கதையாசிரியர்:
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: November 27, 2024
பார்வையிட்டோர்: 983 
 
 

முல்லைப் பெரியாறு ஆர்ப்பாட்டக் கூட்டத்தை அள்ளக் கண்ணில் நோட்டமிட்டபடியே அந்தரத்தில் தூக்கி ஊற்றி அனாயாசமாக சாயா ஆற்றிக்கொண்டிருந்தார் கேளுக்குட்டி. சுங்கம் ஜங்ஷனில் கூடியிருந்த அவர்கள் கேரள அரசாங்கத்துக்கு எதிராகவும், கேரளத்தில் தமிழக வாகனங்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பிக்கொண்டிருந்தனர். பொள்ளாச்சி வட்டாரத்திலிருந்து சற்று முன் திடுதிப்பென லாரியில் வந்து இறங்கியிருந்த அக் கூட்டத்தில் எழுபது – எண்பது பேர் இருப்பார்கள். பெரியாறு விவகாரத்தை முன்வைத்து தற்போது கவனம் பெற்றுவரும் புதிய போராட்டக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. முன்னறிவிப்போ அனுமதியோ இல்லாததால் போலீஸ் பாதுகாப்பும் இல்லை. சுற்றுப்புற மக்கள் இவரைப் போல தத்தமது வேலைகளில் ஈடுபட்டபடியோ, வேலையை விட்டுவிட்டு வந்து நின்றோ ஆர்ப்பாட்டத்தை வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்.

“ங்க் – ம்ம்…! அவிக பளைய டேம்ப இடிச்சுட்டு புது டேம்பு கட்டியே ஆகோணும்ங்கறாங்கொ; இவிக அது ஆகவே ஆகாதுங்கறாங்கொ. ரெண்டு கெவுருமென்டுகளும் மல்லுக் கட்டீட்டிருக்கறது பத்தாதுன்னு, கச்சியான கச்சிக்காரங்க அத்தன பேரும் அங்கீமு, இங்கீமு எப்பப் பாத்தாலும் மாநாடு – மறியலு, ஸ்டைக்கு – பந்து, உண்ணாவிரதம் – ஆர்ப்பாட்டம், அருத்தாலு – கிருத்தாலுன்னு சகுட்டுத்துக்கு நடத்தீட்டிருக்கறாங்களே…! இதனால பொது சனங்க போக்குவரத்துக்கு எடங்கேடுதானே தவுத்து வேற புண்ணியமுண்டா? எங்கியோ கெடக்கற இந்தப் பிரசனைனாலதான் இப்ப இங்க இருக்கறவீகளும், இது வளி போற வாறவீகளும் சிக்கீட்டுச் சீக்கியடிக்கறாங்கொ. அதும் பத்தாதுன்னு இப்ப ஆர்ப்பாட்டக்காரனுக வேற வந்து, எரியற ஊட்ல பெட்ரூலு ஊத்தறானுகொ” தனக்குத் தானே மெல்லிய சத்தத்தில் அங்கலாய்த்தபடி புரோட்டாக்களைச் சுட்டு அடுக்கிக்கொண்டிருந்தான் சிவமணி.

கேரளத்தில் தமிழக வாகனங்கள் தாக்கப்படுவதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாகவே கோபாலபுரத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.

பொள்ளாச்சி – பாலக்காடு வழித்தடத்தில் தமிழக – கேரள எல்லையாக அமைந்த ஊர் அது. சுங்கம் பகுதியில் கேரளத்தின் சுங்க (வணிக) வரி அலுவலகம் மற்றும் சோதனைச் சாவடி கொண்ட பகுதியிலிருந்து மேற்கே கேரளம், கிழக்கே தமிழகம். ஊரில் கேரளத்துக்குட்பட்ட பகுதியும் சிறிதளவு உண்டெனினும் பெரும்பான்மையான பகுதி தமிழகத்துக்கு உட்பட்டதே.

கோவை மாவட்டத்தின் முக்கிய எல்லை வழித்தடங்களில் ஒன்றானதும், பொள்ளாச்சி வட்டத்திலிருந்து கேரளா செல்லும் வழித் தடங்களில் முதன்மையானதுமான கோபாலபுரம், சரக்கு வாகனங்களின் போக்குவரத்து

மிகுந்ததாகும். கேரளத்துக்கு தமிழகத்திலிருந்தும், தமிழகம் வழியாகவும் வருகிற பல வகை சரக்கு லாரிகளோடு, தமிழகத்திலிருந்து அரிசி, பால், காய்கறி ஆகிய அத்தியாவசிய உணவுப் பொருட்களும், கேரளியர்களின் அடிப்படை உணவுப் பண்டங்களான அடிமாடுகள், எருமைகள் ஆகியவற்றின் பாரமேற்றிய லாரிகள், டெம்ப்போக்களும் இரவு பகலாகச் சென்றுகொண்டேயிருக்கும். தமிழக ரேஷன் அரிசி, எரி சாராயம், மணல் ஆகியவற்றின் கள்ளக் கடத்தல்களுக்கும் பெயர் பற்ற வழித்தடம் இது.

வருடம் முழுதும் உள்ள இந்தப் போக்குவரத்துகளோடு இப்போது சபரிமலை சீஸனாதலால் ஐயப்ப பக்தர்கள் கட்டு நிறை யாத்திரை மேற்கொண்ட வேன், கார், ஜிப்ஸி, பேருந்து வகையறாக்களும் இவ்வழி வந்து போய்க்கொண்டிருந்தன. வழக்கமாக வருகிற கிழக்கு மாவட்ட பக்தர்கள் தவிர இம் முறை மதுரை, தேனி மாவட்ட பக்தர்களும் இவ் வழியே வந்து சென்றுகொண்டிருந்தனர். முல்லைப் பெரியாறு அணைப் பாசனம் பெறும் அம் மாவட்டங்களில் தற்போது விவசாயிகள், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் என அனைத்து தரப்பினருமாக ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கிற மாபெரும் போராட்டங்கள் நடந்துகொண்டிருப்பதோடு, அங்கிருந்து கேரளா செல்லும் தேனி மாவட்ட எல்லை வழித் தடங்களான கம்பம், குமுளி, போடி சாலைகளில் போக்குவரத்து முழுமையாகத் தடைபட்டுமிருப்பதாலேயே அவ்விரு மாவட்ட பக்தர்களும் மாற்றுப் பாதையாக இந்தச் சுற்று வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டியதாயிற்று.

இந் நிலையில்தான் முல்லைப் பெரியாறு விவகாரத்தின் விளைவாக கேரளத்தில் வன்முறை சம்பவங்கள் வெடிக்கலாயின. தமிழகப் பேருந்துகள், லாரிகள் மீது கல்வீச்சுகள் நடைபெற்றதோடு, சபரிமலை யாத்திரை முடிந்து திரும்பிக்கொண்டிருந்த தமிழக பக்தர்களின் வாகனங்களும் குருவாயூர், சோட்டானிக்கரை முதலான கோவில் வளாகங்களிலேயே தாக்கிச் சிதைக்கப்பட்டிருந்தன. செய்திகள் வெளியாகி, தமிழகம் முழுதுமே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்ததோடு, எல்லைப் பகுதிகளெங்கும் பதற்றத்தையும் உண்டாக்கியிருந்தது. மற்ற எல்லைப் பகுதிகள் போலவே கோபாலபுரத்திலும் முந்தா நாளிலிருந்து கேரளத்துக்குள் செல்லும் தமிழகப் பேருந்துகள், சரக்கு உந்துகள், பயணியர் மற்றும் பக்தர்களின் வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் யாவும் தடுக்கப்பட்டோ தாமாகவோ நிறுத்தப்பட்டுவிட்டன.

சுங்கத்துக்கு ஒரு கிலோ மீட்டர் முன்னதாக உள்ள தமிழக சாலை வரிச் சோதனைச் சாவடியிலேயே பேருந்துகள் நிறுத்தப்பட்டு, பயணிகள் அங்கிருந்து நடந்து வந்து, கேரளக் கோபாலபுரத்திலிருந்து கொழிஞ்ஞாம்பாறைக்கும் பாலக்காட்டுக்குமாக பேருந்துகள் மாறவும், அங்கிருந்து வேறு ஊர்களுக்குச் செல்லவும் ஆயிற்று. சரக்கு உந்துகள் செய்வதறியாது எல்லைக்கப்பாலேயே நின்றுகொண்டிருந்தன. தனியார் பயணியர் மற்றும் சுற்றுலா வாகனங்கள் பயணத்தை ரத்தாக்கிக்கொண்டன. ஐயப்ப பக்தர்களும் வண்டிகளைத் திருப்பி, பொள்ளாச்சியிலுள்ள ஐயப்பன் கோவிலில் மாலை கழற்றி விரதம் முடித்துக்கொண்டு ஊர் திரும்பினர்.

நேற்றிலிருந்து கேரளாவுக்குள் செல்லும் பேருந்துகள் பொள்ளாச்சியிலிருந்து இயக்கப்படவேயில்லை. கோபாலபுரம் வருகிற நகரப் பேருந்துகள் கூட ஊரெல்லைக்கு அப்பாலேயே நிறுத்தப்பட்டு, பயணிகள் அங்கிருந்து பாத யாத்திரை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. தகவலறியாது வந்துகொண்டிருக்கும் தமிழக சரக்கு வாகனங்கள், ஊரெல்லைக்கு அரை கிலோ மீட்டர் அப்பால் உள்ள, பத்தடி உயர மினியேச்சர் ‘அய்யன் திருவள்ளுவர்’ சிலை வரை வரிசை பிடித்து நிறுத்தப்பட்டிருந்தன. ஊடகச் செய்திகள் மற்றும் அலைபேசித் தகவல்களால் நிலவரத்தை அறிந்து கொண்ட கிழக்கத்திக் காய்கறி வியாபாரிகள், வண்டியை வடக்கே திருப்பி, ஆந்திராவுக்கும் கர்நாடகாவுக்குமாக அண்டை மாநில ஏற்றுமதிகளை மாற்றிக்கொண்டார்கள்.

இப்படியான தருணத்தில் இந்த ஆர்ப்பாட்டம், சிவமணி சொல்கிறபடி, தீயில் பெட்ரோல் ஊற்றியதாகத்தான் இருக்கும் என்று எண்ணிக்கொண்டே நுரைத்த டம்ளர்களை முன் கட்டு பெஞ்சுகளில் விநியோகித்துவிட்டு கல்லாவில் அமர்ந்துகொண்டார் கேளுக்குட்டி.

அன்றைய தமிழ். மலையாள நாளிதழ்களின் பிரிக்கப்பட்ட தாள்களும் கையுமாக சாயா பருகிக்கொண்டிருந்த தமிழர், மலையாளி வாடிக்கையாளர்கள், பெரியாறு அணையின் 32 ஆண்டு கால விவகாரங்கள் குறித்தும், தற்போது இரு மாநிலங்களிலும் நிலவிக்கொண்டிருக்கிற பதற்ற நிலைகள் குறித்தும் விவாதிக்கலாயினர். உள் கட்டில் சிற்றுண்டியோ சாப்பாடோ சாப்பிட்டுவிட்டு வருகிற வாடிக்கையாளர்களின் பில்லுக்குப் பணம் வாங்கிக்கொண்டே கேளுக்குட்டியும் விவாதத்தில் நடுநிலைப் பங்கேற்றார். சூடான வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு இரு தரப்பினரிடமுமே எழுந்த கேள்வி, ‘இந்தப் பிரச்சனை எப்போது தீரும்?’ என்பதுதான்.

“ரெண்டு கவர்மென்ட்டுகளும் ஒரு ஒத்து தீர்ப்பு(சமரசம் )க்கு வராம இதுக்கொரு முடிவு கெடைக்கப் போறதில்ல. ஆனா, நாளுக்கு நாள் விவகாரம் முத்தீட்டு இருக்குதே அல்லாம கொறையற பாட்டக் காணமே! இவ்வளவு காலமாச்சும் ரெண்டு ஸ்டேட்டுலயும் மாநாடு – மறியல், சமரம் (வேலை நிறுத்தம்) ஹர்த்தால் – பந்த், மனிதச் சங்கிலி – கொடும்பாவி எரிப்பு உண்ணவிரதம்னு அமைதியாப் போயிட்டிருந்தது. இப்ப கேரளாவில வன்முறை சம்பவங்களும் நடக்க ஆரம்பிச்சிருக்கறதாக்கும் கவலைப்பட வேண்டிய விஷயம். இப்பவே அதனால இங்கிருந்து போக்குவரத்தும், சரக்கு அனுப்பறதும் மொடக்கமாயிருச்சு. இனியும் என்னெல்லாம் நடக்கப் போகுதோ…!” என்று விசனத்தோடு கேளுக்குட்டி விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சில சமயங்களில் சாமான்யர்களின் வாக்கும் தீர்க்க தரிசனமாகிவிடுகிறது. அதிலும் கேளுக்குட்டி சொன்னது, சொல்லி முடித்ததுமே பலித்துவிட்டது.

உத்தராயண வெயிலில் தொண்டைத் தண்ணி வத்த கோஷமெழுப்பிக்கொண்டிருந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தினர் சட்டென்று

மௌனமாகி லாரியை நோக்கிச் சென்றனர். ஆர்ப்பாட்டம் முடிந்து திரும்புகிறார்கள் என யாவரும் கருதிக்கொண்டிருக்கையில், லாரியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த உருட்டுக் கட்டைகள், எறி கற்கள் ஆகியவை அவர்களது கைக்கு வந்தன. முப்பது – நாற்பது பேர் கொண்ட இரு கும்பல்களாகப் பிரிந்து, சாலையின் இரு மருங்குகளிலும் படையெடுத்தனர். உள்ளூர் உளவாளிகளின் கைகாட்டுதலோடு மலையாளிகளின் கடைகள், வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டன.

எல்லைக் கோட்டின் மீதே அமைந்த ஊராதலால் கோபாலபுரத்தின் தமிழக – கேரளப் பகுதிகள் இரண்டிலுமே தமிழர்களும் மலையாளிகளும் ஏறத்தாழ சம அளவில் வசிக்கின்றனர். கட்டிடங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களிலும் இத்தகைய விகிதாச்சாரம்தான். எனவே, கும்பல் மொத்தமும் ஒரே கடையில் குழுமினால் மற்றவர்கள் சுதாரித்துவிடக்கூடும் என்று நாலைந்து பேர் கொண்ட குழுக்களாகப் பிரிந்து இலக்குகளை ஏக காலத்தில் தாக்கினார்கள். அடித்து நொறுக்கும் சத்தங்களும், கூச்சல் குழப்பங்களும், அலறல் – ஆவலாதிகளும் இரு திசைகளில் நிறைந்தன.

வல்ஸலா உணவகம் முற்றுகையிடப்படும் முன்பே, முன்கட்டில் வறப் பீடி வலித்துக்கொண்டிருந்த முல்லைப் பெரியாறு விவாதக் குழு நழுவிவிட்டது. உள்கட்டில் உணவருந்திக்கொண்டிருந்தவர்களும் பாதி சாப்பாட்டோடு பதறி எழுந்து, கைகளைக் கழுவியும் கழுவாமலும் தப்பியோடினார்கள். பரிமாறும் பணியில் ஈடுபட்டிருந்த ப்ரமோத், கலவரக் கும்பல் நுழைந்தபோதே தடுக்க முற்பட்டான். உருட்டுக்கட்டையை ஓங்கி மிரட்டி அவனைத் தள்ளிவிட்ட கும்பல், கண்ணாடி அடுக்கறைகள், தின்பண்டங்கள் அடங்கிய பாட்டில்கள், குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, பண்ட பாத்திரங்கள் என அனைத்துப் பொருட்களையும் ஆவேசத்தோடு அடித்து நொறுக்கியது. சமையற்கட்டில் மாலை, இரவு நேரங்களுக்கான காய்கறிகளை நறுக்கிக்கொண்டிருந்த வல்ஸலா நெஞ்சு நெஞ்சாக அடித்துக்கொண்டு அரற்றினாள். அதைக் கண்டு ஆர்ப்பரித்த கும்பல் உணவுப் பதார்த்தங்களையும் உள்ளேயே கொட்டிக் கவிழ்த்து ஊழித் தாண்டவமாடியது. கல்லாவிலிருந்த கேளுக்குட்டியும், கல்லடுப்பிலிருந்த சிவமணியும் கையறுநிலையோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.


கண்ணுக்குத் தென்படாத, ஆனால் இரு மாநில அரசுகளும் வரைபடங்களில் குறித்து வைத்திருக்கிற எல்லைக்கோட்டை ஒட்டியே, கேரள கோபாலபுரத்துக்குள் கேளுக்குட்டியின் வீடு. கடந்த மூன்று தினங்களாக அவரது இருப்பிடமாகவும் படுப்பிடமாகவும் ஆகியிருந்த சாய்வு நாற்காலியில் சோர்ந்து கிடந்தார் கேளுக்குட்டி. மூடிய கண்களுக்குள் எத்தனையாவது தடவையாகவோ அந்தக் கடந்த காலக் காட்சிகள்… வெம்பி வறண்ட நெஞ்சுக்குள் அந்தப் பசுமை நினைவுகள்…

இருபத்து மூன்று வருடங்களுக்கு முன்பு, இன்று காணும் இரு சாரி வணிக வளாகங்களோ, மற்ற காங்க்ரீட் கட்டிடங்களோ இல்லாமல், விரல்விட்டு எண்ணக் கூடிய வீடுகளும், ஓரிரு கடைகளும், சோதனைச் சாவடிகளும் மட்டுமே கொண்டதாக கோபாலபுரம் குக்கிராமமாக இருந்த காலம். அப்போது கேளுக்குட்டிக்குத் திருமணமாகியிருந்த புதிது. அதுவரை வேற்றூர் கடையில் டீ மாஸ்ட்டராகப் பணி புரிந்துகொண்டிருந்த அவரை, “எத்தனை காலத்துக்கு அடுத்தவங்ககிட்ட வேலை பாத்துட்டிருப்பீங்க? நீங்க வாங்கற சம்பளம் நமக்கே பத்தறதில்ல. நாளைக்கு நமக்கு கொழந்த குட்டிக ஆயிட்டா, அதுகள எப்படிக் காப்பாத்தறது? நாம கஷ்டப்பட்டாலும் அவங்கள நல்லபடியா வளத்தணுமில்லையா?” என்று தூண்டிவிட்டு, சுய தொழில் செய்ய வைத்தவள் புது மனைவியாக இருந்த வல்ஸலா. அவளது ஊக்கத்தாலேயே அவள் கழற்றிக் கொடுத்த நகைகளை விற்று, அப்போது சகாய விலையில் கிடைத்த நான்கரை சென்ட் நிலத்தை வாங்கி, அவள் மண் குழைத்துத் தர இவரே சுவர் எழுப்பி, மூங்கில்களையும் தடுக்குகளையும் அவள் எடுத்துத் தர இவரே கூரையும் வேய்ந்து, சிறியதொரு ஓலைச் சாளையால் ஆன சாயாக்கடையாக அவர்களின் எதிர்காலக் கனவுகளை எளிமையாகக் கட்டியிருந்தார்கள்.

ப்ரமோத் பிறந்தபோது மண் சுவர் செங்கல் சுவராயிற்று. ப்ரஷீதா பிறந்த பின்பு ஓலைக் கூரை ஒட்டுக் கூரையாயிற்று. அவர்கள் வளர்ந்து வரும் காலங்களில் சாயாக்கடை பேக்கரியாகவும், பின்பு உணவகமாகவும் ஆயிற்று.

கடை விருத்தி, குழந்தைகள் வளர்ச்சி, கோபாலபுரத்தின் மேம்பாடு ஆகிய மூன்றுமே ஏக காலத்தில் நடந்தது எனலாம். ஆங்காங்கே ஓரிரு கட்டிடங்களாக எழத் துவங்கி, சுங்கம் பகுதியில் கடை கண்ணிகள் பெருகியபோதுதான் அது வரை பெயர்ப்பலகை தேவைப்பட்டிராத இவர்களின் உணவகத்துக்கும் அதை வைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. குழந்தைகளில் யாருடையதாவது பெயரை வைக்கலாம் என வல்ஸலா முன்மொழிந்ததை மறுத்து, கடை உருவாக்கத்துக்கும், அதன் விளைவான தனது வாழ்வியல் முன்னேற்றத்துக்கும் காரணமாக இருந்த அவளின் பெயரையே கேளுக்குட்டி சூட்டினார்.

வல்ஸலா உணவகம் அவரைப் பொறுத்த வரையில் வெறும் ஒரு வியாபார ஸ்தலம் மட்டுமல்ல. கனவுகளாலும் நனவுகளாலும் நிர்மாணிக்கப்பட்டிருந்த அவரது குடும்பத்தின் வாழ்வாதாரம். வல்ஸலாவால் உண்டாக்கப்பட்ட அவர்களது உயர் வாழ்வின் அஸ்திவாரம். இளம் தம்பதியரின் கனவாக இருந்து, இப்போது நனவாகிவிட்ட மேலான வாழ்வை அவர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் காங்க்ரீட் ஜீவன். மூன்று நாட்களுக்கு முன்பு அதை அந்தக் கலவரக் கும்பல் தாக்கிச் சிதைத்ததை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

பாதிக்கப்பட்ட மலையாளிகள் சார்பில் புகார் கொடுக்கப்பட்டு, விசாரணை, தேடல், கைது என ஒருபுறம் நடந்துகொண்டிருக்கிறது. மறுபுறம் கடையைச் செப்பனிடுவதற்கான ஏற்பாட்டில் ப்ரமோத்தும் சிவமணியும் ஈடுபட்டிருக்கிறார்கள். கேளுக்குட்டி இவை எதிலும் பங்கேற்காமல், வீட்டை

விட்டு வெளியே கூடப் போகாமல், சாய்வு நாற்காலியில் தளர்ந்து படுத்தபடி, கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் எண்ணிக் கவலைப்பட்டுக்கொண்டேயிருந்தார்.

இப்போதும் அவ்வாறே துயரத்தில் மூழ்கியிருந்தவரை, “ஏங்க,… எந்திரிங்க. என்னவொரு கெடப்பு இது,… சாயந்திரமாகி வெளக்குப் போட்டது கூடத் தெரியாம. அப்படியே தூங்கீட்டீங்களோ என்னமோன்னுதான் நானும் இவ்வளவு நேரம் எழுப்பல. இந்தாங்க ச்சாயா” என்ற வல்ஸலாவின் குரல் எழுப்பியது.

கண்களைத் திறந்து, நிமிர்ந்து, டம்ளரை வாங்கிக்கொண்ட பின்பும் அவள் அகலவில்லை. கடந்த நாட்களில் இவரோடு சேர்ந்து ஆவலாதிப்பட்டுக்கொண்டிருந்த அவளே இப்போது, “வர்றது வழீல தங்காதுன்னு சொல்ற மாதிரி, நடந்தது நடந்து போச்சு. அதையே நெனைச்சு வருத்தப்பட்டிருந்தா எப்படி? நமக்கு மட்டுமா நஷ்டமும் கஷ்டமும்? ஊருல உள்ள எல்லா மலையாளி கடைக்காரங்களுக்கும்தானே! அது மட்டுமில்லாம அன்னைக்கு மட்றாஸ், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோயம்பத்தூர்னு பல எடங்கள்லயும் ஆலூக்காஸ் ஜ்வல்லர்ஸ், அரோமா பேக்கரி உள்பட மலையாளிகளோட கடைகளையும் கம்பெனிகளையும் அடிச்சு ஓடைச்சு நாசம் பண்ணியிருக்கறாங்களே…! கேரள பஸ்சு லாரிகள்லயும் கல்லெறிஞ்சதாவும் தீக்கொளுத்துனதாவும் பேசிக்கறாங்க. பாதிக்கப்பட்ட எல்லாருமா உங்கள மாதிரி இடிஞ்சு போயிப் படுத்துட்டாங்க? பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கமங்கற மாதிரி, யாரோ செஞ்ச அக்கிரமத்துக்கு இப்ப நம்மள மாதிரி பலரும் அனுபவிக்க வேண்டியிருக்கு. ஆள் சேதம், அங்க சேதமில்லாம, பொருள் சேதத்தோட போச்சேன்னு சமாதானப்பட்டுட்டு, இனி ஆக வேண்டிய காரியங்களப் பாருங்க” என்றாள்.

அவளது அந்தப் பேச்சும், அவளது நம்பிக்கையூட்டலும் அவருக்கு ஆறுதலாக இருந்தது. வேறு பலரும், ப்ரமோதும் ப்ரஷீதாவும் கூட இதையே சொல்லியிருந்தபோதும் ஏற்பட்டிராத ஆசுவாசம் இப்போது ஏற்பட்டது. தனது ஆதாரமே அவள்தான் என்பதை மீண்டும் உணர்ந்தவர், அவளை ஒப்புக்கொள்ளும் விதமாக மெலிதாக முறுவலித்தபடி, “அந்த ட்டீவியக் கொஞ்சம் ஆன் பண்ணி நியூஸ் போட்டு விடு” என்றார்.


கோபாலபுரம் இன்னமும் வெறிச்சோடியிருந்தது. காலை மணி பத்தரை ஆகியும் அந் நேரத்துக்குரிய மனிதக் கூட்டங்களோ வாகனப் போக்குவரத்துகளோ காணப்படவில்லை. பெரும்பாலான கடை கண்ணிகள் திறக்கப்படவுமில்லை. திறந்துள்ளவற்றிலும் சொற்ப வாடிக்கையாளர்களே தென்பட்டனர். இரவு பகல் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிற சோதனைச் சாவடிகளும் சோம்பியிருந்தன.

கொந்தளிப்பு மிகுந்திருந்த கடந்த மூன்று நாட்களாக தமிழகத்திலிருந்து கேரளத்துக்குள்ளும், கேரளத்திலிருந்து

தமிழகத்திற்குள்ளும் செல்கிற பேருந்துகள் எதுவும் எங்குமே இயக்கப்பட்டிருக்கவில்லை. அரசியல் மட்டங்களிலும் அதிகாரிகள் மத்தியிலும் பேச்சுவார்த்தைகள் நடந்து, இன்று முதல் எல்லையில் தமிழக போலீஸ் பாதுகாவலுடன் போக்குவரத்து தொடங்கியிருந்தது.

வல்ஸலா உணவகத்தில் செப்பனிடப்படும் பணிகள் நடந்துகொண்டிருந்தன. கேளுக்குட்டி முன்னே நின்று மேற்பார்வையிட்டுக்கொண்டிருந்தார். அப்போது வாசலிலிருந்து, “ஐயா…” என்று ஒரு பெண் குரல் அழைப்பு.

திரும்பிப் பார்க்கையில் பரட்டைத் தலைகளும், நைந்த ஆடைகளும், துயர முகங்களுமாக ஒரு தமிழ்க் குடும்பம் நின்றிருந்தது. முப்பதுகளிலுள்ள தாய்; தாயின் ஜாடையில் ஏழோ எட்டோ வயதிருக்கக்கூடிய ட்ரௌசர் சிறுவன்; மூக்கொழுகும் ஐந்து வயதுச் சிறுமி, மேடிட்ட வயிற்றுடன் இருந்த தாயின் இடுப்பில் ஒரு துணி மூட்டையும், கையில் பிதுங்கும் பிக் ஷாப்பரும் இருந்தன. பையனின் தலையில் சுமக்க மாட்டாத சுமையாக துருப்பிடித்த ட்ரங்க் பெட்டி.

“ஏம்மா,… என்ன விஷயம்?” விசாரித்தபடி கேளுக்குட்டி கதவு நிலைக்கு வந்தார்.

தனது சுமைகளைக் கீழிறக்கியவள், மகனின் சுமையையும் இறக்கி வைத்துவிட்டு, தன் கதையையே சொல்லத் தொடங்கிவிட்டாள்.

அவர்கள் ஒட்டன்சத்திரம் பகுதியில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவளும் அவளது கணவனும் பிழைப்புக்காக கேரளா சென்று, அந்தக் குழந்தைகளோடு த்ருசூரில் கூலி வேலை செய்துகொண்டிருந்தனர். போன மாதம் அவளது கணவன் அகால மரணமடைந்துவிட்டான். அப்படியிருந்தும் அவள் அங்கேயே இருந்து வேலை தொடர்ந்து, வெளியிலும் வயிற்றிலும் இருக்கிற குழந்தைகளைக் காப்பாற்றிக்கொண்டு வந்தாள். இப்போது முல்லைப் பெரியாறு கலவரங்களால், தமிழகத்தில் உள்ள மலையாளிகளின் கடைகளும், நிறுவனங்களும் தாக்கப்பட்டதின் எதிர்வினையாக, கேரளத்தில இவர்களைப் போலுள்ள தமிழக கூலிப் பணியாளர்களில் ஆண்கள் அடித்து மிரட்டப்பட்டும், பெண்கள் ஆபாசமாக ஏசப்பட்டும் விரட்டப்படுகிறார்களாம். த்ருசூரிலிருந்த இவர்களும் அவ்வாறே அங்குள்ள மலையாளக் கட்சிக்காரர்களால் அச்சுறுத்தப்பட்டு அங்கிருந்து புலம் பெயர்ந்திருக்கின்றனர்.

கடவுளின் சொந்த நாட்டிலிருந்து விரட்டப்பட்ட அந்த அகதிகள், அன்றாடம் காய்ச்சிகள்; புறம்போக்குகளிலும் ப்ளாட்பாரத்திலும் வசிப்பவர்கள். இருக்கிற அல்லறை சில்லறைகளையும் பொறுக்கி எடுத்துக்கொண்டு, இரவோடு இரவாகக் கிளம்பிவிட்டார்களாம். திருசூர் பேருந்து நிலையத்தில், இந்த மார்கழிப் பனிக் குளிரில் நடுநடுங்கியபடி படுத்திருந்து, அதிகாலைப் பேருந்தைப் பிடித்து கொழிஞ்சாம்பாறை அடைந்து, பின்பு அங்கிருந்து இங்கே வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

கேளுக்குட்டி அந்த அவலக் கதையைக் கேட்டு நிற்கையில்,

“…எந்த சாமி புண்ணியமோ,… எல்லை தாண்டியாச்சு. இன்னி மேலு கேரளாக்காரங்க முடுக்க மாட்டாங்கன்னு இப்பத்தானுங்யா நிமுதி. ஆனா, கையில பத்து ரூவாயும் சிலுவானமுந்தான் பாக்கி. அதனாலதான் இங்க எங்கியாச்சு வேலை கெடைச்சுதுன்னா செஞ்சுட்டு – அதுதான் எல்லை தாண்டி வந்தாச்சே… இன்னி பயமில்லாம இங்கியே வேண்ணாலும் இருந்துக்கலாம்; இல்லாட்டி ஊருக்கே போறதுன்னாலும் போலாம்னு இருக்கறம்ங்யா. கடை கடையாக் கேட்டுட்டு வாறம். இது முட்டும் எங்கீமே வேலை கெடைக்கில. உங்க ஓட்டல்லீன்னாலும் ஆட்டறது அரைக்கறது, கூட்டறது – களுவறதுன்னு எனக்கொரு வேலை குடுத்தீங்ணா உங்குளுக்குப் புண்ணியமாப் போகும் சாமீ…! எம் பையனும் வேண்ணாலும் எலை – கிளாசு எடுக்கறது, பெஞ்சி தொடைக்கறதுன்னு எடுபுடிக்கு நிப்பான்…” என்று கோரிக்கை விடுத்தாள் அந்த கர்ப்பிணித் தாய்.

ஒரு கணம் யோசனையோடு நின்றவர், “கொஞ்சம் இரு” என உள்ளே சென்று ப்ரமோதிடம் சொல்லிவிட்டுத் திரும்பி, “இப்ப நீ கேக்கற மாதிரியான வேலை எதுவும் இங்க இல்ல. அதுக்கு இன்னும் கொஞ்ச நாள் ஆகும். ஆனா,… வரவேண்டிய எடத்துக்குத்தான் நீங்க வந்து சேந்திருக்கறீங்க” என்றார்.

“ஐயா என்ன சொல்றீங்கன்னு புரியலீங்ளே…!”

“உங் கதைக்கும் எங்க கதைக்கும் சம்பந்தம் இருக்கு. அதை சாவகாசமா அப்புறம் சொல்றேன். இப்ப அந்த லக்கேஜையெல்லாம் உள்ள ஒரு ஓரமா வெச்சுட்டு வாங்க. கொழந்தைக முகத்தையும் உம் முகத்தையும் பாத்தாலே நீங்க காலைலருந்து எதுவும் சாப்பிடலேன்னு தெரியிது. பக்கத்துலதான் நம்ம வீடு. போயி சாப்பிட்டுட்டு வரலாம்” என்றவர், அவளது சிரமத்தைக் கருத்தில் கொண்டு, அவள் தடுத்ததை மீறி தாமே அவற்றை எடுத்து உள்ளே வைக்கவும் செய்தார்.

– கலைமகள், நவம்பர் 2012.

– கா.ஸ்ரீ.ஸ்ரீ. நூற்றாண்டு நினைவு சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது.

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *