மதுவிலக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 9, 2024
பார்வையிட்டோர்: 174 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தாமிரபரணி தன் தடக்கைகளை எட்டிய மட்டும் தொட் டுச் செழிப்பித்த தீரத்தில் உள்ளது மாவடி கிராமம். ஏறக் குறைய நூறு தலைக்கட்டுகள் கொண்டது. அந்த வட்டாரத்தி லுள்ள கிராமங்களில் எல்லாம் மாவடி கிராமத்தார் தான் வறுமை இன்னதென்றே அறியாமல் வாழ்ந்தனர். 

ஆற்றுப்பாய்ச்சலில் அறுவடை நடக்கும் போது, ஏரிப் பாய்ச்சலில் நடுகை மும்முரமாக இருக்கும். நதி தீர நஞ்சை களில் புழுதி உழவு நடந்துகொண்டிருந்தால் ஏரி கழனிகளில் களைபறியில் பெண்கள் ஈடுபட்டிருப்பார்கள். ஆக, ஆண்டு முழுவதிலுமே மாவடிவாசிகளுக்கு உழைப்பு இருந்துகொண்டே இருக்கும். 

களைபறி முடிந்து சூல்கொண்ட நெற்பயிர் இப்போதோ சற்று நேரத்திலோ கதிர்களை ஈன்று விடுவேன் என்று விம்மிக் கொண்டிருக்கும் சமயத்தில் கண்ணுக்கு எட்டியதூரம் கழனிக் காட்டைப் பார்த்தாலோ அப்பப்பா அந்தக் காட்சியே ஒரு தனி. 

இந்தக் காட்சியை எல்லாம் நன்றாய் அனுபவிக்க மாவடி கிராமத்திலுள்ள ஜில்லா போர்டு பள்ளிக் கூடத்துக்கு ஆசிரிய ராக வந்து சேர்ந்தான் இளைஞன் நாகய்யா. 

பழைய ஆசிரியர் வயதானவர், தலை வழுக்கை விழுந்து நடக்கும்போது கொஞ்சம் தள்ளாடுவார். கையில் ஒரு கம் பும் முட்டை வடிவ மூக்குக் கண்ணாடியும் அவருடைய முத்தி ரைகள். பத்து ஆண்டுகளாக அந்த ஊரிலேயே பணி செய்தவர். 

ஆனால் ஊரார் சிலர் அவருடைய மாற்றலைத் தடுத்து மறு உத்தரவு வாங்க முயன்றார்கள். அவருக்கும் அந்த ஊரை விட்டுப் போக மனம் இல்லை. அதனால் நெருங்கிப் பழகிய அந்தரங்க நண்பர்களைக்கொண்டு உத்திரவை ரத்து செய்து இன்னும் ஒரு வருஷமோ இரண்டு வருஷமோ அங்கேயே பணி செய்து ஓய்வு பெற விரும்பினார். 

நாகய்யாவுக்கு ஆசிரியர் பயிற்சி முடிந்து இது முதல் நியமனம். இளைஞன், கல்யாணமாகாதவன். 

இந்தக் காரணத்தையும் சுட்டிக்காட்டி அவன் அங்கே வேண்டாம் என்று மனுவில் குறிப்பிட்டு பெரும்பான்மையோர் கையெழுத்தும் கைநாட்டும் வாங்கப்பட்டன. 

பழைய ஆசிரியர் புது ஆசிரியருக்கு வேலையை ஒப்புக் கொடுக்க மறுத்துவிட்டார். ஊரார் ஜில்லா போர்டு தலைவ ருக்கு அனுப்பிய மனுவுக்கு உத்தரவு வரும் வரை வேலையை அவனிடம் ஒப்படைக்க முடியாதென்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார். உத்தரவும் வந்தபாடில்லை. 

நாகய்யாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேறு எந்த ஊருக்காவது மறுநியமனம் வந்தாலாவது போதும். வேண்டாத ஊரில் வலுக்கட்டாயமாக இருந்து பணி செய்வ தில் மனக்கஷ்டமே தவிர வேறு என்ன லாபம்? 

இந்த நிலையில் ஊரார், கள்ளுக்கடை கண்ணுசாமியை அணுகி அவன் ஜில்லா போர்டு தலைவரை நேரில் கண்டு உத்தரவை ரத்து செய்து வாங்கிவரும்படிக் கேட்டுக் கொண்ட தற்கு இணங்க, கண்ணுசாமியும் அதிகாலையில் போகும் ரயிலில் போய்விட்டான். இரண்டு மூன்று நாட்கள் ஆனாலும் அங்கேயே தங்கி உத்திரவை கையோடு வாங்கி வருவதாகச் சொல்லிவிட்டு அவன் போனதாக கமுக்கமாய்ப் பேசிக்கொண்டார்கள். 

நாகய்யா அன்று மாலை ரயிலில் அந்த ஊரைவிட்டுப் புறப்பட்டுப் போகத் தீர்மானித்துவிட்டான். முதல் நியமனம் இப்படி ஆகிவிட்டதே என்ற கவலை அவன் முகத்தில் நன்றாகத் தெரிந்தது. 

வந்த இந்த ஒரு வாரத்துக்குள்ளேயே மாவடி கிராமத்து இளைஞர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். 

எழுத்து வாசனை இதுவரை பெறாதவர்கள் அவனிடம் இரவில் கற்றுக்கொள்ள விரும்பினார்கள். 

நாகய்யாவின் மனதில் என்ன என்னவோ திட்டம் உருவாகி யிருந்தது படிப்பைப்பற்றி. எல்லோரும் படிக்கவேண்டும். எல்லோருக்கும் எழுதப் படிக்கத் தெரிய வேண்டும். பெண்களும் படிக்க வேண்டும். ஒரு பெண் தன் கணவனுக்குக் கடிதம் எழுதும் அளவுக்காவது எழுதத்தெரிந்திருக்க வேண்டும். அதற்காக அவள் இன்னொருவர் துணையை நாடக்கூடாது என்றெல்லாம் திட்டம் வைத்திருந்த அவனுக்கு மாவடி கிராமத்தில் தொடக்க காலத் திலேயே ஏற்பட்ட எதிர்ப்பு பெரு வெறுப்பையும் சோர்வையும் விளைவித்தது. 

கடைசியாக அதைவிட்டுப் போய் ஜில்லாபோர்டில் மறு நியமனம் பெறவேண்டியதுதான் என்று முடிவுகட்டி தன் கொஞ்ச நஞ்ச சாமான்களோடு ரயில் நிலையத்தை அடைந்தான். அவன் போகும்போது ஆண்களும் பெண்களும் அவரவர் வீட்டி லிருந்து எட்டிப்பார்த்தார்கள். பழைய ஆசிரியருக்கு வெற்றி. அந்த வெற்றிக்குப் பாடுபட்டவர்கள் பெருமிதம் அடைந்தார் கள். அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. 

ஆனால் ரயிலடியில் அவன் போகும் வண்டி வருவதற்குள் இளைஞர்கள் கூட்டமாகச் சென்று அவன் போகக்கூடாது என்று று தடுத்தார்கள். 

“மேலாவிலிருந்து உத்தரவு என்னதான் வருகிறது என்று பார்ப்போமே ! அதுவரை எங்களுக்காகத் தங்குங்கள். அப்புறம் நடக்கிறபடி நடக்கட்டும் ” என்று வாதாடினார்கள். 

அவர்கள் அன்பைப் புறக்கணிக்க விரும்பவில்லை நாகய்யா. 

“கள்ளுக்கடை கண்ணுசாமி செல்வாக்கு உள்ளவன் என்கிறார்களே! உத்திரவை ரத்து செய்து வாங்காமலா வருவான்?’ என்று ஐயம் தெரிவித்தான் நாகய்யா. 

“அப்படி உத்தரவு வாங்கிவந்து விட்டால் நாங்களே உங் களை வழியனுப்பி வைக்கிறோம்” என்று சொல்லி ரயில் நிலையத் திலிருந்து திரும்பக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள். 

எதிர்பார்த்ததற்குமாறாசு, கண்ணுசாமியின் பாச்சா ஜில்லா போர்டு தலைவரிடம் பலிக்கவில்லை. போனமச்சான் திரும்பி வந்த கதையாகத் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு வெறுங்கையோடு மாவடி வந்தான். 

