(1995ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-13
அத்தியாயம்-11
நீலா எதிர்பார்த்தபடி சேது ‘சென்னை செய்தி’ அலுவலகத்துக்கு வந்தபோது மணி ஒன்றாகிவிட்டது. அவனுக்காக செங்கோடன், நீலா, மூர்த்தி மூவருமே பொறுமையில்லாமல் காத்திருந்தார்கள்.
“வாங்க சேது. இவர்தான் பத்திரிகை ஆசிரியர் செங்கோடன். மூர்த்தியை உங்களுக்கு ஏற்கெனவே தெரியும்” என்று அறிமுகப்படுத்தினாள் நீலா.
“வணக்கம் சார்… நீலா உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறாள்” என்று சேது நாற்காலியில் உட்கார்ந்தான்.
“நீலா ரொம்ப கெட்டிக்காரத்தனமா இந்த விஞ்ஞான ஆராய்ச்சி பற்றி நிறைய விவரம் குறைந்த நேரத்திலே கண்டுபிடிச்சிருக்கா. ‘சென்னை செய்தி’யிலே இவையெல் லாம் வெளிவரும்போது நம்முடைய பத்திரிகையின் மதிப்பு பன்மடங்கு உயரும்” என்று நீலாவை நேரடியாகப் பாராட்டினார் செங்கோடன்.
“மூர்த்திக்கும் இதில் நிறைய பங்குண்டு. நீங்கள் அனுப்பிய ராஜா இல்லைன்னா நான் இன்னக்கி..” என்று சொல்லி முடிக்காமல் நாக்கைக் கடித்துக் கொண்டாள்.
“ராஜாவா… அது யார்? உனக்கு என்ன ஆயிருக்கும்? என்ன ஆச்சு?” என்று கேட்டு பார்வையால் துளைத்தான் சேது.
செங்கோடன் நீலாவைப் பார்த்துவிட்டு, “சேது, நடந்தது இதுதான்” என்று சுருக்கமாகச் சொன்னார்.
“என்னை பூச்சிக்கொல்லி விற்கும் கம்பெனியில் நீலாவை ‘சென்னை செய்தி’யில் இனி இந்த அபாயகர வேலைக்குப் போகாதே என்று நீலா சொல்றதுக்கும், மான வேலையை நிறுத்து என்று நான் சொல்லப் போறதுக்கும் என்ன வித்தியாசம்?” என்று கோபப் பட்டான் சேது.
“நீங்க ஏன் அந்தக் கம்பெனி வேலையை விடணும்?” என்றான் மூர்த்தி.
சேது நீலாவைப் பார்த்தான். நீலா தலை குனிந்தாள். அது அவர்களின் சொந்த விஷயம். அதைப்பற்றி இந்த நேரத்திலே பேசுவது தேவையா என்று ஒரு கணம் சேது நினைத்தான். மறுகணம், நீலாவின் ‘ரிப்போர்ட்’டிற்கு அது தொடர்பானது என்பதை உணர்ந்து பேசினான். நீலாவுக்கும் தனக்கும் குழந்தை இல்லாததற்கான காரணம் ‘மேலதயான்’ என்கிற பூச்சிக்கொல்லியாக இருக்கலாம் என்பதை விளக்கினான்.
முடிவில், “அதனால்தான் இதோ இந்தப் பட்டியலை எடுத்து வந்திருக்கிறேன்” என்று செங்கோடனிடம் நீட்டினான்.
அது கிராமத்தின் பெயர்களைக் கொண்ட பட்டியல். சென்னையைச் சுற்றி குடிநீர் கொண்டு போகப்படும் கிராமங்கள். சேது கம்பெனி விற்ற ‘மேலதயான்’ மூட்டைகளில் தொண்ணூறு சதவீதம் அந்த கிராமங்களுக்குப் போயிருக்கின்றன. இது சில ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்த விவரம்.
“இதில் இருக்கும் இருபத்தெட்டு கிராமங்களில் எந்த கிராமத்தைன்னு நாம தேர்ந்தெடுத்து விவரம் கண்டுபிடிக் கிறது?” என்று மூர்த்திதான் கேள்வியை எழுப்பினான்.
அவனுடைய கேள்வி நியாயமானதாகவே எல்லோ ருக்கும் பட்டது. ஒவ்வொரு கிராமமாகப் போனாலும் நேரம் வீணாகும். அவர்களுக்குத் தேவையான கிராமம் அல்லது கிராமங்களைக் கண்டுகொள்ள எத்தனை நாட்கள் அல்லது மாதங்கள் ஆகுமோ? ரங்கதுரை உண்மையிலேயே பிரபுவுடன் கூடி இந்தக் கொடிய பரிசோதனையைச் செய்து வருகிறார் என்றால் வீணாகும் ஒவ்வொரு நாளும் விஞ்ஞானத்தை அழிக்கும் நாள் அல்லவா?
“நாம ஒவ்வொருவரும் ஒரு கிராமம்னு போனா ஆளுக்கு ஒரு கிராமம் ஆகுமே. இன்னும் கொஞ்சம் சீக்கிரமே விவரம் தெரியுமே” என்றான் சேது.
“அதற்குள் அமைச்சர் ரங்கதுரை சும்மா கையை கட்டிகிட்டு இருப்பார்னு நினைக்கிறீங்களா சேது?” என்று கேலியாகக் கேட்டாள் நீலா.
செங்கோடன் சிரித்தார். “ஏற்கெனவே நீலாவுக்கு ரங்கதுரையைப் பற்றித் தெரிஞ்சிருக்கு” என்றார் குறும்புடன்.
“அப்படின்னா, நாம என்னதான் செய்யப் போறோம்? முதல்லே எந்த கிராமத்துக்குப் போகணும்?” என்றான் மூர்த்தி.
அந்த நேரத்தில் செங்கோடனின் தொலைபேசி அலறியது.
“யார் டாக்டர் பிரபுவா? சரி…” என்று பேசும் பகுதியைக் கையால் பொத்திக்கொண்டு, “டாக்டர் பிரபு என்னுடன் பேசணுமாம். கொஞ்சம் இருங்க” என்று மற்ற மூவருக்கும் சொல்லிவிட்டு பிரபுவிடம் பேச ஆரம்பித்தார்.
“ஆமாம். நான்தான் எடிட்டர். சொல்லுங்க… ம்… ம்… சரி… நான் இருக்கேன்… ம்… ம்… பார்க்கலாம்” என்று போனை வைத்தார்.
“உண்மை இன்னும் சாகவில்லை, நண்பர்களே, டாக்டர் பிரபு இங்கே வரப் போகிறார். நேரடியாக என்னிடம் பேசணுமாம். ‘மேலதயான்’ பற்றி அவருக்குப் பேசணுமாம்… என்று சொன்ன செங்கோடனின் முகம் மலர்ந்தது.
“பிரபு இங்கே வர்றதுன்னா, ரங்கதுரைக்கும் பிரபுவுக்கும் ஏதோ தகராறுன்னு அர்த்தமா? இல்லை பிரபுவுக்குத் தெரியாமல் ரங்கதுரை ஆராய்ச்சியின் திசையைத் திருப்பினார்னு எடுத்துக்கிறதா?” என்று மூர்த்தி கேள்விகளை அடுக்கினான்.
அவனுடைய கேள்விகளுக்கு அரை மணி நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த பிரபு பதில்களைத் தந்தார்.
“வாங்க, டாக்டர் பிரபு… நீலாவையும் மூர்த்தியையும் நீங்கள் பார்த்துப் பேசியிருக்கீங்க. இவர் மிஸ்டர் சேது. நீலாவின் கணவர்” என்று செங்கோடன் ஆரம்பித்தார்.
“முக்கியமா என்கிட்ட நீங்க சொல்றதை இவங்களை வைச்சுகிட்டே பேசலாமா?” என்று தன் சந்தேகத்தை செங்கோடன் கேட்டார்.
“நீங்க எல்லோரும் இங்கே இருக்கிறது ஒருவிதத்திலே நல்லதாய் போச்சு” என்றார் பிரபு. அவருடைய குரலில் வழக்கமான கம்பீரம் இல்லை. கண்கள் சிவந்து, முகச் சவரம் கூட இல்லாமல், ஆராய்ச்சியாளர் டாக்டர் பிரபு தானா என்று நீலா வியக்கும்படி அவர் தோற்றம் இருந்தது.
“நான் சொல்லப்போறதை கவனமாய்க் கேளுங்கள்” என்று பீடிகை போட்டு டாக்டர் பேசினார்.
ரங்கதுரையும் பிரபுவும் அரசியலுக்கும் அறிவியல் ஆராய்ச்சிக்கும் நல்லபடியே முடிச்சு போட முடியும்னு ஆரம்பித்த ஒரு பிராஜக்ட்தான் ‘மேலதயான்’ ஆராய்ச்சி. விஞ்ஞானத்தால் விவசாயம் ஏற்கெனவே நிறைய பயன்களை அடைந்திருக்கிறது. எலித் தொல்லையை ஒழித்தால் லட்சக்கணக்கான பணம் விரயமாகாமல் இருக்கும் என்று ரங்கதுரை சில கிராமங்களைத் தேர்ந் தெடுத்தார்… அந்த அளவு டாக்டர் பிரபுவும் நல்ல நோக்கத்துடன் உதவி செய்தார். கிராமங்களுக்குத் தேவையான ‘மேலதயான்’ வெளியிலிருந்து கடைகளில் வாங்கப்பட்டது. அங்கங்கே ரங்கதுரையின் ஆட்கள் சாமர்த்தியமாய் இதை ஏற்பாடு செய்தார்கள். ஆரம்பத்தில் பிரபுவிடம் எந்தெந்த கிராமங்கள் என்று ரங்கதுரை சொன்னார். ஆனால் பிரபுவிடம் சொல்லப் படாத எத்தனை கிராமங்களோ? பிரபுவும் இரண்டு கிராமங்களுக்கு அடிக்கடிப் போய் அங்கே எலி ஒழிப்புக் கான பரிசோதனைகளை நடத்தி, புள்ளிவிவரங்களை ரங்கதுரைக்குச் சொன்னார். திரும்பத் திரும்ப இதையே செய்ய விரும்பாமல் பிரபு தன் கவனத்தை வேறு ஆராய்ச்சிகளில் செலுத்தினார். ரங்கதுரையும் இதையே எதிர்பார்த்தது போல பிரபுவை எதுவும் கேட்பதை நிறுத்திக்கொண்டார். ஆனால்… ரங்கதுரை தானாகவே கிராமத்து ஆண்களை பரிசோதனைக்குள்ளாக்கியது பிரபுவுக்குத் தெரியாமலே போனது. யார் சொல்லு வார்கள்? பாலுவும் சாலமனும் ரங்கதுரைக்கு இப்போது உதவுகிறார்கள் என்று நீலா சொன்னபோதுதான் பிரபுவுக்கு ஞானோதயம் ஏற்பட்டது. அதற்குள் எத்தனை கிராமத்தில் மக்கள் பரிசோதனைக் குள்ளானார்களோ?
பிரபு சொல்லி முடித்த அடுத்த சில நிமிடங்கள் அறையில் யாரும் பேச முடியவேயில்லை. மூர்த்தியும் செங்கோடனும், ‘நீலா சரியாகவே இதையெல்லாம் ஊகித்திருக்கிறாள்’ என்று நினைத்துக் கொண்டனர்.
“டாக்டர் பிரபு, நீங்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட இரண்டு கிராமங்களின் பெயர்களைச் சொல்ல முடியுமா?” என்றார் செங்கோடன்.
“சொல்வது மட்டுமில்லை… உங்களுடன் நானும் வர வேண்டியிருக்கும்… என் ‘மேலதயான்’ ஆராய்ச்சி மக்களை எந்த அளவு பாதிச்சிருக்குன்னு நான் பார்க்கணும்… எப்போது போகலாம்?” என்றார்.
செங்கோடன் கடிகாரத்தைப் பார்த்தார். மணி மூன்றைத் தாண்டியிருந்தது. மூர்த்தி, சேது, நீலா மூவரும் புறப்பட ஆவலாக இருந்தது தெரிந்தது.
“இப்போதே போகலாம். இன்னக்கி அந்த ஒரு கிராமத்துக்குப் போய் தெரிஞ்சுக்குவோம்… தேவை யானால் மற்றதுக்கு பிறகு போவோம்” என்று செங்கோடன் உதவி ஆசிரியரை வரும்படி இன்டர்காமில் அழைத்தார்.
பிரபுவின் காரிலேயே எல்லோரும் போனார்கள். வழியில் ‘மேலதயான்’ பற்றிய மற்ற விவரங்களை பிரபு சொல்லிக்கொண்டே வந்தார்.
“அமெரிக்காவில் இந்த பூச்சிக்கொல்லியை கலிபோர்னியா மாகாணத்தில் அடிக்கடி அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். 1955ஆம் ஆண்டிலிருந்து ‘மெடிட்டரேனியன் ஃப்ளை’ என்னும் காய்கறி, பழ வகைகளைச் சாப்பிட்டு வீணடிக்கும் பூச்சித் தொல்லை அங்கு அதிகம். வட அமெரிக்காவின் பல மாகாணங்கள் கலிபோர்னியாவில் விளையும் காய்கறி, பழ வகைகளை நம்பிதான் இருக்கின்றன. இந்தப் பூச்சித் தொல்லையால் ஆண்டுக்கு நூறு கோடி டாலருக்கு மேல் சேதம் ஆகிறதாம்” என்றார் டாக்டர் பிரபு.
“அதற்காக ‘மேலதயான்’ மருந்தை ஹெலிகாப்டரி லிருந்து தூவுகிறார்கள் என்று நான் படித்திருக்கிறேன்” என்றாள் நீலா.
“அங்கு – கலிபோர்னியாவில் இருநூற்றைம்பதுக்கும் மேலான காய்கறி வகைகளும், பழவகைகளும் விளைகின்றனவாமே” என்று சேதுவும் தனக்குத் தெரிந்த விவரத்தைச் சொன்னான்.
“எனக்கு இதெல்லாம் தெரியாது… ஆனால் ‘மேலதயான்’ பூச்சிக்கொல்லி மருந்து மட்டுமில்லை. அதை ஒரு லோஷனில் அரை சதவித அளவில் சேர்த்து, தலை பேன்களைப் போக்கப் பயன்படுத்துகிறார்களாமே?” என்றான் மூர்த்தி.
“கலிபோர்னியான்னு பேசறபோது எனக்கு ஒண்ணு நினைவு வருது” என்று செங்கோடனும் கலந்துகொண்டார். “அங்கே 1981ல் பி.டி. காலின்ஸ் என்கிற அதிகாரி ஒருவர் என்ன செய்தார் தெரியுமா?”
“சார் நீங்க எப்பவும் புதிர் போடாம பேசமாட்டீங்களா?” என்றான் மூர்த்தி. எல்லோரும் சிரித்தார்கள்.
“‘மேலதயான்’ கரைச்ச ஒரு கப் தண்ணியைக் குடித்தார்; கூடியிருந்த மக்களுக்கு ‘மேலதயான்’ அபாயகரமான ஒரு பூச்சிக்கொல்லி மருந்து இல்லைன்னு அவங் களுக்குக் காட்டுவதற்காக இந்த ‘ஸ்டண்ட்.”
“இந்த பூச்சிக்கொல்லி, புற்றுநோய் போன்ற வியாதியை ஏற்படுத்தாது என்பது மக்களுக்குத் தெரிவிக்கணும்னு அப்படி செய்திருக்கலாம்… ஆனால் ‘ரிபொரடக்டிவ் டாக்சிசிட்டி’ நிச்சயம் உண்டு.”
“இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும்” என்று மூர்த்தி சொன்னான்.
அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் பிரபு சொன்ன கிராமத்துக்கு வந்து சேர்ந்தனர், வெளிச்சம் கொஞ்சம் இருந்தது. தெருவில் ஒன்றிரண்டு சைக்கிள்கள்; மாடுகள்; கொஞ்சம் மக்கள் நடமாட்டம். தூரத்தில் சினிமா கொட்டகையிலிருந்து அப்போது மக்கள் விரும்பிய பாட்டு ஒலித்தது.
முதலில் பிரபுவின் கண்ணில் பட்டது ‘குழந்தை வைத்தியம் பார்க்குமிடம்’ என்ற பெயர்ப் பலகைதான். பிரபுவுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. மற்றவர்களுக்கு அதைச் சுட்டிக் காட்டினார்.
“அப்படின்னா இந்த கிராமத்துலே குழந்தைகளுக்குக் குறைவில்லை போல இருக்கு” என்றான் மூர்த்தி.
“இங்கே ‘மேலதயான்’ சரியா வேலை செய்யலை போல இருக்கு” என்றான் சேது.
“ரங்கதுரை இந்த கிராமத்துலே தன் கைவரிசையைக் காட்டியிருக்கமாட்டார்னு நான் நினைக்கிறேன்” செங்கோடன் சிந்தனையுடன் சொன்னார்.
“எதையும் நாம எப்படித் தீர்மானமாகச் சொல்ல முடியும்? எந்தவித அத்தாட்சியும் இல்லையே… நாம யார்கிட்டேயாவது பேச வேண்டாமா? இந்த கிராமத்திலே உரம், பூச்சிக்கொல்லி மருந்து யாராவது வாங்கறாங் களான்னு தெரிஞ்சிகிட்டா நல்லது” நீலா தன் கருத்தைச் சொன்னாள்.
“நான் ரங்கதுரையுடன் பிராஜக்டை ஆரம்பித்தபோது இது நாங்க தேர்ந்தெடுத்த ஒரு கிராமம். இங்கே அடிக்கடி விவசாயிகளிடமிருந்து புகார் வந்தது; அவர்கள் தானியங்கள் எலிகளால் சேதமடைகின்றன என்று அமைச்சருக்கு மனு போட்டார்கள்.”
“அப்படின்னா இந்த கிராமத்துலே ‘மேலதயான்’ பூச்சி கொல்லி பற்றி தெரிஞ்சவங்க நிச்சயம் இருப்பாங்கன்னு நீங்க சொல்றீங்க” என்றாள் நீலா.
“ஆமாம்… நாம கிராமத்துக்குள்ளே போய்ப் பார்க்கலாம்” பிரபு காரை மெல்ல ஓட்டினார்.
அப்போது எதிர்ப்புறமாக நிறைய சிறுவர்கள் ஓடி வந்தார்கள். அந்த சிறுவர் கூட்டத்தில் இரண்டு மூன்று வயது சிறிய குழந்தைகளும் தட்டுத் தடுமாறி ஓடிக்கொண்டிருந்தன. சில குழந்தைகள் கையில் குச்சியை எடுத்துக்கொண்டு ஓடின. சில அம்மணமாக ஓடின. சில மேல் சட்டையில்லாமல் ஓடின. அந்தக் காட்சியைப் பார்த்ததும் நீலாவின் மனம் நிறைந்தது. நிச்சயமாக ஒன்று தெரிந்தது. பிரபு ஆரம்பித்த ஆராய்ச்சியை ரங்கதுரை இங்கே பயன்படுத்தியிருந்தாலும் அது வெற்றியடைய வில்லை. முதலில் ‘குழந்தை வைத்தியம் பார்க்குமிடம்’, இப்போது கூட்டமான கிராமத்துக் குழந்தைகள்! இந்த கிராமத்தில் மனித இனத்தை ஆராய்ச்சிக்கு இரையாக்க வில்லை. அதுமட்டிலும் திருப்தி. ஆனால் மற்ற கிராமங் களில் எப்படியோ? ரங்கதுரைக்கு கைகள் இரண்டுதான் என்றாலும் அவரால் நெடுந்தொலைவு தொட்டுவிட முடியும் – அரசியலும் பதவியும் இதற்கு உதவி என்பதை நீலா நினைத்தபோது அவள் மனம் வேதனைப்பட்டது.
குழந்தைகளைப் பார்த்த பிரபுவும் ‘மேலதயான்’ ஆராய்ச்சியைப் பற்றிய சிந்தனையில் சிறிது ஈடுபட்டார். ‘மேலதயான்’ மருந்தை ரங்கதுரை எப்படி மக்களுக்கு உணவில் கலக்க முடியும்? கலிபோர்னியாவில் பி.டி. காலின்ஸ் குடித்தது போல்… ஐயோ… குடிதண்ணீரில் ‘மேலதயான்’ மருந்தைக் கலக்கலாமே… இங்கு அப்பாவி மக்கள் குடிநீருக்காக அலையும் அவலம்தான் உலகறிந்த செய்தியாயிற்றே. அப்படி ரங்கதுரை செய்திருந்தால் நிச்சயம் இத்தனை ஆண்டுகளில் இத்தனை குழந்தைகள் இந்தக் கிராமத்தில் பிறந்திருக்கவே முடியாதே. ஒன்று ரங்கதுரை இந்தக் கிராமத்தில் எதுவும் செய்யவில்லை. இல்லையென்றால், ‘மேலதயான்’ தண்ணீரில் தன் சக்தியை இழந்துவிட்டது இந்த எண்ணத்தை பிரபு ஏற்க முடியவில்லை.
அங்கே கடைகள் இருந்த பகுதியில் கார் வந்ததும், சேது கீழே இறங்கினான். உரம், பூச்சிக்கொல்லி இவை பற்றி கடைக்காரர்களிடம் அவனுக்குப் பேசி நிறைய பழக்கம் இருந்தது. அந்த அனுபவம் இப்போது பயன் பட்டது. அருகிலிருந்த ஒரு கடைக்காரரிடம் விசாரித்தான். சில நிமிடங்களில் காருக்குத் திரும்பினான்.
“இங்கு மாதம் ஆறு மூட்டைகளாவது ‘மேலதயான்’ வருகிறதாம். விற்றுப் போகிறதாம். வாங்குவது எப்போதும் ஒரே ஆள் இல்லையாம்.” என்று விவரம் சொன்னான்.
பிரபுவின் இரண்டாவது யோசனை வலுப்பெற்றது. அடுத்து செய்ய வேண்டியது அந்தக் கிராமத்துக்கு வரும் குடிநீர் வசதி பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். குடிநீரை ஆராய்ச்சி அறைக்கு எடுத்துப் போய் அதில் ‘மேலதயான்’ எவ்வளவு இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அது எந்த அளவு தண்ணீரினால் பாதிக்கப் படுகிறது என்பதையும் பரிசோதிக்க வேண்டும். தன் திட்டத்தை மற்றவர்களுக்குச் சொன்னார்.
கிராமத்தின் ஓரத்தில் தண்ணீர் லாரிகள் வந்து நின்று குடிநீரை நிரப்ப வசதியாக பெரிய தண்ணீர் தொட்டிகள் மூன்று இருந்தன.
அவர்கள் கார் அங்கே வந்தபோது இருட்ட ஆரம் பித்துவிட்டது. தண்ணீர் லாரிகள் இரண்டு தொட்டிகளை நிரப்பிவிட்டு புறப்படத் தயாராக இருந்தன. லாரி டிரைவர்கள் பீர் குடித்துக்கொண்டு நின்றிருந்தனர். பெரிய குழாய்களை ஆட்கள் லாரியின் பக்கத்தில் வளைத்துக் கட்ட ஆரம்பித்தனர்.
பின்பு காரிலிருந்து இறங்கும்போது அவர் கையில் மூன்று பாட்டில்கள் இருந்தன. நிரப்பப்பட்ட தொட்டியி லிருந்து தண்ணீர் பிடித்தார். நிரப்பப்படாத தொட்டியிலிருந்தும் பிடித்தார். தண்ணீர் லாரிக்கு அருகே போய் அதிலிருந்து ஒழுகிக் கொண்டிருக்கும் தண்ணீரையும் ஒரு பாட்டிலில் பிடித்தார். அப்போது லாரி டிரைவர் ஒருவன் வேகமாக ஓடிவந்து, “ஏன் சார் தண்ணி பிடிக்கிறே?” என்றான்.
“நான் அரசாங்க அதிகாரி… அதை பரிசோதனை செய்யணும்” என்று அதிகாரத் தொனியில் பேசினார். டிரைவர் மேலே பேசவில்லை. பிரபுவின் கார் லைசென்ஸ் நெம்பரை மட்டும் எழுதிக்கொண்டு லாரியில் ஏறினான். பிரபு லாரி டிரைவரிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்த மூர்த்தி லாரி இரண்டின் நம்பர்களையும் குறித்துக்கொண்டான். நீலாவிடம் கொடுத்து எதையோ சொன்னான்.
அத்தியாயம்-12
“உங்களைப் பார்த்து நேரிலே பேசணும்னு ஒரு தண்ணீர் லாரி டிரைவர் ரொம்ப நேரமாய் காத்துகிட்டு இருக்கார்” என்றான் அமைச்சர் ரங்கதுரையின் ஆள்.
“என்னவாம்?” அமைச்சர் ரங்கதுரையின் குரலில் எரிச்சல்.
“ஒரு முக்கிய விஷயமாம். இன்னக்கி சாயங்காலம் கிராமத்துலே தண்ணீர் போட போனபோது ஏதோ நடந்ததாம்” என்றான்.
“சரி வரச்சொல்.”
லாரி டிரைவர் உள்ளே வந்து கையைக் கட்டிக் கொண்டு நின்றான்.
“என்னப்பா? என்ன நடந்தது?”
“சாயங்காலம் தண்ணியை ரொப்பிட்டு புறப்படற சமயங்க… யாரோ ஆபீசர் மாதிரி ஒரு ஆள் தண்ணியை மூணு பாட்டில்லே எடுத்துகிட்டு போனார். ஏன் எடுக்கறீங்கன்னு கேட்டா, அரசாங்க அதிகாரி, பரிசோதனை செய்யணும்னு சொன்னாருங்க.”
“அவர் பேர் சொன்னாரா?”
“இல்லைங்க.”
“இது என்னைய்யா முக்கிய சமாசாரம்? பேர்கூட தெரிஞ்சுக்காம வந்திருக்கே நீ” என்று அவனைத் திட்டித் தீர்த்தார்.
“ஆனா… அவருடைய கார் நம்பர் இதுதாங்க” என்று நீட்டினான்.
“சபாஷ்… உனக்கு நல்ல மூளைதான்…” என்று உடனே பாராட்டினார். லாரி டிரைவர் முகம் மலர்ந்தது. வலது கையால் தலையைச் சொரிந்துகொண்டு நின்றான்.
ரங்கதுரை தன் பையிலிருந்து நூறு ரூபாய் நோட்டை அவனுக்குத் தந்தார். “ரொம்ப நல்லதுப்பா… நீ போய் வா… இனிமே இதுபோல ஏதாச்சும் நடந்தாலும் உடனே வந்து சொல்லு” என்று அவனை அனுப்பி வைத்தார்.
அந்தக் கார் யாருடையது என்பதை அடுத்த கால் மணியில் ரங்கதுரை கண்டுபிடித்துவிட்டார்.
பிரபு!
‘இந்த பிரபுவை இனிமேலும் சும்மா விட்டால் நமக்கு ஆபத்து’ என்று மனதுக்குள் கறுவிக்கொண்டார்.
அருகிலிருந்த தொலைபேசியை எடுத்து நாலைந்து பேரை வரிசையாகக் கூப்பிட்டுப் பேசினார்.
“அந்த நீலாவை விட்டுட்டீங்க… இப்பப் பிரபுவையும் விட்டா நான் பொல்லாதவனாயிடுவேன்” என்று கர்ஜித்தார்.
மற்றவர்களை “சென்னை செய்தி’ ஆபீசில் இறக்கி விட்டு, பிரபு நேராக தன் ஆராய்ச்சிக்கூடத்துக்குப் போனார். கட்டடத்தின் முன் பகுதியில் காவலாளி நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான். பிரபுவைப் பார்த்து அவன் சிறிது ஆச்சரியப்பட்டாலும், அவருக்கு மரியாதை செலுத்திவிட்டு, கதவைத் திறந்தான். உள்ளே நுழைந்த பிரபுவின் கையில் மூன்று பாட்டிலில் தண்ணீர் இருந்தது.
தண்ணீர் பழுப்பு நிறத்தில் இருந்தது. நிறத்தைக் குறித்துக்கொண்டு, பிரபு வேலையில் மும்முரமாக இறங்கினார். முதலில் ஒன்றை எடுத்து மேலே மூடியும் கீழே குழாயும் உள்ள கண்ணாடி சாதனத்தில் மாற்றினார். அதில் ‘பெட்ரோல்’ போல் வாடையுள்ள நிறமற்ற திரவத்தைக் கொட்டிக் கலக்கினார். தண்ணீர் அதனுடன் சேரவில்லை; கீழே தங்கியது. பழுப்பு நிற தண்ணீரைப் பிரித்தார். இதுபோல் இன்னும் இரண்டுமுறை செய்து, மொத்தமாகச் சேர்த்த இரண்டாம் திரவத்தை கன அளவில் குறைத்தார். பழுப்பு நிற தண்ணீரையும் சேகரித்துத் தனியாக வைத்தார்.
கன அளவு குறைக்கப்பட்ட திரவம் சுமார் இரண்டு மில்லி லிட்டர் வந்தபோது அதை சூடு குறைத்து அறையின் மறுபகுதிக்கு எடுத்துச் சென்றார். அங்கிருந்த ஒரு விஞ்ஞானக் கருவியான ‘கேஸ் க்ரொமடாகிராப்’ என்பதில் மைக்ரோ லிட்டர் அளவில் திரவத்தைச் செலுத்தினார். அடுத்த சில நிமிடங்களில் பக்கத்தில் இருந்த ‘ரிக்கார்டர்’ காகிதத்தை உமிழ்ந்தது. அதில் சிறு சிறு முக்கோண வடிவில் கோடுகள் விழுந்திருந்தன. அந்தக் காகிதத்தை எடுத்து வைத்தார். பிறகு ‘மேலதயான்’ மருந்து ஏற்கெனவே கலக்கப்பட்ட, ஆராய்ச்சி அறையிலிருந்த திரவத்தை அதுபோலவே அந்தக் கருவிக்குள் செலுத்தினார். மறுபடியும் வந்த தாளில் முக்கோண வடிவங்கள் இருந்தன.
இரண்டு தாள்களையும் முன்னுக்குப் பின் வைத்து விளக்கொளியில் பார்த்தார். ‘மேலதயான்’ இருந்த தாளில் முக்கோணங்கள் அந்த மருந்தைக் காட்டியது. தண்ணீர் தொட்டியிலிருந்த தண்ணீரிலும் ‘மேலதயான்’ இருந்தது. அளவு கொஞ்சம்தான் குறைந்திருந்தது. வேறு ஏதோ சில பொருள்களும் இருந்தன.
பிரபுவுக்கு ஆச்சர்யம் மிகுந்தது. கிராமத்திலிருந்து எடுத்து வந்த மற்ற இரண்டு தண்ணீர் ‘சாம்பிள்’களையும் அதுபோலவே பரிசோதித்து முடித்தார். அவைகளிலும் ‘மேலதயான்’ இருந்தது. அளவு குறைந்தாலும் நிச்சயம் இருந்தது. எவ்வளவு ‘மேலதயான்’ தண்ணீரில் போட் டார்களோ? குடிதண்ணீரில் ‘மேலதயான்’ கலக்கப்பட்டும், ஏன் அந்தக் கிராமத்தில் திணிக்கப்பட்ட குடும்பக்கட்டுப் பாடு முயற்சி தோல்வியடைந்தது. யாருமே தண்ணீர் குடிப்பதில்லையா? ஒருவேளை எல்லாருமே தண்ணீரைக் காய்ச்சிக் குடிக்கிறார்களோ? சூடு செய்யப்பட்ட தண்ணீரில் ‘மேலதயான்’ அளவு வெகுவாகக் குறையுமே!
எல்லா குறிப்புகளையும், ‘ரிக்கார்டி’லிருந்து பிரித்துத் தாள்களையும் எடுத்துக்கொண்டு பிரபு புறப்பட்டபோது இரவு மணி இரண்டு. காவலாளி இரும்புக் கதவைத் திறந்தான். ‘கிறீச்’ என்ற சத்தத்துடன் கதவு திறந்து கொண்டது.
“ஏம்பா அந்த இரும்புக் கதவுக்குக் கொஞ்சம் எண்ணெய் போடக்கூடாதா?” என்றார் பிரபு.
இரும்புக் கதவு! இரும்பு! இரும்பு… பழுப்பு நிற தண்ணீர்!
“தட்ஸ் இட்… தட்ஸ் இட்… எல்லாமே புரிஞ்சுட்டது” என்று மகிழ்ச்சிக் கூவலுடன் தன் காரில் ஏறினார்.
ஒருவேளை செங்கோடன் இன்னும் ஆபீசில் இருந்தால்? ஒரு போன் செய்து பார்க்கலாம் என்று வழியில் நிறுத்தினார். 24 மணி நேர போன் வசதியுடைய இடம் திறந்திருந்தது.
“செங்கோடன் பேசறேன்” என்ற குரல் பிரபுவின் காதில் தேனாக ஒலித்தது.
“மிஸ்டர் செங்கோடன். நான்தான் பிரபு பேசறேன்… உடனே உங்களைப் பார்க்கணுமே” என்றார்.
“நீலா, சேது, மூர்த்தி எல்லோருமே இன்னும் இங்கேதான் இருக்காங்க…உடனே வாங்க…” என்று செங்கோடன் சொல்லவே, பிரபுவின் துள்ளல் அதிகமாகியது.
அமைதியான அந்த இரவு நேரத்தில் பிரபுவின் கார் ‘சென்னை செய்தி’ ஆபீசை நோக்கி விரைந்தது.
“என்னங்க டாக்டர் பிரபு, நீங்ககூட எங்க நியூஸ் பேப்பரில் ரிப்போர்ட்டர் வேலை தேடறீங்களா?” என்று மூர்த்தி கிண்டலுடன் பிரபுவை வரவேற்றான்.
“உங்க எடிட்டர் ஆரம்பிச்சு வைச்ச ‘இன்வெஸ்டி கேஷன்’தானே என்னை இதுலே இழுத்துச்சி. அதை நான் முடித்துக் கொடுக்க வேண்டாமா?” பிரபு உற்சாகமாகவே சொன்னார்.
“என்ன பரிசோதனை செய்தீங்க… மூணு மணி நேரத்தில் முடிச்சிட்டீங்களே?” என்று வியப்புடன் கேட்டாள் நீலா.
“நான் கொஞ்சம் யோசனை செய்திருந்தால் அந்த மூணு மணி நேரம் வீணாயிருக்காது. போகட்டும்… நாம கிராமத்திலேருந்து எடுத்து வந்த தண்ணீரிலே ‘மேலதயான்’ நிச்சயம் இருக்கு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்த ஒவ்வொருவர் முகத்தையும் பார்த்தார். எல்லோருக்கும் குழப்பம் ஏற்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து பிரபு சிரிக்க ஆரம்பித்தார்.
“நானும் இப்படித்தான் குழம்பினேன். தண்ணீரிலே ‘மேலதயான்’ இருந்தாலும் ஏன் எதிர்பார்த்தபடி வேலை செய்யவில்லை என்பது எனக்கு முதலில் புரியவில்லை. தண்ணீர் ‘சாம்பிள்’கள் பழுப்பு நிறமாக இருந்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா?”
“அப்படியென்றால் அதில் இரும்புச் சத்து இருக்கிறது என்றல்லவா பொருள்” என்றாள் நீலா.
“நிச்சயமாக, அந்த இரும்புச் சத்துத்தான் மக்களைக் காப்பாத்தியிருக்கிறது. தண்ணீர் லாரிகளில் இரும்புடன் தண்ணீர் நெடுநேரம் இருப்பதாலும், பொதுவாக தண்ணீரில் இரும்புச் சத்து இருப்பதாலும், ‘மேலதயான்’ தன் வீரியத்தை இழக்கிறது. இது நான் கண்டுபிடித்த ஆராய்ச்சி உண்மையில்லை. ஏற்கெனவே தெரிந்த உண்மை. அது எனக்கு நினைவுக்கு வந்தபோது நம் பிரச்சினையும் தீர்ந்துவிட்டது.”
“அதாவது கிராமத்தில் குடிநீரில் ‘மேலதயான்’ இருந்தாலும் இரும்புச் சத்தினால் அது எந்த வகையிலும் உயிரணுக்களை அழிக்கவில்லை என்கிறீர்கள்?” என்று நீலா முடிச்சுப் போட்டாள்.
“என்னுடைய நிச்சயமான எண்ணம் அது. அடுத்த ஆராய்ச்சியின் முக்கிய கட்டமாக இதை நான் உறுதிப் படுத்துவேன்” என்றார் டாக்டர் பிரபு.
“எலிகளைத்தானே உபயோகிப்பீர்கள்?” என்று மூர்த்தி கேலி செய்தான்.
“நீங்கள் கேலிக்காகச் சொன்னாலும் என்ன கேக்கறீங்கன்னு புரியுது. ரங்கதுரை போன்ற சிலரால் விஞ்ஞானிகளின் முயற்சி தடைபடுகிறது. விஞ்ஞானத்தால் ஏற்படக்கூடிய நல்ல பலன்களை மக்கள் புறக்கணிக்க சந்தர்ப்பம் உண்டாகிறது. இது வருந்தத்தக்கது” என்றார் பிரபு.
“ஹலோ.. நான் டாக்டர் பிரபுவின் மனைவி சாந்தி பேசறேன்… அவர் அங்கே இருக்காரா?” என்றாள். செங்கோடன்தான் போனில் பேசினார். “இருக்கார்… இதோ பேசச் சொல்றேன்.”
“என்ன சாந்தி?” என்று கேட்ட பிரபுவுக்கு ஓர் அதிர்ச்சிச் செய்திதான் கிடைத்தது.
“மாலதியைக் காணவில்லையாம். ஆஸ்பத்திரி யிலிருந்து தகவல் வந்திருக்கு” என்றாள் சாந்தி.
“உடனே புறப்பட்டு வருகிறேன்” என்று அவசரமாக அங்கிருந்து வெளியேறியவரை செங்கோடனின் குரல் தடுத்தது.
“டாக்டர் பிரபு… நீங்க அடுத்த இருபத்திநாலு மணி அளவு மிகவும் கவனமாய் இருக்கணும். அந்த ரங்கதுரை உங்களை சும்மா விடமாட்டான். நிச்சயம் ஏதாவது பிரச்சினையை எழுப்புவான்” என்று எச்சரித்தார்.
“ஏன்?”
“தண்ணீர் லாரிகள் யாருடையதுன்னு நான் விசாரிச்சேன்… லாரி ஓட்டின டிரைவர் உங்க கார் நம்பரை எழுதினதையும் கவனிச்சேன்… ரங்கதுரைக்கு விவரம் போயிருக்கும்” செங்கோடன் முடித்தார்.
அறைவாசலிலேயே நின்றிருந்த பிரபு சில நிமிடங்கள் யோசனையில் ஆழ்ந்தார்.
“என்ன செய்யச் சொல்றீங்க?” பிரபு குழப்பத்துடன் கேட்டார். அங்கே மாலதியைக் காணோமாம். கோபுவை என்னிடமே விட்டுவிட்ட அவள் மறைந்துவிட்டாளாமே… என்னை ரங்கதுரை வேறு துரத்தினால் நான் என்ன செய்ய முடியும்? பிரபு இதையெல்லாம் விளக்கிப் பேச்சை நீட்ட விரும்பவில்லை. செங்கோடனின் பதிலுக்குக் காத்திருந்தார்.
“உங்களை கவனமாக இருக்கச் சொல்வது என் கடமை. நாளை காலையில் ‘சென்னை செய்தி’யில் வரும் பரபரப்பான செய்தி ரங்கதுரையை என்ன வேணுமா னாலும் செய்யத் தூண்டும்” என்றார் செங்கோடன்.
“அதிலே ரங்கதுரை மீது எப்படி நாம் குற்றத்தைப் போட முடியும்?” என்றாள் நீலா.
“இதுவரை அத்தாட்சி இல்லை. பிரபுவை வைத்துத் தான் நாம் அதை சேகரிக்கணும்” என்றார் செங்கோடன்.
“என்ன சொல்றீங்க நீங்க? எனக்கு அவசரமாக போகணும்” என்றார் பிரபு.
“டாக்டர் பிரபு, நீங்க காரிலே வீட்டுக்குத் திரும்புங் பின்னாலேயே நான் சில ஆட்களை அனுப்பறேன். பாதுகாப்பு இருக்கும்… இந்த இக்கட்டான நிலையிலே போலீசை நாம நாடினா ரங்கதுரையைப் பிடிக்க முடியாது” என்றார் செங்கோடன்.
பிரபு ஆபீசை விட்டு வெளியேறி கார் கதவைத் திறந்தார். கார் புறப்பட்டது. செங்கோடன் எதிர்பார்த்தது போலவே பிரபுவின் கார் பின் தொடரப்பட்டது. பிரபு வீட்டை அடைந்தபோது அங்கு ஏற்கெனவே வந்திருந்த செங்கோடனின் ஆட்கள் பிரபுவைத் துரத்திய ஆட்களைக் கட்டுப்படுத்தித் தங்களுடன் அழைத்துச் சென்றனர். அவர்கள் மூலம் ரங்கதுரையைத் தீண்டலாம் என்ற செங்கோடனின் திட்டம் நிறைவேறவில்லை. ரங்கதுரையே பிரச்சினையைத் தீர்த்துவிடுவார் என்று யாரும். அப்போது எதிர்பார்க்கவில்லை.
மறுநாள் ‘சென்னை செய்தி’ காலைப் பதிப்பைப் படிக்காதவர்களே இல்லை! சென்னையை மட்டுமில் லாமல் இந்தியாவையே குலுக்கிவிட்ட செய்திகள் வெளி வந்திருந்தன.
முதல் பக்கமே பரபரப்பூட்டியது. அதில் ரங்கதுரையின் படம், டாக்டர் பிரபுவின் படம். நிருபர் நீலா எழுதிய செய்தி. கொட்டை எழுத்துக்களில் தலைப்பு.
‘மக்கள் தொகையைக் குறைக்க பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்த பயங்கரத் திட்டம்… கொடூர முறையில் குடும்பக் கட்டுப்பாடு செய்ய விவசாய அமைச்சர் ஆராய்ச்சியாளரை நாடி…’ என்று தொடங்கி நீலா எழுதியிருந்தாள். பாலுவும் சாலமனும் ரங்கதுரைக்கு மறைமுகமாக உதவி செய்தார்கள் என்பதையும் நிரூபித்தாள் நீலா.
அன்று பத்திரிகை நிருபர்கள் அமைச்சர் ரங்கதுரையின் வீட்டில் சூழ்ந்தனர். இன்னும் சில நிமிடங்களில் ரங்கதுரை அவர்களுக்குப் பேட்டி கொடுக்க இருந்தார்.
நீலாவும் மூர்த்தியும் முன்வரிசையில் காத்திருந்தனர். ரங்கதுரை தன்னைப் பார்க்கும்போது என்ன நினைக்கக் கூடும் என்பதைப் பற்றி நீலா சிறிது யோசித்தாள்.
“கங்கிராட்ஸ், நீலா… நீங்க இந்த ரிப்போர்டிங் ரொம்ப நல்லா செஞ்சிருக்கீங்க” என்று நிருபர்கள் பாராட்ட ஆரம்பித்தனர்.
நீலாவுக்கு தன் போன்ற நிருபர்களின் பாராட்டுக்கள் மனத்துக்கு நிறைவு தந்தன.
“மிக்க நன்றி… எல்லாம் ‘சென்னை செய்தி’ ஆசிரியர் செங்கோடனின் முயற்சியில் தொடங்கியதுதான்” என்று பாராட்டிற்குரியவரை மறக்காமல் பேசினாள்.
ரங்கதுரை வெளியே வந்தார்.
‘பளிச் பளிச்’சென காமிராக்கள் இயக்கப்பட்டன. மூர்த்தியும் ரங்கதுரையை பலவித கோணங்களிலிருந்து படம் எடுத்துக் கொண்டிருந்தான். ‘இன்றைய படம் நாளைய செய்தி’ என்ற தத்துவத்தில் ஊறியவன் மூர்த்தி.
கையை உயர்த்தி அங்கிருந்தவங்களை அமைதியாக இருக்கும்படிச் சொன்னார் ரங்கதுரை. பேச ஆரம்பித்தார்:
“நீங்கள் எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள் என்பதை நான் நிச்சயம் அறிவேன். நான் கொடுத்த அறிக்கையை ஏற்காமல் ‘சென்னை செய்தி’ பத்திரிகை தானாகவே ஒரு செய்தியையும் சில கட்டுரைகளையும் வெளியிட்டிருக்கின்றன. அதற்கெல்லாம் காரணம் நிருபர் நீலாதான் என்பது உங்களுக்குத் தெரியும்” ரங்கதுரையின் குரலில் கோபமா இல்லை வருத்தமா என்பது மற்றவர்களுக்குப் புரியாதவாறு அவர் பேசினார்.
“நிருபர் நீலா எழுதியதில் உண்மை இருக்குன்னு பத்திரிகை உலகமே நம்புது. இல்லேன்னா ‘சென்னை செய்தி’ அதை வெளியிடாதே” என்றார் ஒரு நிருபர்.
நீலா அந்த நிருபரைப் பார்த்துச் சிரித்தாள். பத்திரிகை விற்பதற்காகவே செய்தி போடாமல், உண்மையையே பத்திரிகை தர்மமாகக் கொண்டு இயங்கி வரும் பத்திரிகைகளுக்கு அன்று ஒரு வெற்றிநாள்!
“எனக்கும் அது தெரியும். அதனாலேதான் நான் அந்த பேட்டிக்கே ஒப்புக்கொண்டேன்” என்றார் ரங்கதுரை.
“நாங்கள் கேள்விகளைக் கேட்கலாமா?” பின்னாலிருந்த நிருபர் கத்தினார்.
“நான் சொல்ல வேண்டியதை சொன்னபின் கேள்விகள் இருக்காது” என்று பீடிகை போட்டார் ரங்கதுரை.
அங்கு அமைதி ஏற்பட்டது. எல்லா கண்களும் ரங்கதுரையின் மேல் பாய்ந்தன. காமிராக்கள் மீண்டும் மீண்டும் வேகமாகத் தட்டப்பட்டன.
“நான் பிரபுவிடம் ஆராய்ச்சிகள் பற்றிப் பேசியிருக் கிறேன். அவர் ‘மேலதயான்’ பற்றிப் பேசியபோது ஒரு திட்டம் போட்டேன். அந்த மருந்தை எலி ஒழிப்புத் திட்டத்துக்கும் மட்டுமில்லாமல், குடும்பக் கட்டுப்பாட்டுக் கும் பயன்படுத்தலாம் என்பது எனக்குத் தோன்றியது. பிரபுவுக்குத் தெரியாமலே இந்த குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை நான் பரிசோதனை செய்ய ஆரம்பித்தேன்.”
அங்கிருந்த நிருபர்கள் நீலாவை மரியாதையுடன் பார்த்தனர். அவள் ரங்கதுரையைப் பார்த்தாள்.
“நிருபர் நீலா எழுதியது சரிதான். திட்டம் நிறைவேறி னால் எனக்குப் புகழ் வரும். அதனால் பயங்கர விளைவு கள் ஏற்படுமாயின் பிரபுவின் மேல் பழிவரும் என்று நான் நினைத்தது உண்மைதான்… இதன் நடுவில் பாலு, சாலமன் இருவருமே என் வலையில் சுலபமாக விழுந் தார்கள். எனக்குத் தேவையான சில விவரங்களைத் தந்ததைத் தவிர அவர்கள் வேறெந்த தவறையும் செய்ய வில்லை என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.”
பாலு, சாலமன் இருவரைப்பற்றி ரங்கதுரை மேலும் விளக்கினார். அவர்கள் அங்கிருந்தால் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்கள். பத்திரிகையில் ரங்கதுரை யைப் பற்றி செய்திகள் வர ஆரம்பித்தவுடனேயே அவர்கள் மாயமாய் மறைந்துவிட்டனர். முதலில் பாலு மட்டும் விடாப்பிடியாகப் புறப்பட்டான். சாலமன் எவ்வளவு சொல்லியும் பாலுவைத் தடுக்க முடியவில்லை. பாலு எங்காவது போய், ஏதாவது உளறினால் தன் தலையும் உருளுமே என்று சாலமனும் புறப்பட வேண்டியதாயிற்று.
“நீங்கள் செய்ததற்குக் காரணம் புரியவில்லையே” என்று நீலா துணிச்சலுடன் கேட்டாள்.
“காரணம் நம்மைச் சுற்றிலும் இருக்கிறதே மேடம்… இந்தியா முழுதும் கோடிக்கணக்கில் காரணங்கள் இருக்கின்றனவே… மக்கள் தொகையைத்தான் சொல் கிறேன்! குக்கிராமங்களிலிருந்து மாநகரங்கள் வரை மக்கள்… மக்க.ள்… மக்கள்… அரசும் குடும்பக் கட்டுப் பாட்டுத் திட்டத்தைப் பற்றி எடுத்துச் சொல்வது? நம் நாட்டில் அது நடக்கிற காரியமாய் இல்லையே” ரங்கதுரையின் குரலில் ஏமாற்றம் தலைதூக்கியது.
“தினமும் ஆயிரமாயிரம் பெண்கள் கருவைக் கலைத்துக் கொள்கிறார்கள். இதற்குக் காரணங்கள் பல… நான் சொல்லியா உங்களுக்குத் தெரியணும். குடும்பக் கட்டுப்பாட்டைத் திணிப்பதைவிட, சுலபமான முறையில், இனியாவது மக்கள் தொகை பெருகாமலிருக்க ‘மேலதயான்’ பயன்படட்டுமே என்றுதான் திட்டம் போட்டேன்.”
“மக்களின் ஒப்புதலில்லாமலேயே அவர்களைப் பரிசோதனைக் குள்ளாக்கினீர்கள். அது சட்டத்துக்கு விரோதமான செயல் என்பது ஒருபுறம் இருக்கட்டும்,. மனித இனத்துக்கே இழுக்கான செயல் இல்லையா?” ஒரு நிருபர் துடிப்புடன் கேட்டார்.
“நாடு மக்களால் ஆவது; மக்களின் நல்வாழ்க்கைக்கு மக்கள்தான் உழைக்க வேண்டும். நாட்டை நடத்துவதும் வீழ்த்துவதும் மக்கள்தானே… தெரிந்தோ தெரியாம மக்கள் நாட்டின் வளத்துக்கு உதவட்டுமே என்று நான் அதைச் செய்தேன்… யாருடைய கருவையும் கலைக்கவில்லையே; பிறந்த குழந்தைகளைக் கொ வில்லையே… இந்தியாவின் ஆயிரக்கணக்கான கிர களில் ‘மேலதயானை’ கவனமாய் பயன்படுத்தி மக்கள் தொகை வளர்வது தடைபடும்; நாட்டின் வள பகிர்ந்துகொள்ளலாம் – இதுதான் என் லடசிய வெறியாகியது” ரங்கதுரை ஆவேசமாகப் பேசினார்
“அதாவது விஞ்ஞானத்தை அரசியலுக்குப் ப படுத்த முற்பட்டீர்கள்… உங்கள் புகழ் உச்சியை ந போகப் போக, மக்களின் அடிப்படை உரிமை பள்ளத்தில் வீழப் பார்த்தது” நிருபர்கள் விடவில் உரிமையின் குரல்கள் ஒலித்தன.
“அரசியலுக்கு இல்லை நண்பரே, நாட்டின் நலத்து நாளைக்கே ‘மேலதயான்’ போன்றதை ஆண்களு குடும்பக் கட்டுப்பாடு மருந்தாக ஒரு விஞ்ஞ கண்டுபிடித்தால் நாம் ஏற்போமா மாட்டோமா?” எ பளிச்சென்று கேட்டார் ரங்கதுரை.
யாரும் பதில் சொல்லவில்லை. மேல்நாடுக ஆண்களுக்கென்று ‘பில்’ தயாரிக்கும் ஆராய்ச்சி ஆ கணக்கில் நடந்து வருவது நிருபர்கள் அறிந்ததே.
‘”நான் தமிழகத்தில் இப்போது செய்தது பரிசோத தான். முறைப்படி நான் செய்யவில்லை என்பதா செய்யக்கூடிய ‘விஞ்ஞானி’ என்ற தகுதி எனக்கி என்பதாலும், அரசியல்வாதி என்பதால் என்மீது கு சாட்டுகிறீர்கள். எல்லா அரசியல்வாதிகளுமே தங்கள் முன்னேற்றத்திலேயே கவனமுடையவர்கள் என்று மக்களிடையே பரவியிருக்கும் கருத்தை என்னால் ஏற்க முடியாது… ஆனால் என் ஒருத்தனால் எதிர்க்கவும் முடியாது… ஆதலால்…”
அமைச்சர் ரங்கதுரை அடுத்து என்ன சொல்லப் போகிறார்?
“நான் அமைச்சர் பதவியிலிருந்து இப்போதே விலகிக் கொள்கிறேன். என்றாவது ஒருநாள் நம் நாட்டில் குடும்பக் கட்டுப்பாடுத் திட்டம் வெற்றியடையும் என்று நம்பிக்கை எனக்கு உண்டு. அதுதான் இந்திய நாடு முன்னேற்றப் பாதையில் நடக்கும் முதல் நாளாகும்” என்று முடித்து விட்டு ரங்கதுரை வீட்டுக்குள் போனபோது அனைவரும் அவரை வியப்புடன் பார்த்துக்கொண்டே நின்றனர்.
அத்தியாயம்-13
சில நாட்களுக்குப் பிறகு…
டாக்டர் பிரபுவின் வீட்டு வாசலில் செங்கோடனின் கார் வந்து நின்றது. அவர் கையில் ‘சென்னை செய்தி’ தினசரிப் பிரதிகள் மூன்று இருந்தன.
செங்கோடன் உள்ளே நுழைய அவர் பின்னால் நீலா, சேது, மூர்த்தி மூவரும் நுழைந்தனர்.
“வாங்க மிஸ்டர் செங்கோடன்… நீங்க என் கண வருக்கு செய்த உதவியை ரொம்ப பாராட்டணும்… மிக்க நன்றி” என்று சாந்தி வரவேற்றாள்.
குரல்கள் கேட்டு கீழே வந்த பிரபு விரைந்து வந்து செங்கோடனின் கையைப் பற்றிக்கொண்டார்.
“ரொம்ப ரொம்ப நன்றி எடிட்டர் சார்… இதுவரை பத்திரிகைகள் செய்தியைப் பரப்ப மட்டும்னு நான் நினைச்சிருந்தேன். உங்கள் பத்திரிகை போன்றவை மக்களுக்கு எப்படியெல்லாம் பயன்படுகின்றன என்பதை சொந்த அனுபவத்திலே தெரிஞ்சுகிட்டேன்.” உள்ளத்தைத் திறந்து பிரபு பாராட்டினார்.
அவர்கள் பேசிக்கொண்டேயிருந்த போது கோபு அங்கே ஓடிவந்தான். அவன் பின்னாலேயே மற்ற இரண்டு சிறுவர்களும் ஓடிவந்தனர். அறையில் பிரபு சாந்தி இவர்கள் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் குழந்தைகள் வேறு திசையில் ஓட ஆரம்பித்தனர். கோபு வாசலை நோக்கி ஓடினான். அவன் எதிரே வந்துகொண் டிருந்த ஒரு பெண்மீது முட்டிக்கொண்டான்.
“அடடே! பரவாயில்லை கோபு, பார்த்து ஓட வேண்டாமா?” என்றாள் அந்த அம்மாள்.
சட்டென்று கோபு நின்றான். அந்த அம்மாளைப் பார்த்து, “என் அம்மா எப்போ ஆஸ்பத்திரியிலிருந்து வருவாங்க?” என்றான்.
“அதைப்பற்றிப் பேசத்தானே நான் இப்போ வந்திருக் கேன்” என்றாள் அவள். அவள் அறையில் இருப் போரைப் பார்த்தாள். பிரபு அவளைப் பார்த்தார். சாந்தி பிரபுவைப் பார்த்தாள்.
“வாங்க…” என்று வந்தவளை பிரபு அழைத்தார். “இவங்களெல்லாம் ‘சென்னை செய்தி’ பத்திரிகை யிலே இருப்பவங்க” என்று சேதுவையும் சேர்த்துப் பொதுவாகச் சொன்னார்.
“இன்னக்கி செய்தியைப் படித்தேன். நீங்க இவ்வளவு தூரம் முன்வந்து அரசியலில் சில நேரங்களில் நடக்கக் கூடாதவை நடக்கின்றன என்பதை மக்களுக்குச் சொன்ன விதம் அருமை” என்று பிரபுவைப் பாராட்டினாள்.
“இதெல்லாம் எடிட்டர் செங்கோடன் தூண்டுதலுடன் இவங்க செய்த ‘இன்வெஸ்டிகேடிவ் ரிப்போர்ட்டிங்தான்” என்று நீலா மூர்த்தி இருவரையும் காட்டினார் பிரபு.
“நிருபர் நீலா நீங்க நல்ல தைரியசாலிதான்” என்று வந்தவள் பாராட்டினாள்.
“பூச்சிகொல்லி ஏற்கெனவே ஒரு தம்பதியின் வாழ்க்கையில் விளையாடிவிட்டது. இனியும் அதன் கொடூரத்தைச் சொல்லாமலிருந்தால் என் ஜெர்னலிசம் என்கிற கடமையில் நான் தவறிவிடுவேன்” என்று நீலா சொன்னபோது அவள் குரல் கம்மியது.
சேது அவள் தோளைத் தொட்டு சமாதானம் செய்தான்.
“நீங்க என்ன சொல்றீங்க நீலா? நமக்கு இதுவரை தெரியாத விவரம் வேறு ஏதாவது இருக்கிறதா? ரங்கதுரை பூச்சிக்கொல்லியை வைத்து ஏதாவது ஆராய்ச்சி நடத்தினாரா?” என்று பிரபு கேட்டார்.
“அதெல்லாம் இல்லை.” என்றாள் நீலா சுருக்கமாக.
அறையில் அமைதி. மூர்த்தியும் செங்கோடனும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டனர்.
சேது பேசினான்.
“நான் இதுவரை ஒரு பெரிய ‘கோடவுனி’ல் வேலை செய்தேன். அங்கே மூட்டை மூட்டையாக உரங்களும், பூச்சிகொல்லி மருந்துகளும் லாரிகளில் வரும் போகும். அதில் ‘மேலதயான்’ மருந்தும் ஒன்று” என்று சொல்லி முடித்தான் சேது.
“அப்படியா சமாசாரம்? நீங்கள் சொல்வது புரிகிறது. நீலாவின் மனவருத்தமும் உங்கள் நிலையும் எனக்கு நன்றாகவே புரிகிறது” என்று அனுதாபப்பட்டார் பிரபு.
“இப்போது பேசலாமா?” என்றாள் வந்த பெண்.
“பேசலாம். இனிமேல் என் வாழ்க்ைைகயில் எந்த ஒளிவு மறைவும் இல்லை” என்றார் பிரபு. சாந்தி அவரைப் பார்த்துச் சிரித்தாள். அவள் சிரிப்பு அவளுடைய மனத்திருப்தியைக் காட்டியது.
“மாலதியைக் கண்டுபிடிக்க நாம முயற்சி மட்டும்தான் எடுக்க முடியும்… அவங்களே திரும்பி வந்தாத்தான் உண்டு” என்று ஒரு கடிதத்தை அவள் கொடுத்தாள். அவள் ஆஸ்பத்திரியில் ஒரு டாக்டர். மாலதியை மரணத்தின் வாயிலிலிருந்து காப்பாற்றி, அவளுக்கு உடல் நிலை தேறும்வரை அங்கு வைத்துக்கொள்ள ஏற்பாடு செய்தவள்.
மாலதியின் கடிதத்தைப் படித்த பிரபு, அதை, சாந்தியிடம் கொடுத்தார். அவளும் படித்துவிட்டு கண்களைத் துடைத்துக்கொண்டாள்.
‘இனி கோபு உங்கள் சொத்து சாந்தி. அவனைப் பெற்றது மட்டும்தான் நான். வருகிறேன் என்றுகூட சொல்லாமல் புறப்பட விரும்புகிறேன்- மாலதி.’ மாலதியின் வாழ்க்கையைப் போலவே அவளுடைய கடிதமும் சுருக்கமாக இருந்தது.
அதுவரை அங்கு நின்றுகொண்டிருந்த கோபு சட் டென்று சாந்தியிடமிருந்த கடிதத்தைப் பறித்துக்கொண்டான். படித்தான். கீழே எறிந்துவிட்டு அழத் தொடங்கினான்.
“இனிமே என் அம்மாவை நான் பார்க்கவே முடியாது… பார்க்கவே முடியாது.”
கோபுவின் அழுகை அங்கிருந்த அனைவரின் இதயத்தையும் சுண்டி இழுத்தது.
பிரபு எழுந்து போய் கோபுவை அணைத்துக் கொண்டார். கோபு அவரை அப்படியே கட்டிக்கொண்டான். “அப்பா… அப்பா…” என்று அவன் அழுகைக்கிடையே சொல்லிச் சொல்லி அவரை விட்டு நீங்காமல் நின்றான்.
சாந்தி விளக்கினாள். மூர்த்தியும் நீலாவும் ஒருவரை யொருவர் பார்த்துக்கொண்டனர். அன்று மாலதியையும் பிரபுவையும் சேர்த்து பார்த்தபோது புரியாத விவரம் இப்போது புரிந்தது.
சேது மெல்லச் சென்று கோபுவின் மீது கையை வைத்து “கோபு… கோபு… நீ ரொம்ப நல்ல பையனாச்சே.. எங்ககூட கொஞ்ச நாள் வந்து இருக்கியா?” என்றான்.
கோபு கண்களைத் துடைத்துக்கொண்டு சேதுவை ஏறிட்டுப் பார்த்தான். சேதுவின் அருகில் நீலாவும் வந்து நின்றாள். அவள் கண்கள் பனித்தன.
கோபு அம்மாவைத் தேடினான்; சேதுவும் நீலாவும் வாழ்க்கையில் தவறிப்போன வாய்ப்பளித்த தேடுகிறார்கள்.
கோபுவுக்கு நீலா தாயாக முடியுமா?
காலம் பதில் சொல்லட்டும். காத்திருப்போம்.
(முற்றும்)
– கல்கி வார இதழ் 14.5.1995 ல் தொடங்கி 30.7.1995 வரை பன்னிரண்டு இதழ்களில் தொடராக வந்தது.
– மாண்புமிகு கம்சன் (விஞ்ஞான நாவல்), முதற்பதிப்பு: 2014, வானதி பதிப்பகம், சென்னை.