(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மறுபடியும் இன்றைய தினம் கொடும்பாவி கட்டி இழுத்தார்கள். ஆமாம், கொடும்பாவி என்று என்ன பெயர்? இருக்கட்டும். குடியானவர்கள் ஒரு கையில் ஒரு பிடி நெற்பயிரை வைத்துக்கொண்டு மற்றொரு கையால் கொடும்பாவியைத் தெருவழியே இழுத்துச் சென்று, கடைக்குக் கடை நின்று, கொடும்பாவியின் புருஷன் சூரியனைத் திட்டி, மாரில் அடித்துக் கொண்டு வைத்த ஒப்பாரியைக் கேட்டபொழுது (நடிப்பு ஒப்பாரியாக இருந்த பொழுதும் கூட) என் உள்ளம் உருகிப் போய்விட்டது. பாவம்! மண்மீது மழையில்லை என்றால், வயிற்றில் மண்தானே! எனவே “மானம் பார்த்த” சீமையென்று சில இடங்களை ஏளனம் செய்தது தப்பல்லவா? ஆறு, குளங்கள் உள்ள ஊர்க்காரர்களுக்குக் கூடத்தான் பார்க்க வேண்டும். இரண்டு மானத்தையும் தான் – ஒரு ‘மான’த்தை வயிற்றுக்காகவும் மற்றொன்றை ஜீவனுடைய தீராத பசியாகிய கௌரவத்திற்காகவும்.
மழைக்குக் கொடும்பாவி இடத்தில் ஏன் அவ்வளவு பயம்? ஆனால் பயமென்று எப்படிச் சொல்லலாம்? அனுதாபமாயிருக்கலாம்; அல்லது குடியானவர்கள் சொல்வதுபோல் சூரியனுடைய காதல் கட்டழகியாகிய கொடும்பாவியின் மீதுள்ள போட்டிப் பிரேமையாயிருக்கலாம்.
எப்படி இருந்தாலென்ன? இதோ மழை வந்துவிட்டது. ஜில்லென்று தாமரைத் தண்டுகள் தொடுவதுபோல் மேலே காற்று வீசுகிறது. வானம் மைக்காரியாகி விட்டது. நக்ஷத்திரங்களெல்லாம் வழி தெரியாமல் விழுந்து விட்டன. அடடா! வானில் என்ன கத்தி விளையாட்டு! என்ன இடி முழக்கம்! கொல்லைப் புறத்திலிருந்து தவளைகள் தங்கள் தெய்வத்தை வரவேற்பதற்காக முறை வைத்துப் பாட ஆரம்பித்து விட்டன. எவ்வளவு தினிசுகள்! – வேத பாராயணம், துடுக்குப் பேச்சு, எந்திரம் அறைத்தல், கிஞ்சிரா, மிருதங்கத்தின் ஒலி, ஒற்றைக் குரல், அதிகாரக் குரல், அடடா! வர்ணிக்க வார்த்தை எனக்குத் தெரிந்தாலல்லவா!…
– மனநிழல் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.