(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வரலாறு கற்பிக்கும் ஒரு பட்டதாரி ஆசிரியனாக அந்த வகுப்பில் அவன் முதன்முதலில் நுழைந்தபோது மிக மகிழ்ச்சியாய் இருந்தான். ஓர் ஆசிரியனாக வேண்டுமென எத்தனையோ காலமாக கனவு கண்டிருந்தான் அவன். அந்த ஆசை நிறைவேறியதில் அவன் மனம் பூரித்திருந்தான். நல்லதொரு சிந்தனை வளம் மிக்க சமுதாய உருவாக்கத்தில் தனது பணிமூலம் தானும் பங்குகொள்ளலாமென அவன் பெருமைப்பட்டான்.
அவன் ஆசிரியனாகியதில் உண்மையில் மனம் மகிழ்ந்திருந்தாலும், முள்போன்ற ஓர் உறுத்தலும் அவன் மகிழ்வோடு சேர்ந்திருந்தது. எந்த வழியால் அவன் அந்த ஆசிரிய பதவியை அடைந்தானென சிந்தித்தபோது அவன் உண்மையில் மனம் இறுகினான். இந்த ஊழல்களுக்கு முடிவு காணமுடியாதாவென அவன் ஏங்கினான். சமுதாயப் பணியில் ஆர்வமும், கற்பித்தலில் திறமையும் இருந்தும் அவன் ‘சிலரைப் பிடித்ததினாலே’ அப்பதவியைப் பெற்றான். இத்தகைய ஊழல்களினால் எத்தனையோ திறமைசாலிகள் புறக்கணிக்கப் பட்டு எத்தனையோ தகுதியற்றவர்கள் ஆசிரியர்களாக மாணவ மணிகளை பாழடித்துக்கொண்டு பவனி வருவதைக் கண்டு அவன் உள்ளம் குமுறினான்.
எழுந்து வணக்கம் கூறிய மாணவர்கள் அமர்ந்தனர். அவனும் பதிலுக்கு வணக்கம் கூறிக்கொண்டான்.
பல்கலைக்கழகத்தில் புகுவதற்காக அந்த வகுப்பில் படித்துக் கொண்டிருந்த அந்தப் பத்துப் பன்னிரண்டு மாணவர்களையும் அவர்களில் இருவர் பெண்கள் அவன் ஆழமாக உற்றுப்பார்த்தான். பார்வையிலேயே ஒவ்வொருவரையும் அளந்து கணிப்பிட அவன் முனைந்தான். அந்தப் புன்னகை பூத்த முகங்களில் ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றிய ஆர்வத்தை அவன் கண்டான்.
அவன் பெருமூச்செறிந்தான். தகுதியான கல்வியைப் பெறுவதன் மூலம், தமக்கு வளமான வாழ்வைத் தேடுவதோடு, நாட்டையும் வளப்படுத்தும் அந்தச் செல்வங்கள்…. உண்மையில் ஒவ்வொரு நாட்டினது அபிவிருத்தியும் அந்த நாட்டு மனிதர்களின் முயற்சியிலும், அவர்கள் மனப்பான்மையிலும்தான் தங்கியிருக்கிறது. எங்கள் நாடு போகிறபோக்கில் -வாயுடனும், வயிற்றுடனும் மட்டுமல்லாமல் இரண்டு உறுதியான கரங்களுடனும், தங்கமான மூளையுடனும் பிறக்கும் எங்கள் நாட்டு மனிதச் செல்வங்கள்………!
அவன் வகுப்பு மாணவர் ஒவ்வொருவரினதும் பெயர், விபரங்களை விசாரித்தான். மார்க்கண்டு; அவன் குள்ளமாக இருந்தான்; மெலிந்து வாடிக் கறுத்திருந்தான். அவன் தலைமயிர் கற்றைகள் கலைந்திருந்தன. அவன் தூய வெள்ளையென்று சொல்லமுடியாத மங்கலான வேட்டி கட்டியிருந்தான். ‘அயன் பண்ணாத’ நீல நிறச் சேட்டும் போட்டிருந்தான். சோர்ந்து களைத்திருப்பவன் போலக் காணப்பட்டான். அவன் முகத்தில் அறிவுக்களையுடன், கிராமியக்களையும் தெரிந்தது. அவன் கண்களின் தீட்சணியத்துடன் கூடிய அந்த ஆழம் அவன் மனதைத் தொட்டது.
ஏனோ அவன் தன் இளமைக் காலத்தை நினைத்துக் கொண்டான். சிறிய வயதில் ஏதோ கடமைக்காகப் படித்து, ஒரு பருவத்திற்கு அப்பால் படிக்க வேண்டுமென்ற ஆர்வம் வெறியாக ஏற்பட்ட பிறகு அவன் எத்தனை எத்தனை இன்னல்களைத் தாங்கியிருக்கின்றான்; அவலங்களைச் சகித்திருக்கிறான். அதிகாலையில் தந்தையுடன் தோட்டத்தில் உழைத்ததன் பின்னால் வாரிக் கலைந்த தலையுடன் அவசர அவசரமாக எத்தனை நாட்கள் அவன் பாடசாலைக்கு ஓடியிருக்கிறான். எத்தனையோ நாட்கள் பாடசாலைக்குப் பிந்தி வந்ததற்காக அதிபரினால் கண்டிக்கப்பட்டிருக்கின்றான்.
ஒரு சந்தர்ப்பத்தில் புகையிலை அறுவடை சம்பந்தமான வேலைகள் மிகுந்த ஒருநாளில் பரீட்சைக்காக அவன் படித்துக் கொண்டிருந்தபோது ‘கண்டறியாத படிப்புப் படிச்சு எனக்கு விளக்குமாத்துக்கு குஞ்சம் கட்டப்போகினம்’ என்று அவன் தந்தை ஆத்திரத்துடன் சொன்ன அந்த வரியையும் நினைத்துக் கொண்டான்.
‘இந்த மனிதர்களின் பழமையில் ஊறிய மனப்பான்மைகள் அவற்றில் ஏற்படும் மாற்றங்கள்தான் சமுதாய வளர்ச்சியையும், நாட்டின் வளர்ச்சியையும் ஏற்படுத்துமென அவன் நம்பினான். காலங்காலமாக ஆள்பவர்களினால் ‘அடிமைப்படுகின்றோம்’ என்ற மனப்பான்மையில் வாழ்ந்து வருகின்ற மக்கள் கொடுமை களுக்கும், சுரண்டல்களுக்கும் அஞ்சி அஞ்சி ஒடுங்கி ஒடுங்கி வாழ்ந்து வருகிறார்கள் என்றும், அந்த மனப்பான்மையிலிருந்து இன்னமும் அவர்கள் விடுபடவில்லையெனவும் அவன் அறிந்துகொண்டான். மேல் தட்டு வர்க்கத்தினரின் பிள்ளைகள் படித்து – படித்து அல்லது திரும்பத் திரும்ப ‘ரியூசன்’ என்ற முறையினால் அவர்கள் மூளையில் சில செலுத்தப்பட்டு ஆள்கின்றவர்களாக மாற கிராமங்களில் வாழ்கின்ற தொழிலாளர், விவசாயிகளின் பிள்ளைகள்- தங்கமான மூளையுடன் பிறக்கும் அந்த மனிதச் செல்வங்கள் -அன்றாட வாழ்க்கையோட்டத்திற்காக – கற்கவேண்டிய காலத்தில் கல்லாது உழைப்பாளிகளாக ஆளப்படுகின்றவர்களாக மாறும் அந்த அவலத்தை நினைத்து அவன் மனம் குமுறினான்.
ஒருமுறை அவன் நண்பனொருவன் உணர்ச்சி வசப்பட்டுச் சொன்ன அந்த வாக்கியங்களை அவன் நினைத்துக்கொண்டான். ‘நண்பனே! வசதி படைத்தவர்கள் தகுதி குறைந்திருந்தாலும் பெரும் பெரும் பதவிகளைச் சம்பாதிக்கிறார்கள்; வசதி குறைந்தவர்கள் தகுதி மிகுந்திருந்தாலும் அன்றாட உணவினைத்தான் சம்பாதிக்க முனைகிறார்கள். இந்த அவலத்தை நாங்கள் தானடா மாற்றவேணும்….!’
அவன் தன்னுடன் உடன்படித்தவர்களை நினைவு கூர்ந்தான். வீரசிங்கத்தின் சுருட்டுக்கொட்டிலில் சுருட்டுச் சுற்றுபவனாகத் தொழில்புரியும் சிவபாதம், அன்றாட விவசாயக் கூலியாக உழைக்கும் வினாயகம், தூரத்தில் எங்கோ கடையில் சிப்பந்தியாகப் பணிபுரியும் சுப்பிரமணியம், கார் றைவரான மகாலிங்கம் மாணவ ஆசிரியராகக் கற்பிக்கும் சுந்தரம், கலியாணமாகி குழந்தை குட்டிகளுடன் வாழும் வரதாம்பிகை, கனகம்மா போன்ற பெண்கள், அவனுடன் அலுங்காமல் நலுங்காமல் வெள்ளைச் சட்டையுடன் படித்தவர்கள். வெள்ளைச் சட்டைகளுடன் தொழில்புரிகிறார்கள். துடுக்கும், துடிப்பும் மிகுந்த பருவத்து…. உணர்ச்சிமயமான நினைவுகள்….. உண்மையில் அவனுடன் படித்து இன்று வாழ்க்கைத் தரத்தின் கீழ்மட்டத்தில் இருப்பவர்களின் மூளைகள், தகுதிகண்டு தக்க முறையில் வளப்படுத்தப்பட்டிருந்தால்… இவ்வுலகில் மனித வாழ்க்கை வசதியானவர்களுக்குத்தானா இருக்கின்றது…..?
அவன் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில், அவனுடைய ஆசிரியர் ஒருவர் சொன்ன ஒரு கருத்து அவனுக்கு நினைவு வந்தது. அவனுடன் ஒருமுறை தனிமையில் சம்பாஷிக்கும்போது அவர் சொன்னார். ‘இன்று எங்கள் கிராமங்களில் சுருட்டுச் சுற்றுபவர்களாகவும், பயிற்றப்பட்ட ஆசிரியர்களாகவும் கடமையாற்றுவோருக்கு தக்கமுறையில் கல்வி கொடுத்து உருவாக்கப்பட்டிருப்பார்களேயானால், அவர்களில் கணிசமானோர் எமது நாட்டின் நவீன நிர்மாணிகளாக மாறியிருப்பார்கள்’.
தவிர்க்க முடியாதபடி அவன் அனுபவங்கள் நினைவில் மிதந்தன. இந்த உலகத்தின் இயக்கங்களையும், சமுதாயத்தின் அபிலாசைகளையும், அதன் கடந்தகால அனுபவங்களையும், மயக்குகின்ற மோகனமான கலைக்கோலங்களையும் படித்து உணர்ந்து, இரசித்து ஆனந்திக்க வேண்டுமென்ற ஒரு வெறியினால்தான் அவன் படித்தான். அவனது அந்த ஆசை நிறைவேறுவதற்காக எத்தனை பேர் எத்தனை தியாகங்கள் புரிந்திருக்கிறார்களென நினைத்தபோது அவன் கண்களில் நீர் அரும்பிற்று. எந்தநேரமும் தொழில், தொழில் என்று பறக்கும் தந்தை, அவர் அவன் படிப்பை நிறுத்திவிடத்தான் முயன்றார். அவர் மட்டும் உழைத்துக் குடும்பத்தைத் திருப்திப்படுத்த முடியவில்லை. குடும்பத்தின் அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாத எல்லாத் தேவைகளையும் பூர்த்திசெய்ய முடியவில்லை. அவராலும் என்ன செய்யமுடியும்…..
அவன் தன் அன்னையை நினைத்தான். அந்த மெலிந்த தேகத்திற்குள்தான் எத்தனை வைராக்கியம்….. அவள் சொன்னாள்; ‘தம்பி எங்கடை நிலையெல்லாம் புரிஞ்சு கொண்டும் நீ படிக்கிறதெண்டு ஆசைப்படுகிறாய், உன்ரை ஆசைக்கு குறுக்கை நிக்க எனக்கு விருப்பமில்லையடா.நீ படி; என்ரை உயிர்போனாலும் உன்னை நான் படிப்பிப்பன்’.
பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சையில், அவன் கல்லூரியில் அவன் ஒருவனே சித்தியெய்திய போது ஒருபுறம் மகிழ்வும் ஒருபுறம் என்ன செய்வதென்ற கவலையும் கொண்டார் அவனின் தந்தை. தாய் மகிழ்ந்தாள். குடும்பத்தின் ஒரேயொரு சொத்தான மூன்று பரப்புக் காணியை – அவனது ஒரேயொரு தங்கையின் கலியாணத்திற்கு சீதனமாகக் கொடுக்க வைத்திருந்த ஒரேயொரு சொத்தை ஈடுவைத்து அவனுக்குத் தேவையான பணத்திற்கு ஒழுங்கு பண்ணினாள்.
அந்த நினைவுகளில் அவன் சிலிர்ப்புற்றான். மௌனமான அந்த சில கணநேர நினைவுகளுக்கும், சிந்தனைகளுக்கும் பின் அவன் தன் வகுப்பு மாணவர்களை நிமிர்ந்து பார்த்தான்.
அவர்களும் அவனை ஆர்வத்துடன் பார்த்தனர். மார்க்கண்டுவிலிருந்து ஒரு தனிக்களை வீசுவதாக அவன் நினைத்தான். அவன் மார்க்கண்டுவைப் பார்த்துக் கேட்டான்.
‘உமது தந்தை என்ன தொழில் செய்கிறார்…..?’
இந்தக் கேள்வியை எதிர்பார்க்காதவன்போல அவன் திடுக்கிட்டான். அவன் முகம் சோபை குறைந்து கறுத்துவிட்டது. அவனருகிலிருந்த சிலரின் முகத்தில் ஏளனப் புன்னகையொன்று அரும்பி மறைந்தது. பெண்களிலொருத்தி திடீரென்று தலைகுனிந்து கொண்டாள். அவனும் தலைகவிண்டு மெளனமானான்.
தான் கேட்ட கேள்வியின் பதில் என்னவாகவிருக்குமென்று அவனுக்குப் புரிந்தது. அவன் தனக்குள் வேதனைப்பட்டான். வரலாற்றியக்கத்தின் ஒரு கால கட்டத்தில், சொகுசாக வாழ முற்பட்ட சிலர் தம் நயங்களைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்திய தொழில்வாரிச் சாதிப் பகுப்புமுறையை அவன் எண்ணிப் பார்த்தான். இக்கால கட்டத்தில் சமுதாய வளர்ச்சியில் அதனோடு இயைந்த தேசிய வளர்ச்சியில், அது எவ்வளவு ஒரு மரபுரீதியான முட்டுக் கட்டையாக இருக்கிறதெனவும் எண்ணினான். இத்தகைய பழைய மனப்பான்மைகளில் ஏற்படும் மாற்றங்கள் நாட்டின் வளர்ச்சியைத் துரிதப்படுத்துமெனவும் அவன் நம்பினான்.
எனவேதான், அவன் மீண்டும் மார்க்கண்டுவைப் பார்த்துக் கேட்டான். ‘மார்க்கண்டு உம்முடைய தந்தையின் தொழிலென்ன?
அவன் தயங்கித் தயங்கி மெதுவாக பதில் அளித்தான்.
‘மரமேறுதல்…..’
சிலரின் முகத்தில் புன்னகை அரும்பிற்று. தலை குனிந்திருந்தவள் தலையை நிமிர்த்தவே இல்லை.
அவன் தன் தொண்டையைக் கனைத்துக்கொண்டு சொன்னான். ‘ஒருத்தரும் தங்கள் தொழில்களைச் சொல்ல வெட்கப்படக்கூடாது. மற்றவருக்குக் கடமைப்படாது மற்றவர்க்கும் நாட்டுக்கும் பாரமாக இராது தங்கள் உடம்பை வருத்தி தொழில்செய்து வாழ்பவர்கள் உண்மையில் பெருமைப்படவேணும். இத்தகைய பெருமைகளினாலும் நெஞ்சை நிமிர்த்தும் தன்னம்பிக்கைகளாலுந்தான் வரலாற்றுச் சாபக்கேடான தொழில்வாரிச் சாதிப் பாகுபாட்டை இல்லாமல் செய்யமுடியும். எங்கள் சமுதாயத்தில் மறைந்துள்ள மூடப் பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் இவ்வாறு செய்வதினால் தான் அகற்றமுடியும். உண்மையில் தொழில் இல்லாது மற்றவரைச் சுரண்டி வாழும் சொகுசுக்காரர்தான் சாதி என்றும், சமயமென்றும் சொல்லி சமுதாயத்தை ஏமாற்றுகிறார்கள். இந்த ஏமாற்றுக்காரர்களை இல்லாமல் செய்வதோடு, ஏமாறுகின்றவர்களுடைய மனப்பான்மையிலும் நாங்கள் மாற்றங்கள் ஏற்படுத்தவேணும்.
அவன் மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருந்தான். மார்க்கண்டு முகச்சோபையுடன் தலை நிமிர்ந்து பார்த்தான். புன்னகை பூத்தவர்களின் முகம் இருண்டது. தலைகுனிந்திருந்த அவள் ஆர்வத்துடன் திரும்பி மார்க்கண்டுவைப் பார்த்துக் கொண்டாள்.
அவன் தனக்குள் சிரித்துக் கொண்டான். ஒரு காலத்தில் அவனும் அந்த வாழ்க்கையை அந்த இனிய மோகமான கனவுகளை அனுபவித்திருந்தான். ஒருத்தியின் மனதில் தெய்வமாகக் கோவில் கொண்டிருந்தான். அவள் ஆத்மாவினால் பூஷிக்கப்பட்டிருந்தான். மேகம் கவிந்த மாலைப் பொழுதுகளில் அவளுடன் இரகசியங்கள் பேசியிருந்தான். அதெல்லாம் பழைய கனவுகள். நிறைவேறாமலேயே போய்விட்ட கனவுகள். அவள் ஒரு பெரிய பணக்காரருக்கு ஒரேயொரு செல்ல மகளாகப் பிறந்திருந்தாள்; அவன் உள்ள ஒரேயொரு சொத்தையே ஈடுவைத்துப் படிக்க வந்திருந்தான். அவர்களுக்கிடையிலிருந்த முட்டுக்கட்டைகளை அவன் எதிர்த்திருக்கலாந்தான். அவளும் எதிர்க்கத் தயாராகத்தான் இருந்தாள். ஆனால் பெற்றோர்கள்…..; அவர்களின் கனவுகள்….; அவர்களின் மனப்பான்மைகள். இந்தத் தோல்வியை அந்த வேதனையை அவன் சகித்துக் கொண்டான். அவளும் சகித்துக் கொள்வேனென்றே சொன்னாள்.
ஒரு தடித்த குரல் அவன் காதில் விழுந்தது. “சேர், நீங்கள் சொல்வதைக் கொள்கையளவில் சரியென்று வைப்போம். ஆனால், காலம் காலமாக சமுதாயத்தில் தொடர்ந்து மரபுகளான பழக்கவழக்கங்களையும், நம்பிக்கைகளையும் உடனடியாக திடீரென அழிக்கமுடியாது தானே. சாதியில் குறைவாகப் பிறந்தவர்கள் அதனால் வருபவைகளை அனுபவிக்கத்தானே வேண்டும்”. சொன்னவன் மார்க்கண்டுவையும் அவளையும் திரும்பிப் பார்த்தான்.
“மாற்றங்களும் அதோடு இணைந்த வளர்ச்சிகளும் தவிர்க்க முடியாதவை. மதக் கட்டுப்பாடுகள், மரபுகள், பழக்கவழக்கங்கள் என்பவை எல்லாம் தம் சுயநலத்திற்காக வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முயல்பவர்களின் பூச்சாண்டிகள். மனித நாகரீக வளர்ச்சியின் வரலாறே இதைத்தான் காட்டுகின்றது. மனிதசாதியின் ஒவ்வொரு முன்னோக்கிய வளர்ச்சியின்போதும், மதமென்றும், மரபென்றுமான இத்தகைய மூட நம்பிக்கைகள் தடையாக இருந்ததை நீங்கள் அறிவீர்கள் தானே”.
அவன் ஒரு நீண்ட நெடுமூச்சுவிட்டு, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்து சொன்னான்.
‘நாகரிக வளர்ச்சியின்போது ஒரு காலகட்டத்தில் சரியெனக் கருதப்பட்டது இன்னோர் காலகட்டத்தில் பிழையெனவும், ஒரு காலகட்டத்தில் பிழையெனக் கருதப்பட்டது: இன்னோர் காலத்தில் சரியெனவும் கருதப்படலாம். உதாரணமாக ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன்பு விதவா விவாகம் பொதுவாக பிழையானதெனப் பரவலாகக் கருதப்பட்டது. அதே நேரத்தில் பிரபுகள், ஜமீந்தார்கள் பலதார மணம் செய்வது பிழையற்றதாக -அதாவது சரியெனக் கருதப்பட்டது. ஆனால் இன்று, “விதவா விவாகம்’ வரவேற்கப்படுகிறது.’
வகுப்பு மாணவர்கள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் வெளியுலகை மறந்திருந்தனர்.
அவர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்களென அவன் உணர்ந்து கொண்டான்.
சிந்தனையினால் – சமுதாய அடித்தளத்தில் மாற்றங்களும் மாற்றங்களை வரவேற்கின்ற மனப்பக்குவமும் அதனால் பொதுவான சமுதாய வளர்ச்சியும் ஏற்படும் என்பதில் அவள் பரிபூரண நம்பிக்கை வைத்திருந்தான்.
அந்தப் பாடம் முடிவதற்கான மணி அடித்தது.
‘நாங்கள் சமூகப் பிராணிகள். நாங்கள் சமூக உணர்வுள்ளவர்களாக இருக்கவேண்டும். சமுதாயப் பிரச்சனைகள் எங்கள் பிரச்சனைகளே. நாங்கள் எவற்றிலும் தீவிரமாக சிந்தித்து ஒரு நல்ல முடிவுக்கு வரவேணும். நாங்கள் சரியென்று கருதுவதை, நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு, தன்னம்பிக்கையுடன் வெளியிட வேண்டும். காதலென்றாலுஞ்சரி, சமூக மூடப்பழக்க வழக்கங்க ளென்றாலுஞ் சரி நாம் சரியென்று கருதுகின்றவைக்காகப் போராட வேண்டும்’. அவன் அடுத்தநாள் வருவதாக சிரித்துக்கொண்டே அவர்களிடம் விடைபெற்றான்.
அவன் அடுத்த வகுப்பை நோக்கி நடந்தான். அடுத்த நாள் அவன் வகுப்புக்கு வரும்பொழுது, அவர்கள் மனப்பான்மையில் சிறிய அளவிலாதல் மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமென நம்பினான்.
காலம் காலமாக சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் மனப்பான்மையில் ஏற்படும் மாற்றங்களும் அதனோடு இணைந்த வளர்ச்சிகளும் சமுதாய அடித்தளத்திலிருந்துதானே ஏற்பட வேண்டுமென்பதில் அவன் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்தான்.
– ஏப்ரல் 1973
– உதிரிகளும்…(சிறுகதைகள்), முதலாம் பதிப்பு: ஆவணி 2006, புதிய தரிசனம் வெளியீடு.