மவராசர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 1,979 
 
 

(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“வழியில் எந்தவிதமான ஆபத்தும் நேராமற்போய்ச் சேர வேண்டுமே, கடவுளே!” என்று எண்ணிப் பெருமூச்சு விட்ட வண்ணம் மாயவரம் ஜங்ஷனில் திருவனந்தபுரம் பாஸஞ்சர் வந்து நின்றது. தங்களுடைய பெட்டி படுக்கைகளுடன் ஜனங்கள் விழுந்தடித்துக் கொண்டு ரயிலை நோக்கி ஓடினர். அப்படி ஒடியவர்களில் பிரபல வியாபாரியான பீதாம்பர முதலியாரும் ஒருவர். அவர் தம்முடைய ‘யுத்தகால தொந்தி’யைச் சுமக்க முடியாமல் சுமந்து சென்றது பார்ப்பதற்கு வேடிக்கையாயிருந்தது. அவரைப் பின்பற்றி அவருடைய மூன்றாவது மனைவி கையில் குழந்தையுடன் ஒட்டமும் நடையுமாக வந்தாள். அவர்கள் இருவரையும் தொடர்ந்து போர்ட்டர் ஒருவர் தலையில் பெட்டியுடனும் கையில் படுக்கையுடனும் முக்கி முனகி நடந்து கொண்டிருந்தான்.

ஏற்கனவே முதல் வகுப்பில் வேண்டிய இடத்துக்கு ‘ரிஸர்வ்’ செய்துவிட்டு அப்புறம் சாவகாசமாக வந்து வண்டி ஏறுவதற்குரிய வசதி பீதாம்பர முதலியாருக்கு இருக்கத்தான் செய்தது. இருந்தாலும் சிக்கனத்தை உத்தேசித்து முதலியார் எப்பொழுதும் மூன்றாம் வகுப்பில் தான் பிரயாணம் செய்வது வழக்கம். செளகரியமாக வாழ்வதற்கு வசதியிருந்தும் உலகத்தில் வாழத் தெரியாத எத்தனையோ பேர் இல்லையா? அவர்களில் முதலியாரும் ஒருவர் போலிருக்கிறது என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள். ஏனெனில், மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்வதற்கு முதலியார் சொல்லும் காரணமே வேறு. அந்தக் காரணம் என்ன தெரியுமா? மகாத்மா காந்தி மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்து கொண்டிருந்தாராம்; அவரைப் பின்பற்றி நம் முதலியாரும் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்கிறாராம்!

இவ்வாறு சொல்லிக் கொள்வதின் மூலம் முதலியார் தம்மை மகாத்மாகாந்திக்கு அடுத்த வாரிசாக எண்ணிக் கொண்டிருந்தார். அந்த மகானைப் போலவே தாமும் ஏழைகளிடத்தில் இரக்கம் கொண்டவர் என்று அவர் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் உண்மையோ வேறு விதமாயிருந்தது. ரயில் பிரயாணத்தில் தான் நம்முடைய முதலியார் காந்தி மகாத்மாவைப் பின்பற்றினாரே தவிர வாழ்க்கைப் பிரயாணத்தில் அவரைப் பின்பற்றவில்லை.

அப்படிப் பின்பற்றியிருந்தால் ஒரு வேளை அவருக்கு அந்த ‘யுத்தகாலத் தொந்தி’ விழாமலே இருந்திருந்தாலும் இருந்திருக்கலாமல்லவா?

இந்த ‘ஏழை – பங்காளர்’ ஏறி உட்கார்ந்ததும் ரயில் நகர்ந்தது. அந்தச் சமயத்தில் ‘கார்டு’ அலறியதையும் பொருட்படுத்தாமல் ஒருவன் தலை தெறிக்க ஓடிவந்து முதலியார் ஏறியிருந்த பெட்டிக்குள் ஏறினான். அவன் பெயர் நாச்சியப்பன். யாரோ ஒரு ‘மவராசன்’ குப்பையில் எறிவதற்காக வைத்திருந்த பழைய கோட்டு ஒன்றை அவனிடம் கொடுத்து, அவனுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாகப் புண்ணியத்தைச் சம்பாதித்துக் கொண்டிருந்தான். அந்தக் கோட்டைத்தான். அவன் அன்று அணிந்து கொண்டிருந்தான். அதற்குள் சட்டையோ, பனியனோ ஒன்றுமில்லை. அவனுடைய அரையை ஒர் அழுக்கடைந்த ‘கைலி’ அலங்கரித்துக் கொண்டிருந்தது. முகத்தின் அழகைப்பற்றியோ சொல்லவே வேண்டாம். அந்த நீண்டு வளர்ந்திருந்த மீசைகள் மட்டும் அவனுடைய குழி விழுந்த கன்னங்களை மறைத்துக் கொண்டிராவிட்டால், அவனை ஒரு கணம்கூட யாராலும் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்க முடியாது. தலையையாவது கொஞ்சம் எண்ணெய் தடவி வாரிக் கொண்டிருக்கலாம். அதற்கும் அவனுக்கு வசதியில்லையோ, அல்லது மனந்தான் இல்லையோ? – யார்கண்டார்கள்?

இந்த லட்சணத்தில் இருந்த அவனைத் தொடர்ந்து நல்ல வேளையாக மனைவி என்று சொல்லும் முறையில் யாரும் வரவில்லை. ஆனால் அவனுடைய இடுப்பில் மட்டும் ஒரு குழந்தை இருந்தது. தோற்றத்தில் அது அவனையே ஒத்திருந்தது. அந்தக் குழந்தைக்கு ஒரு வருஷம் பூர்த்தியாகியிருக்கலாம். ‘இன்று சாகுமோ, நாளை சாகுமோ!’ என்று இருந்த அதற்குக் குரல் மட்டும் எட்டரை கட்டைக்கு மேல் இருந்தது. ஜனக் கூட்டத்தில் இடிபட்டு அது ‘வீல், வீல்’ என்று கத்திய சத்தம், ரயிலின் ஊதல் சத்தத்தைக்கூடத் தோற்கடித்து விட்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

நாச்சியப்பனுடைய கையில் பெட்டியும் இல்லை. படுக்கையும் இல்லைதான். ஆனால் அவையிரண்டும் இருந்தால் அவனுக்கு எவ்வளவு தொந்தரவாயிருக்குமோ அதற்கு மேல் அந்தக் குழந்தை இருந்தது தொந்தரவாயிருந்தது! ‘சிசுஹத்தி’ செய்வது மகா பாவமென்றும், அதனால் ஏழு நரகங்களுக்கும் கீழான நரகத்துக்குச் செல்லவேண்டி நேரும் என்றும் சாஸ்திரம் பயமுறுத்துவதாக நாச்சியப்பன் மட்டும் கேள்விப்பட்டிராவிட்டால், நிச்சயம் அந்தக் குழந்தையை அவன் உடைப்பில் தூக்கிப் போட்டுக் கொன்றே விட்டிருப்பான்!

***

பீதாம்பர முதலியாரும் நாச்சியப்பனும் ஏறக்குறைய ஒரே சமயத்தில் தான் அந்தப் பெட்டிக்குள் ஏறினர். ஆனால் எதற்கும் ஒழுக்கத்தைக்கூட மீறி நிற்கும் அந்தப் பாழாய்ப்போன அந்தஸ்து என்று ஒன்று வந்து குறுக்கே நிற்கிறதல்லவா? அதன் காரணமாக, முதலியாருக்கும் அவருடைய மனைவிக்கும் மட்டும் தான் உள்ளே இருந்தவர்கள் நெருக்கியடித்து உட்கார்ந்து கொஞ்சம் இடம் விட்டனர். நாச்சியப்பனையோ யாரும் கவனிக்கவில்லை. எல்லோரும் அவனை ஏதோ ஒரு விநோத ஐந்துவைப் பார்ப்பதுபோல் பார்த்தனர். அப்படிப் பார்த்தவர்கள் சும்மா இருக்கவும் இல்லை; தங்களுக்குள் அடிக்கடி ஏதோ பேசிக் கொள்வதும் ‘களுக்’கென்று சிரிப்பதுமாக இருந்தனர்.

உலகத்தில் ஏழை எளியவனைக் கண்டால் எள்ளி நகையாடுபவர்கள்தான் அதிகம் என்ற உண்மையை நாச்சியப்பன் உணர்ந்திருந்தானோ என்னமோ, மேற்கூறிய காட்சிகளை யெல்லாம் கண்டும் காணாதவன் போல் இருந்தான். அந்தச் சமயத்தில் தான் உட்காருவதற்கு எப்படியாவது கொஞ்சம் இடம் கிடைத்தால் போதும் என்பது அவனுடைய ஒரே நோக்கமாயிருந்தது. அதற்காக, அந்தப் பெட்டிக்குள் உட்கார்ந்திருந்த ஒவ்வொருவரையும் அவன் பரிதாபத்துடன் பார்த்தான். “கொஞ்சம் இடம் விடுங்கள் ஐயா!” என்று கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டான். ஊஹூம் யாரும் அசைந்து கொடுக்கவில்லை.

நேரம் போய்க்கொண்டே இருந்தது. ஸ்டேஷனுக்கு ஸ்டேஷன் வண்டி நிற்பதும் கிளம்புவதுமாக ஓடிக் கொண்டே இருந்தது. ரயிலின் ஆட்டத்திற்கேற்ப நாச்சியப்பன் ஆடிக் கொண்டே சென்றான். அந்த ஆட்டத்தில் குழந்தையின் தூக்கம் எங்கே கலைந்து விடுமோ என்று அவனுக்குப் பயமாயிருந்தது. அப்படி எழுந்துவிட்டால் அதனுடன் மாரடிப்பதற்கு வேண்டிய தெம்பும் அவனுக்கு அந்தச் சமயத்தில் இல்லை. கீழே உட்கார்ந்து விடலாம் என்று பார்த்தாலோஎங்கும் ஒரே பெட்டியும் படுக்கையுமாக இருந்தன. அவற்றின் மேலே உட்காருவதற்கும் அவனுக்கு, ‘என்ன சொல்வார்களோ என்னமோ’ என்று அச்சமாயிருந்தது. ஆனாலும் அவன் குழந்தையை வைத்துக் கொண்டு எவ்வளவு நேரந்தான் நின்று கொண்டிருக்க முடியும்? – கொஞ்சம் துணிந்து அங்கிருந்த பெட்டி ஒன்றைச் சிறிது நகர்த்த முயன்றான்.

அவ்வளவுதான்; அந்தப் பெட்டிக்கு அடுத்தாற் போலிருந்த பெஞ்சியில் காலை நீட்டிக் கொண்டு படுத்திருந்த அதன் சொந்தக்காரர் சீறி எழுந்து, “சீ எடு கையை என்னிடம் சொன்னால் நான் நகர்த்த மாட்டேனா நீ எதற்கு என் பெட்டியைத் தொடணும்? எவ்வளவு பளு இருக்கிறது என்று பார்த்துக் கொள்கிறாயா கண்ணை மூடினால் அடித்துக் கொண்டு போய் விடலாமென்று எட்டிப் போடா, நாயே!” என்று இரைந்தார்.

உண்மையிலேயே நாச்சியப்பன் நாயாயிருந்திருந்தால் அவரைக் கட்டாயம் கடித்திருப்பான். அவன்தான் தன்மானமில்லாத மனிதனாயிருக்கிறானே, அதனால் கடிக்கவில்லை. அதற்குப் பதிலாக, “நானும் எவ்வளவு நேரமா நின்னுக்கிட்டு வர்றதுங்க? குழந்தை வேறே கையிலே இருக்குது. இல்லாட்டிப்போனா, தொட்டாத் தோசமில்லைன்னு தொட்டேன்; அதுக்கு இப்படிக் கோவிச்சுக்கிறீங்களே!” என்றான்.

“கோபித்துக் கொண்டேனா உன்னுடைய கையையே ஒடித்துப் போட்டிருப்பேன்; போனாற் போகிறதென்று சும்மா விட்டேன்” என்று உறுமினார் பெட்டிக்காரர்.

பொறுமை இழந்த நாச்சியப்பன், “அப்படிப்பட்டவரு இப்படிக் கும்பலிலே கோவிந்தா போட்டுக்கிட்டு வரக் கூடாதுங்க” என்றான்.

உடனே, “அதிகப் பிரசங்கி பல்லை உடைத்துவிடுவேன், பல்லை!” என்று முஷ்டியை மடக்கிக் கொண்டு எழுந்தார் பெட்டிக்காரர்.

அதற்குள் அங்கிருந்த சில பெரிய மனிதர்கள் “கிடக்கிறான் கழுதை விட்டுத் தள்ளுங்கள் ஸார்” என்று பெருந்தன்மையுடன் சொல்லி அந்தப் பெட்டிக்காரரை உட்கார வைத்தனர்.

“பல்லை உடைக்க வேண்டுமானா அவனைத் தொட வேண்டுமே என்று பார்க்கிறேன். இல்லை யென்றால் கட்டாயம் அவனுடைய முப்பது பற்களையும் உடைத்து கையில் கொடுத்திருப்பேன்!” என்று உச்சஸ்தாயியில் கத்திக் கொண்டே உட்கார்ந்தார் ‘உயர்ந்த ஜாதிக்கார’ரான பெட்டிக்காரர். “ஏன், வெளியே வீசி எறியப்படாதோ? கையில் தான் கொடுக்க வேண்டுமோ?” என்றார் அவருக்கு எதிர்த்தாற்போலிருந்த ஒரு அமுத்தல் பேர்வழி.

அவருக்கு அருகிலிருந்த ஒரு புரொபஸர் “தப்பு, தப்பு!மொத்தம் முப்பத்திரண்டு பற்கள், ஸார்!” என்று கூறி ஹோவென்று சிரித்தார்.

“எல்லாம் பார்த்துத்தான் சொன்னேங்காணும் அவனுக்கு முன் வரிசையில் இரண்டு பற்களைக் காணோம்” என்றார் பெட்டிக்காரரும் சிரித்துக் கொண்டே.

இந்தச் சமயத்தில் இன்னொரு பெரிய மனிதர் ஒரு சின்னச் சந்தேகத்தை கிளப்பிவிட்டார். “ஏன், ஸார் இவன் டிக்கெட் வாங்கியிருப்பானா?” என்னும் சந்தேகம் தான் அது!

அவன் டிக்கெட் வாங்கியிருக்காவிட்டால் தாம் வாங்கிக் கொடுக்கலாம் என்ற நோக்கத்துடன் அவர் அந்தச் சந்தேகத்தைக் கிளப்பிடவில்லை. “டிக்கெட் செக்கர் வந்து அவனை இறக்கிவிடுவதற்கு முன்னால் தாமே இறக்கி விட்டுவிடலாமே” என்ற பரந்த நோக்கத்துடன்தான் அந்தச் சந்தேகத்தை கிளப்பிவிட்டார்!

இதைக் கேட்டதும் நாச்சியப்பனுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. இருந்தாலும் அதை ஒருவாறு அடக்கிக் கொண்டு “நான் சின்ன மனுஷனுங்க; எனக்கு அந்தப் பெரிய மனுஷன் தில்லு முல்லெல்லாம் செய்யத் தெரியாதுங்க!” என்று சொல்லிக்கொண்டே, தன் மடியில் பத்திரமாக வைத்திருந்த டிக்கெட்டை அவன் எடுத்துக் காட்டினான்.

அதே சமயத்தில அடுத்த ஸ்டேஷனில் வண்டி நின்றது. எதிர்பாராதவிதமாக நாச்சியப்பன் ஏறியிருந்த பெட்டிக்குள் டிக்கெட் பரிசோதகர் ஏறினார். அவன் சொன்னதற்கு ஏற்றார் போல் அவரைக் கண்டதும் பெரிய மனிதர் ஒருவர் ஓடி ஒளியப் பார்த்தார். டிக்கெட் பரிசோதகர் அவரை விடவில்லை. விரைந்து சென்று “எங்கே டிக்கெட்?” என்று கேட்டார்; அவர்விழித்தார். உடனே அவரைக் கீழே இறக்கி விட்டுவிட்டு டிச்கெட் செக்கர் மேலே போனார்.

இந்தக் காட்சியைக் கண்டதும் எல்லோருடைய வாய்களும் அடைத்து விட்டன. நாச்சியப்பன் காலியான இடத்தில் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தான். தங்கள் சகாவிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்ட டிக்கெட் செக்கர்ரைப் பற்றி பெரிய மனிதர்கள் முணுமுணுத்தனர்.

இத்தனை ரகளைகளையும் அதுவரைகவனித்தும் கவனியாதவர் போலிருந்த பீதாம்பர முதலியார் “ஏன், அப்பா உனக்கு எந்த ஊர்?” என்று நாச்சியப்பனைப் பொழுதுபோக்குக்காகக் கேட்டு வைத்தார்.

“மாயவரம்தானுங்க!” என்றான் நாச்சியப்பன்.

“இப்பொழுது எங்கே பயணம்?”

“பட்டணத்துக்குத்தான்!”

“அங்கே என்ன வேலை?”

“வேலை என்ன வேலை! வயித்துப் பிழைப்புக்கு அங்கே ஏதாச்சும் வழி பிறக்கும்னுதான் போறேன்”

“இதற்குமுன்னால் நீ என்ன வேலை செய்து கொண்டிருந்தாய்?”

“மரம் ஏறிக்கிட்டு இருந்தேனுங்க”

அப்படின்னா நீ “மாஜி-கள் இறக்கும் தொழிலாளி போல இருக்கு!”

“ஆமாங்க”

“அதுதானே பார்த்தேன் – குடிக்கக் கள் இறக்கிக் கொடுத்து நீ எத்தனையோ குடிகளைக் கெடுத்தாயல்லவா? அந்தப் பாவமெல்லாம் சேர்த்து உன்னை இந்தக்கதிக்கு இப்போது கொண்டு வந்து விட்டிருக்கிறது” என்றார் புண்ணியம் செய்து வந்த முதலியார்.

நாச்சியப்பன், “இந்த இடத்திலேதானுங்க உங்களுக்கும் எனக்கும் வித்தியாசப்படுது. நீங்க சொல்றாப் போல நான் செய்தது பாவமா இருந்திருந்தா, நானும் உங்களைப் போலவே இருந்திருப்பேனுங்களே!” என்றான்.

முதலியாரை இது தூக்கிவாரிப் போட்டது. ஒரு கணம் அவர் அயர்ந்து போனார். மறுகணம் தம்முடைய இயற்கையான சுபாவத்தால் அதைச் சமாளித்துக் கொண்டு, “பேஷ், பேஷ்! உலகத்தில் பாவம் செய்கிறவர்கள் தான் நன்றாயிருக்கிறார்கள் என்று நீ சொல்கிறாய் போலிருக்கிறது! நல்ல ஆளப்பா நீ” என்று கூறிச்சிரித்தார். ஆனால் அந்தச் சிரிப்பு உள்ளத்தோடு ஒன்றவில்லை என்பதை அவருடைய பரந்த முகம் பளிச்சென்று எடுத்துக்காட்டியது.

இந்தச்சமயத்தில் தூங்கிக் கொண்டிருந்த முதலியாரின் குழந்தை விழித்துக் கொண்டு அழுதது. அதற்குள் பணக்காரத் தூக்கத்தில் சற்றே லயித்துவிட்டிருந்த அதன் தாயார், குழந்தை அழுததைக் கவனிக்கவில்லை. முதலியார் இதைக் கவனித்ததும் தம்முடைய மனைவியை மெல்லத் தொட்டு “தங்கம், தங்கம்” என்றார்.

தங்கம் திடுக்கிட்டு எழுந்து, “எந்தப் பட்டணம் பாழாய்ப் போச்சு?” என்று எரிந்து விழுந்தாள்.

முதலியார் நெருப்பை மிதித்துவிட்டவர்போல் குதித்து அவள் பக்கம் திரும்பி “இது கூட வீடா, என்ன? குழந்தை அழுகிறது என்று சொல்ல வந்தால் இப்படி எரிந்து விழுகிறாயே!” என்றார் பரிதாபத்துடன்.

தங்கம் போனாற் போகிறதென்று பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டாள்.

ஆனால் அந்தக் குழந்தையோ பொல்லாத குழந்தையாக இருந்தது. அது “கண்ணே என்றாலும் கேட்கவில்லை; கற்கண்டே” என்றாலும் கேட்கவில்லை; திறந்த வாயை மூடாமல் அழுத அந்தக் குழந்தையை எப்படி எப்படியெல்லாமோதேற்றிப்பார்த்தாள்தங்கம். அது எதையும் லட்சியம் செய்யவில்லை; பால் கொடுத்தாலும் குடிக்க மறந்து வீரிட்டு அழுதது.

முதலியார் பெட்டியைத் திறந்து ஒரு ‘கிளாக்ஸோ’ பிஸ்கட்டை எடுத்துக் குழந்தையிடம் கொடுத்தார். அந்தப் பிஸ்கட்டை வாங்கி அது ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்தது. பிறகு, கீழே விட்டெறிந்துவிட்டு ‘ஓ’வென்று அலறியது.

அடுத்தாற்போல் ஓர் ஆரஞ்சுப் பழத்தை எடுத்துக் கொடுத்தார்; அதையும் கீழே உருட்டி விட்டது.

முதலியார் சளைக்கவில்லை. “இது வேணுமாடா, ராஜா” என்று சொல்லிக் கொண்டே மூன்றாவதாக ஒரு ‘ஸெலுலாய்ட்’ பொம்மையை எடுத்துக் கொடுத்தார்.

அதை வாங்கிக் கொண்டதும் குழந்தை அழுகையை நிறுத்திவிட்டது. அதன் தாயார் மீண்டும் பணக்காரத் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டாள்!

“அப்பாடி மழை ஓய்ந்தது!” என்று சொல்லிக் கொண்டே முதலியார் நாச்சியப்பன் பக்கம் திரும்பினார்.

“இது என்ன மழை நம்ம குழந்தை அழறப்போ நீங்க பார்க்கணும்” என்றான் நாச்சியப்பன்.

“அவ்வளவுதான்; அதற்காக நீங்கள் காத்திருக்க வேண்டாம்!” என்று சொல்வது போல், அவனுடைய குழந்தை திடீரென்று விழித்துக் கொண்டு கத்த ஆரம்பித்து விட்டது.

‘கண்ணே, கற்கண்டே!’ என்று கொஞ்சுவதற்குப் பதிலாக, ‘சனியனே, பீடையே!’ என்று திட்டிக் கொண்டே நாச்சியப்பன் குழந்தையை தூக்கினான். அது தன் அழுகையை நிறுத்தவில்லை. அதற்காக நாச்சியப்பன் பெட்டியைத் திறந்து, ‘கிளாக்ஸோ’ பிஸ்கட்டையோ, ஆரஞ்சுப் பழத்தையோ, ‘ஸெலுலாய்ட்’ பொம்மையையோ எடுத்து அதன் கையில் கொடுக்கவில்லை; அவற்றுக்குப் பதிலாக அந்தக் குழந்தையின் கன்னத்தில் அவன் ‘பட்’ என்று ஓர் அறை கொடுத்துவிட்டுத் தன்னுடைய கோட்டுப் பையில் கையை விட்டான். அவன் எடுக்கப் போகும் வஸ்துவைப் பார்ப்பதற்காக முதலியார் தம் கண்களை ஆவல் மிகுதியால் அகல விரித்துக் கொண்டார். நாச்சியப்பன் ஒரு சின்னஞ்சிறு தகரடப்பியைக் கையில் எடுத்தான். அதற்குள் பாலா இருந்தது என்கிறீர்கள்? – இல்லை, அபின்!

“இதென்ன, அபின்போலிருக்கிறதே!” என்றார் முதலியார்.

“என்ன, அப்படிச் சொல்றீங்க? – இது அபினே தான்!” என்று சொல்லி, நாச்சியப்பன் அவருடைய சந்தேகத்தைத் தீர்த்து வைத்தான்.

“இது என்னத்துக்கு?” என்று முதலியார் ஒன்றும் தெரியாமல் கேட்டார்.

“நம்ம குழந்தைக்குத் தானுங்க!” என்று நாச்சியப்பன் சாவதானமாகச் சொன்னான்.

“அட, பாவி குழந்தைக்கு யாராவது அபினைக் கொடுப்பார்களா?” என்று அலறினார் முதலியார்.

நாச்சியப்பன் சிரித்துக் கொண்டே அழுத குழந்தையின் வாயில் கொஞ்சம் அதிகமாகவே அபினைத் திணித்தான். சிறிது நேரத்திற்கெல்லாம் அது அபின் தின்ன மயக்கத்தில் அயர்ந்து தூங்க ஆரம்பித்துவிட்டது. இனிமே பொழுது விடியும்வரை தொல்லையில்லிங்க!” என்று மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டே, அவன் அந்த டப்பியை எடுத்து மீண்டும் கோட்டுப் பையில் பத்திரமாக வைத்துத் தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

“இது அக்கிரமம்!” என்றார் முதலியார்.

“சட்ட விரோதம்!” என்றார்.அவருக்கு அருகில் இருந்தவர்.

“அதுக்கு நாங்க என்னங்க, பண்றது? அந்த எழவெடுத்த சட்டம் எங்களுக்கு விரோதமாய் இருக்குதுங்களே!” என்றான் நாச்சியப்பன்.

“ஏழைகளாயிருந்தால் என்ன? இந்த அபினுக்குப் பதிலாக பால் வாங்கி ஊற்றக் கூடாதா?”

“ஊத்தலாம்; இப்போகூட பால் ஊத்தித்தான் எடுத்துக்கிட்டு வந்தேன். ஆனா இது பசியை நெனைச்சுக்கிட்டு அழறப்போதெல்லாம் பால் வாங்கி ஊத்த என்னாலே முடியுங்களா?”

“உன்னாலே முடியாவிட்டால் என்ன? உன் மனைவி இல்லையா?”

“அதை ஏன் கேக்கிறீங்க உலக வழக்கத்தையொட்டிச் சொல்லப்போனா அவ ‘செத்துப் போயிட்டான்’னு மறைச்சுச் சொல்லணும். ஆனா நான் நிசத்தையே சொல்லிப்பிடறேன் – அவளுக்கு இல்லாத மானமா எனக்கு…?”

“அது என்னப்பா, அப்படிப்பட்ட விஷயம்….”

“அதுவுங்களா? என் தரித்திரம் என் பெண்டாட்டியைக் கூட என்னோட வாழ விடலீங்க… அவ அந்தப் பாவிப் பயலோட ஓடிப் போயிட்டா!”

“எந்தப் பாவி பயலோட…”

“அவனை என்னமா உங்களுக்குத் தெரியும்? அவன் எங்க ஊர்ப் பையன்; இந்தச்சண்டையிலே பாவ புண்ணியத்துக்கு அஞ்சாம பேரம் பண்ணி நாலு காசு சம்பாதிச்சு வச்சிருந்தான். அவனோட அவ போயிட்டா போன புண்ணியவதி சும்மாபோவாம இந்தச்சனியனை வேறே என் காலிலே கட்டிட்டுப் போயிட்டா…ம்….அவ என்ன பண்ணுவா மனசு கேட்கா விட்டாலும் வயிறு கேட்குதா?”

“சரி, அவள் போனால் போகிறாள். நீ இருக்கிறாயோ இல்லையோ?”

“நான் இருந்து என்னத்தைப் பண்றதுங்க? பொழைப்பைத் தேடி போவேனா, இந்தப் புள்ளையைப் பார்த்துக்கிட்டு இருப்பேனா? – அதுக்குத்தான் இதுக்குத் தினம் கொஞ்சம் அபினைக் கொடுத்துப் படுக்க வச்சுடுவேன்; இது போதையிலே விறைச்சுக்கிட்டுக் கிடக்கும். என்பாட்டுக்கு என் வேலையை பார்க்க எங்கேயாச்சும் போயிடுவேன்…!”

“ஆமாம், இப்போதுதான் ‘இந்த இழவு’களை யெல்லாம் சர்க்கார் ஒழித்து விட்டார்களே, இது உனக்கு ஏது?”

நாச்சியப்பன் சிரித்தான். “உங்களைப் போலொத்த ‘பெரிய மனுஷ’ருங்க இருக்கிறப்போ, லோகத்திலே எது தான் கிடைக்காதுங்க? ஒண்ணுக்கு நாலு விலை கொடுத்தா கிடைக்காததெல்லாம் கிடைக்குங்களே!” என்றான்.

அவ்வளவுதான்; முதலியாருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. “டேய் ஜாக்கிரதையாப் பேசு! நீ நினைப்பது போல் நான் பெரிய மனுஷனுமில்லை; பிளாக் மார்க்கெட்காரனுமில்லை!” என்று ஒரு துள்ளுத் துள்ளினார்.

“போயும் போயும் அந்த அற்பப் பயலோடு நீங்கள் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தீர்களே? அப்போதே அவனைப் பேசாமல் போலீஸாரிடம் பிடித்துக் கொடுத்திருக்க வேண்டும்!” என்றார் முதலியாருக்குப் பக்கத்தில் இருந்தவர்.

இதைச் சொன்னதும் நாச்சியப்பன் வெலவெலத்துப் போய்த் தன்னிடம் சரணாகதியடைந்து விடுவான் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் அவனோ விழுந்து விழுந்து சிரித்தான்.

முதலியார் அவனை ஏற இறங்கப் பார்த்தார். “எதற்கும் ஒரு தகுதி வேண்டாமா? தகுதியில்லாதவனிடமெல்லாம் போய்த் தக்கவற்றைப் பேசிக் கொண்டா இருப்பது? போலீஸைக் கூப்பிடுங்கள், ஸார்” என்றார் முதலியாருக்கு எதிர்த்தாற்போல் இருந்தவர்.

‘ரயிலோ ஓடிக் கொண்டிருக்கிறது; போலீஸும் இந்தப் பெட்டிக்குள் இல்லை’ என்று வேடிக்கையாகக் கையை விரித்தார் புரொபஸர்.

‘போனாற் போகிறது, புண்ணியமாய்ப் போகட்டும் என்று பார்த்தேன். இவன் இவ்வளவு அதிகப்பிரசங்கியாயிருப்பான் என்று நான் கண்டேனா? அடுத்த ஸ்டேஷன் வந்ததும் இவனைக் கட்டாயம் போலீஸாரிடம் பிடித்துக் கொடுத்துவிட வேண்டியதுதான்!” என்றார் முதலியார்.

நாச்சியப்பன் சிரித்துக் கொண்டே இருந்தான். “கொஞ்சம் பொறு; தம்பி! சும்மா சிரித்துக் கொண்டே இருக்கிறாயே!” என்றார் முதலியார் பல்லைக் கடித்துக் கொண்டு. அதற்குள் அடுத்த ஸ்டேஷன் வந்து விட்டது. வண்டியும் நின்றது. வண்டி நின்றதோ இல்லையோ ‘போலீஸ், போலீஸ்’ என்று கத்தினார் முதலியார். அவரைப் பின்பற்றி அவருடைய ரயில் நண்பர்கள் எல்லோரும் ‘போலீஸ், போலீஸ்’ என்று கூக்குரலிட்டனர்.

‘என்னமோ ஏதோ என்று இரண்டு போலீஸ் ஜவான்கள் அவர்கள் இருக்குமிடத்துக்கு விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தனர். நாச்சியப்பனை அவர்களுக்குச் சுட்டிக் காட்டி “இவன் அபின் வைத்திருக்கிறான்; இவனைப் பிடித்துக் கொண்டு போங்கள்!” என்று ஏக காலத்தில் எல்லோரும் காட்டுக் கத்தலாகக் கத்தினர்.

அப்பொழுதும் நாச்சியப்பன் அவர்கள் எதிர்பார்த்தபடி பதுங்கவுமில்லை; பயப்படவுமில்லை; தயங்கவுமில்லை, தாமதிக்கவுமில்லை. அமைதியுடன் எழுந்தான்; அலுப்புடன் குழந்தையைத்துக்கினான்.

பாவம் அளவுக்கு மீறிய அபின் மயக்கத்தால் அந்தக் குழந்தை இல்லிட்டுப் போயிருந்தது; அதனுடைய கடைசி மூச்சும் நின்றுவிட்டிருந்தது.

“இனிக் கவலை யில்லை; கடவுள் இப்பொழுது தான் என்னிடம் கருணை காட்டியிருக்கிறார்!” என்றான் நாச்சியப்பன்.

போலீஸார் அவன் கையைப் பற்றினர். “மவராசர்கள்! நல்லாயிருக்கணும். என்ன இருந்தாலும் கொஞ்ச காலம் எனக்கு வயிற்றுக் கவலை இல்லாமல் செய்த புண்ணியம் அவர்களைச் சேர்ந்தது தானே!” என்று அவன் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *