சின்னப்பையனாக நான் இருபது வருஷங்களுக்கு முன்னர் பார்த்தபடியான கோலத்தில் இன்னமும் மாறாமல் அப்பிடியேதான் இருக்கிறார் அவர். ஆனாலும் அவருக்கு எப்படியும் ஐம்பதைத் தாண்டிய அகவைகளாகதாகத்தான் இருக்கும். அவரும் தன்னுடைய அகவைகள் பற்றிக் கதைப்பதை அடியோடு வெறுத்தார். விஷயம் புரியாமல் எவராவது அவர் வயதைப்பற்றிக் கேட்டுவிட்டால் தமாஷ்போலவும் நிஜம்போலவும்
“பர்த் சேர்டிஃபிகேட் கிடையாதுங்க என்னவொரு முப்பத்தியொம்பதோ நாற்பத்தோ இருக்கும்” என்றுவிட்டு அவ்விஷயத்துக்கு ஆணி வைத்துவிடுவார். சிலர் விடாமல்
“நீங்கள் சொல்றது ஒண்ணும் பெரிய முப்பதொன்பது இல்லைத்தானே?” என்பார்கள்.
“பெரிசுன்னா…?”
“நூத்தி… முப்பத்தி… ஒன்பது.”
அப்போது சிரிப்பார். கறுத்து மெலிந்த வலிச்சல் தேகம். வலதுகண்ணின் பார்வையை இளவயதில் வந்த அம்மை எடுத்துச் சென்றுவிட்டதாம். அந்தக் கண்ணின் மணியும் வெண்விழியும் பேதமற்று சாம்பல்நிறத்தில் இருக்கும். இன்னும் ஓம்பூரியின் முகத்தைப்போல கன்னக்கதுப்புகளிலும் கொஞ்சம் அம்மைவிட்டுச்சென்ற மறுக்கள். தாடி எதுவும் வைப்பதில்லை. எப்போதும் அரிமொட்டையாக வெட்டப்பட்டிருக்கும் தலைமுடி உப்பையும் மிளகையும் கலந்துவிட்டது போலிருக்கும். வேணுமென்றால் இப்போதைக்கு முன்னரைவிடவும் உப்பின் விகிதம் சற்றே அதிகம் எனலாம்.
பிறந்தது கோடைக்கானல். இயற்பெயர் மொஹமது நஸீர் . தொழில் மூலம் பௌந்திரம் அன்ன நேர்குடல் வியாதிகளுக்கு வைத்தியம். ஊரில் எல்லோரும் அவரை ‘வைத்தியம்’ என்றுதான் சொல்லுவோம். காலிபையன்களில் சிலர் ‘வாத்யம்’ என்று சொல்வதும் அவருக்குத் தெரியும். ஆனாலும் அதையெல்லாம் பெரிசுபண்ண மாட்டார்.
எழுபதுகளில் குமுதம் வாராந்தி ‘நல்லாய்த்தான் சொன்னார் முல்லா நஸுருதீன்’ என்றொரு சிறிய இதழை போனஸாக வெளியிட்டது. அதற்கு சுதர்ஸன் போட்டிருந்த முல்லா நஸுருத்தீனின் படம் அசலாக வைத்தியரை நகல் எடுத்ததுபோலிருக்கவே அதை எடுத்துப்போய் அவரிடம் காட்டினேன். பார்த்துவிட்டு விழுந்துவிழுந்து சிரித்தார். ஒரு காலத்தில் நிறையச் சினிமாப் படங்களும் பார்த்திருக்கவேண்டும். கலைவாணரின் நகைச்சுவைகளை வியந்து எங்களுக்கெல்லாம் சொல்லிச் சொல்லிச் சிரிப்பார். இன்னும் சந்திரபாபுவையும் பிடிக்கும்.
எங்கள் ஊரில் இருந்த ஒரே இஸ்லாமியர் அவர்தான். தவறாத ஐந்து நேரத்தொழுகை ஈமான் அனைத்தும் உண்டு, இருந்தும் ஏழையோ வசதியானவனோ எவன் முதலில் பணத்தைத் தூக்கிகொட்டுகிறானோ அவனுக்கு அவளுக்குத்தான் சீக்கிரத்தில் வியாதியையும் குணமாக்கிவிடுவார். நோயாளி எவராயினும் பணத்தை முதலில் வாங்கிப்பெட்டியுள் வைத்து விட்டுத்தான் வைத்தியத்தையும் ஆரம்பிப்பார். இத்தனை நாள் வைத்தியத்தில் இந்த நோய்குணமாகுமென்று அவர் அனுமானிக்கிறபடி அவர் அறவிடும் சலார்களில் ஏழை பாழை ஆண்டான் பக்கிரி என்று சலுகைகள் எதுவும் கிடையாது. இத்தனைக்கும் அவரே சிறுவயதில் பசிக்கொடுமை தாளாது வீட்டைவிட்டு ஓடியவர்தான், இருந்தும் “சார் கொஞ்சம் தொகையைக் கம்மி பண்ணமுடியுமா?” என்றோ அல்லது “சுகமானதும் ஊருக்குப்போய் மீதியை அனுப்பிவிடுகிறேனே” என்பதுபோன்ற கதைகள் எதுவும் வைத்தியரிடம் எடுபடாது. வேறெங்காவது பார்த்தபடி “நமக்கும் வெலை ஜாஸ்தியான மருந்துச்சரக்கெல்லாம் வாங்கணுங்க. நீங்க துட்ட மொதல்ல கொடுத்தீங்கென்னாத்தான் உங்களுக்கு வைத்தியம் சாத்தியம்” என்று பேசிப் பணத்தை வாங்கிடுவார். இன்னும் மனுஷன் எவரிடாமாவது கொஞ்சம் கூடுதலாகக் கறக்க எண்ணிவிட்டாலும் அவரது தொகை வந்துசேரும் வரையில் உரிய வைத்தியத்தைப்பாராது இழுத்தடிப்பதுவும் உண்டு. பணமென்கிற விஷயத்தில் மட்டும் பெம்மானைச் சமாதானப்படுத்த ஈமான், அறம், சீலம், நீதி , மானுஷம் என ஏவப்படும் எந்த அஸ்திரமும் தோற்றுத்தான் விழும்.
ஒருமுறை அப்துல் ரஷாக் என்றொரு இளம் ஸ்கூல்வாத்தியார் செட்டிக்குளத்திலிருந்து (வன்னி) வைத்தியம் பார்க்க வந்திருந்தார். இரண்டு வாரங்களில் குணமாக்கிவிடுவதாகச்சொல்லி அவரிடம் வைத்தியத்தொகை இவர் அறுநூறு ரூபா கேட்டிருக்கவேணும்.
“இறுதிப்பரீட்ஷை நெருங்கிக்கிட்டிருக்கிற சமயம் சார். நான் ரொம்பநாள் லீவு எடுத்தேன்னா மாணவர்களுக்குச் சிரமமாயிடும்” என்று அவர் குழைய “அப்பிடீன்னா நம்ம ஃபீஸை ஆயிரமாய்க்கொடுத்துடுங்க ஒரு வாரத்தில அனுப்பிவைச்சுடுறேன்” என்று இவர் சொல்லவும் மனுஷனும் சம்மதிச்சுப் பணத்தைக் கொடுத்திருக்கிறார். மாயம்போலும் ஒரு வாரத்திலேயே நோய் குணமாகி அவர் புறப்படும்போது வைத்தியர் கைகளைப் பிடித்துக்கொண்டு “ ரொம்ப அதிகமா பணம் கேட்கிறீங்களேன்னு நான் ஆரம்பத்தில நெனைச்சது உண்மைதாங்க ஆனா மாஜிக் செஞ்சதுபோல இத்தனை சீக்கிரத்தில குணமாக்கிடுவீங்கனு நெனக்கல, உங்களுக்கு நீண்ட ஆயுஸை அல்லா அருளுவான் ” என்று உருகிய சம்பவங்களும் நடந்திருக்கிறது.
இரண்டு கைகளையும் தொழுவதுபோல ஏந்திப்பிடித்தபடி அவருக்கு “ இன்ஷா அல்லாஹ்…மா அஸ் ஸலாமா ” என்று விடை கொடுத்தார் வைத்தியம்.
நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது எங்களூருக்கு (புத்தூர்) சின்னப்பாவுக்கு (எங்கள் சின்னத்தாத்தா) வைத்தியம் பார்க்க மட்டுவிலில் இருந்து அடிக்கடி வந்துபோவார். அப்போதெல்லாம் Internal Hub Gearing வைத்த மிதியுந்துகள் அபூர்வம். அவரது கரும்பச்சை நிறத்திலான கியர் வைத்த சிங்கப்பூர் RALEIGH மிதியுந்து சிறுவர்களாகிய எங்களுக்குப் பெரும் அதிசயமாக இருக்கும். அவர் வந்ததும் அம்மிதியுந்தை வேடிக்கைபார்க்கச் சூழ்ந்துவிடுவோம்.
“பசங்களா தூரத்தேயிருந்து பார்ப்பதோடு மட்டும் நின்னுக்கணும், யாரும் சைக்கிளைத் தொடப்படாது…சரியா” என்று மூக்கில் விரலைவைத்து எச்சரித்துவிட்டு கிரியாவின் தமிழ்அகராதி அளவிலிருக்கும் ஆர்மிப்பச்சை மருந்துவப்பெட்டியைக் காரியரிலிருந்து கழட்டிக்கொண்டு நேரே சின்னப்பாவின் அறைக்குள்ளே “ ஸலாம் ” என்றபடி போவார். அவர் வைத்தியத்தை ஆரம்பித்ததும் சின்னப்பா வலிதாங்காது எழுப்பும் ‘அ ஆ………. உ ஊ… உஹுஹூ…..ஒஹொஹோ…. ஹொஹ்ஹொஹ்ஹோ’ சப்தங்கள் மாத்திரம் அங்கிருந்து கொஞ்சத்துக்கு வெளியில் வரும். அவை நின்றபின்னால் வைத்தியர் அவருடன் பேசுவது கேட்கும்.
“ நீர் உந்த சாராய எழவை விட்டுத்தொலையுமைய்யா .”
சின்னப்பாவின் ஜீவிதத்தில் அவர் சாராயத்தையும், மூலவியாதி அவரையும் விட்டுவிட்ட சரித்திர நிகழ்வுகள் எதுவும் நிகழவேயில்லை.
இந்திய வம்சாவளியினர் வெளியேற்றம் தொடர்பான ஸ்ரீமாவோ- சாஸ்திரி ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததும் வைத்தியரும் தானாவே எழுதிக்கொடுத்துக்கொண்டு நாட்டுக்குத் திரும்பினார். பின் ஒரு வருஷத்துக்குள்ளாக மீண்டும் ‘தோணி’ மூலம் திரும்பி யாழ்ப்பாணம் வந்தார்.
சின்னப்பாவின் வீட்டுக்கு எதிராக எங்கள் வீட்டுக்குப்பக்கத்தில் கடைக்காரச் செல்லப்பா என்கிற உள்ளூர் வணிகர் ஒருவர் தன் ஐந்து மகள்களுள் எவளுக்காவது சீதனம் கொடுப்பதற்காக கட்டிவைத்திருந்த வீடு ஒன்று காலியாக இருந்தது. சின்னப்பா அவ்வணிகருடன்பேசி வாடகையின்றியே அவ் வீட்டில் வைத்தியரைக் குடியேற்றவும் வைத்தியம் புத்தூரிலேயே தங்கிவிட்டார். அவ்வீட்டின் வாசலோடு தெருவில் நின்ற பூவரசமரத்தில் ‘இங்கு மூல நோய்க்கு வைத்தியம் பார்க்கப்படும்’ என்று சின்னதாக ஒரு அறிவிப்புப்பலகையும் தொங்கவிடப்பட்டது. மன்னார் மாந்தை மாதோட்டமீறாக வெளியூரிலிருந்து வரும் நோயாளிகள் தங்கி வைத்தியம் பார்த்துச் செல்வதற்கு அந்தப் பெரியவீடு மிகவும் உவப்பானதாகவும் இருந்தது.
ஒருவருக்கு மூலம் தக்காளிப்பழம் அளவுக்குத்தான் வீங்கிப் பருத்துப் பழுத்திருந்தாலும் எந்தச் சத்திரசிகிச்சைக்கும் அவசியமில்லாமல் தன் சஞ்சீவி மூலிகைகளால் ஒரு வாரத்திலேயே சுருங்கிக்காய்ந்து விழவைத்துச் சொஸ்தமாக்கிவிடும் மாயாவி அவர்.
எங்கள் ஊருக்கு குடிவந்தபின் வைத்தியம் ஊரில் ஆணோ பெண்ணோ, மூத்தவரோ இளையவரோ யாரைக்கண்டாலும் அனைவருக்கும் ‘ஸலாம்’ சொல்வார். இன்னும் எல்லோரையும் “ சகோதரம் ” என்றுதான் அழைப்பார். இரவுநேரங்களில் இரண்டு வீடு தள்ளிச் செல்வதானால்கூட ஒரு கையில் மின்சூழ்விளக்கு மறுகையில் ஒண்ணரை மீட்டர் நீளத்தில் ஒரு கேட்டியும் எடுத்துக்கொண்டு ஏதோ வேட்டைக்குப்போகிற மாதிரித்தான் புறப்பட்டுப்போவார். அத்தோடு மனுஷனுக்கு குழந்தைகளையும், நாய்களையும் பிடிக்காது. நாயை எங்குகண்டாலும் விரட்டி அடித்து அது கண்ணிலிருந்து மறைந்தபின்புதான் திரும்பிவருவார். இரவு நேரங்களில் அவர் எந்த வியாதியஸ்தரையும் பார்க்கச்செல்வதுமில்லை. தாங்கமுடியாத வலி கடுப்பு எரிச்சல் ஏற்பட்டால் அவர்களாக ஒரு வாடகைக்காரைப் பிடித்துக்கொண்டு வந்துவிடவேண்டியதுதான். மாதத்துக்கு இரண்டு பேர் வைத்தியம் பார்த்துகொள்ள வந்தாலேபோதும். மனுஷன் பிழைத்துக்கொண்டுவிடுவார்.
இன்னும் சாமனியர்களால் கைக்கொள்ளமுடியாத சில பழக்கங்கள் அவருக்கு. அவற்றுள் முதன்மையானது ஒரு நாளைக்கு ஒரு வேளைதான் சாப்பாடுவார். அதுபற்றிக்கேட்டால் ‘ சின்ன வயசில ஒருவேளை சாப்பாடுதான் கெடச்சுது, அதைப் பின்னால மாத்திக்கணும்னு எனக்குத்தோணல, அதுதான் ஆரோக்கியத்துக்கும் நல்லது’ என்பார். காலையில் ‘பயேது’ மட்டுந்தான். அது இல்லாவிட்டால் அவருக்கு எங்கெங்கே கறிமுல்லை , அகத்தி , முருங்கை, சண்டி, வாதநாராயணி மரங்கள் நிற்கின்றன என்பது தெரியும். அவற்றைப்பறித்து வருவார் அல்லது எங்களூர் தோட்டவெளிகளில் மட்டும் கிடைக்கும் ‘பயிரி’ என்று, கொடிவகையிலான மெலிந்த சிவத்த தண்டும் வட்டமான சிறிய இலைகளைக்கொண்ட சற்றுப்புளிப்பான சுவையுடைய தரையில் படரும் ஒரு வகைக்கீரையுண்டு அதையோ அல்லது தொய்யில், முளைக்கீரை, பசளிக்கீரை, பனங்கீரை, செங்கீரை, தயிர்வளை, மூக்கறையன், கரிசிலாங்கண்ணியையோ பிடுங்கிவருவார். அல்லது பற்றை புதர்களில் மண்டிக்கிடைக்கும் கொவ்வை, முசுட்டை, முசுமுசுக்கை, குறிஞ்சா, தூதுவளை இலைகளையெல்லாம் கொய்துவந்து ஒரு சிறங்கை அரிசிக்குறுணலோடு உப்பு, இஞ்சி, மிளகு, திப்பிலி, புளிசேர்த்து நீளமாய் ஒரு கஞ்சிவைத்து அதற்காகவே அவர் செதுக்கிவைத்திருக்கும் பெரிய தேங்காய்ச்சிரட்டையில் ஊற்றி இரண்டு மூன்று தடவைகள் குடிப்பார். இலைகள் கொடிகள் ஒன்றும் வாய்க்காதுபோனால் கொத்துமல்லியை அவித்துப் பனங்கட்டி அல்லது பனங்கல்கண்டுடன் குடிப்பார். காலை ஆகாரம் அவ்வளவுதான். அவர் தேனீர் , கோப்பியன்ன பானகங்கள் குடித்து யாரும் பார்த்ததில்லை.
காலில் மிதியடிகளை மாட்டிக்கொண்டு குறைந்தது மாதமொருமுறை மூலிகைகள் சேகரிப்பதற்காக ஊரிலுள்ள தோட்டவெளிகள், மந்துக்காடுகள், பற்றைகள், சேனைகள் எல்லாம் சுற்றி வருவார். கீழ்காய் நெல்லி, சாறணை, புளிமதுரை, நன்னாரி, சிறுதுளசியன்ன செடிகளோடு நமக்குப்பெயர் தெரியாத செடிகள் எல்லாம் பிடுங்கிவருவார். இன்னும் காடை, கௌதாரி, கானாங்கோழி, ஆட்காட்டிக்குருவி, மணிப்புறா, காட்டுக்கோழி முட்டைகளெல்லாம் சேகரித்து வருவதோடு கண்ணில்பட்ட சுண்டைக்காய், மணத்தக்காளி, வட்டுக்கத்தரி, குருவித்தலைப்பாகல், காத்தோட்டிக்காய், காளான் முளைகள் எல்லாம் கொண்டுவந்து சமைப்பார்.
காய்கறிகள், உருளைக்கிழங்கு, வெங்காயம் என்பவற்றை கடைகளிலோ அங்காடிகளிலோ போயெல்லாம் வாங்கிவிட மாட்டார். அச்சுவேலி தோப்பு ஈவினை பத்தமேனி சிறுப்பிட்டி என்று பல ஊர்களிலுமுள்ள தோட்டங்களுக்குச்சென்று நேரடியாகவே உற்பத்தியாளரிடம் சொற்ப விலைகொடுத்தே வாங்கிக்கொண்டுவிடுவார். இன்னும் அவருக்கு கொசுறாக கெக்கரி, வெங்காயப்பூ, வாழைப்பூ, பால்கோவா, வத்தகைப்பழம், வெள்ளரிப்பழம் என்று பருவகாலத்துக்குத்தக்கபடி ஏதாவது கிடைத்துவிடும். அநேகமாக அவரைத் தெரிந்த விவசாயிகள் அவரிடம் பணமே வாங்கிக் கொள்ளமாட்டார்கள். ஒருமுறை வைத்தியம் பார்க்கப்போன இடத்திலோ, அல்லது யாரோ ஒரு தோட்டக்காரரிடமிருந்தோ அவருக்கு ஒரு பெரிய கரணைக்கிழங்கு கிடைத்துவிட்டது. ஒருமாசத்துக்கும் மேலாக தினமும் கரணைக்கிழங்குக்குழம்பு, கரணைக்கிழங்குப்பொரியல், கரணைக்கிழங்குக்கூட்டு, கரணைக்கிழங்குத் துவையல் என்று ஜமாய்த்துத் தள்ளினார் மனுஷன். இலவசமாகத்தான் கிடைத்தாலும் புடோல், பூசணி, பீர்க்கை, உருளைக்கிழங்கு எதையும் தோல் சீவாமலேதான் சமைப்பார். ஏன் அப்பிடி என்றால் ‘தோல்லதானே சத்தெல்லாம்…அதைச் சீவிஎறிஞ்சுப்புட்டு பெறவு இன்னா மசித்துக்கு அதைத்திங்கோணும்’ என்பார்.
இத்தனை எளிமையான சமையலுடன் ஜீவித்திருந்தாலும் வெள்ளி திங்கட் கிழமைகளிலும், கந்தசஷ்டியன்ன விரதகாலங்களிலும், நல்லூர் முருகன், சன்னிதிவேலன் , மாவைக்கந்தன், இணுவில்பிள்ளையார், தெல்லிப்பளை துர்க்கையம்மனின் திருவிழாக்காலங்களிலும் மீன்கள் சந்தைகளில் சீண்டுவாரற்றுக் குவிந்துபோயிருக்கும். அக்காலங்களில்தான் வைத்தியர் சுறா, விளை, வாளை, கும்பிளா, அதள், மணலை, வன்சூரன், பாரையென நல்ல மீன்வகைகள் வாங்கிவந்து பொரியல், குழம்பு, சொதி, புரட்டலென்று ஜமாய்ப்பார்.
இன சகோதரத்துவமோ, பிழைக்கவந்த அயல்நாட்டவர் என்கிற அனுதாபமோ இவருக்கு வாரத்தில் ஒருதடவை சாவகச்சேரி இறைச்சிக்கடைக்காரர்களும், யாழ்ப்பாணம் இறைச்சிக் கடைக்காரர்களும் ஆடு அல்லது மாட்டின் தலைக்கறி, மூளை, லேசாக இறைச்சி ஒட்டிக்கொண்டிருக்கும் விலாஎலும்புகள், வால், சிறுதுண்டு ஈரலோடு, “ காக்கா போதும் ” என்று அவரே சொல்லுமளவுக்கு குடலும் இலவசமாகக் கொடுப்பார்கள்.
அவற்றை வாங்கிவந்து சமைத்து மாலைத்தொழுகையின் பின் ஒருகையைத் தரையிலூன்றி முன்சாய்ந்து அமர்ந்து இரசித்துச் சாப்பிடுவார். சாப்பாடானதும் ஒரு சிகெரெட்டைப் பற்றவைத்து அனுபவித்துப் புகைத்துவிட்டு முற்றத்து வேம்பு விருக்ஷம் பகல் வெய்யிலால் காங்கையேறாது காத்த அவரது வீட்டு விறாந்தையின் குளிர்ச்சியான சீமெந்துத்தரையில் புற்பாயும் அதற்குமேல் கித்தானைப்போலிருக்கும் கதர்விரிப்பொன்றையும் விரித்துத் தூங்குவார். இன்னும் அவர் தலைமாட்டில் எப்போதும் ஒரு மின்சூழ்விளக்கும், சொம்பில் தண்ணீரும் இருக்கும். தனது சமையல் பர்மிய மருத்துவ சமையல்பாணி என்றும் தனது இறைச்சிக்கறியை பல்லுமுளைக்காத குழந்தைகூட மென்று தின்றுவிடும் அத்தனை மென்மையாக இருக்கும் என்றும் அடிக்கடி சொல்வார். எனினும் அவரது சமையலை அயலில் உள்ளவர் எவராவது என்றாவது மென்று பார்த்ததாகத் தெரியவில்லை.
வைத்தியர் எப்போதும் மாலையில்தான் சமையல் செய்வார். சமையல் நேரத்துக்கே முடிந்துவிட்ட நாட்களில் எங்கள் வீட்டுக்கோ அல்லது அயலில் தனக்குப்பிடித்த வேறு எவராவது வீடுகளுக்கோ போய்க் கொஞ்ச நேரம் கதைச்சுக்கொண்டிருப்பார். அம்மா எப்போதும் அவரிடம் அவர் குடும்பம் பிள்ளைகள் பற்றித்தான் விசாரிப்பார்.
“எனக்கு ஒரு பெண்ணும் மூணு பசங்களுமுங்க. பொண்ணைக் கட்டிக்கொடுத்துட்டேன். பசங்களுக்கும் கண்ணாலம் இந்த ஆண்டோ அடுத்த ஆண்டோ ஆயிடும். ஆயிடிச்சுன்னா ஒருவாட்டி மெக்கா மண்ணை மிதிச்சுடணும்னு ஒரு சின்னக்கனவிருக்கு. நான் சும்மா ஆசைப்பட்டாப்போதுங்களா, எல்லாம் அந்த அல்லாஹ் இஷ்டப்பட்டா அவனே அழைச்சுக்கமாட்டானா நான் எதுக்கு அலட்டிக்கணும்” என்பார்.
இப்படியாக எங்கள் வீட்டில் பேசிக்கொண்டிருந்த ஒரு வேளையில் மிதியுந்துகள் பற்றிய கதைகள் வந்தது. அப்போது தனது அதிசய மிதியுந்து பற்றி வைத்தியரே எமக்குச் சொன்னது:
“ அது வைத்தியர் மீசாலையில் ஒருசிங்கப்பூர் பென்ஷனர் ஒருவரோட நீண்டகால மூலவலியை முற்றாகக் குணப்படுத்திய சமயம். “நான் உமக்கு ஏதாவது பரிசுகொடுக்கணுமே…….. எதுவேணுமின்னாலும் கேளுமின்னாரு. நான் அவருக்கு வைத்தியம் செய்யப்போன நாளிலிருந்தே அவர் வீட்டில் நின்ற அந்த பைசிக்கிளைப் பார்த்து வைச்சிருந்தேன். அதன் பின் சக்கரத்தின் குடம் எதுக்கு இவ்வளோ பெரிசாயிருக்கின்னு யோசிச்சேனே தவிர அது கியர்ங்கிற சமாச்சாரமே அப்போ எனக்குத் தெரியாது.”
“இப்பிடி ஒரு பைசிக்கிள் முடிஞ்சா எனக்கும் எடுப்பிச்சுத்தாங்கன்னுதான் அவரைக்கேட்டேன்.”
“ ஒடனே அந்த வள்ளல் முடிஞ்சா என்ன முடிஞ்சா இதையே எடுத்துக்கும் உமக்குத்தான்னு தூக்கிக்கொடுத்தாரு.”
“அப்போ ரவைப்பெட்டி மாதிரியிருக்கும் அந்தப் பச்சை மருந்துப்பெட்டி? ” என்றதுக்கு சிரித்தார் நெடுநேரம். பின் நிறுத்திவிட்டு:
“அது திருகோணமலையில நான் இருந்தப்போ ஏதோவொரு யோசனையில பைசிக்கிளை மிதித்துக்கொண்டுபோனேனா அது அப்பிடியே சீனன்குடா ஆர்மிகாம்புக்குள்ளாற பூந்துடிச்சு. ‘ஹால்ட்…………ஹால்ட்’ என்று கத்திக்கொண்டு துப்பாக்கியையும் நீட்டியபடி பத்துப்பதினைந்து ஆர்மிக்காரங்க என்னைச் சூழ்ந்துட்டாங்க. ‘ஏதோ கவனப்பிசகா வந்துட்டனுங்க மன்னிச்சிடுங்க’ என்றேன். நம்பிட்டாங்க, இருந்தும் என்னைய உள்ளாறபிடிச்சிட்டுப்போய் அஞ்சாறு கோணத்துல படமெடுத்தாங்க. அவங்க படம் எடுக்கவும் சுடப்போறாங்களோ என்னமோன்னு மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாய்த்தான் போயிடிச்சு…… பார்த்தா அப்புறம் ‘போய்க்கோ’ன்னு விட்டிட்டாங்க. அப்போதான் அவங்க கான்ட்ரோல் றூமில இந்த ரவைப்பெட்டி இருந்ததைப்பார்த்தேன். அழகாயிருந்திச்சு. ‘சாரே……………… இதை நான் எடுத்துக்கவா’ என்னு அங்கே இருந்த ஆபீஸர்கிட்ட கேட்டேன். ‘சரி’ன்னு கொடுத்தாரு. அதுதான் இந்த மருந்துப்பெட்டி” என்று அவர் முடித்ததும் நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம். இப்படி ஒரு நுழைதல் ஈழப்போரின் காலத்தில் நடந்திருக்கவேணும் வைத்தியர் அங்கிருந்து மீளமுடிந்திருக்குமா சந்தேகந்தான்.
சின்னவயதில் குடும்பத்தின் வறுமை தாங்கமுடியாமல் வீட்டைவிட்டே ஓடி மட்ராஸ் போனது. பின் அத்தொடருந்தில் பர்மாவிலிருந்து விடுமுறைக்கு ஊருக்குவந்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த ஒரு வணிகரின் குடும்பம் தன்னையும் பர்மாவுக்கு அழைத்துப்போன சம்பவங்களை விபரிப்பாராயின் அது திருப்பங்களும் அதிசயங்களும் நிறைந்த ஒரு திரைச்சித்திரத்தின் கதையைப்போன்று சுவாரசியமாக இருக்கும்.
“எங்க நைனா ஊருக்குள்ளாற கூலிவேலைதான் செஞ்சுக்கிட்டிருந்தாரு. தெனமும் வேலை கெடைக்காது. வருமானம் மிச்சங்கம்மிங்க. நாங்க அஞ்சு புள்ளங்க. எனக்கு அப்போ ஒம்பது வயசு. வீட்டில பசிதாங்க முடியல. தினந்தினோம் கொலைப்பட்டினிதான். செலசமயங்களில சோத்தைப்பாத்தே வாரக்கணக்காயிடும், மாமா வீட்டுக்குப்போனா சாச்சி எதனாச்சும் திங்கக்கொடுப்பாதான். ஆனா வாப்பா அறிஞ்சாக் கொன்னு போட்டிடுவாரு. தினம் உம்மா எங்க பட்டினியைப்பார்த்து கண்ணீர் உகுப்பதும் கொடுமையா இருந்துச்சு. இங்கே இருந்தா இப்படியே செத்துப்போயிடுவோமோன்னும் பயமாயிடிச்சு. ஒருநாள் நேரா மாமாகிட்ட போயி ‘உம்மா துட்டு வாங்கி வரச்சொல்லிச்சி’ன்னேன். ‘எதுக்குடா துட்டுன்னாரு.’ ‘எதுக்கு அரிசி பருப்பு வாங்கத்தான்னேன்’. அஞ்சு ரூவா கொடுத்தாரு. நேரே ரயிலு ஸ்டேஸனுக்குப்போயி கவுண்டரிலை அந்தக்காசை வைச்சு ‘சாரு மெட்ராஸுக்கு டிக்கெட் கொடுங்க’ன்னேன். ‘மெட்ராஸில எங்கடா’ன்னாரு ஸ்டேசன் மாஸ்டரு. ’ ‘மெட்ராஸ் என்ன மூணா இருக்கு. நீங்க மெட்ராஸுக்குத்தான் டிக்கெட் கொடுங்க’ன்னேன். மறுபடி ‘ஆஃபா ஃபுல்லான்னாரு’ அந்த ஆளு. ‘அதெல்லாம் எனக்குத்தெரியா’தென்னேன். ‘ யாருடா டிராவெல் செஞ்சிறதுன்னாரு’ மறுபடியும். ‘ ஏன் நாந்தான்’னேன். ஏதோ ஒன்னு கொடுத்தாரு. அதை வாங்கிவெச்சுகிட்டு அடுத்து வாற மெட்ராஸ்வண்டி எதுன்னு வெசாரிச்சு ஏறி உக்காந்திட்டேன். அந்த பெட்டியில பயணம் செய்துக்கிட்டிருந்த ஒரு பணக்காரக் குடும்பம் சாப்பாட்டுவேளை வந்ததும் இட்லிப்பானை சைஸில ஒரு பெரீய்யபாத்திரத்தில கொண்டுவந்த பிரியாணியை எடுத்து வெச்சு சாப்பிட ஆரம்ப்பிச்சாங்க. என்னிடமும் ஒரு தட்டைக்கொடுத்து வேணுங்கிறத எடுத்துச் சாப்பிடச்சொன்னாங்க. எனக்கு கண்ணில தண்ணியே கொட்ட ஆரம்பிடிச்சு. நா விம்மி அழுதுகிட்டிருந்தப்போ என் கதையைக்கேட்டாங்க. பூரா சொல்லிப்புட்டேன். சாப்பாடானதும் எனக்கு ஆரஞ்ஜூஸெல்லாம் கொடுத்தாங்க. அன்னிக்குத்தான் மொதல்மொதலா நானு ஆரஞ்ஜூஸ் குடிக்கறேன்னா பாருங்களேன். அப்போ அந்த அம்மாதான் ‘அப்போ நீயும் எங்ககூட ரங்கூனுக்கு வந்திடுறியா’ன்னு கேட்டாங்க. தெனமும் கறி சாப்பாடும் ஆரஞ்ஜூஸும் தரேன்னாங்க. அப்போ எனக்கு ரங்கூன்னா அது வெளிநாடுங்கிற சமாச்சாரமோ அது எங்கிருக்குன்னோ தெரியாது. அப்போ சாப்பாடுதானே ஏண்ட மொதப்பிரச்சனை. ஒடன ‘சரி’ன்னுட்டேன். மெட்ராஸிலிருந்து ஸ்டீம் கப்பல்ல ஏறி நாலோ அஞ்சுநாள் பயணம் செஞ்சதா ஞாபகம்.
அவங்க அங்கே பெரீய வியாபாரிங்கன்னு அங்கேபோய்தான் தெரிஞ்சுக்கிட்டேன். அவங்களுக்கு அங்கே பெரீய்ய மொத்தவியாபாரஸ்தலம் இருந்துச்சு. அதுல வேலை செஞ்சுக்கிட்டிருந்த இருபது சிப்பந்திகளுக்கு சமைச்சுக்கிட்டிருந்தாரு ஒரு பர்மாகாராரு. ஆரம்பத்துல அவருக்கு நீ ஏதாவது ஒதவி பண்ணினா போதுன்னாங்க. அந்த சமையல்காரரு ஒரு தங்கமான மனுஷனுங்க………. என்னைத் தம்புள்ளைபோலவே பாவிச்சு சமையல் வேலை அனைத்துமே கத்துக்கொடுத்தாரு. அப்படியே சமையல்லயே நாலைந்து வருஷங்கழிச்சுதா…….. அந்த மொதலாளியோட சகோதரரு ஒருவரு சவுத்திரின்னு மூலவைத்தியம் பார்த்துக்கிட்டிருந்தாரு. அப்போ அவருக்கு தொட்டாட்டு வேலைக்கு ஒரு உதவியாள் தேவைப்படவும் என்னையத் தன்கூடக் கூட்டிக்கிட்டு போனாரு.
குருகுலவாசம் மாதிரி அவருடனே பத்துவருஷங்கள் வாழ்ந்த என் நடத்தையும் விசுவாசமும் பிடிச்சிட்டதால எனக்குத் தன் வைத்தியத்தையும் அவரே கத்துக் கொடுத்தாரு. அவருட்ட கத்துண்டது அவரது பிச்சைதான் இந்த வைத்தியம். ” வாலிபன் ஆனபின் கையில் கொஞ்சம் பணமும் சேமித்தானதும் பர்மாவிலிருந்தும் புறப்பட்டு மலேஷியா, சிங்கப்பூர் எல்லாம் சுற்றினாராம்.
அவர் போகும் அயல்வீடுகளில் கோப்பியோ தேநீரோ எது கொடுத்தாலும் குடிக்கமாட்டார். தன்னை நாம் வற்புறுத்தினால் தான் வருவதையே நிறுத்திக்கொண்டுவிடுவேன் என்று பதிலுக்கு எங்களை வெருட்டுவார். அதற்கு அவர் சொல்லும் காரணமும் விநோதமானது. “இன்னைக்கு இங்கே பால் சீனி எல்லாம் தாராளமாகப்போட்டு நீங்கள் தரும் கோப்பியை நான் குடிக்கிறேன்னு வையுங்க. நாளைக்கு அதே டைமுக்கு ஒடம்பு அதே காப்பியைக் கொடுடான்னு கேட்கும். காலுகள் தானாப்புறப்பட்டு இங்கே வரப்பாக்கும், இல்ல செல்லத்துரையர் (எங்கசித்தப்பா) வீட்டுக்கு போகுதுன்னு வைச்சுக்குங்க. யாருக்கும் நடக்கக்கூடியதுதான் அன்னைக்குன்னு அவங்களுக்கு கையிருப்பில காப்பி தேயிலைப்பொடி இல்லை தீர்ந்திடிச்சின்னும் வையுங்க. அட இந்த வைத்தியரும் வந்திருக்காரே நாம காப்பியோ டீயோ எதுவும் கொடுத்து உபசரிக்கமுடியலையே, தப்பாய் நினைச்சிடப்போறார்ன்னு அவங்களுக்கு மனசுக்கு கஷ்டமாயிருக்குமில்லையா…அல்லது எனக்காக அவங்களை இன்னொரு வீட்டுக்கு ஓடவும் வைக்குமில்லையா இதெல்லாம் தேவையா சொல்லுங்க ”
சில விஷயங்களில் அவருக்கு இருக்கும் கருத்துக்கள் மிகவும் பிடிவாதமானவை. எவராலும் மாற்றவே முடியாது. அவரது பழக்கங்களும் அப்பிடித்தான். தனது எந்தப் பொருளையும் எவருக்கும் இரவல் தரமாட்டார். அதுபோல எவ்வளவு கஷ்டம் வந்தாலும் எவரிடமும் இரவலோ கைமாற்றோ கேட்கவும் மாட்டார்.
மனுஷன் தினமும் பற்களைத் தேய்த்துக்கொள்வது வேண்டாத பழக்கம் என்பார்.
“ என்ன வைத்தியரே நீங்களே அப்பிடிச்சொல்லலாமா?” என்றால்
“ இந்த ஆடு மாடு குரங்கு கழுதை நாய் எல்லாம் என்ன தெனமும் பல் தேய்ச்சிட்டா இருக்கு?” என்பார். அதேபோல் முட்டாபசங்கள்லா இந்தக் காந்தியும் ஜின்னாவும், இவங்க அழிச்சாட்டியம் பண்ணி கொலைபட்டினி கிடந்து வெள்ளையனை வெரட்டி தேசத்துக்கு விடுதலை வாங்கிக்கொடுத்துட்டாங்களாம். அன்னிக்கே மனுஷனோட விடுதலை போயிடிச்சு’’ என்பார்.
“என்னா சாரே அப்பிடிசொல்லிட்டீங்க…………. அந்நியன் எங்களைக்கட்டி ஆண்டுக் கிட்டிருக்கிறதுதான் கௌரவமா? ” என்றால்
“ஏன் அவன் இன்னாய்யா குறைவைச்சான் நமக்கு?” என்றுபதில் கேள்வி போடுவார்.
“நீங்களெல்லாம் சின்னப்பசங்க புரியாமப்பேசறீங்க. அவன்டை காலத்துல பாஸ்போட் விஸா என்று எதுவுங்கிடையாது. டிக்கெட்டுக்கு பணமிருந்தால் போதும். நினைத்த மாத்திரத்தில் எவர்வேணுமின்னாலும் கப்பல்ல ஏறி சீமை சிங்கப்பூரு மலேஷியா பினாங்கு எங்க வேணுமினாலும் போயிடலாம். விரும்பினா அங்கங்கே சீவிக்கலாம். இல்லை சுத்திப்பாத்துட்டு வந்திடலாம். விஸா, போர்டரு செக்கிங்கினு எதுவும் இல்லையே…… இப்போ மக்களை பட்டி மாதிரியில்ல கட்டி வைச்சிருக்கான். இன்னா மசிரு சுதந்திரம் இது?”
நாங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் இருந்தால்தான் அவரைப்பேச வைக்கலாம்.
“மனுஷன் பயணங்கள் செய்து அவன் பாட்டுக்கு சொதந்திரமா நகர்ந்துக்கிட்டே இருந்தான். ஜனத்தொகை கோடிக்கணக்கில பெருகல. முட்டாப்பசங்கள் ஜனங்களை கட்டிவைச்சதாலயில்லா அவன் பன்னிங்க கணக்கா குட்டிபோட்டுக்கிட்டு இருக்கான். இப்போ மாதிரி குடும்பக்கட்டுப்பாடு ஆப்பிரேஷன்கள் எதுவும் அப்போ வேண்டியிருக்கல. வெள்ளையன் இருந்தப்போவுண்டான செல்வம் செழிப்பு லவூஸு எல்லாம் அவங்கூடப் போயிடிச்செங்கிறேன். ஒத்தை ரூபாவுக்கு மார்கெட்டில ஷிஃப்போன் மஸ்லீன் சில்க் ஜோர்ஜெட் வெல்வெட் பட்டெல்லாம் கிடைக்குமே. இப்போ கைத்தறிங்கிறான் சுதேசித்துணீங்கிறான் கதர் கடா காரிக்கனுக்கே பத்துரூபா ஆகுது. இது வேணுமா நமக்கு?”
“வைத்தியர் சுதந்திரங்கிறது ஒரு உலோகாயத விஷயமல்ல.”
“உன் படிப்புதான் இப்பிடியெல்லாம் கம்யூனிஷ்ட்டுக்கள் மாதிரி உன்னையப் பேசவைக்குது. உங்கபடிப்பால எதனாச்சும் அரிசி விலையைக்குறைக்க வைக்கமுடியுமா அதைப்பாருங்க. இப்போ ஜனங்களுக்கு வேண்டியது அதுதான்.”
இஸ்லாம்தான் உலகில் பிரிவுகளற்ற ஒரே மார்க்கம் என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு இல்லை அதற்குள்ளும் ஷியா, ஸுன்னி, ஹனர்ஃபி, சைஃபி, ஸூர்ஃபி, ஜாவா, பாஜி என்று பல உட்பிரிவுகள் இருப்பதை முதலில் கற்றுத்தந்தவர் வைத்தியர்தான். அவர் தான் ஹனர்ஃபி பிரிவினன் என்றும் மதம்சார்ந்த ஆடல்கள் பாடல்கள் குதிப்புகள் எல்லாம் தங்கள் மார்க்கத்தின்படி தவிர்க்கப்பட்டவை ‘ஹறம்’ என்றுஞ்சொன்னார். அதனால்தானோ அவருக்கு இஸ்லாமிய பக்திப்பாடல்கள் எதுவும் பிடிக்காது.
“தூதர் மொஹமத் வாழும் மதீனா போகலாம் வாரீர்…… இன்னும் இறைவனிடம் கை ஏந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை எல்லாம் நாஸ்திகனான என்னையே கவர்ந்த பாடல்களாச்சே…… ” என்றேன் ஒருநாள் அவரிடம். “ நீ வேணுமின்னா போயி கேட்டிட்டிரு” தான் அந்த நாகூர் பாடகரைத்தான் கண்ட இடத்தில் ‘மொத்த’ இருப்பதாகச் சொன்னார்.
“ அப்புடிப்பண்ணிடாதீங்க வைத்தியம்…….. பாவம் வயசானவரு பிழைத்திருக்கட்டும்”
பழுப்பு பற்கள் தெரியச் சிரித்துவிட்டுச் சொன்னார்:
“ பாரசீக சூர்பிக்களிடந்தான் அல்லாவை புகழ்ந்து பாடற ஒரு பாரம்பரியம் ஆரம்பிச்சது. க்வால்னு அவங்களோட அந்த இசைமரபு பாகிஸ்தானூடாக இந்தியாவுக்கு வந்தமாதிரிக்கு உலகம்பூரா பரவிக்கிட்டுத்தான் இருக்கு. அதோட நுட்பமான ராகங்களும் ரிதங்களும் கேட்கச் சொகமாயிட்டுத்தானிருக்கும். ஆனா அதுகூட எங்க மார்க்கத்தில அனுமதிக்காததுதான்.”
வைத்தியர் யாழ்ப்பாணம் சாவகச்சேரி மசூதிகளில் இந்த நாகூரார் வகைப்பாடல்கள் வைக்கிறார்கள் என்பதால் எந்த மசூதிக்கும் போவதில்லை. இன்னும் நண்டு கணவாய் இறால் ஓடுடைய மீனினங்கள் ஆமை சாப்பிடுவதும் மார்க்கத்தின்படி ‘ஹறம்’ என்பார்.
“ இஸ்லாம் பெண்களை அவர்கள் தம் கேசங்களை முக்காடிட்டு மூடவேணுமென்று வற்புறுத்துவது எதுக்கு வைத்தியரே….. நினைச்சுப்பார்க்க அது உங்களுக்கு முட்டாள்தனாமயில்லை? ”
“ நீயி கடுக்காணாத சின்னப்பையன் ஒனக்கு வெவரம் பத்தல. இப்போ சொன்னாலும் புரியாது. ஆனாலும் ஸொல்றேன் கேள். கேசம் மசிருதானேன்னு விட்டிடமுடியாதுப்பா. மனுஷனுக்குச் ‘சூணை’க் கெளப்பிவிடுற (காமத்தை அருட்டிவிடுகிற) சங்கதியல்லா அது. அதுக்கோசரமில்லா பிக்குணிகளெல்லாம் கேசத்தை மழிக்குறாக………. அதுசுட்டி எண்ணாலும் யோசிச்சிக்கியா நீ?”
வாலிபனான பிறகு காற்றில எழும்பிப் பறக்கும் லேசான கேசங்கள், நடையின் ஜதிக்கேற்றவாறு குதிச்சுக்குதிச்சுச் செல்லும் ஸ்பிரிங் கேசங்கள், குதிரைவால் கூந்தல்கள், கைவிரல்களைக் கொஞ்சம் புதைத்துப்பாரென அழைக்கும் வெல்வெட்டுக்கேசங்கள், முகத்தில் ஒத்திக்கொள்ளவேணும் போலத்தெறித்து மினுங்கும் கண்ணாடிக்கேசங்களை அணுக்கத்தில் பார்க்கையில் வைத்தியரின் கருத்தைப் பகுதியாக ஒத்துக்கொண்டாலும் பெண்கள் அதற்காகத் தம் கேசத்தையே மூடிமறைத்தாவேண்டுமென்று ஒரு மார்க்கம் உத்தரவிடுவது எனக்கு என்றைக்கும் உவப்பாகவே இல்லை.
அவர் மகள் அமீனாவுக்கு கல்யாணமான புதிதில் ஒருநாள் இரவு மழைபெய்யவும் மாமனாரின் குணந்தெரியாத மருமகன் அவர் இங்கிருந்து கொண்டுபோன மான்மார்க் குடையை எடுத்துக்கொண்டு வெளியே போயிருக்கிறார். அவரது போதாதகாலம் அவர் போனஇடத்தில் அக்குடையைக் கண்வைத்து யாரோ அவரிடமிருந்து உருவிவிட்டார்கள்.
“ எனக்கு வந்த கடுப்பில நா பத்து வருஷத்துக்குமேலா காபந்துபண்ணி வந்த சீமைக்கொடைய ஒரு நிமிஷத்தில தொலைச்சிட்டீரே…… உமக்குக் குடை பிடிக்கணும்னா கைக்காசைக்கொடுத்து ஒண்ணை வாங்கிப்பிடிக்கிறது. இப்படி மாமியாரு புடவையில கொய்யகம் விட்டுப்பார்க்கிறது நல்லதில்லேன்னு கொஞ்சங்காட்டமாகவே ஏசிட்டேன். ”
“ எப்பிடியோ அவர் உங்க ஒரேபொண்ணுடய மருமகன், உங்களுக்கு அவரைவிட எப்படி ஒரு குடை உயர்ந்ததாகும்?”
“ ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுன்னு சும்மாவா சொன்னாங்க தப்புத்தான்…….. கோவத்துல ஏதோ வார்த்தை வந்து வுழுந்து தொலைச்சிடிச்சு. ”
அன்றிலிருந்து மருமகன் ஊருக்குப்புறப்பட்டுப் போகும்வரையில் மாமானிடம் முகம் கொடுத்துப்பேச மறுத்துவிட்டாராம்.
இப்படி ஏதாவது மாலை நேரங்களில் அவர் வரும்போது பழையதும் புதியதுமாய் கதைகள் பேசிக்கொண்டிருப்போம். அவருக்கு மணிக்கூடு பாவிக்கும் பழக்கம் எதுவுமில்லை. இருந்தும் இஷாத்தொழுகைக்கான நேரம் வந்ததும் திடீரெனப் பேச்சைமுடித்துக் கொண்டு எழுந்துபோய்விடுவார்.
இந்தக் கஞ்சப்பிரபுவே மனம் ஒப்பிச் சிறிதுபணம் செலவுசெய்யும் ஒரு லாகிரிச்சமாச்சாரம் உண்டென்றால் அது பீடிக்காகத்தான். ஒரு நாளைக்கு ஒரு கட்டு சேலம் அல்லது சிங்கம் மார்க் காரபீடிகள் புகைப்பார். ‘பீடி குடித்தால் பசியெடுக்காது’ என்பது அவர் எண்ணம். மற்றும்படி எப்போதாவது கையில் அமோகமாகப் பணம் புரளும் வேளைகளில் ஃபில்டர் இல்லாத த்றீ றோசஸ் சிகரெட்டும் பிடிப்பார் (இப்போது அது வருவதில்லை). அவரைச்சூழ அதன்மணம் கமழ்ந்துகொண்டிருக்கும்.
கொலர் வைக்காத கதர்ஜிப்பாவும் வேஷ்டியும் அணிந்து கொண்டு குடாநாட்டின் எப்பகுதிக்கும் தன் மிதியுந்தில்தான் போவார். பஸ்ஸிலோ வானிலோ வாடகை வண்டியிலோ பிரான் பயணம் செய்யவதே இல்லை.
அவர் எங்கள் வீட்டுக்கு வரும்வேளைகளில் நான் அண்ணனின் குழந்தைகளையோ அல்லது அயல்வீட்டுக் குழந்தைகளையோ தூக்கிவைத்துக் கொஞ்சிக்கொண்டிருந்தால் “ ச்சே…அவங்களை மொதல்ல கீழே எறக்கி விட்டுடுப்பா…கொழந்தைங்களை அப்பிடி அளஞ்சுக்கிட்டிருந்தா அதுக வளராதுக, மக்குப்பத்திப்போயிடும் ” என்றுவிட்டு அங்கிருக்கக்கூடிய தினசரிப்பத்திரிகைகள், குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள் இலஸ்றேட்டட் வீக்லி எல்லாவற்றையும் ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் புரட்டிப் புரட்டிப்பார்ப்பார். தமிழைத் தவிரவும் மலயாளம், கன்னடம், தெலுங்கு, மலே, பர்மிய மொழியெல்லாம் பேசவரும். ஆனால் எந்தவொருமொழியும் எழுதவோ படிக்கவோ வராது. இரண்டு ஆண்டுகள்தானாம் பள்ளிக்குப்போனார். அப்போதும் சத்துணவு போட்டிருந்தார்கள் என்றால் தொடர்ந்து பள்ளிக்குப் போய்ப்படிச்சிருந்திருப்பாரோ என்னவோ. கூட்டல் கழித்தல் கணக்குகள்கூட மனதால் மட்டுந்தான் பார்ப்பாராம். எழுதிக்கூட்டிக்கழிக்க தெரியதாம். பெருக்கல் வகுத்தல் சுத்தமாக வராது என்பார்.
வைத்தியருக்கு மிதியுந்துகள் என்றால் அவைமேல் ஒரு அலாதியான பிரியம். தனது மிதியுந்தையே வாரத்துக்கு ஒரு தடவை துடைத்து 3 – in – 1 ஓயில் போட்டு ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு ஏதோ ஐஸ்வர்யா ராய்தான் முன்னால் வந்து நிற்கிற பாவனையில் பதினாறு கோணங்களில் நின்று அதை அழகு பார்ப்பார். நாங்கள் கேலி பண்ணினால் “ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டைப்பா” என்பார். ஒரு நாள் நான் பொதுநூலகத்திலிருந்து எடுத்துவந்த ‘ பொப்புலர் சயன்ஸ் ’ மாசிகையில் ஜெர்மனில் புழக்கத்தில் வந்திருக்கும் ஒரு புதுவிதமான மிதியுந்தைப் பற்றிய படங்களுடன்கூடிய கட்டுரை வந்திருக்க அதை நான் அவருக்குப் படித்துக் காட்டினேன்.
இரண்டே சென்டிமீட்டர் அகலமான டயர்கள் பொருத்தப்பட்டிருக்கும் அம்மிதியுந்தின் இயங்கும் பாகங்கள் அனைத்தும் ஹைஸ்பீட் ஸ்டீல் எனப்படும் விஷேட உலோகத்தால் இணக்கப்படுவதால் ஒருவரின் ஆயுள்பரியந்தம் அவற்றுக்கு டயர்கள் தவிர்ந்த பிற மாற்றீட்டுப்பாகங்களே தேவைப்படாதாம், அதன் வேகத்தைப் பதினாறு படிகளில் மாற்றியமைக்கக்கூடிய கியர்கள் உள்ளன, இன்னுமது விமானங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அலுமினியமும் டைட்டேனியமும் சேர்ந்தான மிக இலேசான கலப்புலோகத்தால் ஆக்கப்படுவதால் அம்மிதியுந்தின் மொத்த நிறையே 18 கிலோதான்!
அப்போது மணலைமீனதைப்போலத் திறந்துகொண்ட வைத்தியரின் வாய் தன்னியல்புநிலைக்குவர வெகுநேரமாகியது. மேலே படிக்கப்படிக்க நான் ஏதோ தற்செயலாகப்பார்த்துவிட்ட ஒரு தேவதையைப்பற்றி வர்ணித்தமாதிரி ‘ஆங்……’ என்று ஒரு சின்னப்பையனைப்போல அங்கார்ந்து கேட்டபடி அது பற்றிய கனவுகளில் மூழ்கியிருந்தது இன்னும் என் நினைவுகளில் உண்டு.
இங்கே குடும்பத்தைப்பிரிந்து இவ்வளவு காலந்தான் வாழ்ந்தாலும் குடும்பம் மனைவி பிள்ளைகளைப் பிரிந்து வாழும் ஒருவருக்கு இருக்கக்கூடிய தவிப்போ தாகமோ ஈர்ப்போ ஈடுபாடோ இருப்பவர் மாதிரித்தெரியாது. ஆறு மாதத்துக்கொருமுறைதான் மனைவியின் கடிதம் வரும். வராவிட்டாலும் பரவாயில்லை அவருக்கு. கடிதம் வந்திருந்தால் பெருங்கலவப்பட்டவர்போல் இருப்பார். வாசிப்பதற்கு எடுத்துக்கொண்டு வருவார் என்னிடம்.
அல்லாவின் கிருபை முன் நிற்க.
என்றும் எம்மீதான அன்புமாறாது வாழும் என் பிரியநாயகனுக்கு,
அமீனா மூணாவதுவாட்டியும் முளுகாம இருக்காள். இந்தவாட்டி அவக பெருநாளைக்கு வாறதோட பிரசவத்துக்கு நிப்பாட்டி வைக்கணும். இந்த ஆண்டு அன்சார் பத்தாவது எழுதுறான். அவனுக்கும் சேர்த்துப் பெருநாளுக்குக் கொஞ்சம் ஜவுளி எடுக்கவேண்டியிருக்கு. நீங்க தங்களுக்கு கடதாசி எழுதுறதே இல்லைன்னு அமீனா கொறை. இவள் சொல்றாளேன்னு கோவிச்சுக்கப்படாது. அவங்களை சொக நலம் வெசாரிச்சு பொதுவில ஒரு கடதாசி எழுதிட்டு மருமானுக்கும் நீங்க சொகமா…… எப்படி ஒங்க வியாபாரம் போகுதுன்னு ஒருவரிசேர்த்து எழுதிவைச்சா ஒங்களுக்கும் கவுருதையா இருக்கும், மாமாமீதான மனத்தாங்கல்களையும் மாப்பிளை மறந்திடுவார் அப்பிடின்னுதான் அமீனாவும் சொல்லுறா. ஒரு கடதாசி அவங்களுக்கும் எழுதிடுங்க. அல்லா அருள்செய்வான். ஒடம்பை வஞ்சித்து இருக்காதீக. வேளை தவறாம சத்தா சாப்பிட்டு சொகமா இருங்க. அல்லா எல்லாரையும் காப்பாத்துவான். யாரையும் கைவிடமாட்டான்.
இப்படிப்போகும். இவர் எழுதும் பதிலில் அவர் விரும்பி எழுதியவை எவற்றைப் பற்றியும் கண்டுகொள்வோ குறிப்பிடவோ மாட்டார். ‘பட்டிகட்டக்கொண்டுபோன ஆடுகள் திரும்பிவிட்டதா, மாடுகள் திரும்பிவிட்டதா எத்தனை கன்னுகள் போட்டன, ராவுத்தர் தோட்டக்குத்தகை ஒழுங்கா கொடுக்கிறானா’ என்றுமாத்திரம் கேட்டு எழுதுவார். அப்போ நீங்க மக-மருமனுக்குக் கடதாசி எழுதலையா என்று கேட்டால் “ ப்ச்….. நாம பொண்ணைக் கட்டிக்கொடுத்திட்டம்னா அப்புறம் அவங்க அவங்கபாட்டைப் பாத்துக்க வேண்டியதுதான், அவங்களைச் சொகநலம் வெசாரிச்சுக்கிட்டு இரிகிறதெல்லாம் நம்ப ஜோலியில்லைபா. வேணாதவேலை பாக்கிறதுன்னா நம்ப ஒய்ஃபை பீட் பண்ண ஒலகத்துல ஆளுகிடையாது. அவ கெடந்தா பைத்தியம்” என்பார். அவ்வேளையில் மனைவியின் கருத்துக்கள் விருப்பங்கள் அவருக்கு வெறுப்பையும் எரிச்சலையும் உண்டு பண்ணுவது அவர் கண்களில் ஸ்படிகமாகத் தெரியும்.
இதுபோலத்தான் அவர் எங்கள் வீட்டில் வந்து பேசிக்கொண்டிருந்த ஒரு மாலையில் அவர் வீட்டுக்குப்போக முடியாதபடிக்கு அடைமழை பெய்துகொண்டிருந்தது. அம்மா பேச்சிடையே “வைத்தியம் உங்க ஒரே மகளுக்கு என்ன சீதனம் கொடுத்தீங்க” என்று கேட்டார். சிகரெட் ஒன்றை எடுத்துப்பற்ற வைத்துக்கொண்டு சுவாரஸியத்துடன் சொல்ல ஆரம்பித்தார்.
“நம்பாளுங்க யாழ்ப்பாணத்துக்காரங்க மாதிரி வீடு மனை கொடு, தோட்டந்தொரவு கொடு, மோட்டார் கொடு, அஞ்சு லெச்சம்பணங்கொடூன்னு வற்புறுத்திறது எல்லாங்கிடையாதுங்க. பார்த்தா……… இஸ்லாம் மார்க்கத்துல சீதனங்கிற பேச்சுக்கே இடமில்லை. வசதிபடைச்சவங்க மாத்திரம் தங்கவசதிக்கேற்றபடி பாத்துப்பாராம கொடுப்பாங்க. ஆனால் பொண்ணுங்களுக்கு பிதுரார்ஜித சொத்துகளில் பாத்தியதை எல்லாம் இல்லை. கொஞ்சம் படிப்பு உத்தியோகமின்னு வாய்ச்ச பசங்க யுக்தியா பணக்கார எடமாத்தேடிச் சம்பந்தம் வைச்சுக்கிறதும் உண்டுந்தான். ஏழைங்க வீடுகள்ல திருமணம், இன்பதுன்ப சடங்குகள் எதனாச்சும் வரப்போ ஊரில இருக்கிற தருமசிந்தனை உள்ளவங்க, நல்லவங்க, வசதியானவங்க கூடிப்பேசி ‘சகாத்’ நிதின்னு சொல்லி பணம்திரட்டி எதனாச்சும் அவங்களுக்கு ஒதவிபண்றதும் உண்டு. அப்படி ஒதவி எதுவும் இல்லேன்னாலும் நம்மாட்டம் ஏழை பாழை சாமானியங்கன்னா இயைபுக்கேத்தாப்பல பொண்ணுகைல அஞ்சோ ஆறோ சவரன் நகை, மாப்பிள்ளை கல்வீட்டுக்காரங்கன்னா தம்பதிக்கு வேண்டிய கட்டில் மெத்தை, கூடவே குடும்பம் நடத்தவேண்டியதுக்கு தேவையான பித்தளை வெண்கலப்பாத்திரங்கள் அண்டா குண்டா சட்டி பானை சருவச்சட்டி, முடிஞ்ச அளவு வெள்ளிப்பாத்திரங்கள் கொடுத்து அனுப்புவாங்க அத்தோட சரி. எம்மாப்பிள்ளை எங்கிட்ட எதையும் வற்புறுத்தல. இருந்தும் நான் ஆறு சவரன் நகைபோட்டேன். அவபோற எடத்தில யாரும் எளக்காரமா நாக்குப்போட்டு பேசிடப்படாதில்லை. அப்புறம் கட்டில் மெத்தைக்கதெ வந்தப்போ இனி முப்பது கல்லுத் தூரத்துக்கு கட்டிலைக் காவிட்டுப்போறதும் செரமன்னாங்க. சரின்னு நானு அதுக்குண்டான பணத்தைக்கொடுத்துட்டேன். அவங்க தங்க ஊரிலேயே அதை எல்லாம் வாங்கிட்டாங்க.”
“அப்போ பாத்திர பண்டங்கள்?” என்றார் விடாமல் அம்மா.
“ஏராளமா கொடுத்தேனே…” என்றுவிட்டு ’இஸுக்’ ’இஸுக்’ ’இஸுக்’ என்று நீண்ட நேரம் சிரித்தார்.
வைத்தியர் அப்படிச்சிரித்து அன்றைக்குத்தான் பார்த்தோம். பின்னர் இன்னொரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு மீண்டும் சொல்ல ஆரம்பித்தார்:
“ஆனா எப்படீன்னு தெரியுமுங்களா…….. கொடைக்கானல்ல இருந்து வத்தலகுண்டுபோற சாலையில பூஞ்சோலைன்னு ஒரு ஊரு. அங்கே அழகப்பன் செட்டியார்னு ஒருத்தர் இந்தப் பாத்திர பண்டங்கள் அடைவுபிடிக்கிறது, மீட்கப்படாத பண்டங்களை விக்கிறது, இன்னும் பழைய பாத்திரங்களை சரிபார்க்கிறது, வாங்கி விக்கிறதுன்னு யாவாரம் பண்ணிக்கிட்டிருந்தார். அவருகிட்டபோய் விஷயத்தைச்சொல்லி ரொம்பப்பழசா இல்லாம வளைவு நெளிவு கீறல் விழாததா நல்லபாத்திரங்களாய் கொஞ்சம் வேணுமேன்னுகேட்டேன். சரி….. ஒரு பொண்ணுகாரியம்னுட்டு நல்ல சகாயவெலையில ரொம்பத் தரமான பாத்திரங்களா தாராளமாவே கொடுத்தார். மத்தநாள் காலை சம்சாரம் கையில வீட்டில பசங்களோ அயலவங்க யாரும் இருக்காமப் பாத்துக்கோன்னு சொல்லி ஏற்பாடுபண்ணிட்டு பாத்திரங்களை எவர் கண்ணிலும் படாம சாக்குகள்ல போட்டுக்கட்டி அங்கேயே ஒரு குதிரைவண்டியை வாடகைக்குப்புடிச்சு ஏத்தியாந்து ஒரு அறையில போட்டுப் பூட்டிவைச்சுட்டேன்.” பின் மீண்டும் அதேபோலச் சிரிக்கிறார்.
“ஊரு அடங்கி நம்ம பசங்களும் தூங்கினப்புறம் அறைக்குள்ளாறபோயி என் கைவேலையை ஆரம்பிச்சேன். வெண்காரத்தையும் பொரிகாரத்தையும் ( A sort of Alums) பொடிபண்ணி துத்தநாகப்பொடியுடன் சமஅளவில் கலந்து ஒரு மண்சட்டியிலோ ஓட்டிலோ இட்டுச்சூடாக்கினா அது உருகி விழுதாட்டம் வரும்பாருங்க. ஒரு தேங்காய் மட்டையை குறுக்காவெட்டி பிறஸ் மாதிரிப்பண்ணிட்டு அந்த விழுதைத் தொட்டுத் தீந்தையாட்டம் எல்லாப்பாத்திரங்களுக்கும் பூசிவைச்சிட்டு ஒரு ரெண்டு மணிநேரங்கழிச்சு ஒரு சாக்குத்துணியால தேய்ச்சுக்கழுவினா பாத்திரமெல்லாம் சும்மா சொக்கத்தங்கமா ஜொலிச்சுதே பார்க்கோணும். என் கண்ணையே நம்பமுடியல. உலோகத்தில ஏதுங்க புதுஸும் பளசும்…..? அதனால நானும் எவர்கிட்டயும் புதுஸுன்னோ பளசுன்னோ சொல்லல. ஆனா அவங்களாவே எங்க வாங்கினீங்க எங்க வாங்கினீங்க ரொம்ப நல்லாயிருக்கு பாத்திரங்கள்னு ஆளாளுக்கு கேட்கத் தொடங்கிட்டாங்கன்னா பாருங்களேன்……….. இந்தப்பாத்திர வெஷயம் இன்னிவரைக்கும் என்னையும் எஞ்சம்சாரத்தையும் தவிர்த்து வேறு ஒருத்தருக்கும் தெரியாது.”
இப்போது எங்கள் சிரிப்பு அடங்க நேரமாகியது.
குடும்பத்தைப் பிரிந்து வந்ததுக்கு பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் 1980 ஆம் ஆண்டுதான் இரண்டாவது தடவையாக தாயகத்துக்கு தன் மிதியுந்து சகிதம் போனார். அனேகமாக இனி அவர் திரும்பிவரமாட்டாரென்றே நாமெல்லோரும் நினைத்திருக்க ஒரு நாள் இரவு மீண்டும் ஒரு டிறங்க் பெட்டியுடன் வந்து சேர்ந்தார். வந்தபின்னாலும் ஊர்போய்விட்டு வந்ததையிட்டு ஒன்றும் பெரிதும் மகிழ்ச்சியாக இருப்பவர்போல் தெரியவில்லை. காரணங்கள் ஏதும் அவராகவே சொன்னால் உண்டு. யாரும் அவரிடம் உசாவி எதுவும் அறிந்துகொள்ள முடியாது.
பொதுவில் “எல்லாரும் சுகமாக இருக்கிறாங்க. ஹாசீம் (சகோதரன்) தையல்கடைவைச்சு குன்னூரில பிழைச்சிட்டிருக்கான். (மகன்கள்) அன்ஸாரும் அங்கதான் புடவைவியாபாரம் ஆரம்பித்திருக்கிறான் ” என்றும் “பஷீர் எங்கேயோ கோடௌன்ல வேலைக்குப் போறாப்பல” என்றும் சொன்னார். “ உங்க சம்சாரம் எப்பிடியிருக்கா வைத்தியம்?” என்று அம்மா கேட்கவும் “ அவளுக்கென்ன எப்பிடியும் பிழைச்சுப்பா மகராசி ” என்றார் சுருக்கமாக.
“வைத்தியர் உங்க சிங்கப்பூர் சைக்கிளை யாருக்கு கொடுத்தீங்க மகனுக்கா மருமகனுக்கா……..இன்னும் நல்லாவைச்சு ஓட்டறாங்களா? ” என்று அப்பா கேட்டார்.
“அதை அவங்ககைல கொடுத்திட்டன்னா ஒருவருஷத்திலயே உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க. அதனால ஒருத்தரும் தொடப்படாதுன்னு கண்டிஷனாச் சொல்லி வசலீன் பூசி பொலிதீன்தாள்ல ’பாக்’ செய்து பூட்டியல்லா வைச்சிருக்கேன். அது என்னைக்கும் அப்பிடியேதான் இருக்கும் மருமகனோ பிள்ளைகளோசரி என் சைக்கிளைத் தீண்டவே மாட்டாங்க.” என்றார்.
எனக்கு அவர் மருமகன் இவரது குடையை எடுத்துப்போய் மொக்கேனப்பட்டது ஞாபகத்துக்கு வரவும்
“சூடுகண்ட பூனை அடுப்பங்கரை நாடாது என்றும் ஒரு சொலவடை இருக்குங்க வைத்தியரே” என்றேன்.
“வேணாங்கல எனக்குப்பிறகு அவங்க யார்வேணுன்னாலும் அதை எடுத்துக்கட்டும், எனக்கு ஆட்சேபனை இல்லை.”
“செத்தும் கொடைகொடுத்த சீதக்காதியும் உங்க ஊர்க்காரர்தானாக்கும்?”
“அதெல்லாம் சும்மா பயித்தாரக்கதை. செத்தமனிதன் கல்லறையைப் பிய்ச்சுக்கொண்டு கொடுத்தாங்கிறது எல்லாம் வெறும்புரளி, கட்டுக்கதை” என்று அவ்விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் வைத்தியர். வைத்தியரே தன் அதீதசிக்கனம், பொருள்கள்மீதான கவனம்பற்றி வெளிப்படையாகச் சொல்லிவிடுவதால் பிறிதொருவர் கேலிபேச அங்கே இடமிருக்காது.
இப்போது அவருக்கு கடைகண்ணிகளுக்குப் போய்வரவும் அவரது தொழில் சார்ந்த பயணங்களுக்கும் அவசியமாக ஒரு மிதியுந்து தேவைப்பட்டது. நாங்கள் மாடுகள் கட்டும் பின்கோடித்தாழ்வாரத்தில் பலகாலம் சீண்டுவாரற்றுத் தொங்கிக்கொண்டிருந்த ஒரு சைக்கிள் பாரை வைத்தியர் பார்த்துவைத்திருந்தார் போல. ஒருநாள் வைத்தியர் அப்பாவிடம்வந்து ஏதோ ஒரு பெறுமதியான பொருளை யாசிப்பதுபோன்றொரு பௌவ்யத்துடன் “ உங்களுக்கு அந்த பார் இனிமேல் தேவைப்படாதுன்னாக்க நான் அதை எடுத்துக்கொள்ளட்டுங்களா சகோதரம்” என்று கேட்கவும் அவரும் அதைச் சந்தோஷமாகத் தூக்கிக்கொடுத்தார்.
அவர் வைத்தியம் பார்க்கச்செல்லும் எல்லாத் திக்குகளிலும் அச்சுவேலி, தெல்லிப்பளை, விசாவிழான், நெல்லியடி, நீர்வேலி, கோப்பாய், மட்டுவில், சாவகச்சேரி என்று எல்லா ஊர்களிலும் ஏகப்பட்ட சைக்கிள் கடைக்காரர்களைப் பழக்கம் வைத்திருந்தார். ஒவ்வொரு கடைக்காரரிடமும் ஹாண்டில், ஃபோர்க், பெடல், கொக்வீல், பிறேக் என்று சேகரஞ்செய்து ஒரேவாரத்தில் அவரது சைக்கிளைத் தயார்செய்தார். இனி சீற் ஒன்றுதான் பாக்கி. எவர்வீட்டுக் குப்பையில் கண்டாரோ எங்கேயோ வீசி எறியப்பட்டிருந்த சீற் ஒன்றை எடுத்து வந்து அதன் இருக்கையை தானே பதம்பண்ணி வைத்திருந்த தோலினால் தைத்து மிருதுவானதொரு சீற் ஆக்கிக்கொண்டார். அவருக்குக் கொஞ்சம் தையல் வேலை கைவரும் என்பது ஏற்கெனவே தெரியும். ஏனெனில் அவர் போட்டிருக்கும் செருப்பு, அவருடைய பயணப்பை எல்லாம் அவரே தைத்துக்கொண்டவைதான்.
பொதுவாக சைக்கிள் செயின்கள் அவை எந்த நாட்டுத் தயாரிப்பாயிருந்தாலும் ஒவ்வொரு செயினிலும் தேவையானதைவிடவும் 2 கண்ணிகள் அதிகமாகவே இருக்கும். மிதியுந்துகளுக்கு புதிய செயின்களைப் பொருத்துகையில் அம்மேலதிகக்கண்ணிகளை சைக்கிள் கடைக்காரர்கள் எங்கேயாவது தூக்கிப்போட்டுவிட்டிருப்பார்கள். இவர் அக்கண்ணிகள் அனைத்தையும் கவனமாகப் பொறுக்கிச் சேகரித்துக்கொண்டுவந்து இணைத்து மாத்துக்கொரு செயின் தயாரித்து அவர்களிடமே விற்றும்விடும் விற்பன்னன். சைக்கிள் டியூப்களுக்கு ஒட்டுக்கள் பொருத்துக்கள் போடுவதிலும் அவர் கில்லாடி. கடைக்காரர்களோ அல்லது தெரிந்தவர்கள் யாருமோ வீசிஎறிந்த இரண்டுமூன்று டியூப்களை எடுத்துவந்து அவற்றை வெட்டி ஒன்றாகப்பொருத்தி புதிதாக டியூப் ஒன்றைத் தயாரித்துவிடுவார். இத்தனைக்கும் அப்போது ஒரு லோடஸ் டியூப் 2 ரூபா 35 சதந்தான். நாலு ரூபாவுக்கு இறக்குமதிசெய்யப்பட்ட அசல் டன்லப் டியூப்பே வாங்கமுடியும்.
வைத்தியர் வீட்டுக்கிணற்று நீர் எங்களுடையதைவிடச் சற்றே உவர்ப்பாகவிருக்கும் அதனால் எங்கள் வீட்டுக்கிணற்றையே அவரும் பாவிப்பார். கிணற்றடிக்கு வந்தாலும் துலாவை இழுத்துத் தண்ணீர் மொள்ளமாட்டார். கயிற்றில் இணைத்தபடி ஒரு சிறியவாளி கொண்டுவருவார். அதில் இணைக்கப்பட்டிருக்கும் கயிறு அவரே தேங்காய் முடிகளைச்சேகரித்து அவற்றை அடித்துப்பிரித்துத் திரித்தது. அவ்வாளியைக் கிணற்றுக்குள் மெதுவாகவிட்டு ஒரு செம்புகொள்ளக்கூடிய அளவில் மட்டும் தண்ணீரை மொண்டு பாதாதி கேசம்வரைக்கும் கழுவிக்கொண்டு போவார். இவ்வாறே அமைதிப்படைச்சிப்பாய்களும் அரைவாளி தண்ணீரில் சௌவுரம்செய்து பல்துலக்கி முழுஉடம்பையும் கழுவிக்கொண்டுவிடுவார்கள். ஜப்பானியர்களில் சிலர் இன்னமும் ஒரேயொருமுறை குளிப்புத்தொட்டியில் நீரைநிரப்பிவிட்டு குடும்பத்திலுள்ள அனைவரும் அதில் குளித்து எஞ்சியதைப் பூந்தோட்டத்துக்கும் பாய்ச்சுவார்களாம்.
வைத்தியர் வாரத்துக்கொருமுறைதான் சிகைக்காய் அல்லது அரப்புத்தூள் அல்லது எலுமிச்சங்காய் தேய்த்துத் தலைக்குளியல் செய்வார். அப்போது கடற்பஞ்சைப்போலிருக்கும் முற்றியுலர்ந்த பீர்க்கங்காயால் அரப்புத் தண்ணீரைத்தொட்டு உடம்பு பூராவும் தேய்த்துக்கொள்வார். தவிர தேகத்துக்கு எந்தவித சவர்க்காரமோ ஷாம்பூக்களோ அல்லது வேறொரு இரசாயனமோ பாவிப்பதில்லை. தன் உடுப்புக்களைக்கூட எந்தச் சலவைக்காரரிடத்திலும் தரமாட்டார். பிள்ளைக்கற்றாளை, ஆவரசு, பிரண்டைத்தண்டு இன்னும் என்னென்னவோ சமாச்சாரங்கள் சேர்த்து அவரே தயாரித்தவொரு கஞ்சிகொண்டு தானே சலவை செய்துகொள்வார். அவரது உடுப்புக்களும் நல்ல வெள்ளையாகத்தான் இருக்கும். குறைசொல்லமுடியாது. அவ்விநோத சலவைக்கஞ்சிக்குத் தேவையான திரவியங்களையோ, அதன் தயாரிப்புச் சூத்திரத்தையோ வைத்தியர் யாருக்கும் சொல்லித்தரவில்லை.
மாலைவேளைகளில் வீட்டின் விறாந்தையில் இருந்துகொண்டு தன் தீப்பெட்டியிலிருந்து குச்சுக்களை எல்லாம் எடுத்து அவற்றை ஒவ்வொன்றாக நீளவாட்டில் ஒரு சௌவுர அலகினால் நான்காக வகுந்தபடி இருப்பார். பீடிச்செலவைவிட தீப்பெட்டிச்செலவு அதிகமாகுதாம்.
அவரது மருத்துவத்தின் மகிமை தென் இலங்கையிலும் பரவப்போய் அத்தனகலவில் ஒரு சிங்கள இரத்தினக்கற்கள் வியாபாரிக்கு வைத்தியம் பார்க்கநேரிட்டது. நீங்கள் எதிர்பார்க்கும்தொகை எதுவானலும் பரவாயில்லை. நீங்கள் இங்கே வந்துதான் எனக்கு வைத்தியம் பார்க்கவேணுமென்று கடிதத்தில் விண்ணப்பித்திருந்தார்கள். அக்காலத்தைய அவரது சம்பளம் பெறாத எழுத்தர் நான்தானே. வைத்தியர் அங்குபோய் இரண்டு மாதங்கள் கழிந்திருக்கும் அவ்வியாபாரிக்கு வைத்தியம் பார்த்துவிட்டு வைத்தியர் வெகுமினுக்கமாக முகத்தின் தேஜஸெல்லாங்கூடி மஸ்லின் ஜிப்பா அரவிந்தம் வேஷ்டி சகிதம் வாயில் சிங்களத்துடன் வேறொரு புதிய மனிதர்மாதிரி வந்திறங்கினார். கன்னங்களிலும் தோள்களிலும் துருத்திக்கொண்டிருந்த எலும்புகளைக் காணோம். உடம்பு பூசினாற் போலவும் புதுமாப்பிள்ளை போலவும் இருந்தார். த்றீ றோசஸை விட்டுவிட்டு இப்போது கப்ஸ்டனுக்கு மாறியிருந்தார்.
எங்கள் வீட்டுக்கு வந்தபோது அவரே சொன்னார்: “ ரொம்பப் பணக்காரப்பாட்டி இல்லையா…………… அவங்க என்னை ரொம்ப நல்லாக் கவனிச்சுக்கிட்டாங்க சகோதரம். அவங்க எனக்குப்போட்ட முதல் கண்டிஷனே வெதமாத்தையா (வைத்தியரே) உங்க வெரதத்தையெல்லாம் யாழ்ப்பாணம் போனப்பறம் வைச்சுக்குங்க. இங்கு இருக்கும் வரைக்கும் மூணுவேளையும் எங்ககூட நீங்க சாப்பாட்டு மேசையில் உக்காந்தே ஆவணும். நான் மறுத்தப்போ அவங்களும் சாப்பிட முடியாதுன்னு சொல்லிட்டாங்க. என்னால எதுக்கு அவங்க பட்டினிகிடக்கோணும்? சரீன்னுட்டேன். அப்புறமென்ன தினம் மூணுவாட்டியும் கறியும் , மீனும் , சோறும் , ரொட்டியும், ஆப்பமும், மேல முந்திரி, ஆப்பிள் , மங்குஸ்தான் பழங்களுந்தான். இன்னும் அவங்களுக்கு வட்டிலப்பம் தொதல் மஸ்கெட்டு இதெல்லாம் போடக்கத்துகொடுத்துட்டு நான் அவங்ககிட்ட வெள்ளையப்பம் சுடக்கத்திண்டு வந்திருக்கேன். இப்போ புதுக்கரச்சல் என்னன்டாக்கா காலையும் மதியமும் தீனை வையடா நஸீர்ன்னு மல்லுக்கட்டுது வவுறு. அதைத்தான் சமாளிக்கறது கஷ்டமாயிருக்கு” என்கிற உண்மையைச் சொல்லிவிட்டுச் சிரித்தார்.
“ எங்களிடம் நிறைய மரவள்ளிக்கிழங்கிருக்கு வைத்தியம், சும்மா கிடந்து காயுது. கொண்டுபோய் அவித்து சாப்பிடுங்களேன்.” என்று அம்மா கேட்கவும் “மிச்சம் நன்றி சகோதரம் ” என்றுவிட்டு மகிழ்ச்சியாக வாங்கிப்போனார்.
வைத்தியருடைய வீட்டுக்கு மேற்குப்புறமாக அவரே சொல்வதுபோல் ஒரு ‘காலிமனை’ இருந்தது. அம்மனைக்கும் அப்பால் வீதியோரமாக செல்வராசா மாமாவுடைய மரவேலைப்பட்டறை இருந்தது. இந்த செல்வராசா மாமா ஒரு அப்பிராணி. தானுண்டு, தன் தடி உளி பொளி தட்டுப்பொல்லுண்டு என்றிருப்பார். எந்தவித ஊர்வம்பும் அரசியலும் இல்லாதவர்.
‘அமைதி’ காக்க வந்த இந்திய இராணுவம் யாழ்ப்பாணக்குடாநாடு, வன்னியென்று பகலிரவாக ஊர்முழுவதும் ஊர்ந்துகொண்டிருந்த சமயம் அது.
ஒரு வெள்ளிக்கிழமை மாலை. வைத்தியர் வாங்கிவந்த விளைமீனை வெட்டிச்சுத்தம் பண்ணிச் சமைத்துவைத்துவிட்டு விறாந்தையில் அமர்ந்து பகல் காயவைத்த தன் மருத்துவத்துக்கான மூலிகைகளைச் சுத்தம்பண்ணிக்கொண்டு இருந்திருக்கிறார்.
வீதியால் வந்துகொண்டிருந்த இரண்டு மூன்று போராளிப்பெடியங்கள் திடீரென அமைதிப்படையினர் எதிர்ப்படவும் வைத்தியர் வளவுக்குள்ளே வேலியைப் பிரித்துக்கொண்டு பாய்ந்து காலிமனையைக் குறுக்கறுத்து ஓடிச் செல்வராசா மாமாவின் பட்டறை இருந்த வளவின் பின்வேலியால் நுழைந்து தப்பியோடியிருக்கிறார்கள்.
அவர்களை விரட்டிவந்த ஜவான்கள் செல்வராசா மாமாவையும் கூடவே வைத்தியரையும் பிடித்து ஓடிப்போனவர்கள் யார் எந்தத்திசையில் ஓடினார்கள் என்று விசாரித்தனர். நிஜத்தில் அவர்கள் போராளிகள் எவரையாவது பார்த்திருந்தால்தானே? ஆனாலும் ஈழத்தில் இங்கே மூன்றுமண்டலம் விரதமிருந்து தெய்வசன்னிதியில் தூக்குக்காவடியில் தொங்குபவனிடம் போய் “புலிகளைப் பார்த்தியாடா” என்றுகேட்டாற்கூட “இல்லீங்களே” என்றுதான் சொல்லுவான். அது படையினருக்கும் தெரியும்.
இவர்களும் “ நாங்கள் யாரையும் பார்க்கேல்லை தொரை “ என்றுசொல்லி வாய்மூடமுதலே இருவருக்கும் இரண்டு கன்னங்களிலும் மாறிமாறி அறைந்தனர். தாம் சொல்வதுதான் அவர்களுக்குப் புரியவில்லையென்று “ வீ… நோ லுக்” என்றார் செல்வராசா மாமா.
“அப்போ ஆட்டுவண்டி கண்டோ?” என்றான் ஜவான்களில் ஒருவன். குதிரைவண்டி, மாட்டுவண்டி உண்டுதான். அது என்ன ஆட்டுவண்டி? இருண்டது விடிஞ்சது தெரியாத செல்வரசா மாமாவும் வைத்தியரும் முழிக்க சரமாரியாக இருவருக்கும் அடிகள் தொடர்ந்தன. இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அமைதிப்படைக்கு ஆடுகள் ஏற்றிக்கொண்டுவந்த பாரவுந்தொன்றை விடுதலைப்புலிகள் மடக்கிக் கடத்திப்போயிருந்தனர்.
“தொரைகளா எங்களை அடிக்காதீங்க நாங்க யாரையும் பார்க்கேல்லை, எந்த வண்டியையும் காணேல்லை ” என்றனர் இருவரும். மாமாவை உதைத்த ஒரு ஜவானின் கால்களைப்பிடித்த மாமியை அவன் மிலேச்சத்தனமாகக் எத்தவும் மலாரிட்டுப் பிருட்டம் அடிபட விழுந்தார். விழுந்ததும் மாமிக்கு நினைவு தப்பியது. அடியின் உக்கிரத்தில் நினைவை இழக்கத்தொடங்கியிருந்த செல்வராசாமாமாவும் பாட்டத்தில் சாய அவரைவிட்டுவிட்டு, ஜவான்கள் மாறிமாறி மீண்டும் வைத்தியரைப் பந்தாடவும் வலிதாங்கமுடியாத வைத்தியர் “சாஹிப் ஐ இன்டியன்………. இன்டியன்” என்று அலறினார். சும்மா தப்பிக்கிறதுக்காகப் ‘புதுக்கதை’ விடுகிறான் என்றே அவர்கள் நினைத்திருக்கவேணும். அவரை மீண்டும் மீண்டும் தூக்கி கடுநிலத்தில்போட்டு மிதித்தனர். வைத்தியர் இளைத்து மூச்செறிந்தபடி தன்னை இந்தியன் என்று நிரூபிக்க முயன்றார் :
“ ஜனகண மனபாரத மாதா
அதி நாயக ஜெயகே
பாரத பாக்ய விதாதா ”
வைத்தியரது நிரூபிதங்கள் அவர்களிடம் எடுபடவில்லை. நான்கு ஜவான்கள் இருவரையும் தலையிலும் காலிலும் பிடித்துத் தூக்கி டிறக்கினுள் வீசினர்.
மாமிக்கு நினைவுவந்து கண்விழித்துப்பார்த்தபோது மாமாவையும், வைத்தியரையும் காணவில்லை.
சிங்களப் படையினன் எவனிடமாவது அடிபடநேர்ந்தால் நம் எதிரிதானே தாக்குகிறான், சரி சமயம் வரும்போது திருப்பிக்கொடுத்திடலாமென்று பொறுத்துக் கொள்வோம்.
நாம் அழைக்காமலே நண்பன் என்று சொல்லி வந்தவனிடம் அடிபடநேர்வது மனிதனின் அகத்திலும் புறத்திலும் வலி செய்யும் ரணம்.
தனது மண்ணில் பிறந்தவன் பிறிதொருநாட்டில் வைத்துத் தன்னைப் பேசவும்விடாமல் தாக்கிய வன்மத்தை, அவலத்தை, தன்வீட்டு நாயே தன்மேல் பாய்ந்து பிடுங்கும் மௌடீகத்தை, அந்த ஜீவன் எப்படித்தான் தாங்கியதோ?
கண்களில் கண்ணீரும், வாயில் செந்நீரும் வடியத் தன்னை விடுதலையாக்கிவிடும் என்ற நம்பிக்கையில் தனக்கு நினைவுக்கு வந்த தேசியகீதத்தின் இரண்டு வரிகளையும் ஈனசுரத்தில் திரும்பத் திரும்ப பஞ்சசீல பரிபாலனர்களிடம் சொல்லிக்கொண்டேயிருந்தார்.
“ ஜனகண மனபாரத மாதா
அதி நாயக ஜெயகே ”
எல்லோருடைய மனங்களையும் – புத்தியையும் ஆளுமை செய்யவல்ல பாரததேவியும் அன்று கைகட்டித்தான் நின்றாள். பாதியில் விட்டுப்போன தன் பணிகளைத்தொடர செல்வராசா மாமாவும், எவரதும் பௌந்திரம் மூலம் உபாதையைச் சொஸ்தமாக்கிவிட வைத்தியரும் பாரத பாக்யர்களிடமிருந்து மீண்டு இன்னும் வரவில்லை.
– குமுதம்-தீராநதி, ஜூலை 2010