கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 1, 2024
பார்வையிட்டோர்: 2,140 
 
 

(1995ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 5-6 அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10

அத்தியாயம்-7

பிரபு புரண்டு புரண்டு படுத்தார். பகலெ உடல்வலி. இரவிலாவது சிறிதுநேரம் கண்ணை ரூ என்று பார்த்தவருக்குத் தூக்கம் வருவதா சாதாரண சுரம் என்று நினைத்திருந்தவருக்கு நாளாகியும் உடல்வலியும் குறையாமல் மன உை குறையாமல் தொல்லை கூடியது. சாந்தி எ அவரைக் கவனிக்க முடியுமோ அவ்வளவு கவனித்தாள். 

ஒரு வழியாக நடுநிசியைத் தாண்டி கண்களை மூடிய பிரபுவுக்கு ஒரு பயங்கரக் கனவு அவருடைய மனஅமைதி யின்மையைப் பிரதிபலித்தது. அதுவும் அவருடைய ஆராய்ச்சியை அடிப்படையாக வைத்து அவருக்கு மனிதனின் கோரமான உணர்ச்சிகளைக் காட்டியது அந்தக் கனவு. 

பிரபு ஒரு கிராமத்தில் ஆராய்ச்சியைத் தொடர விரும்பி அங்கு போகிறார். ‘மேலதயான்’ என்ற அந்த பூச்சிக்கொல்லியின் நச்சுக் குணம் எந்த அளவு கொடுமை யானது என்பதை அவர் பரிசோதிக்க விரும்புகிறார். எலிகளுக்குக் கொடுத்து சோதனையை நீட்டுவதை விட.. இப்படிச் செய்தால் என்ன? 

அந்தக் கிராமத்திலிருக்கும் மக்களுக்கே… மக்களையே எலிகளாக இல்லை, இல்லை எலிகளுக்குப் பதிலாக மக்களையே பரிசோதனைக்குரிய விலங்குகளாக்கினால்? 

பிரபுவுக்கு ஒரு கொடூர எண்ணம் உருவாகியது… ஆண் எலிகளுக்குப் பதிலாக அந்தக் கிராம ஆண் களையே தன் பரிசோதனைக்குட்படுத்தினார். பல மாதங்கள்… சில வருடங்கள்… “மேலதயான்’ அவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக உணவில் கலக்கப்பட்டது. வெகுளி மக்கள் சோறு கண்ட இடம் சொர்க்கமென நினைக்க அதுவே நரகமாகப் போவதை அறியவில்லை. 

பிரபுவுக்கு மீண்டும் ஒரு பாராட்டு விழா. அந்தக் கிராமம் முழுக்கவே வந்திருந்தது. அவருக்கு மாலை போடவேண்டிய நேரம். அப்போது பெண்கள் அரிவாள் களைத் தூக்கிக்கொண்டு அவர் உட்கார்ந்திருந்த மேடையை நோக்கி ஓடி வருகின்றனர். அதைப் பார்த்து ரங்கதுரை பயங்கரமாகச் சிரிக்கிறார். மிகப் பயங்கரமாகச் சிரிக்கிறார். 

“இப்போது புரிகிறதா டாக்டர் பிரபு… உங்கள் ‘மேலதயான்’ ஆராய்ச்சியை நான் எப்படித் திசைத் திருப்பினேன் என்று…” ரங்கதுரையின் அட்டகாசமான சிரிப்பு பிரபுவின் தூக்கத்தைக் கலைத்தது. 

உடல் முழுக்க வியர்வையால் நனைந்தது. பிரபு சட்டென்று கட்டிலில் எழுந்து உட்கார்ந்தார். 

“சாந்தி… சாந்தி…” என்று கூவினார். 

அலறிப் புடைத்துக்கொண்டு சாந்தி அங்கு ஓடி வந்தாள். 

“என்னங்க… என்ன ஆச்சு?” 

“கொஞ்சம் தண்ணீர் கொடு சாந்தி… எனக்கு ஒரு பயங்கர கனவு… தூக்கத்திலிருந்து தூக்கிப் போட்டு எழுந்துவிட்டேன்” பிரபு பரிதாபமாகச் சொன்னது சாந்தியை ஒரு குலுக்குக் குலுக்கியது. 

தண்ணீரைக் கொடுத்துவிட்டு அவர் படுக்கையில் பக்கத்தில் உட்கார்ந்தாள் சாந்தி. 

“சாந்தி… உன்னிடம் நான் ஒரு உண்மையைச் சொல் லணும்…” என்று அவளைப் பார்த்தார். 

“என்னங்க?” எப்போதும்போல் ஆதுரத்துடன் கேட்டாள் சாந்தி. 

“அன்னிக்கி இங்கே வந்தாளே ஒரு பெண்… மாலதி… அவள் என்னுடன் நான் பி.எச்.டி செய்யும்போது பழகியவள்” சாந்தியைப் பார்த்துக்கொண்டே பேசியவருக்கு அவளுடைய முகத்தில் எந்தவித உணர்ச்சி யையும் கண்டுகொள்ள முடியவில்லை. 

“ம்…. ம்…” என்று மட்டும் கேட்டாள் சாந்தி. “மாலதி என் காதலி மட்டுமில்லை…” 

“ம்… ம்…” 

“அவள் என் பையனுக்கு அம்மாகூட.” 

“ம்…ம்” 

“என்ன, சாந்தி… எல்லாத்துக்கும் ம்ம்னு மட்டும் சொல்றே… உன்னிடம் எப்டிச் சொல்றதுன்னு தெரியாமத் தான் நான் மூணு நாளா படுத்த படுக்கையிலே கிடக்கிறேன்” பிரபு சாந்தியைப் பிடித்து உலுக்கினார். 

“இப்ப என்னங்க ஆயிடுச்சு? உங்களுக்கு மாலதி மூலமா ஒரு பையன் இருக்கான்… அவன் பெயர் கோபு… அவ்வளவுதானே?” 

“சாந்தி…” பிரபுவின் கூச்சலைக் கேட்டு அவர்கள் பையனும் பெண்ணும் வேறொரு அறையிலிருந்து ஓடி வந்தனர். அவர்கள் பயந்து ஓடி வந்ததும் சாந்தி அவர்களை அணைத்துக் கொண்டாள். 

“இங்கே பாருங்க… நீங்க இனிமேலாவது நிம்மதியாத் தூங்குங்க… நாம நாளைக்கு விவரமா பேசிக்கலாமே” என்று அவரைப் படுக்க வைத்து, அவர் மேல் போர்வையைப் போர்த்திவிட்டு குழந்தைகளைத் திரும்பத் தூங்க வைக்க அழைத்துப் போனாள் சாந்தி. 

பிரபுவுக்குக் குழப்பம் அதிகமானதே தவிர தூக்கம் வருவதாயில்லை. சாந்திக்கு எப்படித் தெரிந்தது? அவளிடம் மாலதியே ஒருவேளை சொல்லியிருப்பாளோ? ஏன் சொல்ல வேண்டும்? சாந்தி அத்தனை விவரத்தையும் அதிர்ச்சியில்லாமல் ஏற்றுக் கொண்டிருக் கிறாளே… நாளைக்குத்தான் பூகம்பம் ஆரம்பமாகுமோ? எரிமலை வெடிக்குமோ? கோபக்கனல் தெறிக்குமோ? பிரபுவினால் சாந்தியைப் புரிந்துகொள்ள முடியவில்லை. 

வெகுநேரம் கழித்துக் கண்ணை மூடினார். மீண்டும் ஒரு பயங்கரக் கனவு. இம்முறை மாலதிதான் கதாநாயகி. அவளும் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டாள். அவளும் ‘மேலதயான்’ பூச்சிக்கொல்லியை மையமாக வைத்து நாடகம் போடுகிறாள். ஆண்கள்தான் அதற்கும் இரை. பரிசோதனை வெற்றியாம். இனி அவளைப் போன்ற பெண்களுக்கு அபாயம் இல்லையாம். பயமில்லையாம். பிரபு போன்ற ஆராய்ச்சியாளர்கள் ஒன்றுமே செய்ய முடியாதாம்… மாலதி பயங்கரமாகக் கொக்கரிக்கிறாள். அவள் சிரிப்புக்கு ஆராய்ச்சி அறையிலிருந்த கண்ணாடிக் குடுவைகள் தாளம் போடுகின்றன – பிறகு கீழே விழுந்து நொறுங்குகின்றன. அவைகளிலிருந்து ‘மேலதயான்’ கலந்த தண்ணீர் வழிந்தோடி ஒருவித நெடியைப் பரப்புகிறது. ஆராய்ச்சி அறையிலிருந்து எல்லோருமே அலறிக் கொண்டு ஓடுகிறார்கள். 

பிரபு மீண்டும் கதறிக்கொண்டே எழுந்தார். 

கனவு கலைந்தது. ஆனால் அச்சம் அகலவில்லை. இருண்ட அறையிலிருந்து எல்லாப் பக்கத்திலிருந்தும் பிரபுவுடன் ‘மேலதயான்’ ஆராய்ச்சியில் ஈடுபட்ட அனைவரும் அவரைத் தாக்க வருகிறார்களே. அதோ பாலு, சாலமன், பானு, மீண்டும் ரங்கதுரை… பிரபு சட்டென்று விளக்கைப் போட்டார். வெளிச்சம் பரவிய அந்த அறையில் பதற்றமுற்ற பிரபுவைத் தவிர வேறு யாருமே இல்லை. கண்ணை மூடாத போதே இந்த அளவு ஒரு பயங்கர மனப்பூதம் அவரைத் துன்புறுத்தவே அவர் விளக்கை அணைக்காமலே படுத்தார். இம்முறை படுத்த சில நிமிடங்களில் கண்கள் தானாக மூடிக்கொண்டன. அவர் மனதில் செய்துகொண்ட ஆராய்ச்சி பற்றின ஒரு தீர்மானம்தான் அவருடைய தூக்கத்திற்குக் காரணம் என்பது புரியாத நிலையிலேயே அவர் தூங்கினார். 


சேது ஆறு மணி அளவில் வீட்டுக்கு வந்தபோது நீலா ஏற்கெனவே சமையலை முடித்துவிட்டு இருந்தாள். டேப் ரிக்கார்டரில் தனக்குப் பிடித்த பழைய சினிமா பாட்டு ஒன்றைக் கேட்டுக்கொண்டு ஏதோ ஒரு விஞ்ஞான பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்தாள். அவள் சிந்தனை மட்டும் “மேலதயான்’ ஆராய்ச்சியைப் பற்றியே சுற்றி வந்தது. 

வேகவைத்த வேர்க்கடலையை சேது எடுத்துக் கொண்டு அவள் பக்கத்தில் உட்கார்ந்தான். இருவருமே நெருக்கமாக உட்காரும் அளவு இருந்த அந்த சோபாவில் அவன் உட்கார்ந்ததும் நீலா அவனைப் பார்த்தாள். 

“இன்னக்கி நான் மறுபடியும் டாக்டர் பிரபுவின் ஆராய்ச்சிக் கூடத்துக்குப் போயிருந்தேன். ரொம்ப முக்கிய சமாசாரம் தெரிந்தது” என்றாள் நீலா. 

“அப்படியா? நான்கூட உன்னிடம் ஒன்று கேக்க ணும்னுதான் இருக்கேன்” என்றான் சேது. 

“என்ன கேக்கணும்?” 

“முதல்லே நீ ஆராய்ச்சி அறையிலே என்ன பார்த் தேன்னு சொல்லு.” 

“பார்த்ததைவிட அதுக்கப்புறம் என்ன தெரிஞ்சுகிட் டேன்றது முக்கியம்.” 

“சரி சொல்லு” பொறுமை யிழந்தவன் போல் பேசினான் சேது. 

“டாக்டர் பிரபு ‘மேலதயான்’ என்கிற பூச்சிக் கொல்லியை வைத்து நிறைய ஆராய்ச்சிகள் செய்து வருகிறார். முக்கியமாக ஆண் எலிகளைப் பரிசோத னைக்குப் பயன்படுத்தி அவைகளின் உயிரணுக்கள் குறைகின்றனவா என்பதில் ஆர்வம் காட்டுகிறார்.” 

“அப்படியா!” வியப்பின் உச்சிக்கே சேது போய் விட்டான். 

“ஏன், சேது? என்ன இப்படி ஆச்சரியப்படறீங்க?” நீலாவுக்குப் புரியவில்லை. 

“ஏன் தெரியுமா? நானும் ‘மேலதயான்’ பற்றித்தான் உன்னிடம் பேசணும்”- சேது உற்சாகமாகப் பேச்சைத் தொடர்ந்தான். “எங்க கம்பெனியிலே ‘மேலதயான்’ பூச்சிக் கொல்லி மருந்து நல்லா விற்பனையாகிக்கிட்டு இருக்கு. ஆனா அது சில சமயங்களில் தண்ணீரில் தன் சக்தியை இழந்துவிடுகிறது என்று விவசாயிகள் சொல்கிறார்கள். அதைப்பற்றிய ஆராய்ச்சி விவரம் உனக்குத் தெரியுமா?” என்று நிறுத்தினான் சேது. 

“மேலதயான்’ அமிலம் கலந்த தண்ணீரில் அதிக நாட்கள் சக்தியுடன் இருக்கும். அமிலம் இல்லாத நீரில் மாற்றங்கள் பலவற்றிக்கு இலக்காகிறதாம்…” என்றாள் நீலா. 

“நல்லது நீலா… நான் இதை என் கம்பெனிக்குச் சொன்னால் அவர்கள் மேலும் ‘மேலதயான்’ பற்றி பரிசோதனைகள் செய்ய முடியும்” என்று மகிழ்ச்சியுடன் சொன்னான் சேது. 

“அது இருக்கட்டும், ‘மேலதயான்’ பற்றி நான் ஒரு ‘தியரி’ வைச்சிருக்கேன் தெரியுமா?” என்றாள். 

“என்ன ‘தியரி?’ சயின்டிஸ்ட் போல பேசறியே?” 

“அந்த பூச்சிக்கொல்லி மருந்தை அமைச்சர் ரங்கதுரை தன்னுடைய அரசியல் காரணத்துக்காகப் பயன்படுத்தப் போகிறார் என்பது என் ‘தியரி’. நீலா திட்டவட்டமாகச் சொன்னாள். 

“அவ்வளவு நிச்சயமாக எப்படித் தெரியும்?” 

“நான் பாலு, சாலமன் பேசியதிலிருந்து இதைத் தெரிந்துகொண்டேன்; ஆனால் எப்படி எங்கே ‘மேலதயானை’ ரங்கதுரை பயன்படுத்தப் போகிறார் என்பதுதான் புரியவில்லை.” 

“ஒருவேளை கிராமங்களில் இருக்கும் விவசாயி களுக்கு விளைச்சலை விருத்தி செய்ய விலையில்லாமல் வினியோகம் செய்யப்போறாரோ என்னவோ” என்று அடுக்கினான் சேது. 

“அப்படி அவர் செய்தால் உங்க கம்பெனிக்கு நல்ல லாபம் வரும்னுதானே கணக்குப் போடறீங்க!” என்று சிரித்தாள் நீலா. 

சேதுவும் சிரித்துவிட்டான். 

“சரி, நீலா… எனக்கு அடுத்தவாரம் இரண்டு நாட்கள் லீவு எடுக்க முடியும். பெங்களூர் போய் வந்து விடலாமா?” என்று பேச்சை மாற்றினான் சேது. 

“பெங்களூர்… பெங்களூர்” என்றாள் நீலா. 

“ஆமாம்… ஆமாம்” என்றான் சேது. 

நீலா சிரித்துவிட்டு, “பார்க்கலாம் சேது. எனக்கு இந்தக் கட்டுரை முடிய வேண்டும். ‘இன்வெஸ்டிகேடிவ் ரிப்போர்ட்டிங்’ல் முதல் பகுதிதான் கடினமானதாய் இருக்கு. எழுதுவது சுலபம்” என்றாள் யோசனையுடன். 

“அடுத்த வாரம் விட்டால் இன்னும் ஆறு மாதத்துக்கு இரண்டு நாள் சேர்ந்தாப்போல நேரம் எனக்குக் கிடைக்காதே நீலா” என்று மீண்டும் சொன்னான். 

“அப்படின்னா, நாளைக்கு நானே பெங்களூர் ‘க்ளினிக்’கைக் கூப்பிட்டுப் பேசி ஏற்பாடு செய்துவிடு கிறேன். இரண்டு நாள் போய் வருவதால் அதிக தாமத மாகிவிடாது. செங்கோடன் சார் அனுமதி தருவார்னு நினைக்கிறேன்” என்று திட்டத்தை அவனிடம் சொன்னாள். 


“நீங்கள்தானே சேது- நீலா தம்பதி?” என்று அவர் கள் உட்கார்ந்திருந்த இடத்துக்கு வந்து நர்ஸ் கேட்டாள்.

“ஆமாம்” என்று சேது சொன்னவுடன் நர்ஸ் அவர்களை டாக்டர்கள் இருக்குமிடத்துக்கு அழைத்துச் சென்றாள். 

“மிஸஸ் நீலா, நீங்க இந்த அறையிலே இருங்க. லேடி டாக்டர் உடனே வருவாங்க” என்று நீலாவை ஒரு அறையில் உட்காரவிட்டு, சேதுவுடன் பக்கத்தில் இன்னொரு அறைக்குப் போனாள். 

“மிஸ்டர் சேது, நீங்க சட்டையைக் கழற்றிவிட்டு இங்கே உட்காருங்க. உங்களைப் பார்க்க ஒரு டாக்டர் வருவார்” என்று அவனுக்குச் சொல்லிவிட்டு நர்ஸ் அங்கிருந்து போனாள். 

சில நிமிடங்களில் அங்கு வந்த டாக்டர் சேதுவிடம் பேச்சுக் கொடுத்தார். பொதுவான சில பரிசோதனைகள். பிறகு அவனிடம் ஒரு சிறிய கண்ணாடி பாட்டிலைக் கொடுத்து விவரம் சொன்னார். சேது அந்த அறையினுள் மறைவிலிருந்த பகுதியில் மறைந்தான். அவன் திரும்பி வந்து டாக்டர் கண்ணுக்குப் படும்படியாய் மேசையில் அந்த கண்ணாடி பாட்டிலை வைத்தான். அவனுடைய உயிரே அதனுள் இருப்பதுபோல் தோன்றியது. 

“மிஸ்டர் சேது… நீங்கள் நாளை வரை பெங்களூரில் ஓட்டலில் தங்குவதாய் அறிந்தேன். நாளை காலை பத்து மணிக்கு எங்களுக்குப் போன் செய்தால் ரிசல்ட் சொல்கிறோம். அதன்பிறகு என்ன செய்யலாம் என்பதை யோசிக்கலாம். பொதுவாக உங்கள் உடல் ஆரோக்கியம் நல்லபடி இருக்கிறது” என்று சேதுவிடம் விடைபெற்றார். 

சேது டாக்டரின் அறையை விட்டு வெளியே வந்தபோது நீலாவும் அங்கு காத்திருந்தாள். 

“எப்படி போச்சுங்க?” என்றாள் அவனைக் கூர்மை யாகப் பார்த்துக்கொண்டே. 

“நாளைக்குத் தானே தெரியும்… உனக்கு எப்படி?”

“நான் இன்னக்கி இங்கே ஒரு மைனர் சர்ஜரி செய்துக்கணுமாம்” என்றாள் தயக்கத்துடன். 

“என்னது?” சேதுவுக்கு அதிர்ச்சி மிஞ்சியது. 

“லேடி டாக்டர் நம்மகிட்ட பேசணும்னு கூப்பிட றாங்க” சேதுவை உள்ளே அழைத்துச் சென்றாள் நீலா. சேதுவும், நீலாவும் எதிரே உட்கார்ந்ததும், லேடி டாக்டர் விளக்கமாகச் சொல்ல ஆரம்பித்தாள். 

“மிஸஸ் நீலாவுக்கு ‘ஃபெலோபியன் குழாய்கள் அடையாமலிருக்கிறதா என்பதை ‘லேபராஸ்கோபி’ என்ற முறைப்படிப் பார்க்கலாம். அது இன்றே செய்துவிடலாம். சாதாரண சர்ஜரிதான். ஒரு நாளிலே அவங்க ‘நார்மல்’ ஆயிடுவாங்க” என்று தொடங்கி அந்த சர்ஜரி பற்றி விளக்கினாள் டாக்டர். 

நீலாவை சேது பார்த்தபோது, நீலா ‘சரி’யென்பது போல் தலை ஆட்டினாள். 

சர்ஜரிக்கு ஏற்பாடு நடந்து, சர்ஜரி முடிந்து தங்குமிடத்துக்கு டாக்சியில் வந்து நீலா படுக்கையில் சரிந்தாள். அவளுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் அவள் கண்களை மூடி விழுந்து கிடந்தாள்; அவளை அந்த நிலையில் பார்த்த சேதுவுக்கு மனம் துடித்தது. எப்போதும் துறுதுறுப்பாக அலைந்து கொண்டிருக்கும் நீலா இப்படி உணர்வற்று கிடப்பது அவன் மனதைத் துளைத்தது. குழந்தை வேண்டி செய்ய ஏற்கும் இந்த காரியங்களுக்குப் பலன் கிடைக்க வேண்டுமே என்று அவன் எண்ணம் ஓடியது. நீலாவின் தலைமுடியை வருடிக் கொடுத்தான். அவளையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான். 

பிரபுவுக்கு சுரம் குறைந்து அன்று வேலைக்குப் போகலாம் என்ற அளவு உடல்நிலை தேறியது. அதற்குள் ஒரு வாரம் ஓடியிருந்தது. பிரபு புறப்பட்டுக் கொண்டிருந்தபோது மாலதி அவர் வீட்டு வாசலில் வந்து நின்றாள். அவள் அருகில் ஒரு பையன்… கோபுவாக இருக்க வேண்டும். பிரபு கையிலிருந்த ஃபிரீப்கேசை’ நழுவவிட்டார். கோபுவுக்கு அவருடைய சாயல் அப்படியே இருந்தது. மாலதியையும் கோபுவையும் மாற்றி மாற்றிப் பார்த்தார். அவர் கண்கள் ஈரமடைந்தன. 

“வந்தவங்களை வான்னு கூப்பிடாம இருக்கீங்களே… வா மாலதி….வாப்பா கோபு” என்று பின்னாலிருந்து சாந்தியின் குரல் ஒலித்தது. சாந்தியின் முகம் எப்போதும் போல் அமைதியின் இருப்பிடமாகத்தான் இருந்தது. 

பிரபுவும் உள்ளே வந்து சோபாவில் சாய்ந்தார். “இன்னக்கி இந்தப் பிரச்சினையை எப்படிக் கையாளுவது’ என்பதைத்தான் அவர் நினைத்தார். 

‘பிரச்சினையே இல்லை’ என்பது போல் சாந்தி பேச ஆரம்பித்தாள். 

“என்னங்க… உம்முன்னு உட்கார்ந்திருந்தா எப்படி?” என்று பிரபுவைத் தூண்டினாள். 

“நான் சொல்ல என்ன இருக்கிறது சாந்தி… எல்லாந்தான் கண் முன்னேயே நடக்குதே” என்றார் சோர்வுடன். 

“இப்ப என்ன பிரளயம் வந்துவிட்டது? மாலதியும் நீங்களும் காதலித்துக் கல்யாணம் செய்துகொள்ள நினைச்சீங்க… குடும்பங்களிலே சிக்கல். திருமணம் நின்னுடுச்சி. மாலதி பிரிந்தாள். ஆனால் அவள் கருத்தரித் தது உங்களுக்குத் தெரியாமல் போயிடுச்சு. இப்போ கோபுவுக்கு ஒன்பது வயசு… ‘அப்பா எங்கே?’ அப்ப டின்னு கேட்கிறவனுக்கு ‘இவர்தாண்டா உன் அப்பா’ அப்படின்னு மாலதி காட்டணும்னு ஆசைப்படறா… அது நியாயமான கோரிக்கை… நான் ஏன் குறுக்கே நிக்கணும்?” சாந்தி அளவாக, உணர்ச்சிவசப்படாமல் பேசினதைக் கேட்ட பிரபுவுக்கு என்ன சொல்வதென்றே தெரிய வில்லை. 

‘சாந்தி ஒரு பெண்தானே… பெண்தானோ? இப்படி அவளால் எப்படி இருக்க முடிகிறது’ என்று மாலதிகூட வியந்துபோனாள். 

“நீங்க இரண்டுபேரும் நினைக்கிறது எனக்குப் புரியும்… சும்மா சினிமாவுல வர்றமாதிரி ரொம்ப சென்டி மெண்டலா நான் மாற விரும்பலே… தவறுகள் வாழ்க்கை யில் தவறாமல் நடப்பவை… அதுக்காக கோபுவின் வாழ்க்கையை இருட்டடிக்க நமக்கு யாருக்கும் உரிமை யில்லை… சரிதானே?” சாந்தி நிறுத்தினாள். 

கோபுவுக்கு அவ்வளவாக எதுவும் புரியவில்லை. பிரபுவுக்கும் மாலதிக்கும் கோபுவுக்குப் புரிந்ததைவிட அந்த நேரத்தில் புரிந்தது என்று சொல்ல முடியாது. 

“இனி என்ன செய்யணும் சாந்தி?” பிரபுதான் கேட்டார். 

“கோபுவை நம்ம வீட்டிலேயே வைச்சிக்கலாமே” என்றாள் சாந்தி, மாலதியைப் பார்த்துக்கொண்டே. 

“அது எப்படிங்க சரியா வரும்? உங்க இரண்டு குழந்தைகளும் இந்த சூழ்நிலையில் வளர்வதுதான் சரி… கோபுவை நான் இங்கே விடுவது சரியில்லை” மாலதி தீர்மானமாகவே சொல்லிவிட்டாள். 

“கோபுவை இங்கே கூட்டிவர என்ன காரணம் மாலதி?” என்று பிரபு நேரடியாகக் கேட்டார். 

“உங்களைப் போய்ப் பார்க்கணும். அப்பா யார்னு அவனுக்குத் தெரியணும்… அதுதான் என் விருப்பம். அது நிறைவேறிடிச்சு” மாலதியின் குரல் கம்மியது. 

“நாம எல்லோருமே யோசனை செய்து முடிவுக்கு வர வேண்டிய விவகாரம் இது… யாரும் அவசரப்படாம இருந்தால் நல்லது” சாந்தி மற்ற இருவரையும் வேண்டிக் கொண்டாள். 

“சாந்தி இத்தனை நாளா எனக்கு ஆதரவாக இருந்தீங்க… இப்பவும் இருக்கீங்க… இது நான் செய்த பூர்வஜன்மப் பலன்” என்று மாலதி சாந்தியின் கையைப் பிடித்துக்கொண்டாள். 

“பிரபுவின் வாழ்க்கையில் இனி உனக்குப் பங்கு இல்லை என்பது நான் சொல்லியா உனக்குத் தெரியணும் மாலதி… கோபுவின் வாழ்க்கையில் பிரபுவுக்கு பங்குண்டு என்பதுதானே முக்கியம்” சாந்தி பிரபுவைப் பார்த்தாள். 

“யோசனை செய்வோம்” என்று பிரபு ஒப்புக் கொண்டார். 

மாலதி கோபுவின் கையைப் பிடித்துக்கொண்டே எழுந்தாள். “நாங்க வந்து பிறகு பார்க்கிறோம்” என்று விடை பெற்றுக் கொண்டாள். போகும்போது கோபு பிரபுவை ஒருமுறைத் திரும்பிப் பார்த்தான். அது அவருடைய இதயத்தை மெல்ல ஒருமுறை வருடியது. தலையைக் குனிந்துகொண்டார். 

அவர்கள் போனதும் சாந்தியிடம் பேசத் தொடங்கினார்.  

“உனக்கு மாலதியை எத்தனை காலமாகத் தெரியும்?” 

“போன நாலு வருஷமாகத் தெரியும்.” 

“ஏன் இத்தனை வருஷமா என்கிட்ட சொல்லலே?”

“எனக்கே அதிகமான குழப்பமாக இருந்தது. எப்படித் தீர்மானிக்கலாம் என்பதை நான் புரிந்துகொள்ள நாலு வருஷம், நரக வாழ்க்கையை நான் அனுபவித்தேன்” சாந்தி ஒப்புக்கொண்டாள். 

“என்னிடம் சொல்லியிருந்தா நல்லாயிருந்திருக்கும்.”

“நீங்களும் என்னுடன் குழம்பின உலகில் வந்து அதிகக் குழப்பம் கூடியிருக்கும். இப்போதும் உங்களுக்குக் குழப்பம் குறைந்த பாடில்லையே!” என்றாள் சாந்தி. சாந்தி மனதில் பட்டதைப் பேசாமல் இருந்ததே இல்லை. அன்றும் அப்படித்தான். 

“நீ சொல்வது உண்மைதான் சாந்தி” என்று அவளைப் பார்த்துக்கொண்டே சொன்னார். “உன் கணவனாகப் பேசாமல், ஒரு மனிதனாகப் பேசும்போது உனக்கு நான் மிகவும் நன்றி சொல்ல வேண்டும்” என்றார் பிரபு. 

“திருமணம் நட்பில் தொடங்கி நட்பில் நம் வாழ்க்கைத் தொடர வேண்டும் என்று நான் உங்களை நண்பராகவும் ஏற்றுக் கொண்டேன். நண்பருக்கு என்னால் செய்யக்கூடியதைச் செய்தேன். அவ்வளவு தான்” சாந்தியின் அழுத்தமான தத்துவம் எவ்வளவு அற்புதமானது. மணவாழ்க்கைக்கு அடிப்படை நட்பு! 

“அப்ப நான் புறப்படுகிறேன் சாந்தி… மாலையில் பார்க்கலாம்.” 

“அதிக நேரம் இன்னக்கி வேலை செய்யாதீங்க… உங்களுக்கு ரெஸ்ட் வேணும்” என்று சிரித்தபடி விடை கொடுத்தனுப்பினாள் சாந்தி. 


ஆராய்ச்சி அறைக்கு காரை ஓட்டிக்கொண்டிருந்த பிரபுவுக்கு சில விசித்திரமான எண்ணங்கள் தோன்றின. ஆண் பெண் காதல், உறவு இவை பற்றியெல்லாம் தீவிரமாகச் சிந்தித்தார். பி.எச்டி. பட்டப் படிப்பின்போது மாலதியைச் சந்தித்தது, அவளுடன் பழகியது எல்லாம் பிரபுவுக்கு மனத் திரையில் ஓடிய காட்சிகள். சாந்தியை மணம் செய்துகொண்டு வாழும் வாழ்க்கையில் ஒருவித திருப்தி இருந்தது. மாலதியுடன் அளவைத் தாண்டி பழக வேண்டும் என்று ஆவேசம் இல்லாவிட்டாலும், இருவரும் விரும்பிப் பழகியதில் இயற்கையான துடிப்பு இருந்தது. அது மட்டும் இல்லாமலிருந்தாள்.. கோபு வந்திருப்பானா? திட்டம் போட்ட திருமணம் நடக்கவில்லை. திட்டம் போடாதது நடந்துவிட்டது. இப்போது ஒன்பது வயது என்று வளர்ந்துவிட்டது! 

ஆண் இனத்தின் ஆண்மையை விஞ்ஞானத்தால் கட்டுப்படுத்த முடியுமானால் எப்படி இருக்கும்? அதிக தொல்லைகள் வராதே? ஒரு குரூரமான எண்ணம் தேவையில்லாத குழந்தைகள் பிறக்காதே! மனத்தைக் கட்டுப்படுத்த முடியாத மனிதன் அறிவால், அறிவியலால் உடலைக் கட்டுப்படுத்துவது இயற்கைக்குப் புறம்பானதா? அந்த நேரத்தில் பிரபுவுக்கு ‘புறம்பில்லை’ என்பதே சரியான பதிலாகத் தோன்றியது. 

அவருடைய எண்ணம் ஆராய்ச்சி அறையில் ஒரு கூண்டிலிருந்த ஆண் எலிகளை நோக்கி ஓடியது. காரை இன்னும் விரைவாக ஓட்ட ஆரம்பித்தார். 


பிரபு தன் அறைக்குள் போய் சில நிமிடங்களில் ‘ஆராய்ச்சி அறைக்குப் போகிறேன்’ என்று பானுவிடம் சொல்லிவிட்டு ஓட்டமும் நடையுமாக விரைந்தார். 

அங்கே பாலு, சாலமன் எப்போதும் போல் வேலையில் கவனமாய் இருந்தனர். 

“குட் மார்னிங் பாலு, சாலமன்” என்ற உற்சாகமான குரல் வந்த திசையில் அவர்கள் பார்த்தபோது, பிரபு பதிலுக்குக் காத்திராமல் எலிக் கூண்டுகள் இருந்த பக்கம் போய்க் கொண்டிருந்தார். 

பாலுவும் சாலமனும் அங்கே விரைந்தனர். பிரபு என்ன எதிர்பார்த்தாரோ அது நடந்திருக்கிறதா என்பதை அவர்களும் அறிந்துகொள்ள விரும்பினார்கள். 

இரண்டு எலிக்கூண்டுகளையும் கவனமாகப் பரிசோதித் தார். எண்ணிக்கைகள் சரியாக இருந்தன. ‘மேலதயான்’ கொடுக்கப்படாத ஆண் எலிகள் இருந்த கூண்டு அவருடைய கவனத்தைக் கவர்ந்தது. அவை ஆரோக்கியமாக இருந்தன. எடை குறையாமலிருந்தன. அருகிலிருந்த பெண் எலி களிடமிருந்து டெஸ்டுக்காகக் கொஞ்சம் ‘சாம்பிள்’களை எடுத்துக்கொண்டார். அவை கருத்தரித்திருக்கின்றனவா என்பதை அறிந்துகொள்ள டெஸ்டுகளைச் செய்யுமாறு பாலுவிடம் ‘சாம்பிள்’களைத் தந்தார். 

மற்றொரு கூண்டிலிருந்த, ‘மேலதயான்’ கொடுக்கப் பட்ட ஆண் எலிகள் சோர்வுற்றவையாக இல்லாவிடினும், அவைகளின் எடை குறைந்து இருந்தது. அவைகளில் ஒன்று இறந்து போனதாக “டெக்னிஷியன்’ ஏற்கெனவே ரிப்போர்ட் வைத்திருந்தான். அருகிலிருந்த பெண் எலிகளிடமிருந்து முன்போலவே ‘சாம்பிள்’களை எடுத்தார். சாலமனிடம் தந்து என்ன டெஸ்டுகள் வேண்டும் என்று விவரித்தார். 

பாலு, சாலமன் இருவரும் போனதும், வழக்கமான கனமான புத்தகத்தில் குறிப்புகளை எழுதிக் கொண்டார். ஆராய்ச்சி அறையில் ஒரு ‘ரவுண்டு’ போய்விட்டு, தன் அறைக்குப் போய் கம்ப்யூட்டரைத் தட்டினார். மேலும் சில குறிப்புகளை ‘மேலதயான்’ ஆராய்ச்சி பக்கங்களில் சேர்த்தார். அதை ஒரு ‘பிரிண்ட்’ எடுத்துப் படித்துக் கொண்டிருந்தபோது அவருடைய போன் அலறியது. 

“டாக்டர் பிரபு பேசறேன்” என்றார். 

“என்னங்க…மாலதியை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கு. உடனே நீங்க அங்கே வரணும்” சாந்தி விவரத்தைச் சொன்னதும் பிரபுவுக்கு கைகால் ஓடவில்லை. சில நிமிடங்கள் யோசனை செய்தார். தன் குறிப்புப் புத்தகம், பை எல்லாவற்றையும் மேசையிலேயே வைத்துவிட்டு, பானுவைக் கூப்பிட்டார். 

“பானு நான் அவசரமாக வெளியே போகணும். இதையெல்லாம் கவனமா உள்ளே வைச்சிரு” என்று வெளியே புயலென ஓடினார். 

பானு அவருடைய மேசையிலிருந்த தாள்களை ஒழுங்குபடுத்தினாள். எல்லாவற்றையும் பையில் வைத்து காபினட்டுக்குள் பூட்டினாள். பிறகு வெளியே தன் இருப்பிடம் போய் வேலையைக் கவனித்தாள். 

பாலுவும், சாலமனும் உள்ளே நுழைந்தனர். 

“பானு, டாக்டர் பிரபு கேட்ட டெஸ்ட் ரிசல்டுகள் வந்தாயிற்று… கொடுக்கலாமா?” என்றான் பாலு. 

“அவர் ஏதோ எமர்ஜன்ஸின்னு போயிட்டார். எப்போது திரும்புவார்னு தெரியாது.” 

“உள்ளே வைச்சிடலாமா… இதுகூட ஒரு சின்ன ரிப்போர்ட் எழுதணும்…” என்றான் சாலமன். 

“சரி… வேலை முடிஞ்சதும் சொல்லுங்க என்று பானு மீண்டும் தன் வேலையில் கவனம் செலுத்தினாள். உள்ளே பிரபுவின் மேசை துப்புரவாக இருந்தது. பாலு சாலமனைப் பார்க்க சாலமன் அங்கிருந்த கம்ப் யூட்டரையே கண் கொட்டாமல் பார்த்திருந்தான். கம்ப்யூட்டர் திரையில் எழுத்துக்கள் சாலமனை ‘வா வா’ என்று அழைத்தன. அருகே போன சாலமனின் வாய் தானாகத் திறந்துகொண்டது. 

பாலுவை சைகை செய்து கூப்பிட்டான். 

பாலுவும் சத்தம் எழுப்பாமல் கம்ப்யூட்டர் திரையி சாலமன் கம்ப்யூட்டர் டிஸ்கை வெளியே எடுத்தான். லிருந்தவற்றைப் படித்தான். அவன் முகமும் மலர்ந்தது. கம்ப்யூட்டரை நிறுத்திவிட்டு இருவரும் வெளியே புறப்படும்போது, பாலு டெஸ்ட் ரிசல்ட்டுகள் எழுதப்பட் டிருந்த தாள்களை மேசையின் மீது வைத்தான். 

“பானு.. நாங்க வர்றோம். டாக்டர் பிரபு வந்ததும் ஏதாவது கேள்விகள் இருந்தால் எங்களைக் கூப்பிடச் சொல்” என்று நிதானமாகச் சொல்லிவிட்டு சாலமன் நகர்ந்தான். பாலு பின்னாலேயே நகர்ந்தான். 


“பிரபுவும் இல்லை… இப்போ எதுக்கு ஆராய்ச்சி அறைக்குப் போகணும்?” என்றான் பாலு. 

“நேராக ரங்கதுரைக்கு போன் செய்ய வேண்டியது தானேன்னு சொல்றியா?” சாலமன் சிரித்தான். 

“நான் சொல்லித்தான் உனக்குத் தெரியணுமா வாத்தியாரே?” பாலு ‘வாத்தியார்’ போட்டுப் பேசினால் அவனுக்கு ‘எக்ஸைட்மெண்ட்’ அதிகம் என்று பொருள். 

சாலமன் கம்ப்யூட்டர் டிஸ்கை வெளியே எடுத்தான். “எல்லாம் இதிலே இருக்கு. பிரபு ஆபீஸ் திரும்பியதும் இதைத் தேடுவான். காபினட்டில் இருக்கிறதென்று நினைப்பான். அப்புறம்தானே தெரியும் அவன் முகம் எப்படி மாறப் போகுதுன்னு” கடகடவென்று சாலமன் சிரித்த சிரிப்பு பாலுவுக்கு வேடிக்கையாக இருந்தது. 

“அப்படின்னா இதைத் திருப்பி பிரபுவின் அறையில் வைக்க வேண்டாமா?” பாலுவின் வெகுளித்தனம் வெளியே வந்தது. 

“எங்க அப்பா குதிருக்குள்ளே இல்லைன்னு சொல்லணுமா?” மீண்டும் சாலமன் சிரித்தான். 

இருவரும் கட்டடத்துக்கு வெளியே வந்து அடுத்தத் தெருவிலிருந்த கடையிலிருந்து போன் செய்தான் சாலமன். கடையிலிருந்த கசமுச கூட்டத்தில் கடைக்காரன் இவர்கள் யாருக்குப் போன் செய்கிறார்கள் என்பதை கவனிக்கவில்லை. 

“ரங்கதுரை நம்மளை மூணு மணிக்கு வரச் சொல்லி யிருக்கிறார்” என்று மற்ற விவரங்களை பாலுவுக்குச் சொல்லிக்கொண்டே சாலமன் நடந்தான். 


பாலுவும் சாலமனும் ரங்கதுரை சொன்ன ஒரு தெருவில் காத்திருந்தார்கள். மூணேகால் மணிக்கு ரங்கதுரையின் கார் வந்து நின்றவுடன் அவர்கள் அதில் ஏறினார்கள். 

“நேராக வீட்டுக்கே போயிடு” என்று டிரைவரிடம் ரங்கதுரை சொன்னதும் கார் புறப்பட்டது. 

காரில் ரங்கதுரை எதுவும் பேசவில்லை. பாலுவும் சாலமனும் ஒருவரை யொருவர் பலமுறை பார்த்துக் கொண்டார்கள். ‘இந்த ஆள் அழுத்தமானவன்தான்’ என்பது அவர்கள் கண் பார்வைக்குப் பொருள். 

வீடு வந்து சேர்ந்ததும், “நீ இன்னும் ஒரு மணி கழித்து வந்தா போதும்” என்று டிரைவரை அனுப்பிவிட்டார் ரங்கதுரை. 

“வாங்க டாக்டர்களே… இப்படி உட்காருங்க… என்ன குடிக்கறீங்க?” என்று கேட்டுவிட்டு, உடனே “காபியா, டீயா, கூல் டிரிங் ஏதாவது?” என்றார். ‘என்ன’ குடிக்கிறீங்கன்னு கேட்டதுமே அமைச்சர் வீட்டிலே விஸ்கி, ரம், ஜின் அப்படின்னு அடுக்கி இருப்பாங்கன்னு கேட்டுட்டா என்ன செய்யறது’ இந்த எண்ணத்துடன் ரங்கதுரை பேசியது சாலமனுக்குப் புரிந்தது. 

“எனக்கு காப்பி” என்றான் சாலமன் சிரித்துக் கொண்டே. 

“எனக்குந்தான்” பாலுவும் வழக்கம்போல் சேர்ந்து கொண்டான். 

மணியைத் தட்டிய ரங்கதுரை, ஆள் வந்ததும்- 

“மூணு காப்பி… ஏ ஒன்னா இருக்கணும்… அப்படியே பலகாரம்… சரியா..” என்று சொல்லி அனுப்பினார். 

“டாக்டர்களே… அன்னிக்கே உங்களுக்கு ஓட்டலிலே ஒண்ணும் வாங்கித் தரலேன்னு வருத்தப்பட்டேன். அவசரமாகப் போக வேண்டி இருந்தது.” 

“அதனாலென்ன மிஸ்டர் ரங்கதுரை” என்றான் சாலமன். 

“சரி..என்னென்ன விவரங்கள் கொண்டு வந்தீங்க?”

“நிறைய விவரங்கள் உண்டு. ‘மேலதயான்’ உணவில் கொடுக்கப்படுகிற எலிகள்-அதாவது ஒரு கிலோகிராம் எடைக்கு 5000 மில்லிகிராம் அளவு மருந்துன்னு உயிருக்கு ஆபத்தில்லாமல் இருக்கின்றன. ஆனால் எடை குறைகிறது. வளர்ச்சி குறைகிறது. இதுபோல் மற்ற விலங்குகளுக்கும் என்னென்ன அளவு எந்த விளைவுகளை உண்டாக்கும்னு எல்லா விவரமும் இதில் இருக்கிறது” என்று பாலு சில தாள்களைக் கொடுத்தான். 

“முக்கியமாக, விவசாயிகளுக்கு இதைப் பயன் படுத்தும்போது கெடுதல் நேருமா?” ரங்கதுரை குறிப்பாகக் கேட்டார். 

“எந்த விதமான நோயும் ஏற்படாது. ஆனால் ஆண் களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” சாலமன் விளக்கினான். 

“டாக்டர் பிரபுவும் இதையேதான் எதிர்பார்க்கிறார்” பாலு குறுக்கிட்டான். 

“பிரபு இதை வைத்து மேலே என்ன ஆராய்ச்சியைத் தொடரப் போகிறார்? உங்களால் அறிந்துகொள்ள முடிந்ததா?” 

“நிறைய தெரியவில்லை. அவர் ஆராய்ச்சிக் குறிப்புகள் நிறைய இந்த கம்ப்யூட்டர் டிஸ்கில் இருக் கின்றன. இதை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்தால் நமக்குப் பயன்படும்” என்று சாலமன் அதை அவரிடம் நீட்டினான். 

“நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் இருவரும் இப்போது எனக்கு செய்த உதவியை நான் மறக்க மாட்டேன்” என்று அவர் சொல்லி முடிக்கவும் காப்பி, பலகாரம் வரவும் சரியாக இருந்தது. 

மேலும் அரை மணிநேரம் ரங்கதுரையிடம் பேசி விட்டு சாலமனும் பாலுவும் புறப்பட்டனர். அவர்கள் போன கார் தெருவில் மறைந்ததும் ரங்கதுரை வீட்டுக்குள் நுழைந்து போனை எடுத்தார். அடுத்த பக்க ஓர் ஆண்குரல் கேட்டது. 

“நான் சொன்னதெல்லாம் நினைவி சரியான அளவு போட வேண்டும். தினமு தாராளமாகக் கொடுக்க வேண்டும். கவனம் இதையே அடுத்த மூன்று முறையும் போன்ெ வேறு ஆட்களிடம் சொன்னார் ரங்கது முகத்தில் அலாதியான திருப்தி ஏற்பட்டது.

– தொடரும்…

– கல்கி வார இதழ் 14.5.1995 ல் தொடங்கி 30.7.1995 வரை பன்னிரண்டு இதழ்களில் தொடராக வந்தது.

– மாண்புமிகு கம்சன் (விஞ்ஞான நாவல்), முதற்பதிப்பு: 2014, வானதி பதிப்பகம், சென்னை.

பிறப்பு: உத்திரன்மேரூர், தமிழ்நாடு வசிப்பு: வாஷிங்டன் டி.சி. அருகில் விழுப்புரத்தில் உயர்நிலைப்பள்ளி முடித்துவிட்டு, சென்னை விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டங்கள் பெற்றபின், அமெரிக்கா சென்று கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் வேதியிலில்முனைவர் பட்டம் பெற்றார். ஐந்து ஆண்டுகள் வேதியியலில் ஆராய்ச்சி முடிந்தபின், பால்டிமோர் வட்டாரத்தில்கல்லூரியிலும் பல்கலைக் கழகத்திலும் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன்வேலை ஓய்வு பெற்றார். வாஷிங்டன் - பால்டிமோர் வட்டாரத் தமிழச்சங்கத்தின் பொறுப்புகள் ஏற்று, பிறகு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *