மத்தியதர வர்க்கத்து அண்ணாச்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 19, 2013
பார்வையிட்டோர்: 12,042 
 
 

ராமசாமி அண்ணாச்சியிடம் இருந்து, அவரது மகனுக்குக் கல்யாணம் என்று திருமண பத்திரிகை லக்னோ அலுவலகத்துக்கு வந்திருந்தது. உடனே அண்ணாச்சி எங்க அகக்கண்களில் அப்படியே சதையும் உயிருமாய் விரிந்தார்.

அவர் இங்கிருந்து போய் ஒரு பத்து வருசம் இருக்குமா? இருக்கும்.. இங்கிருந்து போவதற்கு முன்னாடி, அவர் அந்தக் கடைசி வாரம் செய்த ரகளை, ஒரு காவியத்தன்மைக் கொண்டது..

முதலில் ஒரு கடுதாசியுடன் ரீஜினல் மேனேஜர் அறைக்குள் போனார். இந்த நரக வேதனை வேண்டாமென, வாலண்டரி ரிடையர்மெண்டல் போக, அப்ளிகேசன் கொடுக்கப் போறார் என நாங்க எல்லாம் நெனைச்சுகிட்டு இருந்தோம்.

அண்ணாச்சி திரும்பி வந்தப்ப, மொகம் முழுசும் பூரிப்பு. லக்னோவுக்கு டிரான்ஸ்பரில் வந்தப்ப, தமிழ்நாட்டிலேயே முழுசுமாய் தொலைச்சுட்டு வந்த சந்தோசம் எல்லாம் திரும்பி வந்தது போல, ஒரு உப்புதல் முகத்தில்.

அண்ணாச்சி வாலண்டரி ரிடையர்மெண்டல் போகப் போறார். நிரந்தரமா நம்பளை விட்டுப் பிரியப் போறார் என நினைச்சப்ப, வருத்தமாதான் இருந்தது. ஆனாலும் என்னச் செய்ய?

வெளியே வந்தவர், தனது சட்டையைக் கழற்றி, தலையைச் சுற்றி விட்டெறிந்தார். அது பைல் அடுக்கு மேலே போய் விழுந்தது. “இனி இவன்க என்னைப் பத்தி விட்டுருவான்க, அப்பு!” என்றார். எல்லாத்துக்கும் தயாரா ஆயிட்டார் போலிருந்தது.

தொடர்ந்து இந்தக் கம்பெனியில் தான் குப்பைக் கொட்டிய பதினைஞ்சு வருச சர்வீஸை நினைத்து டயோனசர் போல் பெருமூச்செறிந்தார்.

“இந்தக் கம்பெனியை மறுபடியும் பொதுநிறுவனமா மாற்றிடுங்கோ!” என்று விண்ணப்பம் கொடுத்திருக்கேன் என்றார். எங்களால் நம்ப முடியவில்லை.

###

முதலில் எங்கள் நிறுவனம் பொது நிறுவனமாய்தான் இருந்தது. திடீரென ஒருநாள் அது தனியார் நிறுவனமாய் மாறி விட்டது. தொழிற்துறை அமைச்சர் ஒருத்தர், அடிமாட்டு விலைக்கு, கம்பெனியின் அரசின் பங்குகளை, ஒரு தொழில் அதிபருக்கு விற்று விட்டார்.

“அரசு தன் பங்குகளைத் தனியாருக்கு விற்கக் கூடாது” என நாங்கள், அதை எதிர்த்தோம். ராமசாமி அண்ணாச்சி, பால்வள அமைச்சர் திரு.செ.பா.குப்புச்சாமி அவர்கள் சிபாரிசின் பேரில் எங்கள் நிறுவனத்தில் அசிஸ்டெண்டாய் வேலைக்குச் சேர்ந்தவர். அமைச்சரின் சிபாரிசின் பேரில் கம்பெனியில் சேர்ந்தவர் ஆதலால், ராமசாமி அண்ணாச்சி எங்க நிறுவனம் தொடர்ந்து அரசு நிறுவனமாக நீடித்து இருப்பதில்தான் ஆர்வம் காட்டுவார், எங்களை ஆதரிப்பார் என எல்லோரும் நம்பினோம். ஆனால் இந்த அண்ணாச்சியோ, நாங்கள் எதிர்ப்பதைப் படுபயங்கரமாய் எதிர்த்தார். “எந்தக் கவர்ன்மெண்ட் கம்பெனி இலாபத்துலே ஓடிச்சுது? எல்லாத்தையும் பிரைவேட்காரன்கிட்டே கொடுத்ததாதான் நாடு முன்னேறும்,” என்றார். அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை, அதற்கு மேலேயும் போய், எங்கக் கம்பெனி மட்டும் இல்லாமல், இந்தியாவில் உள்ள அத்தனைக் கம்பெனிகளையும் பிரைவேட்டில் கொடுத்து விட வேண்டுமென, ஒரே போடாய் போட்டார்.

தனியார்துவப்படுத்துவதற்கு இவ்வளவு ‘சின்சியராக’ நின்ற ராமசாமி அண்ணாச்சிக்கு, எங்கக் கம்பெனி பிரைவேட் ஆனதும், நன்றிக்கடனாய் ‘பைனான்ஸ் ஆபிசர்’ பதவி உயர்வு தருவதற்குச் சம்மதித்தது. அண்ணாச்சி இதனால் புளங்காகிதம் அடைந்து போனார். “கடுமையான உழைப்பாளிகளை மதிக்கும் பழக்கம் பிரைவேட் மேனேஜ்மெண்ட்க்கு மட்டும்தான் உள்ளது. பதினைஞ்சு வருசமா இந்தக் கம்பெனியில் குப்பைக் கொட்றேன். ஆபிசர் புரொமோசன் இல்லை. ஆபிசர் புரொமசனுக்குச் சீனியாரிடினு சொல்லி, பணி உயர்வே தராம இழுத்தடிச்சிட்டான்ங்க..” என்று தகித்துப் போய், குரல் குளறச் சொன்னார்.

ஆனால் அந்தப் புரொமசனைத் தருவதற்கு, நிர்வாகம் அண்ணாச்சிக்கு ஒரு கண்டிசன் போட்டது. “நீங்க லக்னோ போய் டூட்டி சேரணும். சேர்ந்த மூணாம் மாசம் புரொமசன்தான்” என்று ஆசை வார்த்தைக் காட்டியது.

“நான் பிகாமில் ‘கன்சோலேசன் பாஸ்’ (எல்லா பாடத்திலும் பாஸ் பண்ணியிருந்தாலும், ஒரேயொரு சப்ஜெக்டில் மட்டும் ஒரு மார்க்கில் பெயில் ஆகியிருந்தால், கன்சோலேசன் பாஸ் பண்ணுவார்கள்) ஆனவன். ஆனாலும் அதையெல்லாம் பெரிசுப் படுத்தாமல், எனக்கு வேலையும் கொடுத்து, பைனான்ஸ் ஆபிசர் பதவி உயர்வும் தரப்போறாங்கன்னா, எவ்வளவுப் பெரிய மனசு இந்தக் கம்பெனி முதலாளிக்கு,” என்று புல்லரித்துப் போனார்.

அண்ணாச்சி லக்னோவிற்கு ஜாகையை மாற்றிச் செல்லும் போது, அண்ணி கூட வர மறுத்து விட்டார்கள். “நான் கொழந்தைகளை இங்கினியே மெட்ராஸிலேயே படிக்க வச்சுட்டு இருந்துடறேன். நீங்க ரெண்டு வருசம் லக்னோவில் குப்பைக் கொட்டிட்டு, புரொமசனையும் வாங்கிட்டு, சீக்கிரம் தமிழ்நாடு திரும்பி வர பாருங்கோ,” என்று அறிவுறுத்தி, அண்ணாச்சியை வழி அனுப்பி வச்சாங்க. நல்லபடியா அண்ணாச்சி புரொமசனும் வாங்கி, தமிழ்நாட்டுக்கும் காலக்கிரமத்தில் திரும்பி வந்துட்டா, பழனிக்கு வந்து, அண்ணாச்சிக்கு மொட்டை அடிக்கிறதாக அண்ணி வேண்டி கிட்டாங்க..

ராமசாமி அண்ணாச்சி லக்னோ வந்ததும், கூவ ஆரம்பித்து விட்டார். “இந்த நார்த் இண்டியன்ஸ் எப்படிதான் இந்த வறட்டு ரொட்டியைத் தின்னுட்டு உசிரோடு இருக்காங்க என்பது எனக்குப் புரிய மாட்டேங்குது. இவங்க இந்த ஆலுவைத் தின்னுட்டு, விடுற நாத்தம் தாங்க முடியலைப்பா..” என்று வருத்தப்பட்டார். அண்ணாச்சி சரியான மத்தியதர வர்க்கத்துக் கட்டை. அவருக்கு எப்பவுமே, காலையில் இட்லி, தோசை என்று பலகாரம் வேணும். இது தவிர, லக்னோ சீதோஷ்ணமும் கொடுமை. ஒண்ணு ரொம்ப வெயில்.. இல்லைன்னா குளிர். இடையில் மொச்சைக்கொட்டை சைஸிக்குக் கொசுக்கள் வேறு.

அண்ணாச்சி “எனக்குப் புரொமசனும் வேண்டாம், ஒரு மசிரும் வேண்டாம். என்னைத் தமிழ்நாட்டுக்கே விட்டுடுங்கடா, சாமி” என்று, லக்னோ வந்த ரெண்டாம் மாசமே தமிழ்நாட்டில் உள்ள மேனேஜர்மார்களிடம் எல்லாம் கண்ணீர் உகுத்து வேண்டிக் கேட்டார். “இது ஒண்ணும் கவர்ன்மெண்ட் கம்பெனி கிடையாது, நெனைச்ச எடத்துலே இருந்து, நெனைச்ச வேலையைப் பார்க்க..” என மேனேஜர்மார்கள் அண்ணாச்சியை எச்சரித்து, ‘முடியாது’ என்று ஒற்றை வரியில் சொல்லி விட்டார்கள்.

அத்துடன் அண்ணாச்சியை விட்டு இருந்தால் பரவாயில்லை. அதிர்ச்சி தரும் வகையில் அண்ணாச்சி லக்னோ வந்து மூணு மாசம் ஆகியும் புரொமசன் தரலை. ‘அண்ணாச்சி இங்கிலிஷ்லே ரொம்ப வீக்காம்.. ஆபிஸரா ஆகணும்னா, இங்கிலிஷை இம்பூரு பண்ணணும்’ என்று சொல்லி, நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட எங்கப் பர்சனல் துறையின் பொது மேலாளர் அண்ணாச்சிக்கு ஒரு மெமோ கொடுத்தார்.

‘உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா’ கதையாகிப் போச்சுன்னு ராமசாமி அண்ணாச்சி அதிர்ந்து போனார். ‘இது ஒரு பிரைவேட் கம்பெனியா ஆகிப்போச்சுது. அதான் சாந்தமா இருக்கேன்.. இருந்தாலும் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு..’ என்று மிரட்டும் தொனியில் தான் சாந்தமாய் இருப்பதற்கு காரணம் சொன்னார் அண்ணாச்சி. குமுறிப் போய் ஏதோ ஒண்ணு பண்ணப் போறார் என்று, அவர் குமுறப் போகும் நாளை, நாங்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

###

லக்னோவுக்கு ஜீ.எம். வந்தார். அண்ணாச்சி அவரிடம், “உங்ககிட்டே பத்து நிமிசம் பேசணும்,” என்று நேரம் கேட்டு உள்ளே போனார். ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்ற பழமொழியை நினைச்சுட்டு, ஐம்புலன்களையும் தீட்டி வைத்துக் கொண்டு, நடப்பதைக் காண காத்திருந்தோம்.

அண்ணாச்சியோ ஜீ.எம்.மே எதிர்பார்க்காத வகையில் அவர் காலில் விழுந்து குலுங்கி அழுதார். “நான் வேணா உங்க ஷீவை, நாக்காலேயே நக்கிப் பாலிஷ் பண்றேன். எனக்குப் பைனான்ஸ் ஆபிசர் புரமோசன் கொடுத்துடுங்கோ.. கொடுக்காட்டா, நான் தமிழ்நாட்டுப் பக்கம் தலை வைத்துப் படுக்க முடியாது. நான் இந்தக் கம்பெனியில் இவ்வளவு நாளும் கட்டிக் காப்பாற்றி வச்சிருந்த மானம் மரியாதை எல்லாம் காற்றில் பறந்துடும்,” என்றார். அவர் விட்டக் கண்ணீரில், ஜீ.எம். நெகிழ்ந்து போனார்.

இது நடந்த அடுத்த வாரமே, ஜீ.எம்.க்கு ராமசாமி அண்ணாச்சியின் ஆங்கிலம் இம்பூருவ் ஆகியிருப்பது புரிந்து போனது. அவருக்குப் பைனான்ஸ் ஆபிசர் புரமோசனுக்கான ஆர்டரை அனுப்பி வைத்தார். “புரமோசன் ஆர்டரில் என் பேரையாவது, ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம அடித்திருக்கலாம்,” என அண்ணாச்சி விசனப்பட்டார்.

அண்ணாச்சி பைனான்ஸ் ஆபிசரானதும், முதலில் செய்த காரியம் கேம்பிரிட்ஸ் ஸ்போக்கன் இங்கிலிஷ் கோர்ஸ்சில், மூன்று மாசத்துக்கு ரூபாய் 1200 பணம் கட்டிச் சேர்ந்ததுதான். அடுத்த தடவை ஜீ.எம். லக்னோ வரும்போது, அஞ்சு நிமிசம் இங்கிலிஷிலேயே பேசி, அவரை அசத்தணும் என்று அவருக்கு உள்ளூர எழுந்த பேராசைதான், இந்தக் கோர்ஸில் அண்ணாச்சி சேர்வதற்கான காரணம்.

ஸ்போக்கன் இங்கிலிஷ் வகுப்புகளில் இங்கிலிஷில்தான் பேசணும் என்று ரொம்ப கண்டிப்பாகச் சேரும் போதே சொல்லி அண்ணாச்சிகிட்டே கையெழுத்துக் கூட வாங்கிக் கொண்டார்கள். அப்படி பேசாட்டால், அபராதம் கட்டணுமாம். ராமசாமி அண்ணாச்சியும் ஸ்போக்கன் இங்கிலிஷ் கோர்ஸ்க்குப் போய், ஒவ்வொரு நாளும் 20 ரூபா முதல் 25 ரூபா வரை அபராதம் கட்டி வந்ததுதான் மிச்சம். அவருக்கு இங்கிலிஷ் வராதது மட்டுமல்ல, ஏற்கனவே உள்ள தமிழும் கூட மக்கர் பண்ண ஆரம்பிச்சுது.

எங்களுக்கு இது அநியாயமாய் தெரிந்தது. கொதித்துப் போன நாங்கள் நேரா ஒருநாள் அந்த ஸ்போக்கன் இங்கிலிஷ் நடத்தும் பிரின்ஸ்பாலிடமே போய் வாங்கு வாங்கு என வாங்கி விட்டோம். பிரின்ஸ்பாலோ, “ராமசாமி இங்கிலிஷ்லே பேசாம, இந்தியில்தான் பேசறார்,” எனச் சத்தியம் செய்தார். “ராமசாமிக்கு எப்படி இங்கிலிஷ் தெரியாதோ, அப்படி இந்தியும் தெரியாது.” நாங்க போட்டப் போட்டில், அந்தப் பிரின்ஸ்பால் வெவெலத்துப் போனார்.

###

ராமசாமி அண்ணாச்சி பைபான்ஸ் ஆபிசர் புரமோசன் கிடைத்ததும், நிறைய வேலைச் செய்தார். அவருக்குத் தான் செய்யும் வேலையில் என்றுமே நிறைவு ஏற்படுவது இல்லை. அவர் ஆபிசராய் ஆகியிருந்தாலும், உணர்வு நிலையில் இன்னும் ஸ்டாபாகவே இருந்தார். ஆகவேதான் தான் செய்த வேலையில் ஏதும் தப்பு இருக்கா என்று ஸ்டாப்புகளிடமே கொடுத்துச் செக் செய்யச் சொன்னார். எல்லா ஆபிஸ் ஸ்டாப்புகளும் இவருக்கு ஆபிசர் புரமோசன் கொடுத்ததே தண்டம் என உள்ளுக்குள் புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

மெட்ராஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து, அண்ணாச்சி ரெகன்சைல் பண்ணி அனுப்பிய இம்பிரஸ்ட் அக்கெளண்டில் கூட்டலில் கூட தப்பெல்லாம் இருக்குது என்று சுட்டிக் காட்டி கடிதம் அனுப்பி இருந்தார்கள். நாங்கள் அண்ணாச்சிக்கு மெமோ ஏதாவது கொடுத்துடுவாங்களோ என்று பயந்து கிடந்தோம். ஆனால் பர்சனல் டிபார்ட்மெண்ட் காரர்கள் பைனான்ஸ் ஆபிசர்கள் கூட்டல்களில் தப்புச் செய்தால் பரவாயில்லை என்று நினைத்தார்களோ என்னவோ, கண்டு கொள்ளாமலேயே விட்டு விட்டார்கள்.

###

லக்னோவில் எங்க ஆபிஸிக்குப் பக்கத்தில், புதன்கிழமை தோறும், ஒரு சந்தை நடைபாதையில் கூடும். ‘வெனேஸ்டே மார்க்கெட்’ என்று அதை நாங்கள் அழைப்போம். அண்ணாச்சியோ லக்னோவைப் பொறுத்த வரை தனிக்கட்டை. வெனஸ்டே மார்க்கெட்டில் வாங்க வேண்டிய சரக்கு என்று அவருக்கு ஒன்றும் இல்லை. இருந்தாலும் கிழமைத் தவறாமல் அவர் அங்கே போய் விடுவார். போய், அங்கு வரும் போகும் பொம்பளைகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார். “என்னையா இப்படி முழிச்சிப் பாத்திக்கிட்டு இருக்கே, காணாததைக் கண்ட மாதிரி..” என்று ரப்பர் வளையல் விற்கும் லம்பாடிப் பொண்ணு ஒருமுறை அண்ணாச்சியைப் பார்த்துக் காறித் துப்பினாளாம்.

எங்க ஆபிஸ் அட்டெண்டர் ஒருத்தன், அண்ணாச்சி பண்ணும் அதே காரியத்தைப் பண்ணதான், அவனும் மார்க்கெட்டுக்குப் போவான். அவன் இதைப் பார்த்து வந்து, தான் ஏதோ யோக்கியன் போல, அண்ணாச்சியின் யோக்கியத்தையைப் பரப்பிக் கொண்டிருந்தான். நாங்கள் அனைவரும் அவரது முதுகுப்பின்னாடி நின்று கொண்டு, அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தோம்.

###

அண்ணாச்சி புரமோசன் வாங்கி ஒரு வருடம் முடிந்து விட்டது. அடுத்த வருசம் டிரான்ஸ்பர் செய்வதற்கான லிஸ்டை மேனேஜ்மெண்ட் தயாரிப்பதாக அண்ணாச்சி எப்படியோ கேள்வி பட்டு விட்டார். லீவு போட்டுட்டுச் சென்னைத் தலைமை அலுவலகம் சென்று, தவம் கிடந்து, எப்படியாவது தன்னைத் தமிழ்நாட்டுக்கு உடனடியாக ரீடிரான்ஸ்பர் செய்யுமாறு வருவோர் போவோரிடம் எல்லாம் கெஞ்சிக் கேட்டார்.

ஜீ.எம். அவரைப் பார்த்ததும், வழக்கம் போல் நெகிழ்ந்து விட்டார். “பார்க்கலாம்,” என்று சும்மாவுக்கும் சொல்லி, அவரை மெட்ராஸ் ஆபீஸை விட்டு அனுப்பி வைத்தார். அதைச் சத்தியவாக்காய் எடுத்துக் கொண்ட அண்ணாச்சி, திருநெல்வேலியில் இருந்து, திருச்செந்தூருக்கு முருகனுக்கு அலகுக் குத்தி நடந்தே போய் காணிக்கைச் செலுத்தி வந்தார்.

லக்னோ திரும்பிய அண்ணாச்சிக்கு ஒரு இக்கட்டு. எங்களிடம் உரம் வாங்கி தவணைக் கட்டாதவர்களுக்குக் கட்டாத தவணைத் தொகைக்கு வட்டி வசூலிக்க பிராது அனுப்ப வேண்டும். அது பைனான்ஸ் ஆபிசர் வேலைதானாம்.

ஆனால் எங்க ரிஜீனல் மேனேஜரோ பிராது அனுப்ப வேண்டாம் என அண்ணாச்சியிடம் கேட்டுக் கொண்டார். வட்டி வசூலிக்கப் பிராது அனுப்பினால், அசலை வசூலிப்பதில் கூட பிரசினை வரும் என்பது அவரது வாதம். அண்ணாச்சி லக்னோவை விட்டுப் போகும் போது, எதற்கு ரிஜீனல் மேனேஜரிடம் மோதிக் கொள்ள வேண்டுமென கருதி, பிராது அனுப்பவில்லை.

அந்தவருட டிரான்ஸ்பர் லிஸ்டில் அண்ணாச்சி பெயர் வரவில்லை. ‘வட்டியைப் பிராது அனுப்பி வசூலிக்காத குற்றத்தினால்தான், அண்ணாச்சியின் டிரான்ஸ்பரைக் கன்சிடரே செய்யவில்லை’ என்று நிர்வாகத் தரப்பு வதந்திகள் கசிந்து வந்தன. இனி அண்ணாச்சி தமிழ்நாடு பக்கமே போக முடியாது எனச் சிலர் பேசிக் கொண்டார்கள். ஒருவர், “பேசாமல் ஒரு நேபாளச்சியைக் கல்யாணம் பண்ணிட்டு, உ.பி.யிலேயே செட்டில் ஆயிடுங்கோ, அண்ணாச்சி!” என அறிவுரைக் கூறினார்.

அண்ணாச்சி ஒவ்வொரு நாளையும் கடத்துவதற்கே கஷ்டப்பட்டார். பிரைவேட் கம்பெனியில் ஒவ்வொரு மூச்சு இழுப்புக்கும் கஷ்டப்பட வேண்டி இருக்கிறது என வருந்தினார். மாறுதலுக்காக எங்காவது போய் வரலாம், வேறு எதாவது மாற்றிச் செய்யலாம் எனச் சிந்தித்தார்.

எங்கள் அபிஸிக்குப் பக்த்து பில்டிங்கில் ஒரு என்.ஜி.ஓ. ஆபிஸ் இருந்தது. அவர்கள் வாரத்திற்கு ஒருமுறை ஜெயிலுக்குப் போய், ஜெயிலில் உள்ளவர்களின் குறைகள் என்னெவனப் பார்த்து, அதை முடிந்த அளவுக்கு நிவர்த்தி செய்வார்கள். அதற்கான நிதி அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வருகிறது. அண்ணாச்சி அவர்களுடன் நண்பர்களாகி, அவர்களுடன் ஒரு ஜெயில் விசிட் போய் வரலாம் என முடிவு செய்தார். அப்போதாவது மனம் வேறு திசையில் திருப்பப்படலாம், தனக்குச் சமாதானம் கிடைக்கலாம் எனக் கருதினார். அவர்களுடன் லக்னோ மத்திய சிறையைப் போய் பார்த்து வந்தார்.

வந்ததும், “அரசுச் சிறையில் இருப்பவர்கள், நம்ப கம்பெனியில் பணிபுரிபவர்களைக் காட்டிலும், சந்தோசமாயும் திருப்தியாகவும் உள்ளார்கள்,” என அறிவித்தார். நாங்கள் எல்லாம் அந்த உண்மைத் தெரிந்ததும், அதிர்ச்சி அடைந்தோம்.

###

தனது டிரான்ஸ்பரைக் கெடுத்தச் சண்டாளனாக ரிஜீனல் மேனேஜரைச் சபித்துக் கொண்டே, வட்டிக்குப் பிராது அனுப்ப முயற்சிகள் மேற்கொண்டார் அண்ணாச்சி. தனது உத்தரவை மீறி பிராது அனுப்பினால், மெமோ கொடுப்பேன் என ரிஜீனல் மேனேஜர் மிரட்டினார்.

உடனே அண்ணாச்சி சென்னைத் தலைமை அலுவலகத்து மார்கெட்டிங் பைனான்ஸ் துறையைப் பார்த்து, பிராது அனுப்ப வேண்டுமா வேண்டாமா எனத் தெளிவாக விளக்கம் அளிக்கும்படி கேட்டார். சென்னையில் இருந்து மழுப்பலான பதில்கள்தான் வந்தன. அசல் வசூலானதும் வட்டிக்குப் பிராது அனுப்புவது குறித்து விளக்கம் அளிப்பார்களாம். இருப்பினும், அண்ணாச்சி இவ்வளவு நாளும் வட்டி வசூலிக்கப் பிராது அனுப்பாதது பெரிய தப்புதானாம்.

அண்ணாச்சி இதுக்குப் பிறகு, அடிக்கடி லீவுப் போட்டுட்டுத் தமிழ்நாடு போய் வர ஆரம்பித்தார். பித்துப் பிடித்தது போல லக்னோ தெருக்களில் அலைந்தார். எல்லாத்துக்கும் உச்சமாய் ஒருமுறை எனக்கு ‘இயர்லி ரிடையர்மெண்ட்’டாவது கொடுத்து வீட்டுக்கு அனுப்பிடுங்களேன் என்று கூட கதறினார். அண்ணாச்சிக்குத் தாக்குப் பிடிக்கும் சக்தி கம்மியாக இருப்பதாய் நிர்வாகத் தரப்பில் இருந்து குறைக் கூறினார்கள். இருப்பினும் அதற்கு மேல் அண்ணாச்சியை அவர்கள் கண்டுக் கொண்டதில்லை.

ஒரு தடவை தமிழ்நாட்டுக்குப் போன அண்ணாச்சி, எந்தத் தகவலும் கொடுக்காமல் பல நாட்களாக அலுவலகத்துக்கு அவராக வராமல் இருந்து விட்டார். அவருக்கு மனம் பேதலித்து விட்டது, அவரால் இனி வேலையே பார்க்க முடியாது என்ற தகவல்கள், லக்னோவுக்கு, மூன்றாம் சேனல்கள் வழியாக வந்து கொண்டிருந்தது.

இருப்பினும் நிர்வாகத் தரப்பில் இருந்து, அவரது சென்னை வீட்டுக்கே போய், அவரை எப்படியோ சமாதானப்படுத்தி, லக்னோவுக்கு மறுபடியும் கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள். அண்ணாச்சி மொட்டையடித்துக் கொண்டு அகோரமாய் வந்து சேர்ந்தார். திருப்பதிக்குப் பக்கத்திலுள்ள ஒரு சித்தரிடம் போய், மந்தரித்துப் போகர் தாயத்து ஒன்று கட்டி இருந்தார்.

###

அடுத்த வருடம், அண்ணாச்சி தமிழ்நாடு ரீடிரான்ஸ்பருக்கு, எந்தப் பிரத்யேக முயற்சியும் எடுக்கவில்லை. அப்படி முயல்வது வீண்முயற்சி என்று அவரது சிந்தைக்கு எட்டிவிட்டது. மொத்தத்தில் நிம்மதியற்று, அகத்திச் சித்தன் மாதிரி அமைதியை எங்கும் தேடிக் கொண்டு இருந்தார். “இப்படி எல்லாம் ஆகுமென தெரிந்திருந்தால், நான் சிபாரிசுக்காக செ.பா.குப்புசாமியிடம் போயிருந்திருக்க மாட்டேன். எங்க ஊர்லே பன்னி மேச்சுட்டு இருக்கிறவன் கூட, என்னோட சந்தோசமா இருக்கான்,” என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

###

எங்கள் நிர்வாகம் தனியாருக்கு மாறியதிலிருந்து, கம்பெனிக்குத் திறமையான ஆட்கள் வேண்டாம், லாயல் ஆனவர்கள்தான் வேண்டும் என்று, நிர்வாகத் தரப்பில் அடிக்கடி சொல்வார்கள். ஆனால் நிர்வாக நடவடிக்கைகள் நாங்கள் கம்பெனிக்கு லாயலாக இருக்கணுமா, இல்லை கம்பெனி முதலாளிக்குத் தனிப்பட்ட முறையில் லாயலா இருக்கணுமா என்பது தெளிவாக தெரியாத படி குழப்பும். முதலில் கம்பெனி முதலாளி, கம்பெனி எட்டணா லாபம் சம்பாதித்தால் கூட, அதிலிருந்தும் தனக்கு நாலணா தனிப்பட்ட முறையில் கமிஷனாக வர வேண்டும் என எதிர்பார்த்தார். கமிஷன் கிடைக்க வாய்ப்பில்லாத எந்த வர்த்தகத்தையும் அவர் உற்சாகப் படுத்துவதே இல்லை. நாளாக நாளாக, இந்த எதிர்பார்ப்பு மோசமான முறையில் வளர்ந்து, வித்தியாசமான பரிமாணத்தை அடைந்தது.

கம்பெனிக்கு எட்டணா நஷ்டம் வந்தால் கூட பரவாயில்லை, கம்பெனி முதலாளிக்கு தனிப்பட்ட முறையில் ஒரு ரூபா கமிஷன் கிடைக்கிறது என்றால், அந்த மாதிரி வத்த்தகத்தையும் ஊக்குவிக்கலாம் என்ற நிலை மாறியது.

மொத்தத்தில் இலாபத்தில் இயங்கிக் கொண்டிருந்த எங்கள் பொது நிறுவனம், பிரைவேட்டாகி நஷ்டப்பட்டதுதான் நடைமுறையில் நடந்தது. பேராசை பெருநஷ்டத்தில் கொண்டு போகும் என்பதை நாங்கள் எங்கள் சொந்த கண்களால் பார்த்தோம். எங்கக் கம்பெனிக்கு விழி பிதுங்கும் நிதி நெருக்கடி.

உடனே ஹார்வார்ட் யூனிவர்சிடியில் இருந்து கொஞ்சம் ஆட்களைப் பிடித்துக் கொண்டு வந்து, கன்சல்டிங் பீஸ் பல லட்சம் கொடுத்து என்னப் பிரசினை என்று ஆராய்ந்தார்கள். ஹார்வார்ட்காரன் எல்லாப் பிரசினையைத் தீர்க்கும் சர்வரோகநிவாரணியாக ஒரு பரிந்துரையை வைத்திருக்கிறான். ‘இயந்திராமாக்கு, ஆளைக் குறை..’ என்பதுதான் அவன் எப்போதும் கூறும் அறிவுரை. இதை முகத்தை ரொம்ப சீரியஸா வைத்துக் கொண்டு, நம்ப பைனான்ஸ் மினிஸ்டர் பெட்ரோல் விலையை ஏற்றியதைக் குறைக்க வழியே இல்லை என்பாரே, அதே ஸ்வரத்தில் சொல்வான்ங்க..

கடைசியாய் வாலண்டரி ரிடையர்மெண்ட் திட்டத்தை எங்க கம்பெனி யாரும் எதிர்பாராத தருணத்தில் அறிவித்தது. எங்க ரிஜீனல் மேனேஜர் நேரடியாகவே அண்ணாச்சியைப் பார்த்துக் கேட்டார். “நீங்கதானன் மொதலிலேயே இயர்லி எக்ஸ்டிலே போறதுக்குக் கேட்டீங்க? இப்ப நல்ல சான்ஸ். வாலண்டரி ரிடையர்மெண்டில் போயிட வேண்டியதுதானே?” என்றார். அண்ணாச்சிக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. இருந்தாலும், கட்டுப்படுத்திக் கொண்டு, சன்னமான குரலில் அவரைத் திருப்பிக் கேட்டார். “ஏன் இந்த நல்ல வாய்ப்பை, நீங்க பயன்படுத்திக் கொள்ளக் கூடாது?”

ரிஜீனல் மேனேஜர் கண்களில் கண்ணீர் துளிர்த்து விட்டது. “நானும் போய்ட்றேன் என்றுதான் சொன்னேன். ஓவர்டியூவைக் கலெக்ட் பண்ணாமல் போனால், வெட்டிப் போட்டுடுவேன் என்று சேர்மன் சொல்லிட்டார். ரிசைன் பண்ணிட்டு ஓடிடலாம் என்று பார்த்தால், கிரிமினல் கம்ளெயிண்ட் போலிசில் கொடுப்பாங்க போலிருக்குது..”

அண்ணாச்சி குமுறிப் போய், ஆபிஸ் முடியும் முன்பே அவரது அறைக்குப் போய் விட்டார். அவரைச் சமாதானப்படுத்த, நாங்க ரெண்டு பேர் அவர் பின்னாடியே ஓடினோம். அவர் குப்புற அடித்துத் தனது கட்டிலில் படுத்துக் கிடந்தார். போட்டு வந்த பேண்ட் ஷர்டைக் கூட கழற்ற வில்லை. ஏன்? ஷீவைக் கூட கழற்றவில்லை.

அவர் சகவாசகமாகட்டும் என சிறிது நேரம் காத்திருந்தோம். அவர் தகிப்பு அடங்கியதும், அண்ணாச்சிக்கு அறிவுறுத்தினோம். “ஆபிஸரா புரமோசன் வாங்கினப்பறம், நிர்வாகம் பண்ணும் அக்கிரமத்தை எல்லாம் எதிர்த்துக் குரல் கொடுத்துக் கேட்க முடியாது. இந்த தேவடியா பயன்ங்க எப்படியும் சாகட்டும்.. பேசாம வாலண்டரி ரிடையர்மெண்ட் வாங்கிட்டுப் போயிடுங்க…” பாந்தமாகச் சொன்னோம்.

அவர் திடீரென கோபத்துடன் எழுந்து உட்கார்ந்தார். “எனக்குப் போராட தைரியம் இருக்குது.. இவங்களை எங்கே அடிச்சா, பொட்டுனு விழுவாங்கனு எனக்குத் தெரியும்,” என்றார். பின்னர் போய், தனது பிரிட்ஷில் டீப் பிரிஸில் போட்டிருந்த பீரையும், ரம்மையும் எடுத்து வெளியே வைத்தார்.

###

அடுத்த நாள் அண்ணச்சியின் படம் லக்னோ டைம்ஸில் வந்திருந்தது. அண்ணாச்சி எங்கள் நிறுவனத்தை பொது நிர்வாகமாக மாற்றணும் என்ற கோரிக்கையுடன் விதான் சபா முன்னர் உண்ணாவிரதம் இருந்தாராம். சாயங்காலம் நாலு மணிக்கு யாரும் தன்னோடு பேச்சுவார்த்தைக்கு வராததால், தானே தனக்குப் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி தற்கொலை செய்து கொள்ள முனைந்தாராம். போலிஸ் தீயை அணைத்து, அவரைக் கைது செய்து வைத்திருந்தார்கள்.

நாங்க அண்ணாச்சி வேலை போய்விடும் என்று எண்ணிக் கொண்டிருந்தோம். ஆனா அன்னைக்கு ராத்திரி ரயிலிலேயே, தமிழ்நாட்டுக்கு மூட்டை கட்டி அண்ணாச்சியை அனுப்பிச்சிட்டாங்க.

இப்ப, அண்ணாச்சி எங்க சகோதர நிறுவனத்தில் பைனான்ஸ் ஆபிசரா எந்தச் சத்தமும் காட்டாமல், உட்கார்ந்திருக்கிறார். தமிழ்நாட்டில் அதுவும் அவரது வீட்டுக்குப் பக்கத்தில் சென்னையிலேயே இருக்கிறார்.

எப்படி இருந்தாலும் அண்ணாச்சி, போராடி தனது இலக்கில் ஜெயித்து விட்டார் அல்லவா? வாலண்டரி ரிடையர்மெண்டில் போகலையே…. வேலையையும் இழக்க வில்லையே? அண்ணாச்சிக்கு ஜெயம்தான்..

அண்ணாச்சியின் மகன் கல்யாணத்திற்குப் போகும் சாக்கில், ஒரு தடவைச் சென்னைச் சென்று அண்ணாச்சியைப் பார்த்து விடுவது என்று நான் முடிவு செய்தேன். அண்ணாச்சியோட அப்ப வேலைப் பார்த்த பெரும்பாலானவர்கள் சென்னை வரத் தயாராக இருக்கிறார்கள் என்பதே மனதுக்குச் சந்தோசமாக இருந்தது.

– வடக்கு வாசல் என்று தில்லியில் இருந்து வரும் பத்திரிக்கையில் பிரசுரமானது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *