“”யத்த ஏ பெரியத்த!” என்ற அபூர்வத்தின் கூப்பாடு கேட்டு வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள் மயிலாம்பு.
மூங்கில் தட்டியைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள்.
அறுப்பரிவாளும், டீ கூஜாவுமாய் அபூர்வம் வாசலில் நின்றிருந்தாள்.
“”ஊரெல்லாம் அறுப்பு அறுக்குது, நீங்க வரலை?” என்றாள்.
“”காலம்பற சீக்கிரமா எந்திருக்கணும்னு நெனச்சுத்தான் படுத்தேன். என்னமோ ரோசனை; பாதி ராத்திரிவரைக்கும் தூக்கமே வரலை. எப்ப கண்ணசந்தேனோ தெரியலை, நல்லா தூங்கிட்டேன். ஓங்கொரல் கேட்டோனோ பாயக்கூட சுருட்டலை. இரு இதோ வந்துட்டேன்” என்று உள்ளே ஓடி பாயை சுருட்டி மூலையில் சாத்திவிட்டு, மூங்கில் தட்டியை இழுத்துச் சாத்தினாள். பரக்க பரக்க கோழிக்கூட்டை திறந்துவிட்டு வெளியே வந்தாள்.
“”என்னா வெறுங்கையோட வர்ற? அறுப்பருவா?” என்று அபூர்வம் கேட்கவும், “”ஐயோ எம்புத்தியே!”என்று தலையில் அடித்துக்கொண்டே உள்ளே ஓடி எரவானத்தில் சொருகி வைத்திருந்த அறுப்பருவாளை எடுத்தாள். ஒற்றை மணி கோர்க்கப்பட்டு, சுண்ணாம்பால் ரா.மை. என்று எழுதப்பட்டிருந்தது. அவள் கணவன் ராமசாமி போன வருடம், வரப்பில் உட்கார்ந்து கரண்டவத்திலிருந்த சுண்ணாம்பை எடுத்து எழுதி வைத்த எழுத்து இன்னும் அழியவில்லை. எழுத்து இருக்கிறது, ஆனால் எழுதினவன் போய் சேர்ந்துவிட்டான்.
ஐப்பசி மாத காலை; பாதி இருட்டும், பாதி மழை இருளுமாக சேர்ந்து அதீதமான விடியற்காலைத் தோற்றத்தை உண்டாக்கி இருந்தது. போகும் வழியில் வாய்க்காலில் இறங்கி ஏறும்போது, அவசர அவசரமாய் ஒரு வாய் தண்ணி மொண்டு வாய்க் கொப்பளித்து, முகத்தை அலம்பிக்கொண்டாள். மழைக்கால நீர் ஜில்லென்று முகத்தை குளிரச் செய்தது.
முந்தானையால் முகத்தை துடைத்துக்கொண்டே, “”இன்னைக்கு யாருக்கு அறுக்கப்போற நீ?”என்று அபூர்வத்தைக் கேட்டாள்.
“”இந்த ஆளு எங்குன எறங்கி இருக்கோ தெரியலை! கொட்டிகுடி சார் பண்ணைல அறுப்பு, சின்ன சாமிக்கு அறுப்பு, பாப்பையனுக்கு அறுப்பு, மணியாரு வீட்டுக்கு அறுப்பு, இது எங்குன அருக்குதோ தெரியலையே? ராவைக்கே சொல்றதில்ல? காலம்பற இந்த பண்ணைக்கு அறுக்கப்போறேன், நீ இந்த வயலுக்கு வந்துருன்னு? என்ன செம்மமோ போ… ச்சை!” என்று அலுத்துக்கொண்டாள்.
அறுப்பு நடந்து கொண்டிருந்த ரெண்டு மூணு வயல்களில் வேலையிருக்கிறதா? என்று கேட்டுப் பார்த்தார்கள். எல்லா இடத்திலும் ஆள் தேவையில்லை என்றார்கள். “இவ்வளவு இடத்தில் அறுப்பு நடக்கும்போது நமக்கு வேலை கெடக்கலையே’ என்று நொந்தபடியே நடந்து வந்தார்கள்.
வழியில் பருத்தியடியில் அறுப்பு நடந்தது. மயிலாம்பு கேட்டாள். “”இங்கு ஆம்பளை ஆள் கொறைச்சல், ஏற்கெனவே மூணு ஒத்தை நடவாள் அறுக்குது. அறுத்துக் குமிச்சிடலாம்; அள்ளி வச்சுக்கட்டி தூக்க ஆம்பளை ஆள் இல்லையே; வேணாம்.”
ஓடப்பங்கு, ஏரியா தெடல், பள்ளிவாசல் பங்கு, பட்டவத்தி தேவதானம் என்று ஒவ்வொரு பங்காகப் போய் வந்தார்கள். எல்லா இடங்களிலும் அறுவடை ஆகிக்கொண்டுதான் இருந்தது. ஆனால் ஓர் இடத்தில் கூட இவர்களை யாரும் வேலைக்கு சேர்த்துக்கொள்ளவில்லை. ஏதோ சாக்கு சொல்லி தட்டிக்கழித்தார்கள். மயிலாம்பிற்கு புரிந்துவிட்டது. ஜோடியோடு வருபவர்களுக்குத்தான் வேலை. அவர்கள் சொல்வதிலும் கொஞ்சம் அர்த்தம் உள்ளது. நடப்பது குறுவை அறுப்பு; மழைக்காலம். சேறும், உளையுமாக எல்லா இடமும் ஒரே வழுக்கல். கட்டுத் தூக்க ஆம்பிளைகளால்தான் முடியும். அறுக்க, அரி அள்ளி வைக்க, கட்ட, தூக்கிவிட ஆயிரம் ஒத்தாசைகள் பெண்கள் செய்தாலும், அடியல் நடக்கும் திடலுக்கு கட்டுகளைச் சுமந்து செல்ல ஆண்களால்தான் முடியும். அதனால் இப்பொழுது அவர்களுக்குத் தேவை ஆண் கூலிகள்தான்.
அழுகையாய் வந்தது மயிலாம்பிற்கு. இவள் சுறுசுறுப்பாய், அதிவேகமாய், சுத்தமாய் அறுப்பாள். ஆம்பளைக்கு ஈடுகொடுத்து சரிக்குச்சரி ஒரு பட்டம் அறுப்பாள். அரி அள்ளி வைக்க, கட்ட, தூக்கிவிட என எல்லா வேலையும் சித்திரம்தான். அப்பேர்பட்ட தன் திறமையை இப்படி உதாசீனப்படுத்தி, புறக்கணித்துவிட்டார்களே! என்று ஆத்திரமும் அவமானமும் உறுத்த கண்ணீர் பொங்கி வழிந்தது.
“”செத்தும் கெடுத்தியே பாவி!” என்று தன் இறந்து போன கணவனைத் திட்டிக்கொண்டே புடவைத் தலைப்பில் கண்களைத் துடைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள். கூடவே வந்தாள் அபூர்வம்.
ஆனாலும் அபூர்வத்துக்கு நல்ல நேரம். மணியாரு வீட்டுக்கு அறுத்துக் கொண்டிருந்த தனது கணவனுடன் சேர்ந்து கொண்டாள்.
“”நமக்கும் வெக்கம், மானம், சூடு, சொரணை இருக்கு. இனிமே ஒரு பயல்ட்ட வேலை கேக்கப்புடாது. நேரா ஊட்டுக்குப் போவணும். பானைல அரிசி இருந்தா ஒலை வச்சு ஆக்கித் திம்போம். இல்லை அடிவயத்துல ஈரத்துணிய போட்டுகிட்டு பேசாம படுத்துடுவோம். ஒவ்வொர்த்தட்டயும் போயி நின்னு பல்லக்காட்டி ச்சீ பட முடியாது” என்று தனக்குள் முனகிக் கொண்டே ரோசத்துடன் நடக்க ஆரம்பித்தாள். வழியில் மஞ்சள், குங்குமம் தடவிய வேப்பமரத்தைப் பார்த்து, “”முனியஞ்சாமி, நீ இன்னைக்கு எனக்கு போட்ட படி இதுதானா?”
என்று கையெடுத்துக் கும்பிட்டு கன்னத்தில் போட்டுக் கொண்டே தனியே நடந்தாள் மயிலாம்பு.
கருப்பஞ்சி தலைமாட்டில் ஜோதி உட்கார்ந்திருந்தாள். கூடவே விசாலாட்சி, கனகம், வசந்தா, வாசுகி என்று பெண்கள் கூட்டமே உட்கார்ந்திருந்தது.
“”என்ன சோதி ஒக்காந்திருக்க?”என்றாள் மயிலாம்பு.
“”அறுக்கனும்க்கா பங்க. நெல்லு முத்திடுச்சு, நல்ல வெளச்சல். முந்தா நாளைக்கு மொதல் நாள் பேஞ்ச மழைல பயிறு சாஞ்சிடுச்சு. கூப்புட்டா ஒத்தரும் வர மாட்டேங்குறாங்க. நல்ல அறுப்ப அறுத்து கரையேத்தவே ஆள் கெடைக்கலயாம். “சாஞ்ச அறுப்ப புடிச்சிகிட்டு எவஞ்சாவுறதுங்குறான்’ ரொம்ப நெறுங்கி கேட்டோம்னா,”குவாட்டர் வாங்கித்தா, கட்டிங்கு வாங்கித்தா’ங்குறாங்க. இவங்களுக்கு ஆளுக்கு ஒரு பாட்டிலு வாங்கிக்குடுத்து அறுப்பறுத்தா என்னா மிச்சமிருக்கும்? தலைல துணிய போட்டுகிட்டு குன்னக்குடிக்கு காவடி தூக்க வேண்டியதுதான்!”
“”ஓம்படையான் எங்க?”என்றாள் மயிலாம்பு.
“”ஆமாம் அதப்பத்தி கேக்காத, அடிச்சுக்க ரெண்டு கை பத்தாது” என்றாள் அலுப்புடன் ஜோதி.
“”ஏண்டி?”
“”ராமுச்சூடும் மூக்கு முட்ட குடிச்சுட்டு கவுந்து கெடக்கு. காலம்பற எழுப்புறேன், பேரு ரெக்கன இல்லாம பொணமாட்டம் கெடக்கு. மத்தியானத்துக்கு மேலதான் நிதானம் வந்து நிகா புரியும். அறுக்க வேண்டிய அறுப்பு சொடிஞ்சு போய் கெடக்கு வயல்ல. நாலு பொம்பளை புள்ளவோ கல்யாணத்துக்குத் தயாரா சமைஞ்சு கெடக்கு வீட்ல. இந்தாளு இப்புடி கண்ணு மண்ணு தெரியாத குடிச்சுபுட்டு மண்டகொண்டு கெடந்தா நா என்னா பண்றது? வீட்டு ஆம்பளையே சொந்த அறுப்பு அறுக்க வரலைனா, வெளி ஆளு எப்படி வருவான்? நா என்னா பண்ணுவேன்? நானும் எம் புள்ளைகளும் நாண்டுகிட்டு சாவ வேண்டியதுதான்!” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதாள் ஜோதி. பார்க்கப் பாவமாய் இருந்தது மயிலாம்பிற்கு. அந்த நிமிடமே ஒரு தீர்மானம் எழுந்தது மனதினுள்.
“”பொம்பளைன்னா அவ்ளோ எளக்காரமா? வயலுக்கு வயல் என்னய வேண்டாமீனு வெறட்டி அடிக்கிறானுவோ. இங்க என்னன்னா ஒம்புருசன் பொறுப்பில்லாம குடிச்சுட்டு கெடக்கான். அறுக்க வேண்டிய அறுப்பு சந்தீல கெடக்கு. மனுசன் நெனச்சா மலையையும் பொறட்டலாம். நாம் பொம்பளைவளா சேர்ந்து முடிஞ்சத அறுப்பமே? என்னதான் ஆவுது பாப்போம்! இந்த வெள்ளாம வீடு வந்து சேருதா இல்லியான்னு; ஏண்டி ஒக்காந்திருக்கீங்க மசமசன்னு? எந்திரிங்க சீக்கிரம். எடுங்க அறுவாளை. ஆளுக்கொரு அரிபட்டமா புடிங்க, பாத்துடலாம் இன்னைக்கு நமக்காச்சு. அவன்ங்களுக்காச்சு!” என்று மயிலாம்பு சாமி வந்தவள்போல் தைரியம் சொல்லவும், தெய்வவாக்கு கேட்டதுபோல் எல்லாப் பெண்களும் உற்சாகமாய் எழுந்தனர். சேர்ந்தாற்போல் பட்டம் பிடித்து அறுக்க ஆரம்பித்தார்கள். தண்ணீர் அதிர இருந்தது. பயிர் சாய்ந்திருந்ததால் பாதி கதிர் நீரில் மூழ்கி இருந்தது.
“”பாத்து அருங்க பொண்டுவளா; அருவாள்ல அடிபட்டதுன்னா நெல்லு கொட்டுண்டு போவும். நா போயி வைக்க முடியுமானு பாக்கறேன்!” என்று சொல்லி வரப்பில் நடந்தாள். கவணை போட்டு வாய்க்காலில் வடிய வைப்பது அவள் எண்ணம். ஆனால் வடிமடை வாய்க்காலில் தண்ணீர் தெப்பலிட்டு நின்றது. மதகை அடைத்திருக்கிறார்கள். இது ஊட்டியாணி வாய்க்கால். அவர்கள் அடைத்ததை தான் திறந்துவிட்டால் ஊர் பொல்லாப்பு வந்து சேரும். என்ன செய்வது என்று யோசித்தாள். பக்கத்து பங்கு சம்பா நடவு போவதற்கு உழுது வைத்திருந்தார்கள். மூன்றாவது பங்கு தரிசாய்க் கிடந்தது. “ஆபத்திற்கு பாவமில்லை’ என்று குறுக்க வரப்பை வெட்டினாள்.
உழுத பங்கில் தண்ணீர் கொண்டது. ஓடிப்போய் மறு பக்கத்து வரப்பை வெட்டினாள். இப்பொழுது உழுத பங்கில் கொண்ட தண்ணீர் தரிசு பங்கில் சரசரவென்று வடிய ஆரம்பித்தது.
“”ஏ மைலாம்பு, ஓன் ஐடியாவே, ஐடியாதான்”என்றான் வரப்பில் நின்று வேடிக்கைப் பார்த்த சிங்காரு.
“”கெடக்கு போ! அறுக்க கூப்புட்டா ஒருத்தரும் வரலை. வரப்புல நின்னுகிட்டு வாயப்பாரு; போ பேசாதே?”
என்று சொல்லி அறுப்பு வயலுக்கு வந்தாள். பெண்கள் அத்தனை பேரும் குனிந்த தலை நிமிராமல் வேகு வேகு என்று அறுத்துக் கொண்டிருந்தனர். ஒரு அரிபட்டம் முடிந்து மறுபட்டம் பாதி ஓடி இருந்தது. வயலில் முழங்காலளவு இருந்த நீர் கணுக்காலளவு வடிந்திருந்தது. தண்ணீர் வடிய வடிய அறுப்பு வேகமாய் ஓடியது.
“”சாச்சு ஏறுங்கடி” என்று மயிலாம்பு குரல் கொடுக்கவும் விருவிருவென்று அறுத்தனர். மேகம் கலைந்து சூரியன் கிளம்பிற்று. சுறுசுறுப்பாய் அறுத்தனர். அடுத்தடுத்த வயல்களில் அறுத்தவர்கள் சாப்பிடக் கிளம்பினார்கள். பெண்கள் சேர்ந்து அறுப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டே தங்களுக்குள் நக்கலடித்துக் கொண்டே சென்றனர். சிலர் வரப்பில் நின்று இவர்களை அழைத்து கேலி செய்து சீண்டினர். மயிலாம்பு கறாராய் சொல்லிவிட்டாள்.
“”ஒருத்தரும் பதில் பேசாதீங்கடி பொண்டுவளா. அதுக பாட்டுக்கு வரப்புல நின்னு கொலைக்கட்டும். நாம நம்ம சோலியப் பாப்போம். பதில் சொன்னா வார்த்த வளரும். வேலை மெனக்கெடும்; ஒருத்தரும் நிமிர்ந்து பாத்து பதில் சொல்லிகிட்டு நேரத்தை வீணாக்காதீங்க.”
அதைப்போல் ஒரு தலை நிமிரவில்லை. வரப்பில் நின்றவர்கள் பேசிப் பார்த்துவிட்டு சாப்பிடச் சென்றனர்.
வயலில் பாதத்தளவு தண்ணீர் வடிந்தவுடன் மயிலாம்பு போய் மடையை வெட்டி அடைத்து வந்தாள். அடுத்த அரை மணி நேரத்தில் மூணரைமா அறுப்பும் முடிந்துவிட்டது. வெயில் நன்றாக எரிந்தது. “”எல்லாரும் போய் ஒரு வா சாப்புட்டுட்டு வந்து கட்டுவமா?” என்று மயிலாம்பு கேட்க, “”வேண்டாக்கா, எம்மொவளுவள உட்டு இட்லி வாங்கி வாங்கியாற சொல்லி இருக்கேன். மாமி ஊட்டுலர்ந்து, இதோ வந்துடும். இனிமே எம்புட்டு தூரம் போய் சாப்டுட்டு எப்ப வர்ரது?” என்றாள் ஜோதி.
“”ஏன் வீணா செலவு!” என்றாள் மயிலாம்பு இழுத்தவாறே.
“”நல்லாயிருக்கே! செலவு என்னா பெரிய செலவு, ஒழைக்கிற வயித்துக்கு வஞ்சன செய்யலாமா?”என்று சொல்லும்பொழுதே அவள் பெண்கள் இருவரும் இட்லி பொட்டணத்துடன் வந்துவிட்டனர். வாய்க்கால் நீரில் கை, கால் கழுவி பல் தேய்த்து, வாய் கொப்பளித்து,
பறக்க பறக்க இட்லியைப் பிட்டு போட்டுக்கொண்டனர். பாட்டில் தண்ணீரை குடித்து வயிறு நிறைந்தனர். வெற்றிலைப் பாக்கு போட்டு நிமிர்ந்தனர். அறுத்த அறுப்பு சீரான அரிப்பட்டமாய் பார்க்க அழகாய் இருந்தது. நாரத்தங்குருவிகளும், கரிச்சான் குருவிகளும் உற்சாகமாய் பறந்து பறந்து கூச்சலிட்டன. ஒரு வழியாய் அறுத்தாயிற்று. இனி கட்டி, தூக்கி, அடித்து, தூற்றி…நினைக்கவே மயக்கமாய் வந்தது ஜோதிக்கு.
சம்பா அறுப்பாய் இருந்தால் வயல்களமாய் வைத்துவிடலாம். இதுவோ குருவை அறுப்பு, வயல்வெளி எங்கும் சேறும், சகதியுமாய் களி மண் குழைந்துபோய் இருந்தது. வயலில் களம் வைக்கலாம் என்று, நினைத்துக்கூட பார்க்க முடியாது, என்ன செய்வது? அதற்குள் அடுத்தடுத்த வயல்களிலெல்லாம் கட்டுத்தூக்க ஆரம்பித்தார்கள். வாட்டசாட்டமான ஆட்கள் திணறி உயர உயரமான கட்டுகளைத் தலை மாற்றி, மாற்றி வரப்பு நெடுகத் தூக்கிச் சென்றனர்.
பள்ளிக்கூடத் திடலுக்கு போகிறது கட்டுகளெல்லாம். அங்குதான் பொதுக்களம் உள்ளது. காய்ந்த தரை, விஸ்தாரமான இடம், போட்டு அடித்து, தூற்ற வசதியாய் இருக்கும்.
“”ஆளான ஆளே இந்த சேத்துல மண்டிபோட்டு சண்டி வாங்குறான். பொட்டச்சுவளா திமிரெடுத்து போயி அறுத்தாளுவள்ள? எங்கேர்ந்து, எங்க தூக்கி, எப்புடி களம் பொளங்குறிங்கன்னு பாப்போம் திமிரெடுத்த சிறுக்கிவோ எல்லாம்” என்று உதாசீனமாய் ஏளனம் பேசினான் தூரத்தான். பெண்கள் பொறுமையாய் பதில் பேசாது இருந்தனர்.
மயிலாம்பு ஏதோ யோசனை வந்தவளாய் குறுக்கே விழுந்து ஓடினாள். வாய்க்காலுக்குள் இறங்கி முதலியார் கொல்லைக்குள் புகுந்தாள். பெரியவர் வேட்டியும், மேல துண்டும் போர்த்தி ஈசிச்சேரில் சாய்ந்து பேப்பர் பார்த்துக்கொண்டிருந்தார்.
“”சாமி நீங்கதான் கருணை காட்டணும்; ஏழைங்க நாங்க. பொம்பளைங்களா சேர்ந்து ரோசத்துக்கு ஆத்தமாட்டாம கதிரறுத்துட்டோம். மேக்கொண்டு என்னா செய்றதுன்னு புரியலை. எடங்கொடுத்து உதவினீங்கன்னா கோடி புண்ணியம் உங்களுக்கு” என்று அவரிடம் விலாவாரியாக சொன்னாள்.
பெரியவர் உண்மையிலேயே பெரும்போக்கானவர். ஒரு யோசனை சொன்னார். “”சரிங்க!” என்று மயிலாம்பு அவரை கையெடுத்து கும்பிட்டுவிட்டு ஓட்டமாய் ஓடி வந்தாள்.
“”நல்லா வெயில் எரிக்குதே; அரிகாய்ச்சல் போட்டு அடிப்பமா மெதுவா? ”என்ற ஜோதியிடம், “”அடி தெங்கமை, ஐப்பசி மாச வெயிலுக்கு அடுத்த நிமிசமே மழைம்பாங்க; அந்த வெயிலை நம்ப முடியாது” என்று சொல்லி அரி அள்ள சொன்னாள்.
“”ச்சோ!” என்று சொல்லி முதல் அரியை அள்ளி வைத்தாள். சீரானக்கட்டுகளாய் கட்டி அழகம்மா தலையிலும், நாகம்மா தலையிலும் தூக்கிவிட்டாள். ஒரு அரியை அள்ளிக் கதிரைக் கசக்கி தானியத்தை மரக்காலில் கொட்டிவிட்டு, வெறும் வைக்கோலை எடுத்து ஓடி, வாய்க்காலில் இறங்கு துறையில் வழுக்காமல் குறுக்கப் போட்டாள். கட்டு வேகமாய்ப் போனது.
“”அறப்போ பறப்போன்னு சீக்கிரம் தூக்குங்க, சீக்கிரம்!” என்று மயிலாம்பு அதட்டல் போட, மாங்குமாங்கென்று தூக்கினர்.
“”அரிய சிந்தாம அள்ளுங்க, ஏ! சின்னம்மா கட்ட சீரா அள்ளி வை. தூக்கறவ கழுத்து ஓடியப்புடாது. ஏ! மருதாயி கட்ட இறுக்கிக் கட்டு. சீக்கிரம் ஆவட்டும். ஆம்பளைட்ட பொம்பளை தோக்கலாமா? நம்மள எளக்காரம் பண்ணவன்ட்ட நாம தோக்கலாமா. ஜெயிச்சு காம்பிக்கணும் சீக்கிரம்!” வெறியோடு பேயாய்த் தூக்கினார்கள்.
முதலியார் திடலில் களத்தில் கட்டுகளைச் சீராய் பரப்பினார்கள். கட்டு வர மேலும் மேலும் பரப்பினார்கள். வயலும் முதலியார் கொல்லையும் கிட்டத்தில் இருந்ததால் சீக்கிரமாகவே கட்டு வந்துவிட்டது. கட்டு முடிந்தவுடன் டீ வாங்கி வரச் சொல்லி குடித்துவிட்டு, டிராக்டரை விட்டார்கள். டிராக்டர் அடிக்க அடிக்க வைக்கோலை உதறி போர் போட்டுவிட்டு கூளத்தைப் பீராக்கினார்கள். முறத்திலும் கூடையிலும் அள்ளி தூற்றிப் பார்த்தார்கள். காற்றே ஓடவில்லை. வெளியே சென்று வானத்தை அண்ணாந்து பார்த்த மயிலாம்பிற்குச் சொர சொர வென்றது. ஒரே இருட்டாய், ஐப்பசி மாச மை இருட்டாய் இருட்டிக் கொண்டு இருந்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டப் போகிறது. காற்று ஓடவில்லை, என்ன செய்வது?
“”சாமி, கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாது போலருக்கே; புள்ளகுட்டிகாரி. கொஞ்சம் மனமெரங்குங்க, காத்து ஓடலை. தூத்தற நெல்லு அப்படியே கெடக்கு. மழை இந்தோ அந்தோன்னு இருக்கு” என்று மீண்டும் முதலியாரிடம் ஓடினாள் மயிலாம்பு.
பெண்கள் ஊக்கத்துடன் கடினமாய் உழைப்பதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த அவர், “”நா என்னம்மா செய்ய முடியும்?” என்றார்.
“”உங்களிட்ட இருக்கற மெசினை கொஞ்சம் பூட்டி உட்டீங்கன்னா, நாங்க தூத்திக்குவோம். மூட்டைக்கு எவ்ளோ பணமோ அதை தூத்து கூலியா கொடுத்துர்றோம்”என்று மயிலாம்பு சொல்லவும் அசந்து போய்விட்டார் முதலியார். அவரால் நம்பவே முடியவில்லை.
“”டூ க்ளவர், சோ க்ளவர்!” என்று சிலாகித்துக்கொண்டே தன் பண்ணை ஆட்களை விட்டு மெஷினை இழுத்து வரச் செய்து, இணைப்பு ஒயரைப்போட்டு மாட்டுக் கொட்டிலிலிருந்து சப்ளை கொடுத்து மெஷினை ஓட விட்டார். கூடைகளில் ஆளும் பேரும் அள்ளிக் கொடுக்க கொஞ்ச நேரத்துலயே தூற்றி நெல்லையும், கருக்காவையும் பிரித்துக் கொடுத்துவிட்டது.
மூணரை மாவிற்கு நாற்பத்தி நான்கு மூட்டை கண்டதும் ஊரில் இல்லாத கண்டு முதல்! 25 மேனிக்கு மேல்! கொள்ளை விளைச்சல்.
“”கூலி எவ்ளோவேனா போடுக்கா, நீங்க இல்லாட்டி நெனச்சி பாக்க முடியுமா இந்த கண்டு முதலை. எடுத்துக்கிட்டு மீதி கொடுக்கா!” என்றாள் ஜோதி.
35 மூட்டையை முதலியார் டிராக்டரில் ஏற்றி அவள் வீட்டில் இறக்கச் சொல்லிவிட்டு கூலியைப் பிரித்தனர். ஆளுக்கு ஒரு கலமும், மேங்கூலியாக மூணு மரக்காலும், ஆக மொத்தம் பதினைந்து மரக்கால் கிடைத்தது.
தூக்க முடியாமல் தூக்கிச் சென்றனர் அறுப்பறுத்த பெண்கள்.
“”ஐயா சாமி, இந்தாங்க, சொல்லுங்க எவ்ளோ வாடகை வண்டிக்கு” என்று முதலியாரைக் கேட்டாள்.
“”கொடுக்கறதைக் கொடும்மா, எடத்துக்கு ஒண்ணும் வேணாம். டிரைவருக்கு மட்டும் ஏதாச்சும் கொடு!”என்றார் பெரியவர் பெருந்தன்மையாய்.
டிரைவருக்கு கொடுத்துவிட்டு 11 மரக்கால் நெல்லை அவர் காலடியில் வைத்து கும்பிட்டாள்.
“”சாமி ஏழைங்க குடியை ஈடேத்துனீங்க. கோயில் காணிக்கை மாதிரி இந்த நெல்ல பெரிய மனசு பண்ணி எடுத்துக்கணும்” என்று ஜோதி சார்பில் மயிலாம்பு விழுந்து கும்பிடவும் நெகிழ்ந்து போய்விட்டார் பெரியவர்.
“”உண்மைல சாதிச்சது நீதான். தனி மனுஷியா இருந்து ஜெயிச்சுட்டியே?” எனும்போதே தூறலாய் இருந்தது பெரு மழையாய் பொழிய ஆரம்பித்தது.
அடுத்தடுத்த வயல்களில் கட்டு தூக்கிக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்தனர் மழைக்கு ஒதுங்க.
இங்கே நெல் தூற்றி வேலை முடிந்திருப்பதைக் கண்டனர். “”யாருக்கும் இன்னும் கட்டே ஆகலை. எல்லாம் மழைல நனையுது. இங்க பாரேன்! எல்லாம் நறுவுசா வேல ஆயிடுச்சே. ஆம்பள பயலுவ எதுக்கு லாயக்கு? பொம்பள சாதிச்சிடுச்சே!” என்று பேசிக் கொண்டனர்.
“”யக்கோ, நீ சாமி; எம்பொழப்ப காப்பாத்துன மாரியாத்தா நீ!” என்று நன்றியோடு காலில் விழுந்த ஜோதியை தூக்கி பெருமிதத்துடன் அணைத்துக் கொண்டாள் மயிலாம்பு.
“”பொட்டக்கோழி கூவி பொழுது விடிஞ்சுடுச்சே!” என்று அசந்துபோய் நின்றனர் அக்கம் பக்கத்து வயல்காரர்கள்.
– செப்டம்பர் 2011