நாகய்யா ஆசிரியர் பதவியை ஒப்புக்கொண்டதோடு மாற்றலாகிச் செல்லும் பழைய ஆசிரியருக்குத் தக்கபடி ஒரு பிரிவு உபசாரம் வேறு நடத்திக் காண்பித்தான். பழைய ஆசிரியரின் ஆதரவாளர்கள் வெளிப்படையாக இந்த உபசாரத்தை ஆதரித்ததாகக் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் அவர்களுக்கு ஒரே வேக்காடு. 

கண்ணுசாமி உள்ளுக்குள் கருவினான். “இரு, இரு. உன்னை என்ன செய்கிறேன் பார்’ என்று வன்மம் வைத்தான். நாகய்யா மீது என்ன பழியைச் சுமத்தி ஊரைவிட்டு விரட்டலாம் என்று இராப் பகலாய் யோசனை செய்ய ஆரம்பித்தான். 

2 

யார் இந்த கண்ணுசாமி? கண்ணுசாமி குடும்பமே பரம் பரையாக கள்ளுக்கடை குத்தகை எடுக்கிறவர்கள். கண்ணுசாமி அக்கரை சீமையிலிருந்து அண்மையில்தான் ஊருக்கு வந்தவன். மலேயாவிலோ சிங்கப்பூரிலோ ஒரு சாராயக்கடையை நடத்து கிறதாம் அவன் குடும்பம். குடும்பத்தில் ஒருவர் மாறி மாறி அங்கேபோய் அதை மேற்பார்வை பார்ப்பார்கள். ஊரில் நிலபுலன்கள், பனந்தோப்பு, தென்னந்தோப்பு சேர்க்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வந்தது. 

கண்ணுசாமிக்கு நாற்பது வயதிருக்கும். சமீபத்தில் அவ னில் ஏற்பட்ட மாற்றம் இரண்டு தங்கப் பல் கட்டிக்கொண்டு வந்திருப்பதுதான். அவன் சிரிக்கும்போது மற்றவர்களும் சிரிப் பார்கள் – ஏகத்தாளமாக அந்தப் பல்லைப் பார்த்து. கண்ணுசாமி வருவதற்குமுன் அவன் வரவுக்குக் கட்டியம் கூறுவது கள் வாசனை அல்ல; அவன் சிங்கபூரிலிருந்து கொண்டுவந்திருக்கும் ஒருவித வாசனை. அது சீமைச்சாராய வாசனைதான் என்று சிலர் மறை வாக தங்களுக்குள் எள்ளி நகையாடுவது வழக்கம். 

மதுவிலக்கு, மாவடியிலும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களி லும் வெகுகாலமாக தலைகாட்டவில்லை.சில இளைஞர்கள் மட்டும் அவ்வப்போது நகர்ப்புறங்களில் கேட்ட கொள்கைகளைப் பின் பற்றி மதுவிலக்கு பிரசாரம் செய்யத் தொடங்குவார்கள். ஆனால் கள்ளுக்கடை கண்ணுசாமி இரவோடு இரவாய் எல்லா பெரியதனக்காரர்களையும் அழைத்து அழகாக ஒரு கள் பார்ட்டி நடத்திக் காண்பித்துவிட்டானானால் – அவ்வளவு தான் – படம் ஒடுங்கிய பாம்புபோல அந்தப் பிரச்னை படுத்துவிடும். 

ஆயினும் கள்ளை ஒழித்தே ஆகவேண்டும் என்ற உணர்ச்சி அந்த வட்டாரத்தில் மறைந்து போய்விடவில்லை. அதுவும் சங்கிலியோடு வளர்ந்து வந்தது என்றுகூடச் சொல்லலாம். 

சங்கிலி இதற்காகத்தானோ என்னவோ புழுதியில் நட்ட சம்பா நடுகையைப்போலச் செழிப்பாக வளர்ந்துவிட்டாள். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சிற்றாடையைக்கூட நன்றாகச் சுற்றிக்கொள்ளத் தெரியாத சங்கிலி, இப்போது நம்பமுடியாத படி பச்சை மஞ்சளை முறித்ததைப்போல கண்ணைப்பறிக்கும் பொலிவோடு விளங்கினாள். 

பல தடவைகளில் வாய்க்கால் கரைகளிலும் வயல் வரப்புகளி லும் சங்கிலியை அவன், எதிரேவரக் கண்டிருக்கிறான். அவன் தான் புதிதாக வந்த ஆசிரியர் என்று அறிந்தபொழுது, சங்கிலி யும் கண்களை அகல விழித்து, தன் நெஞ்சகத்துப் புகவும் வழி விட்டாள். 

இதற்குமுன்னில்லாத புத்தம்புது உணர்ச்சிகள் சங்கிலியிடம் தோன்றி வலுக்க ஆரம்பித்தன. நாகய்யாவின் அழகிய முகம், கூரிய விழிகள், தூய ஆடம்பரமற்ற தன்மை, இனிய மொழி கள் எல்லாம் அவளுடைய இதயத்தில் சதா உலவி அவனைப் பற்றி இடையறாமல் நினைக்கத் தூண்டின. 

அறுவடை சமயத்திலும், அறுவடை முடிந்தவுடனுந்தான் கள்குடி அபரிமிதமாக இருக்கும். களங்களிலும் களத்துமேடு களிலும் கள், மிடாக்களிலும் குடங்களிலும் குடுவைகளிலும் வந்து இறங்கிய வண்ணமாக இருக்கும். ஆண்களும் பெண்களும், ஓலைப்பட்டைகளிலும், கலயங்களிலும், கள்ளை ஊற்றி ஊற்றிக் குடித்து மயங்குவார்கள். 

காசை வாங்கிக்கொண்டு கள் விற்பதைவிட, நெல்லுக்குக் கள்ளைப் பண்டமாற்று செய்வதில்தான் அதிக லாபம் என்பது கண்ணுசாமி கண்டு வைத்திருந்த சிதம்பர ரகசியம். அதனால் தான் வயல்களிலும் களத்துமேடுகளிலும் கள்ளை ஆறாகப் பாய விட்டு வயல் நெல் வீடுவந்து சேர்வதற்குள்ளேயே அவன் நெல்லை அபகரித்துச் செல்லும் கொடுமையை மாவடி இளைஞர்கள் கண்டிக்கத் தலைப்பட்டார்கள். 

முதல்நாள் இரவில் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் தலைமையில் ரகசியக்கூட்டம் நடத்திக் கள்ளை அடியோடு ஒழிக்க ஆலோசனை செய்தார்கள். அதில் முக்கியமான யோசனை கள்குடியின் தீமை யைப்பற்றி முதலில் மக்கள் உணர்ந்து மனம் திருந்த வேண்டும். 

ஆகையால் ஊரில் பெரியவர்களை நேருக்கு நேர் சந்தித்து அதைப்பற்றி விளக்கவேண்டும். அடுத்து, கள் விற்பனை, கடை யோடு மட்டும் நிற்காமல் வயல்களிலும் களங்களிலும் விற்கப் படுவது உடனே நிறுத்தப்படவேண்டும். 

ஆலோசனைப்படி மறுநாள் இளைஞர்கள் வயல்களிலும் களங் களிலும் சுற்றித்திரிந்து, விற்பனை நிலவரத்தை அறிந்து வந்து மூன்றாம் நாள் இரவில் ஊர்க் கூட்டம் போட்டு அதைத் தடுத்துவிடத் திட்டமிட்டனர். நாகய்யா தற்செயலாகப் போவது போல பல களங்களைப்போய்ப் பார்த்தான். 

சங்கிலி வீட்டார் களத்தைத் தங்கள் வயலிலேயே வைத்திருந்தார்கள். 

நெல்லும் நெற்கதிர் கட்டுகளும், வைக்கோலும், வைக்கோல் போருமாகக் காட்சியளிக்கும் களத்தில், ஆடவரும் பெண்டிரும் இயல்பாக மகிழ்ச்சியோடு விளங்குவார். பாடுபட்ட பலன் கிடைக்கும் சமயம் அல்லவா ? அறுவடை முடியும் வரை இரவும் பகலும் களங்களிலேயே தங்கி விடுவ தும் உண்டு. வெயிலுக்கும் – பனிக்கும் மறைவாக சிறு சிறு குடில்களை அமைத்துக்கொண்டு, அங்கேயே உண்டு உறங்கி உழைப்பதில் ஒரு தனி மகிழ்ச்சிதான். 

நாகய்யா களத்தை அடைந்தபோது ஆசிரியருக்கு உரிய மரியாதையோடு அவனை வரவேற்றார்கள். சங்கிலியின் தமையன் அங்கே கிடந்த வைக்கோல் கட்டு மீது நாகய்யாவை அமரும் படி வேண்டினான். 

பக்கத்துக் கிராமத்துக்கு ஒரு வேலையாகத் தான் போவதாக வும், வரும் வழியில் தற்செயலாக அங்கு வந்ததாகவும் கூறிக் கொண்டு, அங்கு கள் நடமாடுகிறதா என்று நோட்டம் விட் டான். 

கள் வாசனை களத்து வாசனையோடு எங்கும் பரவியிருந்தது. அதிகாலையிலேயே கள் அங்கு வந்துவிட்டதற்கு அறிகுறியாக கள் பானைகள், முட்டிக்கலயங்கள், சொண்டான்கள் அங்கே தென்பட்டன. 

சங்கிலியின் தமயன் முத்தன் அவனிடம் மிக மரியாதை யாக உரையாடினாலும், கள்குடி மயக்கத்தால் உரை குளரினான். சங்கிலி அங்கே வைக்கோற் போருக்கு அருகே நின்றுகொண் டிருந்தாள். இரண்டு மூன்று தடவைகள் அவர்கள் கண்கள் சந்தித்தன. நாகய்யா முத்தனிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து அகன்று வந்து விட்டான். அதற்குப் பின்னர் வேறு எந்தக் களத்துக்கும் போகவில்லை – போகத் தெம்பு இல்லை. சங்கிலியும் கள்குடி மயக்கத்தில் நின்றிருந்ததைக் கண்ட பாவம் தான். அவள் கண்கள் செவ்வலரி போலச் சிவந்திருந்தன. இயற்கையாக மலர விழிக்கும் மான் போன்ற மருண்ட விழிகள் எங்கே! கட்குடியால் சிவந்து தன்னைப் பார்க்கக்கூசிய இந்த விழிகள் எங்கே ! 

இவ்வாறு நொந்து போயிருந்த அவன் உள்ளத்தில் இன் னொரு அடி வீழ்ந்தது உடனடியாக அவளைப்போலவே களத்து மேடுகளில் சுற்றி வேவு பார்த்துவிட்டு வந்த இரு உற்சாகமான இளைஞர்கள் இந்தச் சங்கதியையும் கொண்டு வந்தார்கள். அதாவது, சங்கிலி வீட்டுக்குக் கள்ளுக்கடை 
கண்ணுசாமி

குடுவை குடுவையாகக் கள் அனுப்புவதைப் பற்றி மாவடியிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் பலவித வதந்திகள் அறு வறுக்கத்தக்க விதமாக உலாவுவதைத்தான் அவர்கள் நாகய்யா விடம் சொன்னார்கள். 

அந்தச் சங்கதி அவன் காதில் விழுந்தபோது தூண்டில் புழுவைப்போல் துடித்தான். ‘சே ! இப்படி ஒருநாளும் இருக்காது. ஒருவேளை உள் நோக்கத்தோடு கண்ணுசாமி இலவசமாக்கள் அனுப்புவதில் வேணுமானால் ஒரு வேளை உண்மை இருக்கலாம். சுமத்துவது ஆனால் அதற்காகச் சங்கிலி மீது இந்த அவதூறு அபாண்டம். அடுக்காது. இரவு பகலாக ஒரு புழு இருந்து குடைவது போல நாகய்யா துடித்துக் கொண்டிருந்தான். 

ஒரு வாரம் கழிந்தது. தற்செயலாக சங்கிலியின் தமையன் முத்தனை வாய்க்கால் ஓரத்தில் சந்தித்தான். முத்தன் மிகவும் கொண்டவன். நல்லவன். நாகய்யாவிடம் 

தனி மதிப்பும் அவனிடம் நாகய்யா முதலில் பொதுவாகக் கிராமத்தைப் பற்றிப் பேசிவிட்டு பின்பு சாமர்த்தியமாக அந்த வதந்தியைப் பற்றி விசாரித்தான். 

பெண்கள் குடிப்பது வழக்கம் என்றும் அம்மாதிரியே சங்கிலி யும் குடிப்பது வழக்கம் என்றும் அதைத் தவிர மற்றபடி பேசுவது எல்லாம் வம்பு என்றும் சொன்னான். 

நாகய்யாவுக்கு மகிழ்ச்சியும், துக்கமும் கலந்த ஓர் உணர்ச்சி. அந்த வதந்தியில் உண்மை ஏதும் இல்லை என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. சங்கிலியும் குடிக்கிறாள் என்பதில் ஒரே வருத்தம். 

“போகட்டும், சங்கிலி சின்னவள் தானே? அவளாவது குடிக்காமல் இருக்கலாகாதா?” என்று உருக்கமாக வேண்டிக் கொண்டான். 

மறுநாள் அதிகாலையில் நாகய்யாவின் வீட்டுக் கதவைத் தட்டினான் முத்தன். நாகய்யா வெளியே வந்தான். முத்தன் சொன்னான்: வாத்தியாரையா நீங்க சொன்னதை சங்கிலியிடம் சொன்னேன். அவ்வளவு தான். தங்கச்சி என்ன சொன்னாள் தெரியுமா? கள்ளைக் கையால் இனிமேல் தொடுவது கூட இல்லை என்று என் தலையில் அடித்துச் சத்தியம் செய்து விட்டாள். உங்கள் மனம் நோகும்படி நடந்து கொண்டோமே என்று சங்கிலி ரொம்பச் சங்கடப்பட்டாள். அதைக் கேட்ட நாகய்யா அது நனவு தானா என்று தன் காதுகளை நம்பமுடியாமல் திகைத்தான். 

நாகய்யா இவ்வளவு காலமும் தனிமையைத் துணையாகக் கொண்டு வாழ்ந்து வந்தான் அல்லவா ! இப்போது சங்கிலியைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்ற எண்ணம் வேரூன்றி விட்டது. இனி முத்தனிடம் தன் விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டியது தான். 

ஒரு நாள் முத்தன் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது அவனை அணுகித் தன் விருப்பத்தை மெதுவாக அவனிடம் வெளிட்டான். 

முத்தன் அங்கலாய்த்தான். “தம்பி, இதை நீ முன்னமே சொல்லியிருக்கக்கூடாதா! சங்கிலிக்கு உனக்கு வாழ்க்கைப்படக் கொடுத்து வைத்திருந்தால் அது புண்ணியம் செஞ்சதாச்சே! இந்தக் கள்ளுக்கடை கண்ணுசாமியினால் ஏற்பட்ட புரளியினாலே அவளுக்குக் கருங்காட்டுக் கிராமத்தில் ஒருத்தனுக்கு கொடுக்க நிச்சயமாயிட்டதே!” 

நாகய்யாவுக்கு அவன் மனசைப் போலவே, அவன் கண்ணுக்குத் தோன்றிய பொருள்கள் யாவும் சுழன்றன. 

3 

சங்கிலி மாவடியைவிட்டு கருங்காட்டுக் கிராமத்துக்குப் போன ஒரு வாரத்துக்குள், மாவடியும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களும் ஒரு நல்ல ஆசிரியரை இழந்து விட்டன. எப்படியோ நாகய்யா அந்த ஊரை விட்டுத் தன்னை மாற்றிக் கொண்டான். 

நாகய்யா மாவடியை விட்டு நான்கு ஆண்டுகள் ஓடி மறைந்து விட்ட பின்னர், புளியங்குளம் என்ற ஊரிலுள்ள ஒரு பெரிய பள்ளிக்கூடத்துக்கு உதவி ஆசிரியராக அவன், நியமிக்கப் பட்டு மாற்றல் உத்தரவு வந்து சேர்ந்தது. 

புளியங்குளத்தில் நாகய்யாவுக்கு வசதியான வீடு எதுவும் கிடைக்கவில்லை. ஆகையால் புளியங்குளத்துக்கு அருகில் உள்ள கருங்காடு என்ற கிராமத்தில் வீடு கிடைக்கும் என்று தலைமை ஆசிரியர் சொன்னார். 

‘கருங்காடு’ என்ற பேரைக் கேட்ட மாத்திரத்திலேயே திடுக்கிட்டது நாகய்யாவின் மனம். அலை அலையாக எண்ணங் கள் வந்து மோதின.பேசாது கற்சிலை போல நின்றான். 

இதற்குள் தலைமை ஆசிரியர் கருங்காட்டிலிருந்து அங்கு வேலை செய்ய வந்திருந்த ஒருவனிடம் நாகய்யாவை அறிமுகப் படுத்தி வைத்து, அவனுக்கு வசதியாகவுள்ள ஒரு சின்ன வீடு பார்த்துக்கொடுத்து உதவி செய்யும்படிச் சொன்னார். 

உற்சாகமாக அதை ஒப்புக்கொண்டான் அவன். தன்னிடமே ஒரு வீடு இருப்பதாகவும் அந்த ஆசிரியருக்குப் பிடித்திருந் தால் அதிலேயே தங்கலாம் என்றும் சொன்னான். எனவே, அவனுடைய சாமான்கள் கொண்ட மாட்டு வண்டி மீண்டும் பூட்டப்பட்டது. 

அப்போது பொழுது மறையும் வேளை. தடத்தின் வழியாக வண்டி முன்செல்ல இருவரும் பின்னால் நடந்து சென்றனர். 

அந்த மனிதனிடம் அப்பொழுதே சங்கிலியைப்பற்றி விசா ரிக்க வேண்டுமென்ற எண்ணம் அவனை உந்தித்தள்ளியது. ஆனால் அது அழகாக இருக்காது என்று படவே அதைப்பற்றி எதுவும் பேசாது அந்த எண்ணத்தை அடக்கிக்கொண்டான். 

சாலை ஓரத்தில் உள்ள ஒரு வீட்டின் முன்னால் வண்டி நிறுத்தப்பட்டது. அவன் சாவி கொண்டு வந்து வீட்டு முன் வாசலைத் திறந்து அரிக்கேன் லாந்தல் ஒன்றை ஏற்றி வைத்துச் சாமான்களையும் வீட்டினுள் கொண்டு வந்து சேர்த்தான். அங்கு கிடந்த ஒரு கயிற்றுக்கட்டிலில் அவனுடைய படுக்கையை விரித்துப்போட்டான். அதில் உட்கார்ந்துகொண்டிருந்தான் நாகய்யா. 

“இந்தா, இவனைப் பிடி, எவ்வளவு சேட்டை பண்ணுது வர வர ” என்று குழந்தையை அவனிடம் கொடுத்து விட்டு, இவர்தான் புது வாத்தியார் அய்யாவா?” என்று அன்புடன் தன் வரவேற்பைத் தெரிவித்தாள் அவன் மனைவி, தானும் ஏதாவது பேசவேண்டும் என்பதற்காக. 

“குழந்தைக்கு வயது என்ன?” என்று கேட்டான் நாகய்யா. 

“மூணு வயசு முடிஞ்சு போச்சு” என்றாள் அவள்.

“பேரு?” 

“பேரு, நாகய்யா.” 

நாகய்யா திடுக்கிட்டது அந்த தம்பதிக்குத் தெரியாது, “நாகய்யாவா……?” பலமான சிந்தனை ஓட்டம் அவன் இத யத்தில் ஓட ஆரம்பித்தது. 

வந்த களைப்பினால் படுத்துக்கொண்டான் நாகய்யா. சுவர்க் கோழிகள் விடாமல் ‘இய்ங்ங்” என்று கத்திச் செவியைப் பிய்த்துக்கொண்டிருந்தன. 

சற்றுநேரம் கழிந்ததும் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. நாகய்யா எழுந்தான். அவன் கண்களை நம்பமுடியவில்லை. சங்கிலி! ஆமாம், சங்கிலியேதான்! 

மீண்டும் கதவைச் சாத்திவிட்டு அவன் அருகில் வந்தாள் சங்கிலி. அவள் கண்களில் கண்ணீர் வெள்ளம் புரண்டோடியது. நாகய்யா என்ன பேசுவது என்று தெரியாமல் திணறிக்கொண் டிருந்தான். 

“உங்களுக்காக நான் எவ்வளவு நாள் காத்துக்கொண்டிருக்கிறேன்? என்னை நீங்கள் மறந்துவிட்டீர்களா? என்னால் ஒரு நிமிஷம் கூட உங்களை மறக்க முடியவில்லையே. என் மனம் உங்களையேதான் சுற்றிக்கொண்டிருக்கிறது, மலரைச்சுற்றி சதா வட்டமிடும் வண்டைப்போல” என்று கூறியவண்ணம் அவனை நெருங்கிக் கட்டிலின் மீது அமர்ந்தாள். 

சங்கிலி இவ்வளவு அழகாகப் பேச எங்கு கற்றுக்கொண்டாள்? சாதாரண கிராமப் பெண். மாவடி கிராமத்தை விட்டுக்கூட நகர்ப்புறங்களுக்கு அவள் அதிகம் போனது இல்லை. தன்னிடம் இவ்வளவு தூரம் அவள் அன்புகொண்டிருந்தது தனக்குத் தெரியாமல் போயிற்றே. அவளுக்காக யாராவது காத்துக் கொண்டிருந்தார் என்றால் அது தான் அல்லவா ? அவளை அல் லவா தான் மறந்துவிட முடியவில்லை. அவளை அல்லவா தன் மனம் சதா சுற்றிக்கொண்டிருக்கிறது. 

இவ்வாறு நினைத்த நாகய்யா வெள்ளம் எனப்பாயும் அவள் கண்ணீரைத் துடைக்க எண்ணிக் கட்டிலில் படுத்துக் கிடந்த அவன் எழுந்து அவளை நெருங்கி அமர்ந்தபொழுது கதவு மீண்டும் கீச்சிட்டுக்கொண்டு திறந்தது! 

நாகய்யா திடுக்கிட்டுக் கண்விழித்தான். சங்கிலி ? சங்கிலி எங்கே? என்ன பயங்கர இன்பக்கனவு ! 

அவன் உணவோடு உள்ளே வந்து அவனைச் சாப்பிட வேண்டி னான். அவன் மனைவி பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போய்விட்டாள். 

அந்த மனிதனிடம் நாகய்யா, “ஆமாம்… மாவடி கிராமத்தி லிருந்து ஒரு பெண் இந்த ஊருக்கு வாழ்க்கைப்பட்டு வந்திருக் கிறாளே ! சங்கிலி என்று பேர். அவள் வீடு எங்கே? அவள் சவுக்கியமா? நான் நாலு வருஷங்களுக்கு முன்னால் மாவடி பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக இருந்தேன். அவர்கள் குடும் பத்தை எனக்கு நன்றாகத் தெரியும்” என்றான். 

அவன் முகம் திடீரென்று மாறுதல் அடைந்தது. விம்மலும் இந்தப் பொருமலும் அவன் தொண்டையை நெரித்தது. பாவிக்குத்தான் தங்கம்போல அந்தப் பெண்ணைக் கொடுத்தார் கள். ஒரு வருஷத்துக்குள் இந்தப் பிள்ளையைப் பெத்துவிட்டுப் பாயும் படுக்கையும் ஆனாள். அவள் மனசில் என்ன கவலையோ தெரியாது. நீங்க உக்காந்திருக்கும் கட்டிலில்தான் ஆறு மாதம் கிடந்தாள். பண்ணாத வைத்தியம் இல்லை. எண்ணாத தெய்வம் இல்லை. கடைசியில் என்னை விட்டுவிட்டுப் போய்விட்டாள்..” 

நாகய்யாவின் மனமும் தலையும் பம்பரம்போல் சுற்றியது. மேலும் சங்கிலியின் கணவன் சொன்னது அவன் காதில் விழ வில்லை. 

– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *