முடிவுகளும் மாற்றங்களும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 3, 2022
பார்வையிட்டோர்: 3,255 
 
 

மனித வாழ்க்கையில் மட்டும், அவனோ,அவளோ, எடுக்கும் எந்த ஒரு முடிவும் அவர்களது இயக்கம் சார்ந்த முடிவாக இருக்க வாய்ப்பு இல்லை. மற்றவர்களை சார்ந்துதான் எடுக்கப்பட்டதாக இருக்கும்.

சின்ன சின்ன விஷயங்களில் இருந்து பெரிய முடிவுகள் வரை நீங்கள் எடுக்கும் முடிவுகள், பல நேரங்களில் மாற்றிக்கொள்ள கூடியதாக இருக்கும், அல்லது மற்றவர்களுக்காக தள்ளி போடுவதாகவோ, சில பல மாற்றங்களை ஏற்படுத்தி கொள்வதாகவோதான் இருக்கும்.

சாதாரணமாக நான் காப்பிதான் குடிப்பேன் என்று கூட முடிவு செய்தீர்கள் என வைத்து கொள்வோம். உங்கள் இல்லத்தில் வேண்டுமானால் உங்கள் முடிவுப்படி நடக்க சாத்தியம் உண்டு, (அது கூட சந்தேகம்), வெளி இடங்களில் டீ கிடைத்தாலும் சரி என்னும் மனப்பக்குவத்துக்கு வந்து விடுவீர்கள்.

திருமணத்துக்கு முன் ஆணோ,பெண்ணோ எத்தனை கொள்கைகளை வைத்திருப்பார்கள். திருமணம் ஆன பின் கேட்டீர்கள் என்றால் அவருக்காக என்று பெண்ணும், அவளுக்காக என்று ஆணும் அந்த கொள்கைகளை விட்டு கொடுத்து விடுகிறான்.

அதற்கு பின் இவர்கள் இருவருமே குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு தங்கள் கொள்கைகளை மறுபடி மாறிக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.

இப்படி எல்லாம் நாங்கள் இல்லை, ஒரு முடிவு எடுத்தால் மாற்றவே மாட்டோம் என்று சொல்பவர்களுக்காக சின்ன கதை ஒன்று கீழே உள்ளது

ஷாட் ரெடி சார் !

குட்..சீன் என்ன சார்?

நீங்க இந்த மேட்டுல நிக்கறீங்க, இங்கிருந்து கீழே இதோ பாருங்க இந்த இடத்துல குதிக்கறீங்க, அங்க உங்களை அடிக்கறதுக்கு தயாரா இரண்டு ஸ்டண்ட் மேன் இருக்கறாங்க.

ஓ.கே..சார்.. இங்கிருந்து கீழே எவ்வளவு அடி இருக்கும்.

ஆறடிக்கு மேல இருக்கும் சார், நீங்க குதிக்கற மாதிரி ஆக்சன் மட்டும் காட்டினீங்கன்னா போதும், மத்ததை நம்ம ஸ்டண்ட் டீம் ஆளுங்க கவனிச்சுக்குவாங்க.

நோ..நோ..இந்த ஷாட்டை நானே பண்ணிடறேன். ஆறடிதானே. ஏற்கனவே எனக்கு ஸ்போர்ட்ஸ் அனுபவம் இருக்கு.சமாளிச்சுக்குவேன்.

வேண்டாம் சார், கீழே பாறையா இருக்கு, உங்கனால பேலன்ஸ் பண்ண முடியலையின்னா அதுக்கு அடுத்து பெரிய பள்ளம் இருக்கு, அப்புறம் ரொம்ப ரிஸ்க் ஆயிடும்.

ம்..அப்படியா.. என்னால பண்ண முடியும்னு தோணுது.

கொஞ்சம் இருங்க சார், நம்ம ஸ்டண்ட் டைரக்டர்ஸ் கிட்டே கேட்டுட்டு அப்புறம் சொல்றேன்.

டைரக்டர் ஸ்டண்ட் மாஸ்டரிடம் என்னயா இவரு பாட்டுக்கு குதிக்கறேன், புடிக்கறேங்கறாரு, ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சுன்னா, அப்புறம் சிக்கலாயிடும்.

புரியுது சார், நான் வேணா பேசி பாக்கட்டுமா.

பேசி பாரு.

ஸ்டண்ட் டைரக்டர் மெல்ல கதானாயகனிடம் நெருங்குகிறார்.

சார் ஷாட் ரெடி, நீங்க இங்கிருந்து ஜம்ப் பண்ணறமாதிரி ஆக்சன் பண்ணறீங்க, சட்டுனு எங்க ஆளு இந்த சீனை கண்டியூனிட்டி பண்ணிடுவாரு.

நானே பண்ணறேன்னு டைரக்டருகிட்டே சொன்னேனே.

சொன்னாரு சார், அது ரொம்ப ரிஸ்க் ஷாட் சார், கீழே உங்களை அடிக்கறதுக்காக நிக்கறவங்களே ரொம்ப ஆபத்தான இடத்துல நிக்கறாங்க. இப்ப நீங்க குதிச்சீங்கன்னா உங்களை பேலன்ஸ் பண்ணி அப்படியே சண்டையை கண்டினியூ பண்ண முடியாது. ஷாட் கட் பண்ணி மறுபடி பண்ணா நல்ல இருக்காது.

என்னால செய்ய முடியும்னு நினைக்கறேன்.

வேண்டாம் சார் கோடிக்கணக்குல இந்த புராஜெக்ட் பண்ணிட்டிருக்காங்க, ஏதாவது ஒண்ணாயிடுச்சுன்னா எல்லார் புழப்பும் போயிடும்.

என்னங்க ஒரு ஆறடி உயரம், எனக்கு அப்படி ஒண்ணும் வயசும் ஆகலை, ஸ்போர்ட்ஸ் மேனா வேற இருந்தவன், இவ்வளவு சொல்லியும் கேட்கமாட்டேங்கறீங்க.

அதுக்கிலைங்க சார், ஒரு உண்மைய சொல்றேன் சார், இப்ப இந்த சீனை நீங்களே செய்யறேன்னு செஞ்சுடறீங்க, இந்த சீனுக்காக ஏற்கனவே எங்க டீமுல ஒரு ஆளுக்கு அட்வான்ஸ் கொடுத்து ரெடி பண்ணி வச்சிருக்கோம். நீங்களே அதை பண்ணிட்டா அவருக்கு கொடுத்த பணம் திரும்ப வாங்கிடுவோம். இல்லை மறு சீனுக்கானதை கழிச்சுக்குவோம். இந்த ஒரு சீன் மட்டும் அவனுக்கு இன்னைக்கு இருந்தா அவ்வளவுதான், இன்னைக்கு சம்பளம் அவனுக்கு அவுட்.

ஓ இத்தனை விஷயம் இருக்கா, சாரி நான் ஆக்சன் மட்டும் காட்டறேன்,

தேங்க்ஸ் சார்..டைரக்டர் கிட்டே சொல்லி ஷாட் ரெடி பண்ணிடறேன்.

சார் நிருபர்கள் சார்பா உங்க படம் வெளி வந்ததுக்கு வாழ்த்தை சொல்லிடறோம், படம் எப்படி வந்திருக்குன்னு நினைக்கறீங்க?

படம் நல்லா வந்திருக்கு, நல்ல ஓபனிங் கிடைச்சிருக்கு.

அதுல நீங்க பேசுன பஞ்ச் டயலாக் நல்ல பிரபலமாயிடுச்சு இல்லையா சார்., அதை ஒரு முறை இங்க சொல்லி காட்ட முடியுமா சார்.

ம்..சரி.. நான் ஒரு முடிவு எடுத்துட்டன்னா அதை நானே மாத்திக்க மாட்டேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *