மனிதருள் ஒரு தேவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 21, 2022
பார்வையிட்டோர்: 4,452 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பத்திரிகைச் செய்திகளைப் படித்து விட்டுப் பரபரப்புடன் பதினைந்து நாள் ரஜாவில் பஞ்சாபுக்குப் புறப்பட்டுச் சென்ற சுபேதார் மல்ஹோத்ரா, கிளம்பிச் சென்ற பன்னிரண்டாவது நாளே முகாமுக்குத் திரும்ப நேர்ந்த விபரீதத்தை விதி என்று ஏற்றுக்கொண்டு ஆறுதல் பெறுவது எளிதன்று.

விடுதிக்குக்கூடச் செல்லாமல் ஹோல்டாலும் கையுமாக நேரே அலுவலகக் கூடாரத்திற்குள் நுழைந்த சுபேதாருக்கு இராணுவ சம்பிரதாயப்படி மரியாதை செலுத்தக்கூடத் தோன்றவில்லை எனக்கு. அப்படியிருந்தது அவரது தோற்றம்! வேதனை தோய்ந்த முகம்; ஒளியிழந்த கண்கள். அந்த உதடு களில் வழக்கமாக நெளியும் புன்னகையைக் கூடக் காணோமே, இன்று ! நெற்றியில் அரும்பிய வியர்வை முத்துக்களைத் துடைத்த வாறு நாற்காலியில் அமர்ந்துக் கால்களை நீட்டிச் சாய்ந்து கொண் டார் மல்ஹோத்ரா.

“சர்தார்ஜி ! என்ன நடந்தது…? என்னவோ போலிருக்கிறீர்களே…” என்றேன் தயக்கத்துடன்.

எங்கோ சூன்யத்தில் லயித்த பார்வையை என் பக்கம் திருப்பி “உம்…என்ன கேட்டீர்கள், பாலு…? என்ன நடந்தது என்றா ? உம்…எல்லாம் முடிந்து விட்டது, பாலு! எல்லாமே தான்! இனி நடக்க வேண்டியது ஒன்றும் பாக்கியில்லை!” மல்ஹோத்ராவின் கண்கள் கலங்கியதை அப்போது தான் முதல் தடவையாகப் பார்த்தேன். பிறர் துன்பத்தையெல்லாம் துடைக்கும் அமைதி துலங்கும் மல்ஹோத்ராவின் முகத்தில் ஏன் இந்தச் சோகம்! அதை மறைக்க விரும்புகிறவர் போல் மேசையின் மீது முகத்தைக் கவிழ்த்துக் கொண்டார்.

பஞ்சத்து ஆண்டியாகப் பட்டாளத்தில் சேர்ந்தவரல்லர், மல்ஹோத்ரா. அவரது தந்தை, பாட்டனார் எல்லாருமே ராணுவ பரம்பரையினர். பரம்பரை வாசனை தான் படித்துப் பட்டம்பெற்ற மல்ஹோத்ராவையும் ராணுவ சேவைக்குக் கவர்ந்து இழுத்தது போலும். படிப்பினால் பெற்ற அறிவு அவரது ஒவ்வொரு சொல்லிலும் சுடர்விடும். இதை முழுவதும் அவருக்கு மனப்பாடம். எவ்வளவு நெருக்கடியான சந்தர்ப்பத்தி லும் அவர் நிதானமிழக்காமலிருப்பது எனக்கு வியப்பூட்டும்: சுருள் சுருளாக வளர்ந்திருந்த தாடியைக் காதருகிலிருந்து சேர்த்துச் சீவி, முறுக்கி முகவாய்க்கட்டைக்கும் கீழே அவர் முடிபோடும் முயற்சியில், அறுந்து அறுந்து விழும் தக்ளியில் நூல் நூற்பவ னின் விடாமுயற்சியையும் பொறுமையையும் காணலாம். அத்தகைய உறுதியும் சாந்தமும் நிறைந்தவரா இன்று இவ்வாறு நிலைகுலைந்து காணப்படுகிறார்…?

மேசையின் மீது முழங்கையை ஊன்றி நிமிர்ந்து உட்கார்ந்து, “நடந்ததைச் சுருக்கமாகக் கூறுகிறேன், பாலு! சாப்பிடப் போயிருக்கும் ஜவான்கள் திரும்பி வருவதற்குள் முடித்துவிட வேண்டும். என் துயரத்தை எல்லோர்மீதும் ஏன் திணிக்க வேண்டும்? இங்கிருந்து கிளம்பும்போது பதினைந்து நாட்கள் ரஜா எப்படிப் போதும், என்ற குறையோடுதான் ரயிலேறினேன். ஆசை மனைவியுடனும் அன்புக் குழந்தைகளுடனும்: இன்னும் பத்து நாட்கள் தங்கியிருக்க மாட்டோமா என்ற ஆதுரம் எந்தத் தகப்பனுக்குத்தான் இராது? ஆனால்…நாம் நினைப்பதெல்லாம் நடந்தேறுவதில்லையே! அதிருக்கட்டும், முதலில் என் கிராமத்தின் அமைப்பைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.

சட்லெஜ் நதியிலிருந்து பிரியும் ஒரு சிற்றாறு, கிழக்கு மேற்குப் பஞ்சாப் மாகாணங்களுக்கு அந்தப் பகுதியின் எல்லையாக அமைந் துள்ளது. பதினான்கு வருடங்களுக்கு முன்பு என் கிராமத்தின் அருகில் ஒரு காங்கிரீட் பாலம் கட்டினார்கள். பாலம் ஏற்படு வதற்கு முன்பெல்லாம் படகில்தான் ஆற்றைக் கடக்கவேண்டி யிருந்தது. ஆற்றுக்குக் கிழக்கேயுள்ள மோரார் கிராமத்தில் தான் பள்ளிக்கூடம் இருந்தது. ஆறு மிகவும் குறுகலானது. ஆனால் ஆழம் அதிகம். தவிர, அந்தப் பிரதேசம் சமநிலமான தன்று. வடக்கே பூமி உயர்ந்தும் தெற்கே பள்ளமாகவும் இருப் பதால், கோடையில் வெள்ளம் குறைவாக இருக்கும்போது கூட வேகம் கடுமையாக இருக்கும். நான் பள்ளியில் படித்த நாட்க ளில் காலை, மாலை இருவேளைகளும் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. சுழியிட்டுச் செல்லும் பிரவாகத்தின் குறுக்கே மிதந்து செல்லும் படகில் நண்பர்கள் புடைசூழப் போய்வரும் அந்த ஆனந்தம்… அந்த நினைவின் பசுமையிலே இன்று நான் அனுபவிக்கும் துன்பத்தை மறந்துவிட முயல்கிறேன், முடிய வில்லையே… பாலு!

“துயரம் நெஞ்சை வாட்டும்போது அதனை வாய்வழியாகத் தான் வெளியேற்ற வேண்டும் என்று நீங்களே சொல்லுவது வழக்கமாயிற்றே? சொல்லுங்கள்!” என்றேன்.

மல்ஹோத்ரா தொடர்ந்தார்: “இருபது முப்பது வீடுகள், சில குடிசைகள். சொற்ப ஜனத்தொகை – குஞ்சு, குளுவான்கள் உட்பட இருநூறுக்குள் தானிருக்கும். இது தான் என் கிரா மம். அஸ்தமன நேரத்துக்கு நான் மோரார் போய்ச் சேர்ந் தேன். வழிநெடுகிலும் ஆள் அரவமேயில்லை. எனக்கு அந்தச் சூழ்நிலை திகைப்பூட்டியது. தற்செயலாக எண்ணெய்ப் புட்டியுடன் வந்த ஒரு சிறுவனை விளித்து, “ஏன் தம்பி! மோராரில் மனிதர்களே இல்லையா? பக்கத்து கிராமத்தில் ஏதாவது திருவிழாவா…?” என்று விசாரித்தேன்.

சிறுவன் கேலியாகச் சிரித்தான். “ஆமாம், திருவிழாத் தான்…நீங்கள் எங்கே போகவேண்டும்?” என்று கேட்டான்:

நான் ஆற்றின் மறுகரையைச் சுட்டி, “மில்காபூர்” என்றேன்.

அவன் வியப்புடன் விழிகளை உருட்டி, “மில்காபூருக்கா? என்ன இருக்கிறது அங்கே?” என்றான்.

என்ன இருக்கிறதா? அசட்டுப் பயல் ! “அது தான் பையா, என் சொந்த ஊர்! என் குடும்பம், வீடு, குழந்தைகள்…எல்லாந் தான் இருக்கிறது!” என்றேன் உற்சாகத்துடன். பிறந்த மண்ணாயிற்றே!

எனக்குப் பதில் ஏதும் கூறாமல் எதிர்த்திசையில் நடந்தான் சிறுவன். நான் மறுபடியும் அவனை அழைத்தேன். அவன் திரும்பிப் பார்க்கவில்லை. அதன் கருத்து, பிறகு தான் விளங்கியது எனக்கு:

வீதியைத் தாண்டி, கோதுமை வயல்களினூடே செல்லும் ஒற்றையடிப்பாதை வழியே நடந்தேன். வானளாவ வளர்ந்து நின்ற சிடார் மரங்களுக்குப் பின்னால் ஒளிந்து பதுங்கிய கதிரவனின் செவ்வொளியால் அந்த வட்டாரமே தீப்பற்றி எரிவது போலிருந்தது. ஆற்றுப் பாலத்தை அடைந்ததுமே என் கிராமம் இருந்த திசைநோக்கிப் பார்வை பறந்தது.

எதிர்க் கரையிலிருந்த அன்னையை நோக்கித் தாவும் குழந்தை போல என் உள்ளம் உவகையால் துள்ள, சிந்தனை சிறகடித்துப் பறக்க, பார்வை பாஜில்கா கிராமத்தில் பட்ட மறு விநாடி…என் உடலின் இரத்தமெல்லாம் உறைந்து விட்டது! கையிலிருந்த ஹோல்டாலும் பழக்கூடையும் நழுவி விழுகின்றன. கால்கள் துவளுகின்றன. என் உடலின் கனத்தையே கால்களால் தாங்க முடியவில்லை போலும்! என்ன இதெல்லாம்?

அருகிலிருந்த விளக்குக் கம்பத்தைப் பற்றியவாறு பாலத்தின் கைப்பிடிச்சுவரில் சாய்கிறேன். இதைக் காணவா நான் இவ்வளவு தூரம் வந்தேன்…?

“அப்படி என்ன காட்சியைக் கண்டீர்கள்?” என்றேன் பரப்பரப்புடன்.

“என் கிராமம் முழுவதும் தீக்கிரையாகிவிட்டிருந்தது! எரிந்து கருகிக்கிடந்த கூரைகள்; சரிந்து விழுந்து நொறுங்கிக் கிடந்த ஓடுகள்; சேரிஇருந்த இடத்தில் சாம்பல் குவியல்கள்! தபால் சாவடி இருந்த இடத்தில் தரையில் உருண்டு கிடந்த சிவப்புப் பெட்டி! இடிபாடுகளைச் சுற்றிச் சுற்றி அலைந்து கொண்டிருந்த ஒரு கழுதை – இதுதான் நான் கண்ட காட்சி!

நாசியின் இரு துவாரங்களைப்போல், ஒன்றுக்கொன்று ஆதரவாக, எத்தனையோ தலைமுறைகளாக ஆற்றுக்குக் கிழக்கிலும் மேற்கிலுமாக அமைந்திருந்த இருகிராமங்களில் ஒன்று, இன்று மயானமாக விளங்குகிறது, பாலு! மனிதனை மிருகமாக்கும் வெறித்திக்குப் பலியாகி அழிந்துவிட்டது! மதத்தின் பெயரால் நிகழ்ந்த அழிவு! என் மனைவி, குழந்தைகள்…யாரிடம் விசாரிப்பது?

இன்னும் பத்து நாட்கள் முன்னதாக நான் புறப்பட்டுப் போயிருந்தால்…? ஆடு மேய்த்துவிட்டுத் திரும்பும் சிறுவர்களையும் உல்லாசமாக ஆற்றங்கரையில் மீன்பிடிப்பவர்களையும் அந்த நேரத்தில் பாலத்தருகில் சகஜமாகக் காணலாம். ஹோல்டாலையும் பழக்கூடையையும் நான் சுமந்து செல்ல விட்டிருப்பார்களா? ‘நான் முந்தி, நீ முந்தி’ என்று என்னைச் சூழ்ந்து கொண்டு, கூலி கூடப் பேசாமல் என் கைச்சுமையைப் பிடுங்கியிருப்பார்களே? முஸ்லிம், ஹிந்து, சீக்கியர் என்ற வேறுபாடெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. நம் ஊரான்; பட்டாளத்துக்காரன்; கூலியைக் குறைக்கமாட்டான் என்ற ஒரு நம்பிக்கை தான் அவர்களுக்கு! பிரிவினை, அரசியல் இதெல்லாம் அவர்களுக்குத் தேவையேயில்லை! புரியவும் புரியாது!

மோராரில் எண்ணெய்ப் புட்டியுடன் எதிரில்வந்த சிறுவன் பதில் பேசாமல் போன தன் காரணம் இது தான் போலும்! என் கிராமத்துக்கு நேர்ந்த நாசம் மோராருக்கும் நேர்ந்துவிடப் போகிறதோ என்ற பீதி காரணமாகத்தான் அங்கு மனித நடமாட்டமே இல்லையோ என்னவோ!

கீழே கிடந்த பழக்கூடை என்னை அனுதாபத்தோடு பார்த் தது. ‘உன் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம் என்று எவ்வளவு ஆசையோடு சுமந்து வந்தாய், பாவம்!’ என்று எனக்காக இரங்கியதோ ?

கூடையை எடுத்துக் கொண்டு கரையிலிருந்து இறங்கினேன். அருகிலிருந்த நாணற் புதரில் ஏதோ சலசலத்தது. நிஜார்ப் பையிலிருந்த பிச்சுவாவை வெளியே எடுத்தேன்.

மறுகணம், “பாபுஜீ…” என்று அலறிய வண்ணம் புதரிலி ருந்து வெளிப்பட்ட யுவதி என் காலடியில் விழுந்தாள். என் திகைப்பு நீங்கப் பல நிமிடங்களாயின.

“ஸாரா….”

“பாபுஜி… நீங்களா…?”

அவள் நிலையைக் கண்ணுற்ற எனக்குப் பேச்சே எழவில்லை. தலையோடு கால் என்னை ஒரு தடவை பார்த்து விட்டுக் கூடையிலி ருந்து ஒரு பழத்தை எடுத்துக் கடித்தாள்.

“நல்ல பசி, பாபுஜி! நேற்று முழுவதும் சாப்பிடவேயில்லை!” என்றாள் ஸாரா.

“வேண்டிய மட்டும் சாப்பிடு! யாருக்குக் கொடுப்பதென்று தெரியாமல், ஆற்றில் எறியப்போனேன். நல்ல வேளையாக, சாப்பிடுவதற்கு நீ ஒருத்தியாவது பாக்கி இருக்கிறாயே! உட்கார இடம் தேடினேன் கரையின் சரிவில்.

“உட்கார வேண்டாம், பாபுஜி! சீக்கிரம் புறப்படுங்கள். இங்கே இருப்பது ஆபத்து…”

“நீ..?”

“நானும் உங்களுடன் வருகிறேன். இனி எனக்கு வேறு யார் இருக்கிறார்கள்…” விம்மல் அவளது பேச்சைத் தடைசெய்தது.

பழக்கூடையைத் தூக்கிக் கொண்டு மோராரை நோக்கிப் புறப்பட்டாள், ஸாரா, ஹோல்டாலுடன் நானும் அவளைப் பின் தொடர்ந்தேன்.

“ஸாரா! என்ன நடந்தது? ஓரளவுக்கு என்னால் ஊகிக்க முடிகிறது. என் குடும்பம் என்னவாயிற்று? விவரமாகச் சொல்லேன்…”

“உஷ்… இரைந்து பேசாதீர்கள். நீங்கள் சொன்னதுபோல் நான் ஒருத்தித்தான் உயிரோடு தப்பியிருக்கிறேன். பேசிக் கொண்டிருந்தால் யமன் என்னையும் துரத்திக்கொண்டு வந்து விடுவான். வேகமாக வாருங்கள், பாபுஜி!” கூடையிலிருந்து இன் னொரு பழத்தை எடுத்துக் கடித்தவாறு வேகமாக நடந்தாள் ஸாரா, அதைக் கேட்டதும் என் கால்கள் தொய்ந்தன.

எதிர் வீட்டு ஹூகும் சிங்கின் ஒரே மகள் ஸாரா, அவளைப் போன்ற அழகி அந்த வட்டாரத்திலேயே இல்லை எனலாம். சென்ற தடவை நான் ரஜாவில் கிராமத்துக்குச் சென்றிருந்த போது, ‘பட்டாளத்திலே இந்த வாயாடிக்கேற்ற பையன் யாராவது இருந்தால் சொல்லேன், கட்டிப்போடலாம்!’ என்று ஹுகும் சிங் என்னிடம் விளையாட்டாகக் கேட்டது இன்னும் மறக்கவில்லை எனக்கு. அவர் உருவம் கண்முன் நிற்கிறது. ஆனால்…அவர் தான் இன்று இல்லை, பாலு! யார்தான் இருக்கிறார்கள்? என் மனைவி இருக்கிறாளா? குழந்தைகள்…. – மல்ஹோத்ராவின் குரல் கம்மியது

அவர் அனுபவித்த வேதனைக்கு வார்த்தைகளால் ஆறுதலளிக்க இயலுமா?

தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசத் தொடங்கினார், மல்ஹோத்ரா : மோராரைக் கடந்து பாஜில்கா போகும் சாலையை அணுகியதும் ஜனசந்தடி தென்பட்டது. தெரு விளக்குகள் பிரகாசமாக ஒளிர்ந்தன. என்னால் மேலும் பொறுமை யோடிருக்க முடியவில்லை. “ஸாரா! சொல்! என் மனைவி, குழந்தைகளின் கதி என்னவாயிற்று? உன் தந்தை தப்பிப் பிழைக்கவில்லையா? நாணற் புதரில் எவ்வளவு நாட்களாக ஒளிந்து கொண்டிருக்கிறாய்?” என்று கேள்விகளை அடுக்கினேன்.

ஆபத்தான சூழ்நிலையிலிருந்து வெளியேறி வெகு தூரம் வந்து சேர்ந்த பிறகுதான் ஸாரா பேசினாள் : “பாபுஜி! மெய்யாகவே உயிரோடு தப்பியவள் நான் ஒருத்தி தான். ஆண்கள் ஓரிருவர் எங்கேயாவது ஓடி ஒளிந்து கொண்டிருப்பார்களோ என்னவோ! நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. நேற்றைக்கு முன் தினம் இரவு பத்துமணி இருக்கும். திடீரென்று சேரிப்பக்கமிருந்து கூக்குரல் கேட்டது. அப்பா கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தார். உடனே அவர், ‘ஐயோ! சேரி பற்றி எரிகிறதே!’ என்று கத்தினார். கூச்சலும் அவலக் குரல்களும் அதிகரித்தன. குழந்தைகளும் பெரியவர்களும் அலறிப் புடைத்துக்கொண்டு தெருவோடு ஓடினர். ‘கொலை! கொள்ளை! வெறியர்கள் சூரையாடுகிறார்கள்! ஓடுங்கள்! தப்பி யோடுங்கள்!’ என்று பல குரல்கள் கேட்டன. சில நிமிடங்களுள் கிராமமே காலியாகிவிட்டது. நாங்கள் தலை தெறிக்க ஓடி ஆற்றங்கரையை அடைந்தபோது, பின்னாலிருந்து தீப்பந்தங்களுடனும் தடிக்கம்புகளுடனும் குண்டர்கள் பலர் துரத்தி வருவதையும் நம் தெரு முழுவதும் பற்றி எரிவதையும் ஆற்று மேட்டிலிருந்து பார்க்க முடிந்தது. ஓடவும் தென்பு இல்லை, யாருக்கும். எதிர்க் கரையை அடைந்தால் தப்பிவிடலாம் என்று ஒரு நம்பிக்கை. எதிர்க்கரையில் சாவு காத்திருக்கிறது என்பது யாருக்குத் தெரியும்? எப்படித் தெரியும்?

பயங்கரம், பாபுஜி! இருளில் மரத்தடியில் பதுங்கியிருந்த நூற்றுக்கு மேற்பட்ட ராட்சதர்கள் பளபளக்கும் கத்திகளுடன் எங்களை நோக்கி ஓடிவந்தனர். குழந்தைகளும் பெண்மணிகளும் அலறிக் கூக்குரலிட்டது… நினைக்கவே குலை நடுங்குகிறது, பாபுஜி! உங்கள் மனைவி என்னைப் பின்தொடர்ந்து, குழந்தையைத் தோளில் சாத்தியவாறு ஓடிவந்தார். ‘அம்மா! அம்மா!’ என்று அலறியவாறு பின்னால் ஓடிவந்த உங்கள் மகன் சரண்…ஐயோ! அதை எப்படிச் சொல்வேன், பாபுஜி! ஒரு முரடன் அவனைப் பிடித்துப் பாலத்தின் மதகில் மோதி ஆற்றில் வீசி எறிந்ததை என் கண்ணால் பார்த்தேன்! உங்கள் மனைவியும் பார்த்தாள்! எங்களால் என்ன செய்ய முடியும், பாபுஜி! இவர்களிடம் அகப்பட்டு மானமிழந்து சாவதைவிட, ஆற்றில் விழுந்து உயிர் துறப்பதே மேல் என்றுதான் தோன்றியது. எஞ்சியிருந்த தைரியத்தையெல்லாம் திரட்டிக்கொண்டு ஆற்றில் குதித்துவிட்டேன். உயிரை விடுவது நாம் எண்ணுவதுபோல் அவ்வளவு லேசான காரியமன்று என்ற உண்மை அந்த நிமிடம் தான் எனக்கு விளங்கியது. உங்கள் மனைவியும் என் தாயாரும் மதகடியில் ஒரு கணம் தயங்கி நின்றுவிட்டு, பின்னர் ஒருவாறு துணிந்து ஆற்றில் இறங்கிவிட்டார்கள். சில நிமிடங்கள் தண்ணீரில் திணறித்தத் தளித்து மூழ்கி மூழ்கி எழுந்த அவர்களை வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது! இளமைப் பருவத்தில் நீந்தக் கற்றுக் கொண்டதன் பயனாக, நீரில் மூழ்கி அமிழ்ந்து, கால்களை நீரில் உதைக்காமல் தவளை போல் கைகளால் அளைந்து கரையை ஒட்டியே வெள்ளத்தோடு மிதந்து வந்தேன். வெகு தூரம் வந்து விட்டேன். பாலத்தின்மீது வெறியாட்டம் ஓய்ந்துவிட்டது. இரத்தம் தோய்ந்த கத்திகளையும் கோடரிகளையும் ஆற்றில் வீசி ஓட்டமெடுத்தனர், அந்தப் பாவிகள்!

கைசளைக்கும் வரை நீந்திச் சென்று ஆபத்து இல்லாத இடமா கப் பார்த்துக் கரையேறலாம் என்று தீர்மானித்தேன். உடற் சோர்வும், படுகொலைகளைக் கண்டதால் ஏற்பட்ட மனச்சோர்வும் என்னை நினைவிழக்கச் செய்தன. கரையேறியவுடன் மயங்கி விழுந்த என்னை யாரோ கட்டித் தூக்குவது போலிருந்தது, ஒரு முரட்டுக்கரம் என் தோள்பட்டையைப் பற்றியிருந்தது. போன்ற உணர்வு. அந்த அரைமயக்க நிலையில் எதையும் சரியாக உணர முடியவில்லை என்னால்.

மறுநாள், விடிவெள்ளி முளைக்கையில் கண்விழித்தேன். உடம்பு மூட்டுக்கு மூட்டு வலியெடுத்தது. ஆற்றிலிறங்கிக் குளித்த பிறகு தான் ஓரளவுக்கு தென்பு வந்தது. ஆளரவமற்ற அந்த இடத்தைவிட்டு வெளிக் கிளம்பவே துணிச்சல் இல்லை எனக்கு. பொறுக்க முடியாத பசி வேறு. யாராவது தெரிந்த மனிதர்கள், நம்பிக்கைவைக்கத் தக்கவர்கள் கண்ணில் படமாட்டார்களா என்று ஏக்கத்துடன் காத்திருந்த போது தான்… தெய்வம் போல நீங்கள் வந்து சேர்ந்தீர்கள்!” என்று ஸாரா கூறி முடித்தாள். என் உணர்ச்சிகள் எப்படிக் கொந்தளித்திருக்கும் என்று நீங்கள் ஊகிக்க முடியாதா, பாலு!

சற்றைக்கெல்லாம் பஸ் வந்தது. எவ்வளவோ கேள்விகள் சந்தேகங்களை ஸாராவிடம் கேட்க நினைத்தேன். அவளுடைய அப்போதைய நிலையில் எதையும் கேட்பது உசிதமில்லை என்று போசாமலிருந்து விட்டேன். டெல்லி மெயிலைப் பிடித்து, கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரசில் ஏறிச் சென்னைவந்து, இதோ இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன்” என்றார் மல்ஹோத்ரா.

எனக்கு எதுவுமே பேசத் தோன்றவில்லை. சொல்லுக்கு அடங்கக் கூடிய தா அவரது சோகமும் வேதனையும்? “அந்தப் பெண்… அவளையும் அழைத்துக் கொண்டுதான் வந்திருக்கிறீர்களா?” என்றேன்.

“ஆமாம், பாலு! அவளுக்கு வேறு உறவினர்கள் யாரு மில்லையே! எங்கே போவாள், ஸாரா? இனி என்னைத் தவிர அவளுக்கு யார் கதி?” சென்னையில் ஒரு ஹோட்டலில் வாடகைக்கு ஓர் அறை எடுத்து, அங்கே விட்டுவிட்டு வந்திருக்கிறேன். இனிமேல் தான் யோசிக்க வேண்டும், வேறு என்ன ஏற்பாடு செய்யலாம் என்று” என்று மல்ஹோத்ரா கூறியதும், எங்கள் யூனிட் கமாண்டிங் ஆபீசர் மல்ஹோத்ராவை அழைப்பதாக ஆர்டர்லி ஒருவன் வந்து அழைத்தான்.

பத்து நிமிடங்களுக்குப் பின் திரும்பி வந்த மல்ஹோத்ரா, “பாலு! உங்களிடமிருந்து ஒரு முக்கியமான உதவியை எதிர் பார்க்கிறேன். வருகிறவாரம் நம் யூனிட் இங்கிருந்து புறப்படுகிறது. நாம் ஜால்னா போகிறோம். சென்னையில் ஒரு வீடு பார்த்து ஸாராவைக் குடிவைக்கலாம் என்று நினைத்த எனக்கு இச் செய்தி பெரிய அதிர்ச்சிதான். இப்போதைக்குச் சில மாதங்கள் ஸாராவை உங்கள் வீட்டில் விட்டு வைக்கலாமென நினைக்கிறேன். வேறு வழியே தோன்றவில்லை, பாலு! உங்கள் பெற்றோர், மனைவி முதலியவர்கள் சம்மதிப்பார்களா? செலவைப் பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம். அதனை நான் தான் ஏற்றுக்கொள்வேன்!” என்றார். நான் அவர் கோரிக்கையை ஏற்காமலிருப்பேனா?

அநாதரவான ஒரு பெண்ணை ஆபத்திலிருந்து மீட்டு வந்து அடைக்கலமும் தேடித் தந்து, அவளுக்குத் தம் சொந்தச் செலவி லேயே திருமணமும் செய்விக்க முடிவு செய்த மல்ஹோத்ராவின் மனிதப் பண்பினை என்னென்று கூறுவது? அதோடு நின்றதா அவரது தியாக உணர்ச்சி…?

நாங்கள் ஜால்னாவுக்கு வந்த மூன்றாவது மாதம், மல்ஹோத்ரா சுபேதார் மேஜராகப் பதவி உயர்வு பெற்றுப் புனாவுக்கு மாற்றலாகிச் சென்றார். அந்தப் புனிதருடன் பல ஆண்டுகள் நெருங்கிப் பழகியிருந்த எனக்கு அவரை விட்டுப் பிரிவது சிரமமாய்த்தான் இருந்தது. ஸாராவின் நற்குணங்களையும் அடக்கத்தையும் சிலாகித்து அவ்வப்போது எனக்கும் மல்ஹோத் ராவுக்கும் என் தந்தை எழுதி வந்தார். விரைவில் ஸாராவின் திருமணத்துக்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லி விடை பெற்றார், மல்ஹோத்ரா.

அவர் பூனாவுக்குச் சென்ற மறுவாரம் என் மனைவியிடமிருந்து வந்த கடிதம்…கடிதமா அது? அத்தச் செய்தியை மல்ஹோத் ராவுக்கு எப்படித் தெரியப்படுத்துவது? அடி, பாதகி? ஸாரா, ஸாரா என்று உன்னிடம் உயிரையே வைத்திருந்தாரே மல்ஹோத்ரா; பெற்ற குழந்தைகளையும் கட்டின மனைவியையும் ஒரே நாளில் இழந்த துயரத்தையும் மறந்து, உன் நல்வாழ்வினால் அமைதிபெற விழைந்த அவருக்கா இப்படி ஒரு பேரிடி! இதை எப்படித் தாங்குவாரோ அவர்? அவருக்குத் தகவல் தெரிவிக்கும் பொறுப்பினை என் மீது சுமத்திவிட்டார் என் தந்தை.

ஸாரா மூன்றுமாத கர்ப்பிணி! அடிக்கடி வாந்தி எடுப்பதும் சோர்ந்து படுப்பதுமாக இருந்த அவளை டாக்டரிடம் வரும்படி என் மனைவி அழைத்திருக்கிறாள். அவளும் விகல்பமின்றி, டாக்டரிடம் போக இணங்கியிருக்கிறாள். டாக்டர் அம்மாள் பரிசோதித்துவிட்டு, என் மனைவியிடம் ஸாராவின் நிலைமையை எடுத்துரைத்திருக்கிறாள். உண்மை தெரிந்ததும் ஸாரா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாள். ரயிலில் விழுந்து உயிர் விடத் துணிந்த அவளை எப்படியோ தடுத்துக் காப்பாற்றி விட்டார்கள். இனிமேல் அவளைக் காப்பாற்றுவது சிரமம் என்று கண்டுகொண்ட என் பெற்றோர்கள் என் மூலம் மல்ஹோத்ராவுக்கு உண்மையைத் தெரிவிக்க முடிவு செய்தனர். ஸாராவின் வாழ்வில் ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்பதை அவர்களால் ஊகிக்க முடிகிறது; ஆனால் இன்னதென்று விளங்க வில்லை !

எனக்கும் ஒரே குழப்பம்தான். ஸாரா தவறு செய்திருந்தால், டாக்டரிடம் போகச் சிறிதும் தயக்கமின்றி உடனே இணங்கி இருப்பாளா? அவள் நிரபராதியாக இருக்கக்கூடும் என்பதற்கு இந்த ஒரு பலவீனமான ஆதாரம் தானே துணை நிற்கிறது? எப்படியிருந்தால் என்ன? இது மல்ஹோத்ராவின் பிரச்னை! அவர் அனுபவிக்கவேண்டிய தலைவலி. புனிதமான மல்ஹோத்ராவின் தியாக உள்ளத்துக்கு இப்படி ஒரு வேதனையா? நடந்ததைச் சுருக்கமாக எழுதிவிட்டேன், மல் ஹோத்ராவுக்கு.

பதினைந்து நாட்களுக்குப் பிறகு மல்ஹோத்ராவிடமிருந்து பதில் வந்தது எனக்கு. ஸாராவை அவர் பூனாவுக்கு அழைத் துச் சென்றுவிட்டாராம். அதுமட்டுமா? “ஸாரா குற்றமற்றவள், பாலு! முறைப்படி நான் அவளைத் திருமணம் செய்து கொண்டு விட்டேன். உங்களை நேரில் சந்திக்க – அவள் மிகவும் கூசுகிறாள்! அதனால் தான் தங்களை அழைக்கவில்லை. நாம் நேரில் சந்திக்கும்போது உங்களுக்கு எல்லாம் விளக்க மாகக் கூறுவேன்!” என்று அவர் எழுதியிருந்ததை என்னால் நம்பவே முடியவில்லை.

ஸாரா மூன்றுமாத கர்ப்பிணி என்று தெரிந்துகொண்ட பின்னும் அவளை மணக்க முன் வந்த மல்ஹோத்ராவைப்பற்றி நினைக்க நினைக்க எனக்கு வியப்பை அடக்க முடியவில்லை. என் மதிப்பில் அவர் மேலும் உயர்ந்துவிட்டார். அதன் பிறகு சில மாதங்கள் வரை அவரிடமிருந்து அவ்வப்போது கடிதங்கள் வரும். நாளடைவில் அதுவும் நின்றுவிட்டது. மல்ஹோத்ரா எங்கே இருக்கிறார் என்பதே எனக்குத் தெரியவில்லை. கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாத செய்தி அது. ராணுவத்தினரின் முகாம் அவ்வப்போது மாறும். அதெல்லாம் ராணுவ ரகசியங் களாயிற்றே!

இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. தற்செயலாக அன்று விக்டோரியா டெர்மினஸ் ஸ்டேஷனில் மல்ஹோத்ராவும் நானும் சந்தித்தபோது, “பாலு!” என்று ஓடிவந்து என்னைக் கட்டிக்கொண்டார் அவர்.

“சர்தார்ஜி! ஸாரா சௌக்கியமா?”-என்னை யறியாமலேயே நான் முதலில் கேட்ட கேள்வி அது.

“பாலு! அன்று நான் கடிதத்தில் எழுதாத, எழுத முடியாத ரகசியத்தை இப்போது சொல்ல விரும்புகிறேன். ஸாரா தவறு ஏதும் செய்யவில்லை. தவறு இழைக்கப்பட்டாள். அவள் நிலைமையை உணர்ந்தும் அவளை உன் வீட்டிலிருந்து அழைத்துச் சென்று நான் மணந்து கொண்டபோது, என்னையே கூட நீங்கள் சந்தேகித்திருக்கலாம்…”

“ராம் ! ராம்! ஸர்தார்ஜி! என்ன இது? என்னைப்பார்த்தா இப்படிக் கேட்கிறீர்கள்… ?” என்று குறுக்கிட்டுக் கத்தினேன்.

“பாலு! இப்படி ஒரு சந்தேகம் இயல்பாக ஏற்படக் கூடியது என்பதற்காகக் கூறினேன். அன்று என் கிராமத்தில் நிகழ்ந்த கலவரங்கள் பற்றிக் கூறும்போது ஸாரா ஆற்றில் குதித்துக் கரையேறினாள் என்று கூறியது நினைவிருக்கிறதா?”

“ஆமாம்; அந்தத் துயர நினைவு இப்போது எதற்கு?”

“கேளுங்கள், புரியும். கரையேறியதும் ஒரு முரட்டுக் கரம் தன் தோள்களைப் பற்றியது போன்ற உணர்வு தனக்கு ஏற்பட்டதாக ஸாரா கூறினாளே – அப்போது நிகழ்ந்த இழிச் செயல்தான் இதற்கெல்லாம் காரணம், அவள் உங்கள் வீட்டிலிருக்கையில் தற்கொலை செய்துகொள்ள முயன்றதன் காரணமும் இதுதான். நினைவிழந்து கிடந்த நிலையிலே…ஸாராவை நிலைகுலையச் செய்துவிட்டான் அந்தப் பாதகன்! அவளுக்கு ஒரு களங்கத்தை ஏற்படுத்திவிட்டான்! உங்கள் டாக்டர் கூறிய போது தான் அவளுக்கு முழு உண்மையும் விளங்கியிருக்கிறது. ‘அப்படித்தான் நடந்திருக்க வேண்டும்’ என்ற ஒரு ஊகந்தான் கடைசிவரை அவளுக்கு…”

“அப்படியென்றால் … ஸாரா இப்போது …?”

“பிரசவித்து இறந்துவிட்டாள். குழந்தை வயிற்றிலேயே மரித்து விட்டது! அவமானச் சின்னமாக இந்த உலகில் வளையவர விரும்பவில்லை, அது! நான் மட்டும் ஏன் உயிரோடிருக்கிறேன்…?” என்று ஒரு பகல் முழுவதும் புலம்பிவிட்டு ஸாரா இறுதி விடை பெற்றாள்…” மல்ஹோத்ரா ஒரு பெருமூச்சு விட்டார்.

“பாவம்! “

“எனக்காகவா அனுதாபப்படுகிறீர்கள்?'”

“ஸாராவுக்காகவுந்தான்.”

“அந்த நிலையில் அவளை எந்த வாலிபன் மணக்க முன் வருவான், பாலு? ஒரு தந்தையின் அல்லது அண்ணனின் ஸ்தானத்திலிருந்து, அவளுக்குத் தக்க கணவனைத் தேடிக் கல்யாணம் செய்து வைக்கத்தான் விரும்பினேன், உங்கள் கடிதம் வந்த பிறகு என் கடமை எனக்குப் புரிந்துவிட்டது. அதாவது, நானே அவளை மணப்பது தான் அவளுக்கு வாழ்வளிக்கும் ஒரே வழி என்று புரிந்துகொண்டேன். நான் அவளை மனைவியாக ஏற்றுக்கொண்டது முதல், அவள் என்னிடம் சரியாக முகம் கொடுத்துப் பேசியதே இல்லை, பாலு! என் மனம் அவளுக்கு விளங்காமலில்லை. ஆனால், அவளது இதயத்தில் குடிகொண்டிருந்த வேதனையும் வெட்கமும்..அவள் உயிரோடுதான் அவையும் வெளிப்பட்டன…உம், வாருங்கள்! பாலு! தேநீர் பருகலாம்!” என்று என் தோள் மீது வலக்கரத்தைப் போட்டு உந்தித் தள்ளினார், மல்ஹோத்ரா.

மல்ஹோத்ரா ஒரு மகாத்மா என்று நான் முதலிலேயே கூறியிருந்தால், அதை யார் ஒப்புக் கொண்டிருப்பார்கள்? உலகில் இரு மகாத்மாக்களுக்கு இடமுண்டா, என்று தான் கேட்கத் தோன்றும். மல்ஹோத்ரா மனமுவந்து செய்தது போன்ற மகா தியாகத்தைச் செய்யும்படி காந்தியடிகள் மக்களுக்கு எடுத்துரைத்தபோது, ‘சொல்வது எளிது! செயல் கடினம்!’ என்று முணுமுணுத்தவர்கள் பலர். மகாத்மாஜியின் சொல்லைச் செயலாக்கி வாழ்ந்து காண்பித்த உத்தமர் மல்ஹோத்ராவின் புனித நினைவு எழும்போதெல்லாம் அவரை ஒரு மகாத்மாவாகத்தான் நான் மதிக்கிறேன். மனிதருள் ஒரு தேவன், அவர்!

– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *