மண்ணும் மழைத்துளியும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 30, 2023
பார்வையிட்டோர்: 1,580 
 
 

ஒரு பெண்ணுக்கு சம வயதுள்ள ஓர் ஆணின் மீது மட்டும் காதல் வருவதில்லை. காதல் என்பது ஒரு வித மன ஈர்ப்பு. அது காலம், நேரம், வயது, ஆண்,பெண் என பிரித்துப்பார்ப்பதில்லை. காதல் என்றாலே திருமணத்தில் தான் முடிய வேண்டும், திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருப்பவர்கள் மட்டுமே காதலிக்க வேண்டும் என்கிற சட்டங்கள் எதுவும் காதலுக்கு இல்லை. ஆனால் காதலில் பல வகை உண்டு. ஆழ்ந்த நட்பு கூட காதலர்களின் செயல்பாடுகளைப்போல இருக்கும். அதில் நம் காதல் எவ்வகையென்பதை காதலில் விழுந்தவர்கள் பிரிந்தறிந்து அதற்கேற்ப ஒரு நாளும் பிழை வராமல் வாழ்வதென்பதே ஒரு கலை.

மிருகங்கள், பறவைகள், மீன்கள், வானம், மண்,பொன், கார், வீடு, மரங்கள், கட்டிடங்கள், ஓவியங்கள், செடிகள், பூக்கள், நாய்கள், பூனைகள், படிப்பு, வேலை, புத்தகங்கள், கதைகள், கவிதைகள், ஆடைகள், அலங்காரங்கள், ஆபரணங்கள், உணவு, மது, மழைத்துளி, ஆறு, கடல் என மற்ற உயிருள்ள, ஜடப்பொருட்கள் மீது வேண்டுமானாலும் விருப்பம் வரலாம். அது வேறு வகையான நிலையைக்கொண்டிருப்பது. அதற்க்கு ஒரு பக்க நேசம் போதுமானது. 

மனித காதலென்பது இரண்டு பக்கமும் ஒரே மாதிரி உருவாகி காற்றும் மணமும் போல் கலந்து உன்னதமாக மாறுவது. நினைப்பது, மறக்காமலே இருப்பது, உயிரோடு கலந்திருப்பது, உடலின் ஈர்ப்பால் வருவது, ஏக்கம் தருவது, தூக்கம் கெடுப்பது, ஆக்கமான விசயங்களில் நாட்டம் செல்லாது, என்ன பேசுகிறோம்? எதைப்பற்றிப்பேசுகிறோம் என்பதைப்பற்றி ஆராயாதது என்பதையும் தாண்டி விருப்பு வெறுப்பின்றி ஒரு வித தவ நிலையை ஒத்த நிலையை உண்டாக்குவது. காதலைத்தாண்டிய புனிதமான செயல்பாடுகளை உள்ளடக்கி உயர் ரக நட்பின் வெளிப்பாடாக மாறுவது ஒரு வகை. இஃது அனைவருக்கும் சாத்தியமில்லாதது.

மனித காதல்களிலும் பலாபலன்களை எதிர்பார்த்து வரும் காதல், சூழ்நிலையால் வரும் காதல், பாது காப்பு கருதி அடைக்கலமாவதால் வரும் காதல், தேவைகளைப்பூர்த்தி செய்து கொள்ள பிறர் உதவுவதால் வரும் காதல் என்பதற்கு மேல் அன்னலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் என ராமனும் சீதையும் கொண்ட, எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி வந்த காதல், கணவன் கானகம் சென்ற போது தானும் சுகத்தைத்துறக்க உறுதி கொண்டதுமான‌ நிலையில் அது தெய்வீகமானது, காதலில் உயர்வானதாகக்கருதி வாழ்த்தப்பட்டு, இன்று வரை போற்றப்படுகிறது. 

நட்புக்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்யும் நிலையான காதலும் உண்டு. அதை மண்ணில் விழும் மழைத்துளி எவ்வித பிரதிபலனும் பார்க்காமல் பிற உயிர்கள் வாழ ஒரு தியாகியைப்போல் செயல்படுகிறதோ அது போல. 

மனித உலகம் இயங்க காதலே எரிபொருள் என்பது போல காதல் செய்யாத மனிதர்களே இல்லையென கூறிவிடலாம். ஒரு பக்க காதலும் உண்டு. இருவருக்குள்ளும் சம ஈர்ப்பை கொடுத்து திட்டமிடுதலும், ஏமாற்றுதலுமின்றி எதுவுமற்ற நிலையை ஏற்படுத்தும் வகையே உயர்ந்தது, உயிரோட்டமானது,உன்னதமானது. அது பெயரற்றது, உருவமற்றது.

சுந்தரனுக்கும் தன்னுடன் கல்லூரியில் படித்த சங்கரி மீது நடிப்பற்ற பிடிப்பு வந்தது . சங்கரிக்கும் சுந்தரனை மிகவும் பிடித்திருந்தது. படிப்பில் உள்ள சந்தேகங்களை பகிர்ந்தார்களே தவிர தங்களது தேகத்தின் விருப்ப நிலையில் மனதாலும் இருவரும் சிந்தித்ததே இல்லை.

“என்னடி சங்கரி, காலேஜ்ல உங்களைத்தான் காதல் பறவைகள்னு பேசிக்கறாங்க. வர்ற லீவுல ஊட்டி, கொடைக்கானல்னு போக பிளான் ஏதும் இருக்கா?” தோழி மீரா கேட்டபோது மறுத்தாள்.

“இன்னும் நூறு வருசம் ஆனாலும் இந்த சிந்தனை மாறவே மாறாதா? எல்லாரும் பேசினா பேசி விட்டு போகட்டும். நீயுமா..?”

“அப்படியில்ல. நானும் என்னை விரும்புகிற ஒருத்தனை தேடிக்கிட்டே இருக்கேன். ஒரு பையனும் செட்டாகல. உனக்கு மட்டும் எப்படி காலேஜ் வாசல்ல அடியெடுத்து வைக்கும் போது உன்னோட பேனாவ நீ கீழே போட, அத வானத்துல இருந்து பறந்து வந்த மாதிரி அவன் எடுத்துக்கொடுக்க, நீ தேங்ஸ் சொல்ல, அவன் வெல்கம் சொல்ல உடனே பத்திகிட்ட மாதிரி கேட்டீன் முதல், கேட்டுக்கு வெளில போகிற வரைக்கும் உனக்கு பிஏ மாதிரியே சுத்திகிட்டிருந்தா வேற என்னன்னு சொல்லறது…?”

“மூனு வருசம் ஓடிடுச்சு. நானும் அவனும் கல்யாணம் பத்தியோ, வருங்காலம் பத்தியோ பேசல. படிப்ப பத்தி மட்டும் தான் பேசறோம்”

“உலகத்துலயே வித்தியாசமா இருக்கீங்க. இன்னைக்கு பிடிச்சா நாளைக்கு சினிமா, நாளானிக்கு, பீச், பார்க், ஹோட்டல்னு போற காலத்துல ஆத்மார்த்தமான நட்புன்னு சொல்லறே? அப்ப காதல்னு கூட நீங்க நினைக்கிலையா?”

“அது தான் நிஜம். எங்க வீட்ல என்னோட பெற்றோரை எப்படி நினைக்கிறேனோ அது போலத்தான் சுந்தரனையும் நினைக்கிறேன். இதுவரைக்கும் ஒரு நாள் கூட உடம்போட அழகப்பத்தியோ , போட்டிருக்கிற டிரஸ் பத்தியோ பேசுனதே இல்லை” என பேசிக்கொண்டிருந்த போது சுந்தரன் வந்து சங்கரியுடன் படிப்பு பற்றி பேசத்தொடங்க, மீரா இருவரது பேச்சுக்கும் இடையூறு செய்யாமல் விலகிச்சென்றாள்.

படிப்பு முடித்ததும் சங்கரிக்கு வேலை கிடைத்து விட பெங்களூர் சென்றவள் தினமும் செல்போனில் மட்டும் அங்கே நடக்கும் விசயங்களைப்பற்றி பேசுவதும், சுந்தரனுக்கு வேலை கிடைக்காத நிலையில் மேற்படிப்பு செலவை முழுவதும் தானே ஏற்றதுமான நிலையில் சுந்தரி மீது அளவற்ற நம்பிக்கையும், ஆழமான நட்பின் நெருக்கமும் அதிகமானது சுந்தரனுக்கு.

இந்த நிலையில் சுந்தரிக்கு உறவில் திருமண வரன் அமைய பிடித்துப்போனதால் ஒத்துக்கொண்டாள். இதைக்கேள்விப்பட்ட சுந்தரனும் மகிழ்ச்சிப்பட்டான். திருமணத்துக்கு ஒரு வாரம் முன்பே வந்திருந்து தங்கள் உறவுகளுடன் சேர்ந்து கொண்டு அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்து சுந்தரியின் மனதை மகிழச்செய்தான்.

கல்லூரித்தோழிகள் சங்கரியை அழைத்து”என்னடி சுந்தரனுக்கு இப்படி பச்சைத்துரோகம் பண்ணிட்டே? உனக்கு மனசாட்சியே இல்லையா?” என திட்டிய போது மௌனத்தையே பதிலாகத்தந்தாள். ‘தங்களுடைய நட்பின் நிலை என்னவென யாருக்கும் புரியவில்லையே…’ என வருந்தினாள்.

‘ஒரு பையனோடு ஒரு பொண்ணு பேசினாலே காதல்னும், அவனையே கல்லயாணம் பண்ணிக்கனம்னும் சொன்னால் எத்தனை பேரை கல்யாணம் பண்ணிக்க முடியும்? படித்தவர்களே புரிந்துகொள்ளவில்லையென்றால் படிக்காதவர்களை எப்படி புரிய வைப்பது? யாரோ எதுவோ நினைத்து விட்டுப்போகட்டும். சுந்தரனுக்கும் எனக்கும் உள்ள நட்பை கணவன் ராகவன் புரிந்து கொண்டால் போதும். சுந்தரனைப்போல சபலத்தால் சங்கடம் தராத புரிதல்களுடைய புத்திசாலியான, நண்பனை, விட்டு சுத்தமாக விலகியிருப்பது இரண்டு கண்களில் ஒன்றை எடுப்தற்குச்சமம்’ என மனதுள் நினைத்து மேலும் அவனது நட்பை உறுதிப்படுத்திக்கொண்டாள்.

திருணம் முடிந்து கணவன் ராகவனுடன் இல்லற வாழ்க்கையை இனிதே தொடங்கினாள். மகிழ்ச்சியான இல்லற வாழ்வில் இரண்டு குழந்தைகளுக்கு தாயானவள், திடீரென தன் உடலைத்தாக்கிய நோயால் அதிர்ச்சியடைந்து வருந்தினாள். கேள்விப்பட்டு மருத்துவ மனைக்கே வந்த சுந்தரனும் அவனது நிலை கண்டு கண் கலங்கினான்.

சில நாட்களிலேயே கணவன் கைவிட்டுச்சென்று விட , வேலைக்கும் செல்ல இயலாமல், குழந்தைகளின் கல்வி செலவும், தனக்கான மருத்துவ செலவும் அதிகரிக்க கலங்கியவளை சுந்தரன் தன் வீட்டிற்கு அழைத்துச்சென்று தனது வேலையால் கிடைக்கும் சம்பளத்தைக்கரைத்தும் சுந்தரியை காப்பாற்ற முடியவில்லை.

இன்னும் சில நாட்கள் தான் உயிருடன் இருக்கப்போகிறோம் என்பது தெரிந்த போது மனமுடைந்து கதறியழுத போது, அவளது குழந்தைகளை சுந்தரன் காப்பாற்றி விடுவான் எனும் நம்பிக்கை மேலோங்க நிம்மதியானாள்.

ஒரு நாள் அவளால் நடக்க இயலாத நிலையில் ஒரு தாய் தன் குழந்தைக்கு செய்வது போன்ற பணிவிடைகளை சுந்தரன் செய்த போது ‘இப்படிப்பட்ட நட்புடன் இந்த பூமியில் வாழ முடியவில்லையே?’ என கலங்கினாள்.

அவன் மீது இது வரை வராத காதல் தற்போது அவளுக்குள் துளிர் விட்டது. ஆம், நட்பு காதல் போர்வையை போர்த்திக்கொள்ள விரும்பியது.

அவன் எப்போதும் போல இப்போதும் நட்பிலிருந்து ஒரு அடி கூட எடுத்து காதலுக்குள் வைக்காதவனாகவே இருந்தான். அவனை ஒரு முறையாவது இறுக கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டுமென தோன்றியது. இந்த விருப்பத்தை அவனிடம் சொன்னால் கடைசி ஆசையென நிறைவேற்றுவான். ஆனால் இத்தனை கால நட்புக்கு கலங்கம் ஏற்படக்கூடும் என அவளது மனசாட்சி கூறியதால் தன் மனம் இஷ்டப்பட்ட சிந்தனையை அறிவெனும் கருவியால் கஷ்டப்பட்டு மனதிலிருந்து வெளியேற்றினாள்.

சுந்தரியின் இறப்பிற்குப்பின் அவளது குழந்தைகளை தாயும், தந்தையுமாகி வளர்த்தான். உலகம் அவனது செயலை “சுந்தரனுக்கும், சங்கரிக்கும் பிறந்த குழந்தைகள் போலிருக்கு. இல்லேன்னா தன் குழந்தைகளைப்போல கல்யாணமே பண்ணிக்காம பார்த்துக்குவானா என்ன?” என பலரும் பேசியதை காதில் வாங்கிக்கொள்ளாமல் தன் கடமையைச்செய்தான் சுந்தரன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *