மறுமலர்ச்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 6, 2023
பார்வையிட்டோர்: 1,454 
 

இலங்கையிலிருந்து உயிர் பிழைத்து வந்த அகதிகள் அந்த முகாமில் கூடியிருந்தனர். இதயங்கள் நைந்துபோயிருந்தாலும், மனங்கள் சோக வெள்ளத்தில் மூழ்கிப் போயிருந்தாலும், ஒரு கொடிய அரக்கனிடமிருந்து தப்பி, தாயை அடைந்துவிட்ட நிம்மதி அவர்கள் முகங்களில் தெரிந்தது.

பொத்தி, பொத்தி வளர்த்த வயசுப் பெண்களை சிங்கள வெறியர்களுக்குத் தாரை வார்த்த பெற்றோர்கள். சொத்து சுகங்களை விட்டு ஓடி வந்த தொழிலதிபர்கள், கண்ணெதிரே சொந்த மனைவியை கயவர்கள் மானபங்கப் படுத்தியக் கொடுமையைக் கண்டு இடிந்து போன கணவன்மார்கள், பச்சிளங் குழந்தைகளை அநியாயமாய் பலி கொடுத்துவிட்டு வந்த தாய்மார்கள். கட்டியவனை இழந்து விதவைகளாய் மாறிய இளம் மொட்டுக்கள், பெற்றோரை இழந்து அனாதைகளாய் ஆதரவற்ற நிலையை அடைந்த குழந்தைகள்!

இப்படி பலதரப்பட்ட அகதிகளால் அந்த முகாம் நிரம்பி வழிந்துக்கொண்டிருந்தது.

அகதிகளுக்கு ஆறுதல் அளிக்கவும், அவர்களின் குறைகளைக் கேட்டறியவும் நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அரசு நியமித்திருந்தது. அவர்களில் பாலாஜியும் ஒருவன்.

பாலாஜி.

புதிதாய் ஐ.ஏ.எஸ். முடித்த இளம் அதிகாரி. புதுமையாய் ஏதாவது செய்யவேண்டும் என்கிற ஆர்வமும், இளைஞர் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை உண்டாக்கவேண்டும் என்கிற துடிப்பும், இலட்சியமும் கொண்டவன்.

பாலாஜியின் தந்தை கிருஷ்ணன் அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் போன்ற பல அமைப்புகளில் பல்வேறு பதவிகளை வகிப்பவர். சிறந்த பேச்சாளர். சமூக சேவகர், இவரைப் பற்றி தெரியாதவர்களே இல்லை எனலாம். அவ்வளவு தூரத்துக்குப் பிரபலம்.

அகதிகள் முகாமில் நான்கைந்து பேரிடம் குறைகளைக் கேட்டு குறித்துக் கொண்ட பாலாஜி, மரத்தடியில் அமர்ந்து எங்கோ வெறித்துக்கொண்டிருந்த அந்த இளம் பெண்ணை நெருங்கினான்.

வாழ்க்கையில் இழக்கக்கூடாததை இழந்துவிட்டு இனி வாழ்வதா? சாவதா? என்கிற யோசனை வலையில் சிக்கித் தவிப்பவளாகத் தெரிந்தாள் அந்த யுவதி.

அவளை நெருங்கிய பாலாஜி, ‘ஹலோ…” என்றான்.

அவனுடைய குரலைக் கேட்டு மெதுவாகத் திரும்பியவள், எவ்வித சலனமு மின்றி முகத்தை வேறு திசையில் திருப்பிக்கொண்டாள். ‘நீ என்ன பெரிசா கிழிச்சிடப்போறே’ என்கிற அலட்சியம் தெரிந்தது அவளின் அந்தப் போக்கில்.

அவளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

ஒருவேளை இவள் ஊமையோ? சந்தேகமடைந்த பாலாஜி. “என்னம்மா, ஒண்ணுமே பேசமாட்டெங்குறே?” என்றான்.

“ப்ச். பேசி என்னங்க பிரயோஜனம்?” விரக்தியுடன் வெளிப்பட்டன வார்த்தைகள்.

“அப்பாடா… இப்பவாவது வாயைத் திறந்தியே…” என்றவன், “இதோ பாரும்மா. நான் ஓர் அரசு அதிகாரி. என்கிட்ட நீ தைரியமா பேசலாம். எந்தவித குறை இருந்தாலும் அதை தீர்க்க நாங்க கடமைப் பட்டிருக்கோம். அதனால் எதுவாக இருந்தாலும் தயங்காம சொல்லு.”

சிறிது நேரம் மௌனமாக இருந்தவள். அவன் கொடுத்த ஆறுதலான, ஆதரவான பேச்சில் புத்துணர்ச்சிப் பெற்றவளாக மெதுவாய் பேச ஆரம்பித்தாள்.

“என் பேரு செல்வி. பெற்றோருக்கு ஒரே பொண்ணு. யாழ்பாணத்தில் ஒரு கல்லூரியில் படிச்சுக்கிட்டிருந்தேன். சம்பவம் நடந்த அன்னைக்கு வெளியே ஒரே கலவரமா இருந்துச்சு. அதனால நாங்க யாரும் வெளியே போகலை. கதவைப் பூட்டிக்கிட்டு வீட்டுக்குள் ளாறேயே இருந்தோம். ராத்திரி எட்டு மணி இருக்கும். நாங்க குடியிருந்த தெருவில ஒரே கலாட்டா. கூச்சல், குழப்பம், பூட்ஸ் கால்களின் சப்தம். மரண ஓலம். நாங்க பயந்து நடுங்கிக்கிட்டிருந்த சமயத்தில் யாரோ கதவைப் பலமாகத் தட்டினார்கள். நாங்க திறக்காத தால் கதவு உடைக்கப்பட்டது. ‘திமு.திமுவென உள்ளே நுழைந்த சிங்கள வெறியர்கள், கண்ணிமைக்கும் நேரத்துல என் அப்பாவையும், அம்மாவையும் துப்பாக்கியால் சுட்டு…”

மேற்கொண்டு பேச இயலாதவளாய் அழ ஆரம்பித்தாள் செல்வி.

“செல்வி.. நடந்தது நடந்து போச்சு. இனி ஆகவேண்டியதைத்தான் யோசிக்கணும். ம்.. மேலே சொல்லு..” என்று அவளை உசுப்பினான் பாலாஜி.

துப்பட்டாவால் கண்களைத் துடைத்துக் கொண்டே அவள் தொடர்ந்தாள்;

“என் கண்ணெதிரே என் அப்பாவையும், அம்மாவையும் கொன்னுபோட்ட அந்தப் பாவிங்க, என்னைத் தூக்கிட்டுப் போய் அவங்க ராணுவ தளபதிகிட்ட ஒப்படைச்சுட்டாங்க. அந்த வெறியன் என்னை…” முடிக்காமல் மீண்டும் கேவி, கேவி அழத் தொடங்கினாள். “அவன் உன்னை என்ன செஞ்சான்? சொல்லு?”

“நான் எவ்வளவோ கதறினேன். துடிச்சேன். மன்றாடினேன். அவன் என்னை விடவேயில்லை. பாழாக்கிட்டான்.”

“அடப்பாவி… அப்புறம்..?”

“அவன் மது அருந்திவிட்டு அசந்த சமயத்தில் நான் நைசாக அங்கிருந்து நழுவி தப்பிச்சுட்டேன். இந்தியாவை நோக்கி புறப்பட இருந்த கப்பலில் ஏறி அகதிகளோடு அகதியா எப்படியோ வந்து சேர்ந்துட்டேன். இங்கே வந்த பிறகுதான் புரியுது நான் ஏன் இங்கே வந்தேன்? வாழ்க்கையில் எல்லாமே இழந்துவிட்ட பிறகு எதுக்கு இனி வாழணும்? யாருக்காக வாழணும்? வரும் வழியிலே கடலில் குதிச்சு செத்திருக்கலாமே..?”

செல்வியின் சோகக் கதையைக் கேட்ட பாலாஜியின் மனம் சுக்கு நூறாய்ச் சிதறிப்போனது. சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்துபோனவன். ஒரு முடிவுக்கு வந்தவனாய், செல்வியைத் தீர்க்கமாய்ப் பார்த்தான்.

*செல்வி.. உனக்கு ஆதரவா யாருமில்லைங்கற ஒரே காரணத்துக்காகத்தானே நீ தற்கொலை செய்துக்கலாம்னு துணிஞ்சிருக்கே?”

“அது மட்டுமில்லை. எள் கற்பு களங்கப்பட்டுப்போன பிறகு உயிர் வாழறதுல என்ன அர்த்தம் இருக்கு சொல்லுங்க?”

*சரி, இந்த நிமிஷத்துல உனக்கு ஒருவன் வாழ்வளிக்க முன் வந்தா நீ என்ன பண்ணுவே?”

பாலாஜியின் இந்த திடீர் கேள்வி அவளைத் தாக்கியிருக்கவேண்டும். ‘சட்’டென நிமிர்ந்து அவனை நோக்கினாள்,

“கெட்டுச் சீரழிஞ்சுப்போனவளைக் கட்டிக்க இந்தக் காலத்தில் யாருமே முன்வர மாட்டாங்க.”

“நீ வேணும்னே கெட்டுப்போகலையே? ஒரு மிருகத்துக்கிட்ட சிக்கி சின்னா பின்னமாகியிருக்கே. நீயாகப் போயிருந்தா உன்னை நடத்தைக் கெட்டவள்னு சொல்லலாம். ஆனால், உன் விருப்பத்துக்கு எதிராக நடந்தது பலாத்காரம்தானே?”

“நீங்க என்ன சொல்ல வர்றீங்க?”

“செல்வி… உனக்கு வாழ்வு கொடுப்பது என்கிற முடிவுக்கு நான் வந்திருக்கேன்.”

“என்ன..?”

‘திக்’கென அதிர்ந்தாள். பேச்சொன்றும் எழாமல் சப்தநாடியும் ஒடுங்கி விட்டது அவளுக்கு.

இருக்காதா பின்னே?

சீரழிந்த அபலைப் பெண்ணொருத்திக்கு ஓர் உயரதிகாரி அவளைப் பற்றி எல்லாம் அறிந்த பிறகும் வாழ்வளிக்க முன் வந்தால் எந்தப் பெண்ணால் அதிர்ச்சி அடையாமல் இருக்கமுடியும்?

பிரமை பிடித்து செல்வி சிலையாய் சமைந்துவிட்டதில் ஆச்சரியம் ஒன்று மில்லைதான்.

சொற்பொழிவு நடக்கும் அரங்கத்தில் ஏகப்பட்ட கூட்டம்.

இன்றைய இளைஞர் சமுதாயத்தைப் பற்றி அனல் பறக்கப் பேசிக் கொண்டிருந்தார் கிருஷ்ணன்.

‘இன்றைய இளைஞர்கள் புரட்சி செய்யவேண்டும். எப்படிப்பட்ட புரட்சி? சமுதாயத்தை மாற்றக்கூடிய புரட்சி. சமூக அவலங்களை அகற்றக்கூடிய புரட்சி, பேருந்துகளைத் தீயிட்டுக் கொளுத்துவதையும், அர்த்தால் என்கிற பெயரில் பொதுமக்களின் சொத்துக்களை சூரையாடுவதையும்தான் புரட்சி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவல்ல புரட்சி, அபலைப் பெண்களுக்கும் ஆதரவற்ற அனாதை பெண்களுக்கும், வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஏழைப் பெண்களுக்கும் மறுவாழ்வளிக்க இளைஞர்கள் முன் வரவேண்டும். இதுதான் புரட்சி.” கூட்டத்தில் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

மாலை, மரியாதையுடன் காரில் ஏறி விடைபெற்றார் கிருஷ்ணன்.

‘நீ என்ன சொல்றே பாலாஜி?” என்று அதிர்ந்தார் கிருஷ்னான்,

“செல்வி என் மனசுல ஆழமாய்ப் பதிஞ்சுட்டாப்பா…”

“பைத்தியக்காரத்தனமாய் உளராதே. நீ ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி. இன்னும் சில நாட்களில் ஒரு மாவட்டத்துக்கே ஆட்சித்தலைவரா வரப்போகிறவன். அவள் யாருன்னே நமக்குத் தெரியாது. எந்த ஜாதி, எந்த குலம்னுகூட தெரியாத அகதிகள் கூட்டத்திலிருந்து வந்த அசிங்கமான பொண்ணு. போயும், போயும் அவளையா உன் வாழ்க்கைத் துணையா தேர்ந்தெடுத்திருக்கே? உனக்கென்ன புத்தி பேதலிச்சுப் போச்சா? நீ ஒரு பெரிய அதிகாரி என்பது ஒரு பக்கம் இருக்க. என்னைப் பத்தி நீ யோசிச்சுப் பார்த்தாயா? நான் யார்? என் அந்தஸ்த்து என்ன? மக்களிடையே எனக்கிருக்கிற செல்வாக்கு என்ன? என் வீட்டு மருமகளா வருவதற்கு எப்படிப்பட்ட பெரிய, பெரிய இடங்களிலிருந்து பெண்கள் துடிச்சிக்கிட்டிருக்காங்கன்னு உனக்குத் தெரியுமா?”

“அப்பா.. நீங்க ஒவ்வொரு கூட்டத்திலேயும் வாய் கிழியப் பேசிட்டு வர்றீங்களே. இன்றைய இளைஞர்கள் அபலைப் பெண்களுக்கு வாழ்வளிக்க முன்வர வேண்டும்னு அதைத்தானே நானும் பின்பற்றப் போறேன்? அதுக்காக நீங்க சந்தோஷப்படாம இப்படி ஏன் ஆத்திரப்படறீங்க?”

“அது,, அது.. ஊர் உலகத்துக்குச் சொல்லியிருக்கலாம். நீ ஏன் அதை உனக்காக எடுத்துக்கறே?”

“ஓ…அப்படின்னா இத்தனை நாளா நீங்க பேசிட்டு வர்றதும் சமூக சேவைங்கற பேர்ல நாடகமாடறதும் எல்லாமே பொய்ப் பித்தலாட்டம்தாளா?”

“டேய், பாலா… வாயை அடக்கிப் பேசு. நீ யார்கூட பேசிக்கிட்டிருக்கேன்னு தெரியுமா?” என கஜித்தார் கிருஷ்ணன்.

“நல்லாவே தெரியும். வெறும் பேச்சால் மக்களை ஏமாத்திக்கிட்டுத் திரியற ஒண்ணாம் நம்பர் ஃப்ராடுகிட்டத்தான் பேசிக்கிட்டிருக்கேன்.”

அதிர்ந்துபோனார் கிருஷ்ணன்,

“இதற்காகத்தானா நான் உன்னை வளர்த்து, படிக்கவைத்து, பெரிய ஆளாக்கியது? ஒண்ணு மட்டும் புரிஞ்சிக்கோ. நான் சொல்றதைப்போல் நீ நடக்கலைன்னா உனக்கு இந்த வீட்டில் இடமில்லை…”

“இவ்வளவு மோசமான ஆளோடு எவன் இருப்பான்? இப்போதே நான் வீட்டை விட்டுப் போகப்போறேன்.”

“என் சொத்திலிருந்து உனக்கு ஒரு பைசாவும் கிடைக்காது.”

“யாருக்கு வேணும் அந்த சொத்து? நேர்மையான வழியில் சம்பாதிச்சிருந்தா பரவாயில்லை. ஊரை ஏமாத்தி சேர்த்த சொத்தை நீங்களே வெச்சுக்குங்க. என்னை வளர்த்து, ஆளாக்கி, படிக்கவெச்ச செலவை நான் கூடிய சீக்கிரத்தில் உங்களுக்குத் திருப்பிக்கொடுத் துடறேன்…”

கிருஷ்ணன் பிரமைப் பிடித்தவராய் அதிர்ந்து நின்றார்.

பாலாஜி அங்கிருந்து புயலாய்க் கிளம்பினான்.

அவனுடைய நடையில் சமுதாயத்தை மாற்றியமைத்து ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்கக்கூடிய வேகம் அதிகமாகவே தென்பட்டது.

– காற்றுவெளி பங்குனி / சித்திரை 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *