மனம் தேற மருந்து

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 4,123 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கைலாசம் படுத்த படுக்கையாகக் கிடந்தான்.

அவனைப் பார்த்துப் போவதற்காகப் பலபேர் வந்தார்கள்.

அவன் இளம் கவிஞன். கலைஞன், இலக்கிய ரசிகன். சதா புத்தகங்களைப் படித்து, ரசித்து, அவற்றின் நயங்களில் ஆழ்ந்து கிடப்பவன். இப்படி அவனைப் பலரும் அறிந்து வைத்திருந்தார்கள்.

ஆகவே, அவன் நண்பர்கள், தெரிந்தவர்கள், அவனைப் பற்றிக் கேட்டிருந்தவர்கள் என்று பல ரகத்தினரும் வந்தார்கள், அவன் என்னென்ன மருந்துகள் சாப்பிடுகிறான், எந்த வைத்தியரிடம் சிகிச்சை பெறுகிறான் என்பன போன்ற விஷயங்கள் குறித்தும் அனுதாபத்தோடு கேள்விகள் கேட்டார்கள். ஆதரவாகச் சில சில வார்த்தைகள் சொன்னார்கள், போனார்கள்.

உரிமை பெற்ற சிலர் ”நீ அதிகம் படிக்கக் கூடாது. கொஞ்ச காலத்துக்கு எழுத்தை மறந்துவிடு. உடம்பைக் கவனித்துக் கொள். ஒய்வு நிரம்பத்தேவை. சுவர் இருந்தால்தானே சித்திரம் எழுத முடியும்? “உடம்பார் அழியின் உயிரார் அழிவார்” என்று திருமூலர் சொல்லவில்லையா? கடன் வாங்கியாவது உடலைத்தேற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் அப்பனே!” என்ற தன்மையில் அன்புரை உபதேசித்தார்கள். சிலர் பழங்கள் வாங்கி வந்தார்கள். ஒருவர் ஆர்லிக்ஸ் வாங்கி வந்து அன்பளிப்பாக உதவினார். ஒரு நண்பர் தேன்புட்டி கொண்டு தந்தார். “தேன் உடம்புக்கு நல்லது. தினசரி தேன் சாப்பிடு. அப்புறம் பார். எலுமிச்சை ரசத்தைத் தேனுடன் கலந்து சாப்பிட்டால் ரொம்ப ரொம்ப நல்லது” என்று இலவச சிகிச்சை உபதேசமும் அருளினார்.

போதனைகளும் நல்லுரைகளும் கைலாசத்துக்கு அலுப் பையோ, மனக் கசப்பையோ தரவில்லை. மாறாக, ஒருவிதப் பெருமை உணர்வையே அவை அவனுள் வளர்த்தன.

பெரும்பாலரது கவனிப்பையும் பெற வேண்டும் என்ற ஏக்கம் அவன் உள்ளத்தில் உறைந்து கிடந்தது. இப்போது அனைவரும் தேடி வந்து, அன்புடன் விசாரித்து, நல்ல வார்த்தை கள் சொல்வதற்கு, நோய் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திவிட்டது. “ஆகவே நோயும், வேண்டுவதே மானிடர்க்கு!” என்றுகூட அவன் மனம் பாடிக் களித்தது.

இவ்வளவு திருப்தியினூடும் கைலாசத்துக்கு உள்ளூர ஒரு வருத்தம். “எல்லாரும் வந்து பார்க்கிறாங்க. இந்த விநாயகம் பயல் வரவே இல்லை பாரேன்” என்று.

விநாயகம் பயல் என்று அவன் மனம் எரிச்சலுடன் குறிப்பிட்ட திருவாளர் விநாயகம் இளம் வயசு நபரே ஆயினும் விநாயகம் பிள்ளை என்றே அந்த வட்டாரத்தில் அறிமுகம் ஆகியிருந்தார். அவர் கவலை இல்லாத மனிதர். அவரது உள்ளத்தில் கவலைப் பயிர் வளர்ந்ததோ என்னவோ, அதை அவர் வெளியே காட்டிக் கொண்டதில்லை. களிதுலங்கும் நகையும் கலகலவென்ற பேச்சுமாகத் திரியும் அவர் இருக்கிற இடத்தில் சிரிப்பும் தமாஷ”oம் நிலவும். அவர் கவிதைகள் எழுதுவதில் அக்கறை காட்டிய தில்லை. எனினும் கவி உள்ளம் படைத்தவர். வாழ்க்கையையே கவிதையாகச் சுவைத்து வாழக் கற்றுக் கொண்ட ரசிகர். அவர் கைலாசத்தின் நண்பர். அவன் எழுத்து முயற்சிகளைப் படித்து உற்சாகமாக அவ்வப்போது ஏதேனும் சொல்லி மகிழ்விப்பார்.

கைலாசம் சீக்காயிருக்கிறான் என்று கேள்விப்பட்டும் அவனைப் பார்க்க வரவில்லை அவர். அது அவனுக்குப் பெரும் மனக்குறையாகவே இருந்தது.

ஒருநாள் சாயங்காலம் தனியாக, சோர்ந்து போய் கிடந்தான் கைலாசம். அன்று அவனைப் பார்க்க யாரும் வரவில்லை. அநேகமாக எல்லோரும் ஒரு தடவை வந்து பார்த்து விசாரித்துப் போய் விட்டதனால், அவனைக் கண்டு போக வந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. என்றாலும், இடைக்கிடை யாராவது தலையைக் காட்டி விட்டுப் போவது வழக்கம். அன்று பூராவுமே யாரும் வரவில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் அலுவல்கள், கவலைகள், அலைச்சல்கள் எவ்வளவோ இருக்கும்தானே!

கைலாசம் தொய்ந்த மனசின் இருண்ட நினைப்புகளோடு ஒடுங்கிக் கிடந்தான்.
அப்போது வந்து சேர்ந்தார் விநாயகம் பிள்ளை. சிரிக்கும் கதிரொளி சட்டென அவ் அறையினுள் பாய்ந்தது போலிருந்தது அவர் வருகை.

கைலாசத்தின் கண்கள் அவர் கைகள் பக்கம் பாய்ந்தன. இது சமீப காலப் பழக்கமாகப் படிந்திருந்தது அவனிடம். வருகிற வர்கள் அவனுக்காக ஏதாவது வாங்கி வருவது வழக்கமாக இருந்ததால், அறைக்குள் புகுவோர் கையில் என்ன எடுத்து வருகிறார்கள் என்று அறியும் ஆவல் அவனுள் கிளர்ந்தது. நாளடைவில், தன்னைப் பார்க்க வருகிறவர்கள் பழமோ, பிஸ்கட்டோ அன்றி வேறு எதுவுமோ வாங்கி வரவேண்டும் என்று எண்ணவும், கொண்டு வரமாட்டார்களா என்று எதிர் பார்க்கவும் தொடங்கியது அவன் மனம்.

விநாயகம் பிள்ளை வெறும் கையராய்தான் வந்திருந்தார். “ஒண்ணுமே வாங்கி வராம வந்திருக்கான் பாரு! சீக்குக்காரனை பார்க்க வாறவன் ஏதாவது வாங்கி வரவேணாம்?” என்று அவன் மனம் முணுமுணுத்தது.

அவர் அவனைத் தலையோடு காலாகப் பார்த்தார். அருகில் மேஜை மீது, சன்னல் விளிம்பில், மற்றும் ஸ்டூல் மீது இருந்த புட்டிகளையும் பொட்டலங்களையும் ஒரு பார்வையில் விழுங்கினார். அறை முழுவதையும் கண்களால் தடவினார். அவன் அருகில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தார்.

வழக்கமான கேள்விகள் பிறக்கும்; ஆதரவும் அனுதாபமும் பொதிந்த பேச்சுகள் ஒலிக்கும் என்று எதிர்பார்த்த கைலாசம் ஏமாற்றமே அனுபவித்தான்.

விநாயகம், பொதுவாக எல்லோரும் நோயாளிகளிடம் விசாரிப்பதுபோல, “எப்படி இருக்கிறே? என்ன செய்யுது? ரொம்பக் கஷ்டப்பட்டுப் போனியா? இப்ப தேவலையா?” என்ற ரீதியில் கேள்விகளை அவனிடம் கேட்கவேயில்லை. “ரொம்ப மெலிஞ்சு போயிட்டியே உடம்பைக் கவனிச்சுக்கோ” என்பது போன்ற உபசார மொழிகளும் பேசவில்லை.

அவர் சகஜமாகப் பேசுவது போலவே இப்போதும் பேசினார். “வாற வழியிலே ஒரு குதிரையைப் பார்த்தேன். அதல்லவா குதிரை மினுமினுன்னு, கறுப்பு நிறத்திலே, நெற்றியிலே வெள்ளை படிந்து, டாக் டாக்குனு நடைபோட்டு வந்தது. எவ்வளவு ஜோரா இருந்தது தெரியுமா? ஏ, நீ ஆயிரத்தைச் சொல்லு. மோட்டாரு, பைக்கு, ஸ்கூட்டரு பற்றி பெருமையாப் பேசு. வேண்டாம்கலே, ஆனா குதிரை மேலே சவாரி போற அழகுக்கு அதெல்லாம் ஈடாகாது. என்ன மிடுக்கு, என்ன கம்பீரம், என்ன நடை! நீ அதை கண்ணாலே பார்த்திருக்கணும். எப்பவுமே எனக்கு ஒர் ஆசை. அருமையான குதிரை வாங்கி, தினம் அது மேலே ஏறி உல்லாசமா ஊரைச் சுத்தி வரணும். கொடுத்து வைக்கலே. எதுக்கும் கொடுத்து வச்சிருக்கணும் டேய்!”

கைலாசம் பெருமூச்செறிந்தான்.

சும்மா புரண்டு படுத்தான். அதை அவர் கவனித்ததாகவே காட்டிக் கொள்ளவில்லலை. உற்சாகமாக வார்த்தைகளைக் கொட்டினார்.

“உனக்கு விஷயம் தெரியுமா? மேல ரத வீதியிலே புது ஒட்டல் ஒண்ணு வந்திருக்கு. அங்கே பாசந்தி பிரமாதம். அடையும் அவியலும் அபாரம். இந்த இரண்டையும் ருசிக்கற துக்குன்னே ரொம்பப் பேரு அங்கே வாறாங்க. காபியும் ஃபஸ்ட் க்ளாஸா கொடுக்கிறான். நீ அங்கே போயி அவசியம் இதுகளை டேஸ்ட் பண்ணணும். அப்புறம் அநத பாசந்தி, அடை அவியல், காபிக்கு ஒரு கவிதையே பாடிப் போடுவே!”

இதைச் சொல்லி விட்டு அட்டகாசமாகச் சிரித்தார் விநாயகம் பிள்ளை. கைலாசம் அவர் முகத்தையே பார்த்தபடி கிடந்தான்.

“எழுந்திருச்சி உட்காரப்பா. என்ன சும்மா படுத்துக்கிட்டு! வேணுமின்னா ரெண்டு தலானியை அண்டை கொடுத்துக்கோ. அல்லது ஈசிசேரிலே சாய்ந்து இரேன். உம். உன்னாலே வர முடியாது போலிருக்கு, நாங்க அஞ்சாறு பேரு அருவிக்குப் போக பிளான் பண்ணியிருக்கோம். போன வருசம் நீ வந்தியா? ஞாபகம் இல்லே. போன மாசம்கூட நான் போயிருந்தேன். அடா அடா, அருவியிலே குளிக்கிற சுகம் இருக்குதே.”

அந்த வேளையிலேயே அவர், கொட்டுகிற அருவியில் குளித்துக் கொண்டிருப்பது போல் சொக்கிய ஒரு சுகானுப வத்தை முகத்தில் தேக்கினார். “த்சொத்சொ!” என்றார்.

தினசரி அருவியிலே குளிக்கணும். ஒற்றையடிப் பாதை வழியே மலைப்பகுதிகள், காடுகள் ஊடே எல்லாம் சுற்றித் திரியணும். அருமையா பொழுது போகும். கவலை என்கிறதே தலை காட்டாது. சீக்கு கீக்கு எதுவும் கிட்டத்திலே அண்டாது. நான் அப்படி வாழ்க்கையை கழிக்கலாம்னு எண்ணியிருக் கிறேன். நீயும் வாறதா இருந்தால் வரலாம். வசந்த காலம் வந்திட்டுது. எங்கும் ஜம்னு புது அழகும் புது மணமும் புதுப்புது வர்ணங்களும் நிறைஞ்சு கிடக்கு.

“கல்யாண முருங்கை பளிர்னு பூத்துக் குலுங்குது, நீயும் கவனிச்சதுதானே? முதன் முதல்லே வசந்தத்தின் வருகைக்கு கட்டியம் கூறுவதுபோல இந்த முருங்க மரங்கள்தான் பூத்துக் குலுங்குது. செக்கச் செவேல்னு. நீ கூடச் சொன்னியே – வேட்டையாடி ஒரு பிராணியைக் கொன்ற புலியின் ரத்தம் தோய்ந்த நகங்கள் மாதிரி செக்கச் சிவந்த பூக்களை பூத்து நிற்கிற மரங்கள்னு ஒரு பாடலில் இருக்குதுன்னு. அது எனக்கு அடிக்கடி ஞாபகம் வரும். நீயும் அந்தப் பூங்கொத்துகளை பார்க்க ஆசைப்படுவேன்னு நினைக்கிறேன்.”

கைலாசம் சுவர் பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டான். அவன் கண்களில் நீர் சுரந்தது. அவன் உள்ளம் கனப்பது போல் ஓர் உணர்வு.

விநாயகம் தன் பாட்டுக்குப் பேசிக் கொண்டே போனார். “பெரிய அதிசயங்கள் நம்மைச் சுற்றிலும் நடைபெற்றுக் கொண்டே இருக்கு. மனுசங்க தான் நேரம் காலம் எல்லாம் அறிய கடியாரம், காலண்டர், பஞ்சாங்கம் என்று தயார் பண்ணி வச்சிருக்காங்க. காரியங்கள் ஒழுங்கா நடைபெறணும்கிறதுக்காக புரோகிராம், டைம் டேபிள், கால அட்டவணை இப்படி என்னென்னவோ சொல்லித் திட்டமிடுறாங்க. ஆனா இயற்கை கடியாரம் இல்லாம, டைம் டேபிள், புரோகிராம் எதுவுமே இல்லாம வேலை செய்யுது. ரொம்ப கரெக்டா, கால நியதி தவறாமல் காரியங்கள் நடைபெறுது. பூக்கள் அந்தந்த வேளைக்கு, அந்த அந்தக் காலத்துக்கு உரிய முறைப்படி பூத்துக் குலுங்குது, காய்கள் கனிகள் உண்டாகுது….

”இந்த அரசமரத்தைப் பாரேன். ஒரு சந்தர்ப்பத்திலே மொட்டையாய் மூளியா மாறி நிற்குது. பிறகு, அதுக்கே ஏதோ சிலிர்ப்பு ஏற்பட்டது மாதிரி, உள்ளுற உணர்ச்சிப் பரவசம் பெற்றது போல, இலை மொக்குகளை வெளிப்படுத்துது. தாமிரத் தகடுகள் போல, செம்மையான கண்ணாடித் துண்டுகள் போல, துளிர்கள் மரம் பூராவும் பரந்து காணப்படுது. மறு நாள் அவை எல்லாம் நிறம் மாறி மயக்குது. அப்புறம் இளம் பசுமையாய், பிறகு குளுகுளு கிளிப்பச்சை நிறமாய் இலைகள் மிளிருது. பார்க்க எவ்வளவு இனிமையாக இருக்கு! இதை எல்லாம் நீயும் கவனிச்சிருப்பேன்னு நினைக்கிறேன்…..”

கைலாச் வாய் திறந்து ஒரு வார்த்தைகூடச் சொல்ல வில்லை.

”இரவின் அமைதியான நேரத்தில், அரும்புகள் ஒளியும் மணமும் பெற்று இதழ்களாக விரியும் ஓசையைக்கேட்க முடிகிறது என்று ஒரு கவிஞன் எழுதியிருக்கிறான். பூச்செடி அருகில் அமர்ந்து, அப்படி நுட்பமான ஒலியை நானும் கேட்க முடியுமா என்று கவனிக்கணும்கிற ஆசை எனக்கு உண்டு. அதுமாதிரி எண்ணம் உனக்கு எப்பவாவது வந்தது உண்டா கைலாசம்?” என்று கேட்டுவிட்டு, சன்னல் வழியாக வெளியே பார்த்தார் விநாயகம்.

அவன் திரும்பி அவரை நோக்கினான். அவன் விழிகள் ஏதோ அறியத் தவிப்பன போல அவர் முகத்தில் மொய்த்தன. பிறகு இமைகளை இழுத்து மூடிக்கொண்டான்.

விநாயகம் எதையோ எண்ணிக் கொண்டவராய்ச் சிரித்தார். “வழியிலே இரண்டு பெண்களைப் பார்த்தேன். நாகரிகங்கள். ரொம்ப ஸ்டைல். நவயுக ஸ்டைல்கள் தலைமுடியை எப்படியோ சிங்காரித்துக் கொள்வதிலும், இடுப்புச் சேலையை ரொம்பவும் இறக்கிக் கட்டிக் கொள்வதிலும்தான் விளம்பர மாகுது. இந்த அக்காளுகளும் அதே தினுசுதான். அவள்களை பார்க்கையில் எனக்கு வேறொரு பெண்ணின் நினைப்பு வந்தது. நேற்று பஸ் நிலையத்தில் பார்த்தேன். எளிய தோற்றம். அதுவே தனி அழகாகத் தோணிச்சு. சில பெண்களைப் பார்க்கையிலே மனசில் ஏதேதோ எண்ணங்கள் தலை தூக்கும். ஆனா சில பெண்களைப் பார்க்கையில் தவறான எண்ணம் எழாது. இந்தப் பெண்ணும் அப்படித்தான் இருந்தாள். புனிதம், தூய்மை, அமைதியான அழகு. அதுபோன்ற பெண் ஒருத்தியைப் பார்த்து தான் ரவிவர்மா லட்சுமி சரஸ்வதி திருஉருவங்களை ஒவியமாக்கி யிருப்பான் என்ற நினைப்பு எனக்கு எழுந்தது”….

விநாயகம் பெண்கள் பற்றித் தொடர்ந்து பேசினார். சுவையாகவும், கிண்டலாகவும பலப்பல சொன்னார். அப்புறம் குழந்தைகள் பற்றி, அவற்றின் இயல்புகள், சிரிப்பு, அழகு அம்சங்கள், விளையாட்டுப் போக்குகள் பற்றி எல்லாம் பேசினார். இயற்கை வளங்கள் பற்றி திரும்பவும் சொன்னார். மனித உழைப்பினால் மலர்ந்த நலன்கள், சிறப்புகள் பற்றியும் ஈடுபாட்டுடன் பேசினார்.

“வாழ்க்கையில் எவ்வளவோ அற்புதங்கள்! வாழ்க்கையே அற்புதமானதுதான். அவற்றை நம்மவங்க உணர்வதில்லை. உணர விரும்புவதுமில்லை. நாகரிக வசதிகள், வேலைச் சுமைகள், பொறுப்புகள், கவலைகள் என்று மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே ஏகப்பட்ட விலங்குகளை மாட்டிக் கொண்டு குமைகிறார்கள். அவையும் தேவைதான். அதற்காகத் தன்னைச் சுற்றியுள்ள இனிமைகளைக் கவனிக்கப்படாது, ரசித்து மகிழக் கூடாது என்கிற கண்டிப்பு, கட்டுப்பாடு எதுவும் இல்லையே! நாகரிக விளக்கொளியில் அறைக்குள் ளேயே தங்களை முடக்கிக் கொள்ளும் பட்டணவாசிகள், வெளியே அற்புத ஒளிப்பிரவாகமாய் நிறைந்து கிடக்கும் நிலாவைக் கண்டுகளிக்க மறந்து போகிறார்கள், ரசிக்கத் தவறிவிடுகிறார்கள் என்று யாரோ ஒரு கவிஞர் சொல்லியிருப்பதாக நீதானேடே சொன்னே? பின்னே என்ன!” என்றார்.

“சரி, நான் வாறேன். ரொம்ப நேரம் பேசிக்கிட்டே இருந்திட் டேன்” என்று சொல்லி எழுந்தார். வந்தது போலவே வேகமாய்ப் போய் மறைந்தார்.

அவர் போனதும் அந்த அறையில் நிலவி நின்று ஒரு பிரகாசம், மங்கிவிட்டது போல் கைலாசத்துக்குத் தோன்றியது.

அவர் தன் சீக்கைப் பற்றி எதுவுமே கேட்கவில்லை என்பதோ, “ஓய்வு எடுத்துக் கொள்! உடம்பை நல்லா கவனி” என்ற ரீதியில் இதமான வார்த்தைகள் கூறவில்லை என்பதோ, இப்போது அவன் உள்ளத்தில் உறுத்தவில்லை. விநாயகம் பிள்ளை இன்னும் கொஞ்ச நேரம் அங்கிருந்து மேலும் பல விஷயங்கள் பற்றிப் பேசாமல் போய்விட்டாரே என்று தான் அவனுக்குத் தோன்றியது.

அவர் சொன்னவை இன்னும் காதக்குள் ரீங்காரம் செய்வது போலிருந்தது அவனுக்கு. அவரோடு சேர்ந்து அந்த ஓட்டலுக் கும், அருவிக் கரைக்கும், பஸ் நிலையத்துக்கும் போக வேண்டும். அவர் சுட்டிய இனிமைகளை எல்லாம் – மற்றும் அவை போன்ற நயங்கள் பலவற்றையும் – ரசித்து மகிழத் தவறிவிட்டோமே என்ற வருத்தம் ஏற்பட்டது அவன் உள்ளத்தில்.

அவன் மெதுவாக எழுந்து உட்கார்ந்தான். அப்போது இரவு நெருங்கிக் கொண்டிருந்தது. அவன் பார்வை சன்னல் வழியாக வெளியே புரண்டது.

எலெக்ட்ரிக் விளக்குகள் ஒளிச்சிதறி மின்னின. விதம் விதமாக, பல வர்ணங்களில், பல வடிவங்களில்.

ஒரு திசையில், நெடுந்தொலை வரை பார்வை செல்வதற்கு இடம் இருந்தது. அங்கே இருட்டும் ஒளிக்கோலங்களும் இணைந்த தோற்றம் மிகக் கவர்ச்சி நிறைந்ததாக விளங்கியது.

”இப்படிப்பட்ட இனிமைகள் பலவும் என்னால் ரசிக்கப் படாமலே இயங்குகின்றன. நான் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பது பேதமை, என்று அவன் மனம் சொன்னது. இனியும் இப்படியே சோர்ந்து கிடப்பது சரியல்ல என்ற எண்ணம் அவனுள் எழுந்தது. அப்போதே அவனிடம் ஒரு புது சக்தி பிறந்து விட்டது.

– அமுதசுரபி 1993

– வல்லிக்கண்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2000, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *