மலர்க்கொத்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 20, 2018
பார்வையிட்டோர்: 6,766 
 
 

நண்பன் பார்த்தா என்னிடம் அடிக்கடி சொல்வதுண்டு. “நாம எழுதணும், அப்புறம் நம்மளைப் பார்த்து நாலு பேர் எழுத வரணும்” என்று

அப்போது நான் கிண்டலாகக் கேட்பேன், “இவனெல்லாம் எழுதறானே நாம எழுதினா என்னன்னு நாலு பேர் எழுத வறணுமா?” என்று.

இங்கே நான் இதை எதற்காகக் குறிப்பிட்டேன் என்றால், ‘மலர்க்கொத்து’ என்ற சிறுகதைத் தொகுப்பு புத்தக வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். சென்னையிலுள்ள கிளை நூலகத்தில், வாசகர் வட்டம் சார்பில் சிறிய அரங்கில் ஆரவாரமின்றி மிக எளிமையாக நடந்த விழா.

ஆறு மணிக்கு விழாவின் துவக்க உறையும், புத்தக விமர்சனமும் செய்யப்போவது பிரபல டாக்டர் சுவாமிநாதன் (எழுத்தாளரும்!) என்று அழைப்பிதழில் போட்டிருந்தார்கள். ஐந்தரை மணிக்கு சுமார் முப்பது பேர் கூடியிருந்தார்கள். அங்கிருந்த அனைவரும் குறைந்தபட்சம் இரண்டு புத்தகங்களாவது வெளியிட்டிருந்தார்கள்!. அப்போதே கொஞ்சம் ‘ஆட் மேனாக’ உணர்ந்தேன்!!.

அப்போது வயதான ஒருவர் மெதுவாக ஒவ்வொருவரையும் நலம் விசாரித்துக்கொண்டே வந்தார். இந்த தள்ளாத வயதில் அவருக்குப் புத்தகங்களின் மீதிருந்த இருந்த ஆர்வம் ஆச்சரியமாக இருந்தது, சஸ்பென்ஸ் தாங்காமல் அருகிலிருந்த அறிமுகமில்லாத நண்பரிடம் ‘அவர் யார்?’ எனக் கேட்டேன்.

“அவர் தான் சந்திரசேகர், அவர் புஸ்தகத்தைத் தான் வெளியிடப்போறாங்க’ என்றார் என்னை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டே!

அதிர்ச்சியிலிருந்த நான் மீள்வதற்குள் என்னருகே வந்த திரு. சந்திரசேகர், என்னிடம் கை குலுக்கிவிட்டு “உங்களை எங்கேயோ பாத்திருக்கேனே?” என்றார்.

‘இல்லை சார், நீங்க என்னை எங்கேயும் பார்த்திருக்க முடியாது!” என்றேன் நான் திட்டவட்டமாக.

“இல்லை உங்களை எங்கேயோ பாத்திருக்கேன்” என்று மிக உறுதியாகச் சொல்லிவிட்டு யோசனையுடன் மேடைக்குச் சென்றார்.

சிறிது நேரத்தில் விழா துவங்க, டாக்டர் சுவாமிநாதன் புத்தக விமர்சனத்தை ஆரம்பித்தார்.

சிறுகதைத் தொகுப்பிலிருந்து மூன்று சிறுகதைகளை மிக அழகாக அதே சமயம் சுருக்கமாக விவரித்தார்! அதில் ஒரு சிறுகதையிலிருந்து ‘ஏழு வயது சிறுவனுக்கு தன் சக மாணவி அருகில் இருந்தபோது ஏற்படும் கிளுகிளுப்பைப் பற்றி குறிப்பிட்டு, எழுத்தாளர் திரு சந்திரசேக்கர் இதற்கு விளக்கம் தர வேண்டும் என்றும் வேடிக்கையாக குறிப்பிட்டார்.

புத்தக விமர்சனம் முடிந்ததும் தன் உரையை நிகழ்த்திய திரு சந்திரசேகரன், அன்று தன்னுடைய பிறந்த தினம் என்று சொல்லி எங்களுக்கு வாழ்த்துக் கூறியவர், டாக்டரின் மேற்சொன்ன சந்தேகத்தைக் குறிப்பிட்டு ஏழுவயது சிறுவனுக்கு ஏற்படும் கிளுகிளுப்பைப் பற்றி ஒரு டாக்டரான உங்களுக்குக் கட்டாயம் தெரிந்திருக்கும், இல்லையென்றால் என்ன என்று உங்களுக்கு நான் விளக்கம் சொல்லவேண்டியதில்லை என்று நகைச்சுவையாக கூறினார்.

எனக்கு எழுந்த சந்தேகம்.. ‘பேசும்போதே இப்படிப் பேசுபவர்களுக்கு கதை எழுதுவதா சிரமம்?’

விழா முடிந்து செல்லும்பொது திரும்ப என்னிடம் வந்து கை குலுக்கிய திரு. சந்திரசேகரன்,

“நீங்க புக் கிளப்ல மெம்பரா?” என்றார்

“ஆமாம்!” என்றேன் ஆச்சரியத்துடன்

“சொன்னேன்ல உங்களைப் பார்த்திருக்கேன்னு, புக் கிளப் மீட்டிங்க்ல பார்த்திருக்கேன்!” என்றார் தன் வழக்கமான குறும்பான புன்னகையுடன். (82 வயது இளைஞர்!)

அதிர்ச்சியிலிருந்து மீண்டுவர எனக்குச் சிறிது நேரமாகியது. நிறைகுடங்கள் தளும்புவதில்லை! என்னைப்போன்றவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடம்!!

வீட்டிற்கு வந்து ஓய்வு நேரத்தில் அந்த புத்தகத்தை மெல்லப் புரட்டினேன்.

ஒரு கதையில் பிரிட்டீஷ் காலத்திய நிகழ்வுகளை அப்படியே கண் முன் கொண்டுவந்து நிறுத்தியிருந்தார், பிரமித்தேன்!. உண்மையில் பல சுந்தரவனக் காடுகளை தன்னுள் அடக்கியிருந்தது திரு. சந்திரசேகரனின் ‘மலர்க்க்கொத்து’. என்றால் அது மிகையல்ல!

‘மலர்க்க்கொத்து’ என்ற பானையிலிருந்து ஒரு சோறு..

“பாலைவனங்களில் அன்னியர்கள் வசிக்க முடியாது, அதே சமயம் ஒரு பாலைவனம் அங்கேயே பிறந்து வாழ்ந்து வரும் தன் மக்களுக்கு மட்டும் தன் அந்தரங்க ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ளும் தன்மை கொண்டது”

மயக்கும் வார்த்தைப் பிரயோகம்! புத்தகத்தை முழுவதுமாக படித்தபோது என் மனதில் எழுந்த மியப்பெரிய கேள்வி, அவ்வப்போது ஒன்றிரண்டு சிறுகதைகள் எழுதிகொண்டிருந்த நிலையில் இனி எழுதுவதா? வேண்டாமா? என்பதே!

ஒரு விஷயத்தைச் செய்யலாமா வேண்டாமா என்று எனக்குச் சந்தேகம் ஏற்படும்போது நண்பன் பார்த்தாவைக் கேட்பது வழக்கம். இனி நான் எழுதுவதா வேண்டாமா என்ற என் சந்தேகத்தை அவனிடம் கேட்கத் தீர்மானித்தேன்,

நடந்த அனைத்தையும் அவனிடம் விளக்கி, “ எழுதினா இந்த மாதிரி எழுதணும் இல்லாட்டி எழுதக்கூடாது சரிதானே? சொல்லு நானெல்லாம் எழுதலாமா? வேண்டாமா?”. என்றேன் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன்.

“நீ சொல்றதும் ஒரு விதத்தில கரெட்தான் அதுக்காக எழுதறதை நிறுத்தாதேடா, எழுது! நீ சொன்ன மாதிரி உன்னைப்பார்த்தும் நாலு பேர் எழுத வருவாங்கல்ல அது நல்லது தானே!” என்றான் தன் வழக்கமான குறும்புடன்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *