(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தலையில் – அடித்துக் கொண்டே பத்திரிகையின் முக்கிய செய்தியினை இரண டாவது முறையாகவும் படித் தான் மூர்த்தி. மனதினுள்ளே எல்லையற்ற எரிச்சலும் வெறுப் பும் பெருகிற்று. அவனையறி யாத அருவருப்பும் உண்டா யிற்று. மூன்றாவது முறையும் பத்திரிகைச் செய்தியினைப் படித்தான். “எழுத்தாளர் பரசு ராமன் கைது. அரசுக்கு எதி ரான எழுத்து நடவடிக்கைதான் கைதானதற்குக் காரணமா?” தலைப்புச் செய்தியினை விளக் கிய உள்ளடக்கத்தில் பரசுராம னின் அரசுக்கு மாறான எதிர்க் குரலே இந்தக் கைதுக்கு அடிப் படைக் காரணமெனப் பேசிக் கொள்ளப்படுகிறது என்ற முடிப்பு இருந்தது.
பரசுராமனை மனதிலே கொண்டு வந்தான் மூர்த்தி. அவன் பரசுராமனின் தகப்பன் கிருஷ்ணமூர்த்தியைத் தேடிச் செல்லும் போதெல்லாம் அவனைக் கவனித்திருக்கின்றான். ஏதாவது ஒரு பத்திரிகையைப் படித்துக் கொண்டிருப்பான் அல்லது எழுதிக் கொண்டிருப்பான். ஒரு வெள்ளிக்கிழமை என்று நினைவு. கிருஷ்ண மூர்த்தியைத் தேடிக் கொண்டு சென்ற மூர்த்தி, பரசுராமனையே முதலில் எதிர்கொண்டான்.
“அப்பா வெளியிலை போயிருக்கிறார். கொஞ்ச நேரத்திலை வந்திடுவார். உட்காருங்க!”
வேர்வையைத் துடைத்துக் கொண்டே உட்கார்ந்தவனிடம் பத்திரிகையொன்றினைக் கொடுத்தான் பரசுராமன்.
‘இதைப் படியுங்க…’
பத்திரிகையை அவன் பெற்றுக் கொண்டதும், ‘நான் எழுதிய விஷயம் ஒன்றும் வெளியாகியிருக்கிறது. படித்துப் பார்த்து அபிப்பிராயம் சொல்லுங்க…’ என்றான்.
மூர்த்தியின் மனம் ஒருநிலையில் இல்லாதபோதிலும் அந்த இளைஞனின் மனது புண்படுவதனை அவன் விரும்பவில்லை . ஆனாலும் அக்கா செல்வதி சொன்ன வார்த்தைகள் காதோடு கேட்டன.
“தம்பி, இனியும் கிருஷ்ணமூர்த்தியை நம்பிப் பிரயோசனமில்லை. அந்த இந்தக் கதை வேணாம். வாங்கின காசைத் திருப்பித் தந்திடு என்று சொல்லி, வேணுமெண்டால் சண்டை பிடிச்செண்டாகுதல் அந்தக் காசை வாங்கிவந்திடு. ஒன்றரை இலட்சம் ரூபா. வாங்கி இந்த எட்டாந் திகதியோடை ஒரு வருஷம் முடியப் போகுது. அதுக்கு இன்றைக்கு என்ன வட்டி வரும்…”
பரசுராமனின் கட்டுரையில் கவிஞர் ஒருவரைப் பற்றி காரசாரமாக விமர்சனம் வைக்கப்பட்டிருந்தது. அவரது கவிதையைப் பற்றி எதுவுமே விமர்சிக்கப்படாமல், அவருடைய உடலமைவு, கீச்சிட்ட குரல், சுருட்டுப் பிடிப்பதன் மூலம்
அவருடன் யாருமே பேசமுடியாதிருக்கிற நிலை என்பன வற்றைத் தகிக்கும் வார்த்தைகளில் எழுதியிருந்தான் பரசுராமன். இப்படியானோர் பற்றி போலாந்துக் கவிஞர் இக்னுபாயன் சொன்ன கருத்தும் மேற்கோளாகக் கையாளப் பட்டிருந்தது. அடைப்புக் குறிக்குள் இக்னுபாயனின் பெயர் ஆங்கிலத்தில்.
அந்தக் கட்டுரையில் கவிஞரின் தனி அடையாளங்களை மிகக் கீழ்த்தரமாக எழுதியிருந்ததைப் படிக்கையிலே மூர்த்தியின் மனம் அருவருத்தது.
‘கட்டுரை எப்படி?’
ஆர்வத்தோடு கேட்டான் பரசுராமன்.
“தனிப்பட்ட முறையில் உங்களுக்கு இவரோடு பிரச்சனையா?”
கீழ்க்கண்களால் பரசுராமன் மூர்த்தியில் பார்வையைப் பதித்தான்.
“ஏன் கேட்கிறீங்க?”
“தனிப்பட்ட முறையிலை அசிங்கமாகத் தாக்கி இருக்கிறீங்க, கவிதையைப் பற்றி ஒரு வரி விமர்சனம் கூட இல்லை …”
நெற்றியை விரலால் வருடினான்.
“ஒரு படைப்பாளிக்கு இரண்டு பக்கங்கள் இல்லை. ஒரே ஒரு பக்கந்தான் இருக்க வேண்டும்…”
“ஆனால் நீங்கள் ஒரு பக்கத்தைத்தான் எழுதியிருக் கிறியள். அதுகூட சரியென்று எப்படி நம்பலாம்?”
பரசுராமனின் முகம் சுருங்கிற்று.
“அவருடைய முழுக்கவிதையையும் படித்தனீங்களா?”
“இல்லை, ஆனால் அவருமைடய கவிதை பற்றி சூரியன் சிங்கராசன் எழுதின விமர்சனம் படித்திருக்கிறன்…”
“யார் அது?”
“இப்போது பேசப்படுகிற விமர்சகன்…. எனது நண்பன்…”
“ஓ…” என்ற மூர்த்தி, “அவரைப்பற்றி நான் கேள்விப்படவே இல்லை ” என்றான்.
“அவன் ஹங்கேரிப் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் துறை ஆய்வாளன்…”
வியப்போடு கேட்டான். “எப்படி ஹங்கேரிக்குப் போனவர்? ஆச்சரியமாயிருக்கே. சொல்லுங்க…”
“இதெல்லாம் அவரவர் கெட்டித்தனம். இன்னும் சொன்னால் அந்தரங்கம்…’
மூர்த்தி பேப்பரை மடித்து வைத்தான்.
“அப்பாவை இன்னுங் காணவில்லையே!”
“வந்திடுவார், பத்து நிமிஷம் பாருங்க. இல்லையென்றால் நாளைக்கு வாருங்க…”
“பரவாயில்லை , இருக்கிறன்…”
“அப்ப இந்தக் கவிதையையும் பாருங்க…”
பதினாறு பக்கச் சஞ்சிகை. வாங்கினான்.
நெருப்பு, நீர், காற்று, சுழற்சி, சேகரம், துயரம், மீளல் என்ற சொற் கூட்டங்கள், திரும்பத் திரும்ப.
வெறுமையாக அவனைப் பார்த்தான்.
“இந்தக் கவிதைக்கு எனக்கு நிறையவே பாராட்டுக்கள். எனது ரௌத்ரக் குரல் பலரையும் கவர்ந்தது. சிறந்த படிமக்கவிதை என்று சூரியன் சிங்கராசன் எழுதினான். பரசுராமன் என்ற சொல்லின் அர்த்தமாக நான் மாறி விட்டேனாம். புராண காலப் பரசுராமன் கையில் கோடரியைக் கொண்டு திரிந்தது போல நான் பேனாவை ஆயுதமாகத் தரித்திருப்பதாக சூரி குறிப்பிட்டான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”
தலையைச் சொறிந்தான் மூர்த்தி.
“நான் சகல அநீதிகளுக்கும் எதிராகக் குரல் கொடுக்கிறவன். எதற்கும் சமரசப்படாதவன்…”
“தம்பீ…”
தயக்கத்தோடு கூப்பிட்டான்
“என்ன?”
“அப்பா …”
“நான் என்ன செய்ய?”
சிலகணங்கள் யோசித்துவிட்டு மூர்த்தி சொன்னான்.
“தம்பி, அப்பா வெளிநாட்டுக்கு என்னை அனுப்பி வைக்கிறதாகச் சொல்லி ஒன்றரை இலட்சம் ரூபா வாங்கினவர்.
“வாற எட்டாந் திகதியோடை ஒரு வருஷம் முடியப் போகுது. எனக்கு நம்பிக்கை விட்டுப்…”
சட்டென்று குறுக்கிட்டான் பரசுராமன்.
“பாருங்க… இது அப்பாவுக்கும் உங்களுக்குமான தனிப்பட்ட விஷயம். இதை என்னோடை பேச வேண்டாம்…”
சொல்லி வைத்தாற் போல உள்ளே வந்த கிருஷ்ணமூர்த்தி, வெறித்தபடி நின்ற மூர்த்தியை எரிச்சலோடு நோக்கினான். பிறகு பரசுராமனின் பக்கம் திரும்பினான்.
“பரசு, என்ன இங்கை நடக்குது?”
வெறுப்போடு, “அவரைக் கேளுங்க…” என்றான் பரசுராமன். கண்கள் சிவந்திருந்தன.
“இல்லை … சொல்லு…”
“உங்களோடை உள்ள தனிப்பட்ட கொடுக்கல் வாங்கலைப் பற்றிக் கதைக்கிறார். அதுதான் அதைப்பற்றி என்னோடை கதைக்க வேணாமென்றனான்…”
“அது சரிதான்”
மூர்த்தியின் உடல் ஆடிற்று. அக்காவின் கண்ணீர் நெஞ்சை நனைத்தது. இரத்தம் சூடேறிற்று.
“ஐயா, எல்லாம் ஒரு முடிவுக்கு வரட்டும். மன்றாட்டமாகக் கேட்கிறன். நான் தந்த காசைத் தாருங்க. என்ரை வாழ்க்கை நாசமாகப் போச்சுது…”
கிருஷ்ணமூர்த்தி தீர்மானமாக அவனைப் பார்த்தான்.
“என்ன காசு நான் உனக்குத் தர வேணும்?”
அதிர்ந்து போனான் மூர்த்தி. உடல் நடுங்கி வியர்த்தது. கண்கள் மங்கினாற் போல உணர்ந்தான். கைகளைப் பொத்தித் தன்னைச் சமப்படுத்தினான். உதடுகள் துடித்தன.
“ஒரு லட்சம்… வெளிநாடு போக… நான்….?”
கிருஷ்ணமூர்த்தி அலட்சியமாகச் சிரித்தான்:
“ஒரு லட்சமோ? யாரிட்டை, எப்போ… சாட்சி இருக்குதோ… எழுத்திலை இருக்குதோ?”
மூர்த்தி துண்டு துண்டாக உடைந்து போனான். உடைந்த துண்டுகள் சட்டென ஒட்டிக் கொண்டன. கோபம் இரத்த ரூபமாய்ப் பெருக்கிற்று. அக்காவின் ஆபரணங்களற்ற தோற்றம், விம்முங்குரல்….
“என்னடா சொன்னனி?”
கிருஷ்ணமூர்த்தியின் சேர்ட் கொலரை இறுகப் பிடித்து உலுக்கினான்.
“டே பரசு இங்கை வாடா… இவனை அடியடா…”
மிருகமாகப் பாய்ந்தான் பரசுராமன். மூர்த்தியை உருட்டி எடுத்தான். காலால் மிதித்தான். காறி உமிழ்ந்தான்.
“இந்தப் பக்கம் இனி வராதை….”
இரவிரவாக யோசித்தபடி இருந்தான் மூர்த்தி. அக்காவின் விசும்பல் நெஞ்சைப் பிய்த்தது. உடல்வலி, மனவேதனையை அழுத்தி மிதித்தது. உறுதியான முடிவுக்கு வந்தான். இரகசியப் பொலிஸாருக்கு கடிதத்தினை எழுதி, கிருஷ்ணமூர்த்தியின் வீட்டு விலாசத்தை தெளிவாகக் குறிப்பிட்டான்.
இன்ரநெட்டில் பரசுராமனைப் பற்றிய விவரங்களை சூரியன் சிங்கராசன் வெளியிட்டான். பொலிஸ் தடுப்பிலிருந்து வெளியே வந்த பரசுராமனின் பேட்டிகள் பத்திரிகையில் வெளியாகின. அவன் பொருட்டு படிமக் கவிதைகள் எழுதப்பட்டன. திடீரென்று பரசுராமன் ஹங்கேரியில் பல்கலைக்கழக ஆய்வு மையத்தில் பணியேற்றதாகச் செய்தி வெளியாயிற்று. அதே பக்கத்தில் ஆறுவரிச் செய்தி: செல்வதி என்ற பெண்ணும் (48) அவளது சகோதரன் மூர்த்தியும் (26) நஞ்சருந்தி மரணம். காரணம் தெரியவில்லை. புலன் விசாரணை தொடர்கிறது.
– விநோதினி (பதினொரு சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2000, விண்மீன் பப்ளிகேஷன், கொழும்பு.