எங்கள் அண்ணன் ஊரறிந்த முரடன். அக்கம் பக்கத்துக் குடியிருப்புப் பகுதிகளிலும் பிரபலமானவன். நான் படிக்கும் கல்லூரி, தங்கை விந்தியாவின் மேல் நிலைப் பள்ளி, பொள்ளாச்சியில் உள்ள பிற பள்ளிகள் இங்கெல்லாம் கூட அவனைப் பற்றித் தெரியும்.
காதல் தொந்தரவு இளைஞர்கள், ஏவாள் கேலிப் பொறுக்கிகள், மாணவக் காதலர்கள், கவர்ச்சி மற்றும் ஆபாச ஆடைப் பெண்கள் ஆகியோருக்கு அவன் எதிர் நாயகன். ஆண்களின் தொந்தரவுகளால் பாதிக்கப்படும் பெண்களைப் பொறுத்த வரைக்கும் கதாநாயக சகோதரன். வயசுப் பெண்களின் பெற்றோர்களுக்கு தத்தெடுக்காத பிள்ளை.
எங்கள் அண்ணனின் நடவடிக்கைகள் முரட்டுத்தனமாக இருக்கும். மாணவ – மாணவி ஜோடிகளை எங்கே பார்த்தாலும் அவனுக்கு அடக்க முடியாத கோபம் வந்துவிடும். முதுநிலைக் கல்லூரி மாணவர்கள் என்றால், அவர்கள் வயதுக்கு வந்தவர்கள் என்பதால் தனக்குள்ளேயோ, உடனிருப்பவர்களிடமோ எரிச்சலாகப் புலம்புவதோடு விட்டுவிடுவான். உயர் நிலைப் பள்ளி, மேல் நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் சீருடையோடு தனியாக நின்று கடலை வறுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தால் விட மாட்டான். அவர்களிடம் சென்று எந்தப் பள்ளி, எந்த வகுப்பு, முகவரி, பெற்றோர் பெயர், அவர்களது அலைபேசி எண் ஆகியவற்றை விசாரித்து, பள்ளிக்கும் பெற்றோருக்கும் தெரிவித்துவிடுவான். அவர்களே அறியாதபடி அவர்களின் சல்லாபப் பேச்சுகளை அலைபேசியில் பதிவு செய்தும், அவர்களைப் புகைப்படம், காணொளி எடுத்தும், ஆதாரத்துடன் அனுப்புவதும் உண்டு.
“ஏழாங் க்ளாஸ் எட்டாங் க்ளாஸ் புள்ளைக லவ்ஸ் உட்டுட்டிருக்குதுக. மொளைச்சு மூணு எலை விடறக்குள்ள டூயட் கேக்குது. பாத்துங் ஸார்,… பெத்தவீகளுக்கு மானக்கேடு உண்டாக்கறதுமில்லாம, உங்க பள்ளிக்கொடத்துக்கும் கெட்ட பேரு வந்தறப்போகுது” என்று பள்ளித் தலைமையாசிரியர்களிடமும், “பள்ளிக்கொடத்துக்கு அனுப்புனா மட்டும் பத்தாது,… உங்க புள்ளைக பசங்க என்ன பண்ணுது, ஏது பண்ணுது, அதோட நெனப்பு எப்புடி, நடத்தை எப்புடிங்கறதயும் கெவுனிச்சுக்கணும்ங்க. இல்லாட்டி, நாளைக்கு அதுகளும் கெட்டு, உங்க குடும்ப மானத்தையும் கெடுத்திப் போடும்” என்று, முகம் தெரியாத பெற்றோர்களிடமும் அலைபேசியில் எச்சரிப்பான்.
“யாரோ எக்கேடோ கெட்டுப் போனா நமக்கென்னடா? அவுங்களுக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்? நீ எதுக்கு கண்டவங்களயும் பத்தி அவுங்க வீட்டுலயும், ஸ்கூல்லயும் புகார் சொல்லிட்டிருக்கற?” அம்மா ஆரம்பத்தில் கேட்டாள்.
“உன் மகன் கெடுதல் செஞ்சாத்தான் நீ வெசனப்படனும். அவன் நாலு குடும்பத்தோட மானம் காப்பாத்தற நல்ல காரியத்த செய்யறான். அதை எதுக்குக் குத்தம் சொல்ற? ஊரான் புள்ளைய ஊட்டி வளத்தா தம் புள்ளை தானே வளரும்கற கோப்புல, ஊரான் புள்ளைகள நல்ல வளிக்குக் கொண்டு வந்தா, நம்மூட்டுப் புள்ளைகளும் நல்ல வளில வளரும்” என்பார் அப்பா.
அண்ணனுக்குப் படிப்பு சரியாக வராமல், ஆறாம்ப்பில் இரண்டு வருடம், ஏழாம்ப்பில் இரண்டு வருடம் எனத் தோல்வியுற்று, எட்டாம் வகுப்பு காலாண்டுத் தேர்வோடு படிப்புக்கு விடைகொடுத்துவிட்டு, மெக்கானிக் வேலைக்கு எடுபிடியாகப் போனான். இப்போது இரு சக்கர, நாற்சக்கர மெக்கானிக் கடைக்கு முதலாளியாக இருக்கிறான்.
இரண்டு தங்கைகளின் முரட்டு அண்ணன் என்றால் திரைப்படத்தில் என்ன பிம்பம் வருமோ, கிட்டத்தட்ட அதே மாதிரிதான் எங்களிடம் பாசம், செல்லம், கண்டிப்பு எல்லாம் காட்டுவான்; கேலி, கிண்டலும் செய்வான். நியாயமான ஆசைகளை மறுப்பதில்லை. ஆனால், அனாவசியமான எதையும் அனுமதிக்க மாட்டான். பாய் ஃப்ரண்ட், காதல், சாட்டிங், டேட்டிங், இந்த மாதிரி வார்த்தைகள் எங்கள் அகராதிலயே இருக்கக் கூடாது என்பது அவனுடைய கட்டளை.
நாங்கள் மட்டுமல்ல; எந்தக் குடும்பப் பெண்களுமே அப்படித்தான் இருக்க வேண்டும் என நினைப்பான். அதனால்தான் ஊரார் வீட்டுப் பெண் பிள்ளைகளானாலும் அவர்கள் கெட்டுப் போகக் கூடாது என்பதற்காகப் பல நல்ல காரியங்களைச் செய்துகொண்டிருந்தான்.
நான் கல்லூரிக்கும், விந்தியா பள்ளிக்கும் சென்று வருவது பேருந்தில்தான். தாமதமாகிவிட்டாலோ, குறிப்பிட்ட காரணங்கள் இருந்தாலோ மட்டும் அண்ணன் பைக்கில் கொண்டுவந்து விடுவான். ஆனால் எங்களது பேருந்துகளில் திடீர் என இடைவழியில் பரிசோதகர் மாதிரி ஏறி, நாங்களும் மற்ற மாணவ – மாணவியரும் எப்படி நடந்துகொள்கிறோம் என்று சோதனை செய்வான்.
கல்லூரிக்கும் பள்ளிக்கும் வந்து, ஆசிரிய – ஆசிரியைகளையும், எங்கள் தோழியரையும் சந்தித்து, எங்கள் படிப்பு, நடத்தை பற்றி விசாரிப்பான். இதனால்தான் அவனை எங்கள் ஆசிரியர்கள், தோழிகள் எல்லோருக்கும் தெரிய வந்தது.
எங்கள் கல்லூரியில் அவன் பிரபலம் ஆனதற்கு இன்னொரு முக்கிய காரணம், அங்கு நடந்த அவனது ஒரு அதிரடிச் செயல்.
அப்போது நான் கல்லூரியில் சேர்ந்து ஐந்தாறு மாதங்களே இருக்கும் என்பதால் எனது நெருங்கிய தோழிகள் ஓரிருவருக்கு மட்டுமே அண்ணனைத் தெரியும். ஒரு நாள் சாயந்திரம், கல்லூரி நிறுத்தத்தில் அண்ணன் க்ரீஸும் அழுக்கும் படிந்த பணிச் சட்டையோடு பைக் பக்கமாக நின்றுகொண்டிருந்தான். என்னைப் பார்த்தும் கூட யாரோ மாதிரி இருந்தான்.
வழக்கம் போல சோதனை செய்ய வந்திருக்கிறான் எனத் தெரிந்து, நானும் அதே மாதிரி என் தோழிகளோடு நின்றுகொண்டிருந்தேன்.
பேருந்து நிழற்குடையில் கல்லூரி மாணவ – மாணவிகள் சிலர் கலந்து அமர்ந்திருந்தனர். அதில் இரண்டாமாண்டு மாணவி ஒருத்தி, பக்கத்தில் இருந்த பையனோடு ஒட்டி உரசி, அவனது தோள் மேல் கை போட்டு கொஞ்சிக்கொண்டும், தொடையில் தொட்டுத் தொட்டுப் பேசிக்கொண்டும் இருந்தாள். நிழற்குடையில் இருந்த பெரியவர்கள் இதைக் கண்டு முகம் சுழித்தனர். அண்ணன் அந்த ஜோடியையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். அதை கவனித்து அந்தப் பையன் தர்ம சங்கடமாக நெளிந்து நகர்ந்தாலும், அந்தப் பெண் தனது சரச சல்லாபங்களை விடவில்லை.
அண்ணன் அவளிடம் சென்று, “ஏம்மா,… அந்தத் தம்பிக்கு அது புடிக்கிலயாட்டிருக்குது. நீ ஏன் அவனத் தொந்தரவு பண்ற? பேசாம லாட்ஜுக்குப் போயி நின்னீன்னா கஸ்டமருக, மாமா பசங்க தேடி வருவாங்கல்ல! உனக்கு அரிப்பும் தீந்த மாதிரி இருக்கும், காலேஜ் புள்ளைன்னா செமையா பணமும் கெடைக்கும்” என்றான்.
எனக்கே அதைக் கேட்க பயங்கர அதிர்ச்சியாகவும், சங்கடமாகவும் இருந்தது. இவன் எனது அண்ணன் எனத் தெரிந்தால் மற்ற மாணாக்கர்கள் என்னைப் பற்றி என்ன சொல்வார்களோ என்று கவலைப்பட்டேன்.
பெருத்த அவமானமடைந்த அந்தப் பெண், வேகமாக எழுந்து விலகிச் சென்றாள்.
“உன்ன மாதிரி பொண்ணுகனாலதான் ஒட்டுமொத்த காலேஜ் பொண்ணுகளுக்கும் கெட்ட பேரு.” அங்கிருந்த மற்ற மூத்த மாணவியர் அவளைத் திட்டினர்.
“அவரு வினோதினியோட அண்ணன்.” எனது தோழி ஒருத்தி சொல்ல, அங்கிருந்த கல்லூரி மாணாக்கர்கள் அனைவருமே அவனையும் என்னையும் பார்த்தனர். அண்ணன் அதைக் கண்டுகொள்ளாமல் பைக்கைக் கிளப்பிப் போய்விட்டான்.
மறு நாள் இந்த விஷயம் கல்லூரி முழுக்கப் பரவி, இன்னும் அவமானமாகி, சில நாட்களுக்கு அந்த சல்லாப மாணவி கல்லூரிக்கே வரவில்லை. அதன் பிறகு வந்தாலும் பையன்களோடு சேர்ந்து நிற்பதைக் கூட பார்க்க முடியவில்லை.
இதே போல அவன் எதிர்வினை புரிந்த இரு சம்பவங்கள் இப்போது நினைவுக்கு வருகின்றன.
இது அம்மா சொல்லி நான் தெரிந்துகொண்டது.
அம்மாவும் அண்ணனும் பொள்ளாச்சி கடை வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, எதிரில் ஓர் அப்பாவும் சுமார் 22 – 23 வயது மகளும், ஆங்கிலத்தில் உரையாடியபடி நடந்து வந்துள்ளனர். உயர் மத்திய வர்க்கம். பெண் அழகாக, லெக்கின்ஸ், டி ஷர்ட் போட்டு, கொழுகொழுவென இருந்தாளாம். ஆனால், ப்ரா போடாததால் மார்க் காம்பு துருத்தித் தெரிந்ததாம்.
அம்மாவும் அதை கவனித்துவிட்டு, “டே,… பேசாம வா. போலீஸ் ஸ்டேஷன் வேற பக்கத்துல” என்று முன்னெச்சரிக்கையாகத் தடுத்திருக்கிறாள்.
“நான் என்ன ஈவ் டீசிங்கா பண்ணப் போறேன்? நீ சும்மா இரு” என அவளை அதட்டிவிட்டு, அவர்கள் நெருங்கியதும், “ஒரு நிமுசம்” என நிறுத்தி, “தமிழ் தெரியுமா? ஐட்டம் லோக்கல் பீஸா, வெளியூர் பீஸா? என்ன ரேட்டு?” என்று கேட்டிருக்கிறான்.
அவர்கள் பதற்றமும் கோபமுமாகி காச்சு மூச்செனக் கத்தி, “நாங்க அப்பாவும் – மகளும்” என சொல்லியிருக்கின்றனர்.
“பாத்தா, குடும்பம் மாதிரி தெரியலையே….! இந்தப் புள்ள கேஸு மாதிரியும், நீ கஸ்டமரோ மாமாவோ மாதிரியும்தான தெரியறீங்க? அவ ப்ரா போடாம இப்புடி மார்க் காம்ப துருத்திக் காட்டீட்டு வர்றா. நீயும் அப்பன்னு சொல்லீட்டு அவ கூட ஜாலியா கடை வீதில வலம் வந்துட்டிருக்கற?! தூத்…. திருமதிர்ச்ச! வெக்கமா இல்ல? ஏய்யா,… மகள மார்க்கெட்டுல விக்க வந்தயாக்கு? இல்ல, லாட்ஜ்ல விட்டுட்டு கமிஷன் வாங்கிட்டுப் போக வந்தயா? அப்பனாமா அப்பன்! இந்த லச்சணத்துல இங்கிலிப்பீஷ் பேச்சுக்கு ஒண்ணும் கொறைச்சலில்ல!
“அவுசாரிகளாட்ட ட்ரஸ் பண்ணிட்டு வர வேண்டியது,… அப்பறம் அங்க தொட்டான் – இங்க தடவுனான்,… அதையப் புடிச்சான் – இதையத் தட்டுனான்னு கேஸ் குடுக்க வேண்டியது. ஏய்யா,… அந்தப் புள்ளைதான் வயசுக் கோளாருலயோ, தெனவெடுத்தோ திரியுதுன்னா, பெத்த அப்பன் உனக்கு புத்தி வேண்டாம்?” என வெளுத்து வாங்கியிருக்கிறான்.
வழிப் போக்கர்களும் வேடிக்கை பார்த்து நிற்க, குறுகலான அந்தக் கடை வீதியில் கொஞ்ச நேரம் போக்குவரத்து நெரிசல் கூட ஆகிவிட்டதாம்.
இது, நானும் பார்வையாளராக இருந்த சம்பவம்.
நாலைந்து ஆண்டுகளுக்கு முன், நான் மேல் நிலை படித்துக்கொண்டிருந்த சமயம், அம்மா, அண்ணனுடன் உறவினர் திருமணத்துக்காக கோயமுத்தூர் சென்றிருந்தோம். துடியலூர் நகரப் பேருந்தில் முன் பக்கம் நின்றுகொண்டிருந்த 20 வயதுப் பெண், துப்பட்டா போடாமல், ஊடுருவல் சுடிதார் அணிந்திருந்தாள். அதற்குள் அவள் போட்டிருந்த ப்ரா அப்பட்டமாக வெளியே தெரிந்து, பக்கத்தில் இருந்த பெண்களை முகம் சுழிக்க வைத்தது. முன்புறம் இருந்த விடலைப் பையன்கள், ஆண்கள், கிழடுகள் கூட வெறித்துப் பார்த்து சலைவாய் ஒழுக்கிக்கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த அண்ணன் அந்தப் பெண்ணிடம் சென்று, “ஏம்மா கவர்ச்சி ராணி,… நீ எதுக்காக இந்த ட்ரஸ் போட்டிருக்கறங்கறது தெரியுது. அதனால, சுத்தியிருக்கற ரசிகர்கள் சார்புல அடியேன் சொல்லிக்கறது என்னன்னா,… ஸீ த்ரூல தெரியற உன்னோட கருப்பு ப்ரா சூப்பர்! அதுலயும் அதோட பார்டர்ல ஸ்ப்ரில் டிஸைன் இருக்குதே,… அற்புதம்! ஜட்டி எப்புடி,… என்ன கலர்? அதுலயும் இதே மாற டிஸைன் இருக்குதா? எங்க காமி பாக்கலாம். பாட்டி,… நீங்க கொஞ்சம் நகுந்துக்கங்க,…. அந்தப் பொண்ணு ஜட்டியவும் ஸீ த்ரூல காமிக்கட்டும். நாங்க ஆம்பளைக நல்லாப் பாத்து ரசிச்சுக்கறம்…” என்றான்.
“நாக்கப் புடுங்கிக்கற மாறக் கேட்ட தம்பி” என்ற அந்தப் பாட்டி, அவளிடம், “ஏனம்முணி,… உங்கூட்டுல இப்புடி அண்ணன் – தம்பி, அய்யனாத்தா இல்லியா? இல்ல,… அவிகளே தண்ணியத் தொளிச்சு தாட்டி உட்டாங்களா?” என அர்ச்சனை பொழிந்தாள்.
“ட்ரஸ் போடறது மறைக்க வேண்டியத மறைக்கறக்குத்தான். இப்புடி ஸீ த்ரூ, டைட் ட்ரஸ், லோ ஹிப், லோ நெக்னு கவர்ச்சி காட்டணும்னா அப்பறம் அந்த ட்ரஸ் எதுக்கு? அதையவும் போடாம அம்மணக்குண்டியா வர வேண்டீதுதான?” என்று, மற்ற பெண்மணிகளும் பிலுபிலுவெனப் பிடித்துக்கொண்டனர்.
அவமானம் தாங்காமல் தலை குனிந்து, கூனிக் குறுகி, அடுத்த நிறுத்தத்திலேயே இறங்கிவிட்டாள் அப் பெண்.
பெண்களின் ஒழுக்கத்துக்கு முதல் அடையாளம், அவர்களது ஆடை என்பது அண்ணனின் சித்தாந்தம்.
“இழுத்துப் போத்திட்டு, குனிஞ்ச தலை நிமுராமப் போற பொம்பளைகள்லயும் ஒழுக்கம் கெட்டதுக இருக்கலாம். அது வேற விசியம். ஆனா, எந்த ட்ரஸ்ஸா இருந்தாலும் கவர்ச்சி காட்டணும்னு ஆரம்பிச்சா அது தப்பான வழில போறதுக்கோ, ஆம்பளைக தப்பா நடந்துக்கறதுக்கோ வாய்ப்பாயிரும்” என்று சொல்வான்.
பாவாடை தாவணி, சேலை தவிர்த்து நவீன ஆடைகளில் அவன் எங்களுக்கு அனுமதிப்பது சுடிதார், அங்கங்களை வெளிக்காட்டாத வட இந்திய ஆடைகள் மாதிரி ரகங்கள்தான். அதிலும் சுடிதாரில் துப்பட்டாவை சரியானபடி போட வேண்டும், இடுப்புப் பகுதி இறுக்கமாக இருக்கக் கூடாது. ஜீன்ஸ், ட்டி ஷர்ட், லெக்கின்ஸ் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை.
அண்ணனுக்குப் படிப்பு குறைவென்றாலும் நாட்டு நடப்பு, ஊர் உலக நடப்பு தெரியும். போதுமான பொது அறிவும் இருக்கும். அவன் பேசுவதைக் கேட்பவர்கள் அவன் எட்டாவது மட்டுமே படித்தவன் என்றால் நம்பவே மாட்டார்கள். குறைந்தபட்சம் மேல் நிலையாவது படித்திருப்பான் என்றே நினைப்பார்கள்.
அலைபேசி, இணையம், முகநூல் இவை யாவும் பெண்கள் கெட்டுப் போவதற்கு எளிதான வழிகள் என்பது அவனுடைய கண்ணோட்டம். அவற்றின் தேவைகளையோ நன்மைகளையோ அவன் மறுப்பதில்லை. அவற்றில் உள்ள அனாவசியங்கள், ஆபத்துகள் பற்றித்தான் எச்சரிக்கை செய்வான்.
பள்ளி மாணவர்களுக்கு அலைபேசி தேவையே இல்லை என்பது அவனது உறுதியான முடிவு. அதனால் விந்தியாவுக்கு இன்னும் அலைபேசி கிடையாது. எனக்குமே கல்லூரி இரண்டாம் ஆண்டில்தான் அடிப்படை மாடல் வாங்கிக் கொடுத்தான். அதைத்தான் இன்னமும் உபயோகித்துக்கொண்டிருக்கிறேன்.
வீட்டில் கணிணி, இணையம் இருக்கிறது. ஆனால், அது ஹாலில் இருக்கும். அங்கேதான் அண்ணன் தூங்குவான். தொலைக்காட்சி, டைனிங் ஹாலில் இருக்கும். இதிலேயே புரிந்திருக்குமே,… இது எப்படிப்பட்ட ஏற்பாடு என்று. கண்காணிக்கிற கண்கள் உங்கள் பிடரிக்குப் பின்னாலேயே இருக்கும்போது நீங்கள் எந்தத் தவறும் செய்ய மாட்டீர்கள்; எந்த ஆபத்திலும் அகப்படவும் மாட்டீர்கள்.
இதில் உள்ள இயங்கியலையும் நோக்கத்தையும் புரிந்துகொள்ளாமல், “கம்ப்யூட்டரை ஹால்ல கொண்டு வந்து வெச்சா ப்ரைவசி, ஃப்ரீடம் எதுவுமே இருக்காதே…” என்று தோழி ஒருத்தி கேட்டாள்.
“ஃப்ரீடமும் ப்ரைவசியும்தான் வயசுப் பசங்க – பொண்ணுங்க கெட்டுப் போறதுக்கு ரெண்டாவது காரணமே!” என்றேன்.
2
அண்ணன் எங்களுடைய ஒவ்வொரு விஷயத்திலுமே கண்ணும் கருத்துமாக இருப்பான். எங்களின் நெருங்கிய தோழிகள் யாரென்பது அவனுக்குத் தெரியும். அவர்களது வீட்டு முகவரி, அலைபேசி எண் ஆகியவற்றை தொலைபேசி குறிப்பேட்டில் குறித்து வைத்திருப்பான்.
எங்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது, எங்களுடைய ஆசைகள், கனவு, லட்சியம் யாவற்றையும் அவன் அறிவான். எங்களுக்கு விருப்பமான துறையிலேயே படிக்க வைத்துக்கொண்டிருக்கிறான்.
தினமும் இரவு வீட்டுக்கு வந்ததும் தொ.கா. செய்தி பார்ப்பதற்கு முன் “உங்க நியூஸ் ஏதாவது இருக்குதா?” என்று என்னிடமும் விந்தியாவிடமும் அவன் கேட்பது வழக்கம்.
பள்ளியில், கல்லூரியில், வழித்தடத்தில் ஏதாவது முக்கிய விஷயங்களோ, சுவாரஸ்யமான சம்பவங்களோ நடந்திருந்தால் சொல்வோம். நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும் வீட்டில் சொல்ல வேண்டும் என்பது அவனது எண்ணம். சில விஷயங்களை மற்றவர்களிடம்
பகிர்ந்துகொள்ளாவிட்டாலும் அண்ணனிடம் பகிர்ந்துகொள்வோம். அதில் அவனுக்கும் மகிழ்ச்சி, எங்களுக்கும் திருப்தி.
இரவு 8:30 முதல் 9:00 வரை, நாங்கள் சாப்பிடுகிற நேரம். இந்த நேரத்தில் அம்மாவைத் தவிர நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து தொ.கா. செய்தி பார்த்துக்கொண்டே சாப்பிடுவோம். ஊர் – உலக நடப்பை நாங்கள் தெரிந்துகொள்ளவும், தனியாக நேரம் ஒதுக்கி, படிக்கிற நேரத்தை வீணாக்காமல் இருக்கவும் இந்த ஏற்பாடு.
அண்ணன் எங்களுக்காக சிந்தித்துச் செய்கிற ஒவ்வொன்றையும் பற்றி நாங்கள் சொல்வதைக் கேட்டு எங்கள் தோழிகளில் சிலர், “அவர் மாதிரி ஒரு அண்ணன் எங்களுக்கு இல்லையே…” என்று அங்கலாய்ப்பர்.
ஆனால், பாய் ஃப்ரண்ட்கள் வைத்துக்கொள்ள வேண்டும், காதலிக்க வேண்டும், பையன்களோடு அனுபவிக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கற, அத்தகைய செயல்களில் ஈடுபட்டிருக்கிற மாணவிகளுக்கு அவனை அறவே பிடிக்காது.
“இப்படி ஒரு அண்ணன் இருந்தா சகிக்கவே முடியாது. நாம காலேஜ் வர்றதே ஜாலியா லைஃப எஞ்சாய் பண்றதுக்குத்தான். அதுல எதையுமே பண்ணக் கூடாது, படிக்க மட்டும்தான் செய்யணும்னா எப்படி?” என்று அவர்களில் சிலர் நேரடியாக என்னிடமே சொல்லியிருக்கிறார்கள். சிலர் மற்றவர்களிடம் சொல்வார்கள்.
இதற்கே இப்படி என்றால், என்னுடைய அலைபேசியை எடுத்து அதில் பையன்களின் பெயர் இருக்கிறதா என சோதிப்பது, பையன்களின் பெயரை பெண்களின் பெயரில் மாற்றிப் பதிவு செய்திருப்பேனோ என்று அம்மா மூலமாக அந்த எண்களுக்கு பேசிப் பார்க்கச் செய்வது ஆகியவை பற்றி என்ன சொல்வார்கள்?
எனக்கே முதலில் கடுப்புதான். “எம் மேலயே சந்தேகமா?” என்று கேட்டேன். “சந்தேகம் உம் மேல இல்ல; உன் வயசு மேல” என்ற பிறகு அதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டேன்.
“ஒரு பாய் ஃப்ரண்ட் கூட இல்லாம ஒரு காலேஜ் பொண்ணுன்னா அது உலகத்துலயே நீ மட்டுமாத்தான் இருக்கும்”, “பாய் ப்ரண்ட் இல்லாத காலேஜ் பொண்ணு வாழறதே வேஸ்ட்” – மாணவிகள் இப்படி கேலி செய்யும்போது “நீங்க உங்க வீட்ல பாய் ப்ரண்ட் இல்லாம ஒரு நாள் கூட தூங்க மாட்டீங்களாட்ட இருக்குதே…” என்று கேட்பேன். பேயறைந்தது போல ஆகிவிடுவாள்கள்.
வகுப்புப் பையன்கள் அவர்களுக்குள் இதைப் பற்றி என்ன பேசிக்கொள்வார்கள் என்று தெரியாது. மிக ஒழுக்கமான ஓரிரு பையன்கள் என்னிடம், “பசங்களும் பொண்ணுங்களும் ஃப்ரண்ட்ஸா இருக்கறதுல என்ன தப்பு?” என்று கேட்டனர். “மொதல்ல ஃப்ரண்ட்ஸாத்தான் பழகுனோம்ங்கற டயலாக்க இது வரைக்கும் எத்தனை லச்சம் லவ்வர்ஸ் சொல்லியிருப்பாங்க!” என்றேன்.
இன்னமும் கூட எனக்குப் புரியாத விஷயம் பாய் ஃப்ரண்ட் – கேர்ள் ஃப்ரண்ட் என்றால் என்ன, அதன் வரையறை என்ன என்பதுதான்.
அது நட்பாக மட்டுமா இன்றைக்கு இருக்கிறது? எல்லோரும் அப்படி இல்லை என்றாலும், நிறையப் பேர் இந்தப் பேரைச் சொல்லி ஒழுக்கக் கேடுகளைச் செய்பவர்களாகத்தானே இருக்கின்றனர்.
இதைக் கேட்டபோது எங்கள் வகுப்பு மாணவி ஒருத்தி சொன்னாள், “பாய் ஃப்ரண்ட் – கேர்ள் ஃப்ரண்டுன்னா, ஃப்ரண்ட்ஷிப்புக்கும் லவ்வுக்கும் எடைப்பட்டது” என்று.
காதலர்கள் பாலுறவு கொள்வது ஒழுக்க ரீதியாகத் தவறு எனினும் காதலில் அது அனுமதிக்கப்பட்டது என்பது போல, பாய் ஃப்ரண்ட் – கேர்ள் ஃப்ரண்ட் விருப்பப்பட்டால் பாலுறவு வைத்துக்கொள்ளலாம் என விளக்கமும் சொன்னாள். நல்லவேளை, கணவன் மனைவி மாதிரி அதுவும் ஒழுக்கத்துக்கு உட்பட்டதுதான் என்றோ, பாய் ஃப்ரண்ட் – கேர்ள் ஃப்ரண்ட்கள் கட்டாயமாகப் பாலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்றோ சொல்லவில்லை.
இப்படி இருக்கிற சமயத்தில்தான் பொள்ளாச்சி தொடர் பாலியல் கொடூர சம்பவம் வெளியாகி, மக்களைப் பேயுலுக்கு உலுக்கியது. இது தொடர்பாக தினம் ஒரு புதுத் தகவல், ஊடகங்களில் ஓயாத பரபரப்புச் செய்திகள், மாநிலம் முழுக்க பல்வேறு கட்சிகள், சமூக, மகளிர், மாணவர் அமைப்புகளின் மறியல், போராட்டம் என நாட்கள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தன. மாநிலத்தையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கி, தேசத்தையே கலங்க வைத்து, உலக அளவில் வைரலான அந்த வன்கொடுமை, உள்ளூரை எரிமலையாகக் கொதித்துக் கொந்தளிக்க வைத்தது.
வீடு, அக்கம் பக்கம், ஊர், குடியிருப்புப் பகுதி, கல்லூரி, பள்ளி அனைத்து இடங்களிலும் மாணவிகளை, ‘இந்தப் புள்ளையும் அந்த விவகாரத்துல பட்டதா இருக்குமோ’ என சந்தேகப்பட்டனர். நகரத்திலும், சுற்று வட்டாரங்களிலும் எங்கு சென்றாலும் சந்தேகப் பார்வைகள் துளைத்தன. வீடுகளில் துருவித் துருவி விசாரிப்பு, தீராத சந்தேகம், பயம். பல மாணவிகளை இனிமேல் கல்லூரிக்குப் போக வேண்டாம் என குடும்பத்தார் தடுத்துவிட்டனர். மற்ற மாணவிகளுக்கு பலத்த எச்சரிக்கைகளும், கட்டளைகளும். சில மாணவிகள் பயத்தால் தாங்களாவே நின்றுவிட்டனர்.
என்னையும் விந்தியாவையும் பொறுத்த வரை, எங்களைத் தெரிந்த யாருமே துளி கூட சந்தேகப்படவில்லை என்பதோடு அண்ணனையும் எங்களையும் பாராட்டிப் பேசினர்.
“புள்ளைகன்னா வினோதினியும் விந்தியாவும் மாற இருக்கோணும். மெக்கானிக் அவுரோட தங்கச்சிகள வளத்துன மாதிரி அந்தப் புள்ளைகளோட அண்ணனுகளோ, அய்யனாத்தாளுகளோ அவளுகள வளத்தியிருந்தா, இந்த பாய் ஃபிரண்டு, லவ்வு கிவ்வு, ப்பேஸ் புக்கு இதெல்லாம்தான் அவளுகளுக்கு
இருந்திருக்குமா? ஊருக்கே பேரு கெடறாப்புடி, நூத்துக் கணக்கான பொண்ணுகளுக்கு இன்னைக்கு இந்த கெதிதான் வந்திருக்குமா?”
அப்போதுதான் அண்ணனைக் குறை சொன்ன எங்கள் தோழிகளும் மற்ற மாணவிகளும் அவனது அருமையை ஆழமாக உணர்ந்துகொண்டனர்.
3
எங்கள் கல்லூரி நிறுவனர் தின விழா, ஏப்ரல் மாதம் நடக்கும். கலாச்சார தினம், விளையாட்டு தினம் ஆகியவை மாணவர்களை மையப்படுத்தியது என்பதால் அவர்களும் ஆசிரியர்களும் மட்டுமே கலந்துகொள்வதாகவும், எளிமையாகவும் இருக்கும். கூடுதலாக சிறப்பு விருந்தினர்கள் எவரையேனும் தருவிப்பார்கள், அவ்வளவுதான். இதற்கு வீட்டுக்கு அழைப்பு வராது. ஆனால், நிறுவனர் தினம் கல்லூரி விளம்பரத்துக்கானது என்பதால் விமரிசையாகக் கொண்டாடுவார்கள் என்பதோடு வீட்டுக்கும் அழைப்பிதழ் வரும்.
மற்ற மாணவர்களின் வீடுகளில் இருந்து பெற்றோர்களோ உடன் பிறந்தவர்களோ விழாவுக்கு வருவார்கள். பெரிய படிப்பு படித்தவர்களிடையே படிக்காத தற்குறிகளான தாங்கள் வந்து நிற்பது நன்றாக இராது என்று எங்கள் வீட்டிலிருந்து யாரும் வர மாட்டார்கள்.
இந்த முறை கல்லூரி மாணவ மாணவிகள் சிலர் எங்கள் வீட்டுக்கே வந்து, “காலேஜ்ல மத்த புள்ளைக பசங்க எல்லாரும் உங்களப் பாக்க விரும்பறாங்ணா. நீங்க அவசியம் வந்தே ஆகணும். இந்த சமயத்துல வந்தா நீங்க ஃபங்ஷனைப் பாத்த மாதிரியும் ஆச்சு” என்று அண்ணனுக்கு அழைப்பு விடுத்தனர்.
“வீடு தேடி வந்து நீங்க கூப்புட்டதே எனக்கு சந்தோஷம். ஃபங்ஷனைப் பாக்கறக்குன்னு இல்லேன்னாலும், உங்கள மாற மத்த தம்பி – தங்கச்சிகளப் பாக்கறதுக்காகவாவது அவசியம் வர்றேன்” என அண்ணனும் ஒத்துக்கொண்டான்.
விழா நாள்.
பிரம்மாண்டமான செட்டிங்ஸும், தோரணங்களுமாக கல்லூரி களை கட்டியிருந்தது. உள் நாட்டு, வெளி நாட்டு கார்களும், பைக்குகளும் ஒரு பக்கம்; நடந்து வருகிறவர்கள் ஒரு பக்கம் என கூட்டம் அம்பியது. எனினும் அழைப்பிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி.
பைக்கை நிறுத்திவிட்டு நானும் அண்ணனும் அரங்கத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போதே அண்ணனைப் பார்த்துவிட்டு சில மாணவ –
மாணவியர் வந்து அவனை வரவேற்று அழைத்துச் சென்றனர். அரங்கத்துக்குள் போனதும் மாணவிகள் கும்பல் அவனைச் சூழ்ந்துகொண்டது.
“அண்ணா இங்க வாங்ணா,… அண்ணா, இங்க வந்து உக்காருங்ணா…” என ஆளாளுக்கு உபசரித்தனர். பையன்களின் திரளும் சேர்ந்துகொண்டது. ஆட்டோக்ராஃப் வாங்காத குறைதான்.
அந்தப் பக்கமாக வந்த தலைமைப் பேராசிரியை, குழுமியிருந்த கூட்டத்தையும், உடன் இருந்த என்னையும் பார்த்துவிட்டு எங்களிடம் வந்தார். அனைவரும் மரியாதையாக எழுந்து நின்றோம்.
“யாரும்மா,… உங்க அண்ணன்தான!” எனக் கேட்டவர், “வணக்கம், தம்பி. உங்களப் பத்தி முன்னயே கேள்விப்பட்டிருக்கறன்ப்பா. அதுவும் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கப்பறம், ப்ரொஃபசர்ஸ் எல்லாரும் உங்களைப் பத்தி நெறையவே பேசுனாங்க. நானும் உங்கள நேர்ல சந்திக்கணும்னு இருந்தேன். இன்னைக்கு நீங்களே இங்க வந்ததுல ரொம்ப மகிழ்ச்சி” என சொல்லிச் சென்றார்.
விழா துவங்கி, உதவிப் பேராசிரியரின் வரவேற்புரை முடிந்ததும் தலைமைப் பேராசிரியை ஒலி வாங்கிக்கு வந்தார்.
“ஒரு முக்கிய அறிவிப்பு. நமது மதிப்பிற்குரிய சமூக சேவகர் ஒருவர் இன்று நம் விழாவுக்குப் பார்வையாளராக வந்துள்ளார். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்கு தெரிந்த நபர். ஆனால் நம்மில் பலரும் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோமே தவிர, இதுவரை நேரில் பார்த்திருக்க மாட்டோம். இன்று அவரைப் பார்க்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது.
“அவரைப் பற்றி மதிப்பிற்குரிய நமது சேர்மன் அவர்களிடம் சற்று முன் பேசியபோது, ‘அழைப்பிதழ் அச்சடிக்கும் முன்பே நீங்கள் இதைத் தெரிவித்திருந்தால் அவரையும் நம் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகச் சேர்த்திருக்கலாமே…’ என்று வருத்தப்பட்டார். ‘இருந்தாலும் பரவாயில்லை, இப்போது அவரை மேடைக்கு அழையுங்கள்; அவருக்கு நாம் மரியாதை செய்ய வேண்டும்’ என்றும் கேட்டுக்கொண்டார்.
“கண் தானம், ரத்த தானம், அனாதை ஆசிரமம், முதியோர் இல்லம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு, அபலைகளுக்கு ஆதரவு என எத்தனையோ பேர், எத்தனையோ விதமான சமூக சேவைகளைச் செய்கின்றனர். இவர் செய்வதும் அது போன்ற ஒரு சமூக சேவைதான். அதுவும் சாதாரண சமூக சேவை அல்ல. முன்னே சொன்ன சேவைகளை விட பெரிய சேவை என்றும் சொல்லலாம்.
“உலகையே பேரதிர்ச்சியில் ஆழ்த்திய பொள்ளாச்சி பாலியல் கொடூரத்துக்குப் பிறகுதான் அவரது செயல்பாட்டின் அருமையை நாம் உணர்ந்துகொண்டோம். உங்களில் ஒருவராக வீற்றிருக்கும் அவரை, உங்கள் சார்பில் இரு கரம் கூப்பி மேடைக்கு அழைக்கிறேன்.
“மூன்றாம் ஆண்டு மாணவி வினோதினியின் அன்புச் சகோதரர், மிஸ்டர் முரட்டு அண்ணன் மேடைக்கு வரவும்…“
எதிர்பாராத மகிழ்வதிர்ச்சியில நானும், பேரதிர்ச்சியில அண்ணனும் திகைத்திருக்க, அரங்கத்தில் இருந்த அனைத்து மாணவிகளும் எழுந்து நின்று பலத்த கரவொலி எழுப்பினர். அதன் பிறகு மாணவர்களும் எழுந்து கரகோஷம் எழுப்பியதோடு, விஸில் சத்தத்தால் காது ஜவ்வையே கிழித்துவிட்டனர்.
எழுந்து நின்று, எட்டு திசைகளிலும் திரும்பி, நன்றி தெரிவிக்கும் விதமாகக் கை கூப்பியபடியே மேடையை நோக்கி நடந்தான், அண்ணன்.
போர்த்திய பொன்னாடையை மடித்து வைத்து, தொண்டையை செருமிக்கொண்டு அண்ணன் ஆரம்பித்தான்.
“அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள்.
“என்ன சொல்றதுன்னே தெரியல. இப்பேர்ப்பட்ட விழாவுல, அதுவும் சேர்மன் ஐயாவே பொன்னாடை போர்த்தி, அவசியம் பேசியே ஆகணும்னு வற்புறுத்தினதை நெனைச்சா…. கனவு மாதிரித்தான் இருக்குது. இது எனக்குக் கெடைச்ச கௌரவம் இல்ல. என் செயலுக்குக் கெடைச்ச அங்கீகாரம். அந்த அளவுல எனக்கு மகிழ்ச்சி.
“ப்ரின்ஸிபல் மேடம் என்னை சமூக சேவகர்ங்கறாங்க. அப்படியெல்லாம் நெனைச்சு இதப் பண்ணலீங்க. நான் செய்யற காரியம், சம்மந்தப்பட்ட பொண்ணுக – பசங்க, அவங்களோட குடும்பம், படிக்கற ஸ்கூல், காலேஜ் எல்லாத்துக்கும் நல்லது பண்ணக்கூடியதுங்கறது மட்டும் தெரியும். அதுக்காகத்தான் அதப் பண்ணுனேன்.
“இது சம்மந்தமா உங்ககிட்ட சில விஷயங்கள சொல்லணும். அதுக்கு முன்ன, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்துக்கு வருவோம். இங்க இருக்கற பெரியவங்கள்ல பலருக்கும் என்னைப் பத்தித் தெரியாம இருக்கலாம். ஆனா, ஸ்டூடன்ட்ஸ் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். நீங்க சொல்லுங்க – பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்துல ஈடுபட்ட அந்த 15 – 20 குற்றாவாளிகளுக்கு நான் என்ன வேண்ணா தண்டனை குடுக்கலாம்னு கவர்மென்ட்டும், கோர்ட்டும் அனுமதிக்கறதா வெச்சுக்குவோம். அப்ப என்ன தண்டனை குடுப்பேன்னு நெனைக்கறீங்க?” எனக் கேட்டான்.
“தூக்கு தண்டனை விதிப்பீங்க”, “கண்டம் துண்டமா வெட்டிக் கொல்லுவீங்க” “அரேபியா மாற பொது மக்கள் மத்தியில கல்லால அடிச்சே கொல்ல வெப்பீங்க”, “அவனுகளோட ஆணுறுப்ப வெட்டி எடுப்பீங்க” எனப் பல வித அபிப்ராயங்கள் எழுந்தன.
அண்ணன் மறுப்பாகத் தலையசைத்து, “கெடையவே கெடையாது. நான் அவங்கள ஒண்ணுமே பண்ண மாட்டேன். எந்த தண்டனையும் விதிக்க மாட்டேன்” என்றான்.
கூட்டம் ஒரு கணம் நிசப்தத்தில் உறைந்து, பின் சலசலத்தது.
“திருடன்னா திருடத்தான் செய்வான். பேங்க் லாக்கர்ல வெச்சிருக்கறதையே திருடீட்டுப் போகும்போது, நீங்க அம்பது பவுன் நகைய கழுத்து, காது, கையி நெறக்காப் போட்டுட்டு திருடன்கிட்டப் போயி, ‘அண்ணா,…. இந்த ஜிமிக்கி நல்லா இருக்குதுங்ளாண்ணா?’, ‘ப்ரோ,…. இந்த நெக்லஸ் எப்புடி?’ன்னு கேட்டீங்கன்னா, என்ன ஆகும்? அவன் காதோட – கழுத்தோட அத்துட்டுப் போகத்தான செய்வான்.
“அதே கதைதான் இங்கயும். அவனுக ஏமாத்தி, பாலியல் பலாத்கார பிசினஸ் பண்றதுக்குன்னே இருக்கறவனுக. அவனுக பண்றது குற்றம்னாலும், அவன் பிசினஸ அவன் பண்ணத்தான செய்வான். அவனுககிட்ட ஏமாந்தது அந்தப் பொண்ணுங்க தப்பு. அதனால, என்னைப் பொறுத்த வரைக்கும் என்னோட கோபம், ஆத்தரம் எல்லாம் அந்தப் பொண்ணுக மேலதான். ஃபேஸ் புக்குல வலை விரிச்சும், தூண்டில் போட்டும் காத்திருக்கற அவனுககிட்ட ‘என்னைப் பாரு என்னழகப் பாரு’ன்னு செல்ஃபியா எடுத்துப் போட்டுட்டிருக்கறது, டப் ஸ்மாஷ் லொள்ளு, டிக் டாக் லோலாயம்னு இருந்தா எப்புடி இருக்கும்? இதுல சிக்குன பாதி பொண்ணுங்க இப்படிப் பட்டவங்கதான். மீதிப் பேரு ஃப்ரண்ட்ஷிப், காதல், செக்ஸ், வசதியானவனை வளைச்சுக் கல்யாணம் பண்ணிக்கற ஆசைன்னு எதெதுக்கோ ஆசைப்பட்டுப் போயி ஏமாந்தவங்க.
“.200 – 250 பொண்ணுகள சீரழிச்சதா சொல்றாங்களே,… அதுல ஒரே ஒரு கேஸாவது, முன்னப் பின்னத் தெரியாத ஒரு பொண்ண, ரோட்டுலயோ மத்த பொது எடத்துலயோ இருந்து கடத்திட்டுப் போயி சீரழிச்சதா உண்டா? நல்லா சிந்திச்சுப் பாருங்க. அப்படிப் பண்ணுனா சீக்கிரம் மாட்டிக்க வாய்ப்பு இருக்குதுன்னு தெரிஞ்சுட்டுத்தான், பக்காவா ப்ளான் பண்ணி, பழகி ஏமாத்தற வேலைய, புத்திசாலித்தனமா, நுணுக்கமாப் பண்ணியிருக்கறாங்க.
“சிக்குன புள்ளைக ஃபேஸ் புக்குல பழக்கம், ஃப்ரண்டு மூலமா பழக்கம்ங்கறாங்க. உங்க படிப்போடவோ, வேலையோடவோ, குடும்பத்தோடவோ சம்மந்தமில்லாத, எந்த வித அவசியமும் இல்லாத, அனாவசிய நட்பு உங்குளுக்கு எதுக்குன்னு கேக்கறேன். அப்புடியே இருந்தாலும், அவனுக கூப்புடும்போது தனியா எதுக்குப் போறீங்க? பாதுகாப்பான துணையோட போயிருக்கணுமல்ல? இல்ல, தனியா வான்னு அவனுக சொல்லியிருந்தா அப்பவே தெரிஞ்சுக்க வேண்டாமா, அது தப்பு தண்டா பண்றதுக்குத்தான்னு. அது உறுதி இல்லன்னாக் கூட, அப்படி நடக்கவும் வாய்ப்பு இருக்குதுங்கற எச்சரிக்கை வேண்டாமா?
“ஃப்ரண்டுன்னு நம்பிப் போனேன், அண்ணனை மாதிரி பழகுனதுனால போனேன்னு சொல்றதெல்லாம் உண்மைன்னு எனக்குத் தோணுல. வயசுக்கு வந்த புள்ளைக, ஸ்கூல்லயும் காலேஜ்லயும் படிக்கறதுக, இது கூடத்
தெரியாமயா இருக்கும்? அந்த அளவுக்கு என்ன ஜெல்லி மிட்டாய் பாப்பாக்களா?
“கூடப் பொறந்த அண்ணனும், பெத்த அப்பனுமே காமவெறி புடிச்சு பலாத்காரம் பண்ற வன்கொடுமை நெறைய நடந்துட்டிருக்கற காலம் இது. பிஞ்சுக் கொழந்தைன்னு பாக்காம பலாத்காரமும், கூட்ட பலாத்காரமும் பண்ணி, கொடூரக் கொலை பண்ற மாபாதகச் செய்திகள மாசத்துக்கு ஒருக்காவாச்சும் கேக்கறம். அதப் பண்றவங்களும் பெரும்பாலும் பல வருசமா நல்லாத் தெரிஞ்ச அக்கம் பக்கத்தவங்க, குடும்பப் பழக்கம் உள்ளவங்க, நெருங்குன சொந்தக்காரங்களே கூடத்தான். அப்புடி இருக்கும்போது, அந்நிய ஆம்பளைகள எப்படி நம்பறீங்க?
“பொண்ணுங்க, தயவு செஞ்சு தினமும் பேப்பர் நியூஸ் படிக்கவோ, டி.வி., நியூஸ் பாக்கவோ செய்யுங்க. அப்பத்தான் ஊர் நடப்பு, உலக நடப்பு தெரியும். ஏட்டுச் சொரைக்காயாவும், ஃபேஸ் புக் பொடலங்காயாவும் மட்டும் இருக்காதீங்க.
“மேற்படி பொண்ணுகள்ல 70 – 80 சதவீதமாவது, விருப்பப்பட்டு போயி சிக்கல்ல மாட்டிட்டு, விஷயம் வெளியானதுக்கப்பறம் ஏமாந்துட்டம்னு நாடகமாடறதுகதான். அவங்க வீடியோ, ஆடியோல சொல்ற ஸ்டேட்மென்ட்ட நல்லா கவனிச்சு, சிந்திச்சுப் பாத்தா உங்களுக்கே தெரியும், ஏமாந்துட்டம்னு சொல்லி இதுக நம்மள ஏமாத்திட்டிருக்குதுகன்னு.
“பையனுக தனியா வரச் சொல்றாங்க, தனியான எடத்துக்கோ, லாட்ஜுக்கோ கூப்படறாங்கன்னா எதுக்குன்னு தெரியாமயா போறாங்க இவளுக? பாய் ஃப்ரண்டுன்னோ, லவ்வர்னோ பழகுன பையன் கூட செக்ஸ எதிர்பாத்துத்தான் போனாங்க, இல்லாட்டி வெளிப்படையாவே அதைப் பேசி அதுக்காகவேதான் போனாங்க. அதை அனுபவிச்சது மட்டுமில்லாம, பல பேரு வீடியோ எடுக்கக் கூட சம்மதிச்சிருக்கறாங்கன்னா, அவளுக எப்பேர்ப்பட்ட கைகாரிகளா இருப்பாளுகன்னு பாத்துக்குங்க. சில பொண்ணுகளுக்கு, பையன் தன்னோட ஃப்ரண்டுகள கூட்டு சேத்துனதுதான் பிரச்சனை. சில பேருக்கு, அது கூட பிரச்சனை இல்ல. வீடியோ எடுத்து வெச்சுட்டு மெரட்டுனதும், பணம் பறிச்சதும்தான் பிரச்சனை.
“கெட்டுத்தான் போவேன்னு இருக்கற பெண்களைப் பத்தி நான் அதிகமாப் பேச விரும்பல. மத்த பொண்ணுகளுக்கு சொல்றது என்னன்னா,… கூடப் பொறந்த அண்ணனே ஆனாலும், பெத்த தகப்பனே ஆனாலும், முழுசா நம்பாதீங்கன்னுதான்.
“இங்க இருக்கற பெத்தவங்களுக்கு நான் அதிகம் சொல்ல வேண்டியதில்ல. நீங்க எல்லாரும் நிச்சயமா என்னை விட படிச்சவங்க. எட்டாங்க்ளாஸ் கூட முழுசா படிக்காத நான், என் தங்கச்சிகள எப்புடி வளத்துனேன்கறத உங்க புள்ளைக – பசங்ககிட்ட கேட்டுப் பாருங்க,… விளக்கமா சொல்லுவாங்க. அப்புடி இருக்கும்போது, உங்கள மாதிரி மெத்தப் படிச்சவங்க, எந்த அளவுக்கு அவங்க மேல அக்கறை எடுத்து, எவ்வளவு ஒழுக்கமா வளத்தியிருக்கலாம்; இல்லாட்டி, இனி மேலாவது அப்புடி வளத்தலாம்ங்கறத யோசிங்க.”
அண்ணன் பேசிவிட்டு, மடித்து வைத்திருந்த பொன்னாடையோடு மேடையிலிருந்து இறங்கி வர, மீண்டும் கரகோஷம் அரங்கை நிறைத்தது.
விழா நிகழ்ச்சியின் மதிய இடைவேளையில் மாணவிகள் அண்ணனைச் சூழ்ந்துகொண்டு அவனோடு செல்ஃபி எடுக்க முண்டியடித்தனர்.
சுட்டு விரலால் விலக்கல் சைகை காட்டி, “மொதல்ல இப்படி செல்ஃபி எடுக்கறத விடுங்க. கூடப் பொறந்த அண்ணனே ஆனாலும், நாலு அடி தள்ளி நில்லுங்க!” என்றான் அண்ணன்.
– வாரமலர், ஆகஸ்ட் 22 & 29 இதழ்கள்.
கதாசிரியர் குறிப்பு:
வாரமலர் இதழில், ஆங்காங்கே வணிக இதழ் தரப்பின் சிற்சிறு எடிட்டிங்குகளோடு பிரசுரமான இக் கதை, ‘வேலந்தாவளம் உங்களை வரவேற்கிறது’ என்ற தலைப்பிலான எனது சிறுகதைத் தொகுப்பில் (2016, பழனியப்பா ப்ரதர்ஸ் வெளியீடு) எனது மூலப் பிரதிப்படியே முழுமையாக இடம்பெற்றுள்ளது. இங்கு இடம்பெற்றிருப்பது, அந்த மூலப் பிரதியின் செப்பனிடப்பட்ட (2022 ஜனவரி) வடிவம். வாசகர்கள் இதையே இறுதிப் பாடமாகக் கொள்ளவும்.