மூங்கிலிலை மேலே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 6,687 
 
 

மாலை வேளை. கவிச் சக்கரவர்த்தியாகிய கம்பர் மாலையில் வீசும் தண்ணிய தென்றலின் இனிமை யையும், அந்தி வானத்தின் அழகையும், இயற்கைத் தேவி தன்னுடைய குழந்தைகளுக்கு ஓய்வு கொடுத்துத் தாலாட்டும் கங்குற் கன்னியை வரவேற்கும் கோலத் தையும் பார்த்து மகிழப் புறப்பட்டார். வயலோரங் களில் சோலை படர்ந்த நிலப்பரப்பிலே தம்முடைய கண் பார்வையை விரியவிட்டுப் பார்த்துக்கொண்டே சென்றார்.

அவர் காதில் கணீரென்று ஒரு தமிழ்ப் பாட்டு விழுந்தது. வயல் பக்கத்திலிருந்து வந்த அந்த இன் னோசையைத் தொடர்ந்து அங்கே சென்றார். வயலுக்கு இருவர் ஏற்றத்தால் நீர் இறைத்துக்கொண்டிருந் தார்கள். ஏற்றக்காரன் அந்தக் குளிர்ந்த வேளையில் ஸ்வரம் ஏறிய தொண்டையோடும், வீட்டுக்குப் போக வேண்டும் என்ற உற்சாகத்தோடும் பாடிய பாட்டுத் தான் கம்பரை அங்கே இழுத்துச் சென்றது. காவிரி பல கரல்களில் ஓடி வயல் வளம் பெருக்கும் சோழ நாட்டிலே இந்த ஏற்றக் காட்சிகளை அவர் அதிகமாகப் பார்த்ததில்லை. இது பாண்டி நாடு. ஏற்றத்தின் எழிலைக் கண்டு களித்ததோடு ஏற்றக்காரன் பாட்டிலே தம் மனம் செல்ல அங்கே நின்றார். இலக்கியப் பூம் பொய்கையிலே ஒருதனியே ஓங்கிய தாமரை மலரைப் போன்ற காவிய ரத்தினத்தை உலகுக்கு அளித்த அந்தக் கவிப் பெருமான், வாழ்க்கையோடு ஒட்டி வரும்

ஏற்றக்காரனுடைய எளிய பாடலைக் காதுகொடுத்துக் கேட்கலானார்.

அந்த மாலை வேளையில் ஏற்றக்காரன் காலைக் காட்சியை வருணிக்கும் ஒரு பாட்டைப் பாடிக்கொண் டிருந்தான்.

“மூங்கிலிலை மேலே”

என்று அவன் அந்தப் பகுதியை ஆரம்பித்தான். இயற்கை எழிலின் கவர்ச்சியை முற்றும் உணர்ந்த கம்பர் இயற்கையோடு கலந்து மகிழ்ந்து தொழில் புரிந்து ஆடிப் பாடும் அந்த மக்களின் இயல்பையும் நன்கு உணர்ந்தவர். கற்பனையும் அலங்காரமும் செறிந்த கவிதையை அங்கே அவர் எதிர்பார்க்கவில்லை. குழந்தையின் மழலைப் பேச்சைப்போல மழலைப் பரு வத்தில் அமைந்த பாட்டைத்தான் அவர் எதிர்பார்த் தார். அதுதான் அங்கே எழுந்தது.

வானை அளாவிய மூங்கில், அதன் இலை, இரண் டையும் அந்தச் சிறிய அடி – அரை அடி – கம்பர் கருத் திலே நட்டுவிட்டது. அவர்தாம் கருத்தினால் உலகை அளப்பவர் ஆயிற்றே!

“மூங்கிலிலை மேலே தூங்கு பனி நீரே”

என்று ஏற்றக்காரன் அடி முழுவதையும் சொன் னான். அந்த அடியில் ஓர் அழகிய சித்திரம் பூர்த்தி யாயிற்று.

விடியற்காலையில் ஓங்கி உயர்ந்த மூங்கிலின் நீண்ட இலைத் தொட்டிலிலே ஒரு சிறு பனித் துளி தூங்கு கின்றது!* என்ன அழகான இயற்கை!

மேல் காயாம்பூப் பூத்தாற்போலத் தனி கிடக்கும் கண்ணன் திருவழகைப் புலவர்களெல்லாம் பாராட்டுகிறார்கள். அந்தப் பாடல்களின் நயத்தை அறிஞர்கள் சுவைத்துச் சுவைத்து மகிழ்கிறார்கள். இங்கே ஒரு தோப்பிலே தனித்து ஓங்கி நின்ற மூங்கிலின் மேலே ஓர் இலையில் அந்தக் கண்ணனைப்போலத் தூங்குகின்ற பனிநீரை ஏற்றக்காரன் பாட்டு, சிறிய சொற்களாலே சித்திரிக்க, அந்தச் சித்திரம் கம்பருடைய உள்ளக் கிழியிலே நன்றாகப் பதிந்துவிட்டது.

அந்த அடியை மீட்டும் நினைந்து மகிழ்ந்தார். அப்படி மகிழ்வதற்கு அவகாசம் கொடுத்தான் ஏற்றக்காரன். அவன் அந்த அடியைத் திருப்பித் திருப்பிப் பல முறை பாடினான். நடுவிலே ஏற்றச் சாலின் கணக்கைச் சொன்னான். ‘சவுக்க காலத்திலே’ அவனுடைய சங்கீதம் தவழ்ந்ததால் கம்பர் ஒவ்வொரு சொல்லாகச் சுவைத்துப் பார்க்க முடிந்தது. ஆனாலும் ‘அடுத்தபடி என்ன வரப்போகிறது?’ என்ற ஆவலும் அவருடைய உள்ளத்தில் ஒரு வேகத்தை எழுப்பியது. பெரும் புதையலுக்கு முன்னே ஒரு பேராசைக்காரனை விட்டால் கை கொண்ட மட்டும் வாரிக்கொள்ள ஓடுவானே, அப்படித் துடித்தது அவர் உள்ளம். ஏற்றக்காரனோ நின்று, நிதானமாகச் சங்கதி போடாமலே பாட்டைத் திருப்பித் திருப்பிச் சொன்னான். ‘அடுத்த அடி எப்பொழுது வரப்போகிறதோ?’ என்று ஏங்கி நின்றார் கம்பர். ‘ஒருகால் இவனுக்குத் தெரியவே தெரியாதோ! பாட்டு இவ்வளவோடு முடிந்து போகிறதோ?’ என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்த கம்பரைக் கிள்ளி உணர்ச்சி வரச் செய்தது ஏற்றக்காரனுடைய குரல். அவன் அடுத்த அடியைப் பாடினான்:

“மூங்கிலிலை மேலே தூங்கு பனி நீரே! தூங்கு பனி நீரை…”

பாட்டு மடங்கி வந்தது. தமிழ்ப் பாடல்களிலே இந்த அடி மடக்கு மிகவும் இயற்கையானது. யாப்பிலக் கணங்களிலேஇதற்கு இலக்கணம் இருக்கிறது. இசைப் பாட்டுக்களுக்குரிய இதைக் கந்தர்வ மார்க்கம் என்று சொல்லுவார்கள்.

கம்பருடைய ஞாபகம் ஒரு கணம் பண்டைத் தமிழ்க் கவிதைப் பரப்பிலுள்ள கந்தர்வ மார்க்கத்திலே சென்றது. நாடோடியாக வழங்கும் இந்த ஜீவனுள்ள பாடல்களிலிருந்துதான் பண்பட்ட கவிஞர்கள் பல விஷயங்களை எடுத்துக்கொண் டிருக்கிறார்கள் என்று தோன்றியது. கவிதையுலகின் பிள்ளைப் பிராயமும் சங்கீத உலகின் தொட்டிற் பருவமும் ஏற்றப் பாட் டிலே, நாடோடிப் பாடல்களிலே, தொடங்கியிருக்க வேண்டும் என்ற உண்மையைச் சிந்தித்தார். இந்த ஆராய்ச்சி மின்னல்போல அவர் உள்ளத்தில் ஓடியது; அவ்வளவுதான்.

மீட்டும் ஏற்றக்காரன் பாட்டின் சுருதியிலே உள்ளம் லயித்தது.

“மூங்கிலிலை மேலே தூங்கு பனிநீரே”

என்ற ஒற்றை அடியிலே முடிந்திருந்த சிறிய சித்தி ரத்தை அதோடு முடித்துவிடாமல் மேலும் விரிக்கத் தொடங்கிய அந்த அரையடியைக் கேட்டார் கம்பர்.

“தூங்கு பனிநீரை”

இவ்வளவு அழகிய ஓவியத்தைப் பின்னும் விரித்து அமைக்கும் சித்திரம், அழகிலும் விரிந்துதானே இருக்க வேண்டும்? ஏற்றக்காரன் அந்த அரை அடியைத்தான் சொன்னானே ஒழிய அதை லேசில் முடிப்பவனாக இல்லை. சுகமாகத் தூங்கிக்கொண் டிருந்த பனி நீரை அங்கிருந்து எடுத்து அந்தரத்திலே விட்டுவிட்டால், அந்தப் பனி நீருக்கு உயிர் இருந்தால், அது எப்படித் துடிக்கும்?-கம்பர் உள்ளம் அப்படித்தான் துடித்தது. ‘பனி நீரை, பனி நீரை’ – ‘அடுத்தபடி என்ன?’ இந்தக் கேள்விக்கு விடையை அவர் கவனத்தோடு எதிர்பார்த்தார்; ஏமாந்து போனார். ஏற்றக்காரன் அன்றைக்கு ஏற்றத்தை நிறுத்தி வீட்டுக்குப் புறப்பட்டு விட்டான். பனிநீரை அந்தரத்திலே விட்டுவிட்டுக் கம்பரின் உள்ளத்தில் ஒரு கிளர்ச்சியையும் புகுத்தி விட்டு அவன் போய்விட்டான்.

‘பாட்டு எப்படி முடியும்? மூங்கில் இலைமேலே தூங்கு பனி நீரை யார் பார்த்தார்கள்? சோலைக் குயில் வந்து குடித்ததா? மழலை வண்டு வந்து பார்த்ததா?’ -என்ன என்னவோ நினைத்துப் பார்த்தார். அப்படியே நெடு நேரம் நின்று சிந்தித்தார். ஏற்றக்காரன் போட்ட முடிச்சு அவிழ்கிறதாகக் காணவில்லை.

தம் இருப்பிடம் சென்றார். இரவு முழுவதும் அவருக்குத் தூக்கம் இல்லை. தூங்கு பனி நீரின் மேல் உள்ளம் படரத் தூங்காத இரவாக அது முடிந்தது. அந்தப் பாட்டின் சித்திரம் மூளியாக நிற்க, அதை வண்ணமிட்டு நிறைவுறுத்த வழியில்லாமல் அவர் உள்ளங் குலைந்து அலந்துபோனார். ‘எப்பொழுது விடியும்!’ என்று இராப் பொழுதைக் கழித்தார்.

விடிந்தது! அவர் குறை நீங்குமா? விரைவாக எழுந்து வயல் வெளிக்குப் போனார்; ஓடினாரென்று சொன்னாலும் பிழையில்லை. நல்ல வேளை: ஏற்றப் பாவலன் அப்பொழுதுதான் வந்திருந்தான். அவனு டைய சங்கீதம் இன்னும் ஆரம்பமாகவில்லை. அவன் சாலைப் பூட்டி ஏற்ற வீணையை மீட்டத் தொடங்கும் அந்தக் குறுகிய காலத்துக்குள் அவர் உள்ளம் பட்ட பாட்டைத் ‘தாளம் படுமோ; தறி படுமோ!’

ஏற்றக்காரன் சம்பிரதாயமாக,

“பிள்ளையாரே வாரீர் பெருமாளே வாரீர்”

என்று விநாயக வணக்கத்திலிருந்து தொடங்கி னான்; இந்தத் தெய்வங்களையெல்லாம் யார் இப் போது வேண்டினார்கள்!’ என்று கம்பர் சொல்லிக் கொண்டார். சில நாழிகை பூர்வ பீடிகை ஆயிற்று. ‘நேற்றுப் பாடின பாட்டையே பாடுவானோ மாட் டானோ!’என்ற பயம் வேறு கம்பருக்கு உண்டா யிற்று.நல்ல வேளையாக ஏற்றக்காரன் தயை காட் டினான்;மீட்டும் மூங்கிலிலையைப் பாட ஆரம்பித்தான்.

“மூங்கிலிலை மேலே தூங்குபனி நீரை!”

‘அட பாவமே! இதை எத்தனை தடவை சொல்வது? இதைக் கேட்டுக் கேட்டுத்தான் புளித்துப் போயிற்றே! மேலே பாடி முடியப்பா பெருமானே!’ என்று கம்பர் தம் கருத்தினால் ஏற்றக்காரனைப் பிரார்த் தித்துக்கொண்டார்.

“தூங்கு பனி நீரை”

என்று வந்தது பாட்டு. இதுவும் பழையதுதான். மேலே சொல்லப்பா சொல்.’-கம்பர் மனசினாலே கெஞ்சுகிறார்.

“தூங்கு பனி நீரை”

‘ஹா’ என்று ஏங்கிப்போய் எல்லாப் புலன்களையும் காதிலே வைத்துக்கொண்டு நின்றார் கம்பர். அவர் காதிலே ஜில்லென்று விழுந்தது பாட்டு:

“தூங்கு பனி நீரை வாங்குகதி ரோனே!”

கம்பர் துள்ளிக் குதித்தார். ‘விடிந்து விட்டது. சூரியோதயம் ஆகிவிட்டது. என்ன பாட்டு! என்ன சித்திரம்! ஒரு சிறு துளிககு முன்னே உலகைத் தன் கதிர்க்கிரணங்களால் அளக்கும் சூரியன்! அவன் தூங் கும் பனி நீரை வாங்கிவிட்டான்! இந்தக் கருத்து ராத் திரி முழுதும் தலை வலிக்கச் சிந்தித்தும் நமக்குத் தட் டுப்படவில்லையே! “அறிதோ றறியாமை கண்டற்றால்” என்று வள்ளுவர் சொல்வது எவ்வளவு உண்மை!’ கம்பர் மனம் இப்படி யெல்லாம் சிந்தித்தது. மூங்கி லிலையும் பனித்துளியும் அதை வாங்கும் கதிரோனும் அவர் உள்ளத்தைத் தண்மைசெய்து ஒளிபரப்பி மலரச் செய்தன. பாட்டு முழுவதையும் பலமுறை சொல்லிச் சொல்லி இன்புற்றார். அதன் சுவையில் திளைத்தார்.

“மூங்கிலிலை மேலே தூங்குபனி நீரே தூங்குபனி நீரை வாங்குகதி ரோனே!”

ஏற்றக்காரன் தொடர்ந்து வேறு எதையோ பாட ஆரம்பித்தான்.

கம்பர் அந்த இரண்டடியையே நினைந்து நினைந்து மகிழ்ந்தார். அந்த நாட்டிலே மேலே பிரயாணம் செய்ய எண்ணியவரானாலும், தம் கருத்துக்கு எட்டாத இயற்கைப் பாட்டைக் கேட்டு, ஏற்றக்காரன் முன் தம் சிறுமையை உணர்ந்தவரைப் போன்ற உணர்ச்சி ஏற் பட்டதாம்.அதனால் அவர் அப்படியே திரும்பிவிட் டாராம். இந்தக் காரணத்தால் அவ்வூருக்கு “மீள விட்டான்” என்ற பெயர் வழங்கத் தொடங்கியதாம்.

கதை எப்படி யிருந்தாலும், ‘மூங்கிலிலை மேலே’ என்ற அந்தச் சிறு துணுக்கு ஒரு பெரிய கவிஞரையும் கவரும் கவிதைச் சுவை பொருந்தியது என்ற உண்மை கதையினுள்ளே பொதிந்திருப்பதை நாம் அறிந்தால் போதும்; “ஏற்றப் பாட்டுக்கு எதிர்ப்பாட்டில்லை” என்ற பழமொழியின் பொருளும் ஓரளவு நமக்கு அர்த் தமாகிவிடும்.

நன்றி: http://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *