங்குமாய் விளையாடுகிற அணில்கள். ஒன்றுடன் ஒன்று அலகு கோதி ஓய்வாயிருக்கின்ற ஜோடிக்காகங்கள்… வெய்யி லிலே சின்னச்சின்ன அலைகளைச் சிலிர்த்து பரவசமுற்று மினுமினுக்கிற ஏரியிலே மீனைத்தேடி ஒற்றைக் காலில் தவமிருக்கிற வெள்ளை வெளேர் கொக்குகள். கடைசி நாளன்று அந்தக் கொக்குகளைப் பார்த்துக் கொண்டே சுப்பிரமணியிடம் கிருஷ்ணன், ”மணி….. பட்டணம் போனாலும் கெட்டிராதாடா… ஜாக்கிரதை…” என்று அடங்கிய குரலிலே கூறினான். உடனேயே சுப்பிரமணி புன்னகை செய்தான். “அப்படி ஆகமாட்டேண்டா. சத்தியமாடா” என்றான்.
திடீரென்று கிருஷ்ணனை பட்டண வாழ்க்கைக்குள் பொருத்திப் பார்த்தான் சுப்பிரமணி. இந்த நெருக்கடி யான பட்டண வாழ்க்கைக்குள் கிருஷ்ணன் வெகு நிச்சயமாகத் திணறியே போயிருப்பான். எவ்வளவு ஜனங்கள். எத்தனை விதமான பெண்கள். விதவித மான சினிமாக்கள். கிராமத்திலிருந்து எவ்வளவு தூரம் தள்ளிப்போய் சினிமா பார்க்க வேண்டியிருந்தது. அதுவும் ஆடிக்கொருநாள், அமாவாசைக்கொருநாள். எவ்வளவு கெஞ்ச வேண்டும். கிருஷ்ணனுக்கு சினிமா என்றால் மிகப்பிரியம். காதல் காட்சிகளில் மெய் மறந்து போயிருக்கிற அவனது பிடரியிலே இவன் தான் மெல்லத் தட்டுவது வழக்கம். இங்கே அவன் இருந்தால் தன்னைப்போல பெரிய மனிதனாய் எவ்வித அச்சமு மின்றி ‘அடல்ஸ் ஒன்லி’ சினிமா பார்ப்பான். அதெல் லாம் சரி. ஹிட்லர் மீசையோடு அவன் எப்படி நடந்து கொண்டிருப்பான்….?
எசுப்பிரமணிக்கு சரியாகக் கற்பனை வரவில்லை.
சுப்பிரமணிக்கு பெண்களைக் கண்டாலே கூச்சம். வலிந்து வந்து, வேணி எவ்வளவோ பேசுவாள். ஆனால் மனதிலே நிறைய ஆசை இருந்தாலும் சுப்பிரமணி கூச்சப் பட்டு ஒன்றிரெண்டு வார்த்தைகளே பேசுவான். அவள் போன பின்னர் நிறையப் பேசியிருக்கலாமே என்று ஏக்கங் கொள்ளுவான். கிருஷ்ணனோ பெண்களோடு வசீகரமாகவும், சிரித்துச் சிரித்தும் பேசுவான். அவர் களுக்கு என்ன உதவி தேவையோ அவற்றையெல்லாம் வலிந்து போய் செய்து கொடுப்பான். அவனை எல்லோரும் ‘கன்னிராசிக்காரன்’ என்று செல்லமாகச் சீண்டுவார்கள். என்னவாயிருந்தாலும் பெண்களைக் கெட்ட தனமாகப் பேசினால் கிருஷ்ணனுக்கு முரட்டுக் கோபம் வந்து விடும். அறைந்து விடுவான்.
ஆகையால் அப்படி ஒரு அறையைத்தான் கிருஷ்ணன், ஹிட்லர் மீசைக்கு வெகு ஆத்திரத்தோடு வீசியிருப்பான்.
இரவு வெகு நேரத்திற்குப் பின்னரே சுப்பிரமணிக்குத் தூக்கம் வந்தது. உடனேயே ஹிட்லர் மீசையும் வந்தான். “போலாமா? சிகப்பா லட்டாட்டம் லேடீஸ் சார்… பக்கந்தான்…” என்றவாறே தலையைச் சொறிந்து கொண்டு பற்கள் தெரியச் சிரித்தான்.
3
‘பாங்கில்’கில் வேலை முடிந்ததும் உடுப்பி ஹோட்டலில் காப்பி சாப்பிட்டான். உடம்பில் புதியதொரு உற்சாகம் ஏறிற்று. வெளியே வந்து சார்மினார் பாக்கட் ஒன்று வாங்கியவாறு பெருகிப்போகிற ஜனங்களைப் பார்த் தான். பார்த்துக் கொண்டே நிற்கலாம் போலத் தோன்றியது. சிகரெட் ஒன்றைப் பற்ற வைக்கலாமா என நினைத்தான். கழுகாசல மாமா அட்டகாசமாகச் சிரித்தார். எண்ணத்தை மாற்றிக் கொண்டே நடக்க ஆரம்பித்தான்.
பழைய புத்தகங்கள் பிளாட்பாரத்தில் நிறைத்து வைக்கப்பட்டிருந்தன. ஏதாவது வாங்கலாம் போலத் தோன்றியது. அடுத்த பக்கத்தில் பார்த்து விட்டு வாங்கி விடலாம் என நினைத்தவாறே நகர்ந்தான். பைய னொருவன் சூடாகப் புத்தகங்களை விற்றுக் கொண்டி ருந்தான். அட்டைகளில் பெண்கள் அம்மணமாயும், அம்மணத்தின் மேல் ஒரு துண்டோடும். இவனுக்கு தொண்டை அடைத்தது. உடம்பு நடுங்கியது. இலேசாக வியர்வை. தலையங்கங்களை வாசித்தான், பச்சை பச்சையாகப் பேசிக் கொண்டிருந்தன. அங்குமிங்கு மாகப் பார்த்து விட்டு, ”குப்புற விழுந்த குமுதினி’யைத் தூக்கினான். “வாங்றியா சார். பன்னிரண்டரை ரூபா’ என்று அவன் கையிலிருந்த புத்தகத்தை பிடுங்குகிறாற் போல கேட்டான் பையன்.
இவன் புத்தகத்தை அப்படியே வைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டான். இப்போது தன்னை யாரோ பின் தொடர்வதை உணர்ந்தவாறே திரும்பினான். ஹிட்லர் மீசை. இளித்தவாறே அருகில் வந்தான். இவன் வெகு சாதாரணமாக அவனைப் பார்த்து, “என்ன?” என்றான்.
ஹிட்லர் மீசை மீண்டும் சிரித்தான். “என்னைத் தெரியுமா?” என்று அவனைப் பார்த்து விஷமத்தனமாகச் சிரித்தான் சுப்பிரமணி. ஹிட்லர் மீசை மீண்டும் தலையைச் சொறிந்தவாறே, “ஆ…. தெரியுமே… போன வாட்டி சாரை நான்தானே…” என்று தொடங்கினான். சுப்பிரமணிக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டது. முகத்துக்கு நேராகப் பார்த்து “வாயை மூடுய்யா…” என்று அவனை அதட்டினான்.
ஹிட்லர் மீசையின் முகம் சுருங்கிப் போயிற்று.
“என்ன சொல்லு?” என்றான் மீண்டும்.
“ஐயா சூடாயிட்டீங்க” என்றவாறே, “அழகான காலேஜ் பொண்ணுங்க… வாங்க சார், பக்கந்தான்…” என மெல்லக் கூறினான் அவன். சுப்பிரமணி சுற்று முற்றும் பார்த்தான். அவரவர் அவர் பாட்டிலே இயங்கிக் கொண்டிருந்தனர். பரபரப்பான வேளை.
சுப்பிரமணி மெல்லச் சொன்னான்; “என் பின்னால வாப்பா …”
ஹிட்லரின் முகத்தில் துளிரிடுகிற சந்தோஷம்.
“சரிங்க …” “உன் பேரென்ன?”
“வைத்திய நாதனுங்க, வைத்தி என்று கூப்பிடுவாங்க….”
“என்ன தொழில் செய்யிற?”
“…..”
“ஆ இதுதானா தொழில்…”
வைத்தி பரிதாபகரமாகச் சிரித்தான்.
“ஆமாங்க…”
“குடும்பம் இல்லியா?”
“இல்லிங்க…”
“ஏன்?…”
“அது பெரிய கதைங்க…”
சுப்பிரமணி திடீரென நின்றான். எதிரே வருகின்ற குண்டான வழுக்கைத்தலை அவனைத் திகைக்க வைத்தது. அசப்பில் அந்த ஆள் கழுகாசல மாமாவைப் போல நிம்மதியாகத் திரும்பி வைத்தியைப் பார்த்தான். வைத்தியின் முகம் வாடிப்போய் கவலை தெரிந்தது. சுப்பிரமணி – சட்டைப்பைக்குள் கையை விட்டான். பணமிருந்தது. அவனது மனதுள் திட்டமொன்று உருவாகியிருந்தது.
எதிரே தெரிந்த ஓட்டலினுள் போனான். வைத்தி தயங்கிக் கொண்டு வாசலிலேயே நின்றான். அதட்டுகிறாற் போல கூறினான் சுப்பிரமணி:
“பின்னால வாப்பா…”
“சரிங்க சார்…”
இருவரும் எதிரெதிராக உட்கார்ந்து கொண்டனர். வைத்தி கூசிக் குறுகியவாறே அவதிப்படுவதை முகம் தெட்டத் தெளிவாகக் கூறிற்று.
“என்ன சாப்புடுற?”
அவன் தயக்கதோடு நிமிர்ந்தான்.
“ஏதாச்சும், சார் இஷ்டம்….”
“மத்யானம் சாப்பிட்டியா?”
“இல்லிங்க…”
“ஏன்?”
வேதனையோடு சிரித்தான் வைத்தி.
“கிராக்கி கெடச்சாத்தான் சாப்பிடலாமுங்க….”
சுப்பிரமணிக்கு சிரிப்பு வந்தது.
“அப்ப நான் தான் உன்னோட முதல் கிராக்கி…”
வைத்தியால் அவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை .
“பிரியாணி சாப்பிடறியா?…”
“வேணாங்க…”
“இல்லை சாப்பிடு…”
“சரிங்க…”
“மட்டனா, சிக்கனா?”
“சார் இஷ்டம்…”
சர்வரிடம் ஒரு சிக்கன் பிரியாணிக்கும், சமோசாவுக்கும் ஆர்டர் கொடுத்தான் சுப்பிரமணி. “சமோசா சாப்பிட்ட பிறகு காப்பி”
வைத்தி சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருந்த சுப்பிரமணியின் மனதிலே இனிமேல் வைத்தி தான் கிழித்த எந்தக் கோட்டையும் தாண்ட மாட்டானென்றி நம்பிக்கை உருவாயிற்று. மறுகணமே மனதினுள் சந்தோஷம் கிளுகிளுத்தது. கிராமத்திலே இருக்கையில் மனதினுள் உறங்கியிருந்த ஆசைகளெல்லாம் மெதுமெது வாய் இப்போது உயிர்ப்புற்றுக் கொண்டிருந்தன.
காப்பியை உறிஞ்சியபடியே வைத்திக்கு மட்டுமே கேட்கும்படி மெதுவாகக் கிசுகிசுத்தான் சுப்பிரமணி.
“எத்தனை பொண்ணுங்க இருக்காங்க…”
சாப்பிடுவதை நிறுத்திவிட்டு இறங்கிய குரலிலே பதில் சொன்னான் வைத்தி.
“ஒரு பதினைஞ்சு வருங்க…”
“ஆ… அவ்வளவா?”
“ஆமாங்க. கேரளா, ஆந்திரா பொண்ணுகளும் உண்டு சார். நீங்க வாங்க. ‘ரேட்’ டெல்லாம் கம்மிதான், நீங்களே பார்த்து ‘செலட்’ பண்ணுங்க சார்…..”
காப்பிக் கோப்பையை மேஜையில் வைத்து விட்டு வைத்தியையே கொஞ்சநேரம் உறுத்துப் பார்த்தான் சுப்பிரமணி. களைத்திருந்த வைத்தியின் முகத்தில் இப்போது பிரகாசம், உற்சாகம்.
சார்மினார் பாக்கெட்டை எடுத்து ஒரு சிகரெட்டை உருவி எடுத்தான் சுப்பிரமணி: “சிகரெட் பிடிப்பியா?”
கூச்சத்தோடு அவனைப் பார்த்தான் வைத்தி.
“இப்படி என்னோட ஆருமே அன்பா பழகினதில்லை சார்….”
அவனது வார்த்தைகள் தளதளத்தன. “
ஐஸ் வைக்காத, சிகரெட் பிடிப்பியா?”
சிகரெட்டை வாங்கிக் கொண்டே, “நான் பொய்யோ சொல்லல்ல சார். நிஜமா என்னோட நீங்கதான் இப்படி அன்பா நடந்திருக்கிறீங்க…”
சிகரெட்டை ஊதியவாறே அவனைப் பார்த்தான் சுப்பிரமணி.
“அப்படியா? எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு வைத்தி…”
பரவசமானான் வைத்தி: “டாங்சுங்க”
“என்ன?” நையாண்டியாக அவனைப் பார்த்தான் சுப்பிரமணி.
“இல்லைங்க, ரொம்ப நன்றிங்க…”
பில்லுக்குரிய பணமாக இருபது ரூபாவை தட்டிலே வைத்துவிட்டு, தட்டிலிருந்த குச்சியை எடுத்துப் பல்லு குத்தினான் சுப்பிரமணி.
வைத்தி திடுமெனக் கேட்டான்.
“சாருக்குப் பூர்விகம் எதுங்க?”
“சோழவந்தான்…”- அக்கறையின்றிப் பதில் சொன்னான் சுப்பிரமணி.
“சோழவந்தானா?”- வைத்தி அதிர்ச்சி கலந்த ஆனந்தத்தோடு சுப்பிரமணியைப் பார்த்தான். இப்போது அவனது முகத்திலே மரியாதையும், பயபக்தியும் புலப்பட்டது. கண்களிலே இனந்தெரியாத கனிவொன்று தெரிவதனை உணர்ந்து கொண்டான் சுப்பிரமணி. சிறிது நேரம் கழிய முன், வைத்தி பணிவான குரலிலே கேட்டான்.
“சாருக்கு மகாலிங்க பாகவதரை தெரியுங்களா?”
சுப்பிரமணிக்கு அவனது மாற்றங்கள் அதிசயமாயிருந்தன. வைத்தியோடு சற்று விளையாட வேண்டும் போலத் தோன்றியது. சிரிப்பை மனதினுள் விழுங்கிக் கொண்டு வெகு இயல்பாக வைத்தியை நோக்கினான்.
“மகாலிங்க பாகவதரா? அவர் எனக்குப் பெரியப்பா வேணும்…”
அந்த வார்த்தைகள் முடிய முன் நாற்காலியிலிருந்து திடுமென எழுந்தான் வைத்தி. சிலிர்த்துப் போய், எல்லை மீறிய பரவசத்தோடு கைகளைக் கூப்பியவாறு தளுதளுத்தான்.
“சார்… நீங்க பெரிய ஆளுங்க சார்… என்னை மன்னிச்சுடுங்க சார்…”
சுப்பிரமணி திகைத்துப் போய் விட்டான். இந்த மகாலிங்க பாகவதருக்கு இப்படியொரு ரசிகனா என வியந்தவாறே சுற்று முற்றும் பார்த்து விட்டு கடிகிறாற் போல, “வைத்தி, ஆரும் பார்த்தா சிரிப்பாங்க. பேசாம உட்காரு” என்றான்.
வைத்தி உட்கார்ந்து கொண்டான்.
“எனக்கு சாருக்கு முன்னாலே உட்காரவே உடம்பு சிலிர்க்கிறாப் போல இருக்குதுங்க…”
அவன் வார்த்தைகளில் உண்மையே தொனித்தது. சுப்பிரமணி மனதினுள் சிரித்தவாறே, “பெரியப்பாவுக்கு என் மேலதான் ரொம்பவும் இஷ்டம்” என்று கூறிவிட்டு வைத்தியைப் பார்த்தான்.
“அப்டீங்களா? அவர் எவள பெரிய பாகவதர் சார். அவர் பாடினா சோறு தண்ணியே இல்லாம நாள் கணக்கா கேட்டிட்டிருக்கலாம் சார். கிட்டப்பாவையே கலங்கடிச்சவர் சார் அவர். நீங்க வேதாள உலகம் பார்த்திருக்கீங்களா சார். ஆதித்தன் கனவு, ஞான சௌந்தரி, நாமிருவர் எல்லாம் பார்த்திருக்கீங்களா? நிஜமாகவே ஆளைப் பார்த்தா பாகவதர் ஒரு ராஜா மாதிரி இருப்பார். இந்த ரெண்டு கண்ணாலயும் அவரை நான் பார்த்திருக் கிறன் சார்… சே அவரோட ஆக்டிங் என்ன… வாய்ஸ் என்ன…. அவர் போனதுக்கப்புறம் நான் சினிமாவே பார்க்கிறதில்ல சார்…. இப்ப எல்லாம் இன்னா சார் பாட்டுப் பாடுறானுங்க..”
தன்னை மீறிய பரவசத்தில் மிதந்து முகமே மாறிப் போய் விட்ட அவனை அதிசயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் சுப்பிரமணி, இதுவரையும், தான் கண்டிருந்த வைத்தி மாறிப்போய் இப்போது வேறொரு வன் அவ்விடத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது போலொரு பிரமை. இவனது முகம் மிகவும் தெளிவாயிருக் கின்றது. இயல்பாகவே புன்னகை செய்கிறான். உணர்ச் சிமயமாகிப் பேசிக் கொண்டிருக்கின்றான்.
“அவர் பாடின பாட்டெல்லாம் எனக்கு தலை கீழ்ப் பாடமுங்க… லைலா மஜ்னுவிலை ஒரு பாட்டுப் பாடியி ருக்கிறார்ங்க… என்னது… பறந்து செல்லுதே என் பைங் கிளியதே… சே! என்ன பாட்டுங்க அது… பாட்டைக் கேட்டால கண்லே குடம் குடமாக தண்ணி ஓடுங்க …”
கொஞ்சநேரம் அவனது முகத்திலே கவலை பரவியது. சோகம் பொதிந்திட தன்னை மறந்தவனாகக் கூறினான்:
“அதல்லாம் ஒரு காலமுங்க..”
‘பில்’ பணம் கொடுத்துவிட்டு சுப்பிரமணி எழுந்ததும் வைத்தி அவனைப் பார்த்துக் கேட்டான்.
“நீங்க என்ன வேலை பார்க்கிறீங்க சார்?…”
சொன்னான்.
“அப்ப பெரிய ஆபீசராக்கும்…”
வெறுமனே சிரித்தான் சுப்பிரமணி,
“வைத்தி நான் மறுபடியும் பார்க்கிறன்….. பணம் ஏதாச்சும் வேணுமா?”
“வேண்டாங்க, ரொம்ப டாங்சுங்க…”- அவன் நெகிழ்ந்து போனான்.
மரியாதையோடு சிரித்துவிட்டு அங்கிருந்து நடந்தான் வைத்தி. சுப்பிரமணி அவன் நடந்து செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றான். நாளைக்கு தான் கேட்கிறதை அவன் எத்தகைய மனோ நிலையோடு ஏற்றுக் கொள்வான் என்பதை கற்பனை செய்து பார்த்தான். ஸ்டூடன்ஸ்தான் வேண்டுமென்று சுப்பிரமணி கேட்டால் எவ்வித மறுப்புமின்றி “சரி போலாம் வாங்க. லட்டாட்டம் இருக்கும்” என்று வைத்தி சொல்வதை நினைத்தபோதே சுப்பிரமணிக்கு உடலில் இனந்தெரியாத கிளுகிளுப்பும், அவனை மீறிய புன்னகையும் உண்டாயிற்று.
இரவு முழுவதும் சுப்பிரமணிக்கு ஒரே கனவுகள்.
அழகழகான பெண்கள். ஸ்டூடன்ஸ், நர்ஸ், கேரளம், கன்னடம், ஆந்திரா. சிந்தி…கடைசியில் வேணி. இன்னும் பல கிராமத்துப் பெண்கள், இவனுக்குப் பரவசமாயிருந் தது. பார்த்துக் கொண்டிருக்கையிலே கிருஷ்ணன் வந்து ‘கெட்டுப் போயிராதடா… கெட்டுப் போயிராதடா’ என்று கெஞ்சினான். இவன் அவனை நையாண்டி பண்ணி விரட்டுகிறான். வைத்தி, மகாலிங்க பாகவதரின் பாட்டைப் பாடிக்கொண்டே வருகிறான். இவனுக்கு அரை குறையாக இப்போது ஞாபகத்தில் வருகிறது. டி. ஆர். மகாலிங்கம் நடித்த ‘திருவிளையாடல்’ படத்தை அவன் டூரிங் தியேட்டரில் பார்த்திருக்கிறான். மனிதன் நன்றாகத்தான் பாடுகிறார். அந்தக் காட்சி தோன்றுகிற போதே இடிச்சிரிப்புடன் கழுகாசலம். ஹொஹ் ஹொஹ் ஹோ ….
திடீரென்று படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து கொண்டான் சுப்பிரமணி. பிறகு அவனுக்குத் தூக்கமே வரவில்லை.
4
சாயந்தரம் வீட்டுக்குப் போய் குளித்தான். நன்றாகத் தலை வாரிக் கொண்டு பவுடர் பூசியவாறு கண்ணாடி முன் நீண்ட நேரமாக நின்று பார்த்தான். மீசையின் பூனைமயிர்களுக்கு கருமை போதவில்லை. கொஞ்ச நேரம் யோசித்து விட்டு தீப்பெட்டியை எடுத்து இரண்டு மூன்று குச்சிகளைப் பற்றவைத்தான். சிறிது எரிந்ததும் அவற்றை அணைத்தான். அந்தக் கரிக் குச்சியால் அப்படியே மீசையில் கருமையாய் இழுத்து இழுத்துப் பூசினான். இப்போது மீசை பளபளவென்று கருமையாய் தெரிந்தது. சந்தோஷத்துடன் விசிலடித்துக் கொண்டான். ஷேர்ட் கைகளை மடித்துவிடவில்லை. இரண்டு மூன்று வயது அதிகரித்தாற் போன்ற தோற்றம் தனக்கு கிடைத்தமையையிட்டு மிகவும் மனத் திருப்தி அவனுக்கு.
ஜன்னல் பக்கமாகச் சென்றான்.
பால்கார முனியம்மா, துளசி, கற்பகம், பூக்காரிகள். காய்கறிக்காரி, சல்வார் கமிஸ், பாவாடை தாவணி. அக்ரகாரத்து மாமிகள். எல்லாமே பெண்கள். பெண்கள். இதோ ஒரே ஒரு ஆணாக வருகிற உச்சிக்குடுமியோடான சிவப்பான ராமானுஜ ஐயங்கார். எந்த நேரமும் ‘இந்துப் பேப்பரையே துளாவிக் கொண்டிருக்கிறமையால் அப்பகுதி இந்தையங்கர்’ என்ற பெயராலேயே அவர் அறியப்படுவர். லொக் லொக்கென்று இருமிக்கொண்டே இவன் நின்ற ஜன்னல் பக்கமாகப் பார்த்தார். இவன் நைஸாக அங்கிருந்து நழுவி உள்ளே வந்துவிட்டான்… இந்தையங்கர் கண்டால் கழுகாசலத்தைப் பற்றி விசாரிப் பார். ‘இந்து’வின் அன்றைய ஆசிரிய தலையங்கத்தை வியப்பார். ஜி.என். ரெட்டியின் ‘ரிப்போர்ட்டிங்’ பற்றி ‘சத்ச்’கத்தை கொட்டுவார்…. இவன் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். அவரின் முதுகு தொலைவில் தெரிந்தது. வெளியே வந்து கதவைத் தாளிட்டுக் கொண்டான்..
பாக்கட்டைப் பார்த்தான். பத்துப் பத்து ரூபா நோட்டாக ஏழு. தனியாக நாலு பத்து ரூபா நோட்டு களை பாண்ட்’ பாக்கட்டுள் வைத்திருந்தான். அதை விடச் சில்லறையாக பதினேழு ரூபா அறுபது காசு.
பஸ் உடனேயே கிடைத்தது.
இறங்கியதும் தலையை வாரிக் கொண்டான்.
நடந்தான்.
கண்களில் வைத்தி இப்போது தெரிந்தான். யாரோ ஒரு இளைஞனோடு தனியாகப் பேசிக்கொண்டு நின்றான். சுப்பிரமணிக்கு சிரிப்பாக வந்தது. ‘கிராக்கி பிடிச்சுட்டான் வைத்தி…’
ஓரமாக ஒதுங்கி நின்று ஓரக்கண்ணால். வைத்தியைப் பார்த்தவாறே சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு நின்றான் சுப்பிரமணி. வைத்தி தன்னை இரண்டு மூன்று முறை பார்த்ததைக் கவனித்தான். ஆனால், தான் வந்ததை யிட்டு வைத்தி அக்கறையேயின்றி நிற்பது உடனேயே இவனது மனதில் எரிச்சலை ஊட்டிற்று. வாய்க்குள் திட்டிக் கொண்டே முன்னே போய் வைத்திக்கு நேராக நடந்து சென்றான், வைத்தியின் முகத்தில் எவ்வித மாற்றமுமில்லை. இளைஞனுடன் தீவிரமாகப் பேசிக் கொண்டிருப்பதைப் போல பாவனை செய்தான்.
‘உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்கிற நாய் என்று மனதிற்குள் திட்டிக் கொண்டே அவனைப் பார்த் துக் கொண்டு நின்றான். இரவு கண்ட கனவுகளெல் லாம் மெதுமெதுவாக கலைகிறாற் போல மனம் துணுக் குற்றது. வைத்திக்கு அருகே சென்றதும் அவன், “கொஞ்சம் நில்லுங்க சார்….” என்று அந்த இளைஞனிடம் சொல்லிவிட்டு சுப்பிரமணிக்குப் பக்கத்தில் வந்தான்.
“எங்க சார் வந்தீங்க?” என்றான்.
சுப்பிரமணிக்கு எரிச்சல் வந்தது. எனினும் தன்னைச் சமாளித்துக் கொண்டு முகத்தை இயல்புக்கு கொண்டு வந்தான். பின்னர் புன்னகையோடு “போலாமா?…” என்று வைத்தியிடம் கேட்டான்.
வைத்தியின் முகம் மாற்றம் கண்டது. தலையைச் சொறிந்துவிட்டு சுப்பிரமணியை நிமிர்ந்து பார்த்தான்
“வேணாங்க…” மனதுக்குள் கோபம் பெருகிற்று சுப்பிரமணிக்கு. “என்ன வைத்தி… ஏன் வேணாம்?”
வைத்தி தெளிந்த முகத்தோடு அவனைப் பார்த்தான்.
“இல்லிங்க சார்… நீங்க போயிடுங்க. நீங்கல்லாம் இப்படிக் கெட்டுப் போயிடாதிங்க. ஊருக்குப் போயி நல்ல பொண்ணாப் பார்த்து கல்யாணம் கட்டிக்குங்க. நீங்கல்லாம் நல்ல ஆளுக சார். நான் பாகவதருக்கு துரோகம் பண்ணமாட்டன் சார்… என்னைக்காவது ஒரு நாள் பாகவதர் பொறந்த இடத்துக்குப் போய் அந்த மண்ணை மிதிக்கணுமின்னு எனக்கு ஆசை இருக்குது சார்…”
அவன் சொல்லி முடித்த உடனே அங்கிருந்து புறப்பட்டு விட்டான். சுப்பிரமணி வாயடைத்து திகைத்துப் போய் நின்றான். அவனுக்கு எதுவுமே புரியவில்லை.
– 1985
அந்திப் பொழுதும் ஐந்தாறு கதைகளும், முதற் பதிப்பு: டிசம்பர் 1985, தமிழோசைப் பதிப்பகம், சென்னை.