மனிதம் இன்னும் வற்றவில்லை!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 1, 2023
பார்வையிட்டோர்: 2,460 
 
 

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வெயில் நெருப்பாய்த் தகித்துக் கொண்டிருந்தது. அந்தச் சுட்டெரிப்பில் நின்று நின்று கால்கள் கடுகடுத்து மனமும் சலித்துவிட்டது.

அலுவலகம் சம்பந்தப் பட்ட வெளிவேலை ஒன்றின் நிமித்தம் இன்று அரைநாள் ‘கடமை லீவு. காலை பத்து மணிக்கே அவ் வேலையைச் செவ்வனே செய்துவிட்டு வந்து, ஒரு மணிநேர ஓய்விற்குப் பின் குளித்து. ஆற அமரப் பகலுணவை முடித்து. பதினொன்று முப்பதுக்கு எல்லாம் வீட்டை விட்டு வெளியேறி வந்த கோலம் தான் இது.

அரை மணி நேரத்திற்கு முன் வெறிச்சோடிக் கிடந்த இந்தப் பஸ் ஹோல்டில் –

அவன் மட்டுந்தான் நின்று கொண்டிருந்தான். கருப்பு சேர்ட், கறுப்பு மூக்குக் கண்ணாடி, வெள்ளை வெளேரென்ற களிசான். இந்த ஒப்பனையில் கண்ணாடியை இடித்து வெளியே படர்ந்த பார்வையை பல திக்குகளில் அலையவிட்டுக் கெண்டிருந்தான்.

அவனுடைய நண்பர்கள் போல் இருவர் திடீரென்று தோன்றினார்கள். ஒருவன் சிறிய குடையை விரிக்கிறான். கருப்பு சேர்ட், குடைக்குள் புகுந்து கொள்ள மற்றவன் கையிலிருந்த காவி நிற ‘பேப்பர் உறையை தலைக்கு மேலால் உயர்த்திப் பிடித்து உச்சி வெயிலிலிருந்து தப்பித்துக் கொள்ளும் ஒரு பிரயத்தனம்.

கறுப்புக் கண்ணாடி சிகப்பு நிறப் பக்கட்’ ஒன்றை நீட்டினான். ஏககாலத்தில் மூன்று கோல்ட்லீவ்’ சிகரட்டுகளுக்குத் தீ மூட்டிக் கொள்கின்றனர்.

பிரயாணிகள் கூடக் கூட கறுப்புக் கண்ணாடியின் பிரிய நேசர்களான – கோல்ட் லீவ்கள் இருவரும் பிரிந்ததை அவதானிக்க முடியவில்லை .

“இந்த ரூட்டுக்கு பிரைவெட் பஸ் இல்லையோ?” இது ஓர் அப்பாவி கிராமவாசியின் தவிப்பு.

“அபூர்வமாக சீ.ரி.பி. வரும், அவசரங்களும் சீசன் டிக்கட்டுகளும் முண்டியடித்துக் கொண்டு தொங்கிக் கொள்ளும் என்று நான் சொல்வதற்குள் ஹோல்டிற்கு முன்னால் கலகலப்பாக இயங்கிக் கொண்டிருந்த ‘கூல் ஸ்பொட்டிற்கு நடந்துவிட்டார். நானும் வெறுப்பாகச் செவ்விளநீர்க் குரும்பை ஒன்றை வெட்டச் செய்து அண்ணாந்து குடிக்கிறேன். அதுவும் இதமாக இல்லை . என் மனம் போல.

சகுனங்கள் இன்று சரியில்லை !

‘தெமிலிக்கு நான்கு ரூபா ஐம்பது சதம் வீண்’ மனம் குமைந்து வெம்புகிறது. ஒரு பஸ்ஸையும் இன்னும் காணலியே….

சற்று அருகிலேயே கறுப்புக் கண்ணாடியும் குளிர்ந்த கொக்கோ கோலா’வை உறிஞ்சிக் கொண்டிருந்தான். கறுப்புச் சேர்ட்டுக்கு வெள்ளைக் காற்சட்டை? நிறப் பொருத்தம் தலைகீழாக இருக்கிறது. நாற்பதுக்குள் மதிக்கலாம். மா நிறம் என்று சொல்வதற்கு இல்லை. ஆள் யாரோ? எப்படிப் பட்டவனோ? என்ன உத்தியோகமோ?

தேவையற்ற ஆராய்ச்சியை விட்டு விட்டு, தோள் பையிலிருந்து குடையை எடுத்து விரித்து மீண்டும் கூட்டத்தில் வந்து நிற்கின்றேன்.

ஆவலைப் பூர்த்தி செய்யுமாப் போல, ஒரு பிரைவேட் பஸ் வந்து நின்றது. ஓரிருவருக்கு ஒற்றைக் காலை வைத்துத் தொங்கிக் கொள்ளத் தான் ஒரு சந்தர்ப்பம். ஒவ்வொருவரது உள்ளத்துடிப்புக்கும் முத்தாய்ப்பு வைப்பதுபோல், சீ.ரி.பி வந்து நின்றது. இதையும் தவறவிட்டால், இனிச் சீசன் டிக்கட்களைக் கிழித் தெறிவது தான் தண்டனை.

முண்டியடித்துக் கொண்டு ஏறுவதில், மிதிபட்டு இடிபட்டு…

யார் யாருக்கு என்னென்ன அவசரங்களோ?

வண்டிக்குள் நெருக்கம், புழுக்கம், வியர்வை நெடி, ‘இஸ்ஸராட்ட யன்ன…’ என்னும் கண்டக்டரின் ஓயாத ஓலம். சிகரட் புகை, மூச்சுத் திணறல்…

இந்த லட்சணத்தில் பஸ் ஓடிக் கொண்டிருக்கிறது. கறுப்புக் கண்ணாடியின் நண்பர்கள் எங்கிருந்து எப்படித்தான் ஏறிக் கொண்டார்களோ?

கறுப்புக் கண்ணாடிக்கு நல்ல பிரயாண அனுபவம் நெளிந்து வளைந்து ஊடுருவி எனக்குப் பக்கத்திலேயே வந்துவிட்டான். நெரிசலைவிட இந்த மனிதனின் அநாகரிகப் புகைபிடித்தல் தான் அருவருப்பைத் தருகிறது. அவனுடைய சகாக்களில் ஒருவன் வலது புறத்தோள் கட்டையும் மற்றவன் முதுகையும் நெருக்குகின்றனர். இந்த உபத்திரவத்தில் முன்னால் இடது புறத்தில்…. இரண்டு வரிசைக்கு முன்னால் சாளரத்தோடு ஒட்டிய இருக்கையில் சொகுசாகப் பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்தவர் அடிக்கடி திரும்பி என்னைப் பார்த்து ……….

புன்முறுவல் செய்கிறார்…? ஏதோ சொல்லப் போகிறாரா.. இதற்கு முன் நான் அவரைச் சந்தித்த ஞாபகமே இல்லையே……

அவருடைய முகபாவம் ஒன்றும் புரியவில்லை. பஸ்வண்டி ஒவ்வொரு தரிப்பிலும் இருவரை இறக்கிவிட்டு மூவரை ஏற்றிக் கொள்கிறது.

நடத்துநரின் குரலும் ஆவேசமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அந்த ஆளின் சீரியஸான கண் ஜாடை…

எனது முதுகை அமுக்கிக் கொண்டிருந்த. கறுப்புக் கண்ணாடியின் நண்பனின் ஒரு பொல்லாத பார்வையால் –

அந்த மனிதனின் நயனமொழி, புருவங்களின் நெளிப்பு. ஊமைப்பாஷை அனைத்தும் அடங்கி ஒடுங்கி விட்டன. சற்று நேரத்திற்கு முன் எள்ளும் கொள்ளுமாக வெடித்துக் கொண்டிருந்த அந்த முகம் வாடி வதங்கிவிட்டது.

கறுப்புக் கண்ணாடி, முன் இருக்கைக் கம்பியைப் பிடிக்க எத்தனித்த போது, அவனுடைய நீண்ட முழங்கை சேர்ட் என் பார்வைக்கு திரையிட்டுவிட்டது.

‘றிங்’ என்ற மணியோசையைத் தொடர்ந்து ஒரு பிரயாணி முன் வாசலால் இறங்கும் அந்த ஒரு செக்கனில்..

அந்த மனிதனும் மின் வேகத்தில் எழுந்து எதையோ இழந்துவிட்டதைப் போல், பொல்லாத முறைப்பு முறைத்துவிட்டு, இருக்கையை எனக்குத் தானம் வழங்கிவிட்டு இறங்கி நடந்துவிட்டார்.

மறுபக்கம் இறங்கிய கறுப்புக் கண்ணாடியும் நண்பர்களும் வெற்றிநடை போடுகின்றனர்.

யன்னலூடாக வீசிய மென் காற்று இதமாக இருந்தது.

மாலை ஐந்து மணிக்கு அலுவலகத்திலிருந்து வெளிக்கிளம்ப எத்தனித்த போது தான் பகீரென்று பொறி கலங்கியது. ‘டிரௌசர்’ பின் பொக்கட்டில் செருகிய கவரைக் காணவில்லை. ஐடென்ரி காட்டும் இருநூற்றைம்பது ரூபாவும்……. இன்று வீட்டை விட்டு வெளியேறிய போது மனைவி கொடுத்திருந்த நூறு ரூபாவும் அவருக்கு வாங்க வேண்டிய பொருட்களின் ‘லிஸ்ட்டும் அந்தக் கவரில் அடங்கும்.

பஸ்தரிப்பிற்கு வந்ததிலிருந்து, அலுவலகம் வந்து சேர்ந்த அந்த வெப்பமான ஒன்றரை மணித்தியாலப் பகற் பொழுதில் நடந்தவற்றை மீண்டும் பின்னோக்கிப் பரிசீலனை செய்து பார்க்கிறேன்.

கறுப்புக் கண்ணாடி பூதாகரமாக மனக்கண்முன் தோன்றி ஏளனம் செய்கிறான்.

பஸ்ஸில் பிரயாணம் செய்ய உனக்கு அனுபவம் காணாது என்று குத்திக் காட்டுவது போல் தோன்றுகிறது.

கறுப்புக் கண்ணாடி படீரென்று அறைந்து உணர்த்தும் உண்மை என் முகத்தில் எழுதி ஒட்டினாற் போல இருக்குமோ?

அந்த ஜன்னலோரப் பிரயாணியின் கண் ஜாடைகள், சைகைகள் முகபாவங்கள் ஒவ்வொன்றின் அர்த்தங்களும்……. எல்லாமே புரிகின்றன. –

கறுப்புக்கண்ணாடியின் கை தேர்ந்த கைவண்ணத்தை அவர் அனுபவித்திருக்கக் கூடும்.

மாலை ஆறரைமணிக்கு இல்லம் நுழைந்தேன்.

முப்பது நாள் உழைப்பின் ஒரு பகுதியை ஒரு செக்கனில் சுரண்டப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட மன உழைச்சல் கூட அவ்வளவாக மனதை உறுத்தவில்லை.

ஆனால்…….?

ஐடென்ரிகாட்?

இன்றைய கால கட்டத்தில் அது எங்கள் உயிருக்குச் சமமானதல்லவா?

இந் நாட்களில் ஆள் அடையாள காட் இன்றி, ஆகக் குறைந்தது, வீதிகளில் தாம் நடமாட முடியுமா?

எமது குடியரசு நாடான ஸ்ரீலங்காவின் ஒரு பிரஜையிடம் இருக்க வேண்டிய விலை மதிக்க முடியாத பொக்கிஷம் – உயிர் நாடி.

ஒரு சாதாரண காசுக்கட்டளை. அது கட்டளையாக இருந்தால் தான் என்ன? அது நிறைவேறிக் காசாக மாற வேண்டுமானால் இது சாட்சியம் கூற வேண்டும்.

நாடு விட்டு நாடு செல்ல ஒரு பாஸ்போர்ட்டுக்காக இது பக்கத் துணையாக நிற்க வேண்டும்.

இப்படி எத்தனை எத்தனையோ…

மக்களின் அன்றாடத் தேவைகளுக்கு இது ஆற்றும் இமாலய பங்களிப்புக்கு ஈடிணை இல்லை.

என்னைப் பொறுத்தவரையில் இன்னொன்றைப் பெற்றுக் கொள்ளும் வரை, நான் நடைப் பிணம் தான்.

இந்தப் பாழாய்ப் போன பிக்பொக்கட்டுக்கள்’ சமூகத்தில் ஏன் தான் உருவானார்களோ?

அந்தக் கறுப்புக்கண்ணாடி மட்டும் இப்பொழுது என் கண்முன் நின்றால்……

மனச் சாட்சியோ, நெஞ்சை நெகிழ வைக்கும் தன்மையோ, ஒரு நேர்மையான மன உந்துதலோ இல்லாத இந்த ஆட்களுக்கும் அடையாள அட்டை ஓர் ஒப்புயர்வற்ற பொருள்தானே!

பார்க்கப் போனால் நான் விட்டதும் தவறுதானே!

தண்டனையாக நான் தான் என் தலையைக் கல்லில் மோதிக் கொள்ள வேண்டும்.

அவசர நிமித்தம், கவனயீனமாகவும், ஞாபக மறதியாகவும், ஐரென்டி கவருக்குள் அந்தப் பணத்தைத் திணித்ததோடல்லாமல், ஏன் பொக்கட்டில் செருக வேண்டும்? அந்தக் கணமே ‘லெதர் பேக்குள் போட்டிருந்தால்…

அது என் தவறு தான். தெளிவாகத் தெரிந்திருந்தும், இதற்கு முன்னர் அனுபவப்பட்டிருந்தும், செய்ததற்குப் பாடம் படிக்கத்தான் வேண்டும்.

பொதுவாகப் பார்க்குமிடத்து –

வருமானங்கள் தேடும் மார்க்கங்கள் இல்லாமையினாலேயே, மனிதனைச் சூறையாடும் இந்த நாசகாரத் தொற்று நோய் பரவி, வாழ்க்கையில் பிழையான அஸ்திவாரங்கள் போடப்பட்டுவிடுகின்றன.

இனங்காணப் பட்டு, அடி, உதை, சிறை போன்ற தண்டனைகள், தொழில் வாய்ப்புக்களை பெற்றுத்தரவா போகின்றன.

தொழில் வாய்ப்பும், வாழ்க்கை வசதிகளும் கிடைக்குமானால், இப்படியான சீரழிவுகள் தோன்றாது தானே!

அப்படியானால்….

‘பிக்பொக்கட்டுக்கள்’ என்ற முத்திரையுடன் சமூகத்திலிருந்து தள்ளப்பட்டு, இருளில் வீழ்ந்து கிடப்பதும், விடியல்களுக்குத் தானோ?

சில நாட்களாக குமைந்து கொண்டிருந்த மனச்சஞ்சலங்கள் ஓய்ந்த பின், ‘இனி நடக்க வேண்டிய காரியங்களைப் பார்ப்போம்’ என்ற எண்ணம் வலுவடைய, அடையாள அட்டை காணாமற் போன கதையைப் பொலிசில் முறைப்பாடு செய்து விட்டுப் புதிய ஐடென்ரி ஒன்று பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து, ஓய்வான நாளொன்றை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

வழக்கம் போல், அன்று காலை நான் அலுவலகத்திற்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்த போது தான் –

“மிஸ்ட ர் ஈ. எம். எம். மீரான்……”

தபாற்காரனின் குரல் கேட்டு வெளியே வந்தேன். அவசரமாக அந்தப் பதிவஞ்சலைப் பிரிக்கிறேன்.

ஒரு கணம் என் சர்வாங்கமும் சிலிர்த்து, என்னை நிலை குலையச் செய்து விட்டது

‘கல்லுக்குள்ளும் ஈரம் கசியும்’ என்பதற்கு உதாரணமாய்க் கறுப்புக் கண்ணாடி.

ஒரு பிக் பொக்கற்’ மீது பொங்கி வழிந்து சுரப்பது – அது தான் பச்சாதாபமா?

பிக் பொக்கட் காரர்களும் மறுவாழ்வு பெறுவார்களென்ற வெளிச்சத்தில் நனைந்தேன்.

பஸ் தரிப்பை நோக்கி நடக்கிறேன்.

பதிவஞ்சலில் வந்த இழந்து போன என் ஆள் அடையாள அட்டை என் நடைக்கு உசார் கொடுக்கிறது.

– வீரகேசரி – ஏப்ரல் 1990.

– நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: 2003, மல்லிகைப் பந்தல் வெளியீடு, கொழும்பு.

(இச் சிறுகதை விடியல் இன்னும் இருளில் என்ற தலைப்பில் வீரகேசரி வார வெளியீட்டில் பிரசுரமானது)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *