மலைச்சாமியோட மயான காண்டம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 21, 2012
பார்வையிட்டோர்: 11,444 
 
 

ஒசக்க மத்தியானம் பன்னெண்டு மணி இருக்கும். தத்தனேரி சுடுகாடு அம்புட்டும் ஒரே பொகை. அஞ்சு சுடலை கொட்டியிலும் பொணம் ஒன்னு விட்டு ஒன்னு பதமா எரிஞ்சிக்கிட்டிருக்க ஒத்த கொட்டி மத்தர‌ம் வெறகு, எருவாட்டியோட‌ வெறிச்சோடி கெடந்திச்சு. யாருக்காண்டியோ!

அங்கனயே கரண்ட்டு அடுப்புலயும் பொணம் பொசுக்குறாங்க. ஒரே நேரத்தில‌ ரெண்டு அடுப்புல பொணம் எரிக்கலாம். ஒத்த அடுப்புல பொணம் எரிஞ்சி, கூண்டு வழியாகப் பொகையை கக்க‌, எதிர்த்தக்கூடி இருந்த ரேடியா செட்ல ‘சமரசம் உலாவும் இடமே’ பாட்டு படிச்சிக்கிட்டிருந்திச்சு. மனுசன் வாழ்ந்தாலும், பொழச்சாலும், செத்தாலும் அதுக்கேத்த ரகத்துல சினிமாப்பாட்டுங்களுக்கு ஒன்னும் இங்க கொறையிருக்காது.

டீ, காப்பி, சிகரட் அது-இதுகளுக்கின்னு கடை கண்ணி அங்கனயே இருக்கு. பாத்தா சுடுகாடு மாதிரி தெரியாது. ஊர் திருவிழா மாதிரியே கள கட்டும்.

வெட்டியாங்க அங்கயும், இங்கயும் அரக்க பறக்க ஓடிக்கிட்டிருந்தாய்ங்க.

ரேடியா செட்ல‌ பாட்டு சத்தம் நின்னதும் மலைச்சாமி கேசட்டைத் திருப்பிப் போட்டுட்டு ஆபீஸ்பக்கம் போனாரு.

இவுருதான் பூரா வெட்டியாங்க‌ளுக்கும் தலைவரு. இருபதெட்டு வருசமா பொணம் எரிக்கிறத‌ தொழில பாத்துக்கிட்டிருந்தாலும் பொறந்த அன்னைக்கே எறந்து போற கொழந்தைங்க, நெறமாசத்தவங்க‌ளுக்கு, கூலிவாங்காத கொழந்தை மனசுக்காரரு.

‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ பாட்டு ஓடிக்கிட்டிருக்க, ரவ பீடியைப் பத்த வச்சுக்கிட்டு அப்பத்தான் படிகட்ல வந்து உக்காந்தாரு.

அஞ்சாறு பேரு சத்தமில்லாம‌ ஒரு பொணத்தைத் தூக்கிட்டு வரயில‌, கூடியே ஒரு பத்துப் பதினஞ்சு பேரு அரவமில்லாம உள்ள நொழஞ்சாங்க. பத்தடி துரத்தில‌ தண்ணிக்குடம், சடங்கு சம்புரதாயத்துக்கு தேவையானதுகள ஒரு ஓரமா வக்கையில, படக்குனு மலைச்சாமி நிமிந்து பாடைய வாங்கி ஆகவேண்டியத . . .!

பூணூலு, கீப்பாச்சி, பட்டு கர வேட்டி கணக்கா வந்தவங்கள பாத்துட்டு,
தொரப்பாண்டி ஓடி வந்து,

‘ஏய் மலைச்சாமி, பார்ட்டி வேற இடம். ரேட்டை பாத்து சொல்லு’ ன்னு காத கடிச்ச்சுட்டு மேடைக்கு ஓடினாரு.

கரண்டு அடுப்புல வக்கிறதுக்குன்னு தயாரா இருந்த மூங்கி பாடைக்கு பொணத்தை மாத்தி, அப்புடியே அடுப்புக்கு வெளியக்கூடி இருந்த‌ சக்கரத்து படுக்கையில வெச்சிட்டு மலைச்சாமி வெலகிட்டாரு.

பொணம் தூக்க, சுத்தம்பண்ண, சாம்ப அள்ள அது வரைக்கும் தான் அவுரு வேல‌
கதவைத் தெறக்க‌, பொத்தான் அமுக்க‌, ஜென்ரேட்டர் கெளப்பன்னு கள்ளவூட்டுக்காரய்ங்கள மாநகராச்சி வெட்டியான் வேலைக்கி வச்சிருக்கு. இவுங்களுக்கு அரசாங்க சம்பளம்.
மலைச்சாமிக்கு கூலி கெடச்சாத்தான்.

இயக்கத்தில‌ இருந்து பலமுறை போராட்டம் அது இதுன்னு செஞ்சு பாத்தாச்சு. மாநகராச்சியும் ஒன்னுத்துக்கும் மசியல. அது ஒரு பக்கம் அப்புடியே போய்கிட்டிருக்குன்னு வய்யி.

வேப்ப மரத்தடியில‌ காத்துக்கிட்டிருந்தவங்க செத்துப்போன தேசிகர் பாட்டியோட ரெண்டு தலமொற அக்ரகார கதய பேசிக்கிட்டிருக்கயில, மூனாவது மனுசாளா வந்திருந்தவய்ங்க‌ வெளிய‌ டீ கடையில நின்னு சிகரெட்டு பத்தவச்சிக்கிட்டு சொல்லாமக் கலையறதுல கவனமா இருந்தாய்ங்க.

சட்டப்போடாம உருட்டுப் பூணூலோட நின்னுக்கிட்டிருந்தவர் பக்கத்துல‌ இருந்த பெரிசுகிட்ட‌,
‘இப்பல்லாம் எருவாட்டி வச்சு எரிச்சுண்டு, எட்டு மணி நேரத்துக்கு யார் காத்திண்டிருக்கிறாங்கிறேள்!’

இதுன்னா செத்த‌ நேரத்துல முடிஞ்சுடும்’ னார்.

பதிலுக்கு பெரியவர், ‘நீர் என்னமோ சொல்லு, நம்ம ஊர் காவிரிக் கரையில சாஸ்திர சம்பிரதாயத்தோட ஆத்மார்த்தமா செய்ற வசதி இங்க வராதுங்கிறேன்’ பேசிக்கிட்டிருக்கும் போதே வேட்டுச் சத்தம் காதைப் பொளக்க, இன்னொரு கூட்டம் ஆட்டம் பாட்டமாக உள்ளே வந்திச்சுக.
நொழைஞ்ச வாசப்பக்கமா பாடை தெசை மாத்தும்போது
‘ச்சஞ் ச்சஞ் ச்சஞ்’
‘சனக்குனங்ககண சனக்குனக்கண சனக்குனக்கண’
‘ச்சஞ் ச்சஞ் ச்சஞ்’
‘சனக்குனங்ககண சனக்குனக்கண சனக்குனக்கண’
‘கஞ்சிக்கி செத்தான், கஞ்சிக்கி செத்தான்’
‘சனக்குனக்கண சனக்குனக்கண’
‘கஞ்சிக்கி செத்தான், கஞ்சிக்கி செத்தான்’
‘சனக்குனக்கண சனக்குனக்கண’
எரியிற அம்புட்டு பொணத்தையும் உசுப்புற மேனிக்கு தப்பு சத்தம் வானத்த பொளந்து தள்ளுச்ச்சி.
விசில் பறக்க குத்தாட்டத்தோட‌ வெறிச்சோடிக் கிடந்த சொடலை கொட்டி பக்கமா நெருங்கின‌தும் பொணத்தை வாங்கி மலைச்சாமி வேலைய ஆரம்பிச்சாரு. வந்திருந்ததுகள்ல பெரிசுக சில தொழில் தெரிந்த மாதிரி ஒத்தாசைக்கு சேறு பூசுச்சிங்க.

மொய் பணம் பிரிக்கும்போது வழக்கம் போல அவேன் அவேன் ஆத்தாளையும், அம்மாவையும் வஞ்சி, வம்புக்கு இழுத்து, கட்டிப்பொரண்டு, சுவர் ஏறிக் குதிச்சி வடக்குப் பக்கமாக ஓடிப்போனாய்ங்க.

அலங்காநல்லுர் ஆறுமுகம் தப்பாட்டக்குழு வந்த வழியே வெளியேறிக்கிடிருக்கிறத பாத்துக்கிட்டிருந்த சட்டப்போடாம உருட்டுப் பூணூலோட நின்னுக்கிட்டிருந்தவரு அந்த பெரிசுகிட்ட‌,

‘இவாள் இன்னும் அப்படியேத்தான் இருக்கா. காலத்துக்கும் மாற மாட்டேங்கிறாள்’

‘என்னதான் இருந்தாலும் இன்னைக்கி சனிக்கிழம‌யாச்சோ, ஒன்னுக்கு ஒன்னு சந்திச்சுக்கிறதும் ஷேமம்தான்’ னாரு.

நேரம் கடந்துக்கிட்டிருக்க பொணத்தை எரிக்கிறதுக்கான எந்த வேலையும் நடப்பதா தெரியல‌.
சட்டப்போடாம உருட்டுப் பூணூலோட நின்னுக்கிட்டிருந்தவர் வேகமாக ஆபீஸ் பக்கம் போய் அங்கிருந்தவருகிட்ட,

‘ஏன் லேட்டாகுதுன்னு’ கேட்டார்.

‘ஒன்னுமில்லே, சனி, ஞாயிறானா எலக்ட்ரிகல் பிராப்ளம், இப்ப சரியாயிடும்’

‘இல்லே, அஸ்தி கெடச்சாத்தான் சாஸ்திர சம்பிரதாயத்த முடிச்சிண்டு ஸ்நானம் பண்ண முடியும்’
‘நேரமும் கடந்திட்டுருக்கு’ ன்னு தழுதழுத்தாரு.

பொணம் இருந்த சக்கரப் படுக்கையை உள்ளே தள்ளிய தொரப்பாண்டி முணுமுணுத்துக் கொண்டே க‌தவை சாத்தி பொத்தானை அமுக்கி, நிறுத்திட்டு பொறவும் அமுக்கினாரு.
அர‌ மணி நேரம் ஆச்சு.

‘இன்னும் அரைமணி நேரம் ஆகுமா’ ன்னு கேட்டாரு.

‘சொல்ல முடியாது, முன்ன பின்ன ஆனாலும் ஆவும்’

தொரப்பாண்டி குடுத்த கோட்டரை வாங்கிட்டு மலைச்சாமி உள்ள‌ போய் ஒரு மணிநேரம் ஆச்சு. ஒன்னும் சத்தத்த காணோம்.

‘செத்த முடிஞ்சுதான்னு பார்த்துச் சொல்லுங்கோ’ ன்னு பொறவும்.

மலைச்சாமி கீழ எறங்கிப் போய் திரும்புன வேகத்தோட‌ ஒரு சட்டியில் சூடான சாம்பலைக் கொண்டு வந்து கொடுத்தாரு.

மருவாதியா அஸ்தியை வாங்குன அவுரு மொகத்துல ஒரு பிரகாசம் இருந்திச்சு. எம்புட்டு நேரம் காத்துக்கிட்டிருந்தாரு. பின்ன இருக்காதா.

அங்கனக்கூடியே அந்த பைப் அடியில உக்காந்து சம்பிரதாய முறைப்படி சடங்கு நடந்திச்சு.
கொஞ்சம் சாம்பலை தனித்தனியா பொட்டலம் போட்டு பிரிச்சிக்கிட்டாய்ங்க.

மலைச்சாமி ரவ பீடிய பத்த வச்சிக்கிட்டு ஒன்னுக்கு வுடப்போவையில
சாப்பிடப் போன தொர‌ப்பாண்டி வந்து அபீஸ் பக்கமா பாத்து

‘அதுக்குள்ள‌ மலைச்சாமி எங்க போனான்?’

‘பன்னெண்டு மணியானா சிங்கிள் பேஸ்தான் கரண்ட் வருது’

‘வோல்டேஜ் பத்தாதுன்னு தெரியாதா அவனுக்கு’

காலையில உள்ள போட்ட ரெண்டும் கரிக்கட்டையா கெடக்கு’

‘இதுல இப்ப வந்ததும் உள்ள போட்டிருக்கு’

‘ஆள் இருக்கணுமா இல்லையா, ரொம்பவும் வெவரமில்லாமத்தான் செய்றாம்பா’ ன்னு
வஞ்சிக்கிட்டிருக்க, மலைச்சாமியும் வந்து வசவு வாங்கிக் கிட்டு கதவைத் தெறக்கயில‌,

‘எங்கடா போன?’

‘போடா, உள்ள போயி இத வெளிய‌ இழுத்து வச்சிட்டு அந்த கரிக்கெட்டை பாடிய கீழ தள்ளிவிடு’
எரிஞ்சும் எரியாமலும் இருந்த ஒரு பாடைய வெளிய‌ இழுத்ததும் கொஞ்சம் கருகின பொணவாடை லேசா வீசுச்சி.

சடங்க முடிச்சுட்டு கெளம்புறதுக்கு தயாரா இருந்த சட்டப்போடாம உருட்டுப் பூணூலோட இருந்தவரு வெளிய இழுத்துப் போட்ட பாடைய‌ பாத்ததும் தூக்கி வாரிப் போட்டுச்சு.
பாடையோட நாலு முக்கிலும் கட்டியிருந்த சிவப்பு பட்டுக் கம்பி எரியாம இருந்ததைப் பாத்த‌தும் தேசிகர் பாட்டிதானான்னு சந்தேகம்.

சந்தேகமென்ன. தேசிகர் பாட்டியே தான்.

பொறவும் சக்கரப்படுக்கையை உள்ள‌ தள்ளி கதவை சாத்திய மலைச்சாமி நிமிர்ந்ததும், சட்டப்போடாம உருட்டுப் பூணூலோட இருந்தவரு குடுத்த ரெண்டு நூறு ரூவாவ வாங்கிட்டு போவயில‌..

ஆகட்டும்னாரு . . .

வெளிய‌ டீ கடையில நின்னு சிகரெட்டு பத்தவச்சிக்கிட்டு சொல்லாமக் கலையறதுல கவனமா இருந்த மூனாவது மனுசாளா வந்திருந்தவய்ங்க ஷேர் ஆட்டோவுல தாவி தொங்க, உள்ள நின்னிருந்த ஒன்னு ரெண்டு காரும் வெளிய போச்சு.

கடைசியா அந்தப் பெரிசு மத்தரம் ஓடிவந்து சட்டப்போடாம உருட்டுப் பூணூலோட இருந்தவருகிட்ட‌

‘சொல்ல மறந்துட்டேன்’

‘எட்டாந்தேதி கும்பகோணத்துல திதி அனுஷ்டிக்கிறோம்’

‘ராகுல் அடுத்த மாசம் வந்ததும் அஸ்தி கலசத்த கங்கையில‌ சேக்கிறதுக்கு வேண்டிய ஏற்பாட்டை செய்யலாம்ணு இப்பத்தான் போன் பேசுனான்’

‘அப்பத்தான் அவாளுக்கு கோடி புண்ணியம் கிட்டும்’

‘மறக்காம பத்மாவையும் கூட்டிண்டு ஏழாந்தேதியே வந்துருங்கோ’ ன்னு பெரிசு கிளம்ப.
சட்டப்போடாம உருட்டுப் பூணூலோட நின்னுக்கிட்டிருந்தவர் அந்த சாம்பல் சட்டிய மொறச்சுப் பாத்துக்கிட்டே வெளியேற, அதே பாட்டு ‘சமரசம் உலாவும் இடமே’

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *