(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நான் எதை நினைக்கிறேன், என்ன நினைக்கிறேன் என்று எனக்கே தெரியாது. ஆயினும் நினைவுகள் என்னுள்ளிருந்து பன்னூற்றுக்கணக்கில் செட்டைகட்டிப் பறக்கின்றன.
பறவையின் உதிர்ந்த சிறகுகளாய் அவை எங்கெங்கோ முனைப் பற்று எல்லையில்லாப் பேர்வெளியில் அலைகின்றன. புகைத்திர ளாய் நினைவுகள்; நினைவுகள் ஏன் அலைகின்றன? எதைத் தேடி அலைகின்றன? கப்பலின் புகைப்போக்கியைவிட்டு மேலெழுந்து சுருள்சுருளாய் அலைகின்றன. தேடலற்ற அலைதலா? இல்லை அலையும்போதே எதையோ மோப்பம் பிடிப்பனவாய் ஓர் புள்ளி யில் தயங்கி, பின் அங்கு ஏதும் காணாது ‘வீர்’ என அதைவிட்டு மேலெழுந்து மீண்டும் இலக்கற்ற மிதப்பு.
நினைவுகள் என்பவை மொழிகாவிகள். ஆனால், இலக்கற்ற என் நினைவுகளில் மொழியின் கனதி இல்லை. அதனால்தான் அவை போவெளியில் இசைபோல் மிதக்கின்றனவா? நினைவுகள் மொழியில் சூல்கொள்தலே எனின், என் நினைவுகள் மொழி மழுங்கிய ஓர் இனந்தெரியாத் துயர் உணர்வின் கட்டற்ற பிரவகிப்பே.
பேர்வெளியில் என் நினைவுகள் தங்கும் ஒவ்வோர் புள்ளியி லும் மொழித்துணிக்கைகளின் மெல்லிதான குமிழ் விடுதல். அதை நோக்கி நினைவு மோப்பம் பிடித்து பிரக்ஞை கொள்கையில் குமிழ் உடைந்து மொழியழிந்து துயர்வெளி பெருகுகிறது. இலவம் பஞ்சாய் இலக்கற்ற நினைவுகளின் மிதப்பு மீண்டும்.
கட்டற்ற வெட்டவெளி. வெட்டவெளியில் நான் திரிகிறேன். நான் திரிகிறேனா, என் நினைவுகள் திரிகின்றனவா? நினைவாலான என் இருப்புத் திரிகிறதா?
திடீரென்று எங்கிருந்தோ பறந்து வந்த ராட்சதக் கழுகு புகைப்போக்கியில் வந்தமர்கிறது. அடுத்த வினாடி என்னை ஓர் அலக்காகத் தூக்கிச் செல்கிறது.
தனக்கு வாய்ப்பான ஒரு மரத்தைக் கழுகு உருவாக்குகிறது. அதில் வைத்து என்னைக் கொத்திச் சுவைக்கிறது. பருந்தின் இறாஞ்சலில் அகப்பட்ட கோழிக்குஞ்சாய் என் நிலை மாறுகிறது. ஒவ்வோர் அங்கமாய் நான் சிதைக்கப்படுகிறேன். வெளியில் பறந் தெழவைத்த என் இறக்கைகள் கிழிக்கப்பட்டு, நான் அழிக்கப் படுகிறேன்.
கழுகு கொழுத்துக்கொண்டுபோகிறது. என் உடல் அழிந்து கொண்டுபோகிறது. கழுகின் கால்நகங்களில் என் இறக்கைகள் சில ஒட்டியிருந்து என் பல பிரதிகளாய்க் கிழிந்து பறக்கின்றன. கிழிந்து பறக்கும் என் இறக்கைகளை எங்கிருந்தோ வந்த வல்லூறு காவிச் செல்கிறது. கழுகின் சிறு பிரதி அது. வல்லூறு இன்னோர் மரத்தை உருவாக்குகிறது. அதில் அமர்ந்தவாறு என் இறக்கையின் எஞ்சிய தசைத் துணுக்குகளை அதன் சொண்டு குத்திக் கிழிக்கிறது.
வல்லூறின் கால்களில் இருந்தும் எஞ்சிய என் இறக்கைகள் மண்ணில் வீழ்கின்றன. கீழே நின்ற நாய்கள் சில அதை முகர்ந்து பார்க்கின்றன.
ஓர் தசைப்பருக்கையை ஒரு நாய் தன் கொடுப்பில் வைத்து நன்னுகிறது.
அதன் வாயிலிருந்து வீழ்வதாய்த் தெரிவதை (வீணியை)க் காகங்கள் கோலிச்செல்லப் பார்க்கின்றன. ஆனால், அங்கே காகங்களுக்கு ஏதும் இருப்பதாய் இல்லை. எறும்புகளுக்குத்தான் ஏதோ கிடப்பதாய்ப் படுகிறது.
என் மணத்தில் அள்ளுப்பட்டு எறும்புகள் மொய்க்கின்றன. எங்கிருந்தோ அவை நிரைநிரையாய் வந்து மொய்க்கின்றன. அவை என் இறக்கைகளின் அற்ப தசைத்துணுக்கை ஒன்றுகூடி இழுத்துச் செல்கின்றன.
தசையாடலின் ஊர்வலமா?
என் உருவத்தின் சிந்திச்சிதறுண்ட சிறகுக்குவியலாய் குவிந்து பரவிக்கிடக்கும் நான். எழுந்து வரும் சுழிக்காற்று, சிதறிக்கிடக்கும் என சிறகுகளையும் அதன் இறகுகளையும் ஓர் அள்ளு அள்ளிச் சுழற்றுகிறது. அதன் சுழற்றுதலில் அவை பாய்போல் சுருட்டப்படு கின்றன.
அதன்பின் ஒரு சுருளாய்க் கட்டி நிமிர்த்திக் குத்தவைக்கப் படுகிறது. இப்போ காற்று போய்வரும் போக்கிபோல் அது மாறுகிறது.
நான் நிமிர்ந்து உட்காருகிறேன்.
எனது இரண்டாவது பிரதியின் உருவாக்கம்.
என் நினைவுகள் மேலெழுகின்றன.
வெளி வெளி ஒன்றே. அதில் என் நினைவுபட்டு பரவசிக்கிறது. முன்னைய பிரதிவழி வந்த துயர் இல்லை. பரவசம் பூசிய வெளி.
என் நினைவுகள் நோக்கற்ற அப்பரவச வெளியில் மிதக்கின்றன.
நினைவுகள் பாம்புகள்மாதிரி நெளிகின்றன.
புற்றைவிட்டு வெளிவரும் பாம்புகள்போல் அவை ஒளிபெற்று நெளிகின்றன.
நான் நினைவுகளைத் தொடர்கிறேன். என் நாசித் துவாரங்களா, நினைவுகள் வெளிவரும் புற்று
நான் அதன் வாசலில் காவல் நிற்கிறேன். அரவாய் நெளிந்த நினைவுகள் ஒவ்வொன்றாய் அறுபட்டு அழிந்துபோகின்றன.
அவற்றின் அழிவில் ஓர் ஒளிக்கோடு எழுகிறது.
எங்கோ கோடிழுத்து அழைக்கும் அவ்வொளியின் நெளிவில் என் சஞ்சாரம்; இன்வெளிச் சஞ்சாரம்.
மீண்டும் புகைப்போக்கியில் கழுகும் வல்லூறும் காகங்களும் வந்தமர்கின்றன. கீழே நாய்களும் நரிகளும் கரடிகளும் பன்றிகளும் பூனைகளும் நிற்கின்றன; வாய்பிளந்து.
வாய்பிளந்தபடி சிறிது நேரம் பார்த்து நின்ற கழுகும் காகங் களும் மிருகங்களும் எனது இரண்டாவது பிரதியைத் தாக்குகின்றன. காற்றள்ளி, வெளியில் கொஞ்சம் தொட்டெடுத்து உருட்டிக்கட்டி உருவாக்கப்பட்ட என் உருவம் குலைந்து சிதைந்துவிழுகிறது.
என் உடலிலிருந்து பிய்க்கப்பட்டவையெல்லாம் மொழித் துணிக்கைகளாய், சொற்பருக்கைகளாய் குவிந்துகிடக்கின்றன. உரிக்கப்பட்ட சேவலின் வெற்றுச் சிறகுகளின் குவியலாய் அவை அங்கே காற்றின் மென் தடவலில் கெம்பி எழுந்து தம் மூலத்தை இனங்காண்கின்றன.
நாய்களும் கரடிகளும் பன்றிகளும் அக்குவியலைக் கிளறுகின் றன. வெற்றுக் குவியலை முகர்ந்து முகர்ந்து, கால்களால் கிளறிக் கிளறி “எங்கே அவன்? எங்கே அவன்?” என்று தேடுகின்றன. ஈற்றில் என்னைக் காணாது வானைப் பார்த்து ஊளையிடுகின்றன.
புகைப்போக்கியுள் கழுகு புகுந்து புகுந்து வெளிவருகிறது. கழுகு கருநிறம் பெற்று காகம்போல் தெரிகிறது. அதன் விரக்திப் பார்வையிலும் “எங்கே அவன்?” என்ற கேள்வி கூருறும்.
ஈற்றில் தேடுதலில் களைப்படைந்து கீழே கிடந்த இறகுக் குவியலின் ஒரு பகுதியைத் திரட்டி எடுத்து, “இதுதான், அவன் தலை” என்றது கழுகு, நவீன அகழ்வாராய்ச்சிக்காரனைப் போல்.
இன்னொரு பகுதியைத் திரட்டி எடுத்து, “இது அவன் உடல்” என்றது நாய்; ஒரு மருத்துவனின் தோரணையில்.
“இது அவன் கண்” என்றது, எப்பொழுதும் கண் தோண்டியே பழக்கப்பட்ட காகம்.
“இல்லை, இது அவன் வாய்” என்று மறுத்துக் குரைத்தது இன்னொரு நாய்.
“இல்லை இல்லை, இது அவன் உழைக்கும் கரங்கள்” என்று பெரிதாகக் கோஷம் எழுப்பிற்று கரடி.
“இல்லை, இதுதான் அவன்ர சாமான்!” என்று ஒருவித ஆத்திரம் மேலிடக் கத்தியது பன்றி.
“அமைதி, அமைதி, இதற்குள் அவன் இல்லைப் போல் தெரிகிறது” என்று மேலே வட்டமிட்ட புறாக்களைப் பார்த்து, “போங்கடி பூனாக்களே” என்று சீறிப் பாய்ந்தது, பூனை.
இதற்கிடையில் அங்கே கிடந்த இறக்கைகளைச் சுற்றி மொய்த்து அதன் விளிம்புகளில் ஊர்ந்தன சிற்றெறும்புகள்.
அங்கு நிகழும் தசையாடலாய் என் இறகுகளை இழுத்துச் செல்லும் சிற்றெறும்பின் ஊர்வலம் மீண்டும். இத்தனை அமர்க் களத்திலிருந்து தப்பி, புகைப்போக்கியை விட்டெழும் புகைத்திர ளாய் ‘நான்’ இன்வெளியில் மிதந்துகொண்டிருந்தது.
மீண்டும் எனது பிரதி உருவாக்கம் நிகழ்கிறது. ஆனால், அதை இப்போ அங்கு நின்றவை கண்டுகொள்வதாய் இல்லை. தசைப்பிரதி உருவாக்கம் நின்றுபோன செய்தி, ஒளியாண்டுகளாய் பூமியை நோக்கி வந்துகொண்டிருந்தும் அதை உள்வாங்கும் இணையத்தளத்தை உருவாக்கும் ஆற்றல் கீழே நின்றவைக்கு இன்னும் புரிவதாய் இல்லை.
ஊளையிடுகின்றன.
– முடிந்து போன தசையாடல் பற்றிய கதை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, தமிழியல், லண்டன்.