அவன் – பெருமாள். சாதாரண மனிதன்.
அவ்வேளையில் அசாதாரணமான சூழ்நிலையில் தனித்து விடப்பட்டிருந்தான்.
அதனாலேயே அவன் உள்ளம், இனம்புரிந்து கொள்ள முடியாத உணர்வுகளினால் கனமேறிக் கொண்டிருந்தது. ஒருவித பயம், குழப்பம், அழுத்தும் சோகம், ஏதோ ஒரு வேதனை கவிந்து, கணத்துக்குக் கணம் பாரமாகி வந்தன.
அவன் பார்வை ஒரு மிரட்சியுடன், மேலும் கீழும்; அங்கும் இங்கும், ஏறி இறங்கிப் புரண்டு அலைபாய்ந்தது. அவன் கண்களில் பட்டனவெல்லாம் அவனை அச்சுறுத்தின.
மலைகள். எல்லாப் பக்கங்களிலும் மலைப்பகுதிகள். விரிந்து பரந்து கிடந்தன. ஓங்கி நிமிர்ந்து நின்றன. முண்டும் முடிச்சுமாய் முகடுகள் தொங்குவனபோல் தென்பட்டன. ஒருபுறம் விண்ணைத் தொடமுயலும் உயர் சுவர் வளைந்து நெளிந்து சென்றது, பாதை சற்றுத் தள்ளி சரிவாக இறங்கிக் கிடந்தது மலை. அதை ஒட்டிப் பெரும் பள்ளம். நெடுகிலும் உயர் மரங்கள். பச்சை செறிந்த மரத்தலைகள். வகை வகைப் பூக்கள். காடாய் அடர்ந்து வளர்ந்த செடிகள், கொடிகள்.
அவை பெருமாளுக்குப் பயம் தந்தன. தனிமையே அவனை அச்சுறுத்தியது. ஆழ்ந்த அமைதி – சத்தங்களற்ற இயற்கைச் சூழ்நிலை – அவனைக் கலவரப்படுத்தியது.
கண்கள், வறண்ட கற்பாறைகளின் அடர் வளர்த்தியை, விதம் விதமான அடுக்குகளை, அவற்றின் நீள அகல உயரங் களைப் பிடித்துத் தந்தன. செடிகள், கொடிகள், மரங்கள் எல்லாம் அவனை வளைத்துப் பிடித்துச் சிக்கலில் மாட்டி வைக்கத் தயாராக நிற்பனபோல் அவனுக்குத் தோன்றின.
பெருமாள் நடந்து கொண்டிருந்தான். மலையடிவாரச் சிற்றுாரிலிருந்து புறப்பட்டு, நடந்து, நடந்து ஏறி ஏறி, மலைப் பகுதிகளுடே வெகுதூரம் வந்திருந்தான். இன்னும் ஏறிப் போயாக வேண்டும் அவன். தனித்து விடப்பட்ட உணர்வு அவனைத் தொல்லைப்படுத்தியது.
பெரும் சுவர்கள் மாதிரி ஓங்கி நிமிர்ந்து நின்ற மலைப் பகுதிகள், எங்கெங்கும் காட்சி தந்த மலை முகடுகள், மலையின் மிக உயர் தூரத்து முடிகள் – மொத்தத்தில் கற்பாறைகளின் பூதாகாரத் தோற்றங்கள் – அவனை மிகப் பாதித்தன. தான் தனியனாய் இங்கு வந்து அகப்பட்டிருக்க வேண்டாம், அவன் ஏற்றுக்கொண்ட பணியை வேறு ஒருவனிடம் கொடுத்திருக் கலாம் என்று அவனுள் எண்ணம் ஓடியது.
ஊர்க்காரர்கள் – முக்கியமாக பெண்கள் – அவனிடம் அந்த வேலையை ஒப்படைத்தபோது அவன் துணிச்சலோடுதான் கிளம்பினான். நீண்டு, நெடிது உயர்ந்து, பசுமையாய் வளர்ந்து காணப்பட்ட மலைத்தொடர்மீது, மலையின் மீது மலையென ஓங்கி நின்ற மலைப் பகுதிகள் இரண்டு மூன்றைக் கடந்து மேலே போக வேண்டும். அங்கே கோயில் கொண்டிருந்த “மலை நம்பி”க்கு பூசனை செய்ய அநேகர் போயிருக்கிறார்கள். அவர்கள் முக்கியமான – இல்லாமல் தீராது என்ற தன்மை உடைய – இரண்டு பூசைப் பொருள்களை எடுத்துச் செல்ல மறந்து விட்டார்கள்.
விடுபட்டுப் போன பொருள்களை மலைமீதுள்ள ஊர்வாசி களிடம் கொண்டு கொடுக்கும்படி கீழே இருந்தவர்கள் பெரு மாளைக் கேட்டுக் கொண்டார்கள். வேண்டுவது போலவும், கெஞ்சுவது போலவும் கோரினார்கள். “உனக்குப் புண்ணி யம்ப்பா. பூசைக்குரியது. இது இல்லாமல், சாமி குத்தம் ஏற்பட்டு விடப்படாது” என்று பெண்கள் பேசினார்கள். நம்பிக்கையான ஆளுவேறு யாருமில்லை. நீதான் போய் இதுகளைக் கொண்டு அவங்ககிட்டே கொடு. நீ இந்தப் பாதையிலேதான் முன்னாலே கூடப்போய் வந்திருக்கியே. நீ ஆம்பிளைதானே! ஒத்தையிலே போக முடியாதா என்ன உன்னாலே?” என்று அவனுக்கு உந்துதல் அளித்தார்கள்.
அவனும் பூசைப் பொருள்களுடன் கிளம்பிவிட்டான். அவை ஒரு சுமையும் இல்லை. ஒரு துணிப் பையில் கனமற்றே இருந்தன.
பெருமாள் நடந்தான். தனிமையும் தானுமாய் – மலைப் பகுதிகளினூடே சென்ற ஏற்ற இறக்க ஒற்றையடித் தடத்தின் வழியாக. நடக்க நடக்க வழி வளர்ந்து கொண்டே இருந்தது.
கற்சுவரென, பெரும் மதிலென, வளர்ந்து காணப்பட்ட மலையின் தொடர்பகுதிதான் அவனுக்குத் துணை வந்தது. அதன் தோற்றம் அவனுக்கு அலுப்பு ஏற்படுத்தியது. அதனுடைய உயரமும், பரப்பும், சர்வ வியாபகமும் அவனை என்னவோ செய்வது போலிருந்தது. மலையின் நெடுகிலும், பள்ளத்தாக்குகளிலும், சரிவுகளிலும், தூரத்து உயர் முடிகளிலும் மெளனமாய் நின்ற மரங்களின் அடர்த்தியும், காட்டின் செறிவும், மிகமிக உயரே விரிந்து கிடந்த வானமும் அவனைச் சின்னவனாய், அல்பமாய், உணரச் செய்தன. இவற்றின் அருகே, இவற்றின் நடுவே, நாம் மிகச் சிறு உருவம்; நாம் ஒன்றுமேயில்லை என்றொரு நினைப்பு அவனுள் ஊர்ந்தது.
நடக்க நடக்க, உயர்ந்து செல்லும் தனிப் பாதையில் மேலே ஏற ஏற, இந்தச் சிறுமை உணர்வு. வலுப்பெற்றது. அது ஏன் – என்னது என உணர முடியா ஒருவிதக் குழப்பத்தை – அர்த்தம் புரிந்து கொள்ள முடியாத ஒரு பீதியை – அவனுக்குள் பரவச் செய்தது.
அது பகல் நேரம் தான். வெயில் ஒளிமயமாய்ப் படிந்து கிடந்தது. சூழ்நிலை – மலைப்பகுதிகள் மரங்கள், உயர்வானம் – எல்லாம் பளிரெனப் பிரகாசித்தன. அவை அவனுடைய வெறுமையை, மனிதனின் சிறுமையை, தனக்கு எடுத்துக் காட்டுவதாகவே பெருமாளுக்குத் தோன்றியது. அவனுள் ஒரு வேதனை – அமைதியற்ற தன்மை – அழுத்தியது. திக்குத் தெரியாத பெரும் வெளியில் துணையற்று விடப்பட்ட சிறு பிள்ளை என அவன் தன்னை உணர்ந்தான். தனக்கு ஆதரவாக யாரும் இல்லாத நிலையில், ராட்சதத்தனமான சுற்றுப்புறத்தில், செயலற்ற தன்மையில் தனித்து விடப்பட்ட ஒரு பரிதாப நிலையில் அவன் இருப்பதாக அவன் மனம் கருதியது.
அந்த நிலை அவனது சோகத்தை அதிகப்படுத்தியது. ஓங்கி ஓங்கி வீசி எழும் அலைகள் புரளும் கடல் ஓரத்தில் முன்பொரு சமயம் அவன் அப்படித்தான் உணர்ந்தான். பாலை என விரிந்து கிடந்த ஒரு மணற்பெருவெளியில் ஒரு சந்தர்ப்பத்தில் இத்தகைய உணர்வு அவனை இப்படித் தாக்கியதுண்டு. இப்போது இந்த நீண்ட நெடிதுயர்ந்த – தனிமையின் ஆழ்ந்த அகன்ற உயர் சூழலில் பெருமாள் பெரிதும் பாதிக்கப் பட்டான்.
எதுவும் செய்யத் திராணியற்ற சிறுபிள்ளையாய்த் திகைத்து விட்ட பெருமாள், இப்போது அழுதான். பொங்கிப் பொங்கி அழுகை எழ, அப்பாவியென அழுது கொண்டே அவன் நடந்தான்.
இத் தருணத்தில், தனக்குத் தெரிந்த மனிதர் யாரையாவது காண வேண்டும் என்றொரு விசித்திர எண்ணமும் அவன் உள்ளத்தில் நெளிந்தது.
சில சமயம் அதிசயமாக மனிதரின் ஆசை – கனவு அல்லது தீவிர எண்ணம் – நிறைவேறி விடுவதும் உண்டு. பெருமாளுக் கும் அப்படி ஒரு பேறு வாய்க்க வேண்டும் என்றிருந்தது.
பெருமாளின் ஊர்க்காரனான கைலாசம் எதிரே வந்து கொண்டிருந்தான். உயரே இருந்து இறங்கி வரும் ஏதோ உருவமாய்த் தோன்றி, பிறகு அது ஓர் ஆள் எனத் தெரிந்து, அது அட, நம்ம கைலாசம்!” என்று பெருமாளுக்குப் புரிவதற்கு, சிறிது நேரம் தேவைப்படத்தான் செய்தது.
அப்பவும் பெருமாளின் அழுகை தொடர்ந்து கொண்டு தானிருந்தது.
கைலாசம் நெருங்கி வந்ததும் வியப்புடன் பெருமாளைப் பார்த்தான். அவனிடம் ஏதோ சரியில்லை என்பது புரிந்தது அவனுக்கு. “என்ன பெருமாள்? என்ன விஷயம்?” என்று கேட்டான்.
பெருமாள் மலையையும் சரிவுகளையும், பக்கத்துப் பள்ளத் தாக்கையும் பார்த்தபடி நின்றானே தவிர, தன் உணர்ச்சிகளை வாய்விட்டுச் சொல்லும் திராணியைப் பெற்றானில்லை.
“என்னடே, இங்கே எப்படி வந்தே? ஏன் அழுகிறே?” என்று பரிவுடன் விசாரித்தான் கைலாசம்.
“ஒண்ணுமில்லே!” என்று முணுமுணுத்தான் பெருமாள்.
கைலாசம் சிரித்தான். அவன் சந்தோஷமாக இருந்தான். “நாங்க பூசை செய்யவேணும்னு நேற்றே புறப்பட்டு வந்தோமா? மேல் மலையை, நம்பி கோயிலை, அந்தி நேரத்திலே அடைந்து விட்டோம். ராத்திரி அங்கே உள்ள செங்கத்தேறி கட்டடத்திலே தங்கினோம். ஏ பெருமாள்! மலைமீது ராத்திரி வேளையில் தங்கியிருப்பது எவ்வளவு அற்புதமான அனுபவம் தெரியுமா? ஆகா, குளிர், பனிப்படலம். அருமையான நிலா ஒளி. எங்கும் அமைதி. ஆனாலும் உண்மையான அமைதி கிடையாது. வித விதமான பூச்சிகள், வண்டுகள் ஓயாமல் இரைச்சலிட்டுக் கொண்டே இருக்கின்றன. ரகம் ரகமான ஒலிகளின் கலவை. திடீர்னு இராப் பறவை ஒன்று அலறுது. ஏதோ ஒரு மிருகம் கத்துது. தூரத்திலே ஓடுகிற ஆற்றுத் தண்ணிர், மேட்டிலிருந்து பள்ளத்தில் விழுகிற ஒசை. அது ஒடுகிற மெல்லொலி பின்னணி இசைபோல ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
“பெருமாள்! நீ கவனிச்சியா? எங்கும் வளர்ந்து நிற்கிற மரங்கள். செறிவுாகத் தென்படுகிற பசுமைப் பரப்பு. செடி கொடிகள், மலையின் பகுதிகள். தூரத்து மலைமுடிகள். இந்த வானம். இதெல்லாம் எவ்வளவோ ஆனந்தத்தை உண்டாக் குது. மனம் விசாலமாகி, இயற்கையோடு சேர்ந்து, உயரே உயரே பறக்கத் தொடங்குது. இந்த மண்ணும், மலையும், மரமும், வானமும் நம்மோடு சொந்தம் கொண்டாடுகிற மாதிரித் தோனலையா? நாமும் இவற்றுடன் உயர்ந்து நிற்கிற மாதிரி – இந்த மலையெலாம் நான்; மரங்களும் விண்ணும் நான்; எல்லாமே நான் என்று பெருமைப்பட வைக்கிற ஒர் உணர்வு நம்முள் சிலிர்த்தெழுகிறது. இந்த மலையை, மண்ணை, அருவியை, விண்ணை, மனித சமுதாயத்தை அப்படியே தழுவிக் கொள்ள வேண்டும் என்றோர் எழுச்சி ஏற்படுகிறதே. நீ ஏன் வருத்தமா இருக்கிறே, பெருமாள்? ரொம்ப நேரமா நீ அழுகிற மாதிரித் தெரியுதே? ஏன் அழறே?”
பெருமாள் பெருமூச்செறிந்தான்.
“பூசை செய்ய வந்தவங்க முக்கியமான பூசைச் சாமான் இரண்டை எடுத்திட்டு வர, மறந்து போனாங்க. என்னை அனுப்பியிருக்காங்க, கீழே போயி அதுகளைக் கொண்டு வர…” என்றான் கைலாசம்.
“இதோ இருக்கு. கீழே உள்ளவங்க தான் என்கிட்டே கொடுத்து அனுப்பினாங்க” என்று பெருமாள் பையை நீட்டினான்.
“நல்லதாப் போச்சு. வா, கோயிலுக்குப் போவோம்” என்று அவனை அழைத்தபடி திரும்பி நடந்தான் கைலாசம்.
போகிறபோதே அவன் மலையின் கம்பீரத்தை, அதன் வனப்பை வியந்து பேசினான். “மலை மட்டுமல்ல; கடலும், வானின் விரிவும், இயற்கையின் எடுப்பான, மிடுக்கான, வனப்பான சக்திகள் பலவும் இன்னும் கிளர்ச்சி ஏற்படுத்தும். மனிதன் இவற்றோடு இணைந்தவன், இவற்றால் ஆனவன், இவற்றை ரசித்துப் பயன்படுத்தி அனுபவிக்கக் கற்றவன் என்ற பெருமித உணர்வு எனக்குள் உண்டாகும். உனக்கு எப்படியோ?” என்று பெருமாள் முகத்தைப் பார்த்தான்.
“நான் சாதாரண ஆளப்பா. நீ கவிஞன். கவிதை எழுதாவிட்டாலும், கவிஞனாக வாழ்கிறவன்” என்று பெருமாள் சொன்னான்.
காசுகளை குலுக்கிக் போட்டது போல், கலகலவென்ச் சிரித்தான் கைலாசம்.
– 1995, வல்லிக்கண்ணன் கதைகள், ராஜராஜன் பதிப்பகம், 2000 – நன்றி: http://www.projectmadurai.org/