மனிதர்களைப் பற்றி

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 27, 2021
பார்வையிட்டோர்: 22,518 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ரோமுக்கும் ஜினோவாவிற்கு மிடையிலே ஒரு இடத்தில் கண்டக்டர் நாங்களிருந்த பெட்டியின் கதவைத் திறந்து, அழுக்குப் படிந்த தொழிலாளி ஒருவன் உதவியோடு ஒற்றைக் கண் கிழவன் ஒருவனைச் சுமந்து வந்து ஏற்றுவது போல் உள்ளே கொண்டு வந்து சேர்த்தான்.

எல்லோரும் இனிய மென்னகை சிந்தி ‘வங்கிழம்தான்’ என்று ஏகமாக ஒலிபரப்பினர்.

ஆனால் அந்தக் கிழவன் வலிமையுள்ளவனாக மாறி நின்றான். சுருங்கி வதங்கிப்போன கையை ஆட்டி தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி அறிவித்து விட்டு, ரொம்பவும் அடிபட்டுப் பழசாகிப் போன தொப்பியை நரைத்த தலையிலிருந்து விசேஷ மரியாதை பாவத்தோடு நீக்கி விட்டு அவன் பெஞ்சுகளைத் தனது ஒற்றைக் கண்ணினால் கூர்ந்து நோக்கினான்.

‘உட்கார அனுமதிக்கிறீர்களா?’ என்று கேட்டான் அவன்.

பிரயாணிகள் கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்தார்கள். அவன் ஆசுவாசப் பெருமூச்செறிந்தபடி அமர்ந்தான். எலும்பான முழங்கால்கள் மீது அவன் கைகள் தங்கின. பல்லில்லாத நல்லதனச் சிரிப்பால் பிரிந்தன அவன் உதடுகள்.

‘ரொம்ப தூரம் போகிறீர்களா, தாத்தா?’ என்று கேட்டான் எனது துணைவன்.

‘இல்லையில்லை. இங்கிருந்து மூன்றே மூன்று கெடிகள் தான்’ என்பது அக்கிழவனின் உடனடிப் பதிலாக ஒலித்தது. ‘என் பேரனின் கல்யாணத்திற்குப் போகிறேன்…’

சில நிமிஷங்களுக்குப் பிறகு, வண்டிச் சக்கரங்களின் தானந்தவறாத ஓசைகளுடன் இணைந்து போகும் வகையிலே. அவன் எங்களுக்குத் தன் கதையைச் சொல்லிக் கொண்டு வந்தான். புயலடிக்கும் வேளையிலே முறிந்து விட்ட மரக்கிளை போல அப்படியும் இப்படியும் அசைந்தாடிக் கொண்டிருந்தான் அவன்.

அவன் சொன்னான்: ‘நான் லிகூரியாவைச் சேர்ந் தலன், கூரியவாசிகளாகிய நாங்கள் திடசாலிகள். என்னையே எடுத்துக் கொள்ளுங்களேன். எனக்குப் பதின் மூன்று மகன்களும் நான்கு மகள்களும் இருக்கிறார்கள். போக்குழந்தைகள் எத்தனையோ, அது எனக்கே தெரியாது. கல்யாணம் செய்து கொள்கிற இரண்டாவது பேரன் இவன். ரொம்ப அருமையான விஷயம், இல்லையா?’

மங்கிப் போயிருந்தாலும் மகிழ்வு குன்றிவிடாத ஒற்றைக் கண்ணால் எங்கள் எல்லோரையும் பெருமையாகப் பார்த்தான் அவன்; தானாகவே சிரித்துக் கொண்டான்.

‘எனது மன்னனுக்கும் நாட்டுக்கும் எத்தனை மக்கள் நான் அளித்திருக்கிறேன் பார்த்தீர்களா!’ என்றான்.

‘நான் என் கண்ணை எப்படி இழந்தேன்? ஆ, அது ரொம்ப நாளைக்கு முன் நடந்த விஷயம். அப்பொழுது நான் சுத்த சின்னப் பயல். என்றாலும் எங்க அப்பாவுக்கு உதவி செய்து கொண்டுதானிருந்தேன். கொடிமுந்திரித் தோட்டத்திலே அவர் மண்ணைக் கொத்திக் கொடுத்துக் கொண்டிருந்தார். எங்க பக்கத்திலே மண்ணு கரடுமுரடாய் கற்கள் நிறைந்ததாயிருக்கும். அதனால் அதிகக் கவனிப்பு தேவை. அப்பதான் எங்க அப்பாவின் பிக்காசு அடியிலே விருந்து ஒரு கல்லு கிளம்பி கணக்காக என் கண்ணிலே தெறித்து விட்டது. என்ன வலி வலித்ததென்று எனக்கு இப்ப ஞாபகமில்லை; ஆனால் அன்றைக்கு நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது என் முழி பிதுங்கி வெளியே வந்து விழுந்து விட்டது. ரொம்ப பயங்கரமான விஷயம் ஐயா அது. அதை எடுத்துப் பழைய இடத்திலே பொருத்தி வெதுவெதுவென்று ரொட்டி மாவை வைத்துக் கட்டுப் போட்டார்கள். இருந்தும், பிரயோசனமில்லை. கண் போனது போனது தான்!’

ஆரோக்கியம் குன்றித் தொங்கிய கன்னத்தை அழுத்தமாகத் தேய்த்துக் கொண்டே, மனோகரமான ஆனந்தப் புன்னகையை மறுபடியும் சிதறினான் அந்தக் கிழவன்.

‘அந்தக் காலத்திலே இப்போ இருக்கிறது போல இவ்வளவு டாக்டாய்யாக்கள் கிடையாது. ஜனங்கள் முட்டாள்தனமாக வாழ்க்கை நடத்தினார்கள். ஆமாம், அப்படித்தான். ஆனால் அவர்களிடம் அன்பும் இரக்கமும் அதிகமிருந்தது. ஹே!?’

இந்த இடத்தில், ஆழ்ந்த வரைகளும் பூஞ்சு பிடித்தது போல் தோற்றமளித்த பசிய சாம்பல் நிற ரோமங்களும் படிந்து தோலாகிப் போன, ஒரு கண் மாத்திரமேயுள்ள, முகம் சாமர்த்தியமும் தந்திரமும் கலந்ததொரு பாவம் ஏற்றது.

‘என்னவ்வளவு வயசுக்கு நீங்களும் வாழ்ந்தால், நீங்களும் மனிதரைச் சரியாக எடைபோட்டுவிட முடியும். நீங்கள் அப்படி நினைக்கவில்லையா என்ன?’

கறுத்துக் கோணிப் போயிருந்த விரல் ஒன்றைக் கம்பீரமாக உயர்த்தி நீட்டினான், யாரையோ குற்றம் சாட்டுவது போல.

‘மக்களைப் பற்றி நான் உங்களுக்குச் சில விஷயம் சொல்கிறேன், ஐயாமார்களே…’

‘என் தர்தை இறந்த போது எனக்குப் பதிமூன்று வயசு. இப்பொழுது இருக்கிறதைவிடச் சிறியதாகத் தான் தோன்றினேன் அன்று. ஆனால் வேலை என்று வந்து விட்டாலோ தான் சோர்வேயற்று ஏக உற்சாகமாகத்தானிருந்தேன். என் அப்பாவிடமிருந்து எனக்கு வந்து சேர்ந்தது இந்தக் குணம் ஒன்றுதான். ஏனென்றால், இருந்த கடனை அடைப்பதற்காக எங்கள் நிலத்தையும் வீட்டையும் விற்க வேண்டியதாயிற்று, ஆகவே எங்கெங்கே வேலை கிடைக்குமோ அங்கெல்லாம் நான் என் ஒற்றைக் கண்ணையும் இரண்டு கைகளையும் வைத்து வேலை செய்தே பிழைக்க சேர்ந்தது…அது கஷ்டமாகத்தானிருந்தது. ஆனால் வாலிபம் கஷ்டங்களைக் கண்டு பயப்படுவதில்லை. சரிதானே?

எனக்குப் பத்தொன்பது வயதான போதுதான், நான் காதலிக்க வேண்டும் என்று விதிக்கப் பெற்ற பெண்ணைச் சந்தித்தேன். அவளும் என்னைப் போல ஏழைதான். ஆனால் உடலுரம் பெற்ற பெண்; என்னைவிடப் பலசாலி. ஓக்காளியான கிழட்டுத் தாயோடு வசித்து வந்தாள். அவ ளும் என்னைப் போலவே, எதிர்ப்பட்ட வேலை எதுவானா இம் அதைச் செய்து பிழைத்து வந்தாள். குறிப்பிடத் தகுந்த அழகு வாய்ந்தவளல்ல அவள். ஆயினும் அன்பு மிகுந்தவள் ; அவளுக்கு நல்ல தலையிருந்தது. நல்ல குரலும் கூட. ஆ, அவள் என்னமாய் பாடுவாள் தெரியுமா! தொழிற் பாடகி மாதிரியே தான். நல்ல குரல் இருக்கிற தென்றாலே அதற்கு மதிப்பு தனி தான். நான்கூடப் பழு தில்லாமல் பாடுவது வழக்கம்.

நாம் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று அவனிடம் ஒரு நாள் நான் கேட்டேன்.

‘அது முட்டாள் தனமாகத் தான் முடியும், ஒற்றைக் கண்ணரே! உன்னிடமும் சரி, என் கிட்டேயும் சரி, எது வுமே கிடையாது. நாம் எப்படி வாழ்க்கை நடத்துவது?’ என்று துயரத்தோடு சொன்னாள் அவள்.

அதுதான் முழு உண்மை. அவளும் நானும் வக்கற்றவர்கள் தான். ஆனால் காதல் கொண்டு விட்ட இளம் ஜோடிகளுக்கு வேறு என்ன வேண்டும்? காதலுக்கு இதர தேவை கள் மிகச் சொல்பம்தான் என்பது உங்களுக்கே தெரியும். எனது கருத்தை வலியுறுத்தி நான் வெற்றி பெற்று விட் டேன்.

‘நல்லது. நீ சொல்வதும் சரிதான்’ என்று இடா சொன்னாள். பரிசுத்த தேவமாதா இப்போது தனியாக வசிக்கும் உனக்கும் எனக்கும் உதவி புரிகிறாளே; நாம் இரண்டு பேரும் சேர்ந்து வாழத் தொடங்கினால் நமக்கு உதவி செய்வது அவளுக்கு எவ்வளவோ சுலபமான காரியமாகி விடும்!

ஆகவே நாங்கள் பாதிரியாரைத் தேடிப் போனோம்.

‘இது பைத்தியக்காரத்தனம்’ என்றார் அவர். ‘கூரியாவில் இப்பொழுதுள்ள நிலையில் போதுமான பிச்சைக்காரர்கள் இல்லாமலா போனார்கள்? இன்பமற்ற மனிதர்களே, நீங்கள் சைத்தானின் விளையாட்டுப் பொம்மைகள ; அவன் தூண்டுதலைத் தகர்த்தெறியுங்கள். இல்லையோ, உங்கள் பல வீனத்தின் விலையாக நீங்கள் கடுமையான காணிக்கை செலுத்த நேரிடும்.’

சமுதாயத்திலுள்ள இளம் வெட்டுகள் எங்களைப் பார்த்துச் சிரித்தன; கிழடு கட்டைகள் எங்களைக் கண்டித் தன. ஆனால் வாலிபம் பிடிவாதம் நிறைந்தது, தனது போக்கிலே புத்திசாலித்தனமானது! கல்யாண நாள் வந்து சேர்ந் தது. முந்திய காலத்தை விட அன்றையப் பார்த்து நாங்க ளொன்றும் அதிகப் பணக்காரர்களாகி விடவில்லை. எங்கள் கல்யாண இரவிலே எங்கே கிடந்து தூங்குவது என்கிற விஷயம் கூட எங்களுக்குப் புரியவில்லை.

‘வயல் வெளிகளுக்குப் போவோம். ஏன் கூடாது? மக்கள் எங்கிருந்தாலும் சரி, தேவமாதா அவர்களிடம் அன்பாகத்தானிருக்கிறாள்’ என்று இடா சொன்னாள்.

அப்படியே நாங்கள் முடிவு செய்தோம் – பூமியே எங்கள் படுக்கையாகட்டும்; வானமே எங்களுக்கு மேல் விதானமாக அமையட்டும்,

இப்பொழுது வேறொரு கதை ஆரம்பமாகிறது, ஐயா. தங்கள் கவனமாய்க் கேளுங்கள். ஏனெனில் எனது நீண்ட வாழ்விலேயே இதுதான் மிகச் சிறந்த கதை.

எங்கள் கல்யாணத்திற்கு முந்திய தினம் அதிகாலை வில், வயோதிகக் கியாவன்னி சொன்னார் – அவருக்காக நான் ஏகப்பட்ட வேலைகள் செய்து முடித்திருந்தேன் – இதுமாதிரிச் சின்ன விஷயங்களைப் பற்றிப் பேசுவதை அவர் வெறுத்ததால், என்னிடம் அவர் மூக்காலே முண முணத்தார்:

‘யுகோ, பழைய ஆட்டுப்பட்டி இருக்கிறதே அதை நீ சுத்தப்படுத்த வேண்டும். சுத்தமான வைக்கோலைக் கொஞ்சம் அங்கே போட்டு வை. அது காய்ந்து கிடக்கிற தரை தான். ஒரு வருஷத்திற்கு மேலாகவே அங்கு ஆடுகள் அடைபடவில்லை. இருந்தாலும், நீயும் இடாவும் அதிலே வசிக்க விரும்பினால் முதல்லே அந்த இடத்தை சுத்தம் செய்து கொள்வது நல்லது’.

இப்படியாக எங்கள் வீடு அமைந்து விட்டது.

குஷியாகப் பாடிக்கொண்டே அந்த ஆட்டுக் கொட்டிலைச் சுத்தம் செய்யும் வேலையில் நான் மும்மரமாக யிருந்த போது, தச்சு வேலை செய்யும் காஸ்டன்ஸோ அங்கே கதவருகே வந்து நிற்பதைப் பார்த்தேன்.

‘ஆகவே நீயும் இடாவும் குடித்தனம் போடப் போகிற இடம் இதுதானாக்கும்? சரிதான், படுக்கை எங்கேப்பா? எங்க வீட்டிலே அதிகப்படியாக ஒரு படுக்கை கிடக்குது. இதைச் சுத்தம் செய்து முடித்ததும், வந்து அதை எடுத்துக் கொள்’ என்றான்.

நான் அவன் வீட்டிற்குப் போகையில், வழியில் கடை வைத்திருந்த வம்புக்காரி மரியா கத்தினாள்: ‘அசடுகள், கல்யாணம் செய்து கொள்கிறதாம்! அதுவும் பெயருக்கு ஒரு விரிப்போ தலையணையோ கூட இல்லாமல் எய் ஒற்றைக்கண் மனுஷா, உனக்குப் பைத்தியம்தான் பிடிக்திருக்கு. பரவால்லே, உன் மணப் பெண்ணை என்னிடம் அனுப்பிவை…’

பக்க வாதத்தினாலும் காய்ச்சலினாலும் வதையுறும் நொண்டி எட்டோர் வியானோ தனது வீட்டு வாசலில் நின்ற படியே அவளை நோக்கிக் கூச்சலிட்டான்:

‘விருந்தாளிகளுக்காக அவன் எவ்வளவு ஒயின் சேர்த்து வைத்திருக்கிறான் என்று கேளு. ஆகா, மனுஷர்கள் எவ்வாறு தான் இப்படிப் புத்தி கெட்டுப் போவார்களோ!’

அந்தக் கிழவனின் கன்னத்து மடிப்புகள் ஒன்றின் மீது மினுமினுத்தது கண்ணீரின் ஒளித்துளி ஒன்று. அவன் தலையைக் கொஞ்சம் பின்னுக்குத் தள்ளி ஓசையற்ற சிரிப்புச் சிரித்துக்கொண்டான். அதனால், அவன் தொண்டையில் எலும்பாகத் துருத்தி நின்ற ஆதாம் ஆப்பிள்’ ஏறி இறங்கியது; தளர்ந்து தொங்கிய சருமம் ஆடி நடுங்கிக் கொண்டிருந்தது.

சிரிப்பினால் திக்குமுக்காடி, சிறுபிள்ளைத்தனமான உற்சாகத்தினால் கைகளை ஆட்டி அசைத்துக் கத்தினான் அவன்: ‘ஓ, வின்யாரி, வின்யாரி! கல்யாணத்தன்று காலையிலே எங்கள் வீட்டுக்கு வேண்டிய எல்லாம் எங்களுக்கு வந்து சேர்ந்திருந்தன – மடோனா சிலை ஒன்று, பாத்திரங்கள், துணிமணிகள், தட்டு முட்டுச் சாமான்கள், எல்லாம். எல்லாம் என்றுதான் சொல்கிறேனே! இடா சிரித்தாள், அழுதாள். நானும் கூடத்தான். மற்றவர்கள் எல்லோரும் சிரித்தார்கள் – கல்யாண நாளிலே அழுவது மோசமான விஷயம்தானே, ஆகவே எங்களைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் எங்களைக் கேலி செய்து சிரித்தார்கள்.

ஸின்யாரி, நமது சொந்தக்காரர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கு மனிதர்கள் இருந்தாலே அதன் இனிமை தனிதான். அதிலும் அவர்கள் நமக்குச் சொந்தமானவர்கள், மிகவும் நெருங்கியவர்கள், நமது வாழ்க்கையை அற்பமாகவும் நமது இன்பத்தை விளையாட்டுப் பொருளாகவும் கருதாத உண்மை மனிதர்கள் அவர்கள் என்று உணர்ந்தால் அதன் ஆனந்தமே அலாதிதான்.

‘அடாடா என்ன அருமையான கல்யாணம் அது! என்ன பத்புதமான தினம்! சமுதாயம் பூராவும் அவ் விசேஷத்திற்கு விஜயம் செய்தது. ஒவ்வொருவரும் எங்கள் தொழுவத்திற்கு வந்ததனால் அது அவ்வேளையிலேயே செல்வமய மாளிகையாக மாறிவிட்டது. எல்லாம் எங்களிடமிருந்தன! ஒயினும் பழமும், மாமிசமும் ரொட்டியும். ஒவ்வொருவரும் உண்டார்கள்; எல்லோரும் உற்சாகமாகயிருந்தார்கள்….அது ஏனென்றாலோ, ஸின்யாரி, மக்களுக்கு நல்லது செய்வதைவிட உயர்ந்த இன்பம் வேறெதுவுமில்லை. என்னை நம்புங்கள், அதை விட இனியது, அதனினும் அதிக அழகானது வேறொன்றும் கிடையாது.

பாதிரியார் கூட வந்து விட்டார். அவர் அழகானதொரு பிரசங்கம் செய்தார். அவர் சொன்னார்:

‘உங்கள் எல்லோருக்கும் உழைத்தவர்கள் இரண்டு பேர் இதோ இருக்கிறார்கள். அவர்கள் வாழ்விலேயே மிகச் சிறந்ததாக இந்நாள் விளங்கும்படி நீங்கள் உங்களால் இயன்றவை அனைத்தையும் செய்து விட்டீர்கள். எது எப்படி ஈடக்க வேண்டுமோ, அப்படியே யாயிற்று. உங்களுக்காக உழைத்தவர்கள் இவர்கள், செப்பு, வெள்ளிக் காசுகளை விட உழைப்புதான் மிக முக்கியமானது. நீங்கள் பெறக் கூடிய ஊதியத்தைப் பார்க்கிலும் என்றுமே மிக உயர்ந்தது உழைப்பு. பணம் போய்விடும், உழைப்பு மிஞ்சும்… இவர்கள் சந்தோஷமாகவும் அடக்கமாகவும் இருக்கிறார்கள். இவர்கள் வாழ்க்கை கடினமானது தான்; என்றாலும் இவர்கள் முணமுணக்க வில்லை. இனியும் இவர்கள் வாழ்க்கை கொடுமைகள் அதிகரித்ததாகவே யிருக்கும், எனினும் இவர்கள் முணுமுணுக்க மாட்டார்கள். இவர்களுக்குத் தேவை ஏற்படும் காலத்தில் நீங்கள் உதவி புரிவீர்களாக. நல்ல கைகளும் திண்ணிய இதயமும் பெற்றவர்கள் இவர்கள்.’

இப்படி எனக்கும், இடாவுக்கும், சமுதாயம் முழுமைக்கும் புகழ் மொழிகள் பல பாடினார் அவர்.”

இழந்த இளமைக் கனலை மீண்டும் பெற்ற தனது ஒற்றைக் கண்ணால் எங்கள் எல்லோரையும் கவனித்த அக்கிழவன் முடித்தான்:

“இதோ, ஹின்யாரி , மக்களைப் பற்றி நான் உங்களுக்கு கொஞ்சம் சொல்லி முடித்து விட்டேன். அது நன்றாகத் தானேயிருந்தது, இல்லையா?”

– கடலில் நடந்தது (கதைகள்), முதல் பதிப்பு: நவம்பர் 1951, எழுதியவர்: மாக்ஸிம் கார்க்கி, தமிழில்: வல்லிக்கண்ணன், வெண்புறா வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *