மொழிபெயர்ப்பு : நான் கனடாவுக்கு வந்தபோது சந்தித்த முதல் எழுத்தாளர் David Bezmozgis. அது 15 வருடங்களுக்கு முன்பு. அவருக்கு அப்போ வயது 27. அவருடைய முதல் சிறுகதையே அதீதமான பாராட்டைப் பெற்றது. அவருக்கு மிகப்பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்று சொன்னேன். இன்று அவரைப் பிடிக்கமுடியாது. ஏராளமான பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுவிட்டார். அவருடைய சிறுகதை ஒன்றை அப்போது மொழிபெயர்த்தேன். பின்னர் அது காணாமல் போய்விட்டது. சமீபத்தில் எதையோ இணையத்தில் தேடியபோது நான் மொழிபெயர்த்த இந்தக் கதை தட்டுப்பட்டது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. 15 வருடங்களாக அது இணையத்தில் வாழ்ந்திருக்கிறது. இதுதான் கதை.
என்னுடையஅப்பா ஒரு வருடத்திற்கு மேலாக, பல இரவுகள் மருத்துவப் புத்தகங்களையும், அகராதிகளையும் வைத்துக் கொண்டு தன்னை சித்திரவதை செய்துவந்தார். சொக்கலட் தொழிற்சாலையில் நீண்ட பகலைக் கழித்துவிட்டு வந்த பிறகு தன்னுடைய படுக்கை அறையில் விளக்கை எரியவிடுவார்.
சமையலறையில் எங்களுடன் சூப் அருந்துவார். ஆனால் தன்னுடைய பிரதான உணவை ஆட்டம் போடும் ஒரு சோவியத் ஸ்டூலில் வைத்து எடுத்துக்கொண்டு படுக்கை அறைக்குப் போய்விடுவார். அவருடைய வேலை கடினமானது. அவருக்கு வயது ஐம்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. அவருடைய சொற்ப ஆங்கிலம் அவருக்கு கருவியாக இருப்பதற்கு பதில் எதிரியாக இருந்தது. லற்வியாவில் விளையாட்டுத் துறை அமைச்சரகப் பணியிலிருந்து விலகிய பிறகு என்னுடைய அப்பா பால்டிக் கரையோரத்தில் மஸாஜாளராக சனடோரியங்களில் வேலை பார்த்தார். அதற்கான ஒரு தராதரப் பத்திரம் அவருக்குத் தேவையாக இருக்கவில்லை. குறைந்தபட்ச பயிற்சியும், நெருக்கமான தொடர்புகளும் போதுமானதாக இருந்தன. ஆனால் புதிய நாட்டில் தராதரப் பத்திரம் பெறுவதற்கு அவர் சிக்கலான பல மருத்துவப் பெயர்களை மனனம் செய்யவேண்டி இருந்தது. அத்துடன் எட்டு மணி நேரப் பரீட்சையை வேற்று மொழியில் எழுதவேண்டும். பரீட்சையில் பாஸ் செய்தால் அவர் தனக்குச் சொந்தமாக ஒரு தொழிலை ஆரம்பிக்கலாம். சொக்கலட் தொழிற் சாலைப் பணி தவிர அவர் இத்தாலிய சனசமூக மையத்தில் தாதாக்களுக்கும், முதலாளிகளுக்கும் மஸாஜ் செய்தார். ஏழு அமெச்சூர் பாரம் தூக்குபவர்களுக்கு பயிற்சியளித்தார். அதில் கிடைத்த வருமானம் மெத்த குறைவு, ஆனால் தொடர்புகள் கிடைத்தன. சொந்தமான தொழில் தொடங்கினால் சில இத்தாலியர்களை தன்னுடைய பிசினஸுக்கு இழுக்கலாம் என்பது நிச்சயம். சரியான இடம் கிடைத்தால் கிழட்டு வயதான போலந்து யூதர்கள் கட்டாயம் வருவார்கள். இது நடந்த 1983வது வருடத்தில், ரஸ்யாவில் இருந்து குடியேறிய யூதர்கள், அரசியல் அகதிகள் என்ற வகை யில் நல்ல ஆதரவு இருந்தது. எங்கள் சரித்திரத்தை வைத்து பிழைத்துக் கொள்ளலாம்.
என்னுடைய அப்பா பரீட்சை எழுதும் அன்று காலை அம்மா ஒம்லட் செய்து அதோடு தக்காளியும் நறுக்கி வைத்தார். அப்பா அவசரமாக அதைச் சாப்பிட்டபடி தேநீரையும் விழுங்கிக் கொண்டிருந்தார். அவருடைய வெறும் பாதங்கள் ஒருவித சத்தத்தோடு செருப்புக்குள் போவதும் வருவதுமாக இருந்தன. நான் மூடிய அரங்கு உதைபந்தாட்ட தெரிவுகள் பற்றி கூறினேன். மயிர்வைத்த மஞ்சள் பந்து பற்றியும் சொன்னேன். அப்பா அரைவாசி ஒம்லட்டில் எழுந்து தண்ணீர் போக்கியில் வாந்தியெடுத்தார். ஒரு போருக்கு கிளம்புவதுபோல அப்பா உணர்ச்சியில்லாமல் எங்கள் குடியிருப்பை விட்டு புறப்பட்டார்.
திடீரென்று ஏற்பட்ட ஒரு அன்பு பிரவாகத்தில் அம்மா அவருக்கு ஒரு முத்தம் கொடுத்தார். அவர்கள் நடுக்கூடத்தில் இப்படி கட்டிப்பிடித்தனர்.
ஏனென்றால் வாசல் படியில் வைத்து முத்தம் கொடுப்பது நல்ல சகுனம் அல்ல. தரிப்பிடத்தில் இருந்து பிரம்மாண்டமான பச்சை பொண்டியாக்கை அவர் பின்னுக்கு எடுத்ததை நான் சன்னல் வழியாகப் பார்த்தேன். பங்குனி மாத இறுதி என்றபடியால் இன்னும் குளிர் இருந்தது. காரின் வெப்பக்கருவி வேலை செய்யவில்லை. அப்பா ஃபின்ச் சாலையில் திரும்பியபோது, அவருடைய உறைந்த மூச்சுக்காற்று நீளமாகப் பரவுவதை நானும் அம்மாவும் பார்த்துக்கொண்டிருந்தோம்.
“கடவுள் தயை, கடவுள் தயை’ என்று அம்மா சொன்னார்.
மூன்று வாரங்களுக்கு பின் பி.டி.எம்மில் இருந்து கடிதம் வந்தது.
சட்டம்போட்டு அலுவலகத்தில் மாட்டி வைக்கும் சான்றிதழ் பின்னால் வரும். எங்கள் குடியிருப்புக்கு கிட்ட உள்ள ஒரு வணிக வளாகத்தின் பின்னால் இருந்த உணவகத்தில் இந்த வெற்றியைக் கொண்டாடினோம்.
எங்கள் குடும்பத்தவர் சார்பாக நானே காளான், பெப்பரோனி போட்ட பெரிய பிட்ஸாவுக்கு ஆணை கொடுத்தேன். எங்கள் எதிர்கால வெற்றிக்காக சீறியடிக்கும் கோக்கை அருந்தினோம்.
அடுத்த வார இறுதியில் ஸன்னிபுரூக்கில் ஒரு அறை வாடகைப் பத்திரத்தில் அப்பா கையொப்பமிட்டார். இங்கேதான் நான் தலைமயிர் வெட்டுவதும், பலசரக்கு சாமான்கள் வாங்குவதும். ஸ்மோல்நெக் யூரி எண்பது டொலருக்கு பலமான, பித்தளை கரை வைத்த மேசை செய்து தந்தான். அதன் அரைவாசி விலைக்கு ஒரு சாதாரண மேசையை கிழக்கு தொங்கலில் அப்பா வாங்கினார். இரண்டு அலுவலக நாற்காலிகள் விலை ஒவ்வொன்றும் பத்து டொலர். இத்தாலிய சனசமூக மைய ஆள் ஒருவர் கொடுத்த அறிவுரையில் அப்பா ரீடர்ஸ் டைஜெஸ்டுக்கு ஒரு வருட சந்தா கட்டினார். ஒரு நல்ல மருத்துவ இடம் என்ற நம்பிக்கையை தருவதற்கு டாவென்போர்ட் என்ற இடத்திற்கு காரில் சென்று ஒரு பச்சை மூன்று மடிப்பு மறைப்பு தட்டியை வாங்கினோம். இறுதி அலங்காரங்கள் என் அம்மாவினால் செய்யப்பட்டன. ஒட்டும் எழுத்துக்களை வாங்கி கதவில் ரோமன் பேர்மன், மஸாஜ் மருத்துவர் என்று அம்மா ஒட்டி வைத்தார்.
ஆரம்பகால பரபரப்பு அடங்கியதும் உண்மையின் சொரூபம் மெள்ள வெளியே தெரிய ஆரம்பித்தது. சனசமூக மையத்தைச் சேர்ந்த சில இத்தாலியர்களையும், ரஸ்ய நண்பர்களையும் தவிர வேறு ஒருவருக்கும் ரோமன் பேர்மன் மஸாஜ் மருத்துவம் இருப்பது தெரியாது. தாஸ் கெண்டில் இருந்து வந்த போரி. கிராஸ்னஸ்கிதான் முதல் நோயாளி.
அவருடைய முதலாளி இதனால் ஏற்படும் சிறு செலவைத் தாங்கிக்கொள் வதாகச் சொல்லியிருந்தார்.
ஆனால் அதிலும் சிறு பிரச்சினை. என்னுடைய அப்பாவுக்கு போரிஸ் பெரும் உதவி செய்வதால் அப்பாவுக்குக் கிடைக்கும் பணத்தில் மூன்றில் ஒரு பங்கு லஞ்சமாகக் கேட்டார். உலர்ந்த சாமான்கள் விற்கும் ஜோகலாட்டி வீட்டில் செய்த மதுவகையுடன் வந்து தனக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கைப் பற்றிக் கூறுவார். ஜோவின் பேச்சில் ஆழமான இத்தாலிய உச்சரிப்பு தொனி இருக்கும். என்னுடைய அப்பாவின் ஆங்கிலம் மெதுவாக முன்னேறியது. மது முடியும்போது தான் மஸாஜ் வேலை முடிவுக்கு வரும்.
நேப்பிள்ஸிலிருந்து வந்த பாதி இளைப்பாறிய ஸால் அவருடைய மனைவியின் மச்சானுடன் வந்தார். சாரக்கட்டிலிருந்து விழுந்து அவர் மச்சானுக்கு காயம். அவருக்கு ஆங்கிலம் தெரியாது, காரோட்டவும் தெரியாது. ஸால் குற்றவுணர்வினால் மச்சானை சனிக்கிழமை பின்மதியங்களில் காரில் கூட்டி வருவார். மனைவிக்கு இதனால் சிறு ஓய்வு கிடைக்கும். என்னுடைய அப்பா மச்சானை மஸாஜ் பண்ணுவார். ஸால் தடுப்புக்கு அப்பால் உட்கார்ந்து ரீடர்ஸ் டைஜெஸ்ட்டை வாசித்தபடி இருப்பார்.
ஜோ, ஸால் போன்றவர்கள் நல்லெண்ணம் கொண்டவர்கள்- என் அப்பாவை அவர்களுக்கு பிடிக்கும்- ஆனால் சில தடவை வந்தபிறகு நின்றுவிட்டார்கள். சனசமூக மையத்தில் சூட்டுக் குளியலும் இன்னும் பல கவர்ச்சிகளும் இருந்ததுதான் காரணம். அப்பா வேலை செய்த இடத்தில் இப்போது இன்னொரு ரஸ்யர் வேலை செய்தார். எல்லோரும் அவர் என் அப்பா அளவு திறமையானவர் அல்ல என்று பேசிக்கொண்டார்கள்.
இருந்தாலும் என் அப்பாவின் நிலமைக்கு அது உதவவில்லை. சில நாட்களுக்கு பிறகு என் அப்பா சுவர்களைப் பார்த்துக் கொள்ளத் தொடங்கினார்.
இப்படி நடக்கும் என்ற பயத்தில் அப்பா சொக்கலட் தொழிற்சாலை வேலையை முற்றிலும் கைவிடவில்லை. இது அவரைப் பைத்தியமாக்கியது. ஆனாலும் வேறு என்ன செய்வது. அந்த வேலையை விட்டுவிட்டு இன்னொன்று தேடுவதிலும் அர்த்தமில்லை. அத்தோடு திரும்பவும் சமூக நலன் உதவி பெறுவது என்ற கேள்விக்கே இடமில்லை.
சொந்தக்காலில் நிற்கும் தகுதியை எட்டிப் பிடிக்க என் பெற்றோருக்கு இரண்டு வருடம் பிடித்தது. அதிலிருந்து கீழே இறங்க அவர்கள் தயாராயில்லை. அப்பா சொக்கலட் தொழிற்சாலையில் ஐந்து நாளும், வார இறுதியில் இரண்டு நாள் மஸாஜ் வேலை செய்யவும் முடிவெடுத்தார்.
மஸாஜ் வேலை ஒரு நியாயமான வருமானத்தை தரத்தொடங்கியதும் சொக்கலட் வேலையை விட்டுவிட்டு முழு நேர மஸாஜ் வேலையில் ஈடுபடுவார். அவருக்கு வந்த நோயாளிகள் மறையத் தொடங்கியதும் அப்பா சொக்கலட் தொழிற்சாலையை விடலாம் என்ற நம்பிக்கையை இழக்கத் தொடங்கினார். இந்த முடிவுகள், விவாதங்கள் எல்லாம் என்னிடம் இருந்து மறைக்கப் படவில்லை. எனக்கு ஒன்பது வயது. நான் அவர்களிடமிருந்து பல விடயங்களை மறைத்திருந்தேன். ஆனால் அவர்கள் எனக்கு முன்னால் வெளிப்படையாக விவாதிக்காத விடயங்களே இல்லை. சில வேளைகளில் என் அபிப்பிராயத்தைக்கூட கேட்டார்கள். இந்த நாட்டிற்கு அவர்கள் அந்நியர்கள். ஆனால் நான் ஒரு பையனாக மட்டும் இருந்தாலும் என்னுடைய அந்நியத்தன்மை குறைவானது என்று அவர்கள் கருதினார்கள். என்னுடைய அப்பாவின் மஸாஜ் தொழில் மெதுவாக ஓய்வுக்கு வந்து நின்றபோது, நண்பர்கள் சிலரின் புத்திமதிப்படி அப்பா ஒரு ராபியின் உதவியை நாடிச் சென்றார். இதற்கு முன்னும் பலர் அவர் உதவியை வேண்டியிருக்கிறார்கள். ஒரு வேலை தேட பீலிக்ஸ், ஒரு பழைய காரை விற்பதற்கு ஒலேக், ரோபிக்கும் ஏடாவும் கடன் உத்திரவாதக் கையொப்பம் பெறுவதற்கு. ரஸ்ய யூதர்களுக்கு இந்த ராபி விசேடமாக கருணை காட்டுபவர். உதவி பெறும் வாய்ப்பை அதிகமாக்க அப்பா என்னையும் அழைத்துச் சென்றார்.
ராபியின் முன்னிலையில் பளிச்சென்று தோன்றுவதற்காக அம்மா என் கால்சட்டையை இஸ்திரி செய்து, வெளுத்த கொல்ஃப் சேர்ட்டையும் எனக்கு அணிவித்திருந்தார். நானும் அப்பாவும் யாமுக்கி தரித்து, கைகளைப் பிடித்துக்கொண்டு அப்பாவின் அலுவலகத்திலிருந்து சமீபமாக உள்ள யூதக் கோயிலுக்கு நடந்தோம். இப்படி என்னுடைய அப்பாவின் அருகாமையில் இருக்கும் நேரம் எனக்கு அரிது – வழக்கமாக அப்பா ஏதாவது வேலை செய்துகொண்டிருப்பார் அல்லது வேலை இல்லையென்று வருத்தப்பட்டுக்கொண்டிருப்பார். நான் நடக்கும்போது அந்த மெளனத்தை கடகடவென்று என் பேச்சால் நிரப்பினேன்.
என்னுடைய மூன்றாவது வகுப்புத் திட்டங்களை, கோடை காலத்து உதை பந்தாட்டக் குழுவில் எடுபடுவதுபோன்ற விவரங்களைக் கூறினேன்.
ஜூன் மாதத்து வெப்பமான ஞாயிறு அது. போகும் வழியில் தென்பட்ட பலருக்கும் – வீட்டுத் தோட்டத்தில் காணப்பட்ட ஆண்கள், கடைச் சாமான்களைக் காவிச் செல்லும் பெண்கள், பியூக் கார்களில் மிதந்து செல்லும் இளைப்பாறியவர்கள், இவர்கள் எல்லோருக்கும் நாங்கள் ஒரு நல்ல சோடியாகத் தென்பட்டிருக்கும். ஞாயிறு மாலை உலாத்தப் போகும் தகப்பனும், மகனும். ராபியின் மேசையின் முன் உட்கார்ந்து என்னுடைய அப்பா தன்னுடைய தேவைகளை விவரிக்க மொழியோடும், தன்மானத் தோடும் அவஸ்தைப்பட்டார்.
அவருக்குப் பக்கத்தில் நான் பேசாமல் இருந்து சந்தர்ப்பத்துக்கு தகுந்த முகபாவத்தை வெளியிட்டுக்கொண்டிருந்தேன். எங்களுடைய இக்கட்டான நிலைமை எனக்கு நல்லாகவே தெரிந்திருந்தது. என் அப்பாவின் அவமானம், என்னுடைய அவமானம், அத்துடன் ராபியின் அவமானத்தையும் யோசிக்க வேண்டியிருந்தது. என்னுடைய அப்பா விலும் அவர் குறைந்த வயதுடையவராக இருந்தார். அதைச் சரிக்கட்டுவது போல கடுமையான தெய்வீகத் தன்மையுடன் உட்கார்ந்திருந்தார்.
என்னுடைய அப்பா தன்னுடைய படிப்பு தகைமைகளை ராபியிடம் கூறினார். ஒலிம்பிக்ஸில் பங்குகொண்ட பாரம் தூக்கும் வீரர்களை தான் கணக்கு பண்ணமுடியாத அளவு எடையை தூக்குவதற்குப் பயிற்சியளித்தது பற்றி கூறினார். பால்டிக் கடல் ஓரத்தில் மிகச் சிறந்த சனட்டோரி யத்தில் மஸாஜாளராக வேலை பார்த்ததைச் சொன்னார். பல மாதங்கள் செலவழித்து தான் படித்த படிப்பு, பெற்ற மஸாஜ் சான்றிதழ், சொக்கலட் தொழிற்சாலை வேலை, ஒரு அறை அலுவலகம் அத்துடன் மிகக் கடினமான உழைப்புக்கு தான் தயாராக இருப்பதைச் சொன்னார். ஹீப்ரு பள்ளிக்கூடத்தில் நான் நல்ல மாணவனாகப் படிப்பதைச் சொன்னார்.
ராபியை என்னுடன் பேசவைப்பதில் உற்சாகம் காட்டினார். நான் எவ்வளவு நல்லாக மொழியில் தேர்ச்சி அடைந்திருக்கிறேன் என்பதைச் சோதிப்பதற்காக ராபி சிறிது அசெளகரியத்துடன் என்னுடன் எளிய ஹீப்ருவில் பேசினார்.
“உனக்கு பள்ளிக்கூடம் பிடிக்கிறதா?”
“ஆம், எனக்கு பள்ளிக்கூடம் பிடிக்கிறது.”
“உனக்கு கனடா பிடிக்கிறதா?”
“ஆம், எனக்கு கனடா பிடிக்கிறது.”
எங்கள் சம்பாசணையை ஒரு சொட்டும் விளங்க முடியாத அப்பா இடைமறித்து நான் ஹீப்ரு பாடல்கள் அழகாகப் பாடுவேன் என்று சொல்லிவைத்தார். ராபி அதில் அவ்வளவாக சிரத்தை காட்டவில்லை. ஆனால் என் அப்பா என்னை நாற்காலியில் இருந்து இறக்குவதில் ஆர்வம் காட்டினார்.
ராபியின் அலுவலக அறையின் நட்டநடுவில் நின்று நான் ’தங்க ஜெரூஸலம்’ பாடலைப் பாடினேன். அரைவாசியில் ராபியின் கவனம்அலைந்ததைக் கண்டு என் பாடலை குறைபட்ட முடிவுக்கு கொண்டுவந்தேன். ராபி விடுதலையான உணர்வில் தன் கைகளை ஒன்று சேர்த்து ஒரு தட்டு தட்டியிருக்கமாட்டார், அப்பா முந்திக்கொண்டு நான் இன்னும் பாடுவேன் என்றார்.
அந்தப் பிரகடனத்தை உண்மையாக்க என் விலா எலும்பில் ஒரு சின்ன இடி கொடுத்தார். நானோ மகிழ்ச்சியுடன் அனாதையாக விட்ட பாடலை மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தேன். ராபி இன்னும் கூடிய கவனத்துடன் முன்னால் சாய்ந்தபடி கேட்டார். நான் பாடி முடித்ததும் ராபி ஐந்து டொலர் தாளை என்னிடம் தந்தார். என் அப்பாவின் தொழில் பற்றி தான் வாய்மூலம் தொழுகையாளர்களிடம் செய்தி பரப்புவதாக அப்பாவுக்கு வாக்களித்தார். இன்னொன்றும் சொன்னார். விளம்பரம். பதினைந்து நிமிடம் கழித்து நாங்கள் மறுபடியும் ரோட்டுக்கு வந்தோம். கைகளைப் பிடித்தபடி வீடு நோக்கி நடந்த எங்களுடைய முயற்சிக்கு ஐந்து டொலர் கிடைத்தது. விளம்பரத்தாள்களை மலிவு விலைக்கு அடித்துத் தருபவரின் விலாசமும் எங்களிடம் இருந்தது.
அடுத்து வந்த வாரம் நான், அம்மா, அப்பா எல்லோரும் எங்கள் சமையலறை மேசையைச் சுற்றியிருந்து ரோமன் பேர்மனுடைய நோய் தீர்க்கும் விளம்பரத்தை தயாரித்தோம். என்னிடம் பேனா தரப்பட்டது.
என்னுடைய பெற்றோரின் எண்ணங்களை அப்படியே விளம்பர வாசகங்களாக மொழிபெயர்ப்பது என் பொறுப்பு. என்னுடைய அப்பா, தான் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களைத் தயாரித்த பணிக்கு முதலிடம் தரவேண்டும் என்றார். ஏனென்றால் அது மனித தேகத்தைப் பற்றிய ஆழமான அறிவை யும், நல்ல மதிப்பையும் எடுத்துச் சொல்லும். மறுபுறத்தில், என் அம்மா சோவியத் அகதி என்ற தகவலுக்கு முன்னுரிமை தருவது அவசியம் என்றார். இது மக்களுடைய குற்றவுணர்வினால் கரிசனையை ஏற்படுத்தும். அவர்களை வாசல்வரை இழுக்கும். வாசலில் வந்த பிறகு அப்பா தன்னுடைய தொழில் வித்தைமூலம் அவர்களை மயக்கலாம். இறுதியில் இரண்டையும் கலந்து செய்வது என்று முடிவானது. என்னுடைய பங்குக்கு விளம்பர அடைமொழிகள் பலவற்றை நான் சேகரித்து உதவினேன்.
மிகச்சிறந்த நோய்தீர்க்கும் புதிய மஸாஜ் நிறுவனம் ரோமன் பேர்மன், சோவியத் நாட்டு ஒலிம்பிக் பயிற்றுநர், கம்யூனிஸ்ட் நாட்டு அகதி, உன்னதமான நோய்தீர்க்கும் மஸாஜ் சேவையை வழங்குகிறார்.
பல வருட அனுபவங்கள், விசேடமான ஐரோப்பிய நுண்முறைகளில். எல்லாவிதமான தசைநார், மூட்டு வலிகள், கார் விபத்துக்கள், வேலைத்தள விபத்துக்கள். கர்ப்பம், இன்னும் தேக ஆரோக்கிய வழிகள்.
பதிவுபெற்ற நோய்தீர்க்கும் மஸாஜ் நிபுணர். வசதியான இடத்தில் அமைந்த நிறுவனம். வீடுகளுக்கும் வருகை தரமுடியும். திருப்தி நிச்சயம்.
விளம்பரத்தாள்கள் அச்சடித்து வந்த பிறகு நானும், அப்பாவும் அவற்றை எங்கள் பொண்டியாக் காரில் ஏற்றி நிறுவனத்தின் அருகாமை யில் இருந்த வீடுகளைக் குறிவைக்க முடிவெடுத்தோம். தெருவின் ஒரு கரையை நானும், மறுகரையை அப்பாவும் என்று பங்குபோட்டுக் கொண்டோம். என்னுடைய வெட்கத்தை மறைப்பதற்காக நான் இதை ஒரு போட்டியாக்கினேன். யார் முதலில் முடிப்பது. நான்தான் முதலில் முடிக்கவேண்டும். வீட்டுக்கு வீடு நான் ஓடினேன், அவர்களுடைய கடிதப் பெட்டிகளை விளம்பரத்தாள்களால் அடைத்தபடி. அல்லது கண்களைப் பார்க்காமல் வீட்டுக்காரர்களிடம் திணித்தேன்.
இடைக்கிடை எதிர்த்திசையில் என் அப்பாவின் முன்னேற்றத்தையும் கண்காணித்தேன். அவருக்கு அவசரம் இல்லை. ஒவ்வொரு வீடாக அவர் திரிந்தார், புல்தரையை மிதிக்காமல் நடைவழிகளில் நடந்தார். நான் ஆட்களைத் தவிர்த்தபோது அவர் மட்டும் நின்று நின்று நடந்தார். வேண்டுமென்றே சன்னல்களின் முன் நடமாடினார். அம்மாவின் கட்டளைப்படி வீடுகளின் முன்னால் யாருடைய கண்ணிலோ படவேண்டும் என்பது போல நடந்துகொண்டார். மெஸூஸா மடல் பதித்த வீட்டுக் கதவுகளுக்கு முன்னால் இன்னும் முனைப்பாக அலைந்தார். பலருக்கு ஆர்வமில்லை.
ஒரேயொருவர் பெயரளவில் மட்டும் தன் மகனுக்கு விளம்பரத்தாள் விநியோகிக்கும் வேலை எங்கே கிடைக்கும் என்று விசாரித்தார்.
விளம்பரத்தாள்கள் கொடுத்து முடிந்தபின் காத்திருக்கும் புதிய படலம் தொடங்கியது. ஒவ்வொரு முறை டெலிபோன் அடித்தபோதும் இதோ விடிவு காலம் வந்துவிட்டது என்று தோன்றியது. தொலைபேசி புதிதாக கிடைத்ததுபோல பட்டது. வீடு வந்த நிமிடத்திலிருந்து எங்களுக்கு அதே நினைப்பு. அது எங்களுக்கு அனுசரணையாக இருந்தது அல்லது எதிராக இருந்தது. என்னுடைய அப்பா அதனுடன் பேசினார். ஒற்றுமையைக் காட்ட நானும் அதனுடன் பேசினேன். அது ஒலிக்காமல் இருக்கும்போது அப்பா அதனிடம் மன்றாடுவார்; திட்டுவார்; வெருட்டுவார் – ஆனால் அது அடித்ததும் பாய்வார். சாப்பாட்டு மேசையில் இருந்து, சொகுசு நாற்காலியில் இருந்து, கழிவறையில் இருந்து பறந்துவருவார். போன் அடித்ததும் அம்மாவும் அவர் பின்னால் பாய்வார். அவரின் காது அப்பாவின் காதுடன் ஒட்டிக்கொண்டிருக்கும், ஏதோ அப்பாவின் தலைதான் டெலிபோன் என்பதுபோல. நண்பர்கள், அவர்களின் சிநேகிதர்கள், மாமிகள் எல்லோரும் அழைத்தார்கள். அழைத்தார்கள். வேறு யாராவது அழைத்தார்களா என்று கேட்பதற்கு அழைத்தார்கள். டொக்ரர் கோர்ன்ப்ளம் அழைத்தபோது முடிவில்லாத ஒரு வாரம் கடந்துவிட்டது.
நான் வீட்டில் தனியாக இருந்த முன்மதியம். என்னுடைய அம்மா வர ஒரு மணி நேரமாகும்; அப்பா இன்னும் பின்னால் வருவார். போன் அடித்த போது நான் டீவி முன் தரையில் உட்கார்ந்திருந்தேன். என்னுடைய மடியில் ஹங்கேரியன் ஸலாமி சாண்ட்விச்சும், அரை டஸன் உரித்த சொக்கலட் பூசிய ப்ரூன் உறைகளும் இருந்தன. கோர்ன்ப்ளம் தன்னை ஹார்வே என்று கூப்பிடும்படி எனக்கு சொன்னார். அவர் ஒரு டொக்ரர். என்னுடைய அப்பாவின் விளம்பரத்தாள் அவருக்குக் கிடைத்தது. அதனால் என் அப்பாவை அவர் சந்திக்க விரும்புகிறார். உண்மையில் முழுக் குடும்பத்தையும் சந்திக்க விரும்புகிறார். நாங்கள் எத்தனை பேர் இருந்தாலும் பரவாயில்லை. எல்லோரையும் வெள்ளிக்கிழமை இரவு விருந்துக்கு அழைத்திருக்கிறார். என்னுடைய பெற்றோரின் சம்மதத்தை அவர் வற்புறுத்துகிறார். தன்னுடைய பெயரின் சரியான உச்சரிப்பை அவர் சொல்கிறார். எனக்கு எல்லாம் புரிகிறதா என்று கேட்டார். தன்னுடைய போன் நம்பரை தந்து என் அப்பாவை கட்டாயம் அழைக்க கூறினார்.
அம்மா வீட்டுக்கு வந்தபோது நான் வெடித்துவிடுவேன் போல இருந்தது. அந்த நல்ல சேதியை நான் சொன்னபோது அரை டன் சொக்கலட் பூசிய ப்ரூன்களை நான் சாப்பிட்ட குற்றத்தை அம்மா சட்டை செய்யவில்லை. கோர்ன்பிளம்மின் டெலிபோன் நம்பர் குறித்த பேப்பரை நான் கொடுத்தவுடன் அம்மா டயல் பண்ணத் தொடங்கினார்.
என்னுடைய மாமி இந்தப் பெயரை தான் நிச்சயம் முந்தி கேட்டிருப்பதாகக் கூறினார். விக்டர் தகப்பன் பனியில் சறுக்கி விழுந்தவுடன் கோர்ன்ப்ளம் அல்லவா அறுவை சிகிச்சை செய்தது. அந்த கோர்ன்ப்ளம் நல்ல மனிதர். பணக்காரரும். அவராகத்தான் இருக்கவேண்டும் – இன்னும் பலரை அம்மா தொலைபேசியில் அழைத்தார். கோபச்சா மருத்துவம் படித்தாள் ஆனபடியால் அவளுக்கு பல டொக்ரர்மாரைத் தெரிந்திருந்தது. அவளுக்கு கோர்ன்ப்ளம்மைத் தெரியுமா. யார்? குடும்பவைத்தியரா அல்லது எலும்பு முறிவு வைத்தியரா? அதிலே பெரிய வித்தியாசம் இல்லை. இருவருமே வெற்றிகண்ட மருத்துவர்கள்.
இருவரில் ஒருவர் தங்களுக்கு வரும் நோயாளிகளில் ஒரு சின்ன விகிதத்தை அனுப்பினாலும் எங்கள் தொல்லை ஒழிந்தது.
கைகளைக் கழுவி, வேலை உடையைக் களைந்த பிறகு, அப்பா அறையைக் கடந்து டெலிபோனை அணுகினார். அந்த அறையைக் கடக்கும்போதே அப்பாவின் தொழில் கம்பீரம் அவரைத் தொற்றிக் கொண்டது. அளவில்லாத பவ்வியத்துடன் கோர்ன்ப்ளம்மின் நம்பரை டயல் செய்தார். நானும், அம்மாவும் சோபாவில் அமர்ந்து பார்த்தோம்.
அம்மா என்ன பேசவேண்டும் என்பதை முன்கூட்டியே படிப்பித்திருந்தார். தயாரித்த குறிப்புகளில் இருந்து கனதூரம் அலையக்கூடாது.
பேச்சை சுருக்கமாகவும், மரியாதையாகவும் வைத்திருக்கவேண்டும்.
நாங்கள் கடவுளே என்று தவறாக ஏதாவது பேசிவிட்டால் பிறகு எங்கள் கதி என்ன? அப்பா டயல் செய்ததும் அங்கே மணிச்சத்தம் அடிப்பது கேட்டது. யாரோ எடுத்ததும் அப்பா கோர்ன்ப்ளம்முடன் பேசவேண்டும் என்றார். கோர்ன்ப்ளம் வருவதற்காக காத்து நின்றார். அந்த இடைவெளியில் அம்மா மீண்டும் வாயசைப்பின் மூலம் எப்படி பேசவேண்டும் என்பதை அப்பாவுக்கு ஞாபகமூட்டினார். அதற்குப் பதிலாக அப்பா சுவரைப் பார்த்து, தன் முதுகை அம்மாவுக்குக் காட்டி நின்றார். சில கணங்கள் போனபின் அப்பா தான் ரோமன் பேர்மன், மஸாஜ் மருத்துவர் என்றும் அவர் கூப்பிட்டபடியால் தான் திருப்பி அழைப்பதாகவும் கூறினார். அதற்கு பிறகு ’ஆம், ஓகே, ஹார்வே’ என்றார்.
ஸ்டாலினுடைய ஆட்சிக்கு முன்பு என்னுடைய பாட்டிக்கு அம்மா ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் மெழுகுவர்த்தி கொளுத்தி, அப்பிள் கேக் செய்வார். என்னுடைய தாத்தாவின் ஞாபகத்தில் போருக்கு முந்திய லற்வியா யூதர்களிடம் மெழுகுவர்த்தியும், அப்பிள்கேக்கும் பிரபலம். என் அம்மா சிறுபெண்ணாக இருந்த சமயம் ஸ்டாலின் பதவியில் இருந்தார்.
அப்பொழுது அப்பிள்கேக் இருந்தாலும், மெழுகுவர்த்தி இல்லை. நான் பிறந்தபோது இரண்டும் மறைந்துவிட்டது, ஆனாலும் அம்மாவின் மனதில் அப்பிள்கேக் யூதர்களுக்குச் சொந்தமானது என்ற எண்ணம் இருந்தது. இதை மனதில் வைத்துக்கொண்டு அப்பிள்கேக் செய்முறை சமையல் குறிப்பைத் தேடி எடுத்துக்கொண்டு, விலைகூடிய சுப்பர் மார்க்கட்டுக்கு அதற்கான பொருள்களை வாங்கச் சென்றார். அந்த வெள்ளிக்கிழமை பின்மதியம் தனக்கு சுகயீனம் என்று வேலையிலிருந்து முன்கூட்டியே வந்து அப்பிள்கேக்கை செய்து வேகவைத்தார் – அப்படி என்றால்தான் அது கோர்ன்ப்ளமுக்கு சூடாக இருக்கும். என்னுடைய அப்பாவும் வேலையில் இருந்து சீக்கிரம் புறப்பட்டு என்னைப் பள்ளியில் வந்து எடுத்தார். நாங்கள் வீட்டுக்கு வந்தபோது எங்கள் குடியிருப்பு அப்பிள்கேக் மணத்தில் மிதந்தது. நேரத்தை மிச்சம் பிடிப்பதற்காக என்னையும், அப்பாவையும் ஒன்றாகக் குளிப்பதற்கு அம்மா ஏவினார்.
அப்பாவுடன் நான் ஒன்றாகக் குளித்து பல வருடங்கள் ஆகவே கண்களை எங்கே வைப்பது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அப்பாவுக்கு அவருடைய நிர்வாணமோ என்னுடையதோ பெரிய பொருட்டாக இல்லை. அவர் எனக்கு சோப் போட்டு, தண்ணீரால் கழுவி ஒரு டவலால் என்னை சுற்றிவிட்டார். நான் குளியலறை வாசலில் நின்று கண்ணாடிக் கதவு வழியாக அப்பா அவசரமாக வழுக்கைத் தலையில் சோப் போட்ட தையும், அக்குளைக் கழுவியதையும் பார்த்தேன். வெளியே வந்ததும் நான் இன்னும் அங்கே நின்றதை அதிசயமாகப் பார்த்தார்.
கோர்ன்ப்ளமின் வீடு எங்கள் அப்பாவின் அலுவலகத்திலிருந்து சில வீதிகளே தள்ளியிருந்தது. அவருடைய வீடு இடது பக்கத்தில் இருந்தது.
ஆகவே விளம்பரத்தாளை நான்தான் போட்டிருக்கவேண்டும். ஆனால் அது எனக்கு ஞாபகம் இல்லை. அம்மா உடனேயே வீட்டின் பெருப்பத்தை மனதிலே பதித்துக்கொண்டார். மூன்றாயிரம் சதுர அடியிருக்கலாம்,
அத்துடன் ஒரு தோட்டமும். அது முற்றிலும் தனியாக நின்ற வீடு – எங்கள் தகுதிக்கு இரண்டு படி மேலானது. எங்கள் வீட்டுக்கும் தனிவீட்டுக்கும் இடையில் டவுன் வீடும், அரை தனி வீடும் இருந்தன. ஒரு தனி வீடு என்பது ஒருவரின் ஆகக்கூடிய அந்தஸ்தை காட்டுவது. எங்களுக்குத் தெரிந்த ஒருவர்கூட டவுன் வீட்டு லெவலை இன்னும் அடையவில்லை.
ஆனால் சமீபத்தில் அதுபற்றிய பேச்சுக்களும், திட்டங்களும் நிறைய இருந்தன.
பக்கத்து பக்கத்தில் மூன்றுபேருமாக கோர்ன்ப்ளமின் வீட்டு வாசல் நடையில் நடந்தோம். என்னுடைய அப்பா நீல ஹங்கேரியன் சூட் அணிந்திருந்தார். அது தாலின் – சொச்சி சர்வதேச எடை தூக்கும் போட்டியில் பங்குபற்றியது. எனக்கு ஒரு சாம்பல் கலர் கால்சட்டையையும், மடிப்புக் குலையாத வெள்ளை சேர்ட்டையும் அணிவித்திருந்தார்கள். அந்த சேர்ட்டுக்கு மேலே, உள்ளே அல்ல, வெள்ளியில் செய்த டேவிட் நட்சத்திர பதக்கத்தை நான் அணிந்திருந்தேன். என்னுடைய அம்மா பச்சைக் கம்பளி ஆடை உடுத்தியிருந்தாள், அதற்குப் பொருத்தமான அம்பர் நெக்லஸ், பிரேஸ்லெட், காதணிகளுடன். நாங்கள் ஒரு மேட்டிமையான தொழில் துறை குடும்பம் – அவர்களுடன் வகுப்பில் தொடர்ந்து A எடுக்கும் அவர்கள் மகன், எதிர்கால டொக்ரர் அல்லது சட்டத்தரணி. போலியான தைரியத்துடன் மிக நல்லாக நுனிவெட்டப்பட்ட புற்கள் அமைந்த பாதையில் நடந்தோம். மூன்று அகதிகள், அவர்களுடன் சூடு ஆறாத அப்பிள் கேக்.
அப்பா மணியை அடித்தார். உள்ளே காலடிகள். மஞ்சள் சுவெற்றரும், கால்சட்டையும் அணிந்த ஓர் ஆண் கதவைத் திறந்தார். அந்த சுவெற்றரில் ஒரு சின்ன முதலை வேலைப்பாடு ஒட்டிக்கொண்டிருந்தது. இவர் தான் கோர்ன்ப்ளம், மிக அகலமாக சிரித்துக்கொண்டிருந்தார். எங்கள் அப்பாவின் தோள்களில் கைவைத்து நாங்கள் யார் என்பதைச் சொன்னார். என்னுடைய அப்பாதான் ரோமன் பேர்மன், அம்மா பெல்லா, நான் மார்க். வீட்டுக்கு உள்ளே வரச் சொன்னார். முன்பகுதியைத் தாண்டி வீட்டின் உள்ளறைக்குச் சென்றோம். அங்கே மேசை அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே ஆறு பேர் மேசையைச் சுற்றி அமர்ந்திருந்தார்கள்.
அதில் மூன்றுபேர் கோர்ன்ப்ளம் போல சிரித்தார்கள். அப்படிச் சிரித்த ஒரு பெண் அம்மாவை அணுகினார். கோர்ன்ப்ளம், அதுதான் தன் மனைவி ரொஃண்டா என்றார். ரொஃண்டா நாங்கள் வந்ததில் மகிழ்ச்சி என்றபடி அம்மாவிடமிருந்த அப்பிள்கேக்கை வாங்கிக்கொண்டார்.
அதைக் கொண்டுவந்திருக்கக் கூடாது என்று சொல்லியபடி அதை சமையலறைக்கு எடுத்துச் சென்றார்.
கோர்ன்ப்ளம் தன்னுடைய நண்பர்களுக்கு எங்களை அறிமுகம் செய்து வைத்தார். மற்ற இரண்டு சிரித்த நண்பர்கள் ஜெர்ரியும், ஷேர்லியும். அவர்கள் எங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி என்றார்கள்.
என்னுடைய அம்மா எங்களுக்கும் அப்படியே என்றார். என்னுடைய அப்பா தலையைத் தாழ்த்தி, புன்னகைத்து நன்றி என்றார். இதைச் செய்த போது சிரிக்காத மற்ற மூவரையும் பார்த்தார். ஓர் ஆண், ஒரு பெண், பையன். எங்களைப்போல அவர்களும் அளவுக்கு மிஞ்சிய அலங்காரத்துடன் ஆடை அணிந்திருந்தார்கள். ரொஃண்டா சமையலறையில் இருந்து வந்ததும் கோர்ன்ப்ளம் எங்களை மற்ற குடும்பத்துக்கு அறிமுகம் செய்து வைத்தார் – கார்கோவிலிருந்து வந்த கெனாடி, ப்ரெடா, சீமோன், அப்படித்தானே? அப்படித்தான் என்றார் கெனாடி. அவருடைய ஆங்கிலம் என்னுடைய அப்பாவின் ஆங்கிலத்திலும் கொஞ்சம் மேலான தாக இருந்தது. ஆனால் அவருக்கு அப்பாவிலும் பார்க்க அதிகம் தங்கப்பல். ஆங்கிலத்தில் அம்மா தனக்கு அவர்களை சந்திப்பதில் சந்தோசம் என்று தெரிவித்தார். ஆங்கிலத்தில் ப்ரெடா நன்றி கூறினார். நாங்கள் அவர் களுக்கு எதிராக உட்கார்ந்திருந்தோம். ஜெர்ரி சொன்னார் தன் மனைவி ரஸ்யாவில் ஒரு பல் வைத்தியர் என்று. தான் ஒரு கண் வைத்தியர் என்றார்.
அந்த மேசையைச் சுற்றி உடம்பின் பல பாகங்களை பாதுகாப்பவர்கள் இருந்தார்கள். கண்கள், பற்கள். எலும்புகளுக்கு ஹார்வே, தசைநார்களுக்கு ரோமன். மிச்சம் என்ன இருக்கிறது? கோர்ன்ப்ளம் ஒன்றிரண்டு ஊகிக்கலாம் என்றார். ஜெர்ரி சிரித்தார், ரொஃண்டா சிரித்தபடி இது மிக அதிகம் என்றார். கெனாடியும், ப்ரெடாவும் தேவைக்கு அதிகமாகச் சிரித்தார்கள். அப்படியே என் பெற்றோரும், ஆனால் கொஞ்சம் குறைவாக இருக்கலாம். ரொஃண்டா ஒரு பிரார்த்தனை சொல்லியபடி மெழுகுவர்த் தியை ஏற்றினார்.
நெருப்பில் வாட்டிய கோழியைப் பரிமாறியபடி கோர்ன்ப்ளம் என் பெற்றோருக்கும், இன்னும் கெனாடி, ப்ரெடா மற்றவர்களுக்கும் தன் வீட்டுக்கு அவர்கள் விருந்துக்கு வந்தது தனக்குப் பெருமை என்றார். அவர்கள் என்ன கஷ்டங்களை கடந்திருக்கிறார்கள் என்பதை தன்னால் நல்லாக கற்பனை செய்யமுடியும் என்றார். பல வருடங்களாக தானும், ரொஃண்டாவும் ரஸ்ய யூதர்களுக்கு உதவும் பணியில் இருப்பதாகக் கூறினார். அவர்களுடைய இன்னல்கள் எந்த அளவில் இருக்கின்றன என்று வினவினார். என்னுடைய அம்மா “மோசம், யூத எதிர்ப்பு மோசம்’ என்றார். கெனாடியும், ப்ரெடாவும் குடிப்பெயர்வு மறுக்கப்படவர்கள் என்றார் ஜெர்ரி. நாங்களும் அப்படியா என்றார். அம்மா சிறிது தயங்கினார், பின்பு அப்படி இல்லை என்றார். அவருக்கு சில மறுக்கப்பட்ட வர்களைத் தெரியும். நாங்களும் கிட்டதட்ட மறுக்கப்பட்டவர்கள்தான், ஆனால் முற்றிலும் இல்லை. எல்லோருக்கும் இது சம்மதமாக இருந்தது.
பின்பு ப்ரெடாவும், கெனாடியும் தங்களுக்கு குடிப்பெயர்வு மறுக்கப்பட்ட கதையைக் கூறினார்கள். கதை பாதி தூரம் போன பிறகு, அதாவது அவர்கள் குடியிருப்பில் இருந்து அகற்றப்பட்டு, ஓர் அறையில் இன்னும் மூன்று குடும்பங்களோடு வசித்த பகுதி வரும்போது, தன்னுடைய சேர்ட்டை அகற்றி தன் சக வேலையாட்கள் தன்னைக் குத்திக் காயப்படுத்தியதைக் காண்பித்தார். விலா எலும்புக்கு கீழே பெரிய தழும்பு இருந்தது. ஒருநாள் இரவு வீதியில் நடந்து கொண்டிருக்கும்போது தொழிற்சாலையில் வேலை செய்யும் சில குடிகாரர்கள் இடை மறித்தார்கள். அவர்கள் அவரை கேடுகெட்ட யூத துரோகி என்றார்கள்.
அவர்களுடைய தலைவன் கத்தியைத் தூக்கியபடி அவர் மேல் விழுந்தான்.
கெனாடி கதையை முடித்த பிறகு மறுபடியும் தன் சேர்ட்டை உள்ளுக்கு தள்ளினார். ஜெர்ரியும், ரொஃண்டாவும் தங்கள் கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்கள். எவ்வளவு கொடுமை என்பதை அவர்களால் நம்பமுடியவில்லை. எங்கள் பெற்றோரும் அது கொடுமையே என்பதை ஒப்புக்கொண்டார்கள். கோர்ன்ப்ளம் அந்த தகப்பன் பேர் தெரியாத பயல்கள் என்று தொடங்கி என்னையும் சீமோனையும் நிலவறையில் போய் விளையாட சம்மதமா என்று கேட்டார். கோர்ன்ப்ளம்மின் பிள்ளைகள் இரவு காம்புக்கு சென்றிருந்தார்கள். அது துரதிர்ஷ்டம், அவர்கள் எங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி காட்டியிருப்பார்கள்.
கீழே பிங்பொங் மேசை, பில்லியர்ட் மேசை, ஹொக்கி வலை, இன்னும் பல விளையாட்டுச் சாமான்கள் இருந்தன. நாங்கள் கீழே போனபோது ப்ரெடா தன் தாயார் தனியாக கார்க்கோவில் மாட்டுப்பட்டு தவிக்கும் கதையைக் கூறிக்கொண்டிருந்தார். என்னுடைய பெற்றோர் ஒன்றுமே சொல்லவில்லை.
இவை தவிர பெரிய திரை டீவியும், சுவரில் பதித்த தட்டு, புத்தகங்கள், போர்ட் விளையாட்டுகள் என்று இருந்தன. இன்னொரு மூலையில் அவருடைய பிள்ளைகள் யாரோ பூர்த்திசெய்த ஸ்டார் வார்ஸ் அடுக்குகள் இருந்தன. ஈவோக்ஸ்கூட இருந்தது. பிங்பொங் மேசைக்கு கிட்டப் போய் அதன் மட்டையைக் கையிலே எடுத்தபடி சீமோனைப் பார்த்தேன். அவனுக்கு அதில் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை. அவன் டெத் ஸ்டாரை உற்றுப் பார்த்தான். அவன் அப்பா சொன்னது உண்மை யிலேயே ரஸ்யாவில் நடந்ததா என்று கேட்டேன். நீ என்னுடைய அப்பா ஒரு பொய்யர் என்று சொல்கிறாயா என்றான். ஒரு R2D2 பாவையை எடுத்தான். இன்னொரு விளையாட்டுச் சாமானையும் எடுத்து இரண்டையும் தன் பொக்கற்றுக்குள் அடைத்தான். இந்த பணக்கார வேசி மகனிடம் என்னதான் இல்லை என்றான்.
நான் மேசைக்குத் திரும்பியபோது என் அப்பாவையும், ரொஃண்டாவையும் தவிர மீதி எல்லோரும் இருந்தார்கள். ஷேர்லி அம்மாவுக்கு பக்கத்தில் இருந்து அம்மாவின் அம்பர் நெக்லஸை ரசித்துக் கொண்டிருந்தாள். கோர்ன்ப்ளம் தன்னுடைய புகைப்பட ஆல்பத்தை திறந்து தன்னுடைய போலந்து தாத்தாவை காட்டினார். ஜெர்ரியிடமும் ஒரு குவியல் குடும்ப புகைப்படங்கள் இருந்தன. அவருடைய குடும்ப பூர்வீகம் மின்ஸ்க். இரவு உணவு பிளேட்களை அகற்றியபிறகு சில சிற்றுண்டி வகையும், கோப்பியும் எஞ்சியது. எனக்கு பாத்ரூமுக்கு போக வேண்டி வந்தது. கோர்ன்ப்ளம் கீழே ஒன்றும், மேலே மூன்றும் இருப்பதாக கூறினார். எனக்கு விரும்பியதை நான் பாவிக்கலாம். பிறகு அவர் புகைப்பட ஆல்பத்தில் நாசிப்படையினரால் சுடப்பட்டு இறந்துபோன ஒவ்வொருவரையும் சுட்டிக் காட்டினார்.
நான் பாத்ரூமை தேடிப் புறப்பட்டேன். இரண்டாம் மாடிக்குச் செல்லும் படிகள் தென்பட்டன. அதில் ஏறினேன். கூடத்தில் ஒன்று இருந்தது. ஆனால் ஒரு கதவுக்கு பின்னால் சத்தங்கள் கேட்டன. அந்தக் கதவு பிரதானமான படுக்கை அறையின் கதவு. குரல்கள் பாத்ரூமின் கதவுக்கு பின்னிருந்து வந்தன. அந்தக் கதவு அரைவாசி திறந்திருந்தது.
உள்ளே ரொஃண்டா ஒரு ஸ்டூலில் கண்ணாடி முன் உட்கார்ந்திருந்தார்.
அவருடைய பிளவுஸ் திறக்கப்பட்டு நாரியிலே சுருக்கி இருந்தது. பிரா மட்டும் அணிந்து பாத்ரூம் மேடையில் தலையைச் சாய்த்து இருக்க, அப்பா அவருடைய கழுத்தை மஸாஜ் செய்தார். நான் பின்னடித்தபோது ரொஃண்டா என்னை அழைத்து கதவை தன் கால்களால் திறந்துவிட்டார்.
என்ன அருமை, என்னுடைய அப்பா ஒரு மந்திரவித்தைக்காரர், அவருடைய கைகளை போத்தலில் அடைத்து விற்கலாம் என்றார் அவர்.
நான் பாத்ரூமை தேடியதாக முணுமுணுத்தேன். அவர் தாங்கள் முடித்து விட்டதாக கூறினார். அவர் என் பக்கம் திரும்பி தன் பிளவுஸ் கொக்கிகளை மாட்டத் தொடங்கினார். அவருடைய பாரமான மார்புகள் பிராவின்மேல் வழிந்தன. கவலைப்படாமல் நான் வந்த வேலையை முடிக்கச் சொன்னார். கீழே ஹார்வே கோப்பி போடுவதற்காக அவருக்கு காத்துக்கொண்டிருக்கலாம்.
கையிலே ஒட்டிய வாஸ்லைனை அப்பா கழுவியபோது பாத்ரூமில் நான் என் கால்சட்டையை அவிழ்த்து விட்டுக்கொண்டு நின்றேன். அப்பா தன் கையை வண்ணவேலை டவலால் துடைத்துவிட்டு நான் முடிப்பதற்காகக் காத்து நின்றார். சிறிது நேரம் கழித்து தான் வெளியே நிற்க வேண்டுமா என்றார். இன்னும் கொஞ்சம் கழித்து அவர் வெளியே போய் படுக்கை அறையில் நின்றார். நான் வெளியே வந்தபோது அப்பா கோர்ன் ப்ளமின் படுக்கையில் உட்கார்ந்திருந்தார். மேலே ஒரு குடும்பப்படம், கோர்ன்ப்ளமின் மகளுடைய பாற்மிட்ஸாவின்போது எடுத்தது, மாட்டப்பட்டிருந்தது. விழா உடுப்புகள் அணிந்தபடி கோர்ன்ப்ளம், பெரிய மரத்தின் கீழ் புல் தரையில் அமர்ந்திருந்தார். என்னுடைய அப்பா அந்தப் படத்தைப் பார்க்கவில்லை. நான் என்ன செய்வது, நீ சொல் என்றார்.
பின்பு எழுந்து, என் கையை அவர் பிடித்துக்கொள்ள, நாங்கள் கீழே இறங்கினோம்.
மேசையில் எல்லோரும் சிற்றுண்டி அருந்தினார்கள். ஷேர்லி இன்னும் அம்மா பக்கத்திலேயே அமர்ந்திருந்தார். அம்மாவின் அம்பர் கைச்சங்கிலியைப் போட்டு அழகு பார்த்தார். அப்பா வந்ததும் அவர்கள் சிறிது அசைந்து எங்களுக்கு இடம் ஏற்படுத்தினார்கள். ரொஃண்டா என் அப்பா அற்புதம் புரிபவர் என்று அறிவித்தார். அவருடைய கழுத்து முந்தி எப்போதும் இல்லாதமாதிரி தேறியிருக்கிறது. கோர்ன்ப்ளத்திடம், என் அப்பாவுக்கு போதிய நோயாளிகளை அனுப்பவேண்டும் என்று வாக்கு பெற்றுக்கொண்டார். கோர்ன்ப்ளம் தான் அதற்கு பெருமைப்பட வேண்டும் என்றார். கோர்ன்ப்ளம் திங்கள் காலை போன் வரும் என்றார்.
வெகு சீக்கிரத்தில் அப்பா சொக்கலட் தொழிற்சாலை வேலையை உதறிவிடுவார் என்றார். கோர்ன்ப்ளம் இந்தச் செய்தியை பலருக்கும் பரப்புவார். என் அப்பா போன்ற ஒருவருக்கு தொழிற்சாலை ஏற்ற இடம் இல்லை என்றார். ஜெர்ரியும் தன் உதவியை நிச்சயமாக எதிர்பார்க்கலாம் என்றார்.
நாங்கள் கிளம்பியபோது கோர்ன்ப்ளம் அப்பாவுக்கு கைகொடுத்தார். எனக்கும் கொடுத்தார். அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டார். இந்த மாலை அவருக்கும், ரொஃண்டாவுக்கும் மிக விசேஷமானது என்றார்.
ரொஃண்டா சமையலறையில் இருந்து அம்மாவின் அப்பிள்கேக்கை காவிக்கொண்டு வந்தார். அது வீணாகிப்போவதை அவர் விரும்பவில்லை. தங்கள் பிள்ளைகளை சிலவேளைகளில் மக்டொனால்டுக்கு கூட்டிப் போனாலும் வீட்டிலே அவர்கள் கோஷர் விரதம் அனுட்டித்தார்கள். அந்தக் கேக் அருமையான வாசனை கொடுத்தாலும் அதை அவர்கள் வீட்டிலே வைக்கமுடியாது. நாங்கள் பொண்டியாக்கை நோக்கிப் புறப்பட்டபோது எல்லாம் மாறிவிட்டதா அல்லது ஒன்றுமே மாறவில்லையா என்பது புரியவில்லை. நாங்கள் வந்த மாதிரியே திரும்பினோம். நேரம் போனதற்கு சாட்சி குளிராகிப் போன அப்பிள்கேக் மட்டுமே. எங்களுக்கு முன்னால் பொண்டியாக் நின்றது எப்போதும் போல, பச்சையாகவும், அசிங்கமாகவும். எங்களுக்கு பின்னால் கோர்ன் ப்ளமுடைய முற்றிலும் தனித்து நிற்கும் வீடு. நாங்கள் மெதுவாக நடந்தோம், போய்ச் சேரவேண்டிய இடத்தை அடைவதற்கு எந்தவித அவசர மும் காட்டாமல். எங்கள் பொண்டியாக்குக்கும், கோர்ன்ப்ளம்மின் வீட்டிற்கும் இடையில் எங்கள் எதிர்காலம் இருந்தது. அது எங்களுக்கு மேலே தெளிவற்றதாக ஆனால் உணரக்கூடியதாக மிதந்தது.
அப்பா நடப்பதை நிறுத்தினார். அம்மாவையும் அப்பிள்கேக்கையும் யோசனையுடன் பார்த்தார்.
“அதை ஏன் இன்னும் காவுகிறீர்?”
“நான் என்ன செய்வது?”
“எறிந்துவிடும்.”
“எறிவதா? இதை வீணாக்குவது மெத்த அநியாயம்.”
“எறிந்துவிடும். இது கூடாத சகுனம்.”
என் அம்மா தயங்குவதிலிருந்து எனக்கு சந்தேகம் உண்டானது.
எண்ணக் குறையாத மூட நம்பிக்கைகள் இருந்தன – இன்னும் பல விதங்களில் பேரிழப்புகளை அழைக்கும் வழிகள். ஆனால் வேண்டாத கேக்கை எறிவது பற்றிய மூடநம்பிக்கையை நான் கேள்விப்பட்டதில்லை.
என்னுடைய அம்மா அந்தக் கேக்குக்காக நல்லாய் பாடுபட்டார். அதில் சேர்த்த பொருள்கள் விலையானவை. அதிலும் உணவை வீணாக்குவது அவரால் தாங்கமுடியாத ஒன்று. இருந்தாலும் அம்மா விவாதத்தில் இறங்கவில்லை. ஒன்றுமே நிச்சயமில்லை. எங்களுக்கு அதிர்ஷ்டம் தேவை. ஒரு சிறு தவறுகூட மோசமான விளைவுகளை உண்டாக்கிவிடும்.
பிழையோ, சரியோ அந்தக் கேக் அசுத்தமாகிவிட்டது. என்னுடைய அம்மா கேக்கை என்னிடம் கொடுத்து ரோட்டின் கீழ்ப்பகுதியில் இருக்கும் குப்பைத் தொட்டி ஒன்றைச் சுட்டிக் காட்டினார். அவர் ஓடு என்று எனக்கு சொல்வதற்கு எந்தவித அவசியமும் இருக்கவில்லை.
– February 2015