மலைகளின் மக்கள்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 8, 2019
பார்வையிட்டோர்: 9,236 
 
 

(1992 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மேகமலைத் தோட்டத்துப் பக்கத்தில்தான் வானக் காடு தோட்டம் இருக்கிறது. வானக்காடு தோட்டத்துப் பக்கத்தில் தான் ஆனைத் தோட்டம் இருக்கிறது. மேகத்தை அந்த மலை சதா தழுவிக் கொண்டிருப்பதால் மேகமலை என்றும் வானத்தை அந்தக் காடு உரசிக் கொண்டிருப்பதால் வானக்காடு என்றும்¸ யானையைக் கண்டு விரட்டியதால் ஆனைத்தோட்டம் என்றும் அந்தக் காலத்தில் தென்னாட்டுத் தமிழர்கள் இலங்கைக் காடுகளை அழித்துக் கொண்டிருக்கும் பொழுது வைத்த காரணப் பெயர்கள் தாம் இவைகள்… இந்தத் தோட்டங்களுக்குப் பக்கத்திலே ‘மண்ராசி” என்றும் ஒரு தோட்டம் உண்டு. மண்ணிலே ராசி கண்ட மக்கள் அப்படி மகுடமிட்டிருந்தார்கள்!

மண்ராசி தோட்டத்துக்கு நேரே உச்சியிலிருக்கும் மலைக்குப் பெயர்தான் ராமர் மலை. அந்த மலையருகில் தான் இன்று எட்டாம் நம்பர் மலை கவ்வாத்து… மலையகத்து கொள்ளையழகுகளையெல்லாம் கூட்டி மெருகுக் காட்டிக் கொண்டிருக்கும் அந்த மலையிலுள்ள ஒரு வட்டப் பாறையில் மூன்று நான்கு அடி உயரத்தில் ஒரு கற்கோவில் இருக்கிறது. அந்தக் கோவிலுக்குள் ‘ராமர் அந்த காலத்தில் எய்த அம்பு ஒன்றை நாட்டியிருக்கிறார்கள்! அதுதான் ராமர் கோவில்.

“இந்தக் கோவிலிருக்கும் உச்சிமலையிலிருந்து பார்த்தா இந்தியா தெரியுமோ…? ராமேஸ்வரம் கோயில் கோபுரம் தெரியுமோ..?” என்று அந்தக்காலத்தில் காடழிக்க வந்த தென்னாட்டு மக்கள் ஏக்கப் பெருமூச்சு விட்டார்களாம்….

அதே மலையில் தான் இன்றைய புதிய பரம்பரையினரும் காடு வெட்டிக் கொண்டிருக்கிறார்கள் ….

வெள்ளி வார்ப்புகளால் கவ்வாத்து கத்திகள் பளபளவென மின்னுகின்றன. வெய்யில் ஏறுவதற்குள் பாதி வேலையை முடித்துக் கொண்ட தொழிலாளர்கள் சிவராமனைக் கூட்டத்தை ஆரம்பிக்கும்படி அவசரப் படுத்தினார்கள்..

சிவராமன் அந்தத் தோட்டத்தின் இளந்தலைவன். ஒரு முக்கிய கலந்துரையாடலை வேலைக்காட்டிலேயே சாசுவமாக நடத்திக் கொள்ளவிரும்பினான். கவ்வாத்துக் காட்டுக்கு ‘தேத்தண்ணி கொண்டு வரும் சாக்கில்¸ ஏழெட்டுக் குமரிப் பெண்கள் சரஸ்வதியோடு கொழுந்துக் காட்டிலிருந்து ராமர் மலைக்கு வந்திருந்தார்கள். சரஸ்வதி அந்தத் தோட்டத்து மாதர் தலைவி.

கூட்டம் கூடிவிட்டது. கவ்வாத்துக் கங்காணி. ‘கணக்கப்பிள்ளை – துரை யாரும் வருகிறார்களா” என்று காவல் செய்து கொண்டிருந்தார். நாள் முழுக்க அவர் வாய் கிழிய சத்தம் போட்டுக் கொண்டிருந்தாலும் அவரும் தொழிலாளர் பக்கமேதான் இருப்பார்.

சிவராமன் சாயத்தைக் குடித்துக் கொண்டு¸ சீனியை ‘நக்கியபடி பேசிக் கொண்டிருந்தான். ‘வர்ற திங்கக் கிழம் நம்ம தோட்டத்துல பத்து ஏக்கர் காணிய பிரிச்சு கிராமத்து சனங்களுக்கு குடுக்கப் போறாங்க இந்த நோக்கம் கிராமத்தையும் தோட்டத்தையும் ‘ஒருங்கிணைப்பு’ செய்து தோட்ட மக்களையும் கிராமவாசிகளையும் ஒத்துமை படுத்தப் போற திட்டமாம்!”

‘அடி செருப்பாலே” கூட்டத்தில் ஒருவன் கத்தினான்.

“உஸ்… சத்தம்! இது வேலக்காடு!” சிவராமன் பேச்சைத் தொடர்ந்தான். நாங்க நெருக்கமாக வாழும் தோட்டப்புறங்கள் முழுவதும் இப்படியே திட்டம் போட்டு குடியேற்றம் செஞ்சுக்கிட்டுப் போனா… நாங்க சிதறி போயிடுவோம். குடியேறிய சனங்கள் வீடு வாசல் கட்டி காணிகளுக்குச் சொந்தக்காரவங்களாகவும் – நாங்க மட்டும் காலாகாலமாக இந்தப் பிரதேசங்களில் கூலிகளாக லயத்துக்குள்ளேயே வாழ வேண்டிய நெலமையை அனுபவிக்க வேண்டியிருக்கு … எங்க பரம்பரை இலங்கைக்கு வந்து நூத்தி அம்பது வருசத்துக்கு மேலாச்சு. இன்னும் எட்டடி நெலங்கூட சொந்தமா கெடைக்கல்ல… காடழிக்க வந்த பாட்டன் பூட்டன் கட்டிய அதே மண் வீட்டுல தான் நாங்க தொடர்ந்து வாழ்றோம்… ஒழுகுற கூரைத்தகரத்தை மாத்திப் போட்டாலுமே…. யாரைக் கேட்டுக்கிட்டு மாத்திப் போட்டேன்னு வேல் நிப்பாட்டுறாங்க… எவ்வளவு கேவலமா நாம வாழ்றோம்!” சிவராமன் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு தொழிலாளி குறுக்கிட்டான். ‘அது சரி¸ காணி பிரிச்சுக் குடுக்க எவனாவது காணி அளக்க வந்தா… நாங்க என்னா செய்யுறது..?” ‘நீங்க கல்லு கில்லு அடிச்சிடக் கூடாது… கொழப்பம் உண்டாக்கக் கூடாது… அப்புறம் ராணுவம் …. பொலிசு வந்து நம்மலை வாரிக்கிட்டுப் போயிடும்… நீங்க ரொம்பவும் பொறுமையாய் இருக்கணும். காணியை அளக்கவிடணும் கிராம வாசிக தோட்டத்துக்குள்ளே குடியேற வந்தா அவுங்களோட நீங்க மோதிக் கொள்ளக் கூடாது. அவுங்க நமக்கு எதிரி இல்லே…. அவுங்களை உபசரிச்சு வரவேற்கணும்…” சிவராமன் பேச்சை இன்னொருவன் இடைமறித்து¸ ‘டேய் சிவராமா! நீ ரோங்கா … பேசுறே….! நீ இப்போ குடிச்சுக்கிட்டு பேசுறது சாராயத்தண்ணி இல்லே…. சாயத் தண்ணி … நிதானமா பேசு!” என்றான்.

சிவராமன் சிரித்தான். அவசரப்படாதீங்க மச்சான்¸ மீதி கதையை இன்னிக்கி அந்திக்கு மாரியம்மன் கோவில்ல வச்சிக்குவோம்!” என்றான். எல்லோரும் தத்தமது வேலைகளில் ஈடுபட்டார்கள். சரஸ்வதி¸ சிவராமனிடமிருந்து தேத்தண்ணி போத்தலை வாங்கிக் கொண்டு¸ சக தோழிகளோடு கொழுந்து மலைக்குத் திரும்பினாள்.

கூட்டம் இவ்வளவு சீக்கிரமாக முடிந்ததும்¸ கங்காணியாரின் போய்க் கொண்டிருந்த உயிர் மீண்டும் அவருக் குள்ளேயே நுழைந்து கொண்டது.

–மட்டத்து மலை..

வயசுக்கு வந்தப் பெண்ணைப் போல வசீகரமாய்காட்சியளிக்கிறது ….

கவ்வாத்து வெட்டிய செடிகளில் அரும்பிப் புடைத்த இளந்தண்டுகளை மூன்று¸ நான்கு மாதங்களுக்குப் பிறகு வெட்டி மட்டப்படுத்துவார்கள்.

அதிலே தளிர்விடும் கொழுந்துகள் மஞ்சளாய் கொழித்து காற்றிலே கொஞ்சி சிரிக்கும் போது பசியே மறந்து போகும் மட்டத்து மலையில் கொழுந்து ஆயும் பெண்கள் ‘பாண்டித்தியம் பெற்ற வேலைக்காரிகளாக இருப்பார்கள். அந்த மலை ஆறு மாதங்களுக்குப் பிறகு ‘அழகு கொழுந்து மலை’ என்ற பட்டமும் வாங்கும்.

சரஸ்வதி படக் படக்கென்று இயந்திர வேகமாய் தன் விரல்களை மேயவிட்டு கொழுந்து கிள்ளுகிறாள் பார்க்கின்ற தேயிலை நிரைகளிலெல்லாம் இதே வேகம் கொழுந் தெடுக்கும் வேகத்திலேயே சரஸ்வதி ஒரு குட்டி மீட்டிங் போட்டுக் கொண்டிருந்தாள். கொளுந்துக் கங்காணி ஒன்றும் பேசாமல் நிறைக்குள்ளேயே வந்து கொண்டிருந்தார் அந்தக் காலத்துக்கங்காணிகள் மாதிரி வாயில் வந்தபடி இந்தக் காலத்தில் பேசமுடியாது! குமரிக்குட்டிகள் கங்காணியின் நாக்கை அறுத்து விடுவார்கள்!

வர்றதிங்ககிழம் நம்ம தோட்டத்துக்குள்ள கொலனி ஆளுங்களுக்கு காணி அளக்க வர்றாங்களாம் சரஸ்வதி ஆரம்பித்தாள். “அளந்துக்கிட்டுப் போறானுங்க நமக்கு என்னா? பார்வதி “அவன் அளந்துக்கிட்டுப் போனா …. நீ நக்கிக்கிட்டுப் போகணும்!” – பொட்டு. ‘சரஸ்வதியக்கா! நீங்க கதைக்கு வாங்க” – லெச்சுமி கொழுந்துக் காட்டு பேச்சு இப்படித்தான் நடக்கும்! சரஸ்வதி தொடர்ந்தாள்¸ ‘நம் தோட்டத்துல பத்து ஏக்கர் காணி எடுத்து ஆளுக்கு இருவது பர்ச்சஸ் வீதம் எம்பது குடும்பங்களுக்கு குடுக்கப் போறாங்க. இந்த தோட்டத்துல புதுசா எம்பது குடும்பங்க வரப் போறாங்க. சரஸ்வதி முடிக்கு முன்பே “அடி ஆத்தே! கொலனி கூட்டம் தோட்டத்துக்குள்ள வந்தா கொழப்பம் உண்டாகுமே… வழிப்பறி திருட்டு நடக்குமே என்று பயந்தாள் மாரியாய்.

“அதிபத்தி பேசத்தான் இன்னக்கி மாரியம்மன் கோவில்ல ‘அவரு கூட்டம் போடுறாரு… மாரியம்மன் கோவில்ல அந்திக்கு ஆறுமணிக்கு கூட்டம்…”

– ‘அவரு” … சரஸ்வதி சிவராமனை தன் மனசுக்குள்ளே பூட்டி வைத்திருக்கிறாள். அவனது அழகு மாத்திரமல்ல அந்த அழகுக்கேற்ற அறிவும் தான் பிறந்து வளர்ந்த சமுதாயத்தின் விடிவுக்காக அவன் போராட முன்வந்திருக்கும் உணர்வுகள் அவளை ஆதர்ஷித்தன.

மாரியம்மன் கோவில் –

உள்ளே ஜெகஜோதியாக மின்சார வெளிச்சம் பளிச் சிட்டுக் கொண்டிருக்கிறது. கோவிலைச் சுற்றியுள்ள லயங்கள் இருளுக்குள் மூடிக் கிடந்தன. கோவிலுக்கு மின்சாரம் வாங்கிக் கொடுத்தவனும் சிவராமன் தான் அம்மன் கோவில்லுக்கு துரைபங்களாவிலிருந்து கனெக்ஷன் எடுத்தா பங்களாவுக்கு ‘கரண்டு’ கொறைஞ்சு போகும்…. ஐஸ் பெட்டி சுடுதண்ணி பொய்லர் எல்லாம் கெட்டுப் போகும்” என்று நாயாய் குரைத்த பெரிய கிளாக்கர் தொழிலாளர் ஜெயித்த பிறகு தனது பெயரில் ‘கந்தசாமி கிளாக்கர் உபயம் என்று எழுதி ஒரு ‘டியூப் பல்ப் பிரசண்ட் பண்ணியிருந்தார்.

சிவராமன்¸ தாய்மரத்தையே கொல்ல வந்திருக்கும். அந்த புல்லுருவிகளையெல்லாம் நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான்.

கோவிலில் கூட்டம் நிறைந்து விட்டது அந்த தோட்டத்து இரண்டு டிவிஷன் ஆட்களும் வந்திருந்தனர்.

அவர்கள் பல தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள்.

சிவராமன் பேசத் தொடங்கினான் “கிராமவாசிகள் தோட்டத்துக்குள்ளே குடியேறியதும் பஸ் ரோட்டு வெட்டப் போறாங்க… கடைவீதி தொறக்கப் போறாங்க… அப்புறம் தபால் கந்தோர் ஆஸ்பத்திரி¸ மின்சாரம் எல்லாம் வரப்போகுது…” சிவராம னின் பேச்சை ஒருவன் நிறுத்தினான். அப்போ இவ்வளவு காலமா இந்த வசதிகள் ஏன் எங்களுக்கு செஞ்சு குடுக்கல்லே..?” இந்த சனங்க வந்தப் பொறகு தான் போஸ்ட்டாப்பீசு… ஆஸ்பத்திரி எல்லாம்…. இவ்வளவு காலமா எங்களுக்கு வருத்தம் வந்துட்டா…. – சுடுகாடுதான் எங்களுக்கு பெரியாஸ்பத்திரி… இந்த திட்டங்களுக்கு நாங்க எடம் குடுக்க மாட்டோம்” அவன் உணர்ச்சி வசப்பட்டான். அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த இளம் பெண்கள் எல்லோரும் எழும்பி நின்று¸ “அந்த திட்டத்துக்கு நாங்க எதிர்ப்பு காட்டுவோம்” என்று ஆவேசமாக சத்தம் செய்தார்கள்.

“ஆண்கள் துடிப்பதை விட பெண்கள் துடிக்கின்ற – காலமாற்றத்தைக் காணுகின்றோம்! காலத்துக்கு! வணக்கம்” என்றான் சிவராமன். வளைக்கரங்களின் ஓசை வானத்தைப் பிளந்தது.
சிவராமன் மேடைப் பேச்சு மொழியிலே தொடர்ந்தான். “இந்த தோட்டத்துப் பாரம்பரிய நிலத்துக்குச் சொந்தக்காரர் நாங்கள் இருந்தும் ஒரு கோழிக் கூடு கட்டு வதற்கு கூட மண் சுவர் எழுப்ப முடியாதவர்களாக இருக்கின்றோம் .. சொந்தமாக சுவர் எழும்பும் வரை இந்த மண்ணின் சொந்தக்காரர்களாக முடியாது. சிவராமனின் பேச்சில் இன்னொரு தடைவிழுந்தது. எட்டு மணியாச்சு¸ பசி எடுத்திருச்சு… பெரிய வெளக்கம் தேவையில்ல… இந்த குடியேற்றத்தை எப்படி தடுப்பது என்று சொன்னால் மட்டும் போதும்” என்று இன்னும் ஒரு இளைஞன் கோபமாகப் பேசினான். அவனைத் தொடர்ந்து ஒரு வயது போன பெரியவர் கூட ஆத்திரமாகக் கதைத்தார். “கிராம வாசிங்க… நாட்டாளுங்க… கோட்டத்துக்குள்ள நொழையிறதை தடுக்க எதையும் செய்ய நாங்க தயார்” என்றார்.

சிவராமன் நிதானமாகப் பதில் சொன்னான். நாங்கள் எந்தக் காரியத்திலும் உணர்ச்சி வசப்பட்டும் முரட்டுத்தனமாகவும் இறங்கி¸ இறங்கி பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ளுகின்றோம். ஒரு பிரச்சினைக்காக இன்னொரு பிரச்சினையை உண்டாக்குவதுதான் நமது போராட்ட லட்சணமாகும்.” என்று கொஞ்சம் கடுமையாகப் பேசத் தொடங்கினான். “தோட்டத்துக்குள்ளே நுழைய வரும் புதுக்குடிவாசிகளைத் தடுப்பதற்கு வன்முறையில் இறங்கி விடக்கூடாது. அவர்கள் இந்த நாட்டு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள். நாங்கள் முரட்டு நடவடிக்கையில் இறங்கினால் அது ‘இனவாதமாக’ திரிக்கப்பட்டு இனக்கலவரங்களாக உருவெடுத்துவிடும். தோட்டங்களில் மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகளிலெல்லாம் ‘ஆமி கெம்ப்’ போடப்பட்டிருப்பதை நீங்கள் உணர வேண்டும்.”

இடையில் ஒருவன்¸ “ஆமா! இனிமே நாங்க கத்தி¸ கோடாளி. முள்ளு¸ மம் பெட்டின்னு விவசாய ஆயுதங்களக் கூட வேலக்காட்டுக்கு சொமக்க முடியாது …! ‘ஆயுதம் தாங்கிய கோஷ்டி”ன்னு ஆமிக்காரனுங்க எங்கள் வாரிச் சுருட்டிக்கிட்டுப் போயிடுவானுங்க…” அவன் வார்த்தையில் சிரிப்பு இருந்தாலும் சிந்தனையும் இருந்தது …..

சிவராமன் பொதுக்கூட்டத்தை முடித்தான். அவன் சில முக்கியமானவர்களிடம் சில முக்கிய விசயங்களைக் கதைத்தான். “தோட்டத்துக்குள்ளே கிராமவாசிகளுக்கு காணி வழங்கும் அந்த நாளில் அவர்களை அன்பு வழியில் அகிம்சை வழியில் வரவேற்று அவர்களோடு சேர்ந்து வாழ முயற்சிப்போம்!” என்று எல்லோருக்கும் கரம் கூப்பினான்.

அவனது ஆழமான வார்த்தைகளில் நிறைய கனம் இருந்தது. அம்மன் கோவில் கூட்டம் அமைதியாகக் கலைந்தது.

இன்று அந்த திங்கட்கிழமை.

அந்த ஆற்றங்கரை மலையருகே அழகான நெடுஞ்சாலை. சாலை வழியே ஜந்து¸ ஆறு உல்லாசமான ஜீப் வண்டிகள் வந்து நின்றன. ஜிப்பா¸ வேட்டி அணிந்த சிலர் கல்யாண மாப்பிள்ளைகளைப் போல வண்டிகளிலிருந்து இறங்கினார்கள். அவர்களின் முன்னும் பின்னும் காக்கிச் சட்டைக்காரர்கள் காவல் நின்றார்கள்¸ வேட்டிக் காரர்கள் மந்திரி மார்களாக இருப்பார்கள் ….

வண்டிகள் மரநிழல்களில் ஒதுங்கின.

ஆற்றங்கரைகளோடு நீண்டிருந்த அந்த பத்து ஏக்கர் தேயிலை நிலம் பச்சைக் கம்பளம் போர்த்தி பசுமையாய் படுத்திருந்தது. கரையோரங்களில் யூக்கலிப்டஸ்’ மரங்கள் புதிய கருப்பந்தைல மரங்கள்) நீண்டு நிமிர்ந்து நிலவைப் பிடிப்பது போல் வளர்ந்து நின்றன. அவைகளின் பிரதி பிம்பங்கள் தண்ணீருக்குள் தலைகீழாகப் படம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தன.

… ஆறு ஆட்டம் போடாமல் அமைதியாக நகர்ந்து கொண்டிருக்கிறது….

நெடுஞ்சாலையில் ஒரு ஜிப்பாக்காரர் கையை நாலா பக்கமும் நீட்டி கதைத்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் ஊர்வலம் வருவது போல பெரிய பஸ் வண்டிகள் அந்த இடத்தில் வந்து நின்றன. பஸ் வண்டியிலிருந்து ஆண்களும் பெண்களுமாய் இறங்கினார்கள். அவர்கள் யாவரும் சிங்கள மக்கள் – அவர்கள் யாவரும் கிராமவாசிகள். அவர்கள் ஏழைகளாகத் தெரிந்தார்கள்.

நெடுஞ்சாலையில் சுறு சுறுப்பாக இங்குமங்குமாக ஓடிக்கொண்டிருந்த ஒரு ஜிப்பாக்காரர் அந்த மக்களை வரிசைப்படுத்தினார். அவர்கள் முன்னிலையில் ஒரு மதகுரு ஒரு கவியைப் படித்துக் காட்டி விளக்கமும் சொல்லிக் கொண்டிருந்தார்.
“கண்டிய மக்களின் பாரம்பரிய நிலங்கள் மீண்டும் அவர்களுக்காக மீட்டெடுக்கப்படுகின்றன…” கவியின் சாராம்சம் இது….

வெள்ளைக்காரர்கள் கோப்பி¸ தேயிலை உண்டாக்கிய காலத்தில் கண்டி பிரதேசங்களில் மட்டுமே நிகழ்ந்த உண்மைகளாகும். ஆனால் இலங்கையின் உச்சிமலை நாடு கொடியவன விலங்குகளை உள்ளடக்கிய இயற்கை காடுகளாகும். அந்தக் காடுகளை அழித்து கழனி கண்டவர்கள் தென்னாட்டுத் தொழிலாளர்கள். இங்கே வயல்களும் இருந்ததில்லை …. விவசாயிகளும் வாழ்ந்ததில்லை. சாதகமாக உருவாக்கிய இவர்களின் வரலாற்றில் எதுவித சான்றுகளுமே கிடையாது! அவையெல்லாம் வெறும் அபத்தமாகும்.

ஒரு ஜிப்பாக்காரர் பட்டியலை வாசிக்க இன்னொரு ஜிப்பாக்காரர் காணி இலக்கத் தகடுகளை வழங்கினார். கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்

இலக்கங்களை வாங்கியவர்கள் காணி மாயம் காட்டு பவர்களின் பின்னால் போய்க் கொண்டிருந்தார்கள்.

இந்த நிகழ்ச்சிகளை அந்த உச்சிமலையிலிருந்து மக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சுமந்து கொண்டிருக்கும் கொழுந்துக் கூடைகளை விட அவர்களின் மனதில் சுமத்தப்பட்ட பாரங்கள் கொடுமையாகக் கனத்தன. எதிர்பார்த்த எந்தவொரு எதிர் நடவடிக்கையும் அந்த மண்ராசி தோட்ட மக்களால் நடைபெறவில்லையென்பதை அறிந்த பாதுகாப்புப் படையினரும் மந்திரி பிரதானிகளும் மகிழ்ந்து போனார்கள்.

அவர்கள் வாகனங்களுக்குள் நுழைந்தார்கள். அவைகள் அழகாக ஒரே நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து சென்றன.

– காணி வழங்கிய பின்னர்

வெள்ளி முளைத்து¸ வளர்பிறை தோன்றி¸ பூரண நிலவும் பூத்தது.

– அந்த ஏழு நாட்களுக்குள் என்னவெல்லாமோ நடந்தன. அவை யாவும் ஒரு புதிய கோணத்தில் தயாரித்த ஒரு சினிமா படத்தைப் போல மர்மங்கள் நிறைந்திருந்தன!

தோட்டத் தொழிலாளர்கள் குடியேறிய கிராமவாசி களுக்குத் தளங்கள் வெட்டிக் கொடுத்தார்கள். அவர்கள் குடிசை கட்டுவதற்கு மண் குழைத்து சுவர்கள் எழுப்பிக் கொடுத்தார்கள். கூரை வேய்வதற்கு கிராமவாசிகள் தங்கள் ‘நாட்டிலிருந்து (சிங்கள மக்கள் வாழும் கிராமங்களை தோட்ட மக்கள் ‘நாடு’ என்றே அழைப்பார்கள்) தென்னை ஓலை பற்றைகள் கொண்டு வந்தார்கள். தோட்டத் தொழிலாளர்கள் கூரை வேய்ந்து கொடுத்தார்கள். தொழிலாளர்களின் அன்பையும்¸ பாசத்தையும் ஒத்துழைப்பையும் பெற்ற அந்த கிராமவாசிகள் அவர்களுக்கு என்ன கைம்மாறு செய்ய வேண்டுமென்று துடித்தார்கள்.

அவர்கள் இவர்களுக்கு எதையும் செய்யும் மனநிலையில் இருந்தார்கள். அப்பொழுதுதான் சிவராமன் அவர்களிடம் அப்படி கேட்டான். “நாங்கள் ஒரே இரவில் தளம் வெட்டி – சுவர் எழுப்பி – கூரை போடுவதற்கு உங்கள் ஒத்துழைப்பு தேவை” என்றான். அவர்கள் யோசித்தார்கள். இந்த பிரதேசத்தில் – இந்த மக்களோடு சேர்ந்துதான் வாழ வேண்டும். இங்கு தனித்து வாழ முடியாது என்பதை உணர்ந்தார்கள்.

அவர்கள் மண் வெட்டிகளைச் சுமந்து கொண்டு நிலங்களைக் காட்டும்படி கேட்டார்கள்.

… ஓர் இனிய காற்று அவர்களைத் தழுவிச் சென்றது…. புதுகுடிவாசிகளும் பழையத் தொழிலாளர்களும் ஒன்று கலந்தனர். அந்த பூரண நிலவில் – ‘போய” தினத்தில் அந்த வேலை முழுமை பெற்றது.

லயன்களிலிருந்த தொழிலாளர்கள் யாவரும் புதிய தேயிலை நிலத்திலுள்ள தங்கள் குடிசைகளுக்கு குடி புகுந்தார்கள். அவர்களை அண்டி வாழ்ந்த நாய்களும் கோழிகளும்¸ ஆடு மாடுகளும் புதிய நிலத்துக்கு வந்து சேர்ந்தன.

– லயன்கள் வெறிச்சோடிக் கிடந்தன. அவைகளுக்கு இனிமேல் நிரந்தர பென்ஷன்! ஆமாம்; அவைகளின் வரலாற்று வயது நூற்றி அறுபத்து ஐந்து வருசங்களாகும்!

பொலீஸ் படையினரும் ராணுவப்படையினரும் அந்த ஆற்றங்கரை யோரத்து நெடுஞ்சாலையில் வந்து நின்றார்கள். அரச அங்கீகாரம் – சம்பிரதாயச் சடங்கு … எதிலுமே சம்பந்தப்படாத அந்த குடிசைகளை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருந்தது.

“படைகள் தலையிடக் கூடாது; தோட்டங்களுக்குள் நுழையக் கூடாது. நிதானமாகச் செயல்படுவோம்…”

காற்றுக்கும் கடும் மழைக்கும் அசைந்து கொடுக்காத மலைக்குன்றுகள் வீரமுடன் நிமிர்ந்து நின்று கொண் டிருந்தன. காலவோட்டத்திலும் தங்கள் உருவை அழித்துக் கொள்ளாத அந்த மலைகளின் மக்கள் அங்கே உயரத்தில் வீசிய பூந்தென்றலை சுவாசித்துக் கொண்டிருந்தார்கள்.

– 25-01-1992, சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *