முத்து. சென்னையில் ஐந்து சிறிய ஸ்டேஷனரி கடைகளின் சொந்தக்காரன். முன்னேற விரும்பும் முப்பத்தைந்து வயது வியாபாரி. எழுது பொருள் மற்றும் பான்சி சாமான்கள் விற்பனை. சென்னையில், பெரம்பூர், மூலக்கடை, ஓட்டேரி, ஐயனாவரம், மற்றும் கொளத்தூரில் கடைகள். அப்பாவின் வீட்டை அடமானம் வைத்து, அந்த முதலில் வைத்த கடைகள்.
முத்து ஒரு பி.காம். கடுமையான உழைப்பாளி. ஓயாமல், ஒழியாமல் உழைப்பான். இந்த தொழிலின் நெளிவு சுளிவு தெரிந்தவன். அவனது ஆசை, இந்தக் கடைகளை பெரிது பண்ணனும், இன்னும் நிறைய கடைகள் வைக்கணும், நல்ல லாபம் சம்பாதிக்க வேண்டும்.
ஆனால், கடைகள் வைத்து ஐந்து வருடம் ஆன பிறகும் , இவை எதுவுமே நிகழாமல், நிறைவேறாத கனவாகவே இருந்தது. முத்து, காரணம் புரியாமல் விழித்தான்.
அவனது நண்பன் குமாரிடம் புலம்பினான். “ஏன் குமார்? எப்படி சரவணா ஸ்டோர்ஸ், நல்லி, போதிஸ் எல்லாம் நல்லா வியாபாரம் பண்றாங்க? என் கிட்டே இல்லாத திறமை, அப்படி என்ன அவங்க கிட்டே இருக்கு?”
குமார் ஒரு பெரிய கம்பனியில் மார்க்கெட்டிங் மேனேஜர்.
“என்ன சொல்றே முத்து? அஞ்சு கடை வெச்சிருக்கே. அது எப்படி லாபம் பாக்கம இருக்க முடியும்? ஆச்சரியமா இருக்கே! எங்கேயோ கோளாறு இருக்கு!”
“அதுதான் குமார் எனக்கும் புரியலே ! கடைசிலே எல்லாம் போக உழைப்பு மட்டும்தான் மிஞ்சுது. காசு பாக்க முடியலே!”
“முத்து! சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே? உன் கடை வேலைக்காரங்க ஒருவேளை உன்னை ஏமாத்தராங்களோ?” – குமாரின் சந்தேகம்.
“சே! சே! சரக்கு எல்லாம் நான் தானே போடறேன். தினமும், நானே என் ஜிப்சி வான்லே சரக்கு கொள்முதல் செஞ்சி, எல்லா கடைக்கும் நானே பர்சனல் டெலிவரி கொடுக்கறேன். கணக்கெல்லாம் சரியா வருதே?” – முத்து
“அப்போ கணக்கு வழக்கிலே ஏதாவது குழப்பம்? ஏதாவது திருட்டு?”
“சான்சே இல்லே குமார். நானே எல்லா கணக்கு வழக்கையும் பார்க்கிறேன். தினசரி அக்கவுன்ட் எல்லாம் நானே தான்.”
“அப்போ ஏன் உன் வியாபாரம் மந்தமா இருக்கு? எங்கேயோ உதைக்குதே?”
“அதான் எனக்கும் தெரியலே குமார். விற்பனை சரியா போக மாட்டேங்குது! எல்லா கடைகள்ளேயும் வாங்கி போடற சாமான் எல்லாம் அப்படி அப்படியே முடங்கி கிடக்கு”.
“எனக்கு புரிஞ்சு போச்சு முத்து. நீ வாங்கிப் போடற சாமான்கள் தரம் மட்டம். முதல்லே அதை மாத்து. எல்லாம் சரியாயிடும்.”
“நீ வேறே சும்மா இரு குமார். எல்லாம் சூப்பர் குவாலிட்டி. ஒரு கஸ்டமர் கூட இதுவரை குறை சொன்னதில்லையே”
“அப்போ, குறை உன் கடை சிப்பந்திகள் கையிலே தான். இது கூட தெரியலியா? அவங்களுக்கு சாமானை விக்க தெரியலே! வியாபார தந்திரம் போதாது.”
“ஒரு வேளை அதான் காரணமோ? என்ன பண்ணலாம்? நீயே ஒரு ஐடியா கொடேன் குமார்”
குமார் யோசித்தான். “ஒரு விடுமுறை நாளிலே, உன் கடை சிப்பந்தி எல்லாரையும், உன்னோட பெரம்பூர் கடைக்கு வரசொல்லு. நானே இரண்டு மூணு வகுப்பு எடுக்கறேன். அவங்க விக்கும் திறமையை வளர்க்க நான் எனக்கு தெரிந்ததை சொல்லித்தரேன். என்ன ஆகுதுன்னு பார்ப்போம்”
முத்துவிற்கு இந்த ஐடியா பிடித்திருந்தது. “அப்படியே பண்ணலாம் குமார். ரொம்ப தேங்க்ஸ் உனக்கு. எப்படியாவது என் கடைகளின் வியாபாரத்தை பெருக்க வழி சொல்லு.”
“உனக்கு செய்யாம யாருக்கு செய்யப் போறேன்? நீ கவலைப் படாம போ”
****
விடுமுறை நாட்களில், முத்துவின் ஐந்து கடை சிப்பந்திகளுக்கும் வியாபார நுணுக்கங்கள் பற்றி குமார் மூன்று வகுப்புகள் எடுத்தான். அவர்களுடன், வியாபார நுணுக்கங்கள் பற்றி பேசினான்.
****
மூன்று மாதம் கழித்து
முத்துவும் குமாரும் சந்தித்து கொண்டனர்.
குமார் கேட்டான் “என்ன முத்து! இப்போ வியாபாரம் எப்படி போகுது?”
“ஒண்ணும் சொல்லிக்கறா மாதிரி முன்னேற்றம் இல்லே குமார். மந்தமாகத்தான் இருக்கு”
“அப்படியா! முத்து, வகுப்பு எடுக்கச்சே நான் பார்த்தேன். உன் சிப்பந்திகளுக்கு இந்த பயிற்சி, கிளாசெஸ் இதிலே எதுவும் நாட்டமில்லே. அதுவுமில்லாம, அவங்களுக்கு அவங்க தொழில் நுணுக்கமேல்லாம் நல்லாவே தெரிந்திருக்கு.”
“அப்போ திறமையின்மை காரணம் இல்லியா? பின்னே ஏன், விற்பனை ரொம்ப கம்மியா இருக்கு?”-
“அதைத்தான் முத்து, நானும் யோசனை பண்ணிகிட்டிருக்கேன். சரி,நான் ஒரு ஐடியா சொல்றேன் கேக்கிறியா?”
“என்ன பண்ணனும் சொல்லு”
“உன் கடை கணக்கு வழக்கெல்லாம் நீயே எழுதறேன்னு தானே சொன்னே”
“ஆமா! அதுக்கென்ன இப்போ?”
“அதை நீ செய்யாதே. ஒரு படிச்ச பையனை கடைகள் கணக்கு வழக்கு எழுத வேலைக்கு வை.”. குமார் சொன்னான்.
“வெச்சா?””
“சொல்றதை செய். அப்புறம், கடைகளுக்கு தேவையான கூட்ஸ், ஸ்டேஷனரி எல்லாம் நீதானே வண்டியிலே சப்பளை பன்றேன்னு சொன்னே. உடனே, உன் டெலிவரி வண்டிக்கு ஒரு டிரைவர் போடு. டெலிவரி, சப்ளை எல்லாம் அவன் கிட்டே ஒப்படைச்சுடு.”
“என்ன குமார், வரவை அதிகப் படுத்த வழி கேட்ட, செலவை அதிகம் பண்ணறே?”- சந்தேகத்தோடு முத்து
“முத்து, ஒரு மூணு மாசத்துக்கு நான் சொல்றபடி கேளு. அப்புறம் பாக்கலாம்”
“சரி, நீ சொல்லிட்டே, அப்படியே பண்றேன்” அரை மனதோடு சம்மதித்தான். எவ்வளவோ பாத்துட்டோம், இதையும் தான் முயற்சி பண்ணிடுவோமே.
கணக்கு எழுத ஒரு படித்த பையனை அமர்த்தினான். ஐந்து கடைகளுக்கும் சாமான் டெலிவரி கொடுக்க ஒரு டிரைவரை வேலைக்கு சேர்த்தான்.
****
இன்னும் நான்கு மாதம் கழித்து
முத்துவும் குமாரும் மீண்டும் சந்தித்து கொண்டனர்.
“குமார்! என்ன மாயம் பண்ணினே! உன் பேச்சை கேட்டேன். இப்போ என் வியாபாரம் நாலு மடங்காயிடுத்து. எல்லா கடைகளும் அமக்களமா நடக்குது. இரண்டு கடைகளை பெருசாக்க முடிவு பண்ணியிருக்கேன். ”
“சூப்பர் முத்து. பார்த்துக் கொண்டே இரு, ஒரு நாள், நீ சூப்பர் மார்க்கெட் கூட வெப்பே. எங்கே ட்ரீட் ?”
“கட்டாயம். எங்கே வேணா போகலாம். அது சரி, பிரச்சினை என்கிட்டே தான் இருக்குன்னு எப்படி கண்டு பிடிச்சே?” – முத்துவுக்கு தெரிந்து கொள்ள ஆவல்.
““முத்து, ரொம்ப சிம்பிள். நான் பார்த்ததிலே, உன் திறமை, உழைப்பெல்லாம், விழலுக்கிறைத்த நீரா, வீணாகிட்டிருந்தது போல எனக்கு தோணித்து. கிட்டதட்ட, நீயும் ஒரு டிரைவர், குமாஸ்தா மாதிரி தான் வேலை பண்ணியே தவிர, முதலாளி மாதிரி நடக்கல. மேற்பார்வை பண்ணலே.”
“ஆமா! நீ சொல்றது சரி. இப்போது எனக்கு நேரம் இருக்கிறதாலே, ஒவ்வொரு கடையிலும், அதிக நேரம் செலவிடறேன். சிப்பந்திகள் கூட பேசிப் பழகறேன். அவங்க பிரச்சனைகள் கேக்க எனக்கு இப்போ நேரம் இருக்கு. இப்போ, அவங்களுக்கு வேலைலே ஒரு பிடிப்பு வந்திருக்கு. நான் அடிக்கடி வந்து பார்க்கரதினாலே முனைப்பா வேலை பார்க்கிறாங்க. நான் கண் காணிக்கிறேன்னு தெரிஞ்சு ஒழுங்கா நடந்துகிறாங்க. வியாபாரம் நல்லா போகுது.”
“கரெக்ட். இதுதான் மேனேஜ்மென்ட் பை வாக்கிங் அரவுண்ட்(“Management by Walking Around”). சுற்றி வரும் மேலாண்மை” .
“அட ! இதுக்கு பேரெல்லாம் வேறே வெச்சிருக்காங்களா என்ன?” – முத்து அதிசயித்தான்.
” பின்னே! அதாவது, உன் கீழே வேலை செய்யறவங்களை நீ ஊக்குவிக்கணும். பார்த்துக்கணும். மேற்பார்வை பண்ணனும். உதாராணமா இருக்கணும். அதுதான் முன்னேற்றம். முதலாளியா, அதான் உன் வேலை. ”
“உண்மையில், என் முன்னேற்றத்துக்கு நீ தான் காரணம் குமார். மில்லியன் தேங்க்ஸ் உனக்கு”
“எதுக்கும், உன் கணக்கு வழக்கு, டிரைவர் பேரிலே ஒரு கண்ணும் வெச்சுக்கோ. அதை விட்டுடப் போறே! ”
“கட்டாயம், எனக்கு உதவியா, ஒரு மேற்பார்வையாளர் கூட வெச்சிக்கிறேன். போறுமா? ” சிரித்தான்.
———————————————–
திருக்குறள் – பொருட்பால் – அரசியல் – தெரிந்துசெயல்வகை
செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.
ஒருவன் செய்யத்தக்க அல்லாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.