கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 11, 2020
பார்வையிட்டோர்: 8,088 
 

சாவு

சாலையோரத்தில் ஒரு மாமரம். மாமரத்தடியில் ஒரு குளம். குளக்கரையில் ஒருவன் விழுந்து இறந்து கிடந்தான். வியாதியில்லை, வெக்கையில்லை. கைகள் முஷ்டித்திருந்தன. சாவைத் திடீரென்று சந்தித்த பயங்கரத்தில், கண்கள் ஆகாயத்தை அண்ணாந்து நிலைகுத்திப் போயிருந்தன. வாழ்க்கையின் முழு நம்பிக்கையை அந்த வாழ்க்கையின் முடிவு முறியடித்த கோரக் களை முகத்தில் கூத்தாடியது.

போகப் போக, ஒரு காகம் பறந்து வந்து நெற்றியில் உட்கார்ந்து கண்ணைக் கொத்த முயன்றது. பின்னாலேயே ஈக்கூட்டங்களும் எறும்புச் சாரிகளும் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மூக்கிலும் வாயிலும் காதிலும் மொய்க்கத் தலைப் பட்டன. அவன் மார்பில் நிழல் தட்டியது. காகம் மேல் நோக்கி, “கா” என்று கத்திக்கொண்டு பறந்தது. மேலே ஒரு பருந்து, இரவு போன்ற இறகுகளை அடிக்காது விரித்து, ஆகாயத்தில் செங்குத்தாய் நீந்திக்கொண்டிருந்தது.

அவன் தன் சாவுக்குத் தயாராக இல்லாவிட்டாலும், மற்ற ஜீவராசிகள் அவன் மரணத்துக்குத் தயாராயிருந்தன. அவை களுக்கு அவன் வாழ்வில் நம்பிக்கையில்லை. அவைகள் நாசமும் நசிப்பும் தவிர, வேறு எதுவும் அறியமாட்டா. ஆகையால், அவைகள் அவனை அழிக்க ஆரம்பித்துவிட்டன.

ஆனால், அதற்குள் சாலையில் நடமாட்டம் ஏற்பட்டது. முதலில் ஒருவன் வந்து பார்த்துவிட்டு உளறியடித்துக் கொண்டு ஓடி ஒன்பது பேரைக் கூட்டி வந்தான். எல்லாரும் அவனைச் சுற்றி நின்று அவன் இறந்த மர்மத்தை அறிய முயன்றார்கள். ஆயினும் அங்கேயுள்ள புல்லும் பூண்டும், புள்ளினங்களும் தவிர வேறு யார் அதை விளக்க முடியும்?

பிறகு, அந்தப் பிணத்தைத் தூக்கிக்கொண்டு போய் விட்டார்கள். இடம் மறுபடியும் வெறிச்சென்று போயிற்று.
கேலியில் நகைப்பதுபோல், பட்சிகள் க்றீச்சிட்டன. இலைகள் ஒசையிட்டன. ஆனாலும், இளங்காற்று அந்த மாமரத்தை ஊடுருவுகையில், அதனின்று ஒரு பெருமூச்சு கிளம்பியது. மற்ற ஓசை எல்லாம் அச்சங்கண்டு அடங்கியது.

ஏனென்றால், அந்த மனிதன் இறந்த உண்மையான காரணத்தை அந்த மரம்தான் அறியும்.

பிறப்பு

அந்த மாமரத்தில்தான் எத்தனை கிளைகள், எத்தனை இலைகள், எத்தனை காய்கள்! அம் “மா” பெரிய அம்மா”தான். பெருங்கிளைகள் அதன் குழந்தைகள். சிறு கிளைகளும் கிளையின் கிளைகளும் இலைகளும், பெரிய பேரன், சின்னப் பேரன், கொள்ளுப் பேரன்மார்களாகும். காய்களும், கனிகளும், பெண்களும், பெரிய பேத்திகளும், சின்னப் பேத்திகளும், கொள்ளுப் பேத்திகளுமாகும்.

அது வாழ்க்கையில் மிகவும் அடிபட்டிருக்கிறது. இது வரையில் எத்தனைபேர் எத்தனை கிளைகளை வெட்டிக் கொண்டு போயிருப்பார்கள்! உடலையே சீவுவதுபோல், அதன் பட்டையை உரித்துக்கொண்டு போயிருப்பார்கள்! எத்தனை பேர் அதன் பழங்களைப் பறித்துத் தின்றுவிட்டு, சப்பிய கொட்டைகளை அடிமரத்தின் மேலேயே லொட்டு லொட்டென அடித்துவிட்டுப் போயிருப்பார்கள்!

ஒருவேளை அந்தக் குளமே, அந்த மரம் இரவில் வருஷக் கணக்காய் உதிர்த்த கண்ணிரின் தேக்கந்தானோ என்னவோ! சகல சுக துக்கங்களையும் அநுபவித்துத் தேர்ந்து, வாழ்க்கையை ஒரு தினுசாய் முடிவுகட்டி, கட்டுச் சரிந்து பழுத்த சுமங்கலி போல் இருந்தது அம்மா. அதற்கு நன்றாய்த் தெரியும், பிறக்கப் பிறக்க அழிவு. அதேமாதிரி, அழிய அழியப் பிறப்பு உண்டு என்று. ஆகையால், அதன் இலைகளும் காய்களும் கல்லின் அடிபட்டோ, காலத்தின் மூப்பேறியோ உதிர உதிர, அது இன்னமும் புஷ்பித்துக் கொண்டுதானிருந்தது. வாழ்க்கையில் அது கண்டது இதுதான். அது உளுத்தோ, புரையோடியோ, வெட்டி விறகாயடுக்கும் வரையில் அப்படித்தான் செய்து கொண்டிருக்கும்.

ஆகையால், கனதுாரத்திலிருந்து கேட்கும் தந்திநாதம் போல், காற்றில் மிதந்துவரும் மகரந்தப் பொடிகளை அதன் பூக்கள் ஏற்க மறுக்கவில்லை. மகவே பெறாதிருந்தால் இளமை மாறாதென்று தங்களைத் தாங்களே ஏய்த்துக் கொள்ளும் மாந்தரைப்போல் இல்லை அவை.

ஆகவே அதன் பல பூக்களில் ஒரு பூ வயிற்றில் ஒரு வித்தை வாங்கிக்கொண்டு, கருத்தரித்துக் காயாயிற்று. நான்கு இலைகள், தங்களுடைய அருமைத் தங்கையைப் பையன்களின் கண்ணும் பறவைகளின் பார்வையும் படாமல் மூடிக் காத்தன. அவள் வெகு அழகாயிருந்தாள். நாளடைவில், மணவறையில் மணமகளின் கன்னங்கள் போல், அவள் முகம் சிவக்க ஆரம்பித்தது.

ராஜாளி தன் சிறகுகளை விரித்துக்கொண்டு பாறையி னின்று எழுவதுபோல், காலை வேளையில் கதிரவன் தன் கிரணங்களை வீசிக்கொண்டு கிளம்புகையில், அவளைப் பார்த்துப் புன்னகை புரிந்து விளையாட்டாய் ஒரு கிரணத்தை அவள் மேல் பாய்ச்சுவான். அந்தச் சமயத்தில் அவள் ஒரே தங்கமயமாய்விடுவாள்.

வேளை முதிர முதிர, தன் பச்சையையும், தன் அண்ணன்மார் பச்சையையும் தோற்கடிக்கும் வானத்தின் முழு நீலத்தைக் கண்டு அவள் அதிசயிப்பாள்.

மாலை வேளையில், மேகங்கள் வானில் விதம் விதமாய்க் கூடுவதைக் கண்டு அவள் வியப்பாள்.

இரவின் பனியில் அவள் குளிப்பாள். நடுநிசியில் இலைகளைச் சலசலத்துக்கொண்டு மரங்கள் ஒன்றுடன் ஒன்று அளவளாவுவதை அவள் கவனிப்பாள். மின்மினிகள் செடிக்குச் செடி சென்று வம்படிப்பதையும் அவள் கண்டு களிப்பாள். காலாகாலத்தில் அவள் பக்குவமடைந்தாள்.

வேட்கை

“என்ன? ஏது? எதனால்?- என்ற கேள்விகளெல்லாம் உதிக்க ஆரம்பித்துவிட்டன.

ஒரு பையன் அவளுக்கு இரண்டு மூன்று கிளைகளுக் கப்பாலுள்ள ஒரு காயைக் கல்லாலடித்து வீழ்த்தினான்.

ஏன்?

இரண்டு காகங்கள் ஒரு கிளையின்மேல் “கா கா என்று கத்திக்கொண்டு சிறகுகள் உதிரச் சண்டையிட்டுக்கொண்டிருந்தன.

எதனால்?

ஒரு நாள் மரத்தடியில் இறக்கை யொடிந்து கீழே விழுந்த ஒரு காகத்தை, அதன் சிதைவு காணச் சகிக்காமல், பத்து காகங்கள் ஒன்று சேர்ந்து கொத்திக் கத்திக் கொண்டிருந்தன.

எதனால்?

பின்னும் ஒரு நாள், மரத்தடியில் உச்சி வேளையில், இரண்டு பாம்புகள் ஒன்றுடன் ஒன்று யோகியின் யோக தண்டம் போல் பின்னிக்கொண்டு, தலையை மாத்திரம் எதிரெதிரே நிமிர்த்திக்கொண்டு, கண்களில் பச்சைக் குரூரம் கொதிக்க ஒன்றையொன்று ஒறுத்து நோக்கின.

ஏனோ?

திடீரென்று இன்னதென்று புரியாமல் எள்ளளவும் சகிக்க இயலாத ஒரு வேதனை அவளைத் தாக்கியது. அதன் வேகத்தில் அவள் உடலே குலுங்கியது. உயிரே போய்விடும் போலிருந்தது ஆனால் போகவில்லை. உள் உறுத்தல் மாத்திரம் தாங்க முடியவில்லை. இதுவரை பத்திரமாயிருந்துவிட்டு, இப்போது ஏதோ காலைவாரி விட்டாற்போலிருந்தது. இருந்த இடத்திலிருந்து, மரத்தின் ஆணிவேராகிய தன் பாட்டிக்குத் தந்தியனுப்பி னாள்- பேசுவது வேறு பாஷையானாலும், மனிதனிலிருந்து மரம் வரை மனத்தின் பாஷை ஒன்றுதானே!

“மகளே! உனக்கு வேளை நெருங்கிவிட்டது. நான் என்ன செய்வேன்! உன் நாளை எண்ண வேண்டியதுதான். உன் பலிக்கு உகந்த பாத்திரம் வருவது உன் அதிருஷ்டம்” என்ற நம்பிக்கையற்ற சேதியைப் பாட்டி பதிலாயனுப்பினாள்.

ஆகையால், தான் பலியாகும் நாளில் தன் வேதனை தீர்ந்துவிடும் என்று அந்தக் கனி நம்பிச் சகித்துக்கொண்டு காத்திருந்தாள்.

பலி

சிறு மேகங்கள் பருதியை விழுங்கின. பெரு மேகங்கள் சிறு மேகங்களை விழுங்கின. வானம் ஒரு சமயம் எல்லா மேகங்களையும் சிதற அடித்துவிட்டு, நடுவெயிலில் தன் முழு நீலத்தை மின்னிக்கொண்டிருந்தது.

அந்த முழுநீலத்தினின்று ஒரு சிவப்புப் புள்ளி புறப்பட்டதை அம் மாங்கனி கவனித்தது. கவனிக்கையிலேயே, அதன் குடல் சிலிர்த்தது. மஞ்சள் ஏறிய சிவப்பு அதன்மேல் படர்ந்தது. ஆனாலும், அது அருண ஜாலமாயுமிருக்கலாம்.

கவனிலிருந்து எறிந்த கல்போல், அந்தச் செம்புள்ளி வான முகட்டிலிருந்து கீழிறங்கி வருகையிலேயே பச்சை, மஞ்சள், வெள்ளை, ஊதா என்ற வர்ணங்கள் அதை ஊடுருவி, கடைசியில் ஐந்து வர்ணங்களும் தோய்ந்த பஞ்சவர்ணக் கிளியாய் மரத்தின்மேல் வந்து அமர்ந்தது.

கிளியின் கத்திபோன்ற நீண்ட வால் கீழிலைகளில் இடித்தது. கொடுக்கரிவாளையொத்த தன் மூக்கை இருமுறை தான் அமர்ந்த கிளையில் தீட்டி, தன்னைச் சுற்றி ஒரு முறை நோக்கியது.

காலம் வந்துவிட்டது. அது நுழையும் வேகத்தில் காற்று அடித்து, மாங்கனியை மூடிய இலைகள் ஆடின. அதன் மறைவு குலைந்தது. நடுநிசியில், நிக்ஹா”வின் முடிவில், வதுக்களி னிடையில் பிடித்த திரை விலகி, மணமகனின் பார்வைக்கு மணமகள் வெளிப்படுவதுபோல் மாங்கனியாள், தன் மன மகனின் திருஷ்டியில் பட்டுவிட்டாள். உள்ளத்தின் கிளர்ச்சியில், இதயமே வெடித்துவிடும் போலிருந்தது.

கிளி ‘கிறிச்’சென்று ஒருமுறை சத்தமிட்டு, இறக்கைகளை விரித்து ஒரு தாவு தாவி, மாங்கனியைத் தாங்கியிருந்த கிளைக்குப் பாய்ந்து அதன் கால்களினிடையிலும் இடுக்கியது. பஞ்சுபோன்ற அதன் மார்பு, பழத்தை அழுத்தியது. தன் சகோதரர்களின் பரிவான கவனத்தைத் தவிர வேறேதும் உணராத அந்தப் பழத்துக்கு இந்தப் பிடியின் பயங்கர இன்பத்தைச் சகிக்க முடியவில்லை. கிளியின் மூக்கு அதை ஒருமுறை இடந்தேடுவதுபோல் வருடியது. அச்சமயம் அதைச் சூழ்ந்த மகத்தான விபத்தில் மூழ்கி அதற்கு மூர்ச்சையே போட்டுவிடும் போலிருந்தது.

இதுதான் அநீதியென்று அது அறிந்தது என்றாலும், இந்த அநீதியேதான், அது பிறந்து வாழ்ந்து காத்திருந்த பலன் என்றும் கண்டது. இந்தப் பலனேதான் அதன் பயன் இந்தப் பயனேதான் அதன் பதவியும்.

மாங்கனியின் மார்ப் பக்கத்தில், கிளியின் மூக்கு அரிவாள் போல் விழுந்து கிழித்தது. சாறும் சதையும், ரத்தமும் ஊன்நீரும் போல் அதன் உடலெல்லாம் வழிந்தது. அதன் இதயத்தையே தேடித் தோண்டுவதுபோல, அந்தக் கனியைக் கிளி குடைந் தெடுத்தது. மரணாவஸ்தையில் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கையிலேயே, அதன் சத்தை அதன் காலன் உறிஞ்சிக்கொண் டிருக்கையிலேயே, அதன் உள்ளமாகிய கொட்டையின் முகடு வெளிவருவதை அந்தக் கனி கண்டது. அந்தக் கொட்டையினின்று ஒரு வண்டு மிரண்டு ஓடியது. அதன் உள்ளத்தைக் குடைந்தெடுத்த பூச்சி அதுதான்.

அந்தக் கணத்திலேயே கனியின் ஆவி பிரிந்து போயிற்று. அதன் சவம் கிளையினின்று நழுவித் தரையில் விழுந்தது.

தனக்குப் பலியாகி விடுவதற்கென்றே காத்திருந்த பழத்தை அநுபவித்த பிறகு, கிளி மரத்தினின்றும் பறந்து சென்று வானில் புள்ளியாய் மறைந்து போயிற்று.

# # #

சாலையோரத்தில் மாமரத்தடியில் நடந்து வந்த மனிதன் குளக்கரையில் தோல் சறுக்கி விழுந்து மாரடைப்பில் இறந்தான். அவன் இறந்த மர்மம் இதுதான்.

– ஜனனி (சிறுகதைத் தொகுதி), முதற்பதிப்பு ஜூன் 1992, திருநாவுக்கரசு தயாரிப்பு. நன்றி: https://www.projectmadurai.org

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *