முரளிதரன் ஒரு நெடிய பெருமூச்சுடன் எழுந்துகொண்டான். கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான். பேண்ட்டின் பின்புறம் படிந்திருந்த உலர்ந்த புல் துணுக்குகளைத் தட்டிவிட்டான்.
வலது கையில் கட்டியிருந்த டிஜிடல் கடிகாரத்தில் அவன் எப்போதோ அமைத்திருந்த அலாரம் ’கீங்க்கி…கீங்க்கி…’ என்று சிணுங்கியது.
“எழுந்திரு மோகனா! மணி ஆறே-காலாச்சு, போலாம். அப்பா வேற ஊர்லேர்ந்து வந்திருக்கார்.”
கைகளைத் தலைக்கடியில் முட்டுக்கொடுத்து புல்தரையில் மல்லாக்கப் படுத்தபடி செக்கர் வானத்து விந்தைகளை ரசித்துக்கொண்டிருந்த மோகனா அவனை நோக்கிக் கைகளை நீட்டினாள்.
அவன் அவள் கைகளை வளையல்களுடன் பற்றி இழுத்தபோது மோகனா விலுக்கென்று எழுந்து உட்கார்ந்து தரையில் மல்லிகைப் பூக்கள் உதிர, புறங்கையால் நெற்றியில் விழுந்த குழல்களை சரிசெய்துகொண்டு, “எங்க இந்திரா?” என்றாள்.
*** *** ***
“காடி தஸ்-பந்த்ரா மினிட் மே ரவானா ஹோகி” (வண்டி பத்து-பதினஞ்சு நிமிஷத்தில் கிளம்பும்) என்றான் எதிரில் இருந்தவன்.
அவதார் சிங் தலையாட்டி நன்றி கூறிவிட்டு அந்த பஸ்ஸில் ஏறினான். பஸ் ஏறக்குறைய காலியாக இருக்க, கவுன்ட்டரில் சீக்கிய கண்டக்டர் ஒருவர் டிக்கெட் வழங்கிக் கொண்டிருந்தார்.
நுழைந்ததும் வலப்புறம் காலியாக இருந்த சீட்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சன்னலோரம் அமர்ந்தான்.
அடுத்த இரண்டு நிமிடங்களில் அவன் ஓர் ஆங்கிலப் பத்திரிகையை தன் சீட்டில் வைத்துவிட்டு பேண்ட் பைகளில் கைவிட்டபடி தோளில் ஜோல்னாப்பை ஊசலாட கீழிறங்கியபோது அவன் அமர்ந்திருந்த சீட்டின் அடியில் புத்தம் புதியதொரு டிரான்சிஸ்டர் ’மறதியாக’ விடப்பட்டிருந்தது.
*** *** ***
அப்போதுதான் குழந்தையின் ஞாபகம் வர அவர்கள் துணுக்குற்று நாலா திசைகளிலும் பார்த்தபோது கொஞ்ச தூரத்தில் ஒரு மரத்தின் பின்னால் இருந்து குரல் கேட்டது.
“டாடி, லுக் ஹியர்!”
“இந்து, கமான் நேரமாச்சு. இருட்டறதுக்குள்ள வீட்டுக்குப் போகலாம்.”
அவள் குரல் வந்த திசையை நோக்கி நடந்தான்.
“இதப் பாருங்க டாடி, வொன்டர்ஃபுல்!” என்றபடி குழந்தை ஒரு மரத்தின் பின்னிருந்து வெளிப்பட்டாள்.
“ஏய், என்னது கைல டிரான்சிஸ்டர்?”
“இந்த இடத்ல புல்தரைல கிடந்தது டாடி! புதுசு! யார்தோ தெரியல, பாவம்!”
*** *** ***
தனக்குக் கொடுக்கப்பட்ட ஐந்து டிரான்சிஸ்டர் பெட்டிகளையும் ஒரு வழியாக நகரின் முக்கியமான, ஜனசந்தடி மிகுந்த இடங்களில் புறக்கணித்துவிட்ட நிம்மதியுடன் அவதார் சிங் சாலையில் தன் யெஸ்டி பைக் சீராக படபடக்க வந்துகொண்டிருந்தான்.
பின்னால் ஒரு மாருதி காரின் கொம்பொலி கேட்க பைக்கின் வலப்புறக் கண்ணாடியில் பார்த்தபடி சாலை ஒரம் ஒதுங்கியவன் இந்த ஐந்து மாத காலத்தில் தன் வாழ்க்கை எவ்வளவு தூரம் மாறிவிட்டது என்று நினைத்துக்கொண்டான்.
கடந்த நவம்பர் மாதம் டில்லியை ஆட்டிவைத்த சீக்கிய எதிர்ப்புக் கலவரங்களில் அநியாயமாகத் தாக்குண்டு உடலும் மனமும் சிதைந்து ஏறத்தாழ உயிரிழந்தவன் இறுதியில் நெருங்கிய நண்பனால் காப்பாற்றப்பட்டு இன்று உடல் தேறி மனம் பாறையாக இறுகி ஒரு ஃபீனிக்ஸ் பறவையாக மறுபிறவி எடுத்து எதற்கும் துணிந்தவனாக, பயங்கரவாதிகளின் தற்கொலைப்படையில் ஓர் உறுப்பினனாகத் திகழ்வது குறித்துப் பெருமை கொண்டான்.
சீக்கிய மதத்தையும் இனத்தையும் காக்க அவன் தன் உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்தான். யாரோ இரண்டு கொடியவர்கள் செய்துவிட்ட துரோகச் செயலுக்கு ஒரு சமூகத்தையே பொறுப்பாக்கி ஒரு பாவமும் அறியாத ஏராளமான சீக்கிய மக்களை அநியாயமாகக் கொன்று குவித்ததற்கு அவனுடைய முகம் தெரியாப் பகைவர்கள் பதில்கூறியே ஆகவேண்டும் என்று நினைத்துக்கொண்டபோது அவன் இதழ்களில் ஒரு குரூரப் புன்னகை அரும்பியது.
கூடவே மதம் என்பது எவ்வளவு ஆபத்தான, இருபுறமும் கூரான ஆயுதம் என்ற எண்ணம் எழுந்தது. அதனால்தான் என்னவோ சயன்ஸ் ஃபிக்*ஷன் கதைகள் வருணிக்கும் எதிர்கால உலகங்களில் மதம் முற்றிலும் ஒழிக்கப்பட்ட ஒன்றாக விளங்குகிறது என்று தனக்குள் அனுமானித்துக்கொண்டான்.
அந்தக் கருப்பு நவம்பர் கலவரங்களில் அவன் தன் தொழிலையும் குடும்பத்தையும் உறவினர்களையும் ஒருசேர இழந்து அவனது எதிர்காலக் கனவுகள் குரூரமாகக் கலைக்கப்பட்டுவிட, அமைதியாக ஓடிக்கொண்டிருந்த அவனது தனிமனித, சமூக வாழ்வில் உணர்ச்சிகள் கொந்தளித்துப் பெருகி இன்று அவனை ஒரு காட்டாறாக மாற்றிவிட, இந்த சமூகத்தில் வாழும் சீக்கியர் அல்லாத ஒவ்வொரு மனிதனையும் அவனது நேரடிப் பகைவனாகக் கருதுவதற்கும் அவன் தயாராக இருந்தான்.
ஒரே ஒரு மனிதனைத் தவிர.
அன்று விதியின் கரங்களில் இருந்து அவனை விடுவித்த அந்த ஒரே நண்பனைத் தவிர.
“குட் ஹெவன்ஸ், ஐ ஹாவ் நாட் வார்ன்ட் ஹிம்!” என்று முனகியவன், டெலிஃபோன் பூத் ஒன்று கண்ணில்பட, வண்டியை நிறுத்திவிட்டு முரளிதரன் வீட்டு எண்களை சுழற்றத் தொடங்கினான்.
முரளிதரன் அந்த டிரான்சிஸ்டர் ரேடியோவை வாங்கிக்கொண்டான். பளிச்சென்று புதிதாக இருந்தது. இடப்புறம் மைக்ரோஃபோன் வரிகள் மென்மையாகத் தெரிய வலப்புறம் வால்யூம் குமிழ் அருகில் ’ஸோபர்’ என்ற பெயர் தாங்கியிருந்தது.
பார்க்க ஜப்பான் செட் போலிருக்கு என்று நினைத்துக்கொண்டான். கூடவே சென்னையிலிருந்து அன்று காலை வந்திறங்கிய அப்பாவின் ஞாபகம் வந்தது.
மோகனாவின் கேள்விகள் கவனத்தைத் திசைதிருப்ப, அவளுக்கு சுருக்கமாக விஷயத்தை விளக்கியபடி அவன் தன் ஸ்கூட்டரைக் கிளப்பினான்.
“அந்த டிரான்சிஸ்டரை நான் வெச்சுக்கறேன் டாடி! குடுங்க பாக்கலாம். வீட்லபோய்த்தான் திருகுவேன், ப்ராமிஸ்!” என்றாள் இந்திரா.
மௌனமாகத் தலையாட்டிவிட்டு டிரான்சிஸ்டர் இருந்த அந்த வலைப்பையைக் குழந்தையிடம் கொடுத்தபோது அந்த சைஸிற்கு டிரான்சிஸ்டர் கொஞ்சம் கனமாகப் படுவதாக நினைத்துக்கொண்டான். மேலும் யோசிக்க நேரமின்றி, அவர்கள் பின்னால் உட்கார்ந்ததும் அவன் கியரை நியூட்டரிலிருந்து விடுவித்து வண்டியைக் கிளப்பி சாலையில் விரைந்த மற்ற வாகனங்களுடன் ஐக்கியமானான்.
*** *** ***
“முர்லி பாஹர் கயா ஹ க்யா? ஐ’ம் அவதார் அங்கிள்… கைசே ஹை ஆப்? யூ ஆர் எக்ஸ்பெக்டிங் ஹிம் ரைட் நௌ? அச்சா, ஐ’ல் கம் அரௌன்ட் எய்ட்.” (முர்லி வெளியே போயிருக்கிறானா? நான் அவதார் அங்கிள்… நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? அவனை இன்னேரம் நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? நல்லது, நான் எட்டு மணிக்கு வருகிறேன்.)
அவதார் சிங் மீண்டும் பைக்கைக் கிளப்ப முயன்றபோது சைரன் ஒலிக்க ஒரு போலீஸ் ஜீப் அவனைக் கடந்து சென்றது. தொடர்ந்து நகர பஸ் ஒன்றும் சில கார்களும் ஒரு மாருதி வேனும் விரைந்தன.
பைக்கின் வலப்புறம் கண்ணாடியில் தன் முகத்தை ஒருதரம் பார்த்துக்கொண்டான். அளவாக வெட்டிவிடப்பட்டிருந்த கேசத்தை ஹெல்மெட் மறைத்திருக்க முகம் முழுவதும் மழமழவென்று ஷேவ் செய்துகொண்டு சீக்கியப் புனித வஸ்துக்களான கேசம், கங்கா, கச்சா, கரா, கிர்பன் அனைத்தையும் துறந்து, முரளியின் வார்த்தைகளில் ஒரு ’டிப்பிகல் மத்ராஸி ப்ராமின் லட்கா’வாகக் காட்சியளித்தான்.
ஆம்புலன்ஸ் ஒன்று அலறியபடி விரைய பின்னால் மணியடித்தபடி ஒரு தீயணைப்பு வாகனமும் தொடர்ந்து மற்றொரு போலீஸ் ஜீப்பும் சென்றன.
வழிவிட்டு ஒதுங்கிய நீளமான ட்ரக் ஒன்று ’தம்’ பிடித்து சாலையின் நடுவுக்கு நெளிந்து சோம்பேறித்தனமாக ஊர்ந்துகொண்டிருக்க, அவர்களது திட்ட முதல்படி வெற்றியில் மகிழ்ந்து அவன் உற்சாகமாக பைக்கை ஓசையுடன் கிளப்பி வேகம் பிடிக்க அந்த எதிர்பாராத நிகழ்ச்சி நடந்தது.
ஸ்கூட்டர் ஒன்று அவனைக் கடந்து விரைந்து விடாப்பிடியாக ஹார்ன் விர்ரித்து அந்த நீளமான ட்ரக்கின் வலப்புறம் கடக்க முயன்றது.
அவதார் சிங் அவநம்பிக்கையுடன் பார்த்தான். ஸ்கூட்டரின் பின்சீட்டில் தாயின் மடியில் அமர்ந்திருந்த ஐந்து வயதுக் குழந்தை ஒன்று தன் மடியில் ஒரு வலைப்பையை வைத்துக்கொண்டு அதனுள்ளிருந்த டிரான்சிஸ்டர் குமிழ்களை ரகசியமாக ஆராய்ந்து கொண்டிருந்தது இவ்வளவு தூரத்திலிருந்தும் தெளிவாகத் தெரிந்தது.
அவன் தன் பைக்கின் வேகத்தை அதிகரித்து அவர்களுக்கு இடையே இருந்த தூரத்தைக் குறைக்க முற்பட்டபோது, அது முரளிதரன்தான் என்று திகிலுடன் உதயமாக, மேலும் பைக்கின் வேகத்தை அதிகரிக்க முயன்றபோது இடப்புறம் ஒரு சந்தில் இருந்து திடீரென்று வெளிப்பட்ட போலீஸ் ஜீப் ஒன்று சைரன் ஒலிக்க இடையில் நுழைந்துகொள்ள, ஸ்கூட்டர் அவன் பார்வையில் இருந்து மறைந்துபோனது.
அடுத்த சில வினாடிகள் அவதார் சிங் தன் தலைக்குள் வெற்றிடம் பாய்ந்து மரத்துப் போவதை உணர்ந்து முழுமூச்சுடன் பைக்கின் வேகத்தை மேன்மேலும் அதிகரித்து இடைவிடாது ஹார்ன் அடித்து ஒவ்வொரு வாகனமாகக் கடந்தபோது அந்த போலீஸ் ஜீப்பும் பிடிவாதமாகக் குறுக்கிட்டு முன்னால் செல்ல, பின்னால் ஒரு ஆம்புலன்ஸின் சங்கொலி கேட்க, அவன் கவலையுடன் பார்த்தபடி விரைய, முன்னால் கொஞ்ச தூரத்தில் சாலை சிணுங்கித் திரும்பியபோது திருப்பத்தில் அந்த ஸ்கூட்டர் தென்பட்டது.
யாரோ தன்னை பெயர்சொல்லி உரக்கக் கூப்பிடுவதைக் கேட்ட முரளிதரன் வண்டியின் வேகத்தைக் குறைத்து திரும்பிப் பார்த்தபோது அவதார் சிங் கண்ணில்பட, சட்டென்று ப்ரேக்கை அழுத்தினான்.
மறுகணம் பின்சீட் பக்கம் எழுந்த பயங்கர ஒலியில் தன்னைத் தாக்கியது எது என்று உணர்வதற்குள் அவன் தூக்கி எறியப்பட்டு முதுகெல்லாம் ரத்த விளாறாகி எலும்புகள் நொறுங்க விழுந்தபோது, அவன் நண்பன் அவதார் கைகளால் முகத்தைப் பற்றிக்கொள்வதும் அவனது பைக் தடுமாறுவதும் கண்களில் பளிச்சிட, ’காட், ஹி இஸ் கோயிங் டு டை!’ என்று பொருத்தமில்லாமல் நினைத்தவன் அந்த நினைப்பு முடிவதற்குள் முடிந்துபோனான்.
முரளிதரனின் ப்ரேக் தோற்றுவித்த குலுக்கலில் குழந்தை இந்திராவின் விரல்கள் அந்த டிரான்சிஸ்டர் குமிழை வலம்புரித்துவிட, உள்ளிருந்த வெடிகுண்டின் டெடனேட்டர் பின்புறம் அமைந்த ஒன்பது வோல்ட் பாட்டரியுடன் இணைப்புப் பெற்று மின்பொறிகளை உதிர்க்க, சுற்றியிருந்த இருநூறு கிராம் வெடிமருந்து பற்றிக்கொண்டு ராட்சத ஆற்றலுடன் விரிவடைந்து அழுத்தத்தைப் பலமடங்கு அதிகரிக்க, குண்டின் வெளிஓடு சுக்குநூறாகி சுற்றிலும் பறந்து கணைகளாகத் தாக்க, வெடியோசையைத் தொடர்ந்த புகைமண்டலம் தெளிவானபோது பின்சீட்டில் இருந்த இருவரும் உருத்தெரியாமல் சிதைந்து கருகியிருந்தனர்.
அவதார் சிங் தலைக்குள் இன்னொரு குண்டு வெடித்து அவன் கைகள் தாமாக முகத்தைப் பொத்திக்கொள்ள, அந்த யெஸ்டி பைக் தத்தித் தடுமாறி சில அடிகள் முன்னேறி பின்னால் அந்த ட்ரக் மோத, அவன் தூக்கி எறியப்பட்டு பலத்த காயங்களுடன் சாலையில் விழுந்து மல்லாந்தான்.
ஹெல்மெட் காரணமாக இன்னமும் உயிரோடு இருந்தவன் போலீஸ் அதிகாரி ஒருவரால் பொறுக்கப்பட்டு அவரது முதல் கேள்விக்கு பதிலாகத் தன் பெயரைக் கூறியவன், “எதோ டிரான்சிஸ்டர்னு கத்தினையே, என்னய்யா அது?” என்ற அடுத்த கேள்விக்கு பதில்கூற முயன்று நினைவிழந்தான்.
*** *** ***
ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்பட்டபோது அவனுக்கு நினைவு திரும்பியது. உடல் எங்கும் ரத்தக் காயங்களும் கைகால்களில் எலும்பு முறிவுகளும் திடீரென்று ஏராளமாக வலிக்கத் தொடங்க, விழியோரம் அந்த போலீஸ் அதிகாரி சன்னல் பக்கமாக அமர்ந்திருப்பதும், அருகில் இரண்டு பெரிய ஒரு சிறிய உடல்கள் வெள்ளைத் துணியால் முழுதும் மூடப்பட்டு அவனுடன் பயணம் செய்வதும் தெரிந்தது.
நடந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வர மனம் வெதும்பி, “ஐ ஹாவ் கில்ட் முர்லி! ஐ ஹாவ் கில்ட் தெம் ஆல்!” என்று மௌனமாகப் புலம்பினான்.
அந்த அதீதமான சோக வெள்ளம் அவன் நினைவுகளில் பிரவகித்து உணர்வுகளில் தளும்பிக் கண்களில் தாரையாகப் பெருக்கெடுக்க, அந்த வெள்ளத்தில் அவனுடைய விபரீத ஆசைகள், இன உணர்வுகள், காலிஸ்தான் கனவுகள் கரைந்துவிட, மின்சாரம் துண்டிக்கப்பட்ட கூறை விசிறியாக அவன் உடல் உணர்வுகள் செயல் இழக்கத் தொடங்க, அவனுக்கென்று நிர்ணயிக்கப்பட்ட வாழ்வின் கடைசிக் கணங்கள் மணிக்குமிழில் வடியத் தொடங்க, பிறந்தும் பிறவாத இறந்தும் இறவாத அந்த சோக சுக நிலையில் எண்ணங்கள் பிம்பங்களாக உருப்பெற்று அவன் முன் காற்றில் மிதந்தன.
’யூ லுக் லைக்க டிப்பிகல் மத்ராஸி ப்ராமின் லட்கா யார்!’
’எ வெரி ஸ்வீட் கர்ல் முர்லி, யுவர் இந்திரா. ஒரு இருவது வருஷம் முன்னாடி அவள் பிறந்திருந்தா ஐ வுட் ஹாவ் மேரீட் ஹர்!… இந்திரா கௌர்!… அச்சா லக்தா ஹ ந ஏ நாம்?’ (இந்தப் பெயர் நன்றாக இருக்கிறதல்லவா?)
பின்னால் ஆரவாரம் கேட்கத் திரும்பியபோது ஒரு கூட்டம் ஆயுதங்களுடன் அவன்மேல் பாய்ந்தது. அடிகளின் மழையில் அவன் மரவட்டையாகச் சுருண்டு டர்பன் கிழிய முகம் எங்கும் ரத்தம் கசிய மரக்கட்டையாகச் சாய்ந்தபோது ஸ்கூட்டர் ஒன்று ஓசையின்றி அருகில் வந்து நின்றது.
அவன் மௌனமாக முரளியின் கைகளில் கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தான். முரளி அவன் முதுகை வருடியபடி, ’ஐயாம் ஸோ ஸாரி அபௌட் யுவர் பேரண்ட்ஸ் அவதார்! அன்ட் அபௌட் யுவர் ந்யூபைல் ஸிஸ்டர்! ஒரு மதத்தோட பெயரால மனிதர்களை வேட்டையாடுவதை விடக் காட்டுமிராண்டித் தனமான செயல் இல்லை. இந்த நாட்லயா காந்தி பிறந்தார்? வி ஆர் எ ஃபர்ஸேக்கன் லாட், அவதார்! விமோசனமே கிடையாது’ என்றான்.
அவன் அந்த ஐந்து டிரான்சிஸ்டர்களையும் திறமையுடன் ஒரு பார்க், ஒரு ஹோட்டல், ஒரு வயல்வெளி, ஒரு பாங்க் மற்றும் ஒரு பஸ்ஸில் புறக்கணித்துவிட்டு வெற்றியுடன் பைக்கில் ஊர்ந்துகொண்டிருந்தபோது நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது இப்போது வெட்கமாகவும் வேதனையாகவும் அவமானமாகவும் இருந்தது.
“ஸேம் டிரான்சிஸ்டர் தட் கில்ட் ஹிம்” என்று அவன் ஈன ஸ்வரத்தில் முனகியபோது முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டு, “வாட் டிரான்சிஸ்டர் யங் பாய்? கௌன் பனாயா ஓ சப் கோலியான், போலோ” (யார் அந்த குண்டுகளைத் தயாரித்தது, சொல்லு) என்ற கட்டைக்குரல் ஒன்று காதருகில் கேட்டது.
“ப்ளீஸ், என்னத் தனியா விடுங்களேன்! நான் நிம்மதியா, அமைதியா சாகணும்” என்று கண்களை மூடிக்கொண்டான்.
“காந்திய வழிகள்ல எதும் பயன் கிடையாது” என்றது அந்த கட்டைக்குரல் ஹிந்தியில்.
ஒரு வலிய கரம் அவனது ஜனன விதைகளைப் பற்றியது. முதலில் மெதுவாகவும் போகப்போக அழுத்தமாகவும் பிசையத் தொடங்கியது.
“இப்ப சொல்லு! யார் கொடுத்தது அந்த டிரான்சிஸ்டர்?”
அவதார் பற்களைக் கடித்துக்கொண்டான். அவனும் முரளியும் அந்தக் கல்லூரியின் பின்புறம் யூரினல்ஸில் இருந்தனர். ’கவர் யுவர் சீஸ் அவதார்! எல்லாத்தயும் நேஷனலைஸ் பண்ற காலம் இது. ஏதாவது பெரிசா பாத்தா நேஷனலைஸ் பண்ணிடுவாங்க!’ என்று முரளி சிரித்தான்.
கலைடாஸ்கோப்பில் காட்சி மாரியது. முரளியும் அவனும் ஹாஸ்டல் அறையில் தலைகீழாக, ஏறக்குறைய நிர்வாணமாக நின்றுகொண்டு உடற்பயிற்சி செய்தவாறே செய்தித்தாள் படித்துக்கொன்டிருந்தனர். திடீரென்று முரளி செய்தித்தாளை விசிறி எறிந்துவிட்டு, “என்னய்யா பெரிய மதம்! தாடி வெச்சா முஸ்லிம், தலப்பா கட்டினா சீக்கியன். தாடிய எடுத்துட்டுப் பட்டையடிச்சா சைவன், நாமம் போட்டா வைஷ்ணவன். சிலுவை போட்டுண்டா கிறிஸ்துவன். அவத்துப்போட்டா எல்லாம் மனுஷன்தானய்யா?” என்றான்.
திடீரென்று எங்கிருந்தோ இரண்டு கவிதை வரிகள் தலைகாட்டின.
“குருநானக் ஷா ஃபக்கீர்
ஹிந்து கா குரு, முஸல்மான்கா பீர்.”
சட்டென்று முளைத்தது அந்தக் கேள்வி. ’இறைவன் ஒருவனே என்று கரடியாகக் கத்தும் மதங்கள் யாவும் மனிதன் ஒருவனே என்று ஏன் போதிக்கத் தவறிவிட்டன?’
கால்களிடையே அழுத்தமும் வலியும் அதிகமாக அவன் ஒருகணம் முழுவதும் விழித்துக்கொண்டு தன்னை எதிர்நோக்கியிருந்த போலீஸ் முகத்திடம் ஸ்பஷ்டமான ஹிந்தியில், “அவுத்துப்போட்டா எல்லோரும் மனுஷன்தான்!” என்றான்.
அவர் அவனை நம்பமுடியாமல் பார்த்தார். அவன் கண்கள் மெல்ல மூடிக்கொள்ளத் தலை சாய்ந்து எங்கும் இருள் சூழ்ந்தது.
– ரமணி (இதயம் பேசுகிறது, 13 Mar 1988)