மாயமாய்ப் போன படகோட்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 3, 2019
பார்வையிட்டோர்: 6,623 
 

கவண்கற்களில் இருந்து வெளியேறும் கல் அந்தரத்தில் பறப்பது போலவும் அக்கல் செல்லும் திசையில் ஒரு புலி கடுங்கோபத்துடன் இருப்பது போலவும் பெரிய கல்லில் செதுக்கபட்டிருந்த சிதைந்த நிலையில் இருந்த அந்தப் புராதான சிற்பத்தைப் பார்த்து வாய்ப்பிளந்து நின்றான் இளம்பருதி. சிற்பத்தினருகே ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அத்தகைய அரிய காட்சியை அதற்கு முன் பார்க்காத வியப்பு அவனை மெய்மறக்கச் செய்திருந்து.

“மலையில் தோன்றி கடலில் கலக்கும் அந்த ஆற்றின் பாதையின் நடுப்பகுதியில் கரைக்கு இருமருங்கிலும் ஏராளமான வீடுகள் இருந்தன. கரைக்குத் தென் திசையில் அமைந்திருந்த அந்த கிராமத்தில் பழமையான வாழ்க்கை முறைகளைக் கொண்ட மக்கள் வாழ்ந்து வந்தனர். அந்த கிராமத்திற்குச் செல்ல மக்கள் பெரும்பாலும் படகையே நம்பிருந்தனர். இக்கரையிலிருந்து அக்கரைக்கு மக்களை அழைத்துச் செல்வதே தன்னுடைய வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டிருந்தான் ஆதி. அவனது முன்னோர்களின் வழியில் அவன் செயல்படுவதாக அந்த ஊர்மக்கள் அழுத்தமாக நம்பினர்” என்ற அந்தச் சிற்பத்தின் அடியில் பெறிக்கப்பட்டிருந்த செய்தியை வாசித்தவன் மனதில் எப்படியாவது அவ்வூர் மக்களைப் பார்த்து விடவேண்டும் என்ற ஆவல் மேலிட்டது.

புராதனமான ஊரை நோக்கிப் பயணித்தான். காடு, ஆறு, மலை ஆகியவற்றைக் கடந்து சென்றுகொண்டிருந்த போது ஒரு பெரிய பாறை கண்ணைக் கவர்ந்தது. அப்பாறையில் ஏதோ ஒரு சிற்பம் செதுக்கியிருந்தது. அது தெளிவாகத் தெரியாததால் அதன் அருகே சென்றான். கொஞ்ச நாட்களுக்கு முன் பார்த்த அதே சிற்பம் அந்த பாறையிலும் இருந்தது அவனுக்கு அதிர்ச்சியளித்தது.

வைத்த கண் வாங்காமல் நின்றவனுக்கு, “அச்சிற்பத்தில் இருந்த கல் புலியை நோக்கிப் பாய்ந்துசெல்வது போல் தோன்றியது”. அவனுடைய நினைப்பைத் தடுத்து நிறுத்தியது அவனது தோள்மீது படிந்த விரல்களின் ஸ்பரிசம். அந்த நினைவிலிருந்து வெளியேறுவதற்குள் யார் தம்பி நீங்க? என்ற குரல் விரல்களுக்கு உரியவரிடமிருந்து வந்ததும் ஏற்கனவே திட்டமிட்டு நடப்பது போல் அவ்வளவு நுட்பமாக அமைந்திருந்தது.

“என் பேரு இளம்பரிதிங்க. நான் அந்த மலைக்கு அப்பால் இருக்கிற நகரத்தில் இருந்து வருகிறேன். இந்த ஊரின் வரலாற்றைப் பற்றிக் கொஞ்ச நாளைக்கு முன்புதான் கேள்விப்பட்டேன். அப்போதிலிருந்து இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஊரினை எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல் என் உள்ளத்தில் குடி கொண்டது. பல பகீரத பிரயத்தனத்திற்குப் பிறகு இப்போது தான் அதற்குரிய வாய்ப்பு கிடைத்தது” என்று தன்னைப் பற்றி விவரித்து முடித்தான்.

அவற்றையெல்லாம் உற்றுக் கேட்ட பெரியவர், “வாங்க தம்பி! நீங்க சரியான நேரத்திற்குத் தான் வந்திருக்கிறீர்கள்” என்றவர் “அவ்வூருக்குப் போவதற்குமுன் அவ்வூரின் வரலாற்றைத் தெரிந்துகொண்டு போங்க” என்று அவ்வூரின் வரலாற்றை வலிய வந்து கூற ஆரம்பித்தார்.

“பெருக்கெடுத்து ஓடும் ஆற்றங்கரையில் அமைந்திருந்த ஊரில் மக்களைப் படகில் ஏற்றிச் செல்லும் பணியை அற்புதமாகச் செய்துவந்தான் ஆதி. பார்ப்பதற்கு மழைக்கால மேகத்தைப் போல் இருந்தாலும் அவனுடைய முகம் பிரகாசமானயே பொலிவாகக் காட்சியளித்தது. அவனது முகபாவனை அவனிடம் மக்கள் அதிகமான அன்பை வெளிப்படுத்த வைத்தன. பெரியவர் சிறியவர் எனப் பேதமின்றி எல்லோரும் அவனைப் படகோட்டி என்றும், தோணியோட்டி என்றும் அன்புடன் அழைத்தனர்” என்ற பெரியவர் அவனுடைய முகத்தைப் பார்த்தார்.

கூறுவதை அவன் சிரத்தையாகக் கவனித்ததால் அவர் தொடர்ந்தார்.

“ஆற்றங்கரையோரம் இருந்த அந்தப் பெரிய ஊரில் நான்கு பிரதான தெருக்கள் இருந்தன. அந்தத் தெருக்கள் சந்திக்கும் நாற்சந்தியில் பிரமாண்டமாக இருந்தது ஆதியின் வீடு. அவனைத் தவிர அந்த வீட்டில் வேறுயாரும் இல்லை”.

அவன் யார்? அந்த ஊருக்கு அவன் எப்போது வந்தான்? அவனுக்குக் குடும்பம் இல்லையா? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் இளம்பரிதியின் மனதில் எழுந்தது. அதை அவரிடம் கேட்கலாமா? என்றும் அவன் யோசித்தான்.

ஆனால் அவற்றிற்கு அவசியம் ஏற்பட வில்லை.

“அவனது பூர்விகம் எது? எங்கிருந்து வந்தான். எங்கள் ஊருக்கு எப்போது வந்தான்? அவனுக்கென்று குடும்பம் குட்டி இல்லையா? என்ற எந்தக் கேள்விக்கும் எனக்கு மட்டுமல்ல எங்கள் ஊரிலிருக்கும் யாருக்கும் பதில் தெரியாது ஆனால் எங்கள் ஊர்மக்களை அக்கரைக்குக் கொண்டு செல்வதை அவன் நெடுங்காலமாகச் செய்துவருவதை மட்டும் நாங்கள் எல்லோரும் அறிவோம்.

எங்கள் ஊரின் நடுவில் பிரமாண்டமான தோற்றத்துடன் பெரிய ஆலமரம் ஒன்று உள்ளது. அது நீண்ட காலமாக இருக்கிறது.

படகு சவாரி செய்யும் நேரம் போக எஞ்சிய வேளைகளில் அவன் அந்த மரத்தடியில்தான் ஓய்வெடுப்பான்.

அவன் எங்கள் ஊருக்கு வருவதற்குமுன் அம்மரத்தடியில் கால்நடைகள் மட்டுமே கட்டிவைக்கப்பட்டிருந்தன. எங்கள் முன்னோர்கள் யாரும் அங்குச் சென்று ஓய்வெடுக்கவில்லை. அவனது வருகைக்குப் பிறகுதான் அம்மரத்தடி மக்கள் ஓய்வெடுக்கும் பகுதியாக மாறியது” என்பது எங்கள் மூதாதையர்கள் மூலம் அறிந்த செய்தி என்றவர் அவனுடைய முகத்தைப் பார்த்து, அச்செய்தியை நாங்கள் திடமாக நம்புகிறோம். அச்செய்தி மட்டும் எப்படி எங்களுக்குத் தெரிந்தது? என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. ஆனால் அச்செய்தி எங்கள் நெஞ்சில் பசுமையாகப் பதிந்துள்ளது என்றவர், “அந்த ஆலமரத்தைப் பற்றிக் கூறுகிறேன் கேள். கேட்க ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்” என்று அவனுடைய பதிலை எதிர்பார்க்காமல் தொடர்ந்தார்.

ஊரின் நடுவில் நீண்டகாலமாக இருந்த ஆலமரம் வானைத் தொட்டுவிடும் அளவு உயரமாக இருந்தது. என்றாலும், அதில் கிளைகள் பெரிதாக இல்லை. அப்படி இருந்த மரம் படகோட்டியின் வருக்கைக்குப் பிறகு பல கிளைகளாகப் பரந்து விரிய ஆரம்பித்தது. அதை எங்கள் மக்கள் மட்டுமின்றி வெளியூர் மக்களும் வந்து வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தனர்.

அம்மரத்தில் ஏராளமான கிளைகள் தோன்றின என்றாலும், அவற்றில் நான்கு கிளைகள் மட்டும் தனித்துவம் வாய்தவைகளாக விளங்கின. அவை மற்ற கிளைகளைப் போல் அல்லாமல் அளவில் பெரியதாக இருந்ததுடன் அவை பக்கவாட்டில் கிடைமட்டமாய் திசைக்கு ஒன்றாய் நீண்டு வளர்ந்தன. அதனால் மரத்தடியில் அதிக அளவு நிழல் உருவானது. வெயில் மழை போன்ற துன்பங்களில் இருந்து காத்துக்கொள்ள மக்கள் அதனடியை நாட ஆரம்பித்தனர்.

அத்தகைய மாற்றங்களுக்கெல்லாம் ஆதியின் வருகையே காரணம் என்ற வதந்தி காற்றில் பரவ ஆரம்பித்தது.

அதே வேளையில் அந்த மரம் பல்கிப் பெருகுவதற்கும் படகோட்டியின் வருகைக்கும் என்ன தொடர்பு? இதில் வேடிக்கை பார்க்க என்ன இருக்கிறது? என்று சிலர் கேள்வி எழுப்பினர்.

அவ்வாறு கேட்டவர்களில் சிலர் நாளடைவில் மனம் மாறினர். சிலர் ஊரை விட்டு வெளிறேினர்.

இனி எந்த பிரச்சனையும் இல்லை என்று இருந்த நிலையில் ஊரின் தெற்கே ஆரவாரமின்றி அமைதியாக ஓடிக்கொண்டிருந்த ஆறு திடீரென்று ஒரு நாள் சீற்றங்கொண்டு ஊருக்குள் ஓடி வந்தது.

உருண்டோடிய கால வெள்ளத்தில் இயற்கையில் ஏற்பட்ட அம்மாற்றம் நன்றாக போய்கொண்டிருந்த எங்கள் ஊரின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டது.

வெள்ள நீர் வடிய மூன்று நான்கு நாட்களுக்கு மேல் ஆனது. வெள்ளத்தால் வீட்டில் முடங்கிக் கிடந்தவர்கள் நீர் வடிந்த பிறகுதான் மகிழ்ச்சியாக வெளியே வந்தனர். அவ்வாறு வந்தவர்கள் வீட்டில் அடைந்து கிடந்த சோர்வு நீங்க சிறியவர் பெரியவர் ஆண் பெண் என்ற பாகுபாடில்லாமல் எல்லோரும் சேற்றில் விளையாடி மகிழ்ந்தனர். அவர்களுடைய கால்களில் ஒட்டிய செம்மண் தண்ணீரில் எவ்வளவு கழுவியும் போகவில்லை. வண்டல் மண்ணில் நடந்து பழகியவர்களுக்கு வெள்ள நீர் கொண்டு வந்த செம்மண் சகதி புது உணர்வைத் தந்தது.

இதற்கிடையே ஆலமரம் நன்கு காய்க்கத் துவங்கியது. மரத்தின் பழங்கள் கிளைக்குக் கிளை மாறுபட்டு இருந்ததாக ஒளியின் பெயரைக் கொண்ட கவிஞர் அழகாய்ப் பாடினார். அதிலும் குறிப்பாக பிரதானமாக விளங்கிய அந்த நான்கு கிளைகளின் சுவை நாக்கிலிருந்து போகாது என்ற அக்கவிஞனின் பாடல் படித்தவரை பிரமிப்பில் ஆழ்த்தியது என்றவர் இளம்பரிதியின் முகத்தை உற்றுப்பார்த்தார்.

அவன் ஏதோ யோசனையில் மூழ்கியவன் போல் காணப்பட்டான்.

என்ன தம்பி! என்ற அவருடய குரலைக் கேட்டு இயல்பு நிலைக்கு வந்தவன் அவரைப் பார்த்தான்.

அவனுடைய பார்வை அவரை “மேலும் சொல்லுங்கள்” என்பது போல் இருந்தது.

அவர் தொடர்ந்தார்.

எங்கள் ஊர் மக்களைப் படகில் ஏற்றிச் சென்று கொண்டிருந்த படகோட்டி திடீரென ஒரு நாள் காணாமல் போனான். பல இடங்களில் தேடிப்பார்த்தும் பலன் இல்லை. காலப்போக்கில் தேடுதலை விட்டுவிடடோம். ஆனால் ஒரு சிலர் அதன் பிறகு அவனை கனவில் கண்டதாக ஊரில் பேசிக்கொண்டனர். ஆனால் சிலர் அதை வெரும் வதந்தி என்று நம்ப மறுத்தனர். எந்த ஒரு கருத்திற்கும் மாற்றுக் கருத்து இருக்கும் அல்லவா? என அவ்வூரின் வரலாற்றை விவரித்து முடித்தார்.

அப்போது முதியவரின் முகம் வாடியிருந்தது.

அனைத்தையும் கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்த இளம்பரிதி, ஏன் பெரியவரின் முகம் வாடியது? என்று தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்தான். அத்துடன், காணாமல் போன ஆதியைப் பற்றி இன்னும் வேறு ஏதாவது தகவல் தெரியுமா? எனக் கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் உந்தியது.

அவன் ஏதோ கேட்க வாய்த்திறந்தான். அதற்குள் இடைமறித்து பெரியவர் மீண்டும் போசத்துவங்கினார்.

ஊரில் இருந்த அப்பெரிய ஆலமரம் காய்த்தபோது நாலபுறமும் இருந்து பறவைகள் வந்தன. அதனால் எப்போதும் ஒரே ஆரவாரமாக இருந்தது. ஊரில் திருவிழாக்கள் ஏராளமாக நடைபெற்றன.

மரம் வளர வளர அதன் நிழலும் நீண்டது. மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

அப்போது தான் அது நிகழ்ந்தது. அதை யாரும் எதிர் பார்க்க வில்லை.

சிலர் அம்மரத்தை வெட்டிவிடவேண்டும் என்று சதித்திட்டம் தீட்டினர்.

அவ்வளவு பெரியதாக இருக்கும் அம்மரம் என்ன பூசணிக்காய் மாதிரி பெரிய காயா காய்க்கிறது. அது நிழலைத் தவிர வேறு என்ன நன்மையை நமக்குச் செய்கிறது? என்பது அவர்கள் முன்வைத்த வாதம்.

ஆனால் அவர்களுடைய தீய எண்ணம் ஒரு வழியாகத் துரத்தியடிக்கப்பட்டது.

என்றாலும், கொஞ்ச காலத்திற்குப் பிறகு அந்த மரம் முன்பு போல் காய்க்க மறந்து போனது. பறவைகளின் வருகையும் குறைந்து போனது என்று தன் நெஞ்சில் இருந்த பாரத்தை இறக்கி வைத்தவர் போல் பெருமூச்சு விட்டார்.

அப்போது அவருடைய முகத்திலிருந்த சோகம் மெல்மெல்ல அவரை விட்டு விலக ஆரம்பித்தது. நெடுநாளாய்ச் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டிருந்த பாரத்தை இறக்கி வைத்த திருப்தியை அவருடைய கண்கள் வெளிப்படுத்தின.

ஆலமரத்தைப் பற்றிப் பெரியவர் கூறிய செய்திகளைக் கேட்ட இளம்பரிதிக்கு உடனடியாக அந்த மரத்தைப் பார்த்துவிடவேண்டும் என்று உள்ளம் பதபதைத்தது. எனவே அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு பெருமை மிக்க ஆலமரத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் அங்கிருந்து புறப்பட்டான் அவன்.

நான்கடி எடுத்து வைத்தவன் திரும்பிப் பார்த்தான். தனக்கு விடை கொடுத்தனுப்பிய பெரியவர் அங்கில்லை.

மனதைத் தேற்றிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

கால்கடுக்க நடந்தவனுடைய பாதையில் வறண்ட ஆறு ஒன்று குறுக்கிட்டது. அது பெரியவர் கூறிய ஆறாக இருக்குமோ என்ற அவனுக்கு யோசனையை ஆற்றின் நடுவில் தனியாகப் படகு ஓட்டிக்கொண்டிருந்தவனின் காட்சி உறுதிபடுத்தியது.

அப்படகோட்டி மலர்ந்த முகத்துடன் இளம்பரிதியைப் பார்த்து தன்னருகே வருமாறு சைகை காட்டினான்.

அறிமுகமில்லாத படகோட்டித் தன்னை அழைப்பதை அவனால் நம்பமுடியவில்லை. ஒருவேளை அவன் தனக்குப் பின்னால் வரும் வேறு யாரையாவது கூப்பிடுகிறானோ என்னவோ? என்று சந்தேகப்பட்டு பின்னால் திரும்பிப் பார்த்தான். யாரும் இல்லை.

மீண்டும் படகோட்டி சைகையால் அழைத்தான்.

அவனால் நம்ப முடியவில்லை.

தன்னைத்தான் அழைக்கிறானா? என்பதை உருதிப்படுத்திக்கொள்ள நானா? என்று சைககையில் கேட்டான்.

அமாம் என்பது போல் சைகைசெய்ய அவனை நோக்கி தயக்கத்துடன் நடக்க ஆரம்பித்தான்.

அவன் இருக்கும் இடத்திற்கு சற்றுத் தொலைவில் சென்றபோது திடீரென மாயமாய்ப் போனான் அப்படகோட்டி.

அவன் நின்றிருந்த இடத்தில் ஒரு பெரிய ஆலமரம் வானை முட்டி வளர ஆரம்பித்தது. அதை உற்றுப் பார்த்தபோது பெரியவர் கூறிய நான்கு கிளைகளின் சுவை நினைவுக்கு வந்தது.

அவனுடைய அந்த நினைப்பை கிளைகளற்ற அந்த ஆலமரம் முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டது.

– சிற்றேடு (அக்டோபர் – டிசம்பர் 2018)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *