மந்திர சக்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 167 
 
 

(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விடியற்காலை சுமார் ஐந்து மணி இருக்கலாம். மிருத்யுஞ்ஜய ஐயர் தம் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை, ‘ராதே’, ‘ராதே’ என்று தட்டி எழுப்பினார்.

“அதைப் புதைப்பதற்கு அதற்குள்ளே நாழிகையாய்விட்டதா?” என்று அவள் குறைத் தூக்கமான குரலில் கேட்டாள்.

“ஆய்விட்டதோ இல்லையோ, அது சம்பந்த மாகத்தான், நான் இப்பொழுது கண்ட ஒரு சொப்பனத்தை உனக்குச் சொல்லப் போகிறேன். நன்றாய் விழித்துக்கொண்டு அதைக் கேளு” என்று அவர் சொன்னார்.

இந்த வார்த்தைகளுக்கு முகவுரை ஒன்று அவ சியமாக இருக்குமாகையால், அந்த அம்மாள் முணு முணுத்துக்கொண்டும், தேகத்தை நெளித்துக் கொண்டும், பூரணமாய் விழித்துக்கொள்வதற்குள் அதைச் சொல்லிவிடலாம்.

இந்த விஷயத்திற்கு ஆரம்பம் ஜோசியர் சியாமா சாஸ்திரிகளுடைய வார்த்தைகள். ஒரு நாள் அவர் மிருத்யுஞ்ஜய ஐயருடைய ஜாதகத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கையில், “இந்த ஜாதகத்திற்கு மந்திரங்கள் எல்லாம் நன்றாய்ப் பலிக்குமே! சூரியனும் புதனும் ஒன்று சேர்ந்து லக்னத்தில் புதநாராயண யோகம். பன்னிரண்டில் குருவும் சுக்கிரனுமாக இரண்டு சுபர்களும் வலுத் திருக்கிறார்கள்-” என்றார்.

“என்ன மந்திரங்கள்?”

“எல்லா மந்திரங்களுந்தான்; வசீகரணம், உத்வேஷணம், மாரணம், உச்சாடனம், ஸ்தம் பனம், மிருத்யுஞ்ஜயம் உட்பட, எல்லாந்தான். எதையும் நீங்கள் சாதகம் செய்து உபயோகிக்கலாம்.”

“என்ன என்னவோ பெயர் சொல்லுகிறீர் களே, சாஸ்திரிகள்! அதற்கெல்லாம் என்ன அர்த் தம்? அந்த மந்திரங்களை உபயோகித்து என்ன லாபம்?”

இவ்விதம் ஆவலுடன் கேட்டு, அந்தச் செயல் களையும் பிரயோகங்களையும், சாஸ்திரிகளுக்குத் தெரிந்த வரையில் அறிந்துகொண்டார். சாஸ் திரிகள் எழுந்து போனவுடனே, தம்முடைய பார்யையிடம் சென்று, இவ்விஷயத்தைப் பிரஸ்தாபித்தார்.

“அடீ எனக்கு எந்த மந்திரமும் பலிக்குமாம், சாஸ்திரி சொல்லுகிறார். நான் இப்போது என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? அந்த நரசிம்மன் மேலே நல்ல மந்திரமாய் ஒன்றை உபயோகிக்கப் போகிறேன்” என்று பெருமையுடன் தெரிவித்தார்.

நரசிம்ம ஐயர் இவருக்குப் பங்காளியும் அடுத்த வீட்டுக்காரரும். கிராமத்தில் இவர்கள் இரண்டு பேருமே பெரிய மிராசுதார்கள். இவர்களுக்குள் ஒரு போட்டி உண்டாவது கிராம வாழ்க்கையில் ஒரு சாதாரண சம்பவம். ஆனால் இவர் சாதுவாயும், நரசிம்ம ஐயர் துஷ்டராயும் இருந்ததால், கட்சி கள் சம பலமாக இல்லாமற்போய் ஒரு போட்டியின் எல்லையைத் தாண்டிவிட்டது.

கிராமத்தில் இவர் எது சொல்லட்டும், எது செய்யட்டும், அது பொது நலமானதாக இருந் தாலும், அதை நரசிம்ம ஐயர் எதிர்ப்பார். ஒருவன் ஏழை என்ற அங்கலாய்ப்பினால், அவனுக்கு இவர் உதவி செய்யத் தொடங்கினால், அவனை அழிப்ப தற்கு வழியைத் தேடுவார் நரசிம்ம ஐயர். இவர் தம்முடைய தோட்டத்தில் நடமாடிக்கொண்டிருக் கிறார் என்று தெரிந்தவுடனே அவர், வேலிக்கு அடுத் தாற்போல் தம் தோட்டத்தில் நின்றுகொண்டு தம்முடைய வேலைக்காரனைத் திட்டுகிற பாவனை யாக, “அடே காமாட்டிப்பயலே, அந்தப் பயலே, இந்தப் பயலே” என்றெல்லாம் சொல்லி, கடைசியில் அழுத்தமாகவும் நிச்சந்தேகமாகவும், “அடே மிருத்யு!” என்று முடிப்பார்.

ஒரு நாள் இவர் தைரியமாக, “என்னதிற்காக என் வேலிக்குப் பக்கத்திலே நின்று கொண்டு, என்னைத் திட்டுகிறாய்?” என்று கேட்டுவிட்டார்.

உடனே அவர், “அடே! உன் வேலியா இது! என் வேலி உன் வேலியாய்ப் போய்விடுமோ? எப் படித்தான் போகும் என்று பார்க்கலாம்!” என்று கத்திவிட்டுத் தம் பாத்தியதையை ஸ்தாபிப்ப தற்கு அத்தாட்சியாக அதிலிருந்து ஒரு மரத்தை யும் வெட்டிவிட்டார். ஆகவே, அதைக் குறித்து இவர் ஒரு வியாஜ்யம் கொண்டுவரவேண்டி இருந் தது. ஆனால் நரசிம்ம ஐயர், தாராளமாகப் பணத் தைச் செலவு செய்து தம் கட்சியில் பொய்ச் சாட்சிகளைத் திட்டம் செய்ததுமன்றி இவருடைய சாட்சிகளையும் கலைத்துவிட்டுக் கோர்ட்டில் ஜயித்துவிட்டார்.

மிருத்யுஞ்ஜய ஐயரோ, பாவம்! தாம் பால் யம் முதல் நட்டு வளர்த்த ஒதியமரங்களும் பூவரச மரங்களும், பல கொடிகளும் சேர்ந்த வேலியை எதிரிக்குச் சமர்ப்பிக்க வேண்டியிருந்ததைத் தவிர, தாம் பொய்வழக்குக் கொண்டுவந்த ஒரு மனுஷன் என்ற ஸ்திரமான பட்டத்தையும் ஏற்கவேண்டி இருந்தது.

ஆகையால், இப்பொழுது இவர் தம்முடைய விரோதியின் மேல் மந்திரத்தையாகட்டும், வேறே எதையாகட்டும் உபயோகிக்கப் போவதாகச் சொல்லுவதில் அந்த அம்மாளுக்கு யாதோர் ஆச்சரியமுமில்லை. ஆனால் முதலில் தனக்குள்ள தேகத்தைத் தீர்த்துக்கொண்டாள்.

“மந்திரம் என்றால் என்ன மந்திரமாம்?” என்றுதான் கேட்டாள்.

“இதுகூடத் தெரியாதா, உனக்கு! மந்திரம் என்றால் வசீகரணம், மாரணம், ஸ்தம்பனம், இப் படி எல்லாம் எத்தனையோ இருக்கிறதே! நீ படித்த தில்லையா, கேட்டதுமில்லையா? இப்போது வசீ கரண மந்திரத்தை உன்மேல் உபயோகித்தேனா னால், என்ன ஆகும் தெரியுமோ? நான் என்ன சொன்னாலும், வழக்கப்படி ‘சரித்தான், போங்க ‘ ‘சரித்தான், போங்க’ என்று சொல்லாமல், நீ என் னிடத்தில் பூர்ண விசுவாசம் கொண்டுவிடுவாய். நான் கூப்பிடுவதற்கு முன்னே, ஓடி வந்து நிற் பாய். எப்பவும் நான் சொன்னதையே கேட்பாய். ஊரிலிருக்கிறவர்கள் எல்லோரும் திருஷ்டி போடும் படி ‘அவள் எவ்வளவு நல்லவள்!’ என்று பேர் எடுப்பாய்-”

“சரித்தான் போங்கோ! இப்போ நரசிம்ம ஐயரை வசியம் செய்ய ஒரு ஜபம் பண்ணப் போகிறேளாக்கும்”

“சேச்சே! அவன் என் கிட்ட வந்தால்கூடப் பிடிக்காதே. அவனுக்குப் போய் வசீகரணத்தை உபயோகிக்கவா?”

“அப்படியானால் மாரண ஜபம் செய்யப்போ றேளா? மாரணம் என்றால் கொல்லுகிறது இல்லை? அது பாவமாச்சே”

“சிவசிவா! அந்த மாதிரிக் காரியம் ஒன்றிலும் நான் பிரவேசிக்க மாட்டேனென்று உனக்குத் தெரியாதா? நான் உச்சாடனந்தான் சாதகம் செய்யப் போகிறேன்-”

“அப்படீன்னா என்ன?”

“ஒரு சாஸ்திரிகள் பெண்ணுக்கு இதுகூடத் தெரியாதா? சொல்லுகிறேன் கேளு. உச்சாடனம் என்றால் அவன் இருக்கிற இடத்தை விட்டு ஓடிப் போகும்படி செய்கிறது. அவ்வளவுதான். அதனால் நமக்கு ஒன்றும் பாவமில்லை. அவன் இருக்கிற இடத்திலேயே இருந்து கொண்டு அவனுடைய விதியை அனுபவிக்கிறதற்குப் பதிலாக, வேறே எங் கேயாவது போய் அதை அனுபவிக்க வேண்டி யிருக்கும். அதுதான் நம்ம மந்திரத்தின் சக்தி. இது நாம் துஷ்டர்களுக்குச் செய்யவேண்டிய கடமை, ஒரு பாவமுமில்லை என்று சாஸ்திரத்தில் சொல்லி இருக்கிறது. வேண்டுமானால் சுலோகங் களை ஒப்பிக்கிறேன், கேளு-”

“சரி, சரி. உங்களிஷ்டப்படி செய்யுங்கோ. நான் ஒன்றும் தடுக்கவில்லை-”

“கோபித்துக்கொள்ளாதே. அவன் கிராமத்தை விட்டுத் தொலைந்து போனவுடன், உனக்காக வசீகரண ஜபம் பண்ணுகிறேன்-”

“சரித்தான் போங்க.”

இவ்விதமே, மிருத்யுஞ்ஜய ஐயர் சாதகம் செய் யத் தொடங்கினார். காஷ்மீரத்திலிருந்து புத்தகத்தைத் தருவித்து, முழுதும் புரட்டிப் பார்த்தார். (புத்தகத்தின் பெயரைச் சொல்ல வேண்டியது இல்லை. அதன் பெயரை உச்சரிப்பதானால், ஸ்நான பங்களை முதலில் நான் செய்யவேண்டும். தவிர அது உங்களுக்கே தெரிந்திருக்கும்) உச்சாடனத் திற்காகக் கைதேர்ந்ததாக எழுதப்பட்டுள்ள ‘ப்ரிஸ்கிரிப்ஷன் ‘களைப் படித்தார்.

ஆனால் அவற்றுக்கு வேண்டிய சாமக்கிரிகளைச் சேகரிப்பதுதான் அசாத்தியமாய்த் தோன் றிற்று. ஒன்றுக்கு, ச்மசான பூமியிலிருந்து இடது கால் பெருவிரலின் எலும்பு தேவை; மற்றொன்றுக் குக் காக்கையின் மூளை, அல்லது மாடப்புறாவின் ஹிருதயம் அவசியம்; இவ்விதமெல்லாம் இருந்தன.

கடைசியாக, உள்ள துக்குள்ளே சுலபமான ஒரு பிரயோகத்தைக் கண்டுபிடித்தார். “ஸ்வாத் யாம் ஒளடும்பரம் வ்ரத்நம்” என்று ஆரம்பிக்கும் சுலோகத்தின் பிரகாரம், ஓர் அத்திமரத்தின் மேல்  முளைத்திருக்கும் புல்லுருவிக் கொடியைச் சுவாதி நக்ஷத்திர தினமன்று பிடுங்கிக் கொண்டுவர வேண்டும், அவ்வளவுதான். மற்றச் சாமான்கள் எளிதில் கிடைக்கக்கூடியவையாக இருந்தன.

ஆனால் அந்தப் புல்லுருவிக்கு எங்கே போவது? அநேக அத்தி மரங்களின் மேல் தேடி னார். ஒன்றிலாவது ஒரு புல்லுருவியின் தளிர்கூட இல்லை. புல்லுருவி தாராளமாய்க் கிடைத்தது. ஆனால் வேறு ஜாதி மரத்தின் மேல் படர்ந்ததாக இருந்தது. இந்தக் கஷ்டத்தில் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

இக்காலத்தில் எல்லாவற்றிற்கும் விஞ்ஞானிகளின் உதவியே நமக்கு வேண்டியிருக்கிறது அல்லவா? ஜனங்களை ரக்ஷிக்கக்கூடிய ‘பென்ஸில் லின்’ மரு. தாகட்டும், த்வம்ஸம் செய்யக்கூடிய அடாமிக் வெடி ‘ யாகட்டும், விஞ்ஞானிகளே நமக்குக் கதி.

இதை அனுசரித்து அவர், விருட்ச சாஸ்திரத் தில் நிபுணனான தன்னுடைய மருமகனைப் பிடித் தார். ஏதோ ஒரு மருந்துக்கு அந்தப் புல்லுருவி தான் அவசியமென்று அவனிடம் சாதித்து அவனு டைய அனுதாபத்தைச் சம்பாதித்தார். அதன் மேல் அவன் இவருடைய செலவில் பல தந்திரங் களை உபயோகித்து ஓர் அத்தி மரத்தின் மேல் ஒரு புல்லுருவியைப் படரச் செய்துவிட்டான். அதுவும் வேர் யாதொன்றுமில்லாமலே அந்த மரத்தில் ஓடும் ஜீவசக்தியே ஆகாரமாய் உட்கொண்டு வளர்ந்தது. அதைக் கண்ணுக்குக் கண்ணாகக் காப் பாற்றி வந்து, ஒரு சுவாதி நக்ஷத்திர தினத்தில்,

நியமித்த தூபதீபங்களுடன் ஆராதனை செய்து, பறித்தார். பிறகு சாஸ்திரோக்தமாக ஸ்வர்ணம் 10 பங்கு, தாமிரம் 12 பங்கு, வெள்ளி 16 பங்கு கூட்டி உண்டாக்கிய உலோகத்தினால் ஒரு நண்டு வாய்க்காலியின் உருவத்தில் இடுக்கு, கொடுக்கு சகிதம் செய்யப்பட்ட கவசத்தில் அடைத்து விட்டார்.

இனிமேல் எல்லாம் சுலபம். அந்த நண்டு வாய்க்காலியை, வீட்டின் பூஜை அறையில் சுவாமி சந்நிதியில் வைத்துவிட்டு, ஓம் நமோ பகவதே, உட்டாமரேச்வராய” என்று தொடங்கி ட்: ட: என்று முடியும் சிறிய மந்திரத்தை ஒரு லட்சம் தடவை ஜபிக்கவேண்டியதுதான். சரியாக இருபத்தாறு நாளில் ஜபித்து முடித்தார். உள்ளே அடைபட்டிருக்கும் புல்லுருவியின் வேகத்தால் கவ சம் நன்றாய்க் கறுத்துவிட்டது.

இருபத்தாறாம் நாள் இரவு படுக்கப் போகும் பொழுது, “ஜபம் முடிந்துவிட்டது. நாளைக்குச் சுவாதி நக்ஷத்திர மாகையால், நாளைக்கே எப்படி யாவது அந்த வேலிக்குள்ளாகப் போய், அவ னுடைய நிலத்தில் எங்கேயாவது ஒரு சாண் ஆழத் தில் குழி பறித்து அந்த நண்டுவாய்க்காலியைப் புதைத்துவிட்டு வர வேண்டியதுதான் பாக்கி” என்று தம் பார்யையிடம் தெரிவித்தார்.

“அவன் துஷ்டனாச்சே. பார்த்துவிட்டால், வாங்கும் பழியைப் பிரமாதமாய் வாங்கிவிடுவானே என்று எனக்குப் பயமாயிருக்கிறது. நீங்கள் போக வேண்டாம். தைரியசாலியான, ஒரு கெட்டிக்காரக் குடியானவனை அனுப்புங்களேன்” என்றாள் ராதையம்மாள்.

“எதற்காகப் பயம்? நான்தான் பகவான் ஸ்ரீ உட்டாமரேச்வரரை லட்சம் தடவை மந்திரம் பித்து வேண்டிக்கொண் டிருக்கிறேனே. அவர் என்னைக் காப்பாற்றமாட்டாரா, என்ன?” என்று தைரியமாகப் பேசினார். இருந்தாலும் அவருடைய மனசிலும் கவலையும் குழப்பமுந்தான். அவ்விதம் உறங்கப்போனவர், நாம் ஆரம்பத்தில் பார்த்தபடி, ஒரு ஸ்வப்பனத்தைக் கண்டுவிட்டு, தம் பத்தினியை எழுப்பி, அதை அவளிடம் சொல்லத் தொடங்கினார்:

“நான் என்ன கனாக் கண்டேன், தெரியுமா? நான் பாதி ராத்திரியில் விழித்துக்கொண்டமாதிரி தோன்றிற்று. அப்போது திடீரென்று என் மன சில் ஒரு யுக்தி புலப்பட்டது. பஞ்சாங்கத்தின்படி ராத்திரி 42 நாழிகை வரைக்குந்தான் சித்திரை நக்ஷத்திரம். அதற்கு மேல் சுவாதி ஆரம்பித்துவிட் டது. ஆகையால், இப்போதே இருட்டில் போய் அந்தக்கவசத்தை அவனுடைய தோட்டத்தில் புதைத்துவிட்டு வருகிறதுதானே நல்லது? இப்படித் தோன்றியவுடன், எழுந்திருந்து கவசத்தையும் ஒரு சிறிய மண்வெட்டியும் எடுத்துக்கொண்டு புறப் பட்டேன். கதவை ஓசைப்படாமல் திறந்து கொண்டு கிளம்பினேன். தூற்றல் தூறிக்கொண்டு இருந்தது. குழி பறிப்பதற்கு அது சௌகரியமாகத் தானே இருக்கும். அமாவாசை இருட்டு. இரண்டு மரங்களின் இடுக்கு வழியாக நுழைந்து அப்புறம் சேர்ந்தேன். அவசரம் அவசரமாகக் குழி பறித் தேன். கவசத்தின் முகத்தை, நரசிம்மன் வீட்டில் அவன் தூங்கும் உள்ளைப் பார்க்கும்படியாகப் புதைத்துவிட்டு, போனது போலவே நிச்சப்தமாகத் திரும்பி வந்து படுத்துக்கொண்டு கவலையற்றுத் தூங்கிப் போய் விட்டேன். இதுதான் என்னுடைய சொப்பனம். இப்போது எனக்குத் தோன்றுகிறது என்னவென்றால், இந்தமாதிரி ஒரு கஷ்டமுமில்லா மல் செய்துவிடலாமென்று வழி காட்டுவதற்கா கவே, ஸ்ரீ உட்டாமரேச்வரர் இந்தச் சொப்பனத் தைக் காணச் செய்திருக்கிறார். ஆகையால் நான் இப்படியே செய்யவேணும். இன்னும் இருட்டுக் கருக்கலாக இருக்கிறது. புறப்பட்டுவிடட்டுமா?” என்று கேட்டார்.

இதைக் கேட்டுக்கோண்டே விளக்கை ஏற்றின அந்த அம்மாள், “இதென்ன! உங்கள் காலெல்லாம் சேறு பட்டமாதிரி இருக்கு! உங்கள் கையிலும் மண்ணு ஒட்டிக்கொண்டு இருக்கு! உங்கள் வேஷ்டி யும் ஈரமாயிருக்கே!” என்று ஆச்சரியப்பட்டாள்.

அவருக்கோ, தம்முடைய ஆச்சரியத்தை வெளியில் சொல்லிக் காட்டுவதற்குக்கூடச் சக்தி இல்லை. பேந்தப் பேந்த விழித்தார். அந்த அம்மாளுக்கு ஓர் எண்ணம் தோன்றி, அடுத்த அறைக்குப் பாய்ந்து போய்த் திரும்பிவந்து, “சுவாமி சந்நிதியில் கவசத்தைக் காணோம். நீங்கள் கனாத்தான் கண்டீர் களா, அல்லது இப்போ சொன்னமாதிரி யெல்லாம், காரியத்தையே முடித்துக்கொண்டு வந்தூட்டீர்களா?” என்று கேட்டாள்.

அவர், பாவம், என்ன பதில் சொல்லுவார்! “எல்லாம் ஸ்ரீ உட்டாமரேச்வரருக்குத்தான் வெளிச்சம். அவருடைய செயல்தானே எல்லாம்!” என்றார்.

அச்சமயத்தில் வீட்டு வாசற்கதவை வேலைக் காரன் தட்டுகிற சப்தம் கேட்டு, கதவைத் திறக்க அந்த அம்மாள் எழுந்து போனாள். அதைத் திறந்து “என்ன சமாசாரம்?” என்று விசாரித்தாள்.

“என்ன கேட்டீங்களா! அடுத்த வீட்டு ஐயா ராத்திரி உறங்காமலே படுக்கையிலே விழிச்சிக்கிட்டு இருந்தாங்களாம். அவுங்க தோட்டத்திலே யாரோ திருடன் வந்து என்னத்தையோ புதைச்சானாம். நல்லாப் புதைச்சூட்டு போவட்டும் என்னு ஒன்னும் சொல்லாமலே கம்மென்னு இருந்தாங்களாம். அவன் புதைச்சூட்டு, வேலிக்குள்ளாலே நம்ம தோட்டத்தின் வழியாகத்தான் போனானாம். அப் பறம், அந்தப் புதையலைத் தான் எடுத்துக்கலாம் என்னு அந்த ஐயா ரகசியமாய்ப் போய் அதே இடத்தில் தோண்டிப் பார்த்தாங்களாம். அப்போ அந்த வேலியிலிருந்த ஒரு கறுத்த நண்டுவாக்களி ஐயா சோத்துக் கையிலே நன்னாப் பிடுங்கிடுச்சாம்” என்றான்.

“அப்புறம் என்ன ஆச்சு?”

“என்ன ஆவறது, மந்திரிச்சுப் பாத்தாங்களாம், மருந்து போட்டுப் பாத்தாங்களாம். கேக் கலே; அப்பறம் ஊரிலே பெரிய டாக்டர் வந் திருக்காரு, இப்போ. அவர் சொல்றாராம். இந்த மாதிரி விஷம் அவர் கண்டதேயில்லையாம். கைக் குள்ளே புரையேறிக்கிட்டே போயிடுத்து. ‘கஸ்பா ஆஸ்பத்திரிக்கு இப்பவே கொண்டு போய், சோத் துக்கையை ஜாடாவா வெட்டி எடுத்துடணம். அப் புறங்கூட ஒரு வருஷத்துக்கு, நீரு, வயக்காடு, ஆத்தங்கரை இல்லாமே கட்டாந்தரையாய்க் காஞ்சு கிடக்கிற இடத்திலே போயிருந்தாத்தான் சயரோ கம் இல்லாமே சௌக்கியமாய்ப் போவும்’னு சொல் றாராம். இப்போ ஐயாவை எடுத்துக்கிட்டுப் போறாங்க.’

ராதையம்மாள் சற்று நேரம் பிரமித்து நின்று விட்டு, அங்கிருந்தபடியே, “சீனன் சொல்றது உங்க ளுக்கு எல்லாம் கேட்டுதா?” என்றாள்.

“நன்றாய்க் கேட்டது” என்றார்.

கிராமம் முழுவதும் நல்லவர் என்று பெயர். எடுத்திருந்தும், அவருடைய குரலில் கொஞ்சமாவது பச்சாத்தாபம் த்வனிக்கவில்லை.

அவர் மேலும் சொன்னார்: “சரி, இப்பொழுது உச்சாடன மந்திரம் பலிக்கிறது என்று நிச்சயமாய்ப் போய்விட்டது. அடுத்தாப்போல், வசீகரண மந்திரத்தையும் ஒரு ஆசை பார்த்துவிடலாம்; எங்கே, அந்தப் புஸ்தகத்தைக் கொண்டுவா!” என்று.

“சரித்தான், போங்கோ” என்றாள் அந்த அம்மாள்.

– கொனஷ்டையின் கதைகள், முதற் பதிப்பு: மே 1946, புத்தக நிலையம், திருச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *