மதிப்புக்குரிய, விடைத்தாள் திருத்துபவர் அவர்களுக்கு

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: September 23, 2017
பார்வையிட்டோர்: 7,668 
 
 

எழுதியவர்: நாராயண் கங்கோபாத்தியாய்

ஐயா,

நீங்கள் இந்த விடைத்தாளைக் கடைசிவரை படிப்பீர்களா என்று எனக்குத் தெரியாது. ஏனென்றால் நான் விடைத்தாளில் ஒர கேள்விக்குக்கூடவிடையெழுதவில்லை. இந்தக் கடிதத்தை மட்டுமே எழுதியிருக்கிறேன். நீங்கள் ஒரு சில வரிகள் படித்ததுமே புருவத்தைச் சுளிப்பீர்கள், விடைத்தாளில் சைபர் போடுவீர்கள், பிறகு நான் அசட்டுத்தனமாகக் கடிதம் எழுதியதற்காகப் பல்கலைக் கழகத்துக்குப் புகார் செய்வீர்கள். நீங்கள் சைபர் போட்டாலும் புகார் செய்தாலும் எனக்குக் கவலையில்லை. நீங்கள் ஒருவேளை என் கடிதம் முழுவதையும் படித்தாலும் படிக்கலாம் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன்.

ஓரிரண்டு கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியுந்தான். ஆனால் அதனால் கிடைக்கும் மார்க்குகளால் பாஸ் செய்வது கிடைக்கட்டும், இருபதைக்கூட எட்ட முடியாது. ஆகையால் நான் விடையளிக்க முயற்சி செய்யவில்லை. தவிர, இன்று சாயங் காலத்துக்குப் பிறகு நான் பாஸ், பெயில் இவற்றுக்கெல்லாம் அப்பால் போய்விடுவேன். கல்கத்தாவையடுத்து எவ்வளவோ ரயில்கள் போய் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் ஒன்றின் சக்கரங்களுக்கடியில் என் கணக்கை முடித்துக் கொள்ளப் போகிறேன். ஓர் அடையாளம் தெரியாத இளைஞன் ரயிலில் அரைபட்டு மாண்டான் என்ற பத்திரிகைச் செய்தி நீங்கள் இந்தத் தாளைத் திருத்தும் சமயத்தில் பழைய செய்தியாகி உங்களுக்கு மறந்துகூடப் போயிருக்கும்.

இந்த இடத்தைப் படிக்கும்போது உங்கள் ஆசிரிய மனப்பாங்கு அதிர்ச்சியடையும். “சீ, சீ! பரீட்சையிலே தேறலேன்னு தற்கொலையா? இதைவிடக் கோழைத்தனத்தைக் கற்பனை பண்ண முடியுமா? வங்காளத்து இளைஞர்களிடம் இந்த மனோபலங்கூட இல்லேன்னா நாடு எப்படி உருப்படும்? சமூகத்துக்கு என்ன எதிர்காலம் இருக்கும்?” என்றெல்லாம் சொல்லிக் கொள்வீர்கள்.

என்னை நம்புங்கள் சார், எனக்கும் இதெல்லாம் தெரியும். நான் உயிர் வாழத்தான் விரும்பினேன் என்பதையும் நீங்கள் நம்ப வேண்டும். சாந்தால் பர்கனாவின் மலையாறுகளின் சீறிவரும் வெள்ளம் என் கை பட்டதும் ஒர பெரிய நிலப்பரப்பில் சிறைபட்டு நிற்கும்; பீகார் – மேற்கு வங்காள எல்லையிலுள்ள சிறந்த தொழிற்சாலைப் பகுதியை ஆயிரமாயிரம் விளக்குகளால் பிரகாசிக்க வைக்கும் நீர் மின்சாரத் திட்டத்தை இயக்கும் பொத்தானை என் கை அமுக்கும்; நான் கொதியுலையின் சிவந்த ஒளியில் எஃகை உருக்கி எதிர்கால பாரதத்தைச் சமைக்கப் போகிறேன் – இவ்வாறெல்லாம் கனவு கண்டு கொண்டிருந்தேன் நான்.. சார், நான் தற்கொலை செய்து கொள்ள விரும்பவே யில்லை!

எனக்கு நாற்புறமும் மாணவர்கள் விடைகளை மும்முரமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் என் போலவே கனவு காண்கிறார்கள். இன்னம் சில நாட்களுக்குப் பிறகு சிலரது பெயர்கள் தேறியவர்களின் பட்டியலிலிருந்த அடிக்கப் பட்டு அவர்களுடைய கனவுகளும் சுக்குநூறாகி விடும். சிலர் வாழ்க்கையில் வெற்றிபெற்று வருங்கால பாரதத்தின் நம்பிக்கை விளக்கைக் கைகளில பிடித்துக் கொள்ளலாம். அவர்கள் அதிருஷ்ட சாலிகள்; அவர்கள் முன்னேறிச் செல்லட்டும்! என் போன்ற எண்ணற்றவர்கள் இப்படியே மறைந்து விடுவார்கள், அல்லது நடைப்பிணங்களாக உயிர் வாழ்வார்கள். ஐந்தாண்டுத் திட்டத்தின் சாதனைப் பட்டியலில் இடம்பெற மாட்டார்கள் அவர்கள்.

நான் உங்களைப் பார்த்ததில்லே, ஒருபோதும் பார்க்கப் போவதுமில்லே. எனக்கு உங்களைத் தெரியாது. ஆனால் நீங்கள் ஒரு ஆசிரியர் என்பது மட்டும் தெரியும். நீங்கள் மாணவர்களுடன் நெருக்கமாக வாழ்கிறீர்கள்; அவர்களது வாழ்க்கையின் அலை உங்களையும் தொடுகிறது. நீங்கள் அவர்களை நேசிக்கவும் செய்யலாம். ஆகையால் நான் எழுதுவதை நீங்கள் படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி, நான் உங்களிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வேன்?

சார், நான் மேதினிபூர் மாவட்டத்துச் சின்னஞ்சிறு கிராமம் ஒன்றிலுள்ள ஓர் ஏழை விவசாயியின் மகன் என்பதை நான் கனவு காணும் சமயத்தில் மறந்து போயிருந்தேன். என் தந்தை ஒரு சாதாரணமான உழவர்தான் என்றாலும் இப்போது டில்லியில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் தலைவர்களில் எவரையும்விடத் தேச பக்தியில் குறைந்தவரல்ல. ஆயிரத்துத் தொள்ளாயிரத் நாற்பத்தி இரண்டாம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு நள்ளிரவில் ஒரு காட்டில் நான் பிறந்தேன். ஏனென்றால் அப்போது ராணுவம் எங்கள் கிராமத்தை எரித்து விட்டது. நெஞ்சில் துப்பாக்கியால் சுடப்பட்ட என் தந்தை சுதந்திரக் கொடியை கையில் ஏந்தியவாறே ஒரு வயலில் விழுந்து கிடந்தார்.

தமக்குப் பிள்ளை பிறந்தால் அவனுக்கு ‘ஸ்வாதீன்குமார்’ என்று பெயர் வைக்க வேண்டுமென்று விரும்பினார் என் தந்தை. தீப்பிழம்புகள் ஒளிர்ந்த அந்தப் பிரளய இரவில் சுதந்திரமான வானத்தின் கீழே என் தந்தையின் இரத்தத்தையே ஆசியாகக் கொண்டு பிறந்தேன் நான். அந்தக் காலத்தில் ராணுவத்தின் கெடுபிடி கடுமையாகி இருந்தாலும் நாட்டில் எவரும் மனத்தளவில் அடிமையாக இருக்கவில்லை.

இந்தக் கதையெல்லாம் போகட்டும் சார். நீங்கள் இதுவரை படித்துக்கொண்டு வந்திருந்தீர்களென்றால் இப்போது பொறுமை யிழக்கலாம். என் குடும்ப வரலாற்றைப் பற்றி உங்களுக்கு என்ன அக்கறை! தவிர எனக்கும் எழுத மூன்று மணியானதும் என்னிடத் திலிருந்து விடைத்தாள் பறித்துக் கொள்ளப்படும். ஆகையால் நான் சொல்ல விரும்புவதைச் சுருக்கமாகவே சொல்லி விடுகிறேன்.

நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆகையால் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தியிருக்கலாம். பஞ்சம் வந்தால் என் போன்ற மற்ற விவசாயிகளைப்போல் பட்டினி கிடந்தோ, உண்ணத் தகாததை உண்டோ உயிரை விட்டிருக்கலாம். ஆனால் என் துரதிருஷ்டம், என் சித்தப்பா என்னைக் கிராமத்துப் பள்ளியில் சேர்த்து விட்டார். அப்புறம்- நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, தெரியாது – எனக்கு உபகாரச் சம்பளமும் கிடைத்து விட்டது.

இந்த உபகாரச் சம்பளமே எனக்கு எமனாக வாய்த்தது- நான் கனவு காணத் தொடங்கினேன். என் தாய் என்னை நெஞ்சோடு தழுவிக் கொண்டு அழுது தீர்த்து விட்டாள். அப்பா வுக்காக அம்மா அழுது நான் பார்த்தது இதுதான் முதல் தடவை. பிறகு நான் கண்களில் நம்பிக்கையொளிர, என் சித்தப்பாவுடன் அங்கிருந்த எட்டு மைல் தூரத்திலிருந்த ஊரின் உயர்நிலைப் பள்ளியில் சேரப் போனேன்.

மாணவர் விடுதியில் தங்குவதற்கான பண வசதி எனக் கில்லை. மொத்த நெல் வியாபாரியான சாமந்தா என்பவரின் வீட்டில் எனக்கு இடம் கிடைத்தது. சாமந்தா எங்களுக்குத் தூரத்து உறவினர். ஆனால் ஓர் ஏழைக் குடும்பத்துடன் சொந்தம் கொண்டாட அவர்களுக்கு இஷ்டமில்லை. உண்மையில் அவருடன் எங்களது உறவு ஒரு ஜமீந்தாருக்கும் அவருடைய குடிமகனுக்குமிடையே, ஒரு லேவாதேவிக்காரனுக்கும் அவனிடம் கடன் வாங்குபவனுக்குமிடையே உள்ள உறவுதான். என் சித்தப்பாதான் சாமந்தாவின் காலைப் பிடித்துக் கெஞ்சி அவர் வீட்டில் நான் தங்க அனுமதி பெற்றார். நான் பள்ளியில் சேர்ந்தேன். இலவசப் படிப்புச் சலுகையும் பெற்றேன்.

சாமந்தா குடும்பம் செல்வமும் செழிப்புமாக இருந்தது. அவர்களிடம் இரண்டு லாரிகள் இருந்தன. மூன்று சரக்குக் கிடங்குகள் இருந்தன. ஆனால் வியாபாரம் செய்பவர்கள் ஒரு பைசா கூட வீண் செலவு செய்ய மாட்டார்கள். ஐநூறு ரூபாய் தானம் செய்தால் அதற்குப் பதிலாக இருபத்தையாயிர ரூபாய் லாபம் சம்பாதித்து விடுவார்கள். ஆகவே அவர்கள் என்னைத் தங்க அனுமதித்துவிட்டு அதற்குரிய விலையை என்னிடமிருந்து வசூலித்துக் கொண்டார்கள்.

என் கையெழுத்து மோசமில்லை என்பது உங்களுக்கு இந்த விடைத்தாளிலிருந்தே தெரிந்திருக்கும். தவிர, கணக்கிலும் கெட்டிக் காரன் நான் நூற்றுக்கு று மார்க் வாங்கிவிடுவேன். சாமந்தா இந்த வாய்ப்பை நழுவவிடவில்லை. அவர் முதலில் என்னைக் கடிதங்கள் எழுதச் செய்தார். பிறகு கணக்குகள் எழுதச் செய்தார்; கடைசியில் கணக்கு வழக்குகளைச் சரிபார்க்கும் வேலையையும் என்னிடம் ஒப்படைத்தார். தினம் சில மணிநேரம் இந்த வேலையைச் செய்ய வேண்டியிருந்தது. இரவு எட்டு மணிக்குப் பிறகுதான் எனக்குப் படிக்க நேரம் கிடைக்கும்.

அப்போதாவது சரியாகப் படிக்க முடிந்ததா?

நானும் சாமந்தாவின் குமாஸ்தா ஒருவரும் கடையையடுத்த ஒரு சிறிய அறையில் தங்கியிருந்தோம். குமாஸ்தாவுக்கு வயது நாற்பதைத் தாண்டிவிட்டது. வற்றிப்போன வௌவால் போலிருப்பார்; பெரிய பெரிய கண்கள் பளபளக்கும். நான் படிக்கத் தொடங்கியதும் அவர் ஹுக்காவைப் பற்றவைத்துக் கொண்டு பேச ஆரம்பித்து விடுவார்.

எனக்கு அப்போது வயது பன்னிரண்டுக்குமேல் இருக்குாது. புகையை இழுத்தவாறு, பளபளக்கும் கண்கள் மேலும் பளபளக்க, கரகரத்த நாராசக் குரலில் அவர் சொல்லிய கதைகளின் பொருளை நான் அப்போது புரிந்து கொள்ளவில்லை, பிறகுதான் புரிந்து கொண்டேன். எல்லாம் ஆபாசக் கதைகள் அவர் எவ்வளவு பெண்களை, எவ்வளவு விதமாகக் கெடுத்தார் என்று வர்ணிக்கும் கதைகள்.

அப்போது எனக்கு அந்தக் கதைகளின் நன்மை தீமை தெரியாது. ஆனால் எரிச்சல் வரும் எனக்கு.

“கொஞ்சம் சும்மா இருங்க! என்னைப் படிக்க விடுங்க!’ “சரிதாம்பா, நிறுத்து! குடியானவன் பிள்ளை வித்தியாசாகர் ஆகப் போறியாக்கும்-! அதைவிட ஹுக்கா பிடிக்கக் கத்துக்கறது மேல். அதைக் கத்துக்க!” குமாஸ்தா கதை சொல்லிக் களைத்துப்போய்ப் படுத்துக் கொள்ளும் போது விளக்கும் அணைந்து போய்விடும். சாமந்தா கொடுக்கும் எண்ணெயில் விளக்கு இரவு ஒன்பதுக்குமேல் எரியாது. எனக்குக் கிடைத்த அற்ப உபகாரச் சம்பளத் தொகை முக்கியமான செலவுகளுக்குத்தான் சரியாயிருந்தது., எண்ணெய் வாங்கப் பணம் மிஞ்சவில்லை.

இந்த நிலையிலும் கஷ்டப்பட்டுப் படித்து ஒவ்வொரு வகுப்பிலும் முதல் அல்லது இரண்டாவது மாணவனாக எட்டாம் வகுப்புவரை வந்துவிட்டேன். அதன் பிறகு பாடப் புத்தகப் பிரச்சினை தோன்றியது. ஸ்கூல் ஃபைனல் தேர்வுக்கு எழுபது எண்பது ரூபாய் விலையுள்ள புத்தகங்கள் வாங்க வேண்டியிருந்தது. சித்தப்பா கொஞ்சம் நெல்லை விற்று என் சாப்பாட்டுச் செல வுக்குப் பணம் அனுப்பினார். சாமந்தா புத்தகம் வாங்கப் பத்து ரூபாய் கொடுத்தார். தலைமையாசிரியர் பள்ளிக்கூடத்துப் புத்தகங்கள் இரண்டு மூன்று கொடுத்தார். அப்படியும் தேவையான புத்தகங்களில் பாதிகூட வாங்க முடியவில்லை.

சாமந்தா கொடுத்த பத்து ரூபாய்க்காக இன்னும் அதிகமாகக் கணக்குகள் எழுத வேண்டியிருந்தது.

சார்! எனக்கு உபகாரச் சம்பளம் கிடைத்ததும் நான் ஒரு சாதாரண மாணவன் அல்ல என்று நினைத்துக் கொண்டேன். எனக்குத் திறமையிருக்கிறது. ஸ்வாதீன் குமாரரராகிய நான் என் திறமையின் பலத்தில் மதிப்புமிக்க சுதந்திர மனிதனாக உயருவேன் என்று நினைத்தேன். எந்த நாட்டுக்காக என் தந்தை தன் நெஞ்சின் இரத்தத்தைக் கொட்டினாரோ அந்த நாட்டில் நானும் எனக்குரிய இடத்தைக் கண்டுபிடிப்பேன் என்று மனப்பால் குடித்தேன். ஆனால் சரியாகப் படிக்க முடிய வில்லை என்னால். தேர்வும் சரியாக எழுதவில்லை. தேர்வு முடிவுகள் வெளிவந்த போது நான் மூன்றாம் பிரிவில் தேறியிருந்தேன்.

தலைமை ஆசிரியரிடமிருந்து தொடங்கி எல்லாரும் என்னைக் கடிந்து கொண்டார்கள். சாமந்தாவின் ஒரு பிள்ளை பி.ஏ. தேறவில்லை. அவன் எப்போதும் ஹல்தி ஆற்றங்கரையில் கையில் துப்பாக்கியுடன் சுற்றுகிறான், காதா கோஞ்ச்சா பறவையை வேட்டையாடுகிறான், “இவன் பாஸ் பண்ணினதே அதிருஷ்டந்தான்! எவ்வளவு கெட்டிக்காரப் பையங்களெல்லாம் ஸ்கூல் ஃபைனல்லே ஃபெயிலாயிடறாங்க!” என்றான் அவன்.

நான் இரண்டு நாட்கள் வீட்டுக்குள் அடைந்து கிடந்தேன். சாப்பிடவில்லை. இதற்குள் என் நெற்றியின் மேல் அம்மாவின் கண்ணீர் கொட்ட ஆரம்பித்து விட்டது.

“எழுந்திருப்பா, எழுந்திரு! நல்லாப்படி! நீ நிச்சயம் வாழ்க்கையிலே முன்னேறுவே! ஒன் மாதிரி எவ்வளவு பசங்க கஷ்டப்பட்டுப் படிச்சும் ஃபெயிலாயிட்டாங்கறதை யோசிச்சுப் பாரு!

சார், நான் என்னைத் தேற்றிக் கொண்டேன். கல்கத்தாவுக்கு வந்தேன். சாமந்தாவின் உறவினரான சர்க்கார் என்பவரின் குடும்பம் கலகத்தாவில் இருந்தது. அவர்கள் பரா பஜாரில் கடை வைத்துக்கொண்டு புகையிலை வியாபாரம் செய்து வந்தார்கள். சாமந்தா அவர்களுக்கு ஒரு கடிதமெழுதி என்னிடம் கொடுத்தார். சர்க்காரின் கடையில் எனக்கு இடங் கிடைத்தது.

இங்கும் எனக்கு வேலை செய்ய நேர்ந்தது. சர்க்காரின் கடையில் உதவிசெய்வது, தேவைப்பட்டால் வெளியேபோய் நிலுவை வசூல் செய்வது. இருந்தாலும் கல்கத்தா கல்கத்தாதான். விசாலமான வாழ்க்கை, எவ்வளவோ வாய்ப்புகள்! பெரிய பெரிய கல்லூரிகள், புகழ் பெற்ற ஆசிரியர்கள், அவர்களுடைய எல்லையற்ற அறிவின் ஒரு சிறு துளி கிடைத்தாலே என்னுள்ளே ஆயிரம் விளக்குகள் பிரகாசமாக எரியத் தொடங்கும். உலகத்தின் உயிர்த் துடிப்புடன் ஒரு தடவை என்னால் ஒன்றிவிட முடிந்தால் திறந்த வான வெளியில் தலையுயர்த்தி நிற்பேன் நான்! காய்ந்து கிடக்கும் புல்லின் மேல் முதல் மழையின் நீர்த் துளிகள் விழுந்ததும் புல் புத்துயிர் பெற்றுச் சிலிர்த்தெழுவது போல!

சித்தப்பா நெல் விற்றுக் கொடுத்த பணத்துடன் நான் ஒரு கல்லூரிக்குப் போனேன். நெல்லை விற்றதன் விளைவாக எங்கள் குடும்பம் பல நாட்கள் அரைப் பட்டினியோ, முழுப் பட்டினியோ கிடக்க வேண்டியிருக்கும் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் நான் நன்றாகப் படித்து நல்லமுறையில் பரீட்சையில் தேறிவிட்டால்..

பிரம்மாண்டமான கல்லூரிக் கட்டிடம். அதில் தேர்த் திருவிழாக் கூட்டம். அதில் எப்படியோ முண்டியடித்துக்கொண்டு அலுவலகத்துக்குள் நுழைந்து விட்டேன்.

“மூன்றாம் பிரிவில் பாஸா..? ஐ.எஸ்.ஸி.யில் இடம் வேணுமா..? ஊஹும், இடமில்லை!”

ஒன்று இரண்டு இல்லை, சார். ஆறு கல்லூரிகள் என்னைத் திருப்பியனுப்பிவிட்டன.

கடைசியில் ஒரு சாதாரணக் கல்லூரியில் இடம் கிடைத்தது. பிறகு ஏதாவது சம்பளச் சலுகை வேண்டி அந்தக் கல்லூரியின் உதவித் தலைவரை அணுகினேன்.

“சலுகையா?” வியப்புடன் கேட்டார் அவர். “மூணாம் பிரிவில் பாஸ் பண்ணினவனுக்குச் சலுகையா?”

“சார், நான் ஏழைப் பையன்..”

“வங்காளிப் பசங்க எல்லாருமே ஏழைங்கதான். அப்படிப் பார்த்தா எல்லாப் பையன்களுக்கும் சம்பளச் சலுகை தரணும்!”

“நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன், சார்!”

எரிச்சலடைந்தார் உதவித் தலைவர். “அப்படீன்னா எதுக்குக் காலேஜுக்குப் படிக்க வந்தே? கிராமத்திலே விவசாயம் பண்ணிக் கிட்டு இருந்திருக்கலாமே! மேல் படிப்பு ஒங்களுக்கெல்லாம் உபயோகப்படாது. போ போ..என்னைத் தொந்தரவு செய்யாதே!”

சலுகை கிடைக்கவில்லை, வீடு திரும்பும்போது, சாமந்தாவின் குமாஸ்தா என்னிடம் சொல்லியது நினைவு வந்தது- “குடியானவன் பிள்ளை வித்யாசாகர் ஆகப் போறியாக்கும்!”

சார், அப்போதே நான் கிராமத்துக்குத் திரும்பிப் போயிருக்க வேண்டும். அனல் கக்கும் வயல்வெளி, அதில் உழைப்பவனின் நெற்றி வியர்வை நிலத்தில் விழுகிறது- அதுதான் எனக்குரிய இடம். நான் அங்கே திரும்பிப் போயிருந்தால் பட்டினத்தின் அவமானச் சவுக்கடி என் உடம்பில பட்டிருக்காது. ஆனால் நான் நம்பிக்கையைக் கைவிடவில்லை, சார். இறுதிவரை முயன்று பார்க்க வேண்டும் என்ற பிடிவாதம் என்னைப் பிடித்துக் கொண்டது.

சர்க்காரின் புகையிலைக் கடையில் ஓர் ஓரத்தில் நான் தங்கியிருந்தேன். சாமந்தாவோடு நான் தங்கியிருந்ததற்கும் இதற்கும் எவ்வளவு வித்தியாசம்! அங்கே நான் தங்கியிருந்த அறை சிறிதுதான் என்றாலும் அறைக்கு வெளியே விசாலமான வெட்டவெளி இருந்தது, வெளிச்சம் இருந்தது, குளிக்க ஒர பெரிய குளம் இருந்தது. இதுவோ பராபஜார் சந்து, நடுப்பகலில் கடைகளிலெல்லாம் மின்சார விளக்குகள் எரிகின்றன. மூன்று முழமே அகலமான சந்தின் இருபுறமும் வானளாவிய பெரிய பெரிய வீடுகள். அவற்றின் சுவர்கள் ஈர்த்திருக்கின்றன. காற்று இல்லை, இரவு ஒரு மணிவரை ஆயிரக்கணக்கான ஜனங்கள் ஒருவரோடு ஒருவர் இடித்துக்கொண்டு நடமாடுகிறார்கள். வரிசை வரிசையாக அமைந்துள்ள கடைகளிலிருந்து புகையிலை, வெல்லம் இவற்றின் கலவையான தீவிர நெடி, காதைத் துளைக்கும் இரைச்சல்..

இவற்றுக்கு நடுவில் ஒரு மூலையில் தங்கியிருந்தேன். இரவில் எலிகள் நடமாடும். இரவும் பகலும் கரப்புகளின் தொந்தரவு. சர்க்கார் கல்லூரிச் சம்பளத்தைக் கொடுத்து, கைச் செலவுக்காக ஐந்து ரூபாய் கொடுப்பார். அதற்குப் பதிலாக நான் காலையிலும் மாலையிலும் வெளியே போய் நிலுவை வசூல் செய்ய வேண்டும். ஆகையால் எனக்கு ஒரு டியூசன் பிடித்துக் கொண்டு அதன்மூலம் கொஞ்சம் பணம் சம்பாதிக்கவும் வழி யில்லை. புத்தகமா? ஐ.எஸ்.ஸி.க்குத் தேவையான புத்தகங் களெல்லாம் வாங்க என்ன செலவாகும் என்பதே எனக்கு இன்னும் தெரியாது. உங்களுக்கும் தெரியாது என்று நினைக்கிறேன். நீங்கள் படித்த காலத்தில் ஐந்து ரூபாய்க்குக் கிடைத்த புத்தகத்தின் விலை இப்போது பன்னிரண்டு ரூபாய்க்குக் குறையாது. நடை பாதைப் பழைய புத்தகக் கடைகளிலிருந்து ஒரு சில புத்தகங்கள் வாங்கினேன். ஆனால் தேவையான புத்தகங்களில் பாதிகூட வாங்க முடியவில்லை.

படிப்பா? சர்க்காரின் வீடு பௌபஜாரில்இருந்தது. அங்கே தான் சாப்பிடப் போகவேண்டும். சாப்பிட்டு விட்டுத் திரும்பும் போது இரவு மணி பத்தாகி விடும். பிறகு ஒரு மின்சார விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் படிக்க உட்கார்ந் தால் களைப்பில் கண்கள் அறுந்து விழுவது போலிருக்கும், நோட்டுகளில் எழுதப்பட்ட குறிப்புகள் புரியாத கிறுக்கல்களாகத் தோன்றும். என்னையறியாமலேயே தூங்கிப் போய்விடுவேன். இரவு முழுதும் எலிகளும் கரப்புகளும் என் உடம்பின்மேல் ஏறித் திரிந்த கொண்டிருக்கும்.

கல்லூரியில் ஒரே கூட்டம். ஐந்து பேர் உட்காரக் கூடிய பெஞ்சியில் ஏழெட்டு பேர் நெருக்கியடித்துக் கொண்டு உட்கார வேண்டும். குறிப்பு எடுத்துக் கொள்ளும்போது நோட்டுகளை வைத்துக்கொள்ள வசதியில்லை. ஆராய்ச்சிக் கூடத்தின் நிலை இன்னும் வேடிக்கை. பதினைந்துபேர் பயிற்சி பெறக்கடிய இடத்தில் ஐம்பது பேர் பயிற்சிபெற வேண்டும்.

நாட்டின் எதிர்கால விஞ்ஞானிகளுக்கு கல்வி கற்பிக்கப்படும் அழகு இதுதான்!

சார், அப்படியும் நான் என் முயற்சியில் குறை வைக்க வில்லை. என் போன்ற சாதாரண மாணவர்கள் படிக்கத்தான் கல்லூரிக்கு வந்திருந்தார்கள். அவர்களால் ஏன் படிக்க முடிய வில்லை, அவர்கள் ஏன் பரீட்சையில் தேறுவதில்லை..?

ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன். அதை நினைத்தால் இந்த நிலையிலும் எனக்குச் சிரிப்பு வருகிறது.

கலலூரி நிறுவன நாள் விழா. அதில் கூட்டம், கொடியேற்றம், பேச்சு எல்லாம் விமரிசையாக நடந்தன. துணைத்தலைவர் மிகவும் நன்றாகப் பேசினார். பேசும்போது அவருக்கு கண்களில் கண்ணீர் வந்து விட்டது.

“நாங்கள் சேகரித்துள்ள புள்ளி விவரங்களின்படி, நம் மாணவர்களில் சுமார் பத்து சதவிகிதத்தினர்தான் எல்லாப் புத்தகங்களையும் வாங்க முடிகிறது, இருபது சதவிகிதத்தினர் சில புத்தகங்கள் மட்டும் வாங்குகிறார்கள், எஞ்சியவர்களால் ஒரு புத்தகங்கூட வாங்க முடிவதில்லை. இந்த நிலையில் நாங்கள் அவர்களுக்குக் கல்வியளிப்பது எப்படி? இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டால் நாடு எவ்வளவு முன்னேறும்..!”

தீர்வைத்தான் அவர் முன்னமே சொல்லியிருந்தாரே ‘கல்லூரிப் படிப்பு ஏழை மாணவர்களுக்காக அல்ல!’ என்று..

இரண்டு மணி நேரம் கடந்து விட்டதை அறிவிக்கும் மணி அடித்து விட்டது. இன்னும் அதிக நேரம் என்னால் எழுத இயலாது, நீங்கள் இதுவரை படித்திருந்தால் உங்கள் தாராள மனதுக்கு இன்னும் தொந்தரவு கொடுக்கக் கூடாது. ஆகையால் என் கதையை சுருக்கமாகவே சொல்லி முடித்து விடுகிறேன். என் தாய்க்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவர் சொல்லியபடி சித்தப்பாதான் எனக்குத் தாறுமாறான கையெழுத்தில் கடித மெழுதுவார்.

“நீ பெரியவனாகு அப்பா, பெரிய மனிதன் ஆகு! உன் அப்பாவின் பெயரைக் காப்பாத்து! சுதந்திர பாரதத்தின் தொண்டனாக நீ உழைக்க வேண்டும் என்பதை மறக்காதே!”

நான் மறக்கவில்லை, ஒருநாள் கூட மறக்கவில்லை. ஆனால் சுதந்திர பாரதம் எனக்கு உதவவில்லை, என் கல்விக்கு வசதி செய்யவில்லை. புகையிலைக்கடையில் வேலை செய்து, வகுப்பு என்ற பெயரில் அர்த்தமற்ற இரைச்சலுக்கு நடுவில் உட்கார்ந்து, வெக்கையும் வியர்வையும் இரைச்சலும் நிறைந்த பராபஜார் சந்தில் மஞ்சள் விளக்கு வெளிச்சத்தில் எல்லாம் மங்கலாகத் தெரிய.. மண்டைக்குள் நரம்புகள் வெடித்துவிடும் போலிருக்கும். அங்கிருந்து ஓடிப்போய்விடத் தோன்றும் எனக்கு. ஓர் ஆழமான ஏரியின் கறுப்புத் தண்ணீரில் குதிக்கத் தோன்றும். சம்பகப்பூ, நாங்குப் பூக்களின் மணத்தை முகர்ந்து, நெஞ்சை நிரப்பிக் கொள்ள மனது ஏங்கும். மழைக் காலத்துக் கார் மேகத்தை நோக்கிக் கையை நீட்டிப் பாடத் தோன்றும்.

“மழையே, ஓடி வா பாய்ந்து! நெல் கொடுக்கிறேன் அளந்து!”

ஆனால் கல்கத்தாவில் ஏரியின் கறுப்பான, குளிர்ந்த நீருக்கு எங்கே போவது? நாங்கு, கோங்கின் மணம் ஏது? எங்கள் வீட்டில் வயிறு நிறையச் சாப்பிட நெல்லும் இல்லை, எங்கள் வீட்டு மக்களின் பசித் தீயை நணைக்க ஒரு பொட்டு மழையும் இல்லை.

எங்கே ஓடிப் போவேன் நான்?

எப்படியும் நம்பிக்கையிழக்க மாட்டேன் நான்! நான் பிழைத்துக் கொள்வேன், பெரியவனாவேன்! நானில்லாவிட்டால் கொதியுலை எரியாது, நீர் மின்சாரம் பிறக்காது, அணு ஆராய்ச்சிப் பணிநிறைவு பெறாது. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெட்ரோல், நீல எண்ணெய், மெழுகு இவையெல்லாம் உருப் பெறாது! சிற்பி மயனின் இரகசிய மந்திரத்தை நான் அவனிட மிருந்து பிடுங்கிக் கொள்ள வேண்டும்! நான் சுதந்திர பாரதத்தின் விஞ்ஞானி.

சார், எல்லாம் கனவு! வங்காளத்தின் கல்லூரிகளில் என் போன்ற எண்ணற்ற மாணவர்கள் இது மாதிரி கனவுகளுடன் நடமாடுகிறார்கள். ஒரு நாள் அவர்களது கனவு தகர்ந்து போய்விடும்..

நான் சரியாகப் படிக்க முடியவில்லை, சார்! எப்போது படிப்பேன், எப்படிப் புத்தகம் கிடைக்கும் எனக்கு? புத்தகங்களை யாரிடமாவது கேட்டு வாங்கி, மஞ்சள் விளக்கின் மங்கிய வெளிச்சத்தில் உட்கார்ந்தால் எழுத்துகள் கிறுக்கல்களாக, வரிசை வரிசையாக, நெளியும் புழுக்களாபக் கண்ணுக்குத் தெரிந்தன. பிறகு நரம்புகள் தளர்ச்சியடையும், உணர்வுகள் மயங்கும், புகையிலை, வெல்லக் கழிவு, எலி, கரப்பு, வெக்கை இவற்றின் கலவையான நெடியை முகர்ந்தவாறு நான் காலையில் விழிக்கும்போது என் தலைமேல் இருபது மணுச்சுமை ஒன்று அழுத்திக் கொண்டிருப்பது போலிருக்கும். அப்பறம் எட்டுமணி அடிப்பதற்குள் கடைக்கணக்க வழக்கு வேலை1

முதலாண்டுப் பரீட்சையில் யாரும் ஃபெயிலாவதில்லை. கல்லூரிச் சம்பளம் கொடுத்திருந்தவர்கள் எல்லாருமே பாஸ்! இரண்டாம் ஆண்டில் இறுதித் தேர்வுக்கு முந்தய நுழைவுத் தேர்வு வந்தது.

சார், இந்த இடத்தில் என் தவறு ஒன்றை ஒப்புக் கொள்கிறேன். நுழைவுத் தேர்வு நெருங்க நெங்க என் மனதில் எப்போதும் அணையாத நெருப்பு ஒன்று எரியத் தொடங்கி விட்டது. எனக்கு ஒரு சில புத்தகங்கள் மட்டும் கிடைத்துவிட்டால் நான் இறுதிப் பரீட்சையில் முதல் பிரிவில் இல்லாவிட்டாலும் இரண்டாம் பிரிவிலாவது பாஸ் செய்து விடுவேன், கணக்கில் சிறப்பு மதிப்பெண்ணும் பெற்று விடுவேன்!

சார், என் மேல் கோபித்துக்கொள்ளாதீர்கள். என் நிலையைப் புரிந்து கொள்ளுங்கள். எனக்கு வெறி பிடித்துவிட்டது.

அதன்பின்.. அதன்பின் நான் என் சக மாணவர்களின் புத்தகங்களைத் திருடத் தொடங்கினேன்!

நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டாலும் நினைத்துக் கொள்ளுங்கள். நான் திருடனாகி விட்டேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லையே! என் தந்தை நாடு சுதந் திரம் பெறுவதற்காகத் தம் இரத்தத்தைக் கொடுத்தார். அவருடைய மகனான நான் திருடனாகி விட்டேன்!

மாணவர்கள் என் பாடப் புத்தகங்களைத் திடுகிறார்கள், தேர்வில் காப்பியடிக்கிறார்கள். பிடிபட்டால் காட்டு மிராண்டித் தனமாக நடந்து கொண்டு தேர்வு அரங்கத்திலிருந்து வெளியேறுகிறார்கள்? இவையெல்லாம் தவறுகள்தான், மிகப் பெரிய தவறுகள்தான். யாரும் இவற்றை ஆதரிக்கவில்லை.. ஆனால் இவை ஏன் நிகழ்கின்றன? மாணவர்கள் ஏன் தவறான வழிகளில் செல்கிறார்கள்? இது எவ்வளவு முக்கியமான விஷயம் என்பதை யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா..?

திருடப்பட்ட புத்தகங்களைப் படித்து எப்படியோ நுழைவுத் தேர்வில் தேறிவிட்டேன், இனி இறுதித் தேர்வு.

அதற்குப் பணம் கட்டவேண்டும் .. நிறையப் பணம்.

சித்தப்பாவின் கடிதத்திலிருந்து கிராமத்தில் எங்கள் குடும்ப நிலை மிகவும் மோசமாயிருப்பதாகத் தெரிந்தது. அறுவடையாகிச் சிறிது காலமே ஆகியிருந்தும் நெல் பற்றாக்குறை; உண்டியலை உடைத்து அதிலிருந்த காசையும் செலவு செய்தாகி விட்டது. இனி எனக்குப் பணம் அனுப்புவதானால் மாட்டை விற்க வேண்டியதுதான்.

“மாட்டை விற்கவேண்டாம். நான் எப்படியோ சமாளித்துக் கொள்கிறேன்” என்று சித்தப்பாவுக்குக் கடிதம் எழுதிவிட்டேன். ஆனால் பணத்துக்கு என்ன செய்வது? மாணவர் உதவி நிதியிலிருந்து பதினைந்து ரூபாய் கிடைத்தது. பாக்கிப் பணம்?

சர்க்கார் என்னைக் கூப்பிட்டனுப்பினார். “தேர்வுக்கு வேண்டிய பணம் ஐம்பது ரூபாயை நான் தருகிறேன், கவலைப் படாதே! என்றார்.

எவ்வளவு இரக்கம் அவருக்கு!

பிறகு புரிந்தது, அது வெறும் இரக்கம் அல்ல என்று. அதற்குப் பின்னால் ஒரு பயங்கரக் கோரிக்கை இருந்தது. உலகத்தில் ஒவ்வோர் இரக்கச் செயலுக்கும் ஒரு பயங்கர விலை கொடுக்க வேண்டும். பணம் கிடைத்தது. அந்தக் கடனைத் தீர்க்க இரண்டு மாதங்கள் உழைக்க நேர்ந்தது.

நம்புவீர்களா, சார்? கணக்கு, இயற்பியல், வேதியியல், வங்காளி, ஆங்கிலம் படிக்க முடியவில்லை என்னால். ஐம்பது ரூபாய்க்காக நான் அயர்ந்து மயங்கும் கண்களுடன், தலைமேல் இருபது மணுச்சுமையுடன் இரவு கண் விழித்துக் கணக்கு வழக்குகள் தயார் செய்தேன். வருமான வரி அதிகாரிகளின் கண்ணில் மண் தூவுவதற்காகப் போலிக் கணக்குகள்!

இவ்வாறு என் ஒவ்வொரு நரம்பையும் ஒவ்வொரு துளி இரத்தத்தையும் செலவிட்டு நான் அந்த ஐம்பது ரூபாய்க் கடனைத் தீர்த்தேன்.

இதற்குப் பிறகு படிக்க முடியுமா? நான் மாமனிதன் அல்லவே!

அப்படியும் தேர்வு எழுத வந்து விட்டேன். இறுதிவரை நம்பிக்கையிழக்கவில்லை நான். கடைசி நேரத்தில் ஏதாவது அற்புதம் நிகழும் என்று நம்பினேன் நான். தேர்வில் காப்பியடிப் பதற்காகப் புத்தகங்களின் சில பக்கங்களைக் கிழித்துக் கொண்டு வந்திருந்தேன். ஆனால் நான் எதிர் பார்த்த அற்புதம் நிகழவில்லை. முதல் மூன்று நாள் தேர்வுகளில் அந்தக் கிழிந்த காகிதத் துண்டு களைச் சட்டைப் பையிலிருந்து வெளியே எடுக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை எனக்கு. சர்க்காரின் போலிக் கணக்குப் புத்த கங்கள் என் கண்முன் நடனமாடத் தொடங்கின. பக்கத்திலுள்ள மாணவர்களும் தேர்வு அரங்கிலிருந்த கண்காணிப்பாளர்களும் அந்த புத்தகங்களின் பக்கங்களாகத் தோற்றமளித்தார்கள்..

இந்த வங்காளிப் பரீட்சைதான் கடைசிப் பரீட்சை.

சார், எச்சரிக்கை மணி அடித்து விட்டது. இன்னும் ஐந்து நிமிடங்களில் விடைத்தாளைப் பிடுங்கிக் கொண்டு விடுவார்கள். நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி முடித்து விட்டேன். இன்று இருட்டியதுமே நான் ஏதாவதொரு ரயிலுக்கடியில் என் சுமை முழுவதையும் இறக்கி வைத்து விடுவேன்.

நான் பிழைத்திருந்து வாழ விரும்பினேன் சார்! ஸ்வாதீன் குமாரான நான் சுதந்திர பாரத நாட்டுக்காக வாழ விரும்பினேன். நான் ஏன் வாழ முடியவில்லை என்ற கேள்வியை என் போன்ற ஆயிரமாயிரம் மாணவர்களின் சார்பில் உங்கள் முன் வைத்து விட்டுப் போகிறேன். இதன் விடையை யோசித்துப் பாருங்கள்!

நான் கோழைபோல் தற்கொலை செய்து கொள்கிறேனா? இல்லை, சார்–இல்லவேயில்லை இது என் தோல்வியல்ல, என் எதிர்ப்பு! ஆயிரத்த் தொள்ளாயிரத்து நாற்பத்திரண்டாம் ஆண்டின் செப்டம்பரில் ஒரு பிரளய இரவில் என் தந்தை தன் நெஞ்சின் இரத்தத்தை இந்த நாட்டு மண்ணில் கொட்டினார். அதுபோல் என் இரத்தமும் நாட்டின் இலட்சக்கணக்கான மாணவ மாணவியரின் சார்பாக ஒரு புதிய வரலாற்றைத் தொடங்கி வைக்கும். அந்த வரலாறு எப்போது முழுமை பெறும் என்று எனக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரியுமா, சார்! உங்களால் சொல்ல முடியுமா?

வணக்கம்!

நாராயண் கங்கோபாத்தியாய் (1918 – 1970)
நரேந்திர நாத்தின் சக மாணவர். இருவரும் ஒரே சமயத்தில் இலக்கியப் பணியைத் தொடங்கினர். நாராயண் கங்கோபாத்தியாயின் உண்மைப் பெயர் தாரக்நாத் கங்கோபாத்தியாய், பிறந்தது தினாஜ்பூரில். கல்கத்தா பல்கலைக் கழகத்தில் வங்காளிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், திரைக்கதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம், பாடல், செய்திப் பத்திரிகைக்கான கட்டுரை ஆகிய பலதுறைப் படைப்பிலும் தேர்ந்தவர். முதல் நாவல் உபநிவேஷ் (1944) மூலம் புகழ் பெற்றார். வெளியுலகம், மன உலகம் இரண்டுமே இவருடைய படைப்புகளில் இணைந்துள்ளன. இவர் ரொமாண்டிக் எழுத்தாளர். கூடவே நடப்பியல் எழுத்தாளருங்கூட கவிதைத்தன்மையும் வெளிப்பாட்டுச் செறிவும் நிறைந்த மொழியில் இவர் தம் கற்பனையுலகைப் படைக்கிறார். மனிதனோடு இயற்கையும் இவருடைய படைப்புகளில் இடம் பெறுகிறது. ஈவிரக்கமின்றி சமூகத்தைப் பகுத்து ஆராய்வதோடு ரொமாண்டிக் மனப்போக்கும் இயற்கையில் காதலும் கொண்டவர்.

– ‘எக்சிபிஷன்’, 1968.

– அனைத்திந்திய நூல் வரிசை, வங்கச் சிறுகதைகள், முதற் பதிப்பு: 1997, தொகுப்பு: அருண்குமார் மகோபாத்யாய், வங்கத்திலிருந்து தமிழாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி, நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.

நன்றி: http://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *