(1995ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-13
அத்தியாயம்-9
நீலாவும் சேதுவும் ‘பிருந்தாவன் எக்ஸ்பிரஸில்’ திரும்பிக் கொண்டிருந்தனர். பெங்களூர் பயணம் அவர்கள் நினைத்தபடி சுமுகமாக இல்லை என்பது இருவரின் முகத்திலுமே நன்றாகத் தெரிந்தது.
நீலாவைப் பொறுத்தவரை அவள் உடலில் குறையில்லாமல் இருக்கிறாள் என்ற மருத்துவ முடிவு சேதுவுக்கு ஒருபுறம் திருப்தியளித்தாலும் மறுபுறம் எரிச்சல் மூட்டியது. அதற்குக் காரணம் அவனிடம் ஒரு குறை இருக்கிறது என்று டாக்டர் சொன்னதுதான்.
சேதுவுக்கு இருக்கும் குறை அவர்கள் இருவருமே எதிர்பார்க்காததுதான். நிச்சயம் எதிர்பார்த்திருக்க முடியாது? ஏற்கெனவே நீலா ஒருமுறை கருத்தரித்து இருந்தாளே! அதன்பிறகு சேதுவிடம் குறை ஏற்படக் காரணம் என்ன என்பதை நீலாவினால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
அவன் குறை அவளுக்குப் புதிராகத்தான் இருந்தது. அவனுக்கு உயிரணுக்கள் மிக மிகக் குறைந்துவிட்டன வாம். சாதாரணமாக இருக்கவேண்டிய எண்ணிக்கையை விட பல மடங்கு குறைந்துள்ளதாம். வேறு எந்த அறிகுறிகளும் காணப்படவில்லை – ஆனால் உயிரணுக் கள் ஏன் குறைந்தன என்பதற்குக் காரணத்தை டாக்டர் கள் மூவரால் குறிப்பாகச் சொல்லவும் முடியவில்லை.
ஏதேதோ மருந்துகளை வாங்கிச் சாப்பிடும்படி சொல்லிவிட்டு, இன்னும் ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் பரிசோதனைக்கு வரும்படிச் சொன்னார்கள். அவனிடம் வேறு அறிகுறிகள் ஏதேனும் தெரிந்தால் உடனே போன் செய்யுமாறு சொல்லி அனுப்பினார்கள். அதைத் தவிர டாக்டர்களால் இந்தமுறை வேறு எதுவும் செய்ய இயலவில்லை.
“சேது… காப்பி குடிக்கிறீங்களா?”
“உனக்கு வேணுமா?”
“சரி, இரண்டு பேருமே குடிக்கலாம்” என்று அங்கே காப்பி கொண்டு வந்தவரிடம் இரண்டு காபி வாங்கினாள்.
“நானும் அதைத்தான் யோசித்து வருகிறேன் சேது. இதுவரை எந்த காரணமும் எனக்குத் தோன்றவில் லையே” காப்பியைக் குடித்துவிட்டு பிளாஸ்டிக் கப்பை ஒரு பக்கமாக வைத்தாள். மீதி பயணம் மௌனமாகக் கழிந்தது.
சென்னை திரும்பிய சில நாட்களில் நீலா மீண்டும் ஒருமுறை பிரபுவின் ஆராய்ச்சி கூடத்துக்குப் போனாள். பிரபு இரண்டாவது வாரமாக வராதது அப்போதுதான்
தெரிந்தது.
“அவருடைய குடும்பத்தில் யாருக்கோ ரொம்ப சீரியஸ்னு சொன்னார்… வரவில்லை” பானு சுருக்கமாக விளக்கினாள்.
“டாக்டர் பிரபு செய்து வரும் ஆராய்ச்சி எல்லாம் அப்படியே நின்றிருக்குமே” என்று சிறிது வருத்தத்துடன் சொன்னாள் நீலா.
“அவருக்கும் வருத்தம்தான். இங்கே ஆபீசிலும் கொஞ்சம் குழப்பம் இருக்கு அவருக்கு” என்று மெல்ல இழுத்தாள் பானு.
“அப்படியா… நான் அவரை வீட்டில் போய் பார்க்க முடியும் என்று நினைக்கிறீர்களா மிஸ் பானு?” என்று நீலா கேட்டாள்.
“நான் என்ன சொல்வது நீலா. நீங்க போய் வேணா பாருங்க. அவர் எந்த மனநிலையில் இருக்கிறாரோ என்னவோ?” அக்கறையுடன் பேசினாள் பானு.
“ஆபீசில் என்ன குழப்பம்?” சற்றும் எதிர்பார்க்காத சமயத்தில் மெல்ல விசாரித்தாள் நீலா.
“இன்வெஸ்டிகேடிவ் ரிப்போர்ட்டிங்’ என்றால் சும்மா வா? வாய்ப்பு வரும்போது வரவேற்க வேண்டாமா?
“இங்கே ஒரு முக்கிய கம்ப்யூட்டர் டிஸ்க் காணாமல் போய்விட்டது. டாக்டர் பிரபு ஆபீசில்தான் இருக்கிறது என்கிறார். சல்லடை போட்டுத் தேடாத குறைதான். எனக்குக் கிடைக்கவில்லை. அவர் வீட்டிலேயேதான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.”
“ஐ ம் ஸாரி. நான் ஆராய்ச்சி அறை வரைக்கும் போய்ப் பார்க்கலாமா?” என்று பானுவின் ஒப்புதலுடன் புறப்பட்டாள்.
அங்கு பாலு சாலமனின் துணையில்லாமல் இருந்தான். சாலமன் வேலைக்கு வரவில்லையாம். நீலா பாலுவிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தாள். அவனும் காணாமற் போன கம்ப்யூட்டர் டிஸ்க் பற்றிச் சொன்னான்.
ஆராய்ச்சி பற்றிப் பேசினாள். பொதுவான விவரங் கள். நடுவில் ஒரு செய்தி நீலாவின் கவனத்தைக் கவர்ந் தது. ‘மேலதயான்’ உணவில் எடுத்துக்கொண்ட ஆண் எலிகள் ஐந்து; எடுத்துக்கொள்ளாத எலிகள் ஐந்து. எடுத்துக் கொண்டவையுடன் இருந்த பெண் எலிகளில் ஒன்றுகூட கருத்தரிக்கவேயில்லை. எடுத்துக் கொள்ளா தவையுடன் இருந்த ஐந்து பெண் எலிகளும் கருத்தரித் துள்ளன!
பிரபுவின் வீட்டிற்கு அன்று பகலில் நீலா வந்தபோது வீட்டில் அமைதி சூழ்ந்திருந்தது. வாசல் மணியை அழுத்தினாள். சாந்தி கதவைத் திறந்தாள்.
“நான் ரிப்போர்ட்டர் நீலா… டாக்டர் பிரபுவைப் பார்க்க முடியுமா?” என்று தயங்காமல் கேட்டாள்.
“கொஞ்சம் இருங்கள். கேட்டுச் சொல்கிறேன்” என்று சாந்தி உள்ளே போனாள்.
சில நிமிடங்களில் அவள் வந்து நீலாவை அழைத்துப் போனாள். உள்ளே பிரபு ஒரு சோபாவில் உட்கார்ந்து இருந்தார். அவருக்கு எதிரே இரண்டு பையன்கள், ஒரு பெண் உட்கார்ந்திருந்தனர்.
நீலாவுக்குப் புரியவில்லை. அந்த இரண்டாவது பையன் யார்?
“வாங்க நீலா… உங்களுக்குப் பேட்டி கொடுப்பதாகச் சொல்லி வாரக்கணக்கில் ஓடிவிட்டது. என்னால் ஆபீசுக்கு வர முடியவில்லை” என்று வருத்தத்துடன் பிரபு பேசினார்.
“உங்களுக்கு காப்பியா, டீயா?” என்று உபசரித்தாள் சாந்தி.
“டீ போடுவது சிரமமில்லையென்றால் ஒரு கப் குடிக்கத் தயார்” என்று மெல்லச் சிரித்துக்கொண்டே நீலா சொன்னாள்.
“கோபு, இவங்களை அழைச்சிகிட்டு போய் நீ விளையாடு” என்று பெரிய பையனிடம் பிரபு சொன்னதும் மூவரும் அங்கிருந்து ஓடினார்கள். கோபு யார் என்பது பற்றி நீலா கேட்கவில்லை.
“உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப் பட்டேன்” நீலா பீடிகை போட்டாள்.
“சரியில்லாமலிருந்தது உண்மைதான். ஆனால் இப்போது அந்த பிரச்சினை இல்லை. நீலா, உங்களுக்கு என்ன மாதிரியான விவரம் வேண்டும்?”
“நீங்கள் செய்யும் ஆராய்ச்சியைப் பற்றிப் பொது வாகவும், ‘மேலதயான்’ ஆராய்ச்சி பற்றி கொஞ்சமும் சொன்னால் கட்டுரையை வாசகர்களுக்கு ஏற்றவாறு எழுதிவிடுவேன்” என்று ஆரம்பித்தாள்.
“‘மேலதயான்’ பற்றி உங்களுக்கு எப்படித் தெரிந்தது?” பிரபுவின் குரலில் ஆச்சரியம்.
“என்ன, சார் உங்களிடம் இரண்டு ஆராய்ச்சி யாளர்கள் இருக்காங்களே- பாலு, சாலமன். அவங்க தான் சொன்னாங்க. மற்றபடி நானும் ‘மேலதயான்’ பற்றி கொஞ்சம் ஜர்னல்களில் படிச்சேன்” என்று உண்மையைச் சொன்னாள் நீலா.
“அவர்கள் என்ன சொன்னார்கள்?”
“ஏன்? சரியாகச் சொல்லியிருக்கிறார்களா என்று பார்க்கப் போறீங்களா?” நீலா துருவினாள்.
“இல்லை, இல்லை. அவர்கள் சொன்னதையே நானும் சொல்ல வேண்டாமே என்றுதான்” இழுத்தார் பிரபு.
அந்தக் கட்டத்தில் சாந்தி தட்டில் கப்புகளுடன் வந்தாள். பிரபு, நீலா இருவரும் ஆளுக்கொரு கப் எடுத்துக் கொண்டதும், “நான் குழந்தைகள் என்ன செய் கின்றன என்று பார்க்கிறேன்” என்று சாந்தி போய் விட்டாள்.
“டாக்டர் பிரபு… ‘மேலதயான்’ ஆண் எலிகளின் உயிரணுக்களை வெகுவாகப் பாதிக்கும் தன்மை வாய்ந்தது உண்மைதானே?” என்றாள் நீலா.
“சந்தேகமேயில்லை. இதை ‘ரிபொரடக்டிவ் டாக்சி சிட்டி” என்பார்கள். “மேலதயான்’ மருந்தை உணவில் கலந்து எலிகளுக்குக் கொடுப்பதனால் எலிகள் சீக்கிரம் இறப்பதில்லை; அதே மருந்தை நேரடியாக அவை களுக்குக் கொடுத்தால் நெடுநாட்கள் உயிர் வாழ்வதில்லை” பிரபு ஆர்வத்துடன் பேசினார்.
“இதெல்லாம் ஏற்கெனவே தெரிந்த உண்மைகள் தானே?”
“ஆமாம்…” பிரபு நீலாவை ஏறிட்டுப் பார்த்தார்.
“நீங்கள் வேறு என்ன எதிர்பார்த்து ‘மேலதயான்’ ஆராய்ச்சியைத் தொடர்ந்து வருகிறீர்கள்?”
“அதை இப்போது சொல்லும் நிலையில் நான் இல்லையே” என்றார் பிரபு.
மேலும் கொஞ்ச நேரம் ஆராய்ச்சிகளைப் பற்றிப் பேசிவிட்டு நீலா புறப்பட்டாள்.
“உங்கள் முக்கியமான கம்ப்யூட்டர் டிஸ்க் ஒன்று காணாமல் போய்விட்டதாக மிஸ் பானு சொன்னாங் களே… கிடைச்சிட்டுதா?” என்றாள் நீலா.
“இன்னும் கிடைக்கவில்லை. அதைப் பற்றி கூட நீங்க கட்டுரையில் எழுதப் போறீங்களா?” சிரித்தார் டாக்டர் பிரபு.
“இல்லை. ஆனால் அமைச்சர் ரங்கதுரைக்கும் நீங்க செய்துவரும் ஆராய்ச்சிக்கும் என்ன தொடர்புன்னு கேக்கலாமா?” நீலா நிறுத்தினாள்.
பிரபுவின் சிரிப்பு மறைந்தது. நீலாவை உற்றுப் பார்த்தார். அவர் பதில் பேசவில்லை.
“ரங்கதுரைக்கும் உங்கள்கூட இருக்கும் ஆராய்ச்சி யாளர்களான பாலு, சாலமன் இருவருக்கும் என்ன தொடர்புன்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டாள்.
சட்டென்று பிரபு எழுந்து நின்றார். அவர் முகம் சிவந்தது. சூடேறின. நீலாவை நோக்கி இரண்டு அடிகள் நடந்தார்.
“இங்கே பாருங்க நீலா. நீங்க இந்த விவரங்களில் ஏன் தலையிடறீங்க. ஆராய்ச்சியை மட்டும் செய்தியா போட்டால் போதும். இதிலே அரசியலைச் சேர்க்க வேண்டாம்.”
“அரசியலைச் சேர்த்தது நானில்லை டாக்டர் பிரபு! நீங்களும் உங்கள் கூட்டாளிகளும்தான்…” என்றாள்.
அவள் சொன்னது பிரபுவின் மண்டையில் பேரிடி யாக விழுந்தது. ‘அந்த படுபாவிப் பயல்கள் பாலு, சாலமன் இரண்டு பேரும் ரங்கதுரைக்கு உளவாளி களோ?’ என்று அப்போதுதான் அவருக்குக் கேட்கத் தோன்றியது. நான் ஆராய்ச்சிக் கூடத்தில் இல்லாத நேரம் பார்த்து எப்படியோ ஆராய்ச்சிக் குறிப்புகளை எடுத்து ரங்கதுரைக்குத் தந்திருக்கிறார்கள். அந்த கம்ப்யூட்டர் டிஸ்க்… அதையும் அவர்கள்தான் அபேஸ் செய்திருப் பார்கள்… பிரபுவுக்கு எல்லாமே புரிய ஆரம்பித்தது.
“நீலா… ரொம்ப தேங்க்ஸ்… எனக்கு ஒரு விஷயத்தை நீங்கதான் புரிய வைச்சிருக்கீங்க. அவசரமா நான் ஓர் இடம் போகணும். பிறகு பேசலாமா” என்று அவர் புறப்பட்டார்.
வேறு வழி இல்லாமல் நீலாவும் அவருடன் வெளியே வந்தாள். அப்போது எதிரில் மூர்த்தி ஆட்டோவிலிருந்து இறங்கி வருவது தெரிந்தது.
பிரபு காரில் விர்ரென்று புறப்பட்டுப் போனதை பார்த்துக் கொண்டிருந்த மூர்த்தியை நீலாவின் குரல் அழைத்தது.
“மூர்த்தி…அந்த ஆட்டோவை அனுப்பிவிடாதே. நாம டாக்டர் பிரபுவைத் தொடர்ந்து போகணும். எனக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. அவர் எங்கே போகிறார் என்பதை மட்டும் தெரிந்துகொண்டால் போதும். வா போகலாம்” என்று நீலா ஆட்டோவை நோக்கி விரைந்தாள்.
பிரபுவின் கார் சென்னை வீதிகளில் விரைந்துதான் ஓடியது. அடையாறு பாலம் தாண்டி கடற்கரை சாலையில் விரைந்து சென்னை சட்டசபை வரை அது போனது. அங்குள்ள அலுவலகம் ஒன்றில் சில நிமிடங்கள் பிரபு எதையோ விசாரித்துவிட்டு மீண்டும் காரில் புறப்பட்டார். இம்முறை கார் நுங்கம்பாக்கம் வரை விரைந்தது. அமைச்சர் ரங்கதுரை வீட்டு வாசலில் வந்து நின்றது. வாசலில் காவலுக்கு இருந்தவர் டாக்டர் பிரபுவைப் பார்த்தவுடன் கும்பிடு போட்டான். ஏற்கெனவே பிரபுவைத் தெரிந்து வைத்திருந்தான் போலும்.
தூரத்தில் ஆட்டோவில் உட்கார்ந்திருந்த நீலா, “நான் நினைத்தது சரியாகப் போய்விட்டது, மூர்த்தி. நாம் திரும்பலாம்” என்று சொன்னாள்.
மூர்த்திக்கு எதுவும் புரியவில்லை. சில சமயம் நீலா தன்னை எங்கெங்கோ அலைக்கழிப்பதை மூர்த்தி ஒப்புக் கொள்வதில்லை; முரண்டு பிடிப்பான்.
“நீலா, இது என்ன விளையாட்டு. அடையாறு எங்கே, நுங்கம்பாக்கம் எங்கே? ஏன் இந்த ‘சேஸ்?’ இப்ப என்ன தெரிஞ்சுகிட்டே… அதையாவது சொல்லேன்” என்றான்.
“மூர்த்தி… நீ நல்ல போட்டோகிராபர். ஆனா ‘இன் வெஸ்டிகேடிவ் ரிப்போர்ட்டிங்’னா என்னன்னு நீ இன்னும் புரிஞ்சுக்கலே” என்றாள் நீலா.
“அது எனக்குப் புரிய வேணாம். உனக்குப் புரிஞ்சா போதும். நீ என்ன புரிஞ்சிகிட்டேன்னு எனக்கு சொன்னா நல்லது” என்றான் மூர்த்தி பதிலுக்கு.
“இப்ப எதுவும் சொல்லக் கூடாது மூர்த்தி. இத்தனை நாள் தெரிந்து கொண்டதைவிட இன்னக்கி பிரபுவோட பேசின அரை மணி நேரத்துக்குள்ளே நிறைய தெரிஞ்சு கிட்டேன். நாளைக்கு எல்லாத்தையும் செங்கோடன் சாருக்கு சொல்லப் போறேன். அப்ப நீயும் இருப்பயில்லே தெரிஞ்சுக்கலாம்…” என்றாள் பிடிவாதமாக.
அவளை வீட்டில் விட்டுவிட்டு மூர்த்தி மீண்டும் ஆபீசுக்குப் போனபோது செங்கோடன் புறப்பட்டுக் கொண்டிருந்தார். மூர்த்தி நீலாவின் புதிய சாகசங்களைச் சொன்னான்.
செங்கோடன் யாருக்கோ ஒரு போன் செய்துவிட்டு புறப்பட்டார். அவர் முகம் குறும்பான சிரிப்பை உதிர்த்தது.
வீட்டினுள் நுழைந்த நீலாவை வரவேற்க சேது காத்திருந்தான். அவன் முகம் பெருமிதத்தால் விம்மியது.
“என்னங்க ரொம்ப சந்தோஷமாய் இருக்கீங்க போல இருக்கே?” என்றாள் பர்ஸை ஒரு புறமாக வைத்துக்
கொண்டே.
“ஆமாம் நீலு. இன்னக்கி பெரிய விற்பனை. இருநூறு மூட்டையும் வித்துப் போச்சு. போனவாரம் வந்த மூட்டைகள் இவ்வளவு சீக்கிரம் விற்கும்னு நான் நினைக்கவேயில்லை.”
“அப்படி என்ன அது ரொம்ப ஸ்பெஷல் அயிட்டமா?”
” ‘மேலதயான்’ என்கிற பூச்சிக் கொல்லி மருந்துதான்.”
நீலா சிலையானாள். ‘தொப்’பென்று சோபாவில் சாய்ந்தாள்.
‘மேலதயான்’ பூச்சிக்கொல்லி!
“சேது…சேது… ஐயையோ… இந்த மருந்து பற்றி நீங்க முன்னாலே சொன்னபோதே நான் சரியா சிந்திக் கலையே”, நீலா அலறினாள். கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.
“ஐயோ நீலு, நீலு.. என்ன ஆச்சு? ஏன் நீலு இப்படி அழறே?”
“சேது… சேது என்னாலே இதை சகித்துக்கொள்ளவே முடியாது சேது. நம்ம வாழ்க்கை இப்படியா அழியணும் சேது…” விம்மலுக்கிடையே வார்த்தைகளை வீசினாள் நீலா.
நீலாவைக் கட்டி அணைத்துக் கொண்டான் சேது. அவளிடம் பிறகு விவரம் கேட்பதுதான் நல்லது என்று மெளனமாக அவளை சமாதானம் செய்வதில் இறங்கினான்.
நேரம் ஓடியது. அரைமணி… ஒரு மணி… இரவு ஒன்பது மணியும் அடித்தது. நீலா சுருண்டு படுத்திருந் தாள். சேது அவளருகில் உட்கார்ந்திருந்தான்.
அவள் மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டாள். சேதுவை ஒருமுறை பார்த்தாள்.
“சேது… நீங்க இனிமே உரம், பூச்சிக்கொல்லி விற்கிற கம்பெனியிலே வேலைக்குப் போக வேண்டாம். வேறு வேலை கிடைக்க எவ்வளவு காலமானாலும் சரி. அந்த வேலைக்கு முழுக்குப் போடுங்க” என்றாள் தீர்மானமாக.
நீலு… உன் கோபத்துக்கும் அழுகைக்கும் காரணத்தை இப்போவாவது சொல்றியா?” அவளுடைய கைகளைப் பிடித்துக்கொண்டே கேட்டான்.
“சொல்றேன் சேது… நம்ம வாழ்க்கையை ‘மேலதயான்’ என்கிற பூச்சிக்கொல்லி எப்படிப் பாழ்படுத்தியிருக்கிறது தெரியுமா சேது?”
சேதுவுக்குப் பதில் தெரியவில்லை.
“உங்கள் உயிரணுக்களை உயிரற்றவையாகச் செய்தது அந்த பூச்சிக்கொல்லி மருந்துதான் சேது.”
சேது அதிர்ந்து போனான்!
ஏற்கெனவே நீலா ‘மேலதயான்’ ஆராய்ச்சிக்கு ஆண் எலிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்றபோது, எப்போதும் செய்யும் ஆராய்ச்சி முறைதானே என்று அவன் கவனம் செலுத்தவில்லை.
கம்பெனியில் வந்து இறங்கும் மூட்டை மூட்டையான ‘மேலதயான்’ மருந்தின் நெடியை எத்தனை நாட்கள் அவன் நுகர்ந்திருக்கிறான்! அவ்வளவும் நேரடியாக உள்ளே போயிருக்கின்றனவே! அப்படியானால் அங்கு வேலை செய்யும் மற்ற ஆண்களுக்கும் இதே கதியா? அவர்களுக்காவது குழந்தைகள் உண்டா?
சேது துடித்துவிட்டான்!
“சேது… இப்போ புரியுதா உங்களுக்கு… நமக்கு இனிமே குழந்தை எப்படிப் பிறக்கும் சேது? உங்கள் உடல்நிலை எப்போது நார்மலா மாறும்? இதற்கெல்லாம் யார் பொறுப்பு? விஞ்ஞானிகளா? மக்களா? யார் பொறுப்பு சேது?”
சேதுவினால் பேசவே முடியவில்லை. இந்தப் பூச்சிக்கொல்லி மருந்து மனித இனத்தை வளர விடாமல் கொன்றுவிடுமா?
“சேது… இருநூறு மூட்டை ‘மேலதயான்’ மருந்தை யார் வாங்கினார்கள்?”
“யாரென்று எப்படிச் சொல்வது? சுற்றுப்புறக் கிராமங்களில் இருக்கும் சில கடைகள்தான் வாங்கின” என்றான்.
“எந்த கிராமங்கள், எந்த கடைகள் விவரம் கிடைக்குமா?” என்றாள் நீலா.
“ஏன்?” என்று கேட்ட சேதுவுக்குப் பதில் மறுநாள் செய்தித்தாளில் கிடைத்தது.
அத்தியாயம்-10
‘சென்னை செய்தி’யைத் தவிர மற்ற செய்தித் தாள்கள் பல அன்று காலை ஒரு பரபரப்பான செய்தியை வெளியிட்டிருந்தன:
“டாக்டர் பிரபு செய்த ஆராய்ச்சி மூலம் விவசாயிகளுக்கு வருமானம் கூடும்; பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்தி எலித் தொல்லையை ஒழிக்கும் முறையை பிரபு அரசுக்குக் காட்டினார். பல கிராமங்களில் மக்கள் திண்டாட்டம் குறைந்து கொண்டாட்டம் பெருகியது. அமைச்சர் ரங்கதுரைதான் இந்த ஆராய்ச்சியை பலமாக ஆதரித்து தமிழக விவசாயப் பெருங்குடிகளுக்கு பேருதவி செய்தார்…”
ரங்கதுரை எப்படி டாக்டர் பிரபுவுடன் சேர்ந்து, திட்டமிட்டு உழைத்தார் என்பதைப் பற்றியெல்லாம் விவரங்கள் எழுதப்பட்டிருந்தன. பாலுவைப் பற்றியோ, சாலமனைப் பற்றியோ ஒரு வரிகூட இல்லை. பூச்சிக் கொல்லி மருந்தை நெல், சோளம் மற்ற தானியங்களைக் கொட்டி வைத்துள்ள பெரிய பெரிய கோடவுன்களில் பயன்படுத்தி எலிப் பெருக்கம் குறைக்கப்பட்டதாம். அதனால் எலித் தொல்லை குறைந்து, தானிய சேதம் குறைக்கப்பட்டது. விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் பண நஷ்டம் குறைந்தது. இதுதான் செய்தியின் சுருக்கம்.
சேது இதை மீண்டும் மீண்டும் படித்தான். நீலா சொன்னதற்கும் சேது செய்தித்தாளில் படித்ததற்கும் அதிகத் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.
“நீலா, இந்தச் செய்தி ரொம்பப் பொதுவாக இருக்கிறதே” சேதுவுக்குப் புரியாமல் பேசினான்.
“இதில் கவனிக்கத் தக்கது ரங்கதுரை டாக்டர் பிரபுவை தன்னுடைய கவசமாகப் பயன்படுத்துகிறாரோ என்கிற செய்திதான்” நீலா குறிப்பாகச் சொன்னாள்.
“அப்படின்னா, எலிப்பெருக்கம் குறைப்பதெல்லாம் ‘பப்ளிக்’ நம்புவதற்காக என்கிறாய்… பூச்சிக்கொல்லியை பயன்படுத்துவது வேறொரு காரணத்துக்காக என்கிறாய்” சேதுவுக்கு இது ஏதோ பயங்கரத்தை உணர்த்தியது.
“சேது இன்னுமா உங்களுக்கு ரங்கதுரையின் திட்டம் தெரியவில்லை?” நீலாவின் கோபம் ஏறிக்கொண்டே வந்தது.
“சொல்லேன்.”
“பூச்சிக்கொல்லியான “மேலதயான்’ கிராமங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்குள்ள மக்களுக்கு எப்படியோ அந்த மருந்து கொடுக்கப்படுகிறது. ஆண் களின் உயிரணுக்கள் சிதைக்கப்படுகின்றன. மணமான பெண்கள் கருத்தரிக்கும் வாய்ப்பு வெகுவாகக் குறைக்கப் படுகிறது…நீலா நிறுத்திவிட்டு சேதுவைப் பார்த்தாள்.
சேது உட்கார்ந்துவிட்டான். அவனால் நம்பவே முடியவில்லை. நீலா தொடர்ந்தாள்.
“கிராமங்களில் மக்கள் தொகையைக் குறைப்பதற்கு இது விஞ்ஞானம் அளித்த புது வழியாக ரங்கதுரை எடுத்துக் கொள்கிறார். மத்திய அரசும், தமிழக அரசும் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து குடும்பக்கட்டுப் பாடு திட்டங்களைக் கிராமங்களுக்குக் கொண்டுவரப் பார்த்தும் இன்று இந்தியாவின் மக்கள் தொகை என்ன ஆயிற்று, சேது?”
“எண்ணூறு கோடியை எப்போதோ தாண்டி விட்டது.”
“இனியும் மக்கள்தொகை பெருகினால் நாடு என்ன ஆகும்? மக்கள் தொகையை எப்படிக் கட்டுப்படுத்துவது? ரங்கதுரையின் அரசியல் திட்டத்தில் பிரபுவுக்கும், பிரபு ஆராய்ச்சி செய்துவரும் ‘மேலதயான்’ பூச்சிக்கொல் லிக்கும் முக்கிய கட்டங்கள்… ரங்கதுரைக்கு இது மகத்தான அரசியல் வெற்றி.”
“ஆனால் விஞ்ஞானத்துக்குத் தோல்வி. அரசியலில் சிலருக்குப் பெயரும் புகழும் வருவதற்கு டாக்டர் பிரபு போன்றவர்களும் ஆராய்ச்சி மூலம் உதவுகிறார்கள் என்றால் அதைவிட விஞ்ஞானத்துக்கு பெருங்கேடு வேறில்லை” சேதுகூட உணர்ச்சி வசப்பட்டுப் பேசினான்.
“உண்மையிலேயே டாக்டர் பிரபு இதற்கு உதவி செய்திருப்பார் என்று என்னாலும் நம்ப முடியவில்லை” நீலா சந்தேகத்துடன் சொன்னாள்.
“நீ சொல்வதைப் பார்த்தால் ரங்கதுரை சில கிராமங்களில் மக்களை வைத்துப் பரிசோதனை செய்து வருகிறார் என்கிறாய். அந்த கிராமங்களுக்கு ‘மேலதயான்’ மூட்டைகள் போயிருக்கின்றன. எனக்கு எந்தெந்த கடைகள், எந்தெந்த கிராமங்கள் என்பதை இன்று காலையே விவரம் கண்டுகொள்ள முடியும்” என்று ஆபீசுக்கு புறப்பட்டான்.
முதல் நாள் மாலை…
ரங்கதுரையின் வீட்டுக்கு அவசரமாக வந்த பிரபு, அவர் வீட்டிலிருந்ததை அறிந்து, கோபமாக ரங்கதுரை யிடம் பேச ஆரம்பித்தார்.
“என்னங்க மிஸ்டர் ரங்கதுரை, நீங்க விஞ்ஞான உலகத்துக்கே கெட்ட பேர் வாங்கித் தரப் பாக்கறீங்களா?” பிரபுவின் முதல் கேள்வியே உணர்ச்சியைக் கொட்டியது.
“டாக்டர் பிரபு, நீங்க இவ்வளவு உணர்ச்சி வசப்படு வதைப் பார்த்தா நான் ஏதோ கொலை செய்துவிட்டது போல் இருக்கே” ரங்கதுரை சிரித்தார்.
“நீங்க கொலை செய்யவில்லை… ஆனால்”
“சொல்லுங்க… என்ன சொல்லப் போறீங்க?’
“ஆனால் வெகுளித்தனமாக கிராமத்து மக்களை பூச்சிக் கொல்லிக்கு இரையாக்கி, அவர்களுடைய குடும்ப வாழ்க்கையில் குழந்தை இல்லாம செய்யறீங்களே”- பிரபு குற்றம் சாட்டினார்.
“டாக்டர் பிரபு, நீங்க ஒரு விஞ்ஞானி. விஞ்ஞானத் திலே எதையும் சரியான அத்தாட்சி இல்லாம ‘ஸ்டேட் மெண்ட்’ விடமாட்டாங்க. நீங்க என்னைப் பற்றிச் சொல்றதுக்கு உங்களிடம் எந்தவித சாட்சியோ, அத்தாட்சியோ இருக்கிறதா?” ரங்கதுரை தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசினார்.
“ஏன் இல்லை? என்னிடம் ‘மேலதயான்’ பற்றிய விவரங்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டீர்களே அது போதாதா?” பிரபு சீறினார்.
“அது எதற்காக வாங்கிக் கொண்டேன்? கிராமத்தில் தானியங்களை எலிகள் சாப்பிட்டு லட்சக்கணக்கில் நஷ்டம். விவசாய அமைச்சருக்கு இதில் பொறுப்பு ஏற்க வேண்டிய நிலை. எலிகளை ஒழிக்க ‘மேலதயான்’ பூச்சிக் கொல்லி பயன்படும் என்று தோன்றியது. உங்கள் ஆராய்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தேன்” ரங்கதுரை தன் பக்கத்தைப் பதற்ற மில்லாமல் சொன்னார்.
“கிராமத்து மக்களுக்கு ‘மேலதயான்’ நீங்கள் உணவில் கொடுத்து அவர்களுக்குத் தெரியாமலேயே ஒரு புதுவித குடும்பக் கட்டுப்பாடு முறையை புகுத்தியிருக்கிறீர்களே…” பிரபு விடுவதாயில்லை. அவருக்கு முன்னொரு நாள் சுரத்தின்போது வந்த பயங்கர கனவு நினைவுக்கு வந்து… “மேடையில் பிரபுவுக்குப் பாராட்டு விழா… கிராமத்துப் பெண்கள் அவரை அடித்துப் புடைக்க வருகிறார்கள். ரங்கதுரை பேரிடியாகச் சிரிக்கிறார்.’
இப்போதும் ரங்கதுரை பேரிடியாகச் சிரித்துவிட்டு எழுந்து நின்றார். பிரபுவும் எழுந்தார்.
“டாக்டர் பிரபு, நான் என்ன திட்டம் போட்டேன்; அதை எப்படிச் செயல்படுத்தப் போகிறேன் என்பதை நான் என்றுமே உங்களிடம் பேசியதில்லை. அது நினைவிருக்கட்டும்” கடுமையாக எச்சரித்தார் ரங்கதுரை. சில விநாடிகள் ரங்கதுரையையே பார்த்துக் கொண் டிருந்த பிரபு, “என்னிடம் பேசியதில்லை… உண்மைதான். டாக்டர்கள் பாலு, சாலமன் இருவரையும் கேட்டால் தெரிந்துவிடுகிறது” என்றார். இது பிரபுவின் கடைசி முயற்சி. ரங்கதுரையின் முகம் சட்டென மாறியது. தன் மேல் துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டார்.
“பாலு, சாலமன் இவர்களுக்கு இதில் என்ன பங்கு? தேவையில்லாமல் உங்கள் உதவி ஆராய்ச்சியாளர் மேலும் நீங்கள் பழி போடுகிறீர்கள்” ரங்கதுரை பிரபுவின் மேல் குற்றம் சாட்டினார். “பழி யார்மேல் என்று இன்னும் சில நாட்களில் வரப்போகும் நிருபர் நீலாவின் கட்டுரை யில் தெரியும்” என்று சொல்லிவிட்டு பிரபு புறப்பட்டார்.
பிரபு போனதும் ரங்கதுரை பலத்த யோசனையில் ஆழ்ந்தார். பிரபு ஒரு பிரச்சினை ஆகிவிடுவார் – ஆகி விட்டார் போல இருந்தது. பாலு, சாலமன் என்று ஆராய்ச்சியாளர்களின் பெயர்களும் அடிபடுகின்றன.
சிலர் பிரச்சினையை வளரவிட்டு அதை எப்படித் தீர்ப்பது என்பதை தாமதமாக யோசிப்பார்கள்; அதற்குள் பிரச்சினை அவர்களையே விழுங்கிவிடும். இது போன்ற அரசியலில் நிறையபேர் பொது வாழ்விலிருந்து மறைந்திருக்கிறார்கள்-உலக சரித்திரம் கூறுகிறது.
மற்றும் சிலர் பிரச்சினை வரும்போதே அதைக் கிள்ளிவிட்டு அடுத்த பிரச்சினையைத் தூண்டுவார்கள். ரங்கதுரை இரண்டாம் வகையைச் சேர்ந்த அரசியல்வாதி.
பிரபு செய்தித்தாள்களைக் கூப்பிடுமுன் தன்னுடைய செய்தி வந்துவிட வேண்டும். ‘மேலதயான்’ மருந்தைப் பயன்படுத்தியது மக்கள் தொகை குறைக்க இல்லை என்பதை பிரபு நிரூபித்துவிடக் கூடாது. அதையும் கவனிக்க வேண்டும்.
உடனே செய்தித்தாள்களுக்கு அன்றிரவே பரபரப் பான ‘விவசாயச் செய்தி’ ஒன்று அனுப்பினார். அமைச் சரே செய்தி அனுப்பினால் அதை வெளியிட மறுக்க எந்தச் செய்தித்தாள்தான் முன் வரும்? ‘சென்னை செய்தி ஆசிரியர் செங்கோடன் இந்தச் செய்தியை பரீசிலனைக்கு ஏற்றுக்கொண்டார். ஆதாரமில்லாத பரபரப்பான செய்தி களைப் போட வேறு பத்திரிகைகளா இல்லை?
ரங்கதுரை மற்றும் இரண்டு வேலைகளை உடனடி யாகச் செய்தார். ஒன்று நீலா ‘சென்னை செய்தி’க்கு எழுதும் கட்டுரையில் ரங்கதுரைக்கு என்ன பங்கு என்பதை அவர் தெரிந்துகொண்டாக வேண்டும். இரண்டு, பாலு-சாலமன் இருவரையும் (அ)தட்டி வைக்க வேண்டும். இரண்டிற்கான ஏற்பாட்டில் முனைந்தார்.
எந்தெந்த கிராமங்களில் எந்தெந்த கடைகள் ‘மேலதயான்’. வாங்கினார்கள் என்ற விவரத்தை ஆபீசிலிருந்து எடுத்துவர சேது போய் அரைமணியில் நீலாவும் வேலைக்குப் புறப்பட்டாள். நேராக ஆபீசுக்குப் போய் ஆசிரியர் செங்கோடனிடம் பேச வேண்டும். அவரிடம் தான் இதுவரை தெரிந்துகொண்ட விவரங் களைச் சொல்லி கட்டுரையை மறுநாளே வெளியிட வேண்டும். இது சாதாரணக் கட்டுரையா? ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகளின் கண்களைத் திறக்க வேண்டிய ஒன்றல்லவா? தங்களின் ஆராய்ச்சியின் பலன் மக்களுக்குப் பயன்படும் விஞ்ஞானமாக வேண்டும் என்ற ஆர்வத்தில் அரசியல்வாதி சிலரின் இரையாகிவிடு கிறார்களே. கல்வியும் அரசியலும் எப்படித் தனித் தனியாக இயங்க வேண்டுமோ அது போலவே அறிவிய லும் அரசியலும் தனித்தனியாக இயங்க வேண்டும். ‘மேலதயான்’ பூச்சிக்கொல்லியைக் குடும்பக் கட்டுப் பாடுக்குப் பயன்படுத்தும் அளவு பிரபுவின் அறிவியல் ஆராய்ச்சி மட்டமானதாகிவிட்டதே என்ற வருத்தத்துடன் நீலா ஆட்டோவில் ஏறினாள்.
அவள் ஏறின ஆட்டோ மயிலாப்பூர் குளக்கரையைத் தாண்டியபோது, இன்னொரு ஆட்டோவும் அவளைப் பின்தொடர்ந்தது. அதில் செங்கோடன் அனுப்பிய ஆள் இருந்தான்! நீலா எதையும் கவனிக்காமல் செங்கோட னிடம் சொல்ல வேண்டியவற்றை மனத்தில் வரிசைப் படுத்திக் கொண்டே போனாள்.
மயிலாப்பூர் தாண்டி டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் இடதுபுறம் ஆட்டோக்கள் திரும்பின. அண்ணா சாலைக்குப் போகும் வழியில் குறுக்குச் சந்தில் திரும்பிய நீலாவின் ஆட்டோ நிறுத்தப்பட்டது. ஆட்டோ ஓட்டுபவர் நீலாவை இறங்கச் சொன்னார்.
“என்னப்பா, இது? அவசரமாகப் போகணும்னு சொன்னேன். இங்கே கொண்டுவந்து நிறுத்திட்டியே.”
“அம்மா… வண்டி தகராறு செய்யுது. வேற வண்டிதான் நீங்க பாத்துக்கணும்” என்று வண்டியை
சந்தில் ஒரு பக்கமாகத் தள்ளி நிறுத்தினான்.
“தகராறுன்னு தெரிஞ்ச வண்டியை ஏன் ஓட்டிவந்து இப்படி தொல்லை கொடுக்கறே?” என்று கோபமாய் பேசினாள் நீலா.
“இந்தாம்மா… நீ காசு கொடுக்க வேணாம். வேற வண்டியிலே போயிக்க” என்று ஆட்டோ டிரைவர் சொல்லிவிட்டு சந்தில் நடக்க ஆரம்பித்தார்.
நீலாவைத் தொடர்ந்து வந்த ஆட்டோ சந்தின் முன் பகுதியிலேயே நின்றுவிட்டது. அதிலிருந்து வாட்டசாட்ட மான ஓர் ஆள் இறங்கி வந்தான். அவன் நீலாவை நோக்கித் தான் நடந்தான் என்பதை நீலா கவனித்தபோது பயம் அவள் இதயத்தைக் கவ்வியது. சந்திலிருந்து ஓடிவிடலாமா என்று நீலா திரும்பியபோது, பக்கத்தி லிருந்த சந்திலிருந்து இரண்டு ஆட்கள் வெளியே வந்தனர். ஒருவன் முகத்தில் குறும்புச் சிரிப்பு. இன்னொருவன் பயங்கரச் சிரிப்பை உதிர்த்தான்.
இந்த மூன்று தடியன்களிடமிருந்து எப்படித் தப்புவது? நீலாவுக்குக் கால்கள் நடுங்கின. உறைந்து போய் நின்றாள். அடுத்த சில நிமிடங்கள் சினிமாவில் பார்ப்பது போல் இருந்தது.
தனியாக வந்த ஆள் வேகமாக ஓடி வந்தான். இரண்டு பேராக வந்தவர்களில் ஒருவன் கத்தியை உருவினான். தனியாக வந்தவன் அந்த இரண்டு பேர்களையும் தாறுமாறாக அடிக்க ஆரம்பித்தான். கத்தி பிடித்தவனின் கையை முறுக்கிக் கத்தியை வீழ்த்தினான்.
ஐந்து ஆறு நிமிடங்கள் என சண்டை வளர்ந்தது. நீலாவின் மேல் பாய வந்த இரண்டு பேரில் ஒருவன் அங்கு நிறுத்தப்பட்ட ஆட்டோவில் மோதிக்கொண்டதும் அவனுக்கு நெற்றியில் பலத்த காயம் பட்டு, இரத்தம் பீரிட்டது. காயத்தைக் கையால் பொத்திக்கொண்டு அவன் ஓட ஆரம்பித்தான். இன்னொருவனும் இன்னும் சில அடிகளை வாங்கிக்கொண்டு விந்தி விந்தி ஓடினான்.
“வாங்க போகலாம்” என்று தான் வந்த ஆட்டோவுக்கு சைகை காட்டினான் நீலாவுக்கு உதவிக்கு வந்த ஆள்.
“நீங்க யார்?” என்று சற்று நடுங்கிய குரலில் கேட்டாள் நீலா. ‘யாராயிருந்தால் என்ன? என்னை இன்னக்கிக் காப்பாத்தியது இந்த ஆள்தானே!’ என்று மனத்தில் நினைத்துக் கொண்டாள்.
”சென்னை செய்தி ஆபீசுக்குப் போகும்போது தெரியும். வண்டியில் ஏறுங்கம்மா” என்றான், சாதாரணமாக.
அவனிடம் மேலே பேசுவது கடினம் என்று தெரிந்து கொண்டு ஆட்டோவில் ஏறி அவன் பக்கத்தில் உட்கார்ந் தாள். அவனுக்கும் இடது கையில் கொஞ்சம் இரத்தம் வழிந்தது. அதை ஒரு துணியால் துடைத்துக்கொண்டு, துணியை காயத்தின்மேல் கட்டினான். அவன் முகம் வேதனையைக் காட்டவில்லை.
“இதைவிட மோசமா இருக்கும்னு நினைச்சேன்” என்றான் அவன்.
“என்னை யார் தாக்க வந்தாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா?” நீலா ஆர்வமாகக் கேட்டாள். அவளுக்குப் பயம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிந்தது. ஆட்டோவும் சரியான வழியில் ஆபீசுக்குப் போய்க் கொண்டிருந்ததால் அந்த ஆள் மேல் நம்பிக்கை பிறந்தது.
“உங்களைத் தாக்க மட்டுமில்லே தூக்கிக்கிட்டுப் போகவும் அந்த தடிப்பசங்க வந்தானுங்க” என்றான் அவன்.
“யார் அவங்களை அனுப்பினாங்க?” “செங்கோடனைக் கேட்டா சொல்வாரு.”
“யாரு? செங்கோடனா என்னை…”
“ஆமாம். செங்கோடன்தான் உங்களைக் கவனமாப் பாத்துக்கச் சொல்லி என்னை அனுப்பினார். ரொம்ப நாளாவே நான் உங்களைத் தொடர்ந்து வருகிறேன்” என்று சிரித்தான் அந்த ஆள்.
செங்கோடன் நீலாவின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். பொறுமையில்லாமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். அவர் அறையில் மூர்த்தியும் இருந்தான்.
“என்ன, சார்? என்னிக்குமில்லாத கவலை இன்னிக்கி?”
“மூர்த்தி… நீலாவுக்கு ஒரு ஆபத்து இருக்கு. அதிலிருந்து அவள் தப்பிக்கணுமேன்னு எனக்குக் கவலை” இதை செங்கோடன் சொன்னதும் மூர்த்தி துணுக்குற்றான்.
“நீலாவுக்கு என்ன ஆபத்து? ஏன் இதை என்னிடம் சொல்லவேயில்லை?” என்று மூர்த்தி வேகமாகப் பேச ஆரம்பித்தான்.
“சொல்லியிருந்தா நீயும் மாட்டியிருப்பே! எனக்கு இரட்டைத் தலைவலியாயிருக்கும். எல்லா போட்டோக்களும் போயிருக்கும்” என்று அவன்மேல் கொஞ்சம் பரிதாபப்பட்டும், கொஞ்சம் கோபமாயும் பேசினார்.
“நீலாவுக்கு யார் என்ன கெடுதல் செய்ய நினைச்சது?”
“மூர்த்தி, எந்த ரிப்போர்ட்டருக்கும், பத்திரிகை ஆசிரியருக்கும் நூறு சதவீத உத்திரவாதம் இல்லை. அவர்கள் எங்கேயும் எப்போதும் எந்த ஆபத்துக்கும் ஆளாகலாம். இதுவும் ஒருவிதத்திலே பொது வாழ்க்கை தானே.”
“செங்கோடன் சார், நான் பொது வாழ்க்கையைப் பற்றிக் கேக்கலையே. நீலாவுக்கு வந்த ஆபத்தைப் பற்றித் தானே கேட்டேன்” என்றான் மூர்த்தி எரிச்சலுடன்.
செங்கோடன் சிரித்துவிட்டார். “மூர்த்தி, நீ சரியான ஆளுப்பா. நீலாவுக்கு யார் மூலம் ஆபத்து வரும்னு நீ நினைக்கிறே?” என்று கேள்வியை அவன் பக்கமே திருப்பினார்.
“பாலு, சாலமன் இரண்டு பேருக்கும் அவள்மேல் சந்தேகம் வந்திருக்கலாம். ஏன் டாக்டர் பிரபுகூட அவள் மேல் கோபப்பட்டிருக்கலாம்.”
“பிறகு..” செங்கோடன் விடவில்லை.
“வேறு யாரா இருக்கும்?”
“நீயே யோசனை செய்து பார்” என்று அவன் வாயை அடைத்தார்.
இவர்கள் பேசிக்கொண்டிருந்த போதே நீலாவை அழைத்துக்கொண்டு, இடது கையில் இரத்தம் தோய்ந்த கட்டுப் போட்ட அந்த ஆள் வந்து சேர்ந்தான்.
“என்ன ராஜா இது? இப்படி இரத்தக் கட்டோடு வந்து நிக்கறியே? கவனமாய் இருக்கக் கூடாதா?” என்று செங்கோடன் அவனை விசாரித்தார்.
“ஒரு சின்ன கத்திக்குத்து. அவ்வளவுதான். அந்தப் பசங்களைத் துவைச்சு அனுப்பிட்டேன் சார்” என்றான் பெருமிதத்துடன் ராஜா என்ற அந்த ஆள்.
“இவரை அனுப்பி என் உயிரைக் காப்பாத்தீட்டங்க சார். நான் எப்படி நன்றி சொல்றது உங்களுக்கு?” நீலா உட்கார்ந்து கொண்டாள். கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
“நீலா… என்னுடைய ஆபீசுலே நீ வேலைக்கு சேர்ந்த நாளிலேருந்து உன்னுடைய நல்ல எதிர்காலத்துலே நிறைய நம்பிக்கை வச்சிருக்கேன். உனக்கு என்னால என்ன செய்ய முடியுமோ அவ்வளவும் செய்வேன்” என்று செங்கோடன் சொன்னார்.
“அப்ப நான் வரேன் சார். எப்ப வேணுமானும் கூப்பிடுங்க” ராஜா புறப்பட்டான்.
“ராஜா நேரா நம்ம டாக்டர்கிட்டே போய் அதுக்கு ஒரு ‘ட்ரீட்மெண்ட்’ எடுத்துக்க” என்று ராஜாவை அவர் அனுப்பி வைத்தார்.
அவர்கள் பேசிக்கொண்ட தோரணையைப் பார்த்தால் ராஜாவை செங்கோடன் பலமுறை இது போன்ற காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக் கிறார் என்பதுபோல் தோன்றியது.
ராஜாவைப் பற்றி செங்கோடன் சொல்லி முடித்தார். நீலாவும் மூர்த்தியும் செங்கோடனை வியப்புடன் பார்த்தார்கள்.
“பத்திரிகை உலகம் விசித்திரமானது. இதிலே நியாயமானவங்க அதிக நாள் தங்கணும்னா சில எதிர்ப்பு களை எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியணும்” என்று சிரித்தார் செங்கோடன்.
“நீலா உன்னைத் தாக்க வந்தவங்களை யார் அனுப்பினாங்கன்னு மூர்த்தியைக் கேளு சொல்வான்” என்று அவன் வாயைக் கிளறினார் செங்கோடன்.
“அமைச்சர் ரங்கதுரையாகத்தான் இருக்கும்” என்றான் மூர்த்தி தீர்மானமாக.
செங்கோடன் தலையை ஆட்டி ஆமோதித்தார். “மூர்த்தி… நீகூட ‘ரிப்போர்ட்டர்’ ஆக வழியிருக்கு” என்று அவனைப் பாராட்டினார்.
“எல்லாமே புரிஞ்சிடுச்சி” என்றாள் நீலா.
“நேற்றும் இதையேதான் சொன்னே… இப்பவும் சொல்றே என்ன புரிஞ்சுது?” என்றான் மூர்த்தி.
“டாக்டர் பிரபுவிடம் ‘மேலதயான்’ ஆராய்ச்சிக் குறிப்புகளை வாங்கிக்கொண்டு எலிப்பெருக்கத்தை ஒழிப்பதாய் வெளியே நாடகம் போட்டார் ரங்கதுரை. உண்மையிலேயே “மேலதயான்” மருந்தை குடும்பக் கட்டுப்பாடுக்குப் பயன்படுத்துகிறார். எந்தெந்த கிராமத் தில் மக்கள் இந்தக் கொடுமையான பரிசோதனைக்கு இரையானார்கள் என்று இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும்” நீலா திட்டவட்டமாகச் சொன்னாள்.
“சபாஷ் நீலா… நான் நினைச்சதையே நீயும் சரியா சொல்லிட்டே. ஆனால் ஒரே ஒரு சிக்கல்தான்”
செங்கோடன் தூண்டினார்.
“தெரியும், சார்… ரங்கதுரை பரிசோதனைக்குட்பட்ட கிராமம் ஒன்றில் போய் இதற்கான அத்தாட்சியைக் கொண்டு வர்ற வரைக்கும் ரங்கதுரையை நாம அசைக்க முடியாது- அதைத்தானே சொல்றீங்க?” என்றாள் நீலா.
– தொடரும்…
– கல்கி வார இதழ் 14.5.1995 ல் தொடங்கி 30.7.1995 வரை பன்னிரண்டு இதழ்களில் தொடராக வந்தது.
– மாண்புமிகு கம்சன் (விஞ்ஞான நாவல்), முதற்பதிப்பு: 2014, வானதி பதிப்பகம், சென்னை.