மாநகரப் பேருந்துப் பயணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 21, 2016
பார்வையிட்டோர்: 7,010 
 
 

கோயம்பேடு சத்திரம் பேருந்து நிறுத்தம் எப்போதும் போல் அன்றும் பரபரப்பாக இருந்தது. அங்கே எதிரே கட்சி அலுவலகத்தில் யாரோ ஐந்தாறு ஆட்கள் வெய்யிலில் வண்ணக் குடை பிடித்தபடி வீடியோ படம் பிடிக்க ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தனர். விதவிதமான வண்ணக் கொடிகள் கட்டிய கார்களில் அரசியல் பிரமுகர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். எதிர் வாடையில் நின்று இவற்றை வேடிக்கை பார்த்தபடி 46 எண் மாநகரப் பேருந்திற்காக காத்திருப்பது அந்த வெய்யில் நேரத்தில் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை.

டீக்கடை நிழலில் ஒதுங்க நினைத்தால் அரசியல் பேசும் கட்சிக்காரர்கள், “அண்ணே எம்புட்டு ஆனாலும் ஒரு கை பார்த்திடலாம்ணே. எப்படியும்
நிச்சயமா செயிச்சிடுவீங்க. தலைவரண்ட தெகிரியமா பேசுங்க”.

எனக்கு அரசியல் பேச்சில் அதிக சுவாரசியம் கிடையாது.

மேலும் என் ராசியான மிதுனத்திற்கு சந்திராஷ்டமம் என்று காலையில் தொலைகாட்சியில் பார்த்த ஜோசியர்கள் எல்லாம் ஒருத்தர் பாக்கியில்லாமல் சொல்லி எச்சரிக்கை செய்திருந்தனர். முடிந்தவரை மௌனம் காத்து, அன்றாட அலுவல்களை மட்டும் கவனிக்க வேண்டும். பொதுப் பிரச்சனைகளில், விவாதங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது என்று தினமலரும் உறுதிப்படுத்தியது. இப்போ இதை இவன் ஏன் சொல்கிறான் என்ற நியாயமான சந்தேகம் உங்களுக்கு இதற்குள் வந்திருக்க வேண்டும். இந்த கதை முடியும் தருணத்தில் என் மௌனத்தை விளங்கிக் கொள்ள முடியும்.

சத்திரம் பஸ் ஸ்டாப் என்ற நாமம் கொண்ட அந்த பஸ் ஸ்டாப் அருகில் நின்ற ஒரே ஒரு ஆலமரமும் டிசம்பர் மாதம் பனியில் குளித்த தலையைக் காற்றில் துவட்டியதில் இருந்த இலைகளை கிட்டத்தட்ட முழுவதுமாக இழந்து குறைந்த இலைகளை வைத்துக் கொண்டு கஞ்சத்தனமாக நிழல் தந்தது. அந்த சுடும் வெயிலிலும் பிளாட்பாரத்தில் உட்கார்ந்தபடி பூக்கட்டியபடி கருமமே கண்ணாயிருந்த பெண்கள். அருகில் பிளாஸ்டிக் பை நிறைய சாமந்திப் பூக்கள் மடித்துக் கட்டிய வாழை நார்கட்டு. சுற்றிலும் இரைந்து கிடக்கும் தொடுக்க இயலாத உதிரிப்பூக்கள்.

நம் கதாநாயகி யை அறிமுகம் செய்ய வேண்டிய காலம் வந்து விட்டது.

பக்கத்தில் ஒரு மூதாட்டி, சுருக்கம் விழுந்த முகம் வயது எப்படியும் எழுபது சொச்சம் என்று காட்டியது. என்னிடம் “தம்பி, 46 வண்டி வந்தா சொல்லுப்பா ராசா” என்றார். முதல் பார்வையில் அவரை அடையாளம் அறிய முயற்சி செய்தேன். எங்கோ பார்த்த ஞாபகம். சரியாகப் பிடிபடவில்லை.

“சரிம்மா”, என்ற எனக்கு அவர் எங்கே போகப் போகிறார் என்றறிய வேண்டி,” எங்க போகணும்” ஐ.சி.எப் ஆ” என்று கேட்ட என்னிடம் “ பட்டாளம் போகணும். பேரப்புள்ளைய பாக்கப் போறேன்” என்றார்.

என்னவெல்லாமோ பேருந்துகள் வந்தன. ஆனால் 46 வரவில்லை.

அந்த இருபது நிமிட நேரத்தில் என்னிடம் தன் குடும்பக்கதை பேச ஆரம்பித்து விட்டார். “எப்பா, உனக்கு எத்தினி பசங்க? கோவிச்சிக்காதே. உன்னைய பார்த்தால் என் உடன் பொறந்தவனைப் போல தோணுது, அதான் கேட்டேன்”.

“ஒரு பையன், ஒரு பொண்ணு, ஆயா”

“ஆமா. யாரு பெரிசு பையனா? பொண்ணா”?

“பையன் தான் பெரியவன்”.

“ இன்னா வயசாச்சு அவனுக்கு”?

பஸ் ஸ்டாப்பில் முன்னப்பின்ன தெரியாத வயதான பெண்மணியிடம் குடும்ப கதை எல்லாம் சொல்லும் தருணம் உங்களுக்கு வாய்க்காவிட்டால் நீங்கள் சத்தியமாகப் பாவிதான்.

“25 வயசாச்சு ஆயா”

“ தம்பி படிச்சி முடிச்சிருச்சா, வேலைக்குப் போவுதா”?

“ஆமா ஆயா, இஞ்சினியர் படிப்பு படிச்சிட்டு ஒரகடத்தில் ஒரு கார் கம்பெனியில் வேலை செய்யிறான். கல்யாணத்திற்குப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்”.

“ ஆங். ஒரகடம் கார் கம்பெனியா? ஹுண்டாய் கம்பெனியா? நல்ல சம்பளம் கிடைக்குமே” என்றவர்

“பொண்ணு பார்க்கும் போது நல்ல பொண்ணா பார்க்கணும் ராசா, பையனுக்கு எடுத்துச் சொல்லு அழகை விட கொணம் முக்கியம். என் புள்ளை அழகை பார்த்து மயக்கத்தில ஒரு ராங்கிக்காரியை கட்டிக்கிட்டு படாதபாடு படறான்”. “அவ பேச்சு கேட்டு என்னை மகன் துரத்தி விட்டான்” என்ற எல்லா மாமியார்களும் சொல்லும் கதையுடன் ஆரம்பித்தவர் மகளும், மருமகனும் தன்னை தாயைப் போல பார்த்துக் கொள்வது வரை சொன்னார்.

ஆனாலும் திருவள்ளூர் இந்துஸ்தான் மோட்டார் கம்பெனியில வேலை செய்த அவரது கணவர் இறக்கும் போது,” யாரையும் அண்டியிராதே கமலம்” என்ற அவரது வார்த்தைக்கு மரியாதை கொடுத்து தனிக்கட்டையாக வாழ்வது பற்றி சொன்னார். குறுங்காலீஸ்வரர் கோவில் சரபேஸ்வரர் கோவில் மண்டபத்தில் ஜாகை. கொஞ்சமா பூ கட்டி வியாபாரம். மதியம் கோவில் அன்னதானத் திட்டத்தில் சாப்பாடு இப்படியாக காலம் ஓடுகிறதை சொல்லிப் பெருமூச்சு விட்டார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஓடிவிட்டது.

கதை ஓடிவிட்டது.

அவரு விட்டுப்போன கிராஜுட்டி பணத்தை ஏமாந்து மருமகளிடம் கொடுத்து விட்டதில் அதிகம் வருத்தப்படவில்லை. “எப்படியும் எனக்கு பிற்காலம் அவதான் எடுத்துக்கப் போறா. சரி இப்போவே கொடுத்திட்டதா நினைச்சிக்கிட்டேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வரிசைகட்டி நாலைந்து பேருந்துகள் வர அதில் ஒன்று 46 ஆக இருந்தது.

பேருந்தில் நல்ல கூட்டம். பொதுவாக சென்னை மாநகர பேருந்துகள் நிறுத்தத்தில் அதிகம் கூட்டம் இருந்தாலும் அல்லது ஓரிருவர் கை காட்டினாலோ நிறுத்துவதற்கு அதிகம் வாய்ப்பில்லை என்பது என் அனுபவ ஞானம். அப்படி நிறுத்தத்தில் பேருந்து அதிருஷ்டவசமாக வந்து நின்றால் அது உங்கள் பாக்கியம். நம் நிறுத்தம் புறநகர் பேருந்து நிலையத்திற்கு அடுத்த நிறுத்தம். ஆகவே ஒரே சமயத்தில் நிறைய பேருந்துகள்வந்து நிற்பதால் எப்போதும் நெரிசல் அதிகம். பேருந்து வந்து நின்றது. அவரை வண்டி வந்ததைச் சொல்லி முன் வாயில் வழியாக ஏறச் சொன்னவன் அடித்துப்பிடித்து பின் வாயில் வழியாக ஏறி நூர் ஹோட்டல் நிறுத்தம் டிக்கெட் கேட்டு 20 ரூபாய் கொடுத்தேன். நடத்துனர் மூன்று ரூபாய் கேட்க இல்லை என்றேன்.

“படிச்சவன் படிக்காதவன் எல்லாரும் இப்படிக் கழத்தறுக்கிறாங்க” என்று சலித்துக் கொண்டவர் 13 ரூபாய் டிக்கெட் எச்சில் தொட்டு தந்துவிட்டு, ”இறங்கும் போது 3 ரூபாய் தந்திட்டு 10 ரூபாய் வாங்கிக்க” என்று அதீத மரியாதையாகச் சொல்லி விட்டுக் கூட்டத்தில் காணாமல் போனார்.

என்.எஸ்.கே நகர் நிறுத்தத்தில்,” ஏய் கிழவி இறங்கிடு. வெள்ள போர்ட்டு பஸ்சில தான் 7 ரூபாய் டிக்கெட். இது டீலக்ஸ், நீல போர்ட் 13 ரூபாய். எத்தனைவாட்டி சொன்னாலும் புரியாதா” என்ற குரல் வந்த திசையில் கஷ்டப்பட்டு பார்த்தால் நம்ம கமலம் பாட்டிதான்.

“ ஏய் கெய்வி இந்த வயசில என்ன சுற்றுலா கேக்குது உனக்கு”?

“கண்டக்டர், ஆயாவை காந்தி நகர் ஸ்டாப்பில் எறக்கி விடுப்பா.வேலங்காடு பக்கத்தில்தான். போய் படுத்துகிட்டா செலவு மிச்சம்” என்று ஒரு வழுக்கைத் தலை பெரிய தமாசு சொன்னார். அதற்கு பஸ்ஸில் ஒரே சிரிப்பு.

“ஏம்பா,எல்லா வண்டியும் ஒரே மாதிரித்தானே ஒரே வழிதானே போவுது. போற இடத்துக்குத்தானே காசு? கலர் போர்ட்டுக்கா காசு?” என்ற கமலம் பாட்டியின் நியாயமான கேள்வியை இதுவரை ஏன் யாருமே கேட்கவில்லை என்று நினைத்தேன். டீலக்ஸ் பஸ்சில் மட்டும் ஒழுகாமலா இருக்கிறது அல்லது சீட் உடையாமல் இருக்கிறதா என்ன? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அமைச்சர்களுக்கே பதில் சொல்லத் தெரியாதே, நடத்துனர் என்ன செய்வார், பாவம். கோபம் தலைக்கேற கமலம் பாட்டி கையைப் பிடித்து இறங்கு இறங்கு என்றபடி விசில் அடித்து நிறுத்தினார்.

நான் கூட்டத்தில் தடுமாறி கண்டக்டர் அருகில் வந்து “சார், எனக்கு நீங்க தர வேண்டிய பாக்கி 7 ரூபாயிலிருந்து எடுத்துக் கொள்ளுங்க” என்றேன்.

அதற்கு அவர் உன் சீட்ட காமி பின்னாடி எழுதிருக்கனா பாரு” என்றார்.

“ எழுதவில்லை, இறங்கும் போது மூணு ரூபா தந்திட்டு பத்து ரூவா வாங்கிக்க சொன்னீங்க”

“சரி,சரி, இப்படி எழுதாம இருக்கவே மாட்டேன். நீ தான் சொல்லற. நம்பறேன்”, என்றபடி டிக்கெட் தருவதற்குள் பஸ்சிலிருந்த மக்கள்,

“ பாரேன் இந்த வயசு காலத்திலும் ஆயா என்னமா சட்டம் பேசுது”.

“இறக்கிவிட்டாத்தான் புத்தி வரும்”.

“இன்னிக்கி இதால லேட்”.

“ லேடீஸ் ஸ்பெஷல்” மாதிரி ஆயா ஸ்பெஷல் விட வேண்டும்”

என்றும் கமலம் பாட்டியை இறக்கி விட்டுப் பயணம் தொடர்வதிலேயே ஆர்வம் காட்டியது. கமலம்மாவின் பக்க நியாயமோ, பயணம் செய்யும் உரிமையோ, தைரியமோ எதுவும் அவர்களுக்கு பொருட்டாகத் தெரியவில்லை.

அடுத்த ரவுண்டாணா நிறுத்தத்தில் நிறைய கல்லூரி மாணவர்கள் ஏறினர். கண்டக்டர், பொதுமக்கள் யாரையும் சட்டை பண்ணவில்லை. ஒரே பாட்டும், கூத்தும். கிழவியை இறக்கிவிட அத்தனை ஆர்வம் காட்டிய பொது ஜனம் யாரும் வாயைத் திறக்கவில்லை. வழுக்கைத்தலை ஆசாமி பக்கத்தில் ஒரு சீட் காலியானது அவர் உட்காரப் போகவும், அந்த மாணவர்களில் ஒருவன் தன் பையை அதில் போட சண்டை வரும் சந்தர்ப்பம் உருவானது. ஒரு மாணவன் “தாத்தா உக்கார்ந்துகோ, டேய் பையை எடுடா” என்றான். வழுக்கைத்தலை ஆசாமி உட்கார்ந்ததும், சீட்டின் பின்புறப்பலகையில் தாளம் போட ஆரம்பித்தான் மற்றொருவன். இரட்டை அர்த்தப் பாடல்கள். கூச்சல் . நிற்பதே பரவாயில்லை என்ற எண்ணத்தில் வழுக்கைத் தலையர் இருக்கையிலிருந்து எழுந்து நிற்க ஒருவன்,

“பெரிசு இறங்கப் போறியா? இது பதினாலு கடை அடுத்ததுதான் வேலங்காடு” என்று சொல்லவும் பேய்ச் சிரிப்பு.

“டேய், துலுக்காணம் மவனே, என்னாடா ரொம்ப ஆட்டம் போடற, ஜாண்டாபீஸ் ஷ்டாப்புல டேசன்ல கம்ளேண்ட் சொல்லணுமா இல்லை உங்கப்பன் கிட்ட சொல்லணுமா ” என்றதும் சுவிட்ச் போட்டாது போல் படு நிசப்தம். கடுவன் பூனையாக இருந்த கண்டக்டர் முதல் எல்லாரும் கமலம் பாட்டியை மரியாதையாகப் பார்த்தனர். பேருந்தின் வலது பக்க இருக்கைகளில் அமர்ந்திருந்த ஆண்கள் பலருக்கு அப்போதுதான் பொய்த் தூக்கத்திருந்து விழிப்பு வந்தது.

காந்திநகர் ஸ்டாப்பிங்கில் வழுக்கைத்தலையர் ஐ சி எப் பில் இறங்க தயாராக படிக்கட்டு பக்கத்தில் வந்து நின்றார். வண்டி ஐ சி எப் பிற்கு வலதுபுறம் திரும்ப சிக்னலில் நின்றது. அவமான உணர்வா அல்லது அந்த காட்டுக் கூச்சலா என்று தெரியவில்லை, அவர் முகம் சரியாகவே இல்லை. சதசதவென்று சட்டை வியர்வையில் நனைந்திருந்தது. யாரும் எதிர்பாராவிதமாக பொத்தென மயக்கமுற்று படிக்குப் பக்கத்தில் உள்ள பெண்கள் இருக்கைக்கு அருகில் கீழே விழுந்தார். அந்த பெண்கள் இருக்கையில் உட்கார்ந்திருந்த கமலம் பாட்டிதான் முகத்தில் தண்ணீர் தெளித்து முதலுதவி செய்து கொண்டிருந்தாள்.

பேருந்து எப்பவோ வேலங்காடு நிறுத்ததைக் கடந்து விட்டிருந்தது .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *