(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒவ்வொரு நாளும் அவளுடைய மனம் கொஞ்சம் கவிதை, கொஞ்சம் நற்சிந்தனை கேட்டு வாங்கிக் கொள்ளும்.
அன்று காலையில் சுமார் ஐந்து மணிக்கு விழிப்பு வந்தபோது, திறந்திருந்த சாளரத்தினூடே, பனிமூடும் புகையிருளில் முகம் நனைத்த மரங்கள் மௌனமாய் நிற்பதைப் பார்த்தாள்.
இன்றும் வழக்கம் போல ஏ.எல் பரீட்சை மேற்பார்வைக்குப் போக வேண்டும் என்பதே முதலில் நினைவு வந்தது.
“அக்கா… உந்த சுப்பவிசன் காசு வந்தோண்ணை எனக்குச் சப்பாத்து வாங்கித் தந்திடுங்கோ…”
ஆரவாரம் அணைக்காத பஞ்சு மேனித் தங்கையின் வேண்டுகோள்.
“ஓமோம்…. அதுக்கேன் இப்ப விடியப்புறம் எழும்பி நிக்கிறாய்?”
“இல்லையக்கா, பொம்பர் வருது… அம்மா எழும்புங்கோ…. சின் னண்ணா எழும்பு…. எடியே ரூபி எழும்படி….” அந்த வீட்டின் ஆறு ஜீவன் களையும் எழுப்புகிற தங்கையின் கண்ணில் தெரியும் பயம் கூடக் கலா பூர்வமாய் இருப்பதை ரசித்தபடி எழுந்து நற்சிந்தனைக் கொப்பியைப் புரட்டி அன்றைய சிந்தனையைப் படித்தாள்.”
“வழி தவறிய குருடனுக்கு இருளும் ஒன்றுதான். ஒளியும் ஒன்று தான்” என்பதை வாசித்தபடி, முகம் கழுவக் கிணற்றடிக்குப் போனபோது, சுற்றிக் கொண்டிருந்த பொம்பரின் முதலாவது குண்டு வெடிப்புக் கேட்டது.
“அப்பப்… பா…” அன்றைய காலை அமைதியைக் கபளீகரம் செய்து விட்டு ஒலி அண்மையில் தான் கேட்டது.
சரக்கென்று மனதில் ஒரு குலுக்கல்.
“என்ன நடந்தாலும் பரீட்சை நடக்கும். நான் நிண்டு மினக்கிட ஏலாது” சிந்தனை மயிர்கள் ஒவ்வொன்றும் சிலுப்பி நிற்கையில் பொம்பர் குண்டுகளைப் பொழிந்து தள்ளிவிட்டு மறைந்து போனது.
“இது வழக்கந்தானே…?” என்று அந்த நினைவை அகற்றி விட்டு, வேலைகளைத் தொடர ஆயத்தமான போது –
நின்று நின்று, நேராகவும், முன்னும் பின்னும், தலைக்கு மேலும், காலுக்குக் கீழும் என்று அடுக்கெடுத்தன அவை. அவை என்ன எறும் புகளா? இல்லை – றவுண்டுகள்!
மூளையின் இருட்குகையில் ஒரு சில விளக்குகள் பற்றிக் கொண் டன. மனதில் சிறகடித்த பாடல்கள் ஈசல் இறகுகளாய் உதிர்ந்து போயின. எப்படி இந்த இடத்திற்கு றவுண்ட்ஸ் வரும்? இந்த அதிகாலை நேரத்தில்?
“ஆமி மூவ் பண்ணிட்டான், ஐயோ பிள்ளையார் கோயிலடிக்கு வந்திட்டான்…?”
திடுதிப்பென்று தெருவில் அல்லோல கல்லோலம்! திடீரென வெட்டிச் சரித்த மரம் போல வாழ்விழக்கத் தொடங்கியது ஊர்.
கொளுத்தல்கள், கைது செய்யப்பட்டோர்கள் மீது கொடூரமாய் நிகழும் ஆக்கினைகள் பற்றிய செய்திகளைக் கேட்டபடியே, ஊர் மக் களில் அநேகமானோரைப் போல, உடுத்த உடுப்புடனும், தன்னையே நம்பியிருந்த குடும்பத்துடனும் வெறிச்சோடிப் போன மனத்துடனும் அகதியானாள் அவள்,
ஊரின் எல்லைக்கு இப்பால் இருந்த வைரவர் கோயிலுக்கு வந்தா யிற்று. வெளியே இரவு மனம் மாதிரி அமைதியற்றிருந்த போது அம்மா சொன்னாள்.
“இனி மேல் எங்கடை வீட்டின்ரை பனங்காயையும் எங்கடை பனை யின்ரை கிழங்கையும் நாங்கள் பாக்கமாட்டம்”
“அக்கா, பப்பியை விட்டிட்டு வந்திட்டம்…. பாவம் றவுண்ட்ஸ் பட்டுச் செத்துப் போச்சுதோ என்னவோ? தங்கையின் சோகம்.
“ஐடென்டிக் காட்டையும் விட்டிட்டு வந்திட்டன். ஆமி தற்செயலாய்ப் பிடிச்சானோ…. அழிஞ்சன்….” தம்பியின் சோகம்.
“படிப்பிக்கிறதுக்குத் தேவையான புத்தகங்களைக் கூட அடச்சீ…” அடி நெஞ்சில் நெளியும் அலறலுக்கு இடையிலும் “அடுத்தது என்ன?’ என்ற கேள்வி.
ஆசிரியர் என்ற அந்தஸ்து அகதி முகாமுக்குப் போவதைத் தடுத்தது.போனாலும் கூட நிவாரணம் இல்லைத்தானே?
மத்தியதர வர்க்கத்தினர் எல்லோருடனும் போட்டி போட்டுக் கொண்டு அவளும் வீடு தேடும் படலத்தில் கால் வைத்தாள்.
கீழ்த்திசை வெயிலின் கிரணங்களால் நீண்டு விழுந்த அவளது நிழல் குறுகி மீண்டும் மேற்திசை வெயிலின் கிரணங்களால் நீண்டு, குறுகி நீண்டு, நீண்டு குறுகி யாழ்ப்பாணக் கிடுகு வேலிகள் அனைத் தையும் தடவி ஓய்ந்த போது தான்….
நல்லூரில் இருக்கும் “கொழும்பு மாமி” வீட்டில் கொஞ்சக்காலம் தங்க இடம் கேட்கலாம் என்ற எண்ணம் வந்தது.
“ஒழுங்காக உலை வைத்து நாலு நாளாயிற்று: சரியாக உறங் காமல் நூறு மணித்தியாலங்கள் போயிற்று. அடக்கவென்று அமர்த்தி னால் மீறும் கண்கள் பலமுறை வழிந்தோடிற்று” என்ற நிலையில் மிஞ்சி யிருந்த ஒரே ஒரு தகரப்பெட்டியுடன் மாமி வீட்டில் இறங்கினாள். அவள் அம்மாவும் தம்பி தங்கையருமாய் ஐந்து ஜீவன்கள் அவளுக்குப் பின்னால்…..
மாமி “வாருங்கோ” என்று வாய் நிறையச் சொல்லா விட்டாலும், “வரவேண்டாம்” என்று சொல்லவில்லை என்ற அளவில் நிம்மதி.
ஒழுங்காகச் குளித்து நாலு நாள் ஆயிற்று அல்லவா? இன்று நல்லமுறையில் குளிக்கலாம் என்ற நினைவு போதை ஊட்டக் கிணற் றடிக்கு ஓடினாள். விறு விறென்று இரண்டு வாளி அள்ளி ஊற்றிக் கொண்டாள். மெல்லிய குளிர் ஒரு சந்தோஷமாய் உடலெல்லாம் சுற்றி வருகிறது என்று நினைக்க முதல், மாமி “விண்டோ” வுக்குள்ளால் பார்த்திருக்க வேண்டும்!
“மாலா… வட் இஸ் திஸ்? பட்டிக்காட்டுப் பழக்கம்?” குரலின் இறுக்கத்தில் அதிர்ந்துபோனவள், “ஏன் ஏன் என்ன மாமி?” என்றாள்.
“நாங்கள் கிணற்று வாளியை நிலத்திலை வைக்கி றேல்லை… அது மண். டேற் (Dirt) கிணத்துக்குள்ளை போயிடும் சிச்சிச் சீ
அப்போது தான் ஏதோ புரிந்து அவள் கீழே பார்த்தாள். நல்ல பளிங்கு போல் சுத்தமாக இருந்த கிணற்றின் சீமெந்துக் கட்டில் அவள் வாளியை வைத்துத்தான் இருந்தாள்.
“சொறி… மாமி” பதற்றத்துடன் வாளியை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டாள். அந்த நேரத்தில் அவள் முகத்தை ஒரு கவிஞன் பார்த்திருக்க வேண்டும். மூன்றாம் பிறை நிலவைக் கிள்ளித் தரையில் போட்டது போல” என்று பாடியிருப்பானோ என்னவோ, அது அவனைத் தான் கேட்க வேண்டும்.
இந்தச் சீமெந்து நிலத்தில் ஒரு வேளை இரண்டு துணிக்கை மண் இருக்கலாம். அது ஒட்டிக் கொண்டு கிணற்றுக்குள் போய்விடும் என்பதா மாமியின் பயம்? அல்லது….? கிணற்றுக்குள்ளே நீரின் அடியில் படை படையாய் இருக்கும் மண்ணை மாமி என்ன செய்யப்போகிறா?
பகல் மடிந்து இரவு வந்த போதும் நெஞ்சை ஏதோ குடைந்து கொண்டே இருந்தது. அந்தியில் மின்னல் வானத்தை வெட்டும் போதெல் லாம் வானம் அடிபட்ட விலங்கு போல அலறியது. மழை பெய்யவில்லை.
இரவு சாப்பிடாமலே நித்திரையாகிப் போன கடைசித் தம்பி எழுந்தான். “அக்கா… பாத்றூம் போகப் போறன்..”
காலைப் பூவின் அழகான பார்வை அவனுக்கு!
“மேசையிலை விளக்கு இருக்கு ராசா.. எடுத்துக் கொண்டு போயிட்டு வாங்கோ, மறந்திடாமல் நிறையத் தண்ணி ஊத்திட்டு வாங்கோ..”
அவன் மேசையில் இருந்த மாமியின் லாம்பை எடுத்துக் கொண்டு நகர்ந்தான். விளக்குடன் அவன் திரும்பி வரும் போது தான் மாமி கண் டிருக்க வேண்டும்.
“மை.. கோட்… என்ன மாலா? யார் இந்த விளக்கைக் குடுத்தது? நாங்கள் விளக்கு பாத்றூமுக்குக் கொண்டு போறதில்லை. பிறகு அந்த அழுக்கெல்லாம் விளக்கிலை வந்திடும்!”
“அகதி என்ற அழுக்கு நிரந்தரமாய், வீடு வாசலிலை இருக்கிற வையிலை படிஞ்சிடும். ஒரே நாளில் திடீரென்று ஏழையாகிப் போனவை ன்ரை அழுக்கு நிரந்தரப் பணக்காரரிலை படிஞ்சிடும்.. உண்மை தான். ஓராயிரம் சொற்கள் ஒரேயடியாய் அவள் மனதில் எழுந்தன. வாயிலும் அவை எல்லாம்.. வாய்க்குள்ளேயே புகையாய்ப் பிசுபிசுத்துப் போயின.
“சிச்சிச்சீ….. நிலம் பழுதாயிடும்…”
“சிச்சிச்சீ.. சுவரில் ஒட்டக்கூடாது. சுவர் அழுக்காயிடும்…”
“சிச்சிச்சீ….விசிற்றேர்ஸ் வாற இடத்திலை…” அவளது இதயத்தின் உட்சுவரில் இருந்து பல கற்கள் இடிந்து விழுந்தன.
குருஷேத்திரத்துப் பார்த்தனாய்ச் சோர்ந்து நின்ற மூத்த தம்பி, ஓரிரு நாள்களிலேயே வேறு வீடு தேடப் புறப்பட்டு விட்டான். அவனுடன் வெளியே வந்த போது அவள் ஒன்றை வலியுறுத்தினாள்.
“எடே… நாங்கள் அகதியாய் வெளிக்கிட்டம்…. எங்களை விடக் குறைஞ்ச அந்தஸ்து உள்ளவையோடை சேர்ந்து இருக்கலாம். “சினமன் காடின்ஸ் லெவல்” ஆக்களோடை இருக்கேலாது… நீ எங்கையாவது வறுமைப்பட்ட, படிக்காத சனங்கள் இருக்கிற வீட்டில் ஒரு அறை பாத் துக் கொண்டு வா……”
அவன் தலையசைத்துவிட்டுச் சென்றான்.
நிஜம் என்பது கதையை விட வியப்புக்குரியது தான். அல்லா விடில் அவ்வளவு விரைவில் அந்த வீடு கிடைத்திருக்காது.
அவள் மீது மாமி செலுத்திய இரக்கம் நிறைந்த, அதே சமயம், ஏளனம் நிறைந்த பார்வைகளை விலக்கிக் கொண்டு அவள் இந்த வீட்டிற்கு இடம் பெயர்ந்தாள்.
அழகில் மூதேவியை நெட்டித் தள்ளிவிட்ட பெண் இந்த வீட்டின் நாயகி. இளம் கறுப்பில் கொஞ்சம் தூக்கலான நிறம். நிவாரணத்தை மட்டும் நம்பி வாழும் ஏழ்மை வாழ்வு.
ஓர் இரவும் அதன் குளிர் காற்றும், ஒரு பகலும் அதன் இளவெப்பமும் இன்பமாய்க் கழிந்தன.
காய்ந்த அறுகம்புல் தரைபோலச் சவரம் செய்யாத முகத்துடன் இருந்த அந்த வீட்டு ஆண் சொன்னார்…. “கமலம், முருங்கைக் காய்க் கறியிலை கொஞ்சம் அவைக்கும் குடு…. நாங்கள் இனி ஒரே வீட்டிலை இருக்கப் போற ஆக்கள். குடுத்து வாங்கிச் சாப்பிட வேணும்…”
மேகக் கோட்டைகள் தகர்ந்து ஒரு நள்ளிரவில் அவள் உள்ளம் நிரம்ப மழை பெய்தது. எழை மக்கள் என்றாலும் உள்ளம் பெரியது. இவர்களோடு இருப்பது எளிது. இது ஒரு மகிழ்வு! கோழிகளும் நாயும் கூட வீட்டின் தரையை மிகச் சுதந்திரமாகப் பாவிப்பதைப் பார்த்துப் பூரித்துப் போனாள். நன்றியுடன் கறியைப் பெற்றுக் கொண்டு, தாங்கள் செய்திருந்த பூசனிக்காய்க் கறியில் பாதியை வாழை இலையில் போட்டு அவர்களிடம் கொடுத்தாள்.
உடனேயே அதில் கொஞ்சம் கிள்ளி வாயில் போட்டுக் கொண்ட கமலம், சொன்னாள்: “சிச்சிச்சீ… இப்பிடியே பூசனிக் காய்க் கறி வைக் கிறது? இதென்ன உங்களுக்கு ஒண்டும் தெரியேல்லை.”
குத்திவிடுமோ என நினைக்கத் தோன்றும் கூரான மூக்கு,கமலத் துக்கு. அதிலே ஒரு மூக்குத்தி வேறு.
”சிச்சிச் சீ….இதென்ன பாருங்கோ. வெள்ளிக்கிழமை எண்டால்
விரதம் பிடிக்கிறேல்லையே நீங்கள்?”
“ஐயோ இரவிலை வீடு கூட்டப்பிடாது பாருங்கோ”
இருட்டும் புழுக்கமும் துணையாக இருந்த ஓர் இரவில், இதுவரை காலமும் வாசிக்காமல் நிறுத்தியிருந்த, தகரப் பெட்டியோடு வந்துவிட்ட நற்சிந்தனைக் கொப்பியை அவள் புரட்டினாள்.
மலைவேம்பு மர நிழலும் காற்று வீசும் நீட்டு முற்றமுமாய் இருந்த வீட்டில் இருந்து புறப்பட்ட போது கடைசியாக வாசித்த பக்கம்..
“வழி தவறிய குருடனுக்கு இருளும் ஒன்றுதான் ஒளியும் ஒன்று தான்” அதன் கீழே அவள் எழுதத் தொடங்கினாள்.
“அகதியாகப் புறப்பட்டவளுக்கு* வசனம் முடிய முன்னரே தொண்டையைச் செருமி, அங்கு சிக்கிப் போயிருந்த சோகத்தை வெளிக் கொணர முயன்றாள்.
முற்றத்தில் கோழி எச்சத்தின் கார நெடி மூக்கைத் துளைத்தது.
– மல்லிகை, மே1993.
– வரிக்குயில்(சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: நவம்பர் 2016, கலை இலக்கியக்களம், தெல்லிப்பழை