கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 29, 2018
பார்வையிட்டோர்: 4,075 
 

அதிகாலை. வழக்கம் போல தேசிய நெடுஞ்சாலை 45 ஒரம் என் நடைப்பயிற்சி.

இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவன்  ஒதுங்கி செல்ல….நடு ரோட்டில் கிடந்தது இளநீர்.

தூரத்து பேருந்து நிறுத்தம், மூன்று ரோடு முக்கம் உள்ள டீக்கடை, பால் விற்பனை நிலையம் அருகில் தினம் சைக்கிளில் எடுத்து வந்து விற்கும் இளநீர் வியாபாரியிடம் வாங்கி சென்றவன் தவற விட்டது. இது போக்குவரத்திற்கு இடைஞ்சல் மட்டுமில்லாமல் அதிகாலை சைக்கிளில் டியூசனுக்குச் செல்லும் பள்ளிப்பிள்ளைகளுக்கும் தொந்தரவு. புரிந்தது.

எடுத்தேன். இரு நிமிட நடையில் முக்கம் சாலையோரம் நின்ற  இளநீர் விற்பவனிடம்,  ”வாங்கிப் போனவர் தவற விட்டுப் போயிருக்கார் போல வந்தா கொடு.” கொடுத்துச் சென்றேன்.

ஐந்து நிமிட நடைக்குப் பின் திரும்பிய என் முன் சீவிய இளநீரை இடது கையில்  பிடித்து நீட்டி,  ”சார்! இந்தாங்க…” வியாபாரி நீட்டினான். வலது கையில் அரிவாள்.

அப்போது இளநீருக்காக இளைஞன் ஒருவன் எங்கள் அருகில்  வந்து இரு சக்கர வாகனத்தில் நின்றான்.

”தம்பி நான் காசு எடுத்துவரலை.” சொன்னேன்.

”இல்ல சார். இது நீங்க கொடுத்தது.”

”தம்பி! அதை நான் உங்களுக்குக் கொடுத்தது. யாரும் வரலைன்னா உங்களுக்குச் சேர வேண்டியது.”

”எனக்கு வேணாம் சார்.”

”ஏன் ? ”

”சார்! யாரோ தவற விட்டதை நீங்க தொடாம, புஞ்சிக்காம என் கிட்ட  எடுத்துக் கொடுத்து நேர்மை, யோக்கியனாய் நடக்கலாம். நான் அப்படி நடக்கக் கூடாது. என்ன சார் நீதி, நேர்மை, நியாயம் ? உன்னை, என்னைமாதிரி ஆட்களாலத்தான் நாட்ல மழையே பெய்யுது.  குடி சார்.” சொல்லி  புன்னகைத்தான்.

அவன் மனம் புரிய….வாங்கிக் குடித்தேன்.

வியாபாரி திருப்தியாய் திரும்பி, ”சார்! உங்களுக்கு இளநியா? ” வந்து நின்றிருந்தவனிடம் தன் வியாபாரத்தைத் தொடங்கினான்.

”வேணாம். உங்க வாக்குவாதத்தைக் கவனிச்ச நான் தொலைச்ச இளநிக்குச்  சொந்தக்காரன். வர்றேன்!”  சொல்லி விருட்டென்று வாகனத்தை உயிர்ப்பித்துச் சென்றான்.
நானும் வியாபாரியும் உறைந்து ஒருவரையொருவர் பார்த்தோம்.

Print Friendly, PDF & Email

விடியல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2023

சோதனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2023

யார் முதல்வன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)