(2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பாரதி ஆசிரமத்தின் அலுவலகத்தில் நிர்வாகிகள் பாலாவும் கருணாகரனும் கவலையுடன் அமர்ந்து இருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை. காலை பத்து மணி.
ஆசிரமத்தின் தலைவர் சாந்தா அம்மா இருந்து இருந்தால் ஆசிரமத்தில் உள்ள அனைவரும் சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு கலகலவென்று பேசிக்கொண்டு தங்கள் பணிகளை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், இன்று அவர் இங்கே இல்லாததால் ஆசிரமத்தில் அமைதி நிலவுகிறது.
ஆசிரமத்து ஊழியர் ஒல்லியான இளம்பெண் ஷீலா அங்கே வந்தாள். ‘ஐயா, அம்மாவைப் பார்க்காம டிபன் சாப்பிட மாட்டேன் ன்னு பெரியவங்களும் அடம் பிடிக்கறாங்க சிறுவர் சிறுமிகளும் அடம் பிடிக்கறாங்க. டிபனை வெளியே யாருக்காவது அனுப்பி விடுவேன் ன்னு சொல்லிப் பார்த்தேன் கேட்கல நீங்க வந்து பேசுங்க’ என்று படபடவென கூறி விட்டு அங்கிருந்து வெளியேறினாள்.
பாலாவும் கருணாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
சற்று நேரத்தில் ஆசிரமத்து வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய நடுத்தர வயதுடைய பெண்மணியைப் பார்த்ததும் பாலாவும் கருணாவும் வாசலுக்கு ஓடோடி வந்தனர்.
உள்ளேயிருந்து சிறுவர் சிறுமியர், அம்மா வந்துட்டாங்க என்று ஆரவாரத்துடன் ஓடி வந்தனர். கம்பீரக் குரலில் அந்தப் பெண்மணி ‘சரி எல்லாரும் ப்ரேயர் ஹாலுக்கு வாங்க’ என்றார்.
பிரார்த்தனை கூடம் ஆசிரமவாசிகளால் நிரம்பி வழிந்தது. சிறுவர் சிறுமியர், பெண்கள், வயதான ஆண்கள், பெண்கள் அனைவரும் அம்மாவின் முகத்தை அன்புடன் நோக்கினர். அருகில் பாலா, கருணா, ஷீலா நிற்க, அந்தப் பெண்மணி பேசத் தொடங்கினார், ‘எதையும் தாங்கும் சக்தியை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று பலமுறை சொல்லப்பட்டிருக்கு இல்லையா எதற்காகவும் பலவீனம் அடையாமல் உங்கள் கடமையை செய்ய வேண்டும். இப்பொழுது சிற்றுண்டி சாப்பிட்டு வேலையைப் பாருங்கள்’
பாலா ‘போதும் மேடம் வாங்க’ என்றார்.
‘இருங்க. ஏன் மறைக்கணும். நான் ஒங்க சாந்தா அம்மா இல்ல நான் அவங்களோட ஒண்ணாப் பிறந்த இரண்டாவது பெண் குழந்தை அதாவது ட்வின் சிஸ்டர். என் பேரு பிருந்தா டாக்டர் பிருந்தா அக்காவை நினைத்துக் கொண்டு நீங்க ஆகாரம் சாப்பிட இருக்கீங்கன்னு தான் நான் வந்தேன். மனவலிமை யோடு இருங்க அக்கா, நேற்று முன்தினம் சாந்தா அம்மா இரத்த தான முகாம் ஏற்பாடு பார்வையிடும் போது மயக்கம் ஆனாங்க. ஆஸ்பத்திரியில் சிகிச்சை கொடுத்துகிட்டு இருக்காங்க. நீங்க எல்லாரும் சாப்பிட்டு அவங்க அவங்க வேலைய பாருங்க குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் பெரியவர்களுக்கு வணக்கம்’ என்று கூறி விட்டு மேடையில் இருந்து இறங்கினார்.
சிறுவர் சிறுமியர் அன்புடன் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.
– ட்வின்ஸ் கதைகள் 10, முதற் பதிப்பு: 2020, எஸ்.மதுரகவி, சென்னை