மண்ணாங்கட்டி என்ன செய்யும்? – ஒரு பக்க கதை

1
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 22, 2020
பார்வையிட்டோர்: 22,510 
 
 

‘திராட்சைப் பழம் சாப்பிடலாம் என்றால்
ஏன் வைன் குடிக்கக்கூடாது?’

சாது பெரிதாக எதுவும் சாப்பிடுவதாகத் தெரியவில்லை. அனேகமாகப் பழங்களைத்தான் சாப்பிடுவது வழக்கம். அன்று புதிதாக ஆச்சிரமத்திற்குச் சேவை செய்ய வந்த சீடன்தான் பழத்தட்டுடன் அவரிடம் வந்தான். அவர் பழங்களைச் சாப்பிடும்போது அதை வியப்போடு பார்த்துக் கொண்டு நின்றான். சாது சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தார்.

‘என்னப்பா அப்படிப் பார்க்கிறாய், நீ இன்னும் சாப்பிடவில்லையா?’ என்றார்.

‘உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கலாமா?’ என்றான் சீடன்.

‘நிச்சயமாக, சந்தேகம் பொல்லாதது, அதை உடனேயே நிவர்த்தி செய்து விடவேண்டும், இல்லாவிட்டால் அது மனிதரையே அழித்துவிடும், கேள் மகனே’ என்றார் சாது.

‘நீங்கள் இந்த திராட்சைப் பழங்களைச் சாப்பிடுகிறீர்களே, அது மனிதருக்குத் தீங்கு விளைவிக்குமல்லவா?’ என்றான் சீடன்.

‘பழங்கள் சாப்பிடுவது எனக்குத் தவறாகத் தெரியவில்லையே’ என்றார் சாது.

‘அப்படி என்றால் திராட்சைப் பழத்தில் இருந்து வடித்தெடுக்கும் சாறுதானே வைன் என்னும் பானம், அதை அருந்தக்கூடாது என்று ஏன் எல்லோரும் உபதேசம் செய்கிறார்கள். அதை அருந்தினால் மட்டும் ஏன் தீங்கு விளைவிக்கும் என்கிறார்கள்?’ என்றான் சீடன்.

‘உண்மைதான், எதுவுமே வேறு உருவம் பெறும்போது, அல்லது அதன் தன்மை மாறும்போது அதனால் ஏற்படும் பலாபலனும் மாறிவிடும். திராட்சைப் பழத்தின் சாற்றைப் புளிப்படைய வைத்து அதன் தன்மையை மாற்றுவதால் அது மனிதரை வெறிக்கச் செய்து நிலை தடுமாற வைத்துவிடுகிறது. அதனால்தான் மதுபானம் தீமை விளைவிக்கும் என்கிறார்கள்’ என்றார் சாது.

‘அதெப்படி, பழம் சாப்பிடலாம் என்றால் அதன் சாற்றைக் குடிப்பதும் தவறில்லை என்றல்லவா எடுக்க வேண்டும். சாற்றைக்குடித்தால் வெறிக்கும் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை, அப்படி ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது.’ என்று வாதாடினான் அந்த சீடன்.

சாது அருகே நின்ற மற்றைய சீடர்களைப் பார்த்தார். ஒரு சிலர் அந்தச் சீடன் சொல்வது சரியாய் இருக்குமோ என்பது போன்ற சந்தேகத்தோடு குருவைப் பார்த்தார்கள்.

நெருப்பு சுடும் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நெருப்பைத் தொட்டுத்தான் பார்க்கவேண்டுமா?

ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷமே போதுமே என்பதை உணர்ந்து கொண்ட சாது அவர்களை வெளியே அழைத்துச் சென்று ஒரு தண்ணீர் தொட்டியருகே அந்தச் சீடனை உட்காரச் சொன்னார். ஏனைய சீடர்களைப் பார்த்து அவனது தலையிலே ஒரு பிடி மண்ணை அள்ளி ஒவ்வொருவராகப் போடச் சொன்னார். அவர்கள் மண்ணைப் போடும்போது நோகிறதா என்று சாது கேட்டார். சீடனோ அலட்சியமாய் இல்லை என்று பதிலளித்தான். அதன் பின் அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீரைக் கிண்ணத்தில் எடுத்து ஒவ்வொருவராக அவனது தலையிலே ஊற்றச் சொன்னார். அதற்கும் அந்தச் சீடன் நோகவில்லை என்றே அலட்சியமாகப் பதிலளித்தான்.

‘அடுத்து என்ன செய்வது?’ என்று சீடர்கள் குருவிடம் கேட்டார்கள்.

அருகே அடுக்கி இருந்த செங்கட்டிகளை ஒவ்வொன்றாக எடுத்து அவனது தலையிலே போடச் சொன்னார். சீடர்கள் செங்கட்டிகளை ஒவ்வொன்றாகத் தூக்கிக் கொண்டு அந்தச் சீடனுக்கு அருகே வந்தபோது அந்தச் சீடன் தலையிலே கையை வைத்துத் தடுத்தபடி பயந்துபோய் துடித்துப் பதைத்து எழுந்து ஓடிவந்து சாதுவிடம் ‘குருவே புரிந்து கொண்டேன்’ என்று மன்னிப்புக் கேட்டான்.

சாது சிரித்துவிட்டுச் சொன்னார், ‘மண்ணைத் தனியே போட்போது நோகவில்லை என்றாய் தண்ணீரைத் தனியே ஊற்றிய போதும் நோகவில்லை என்றாய், ஆனால் அந்த இரண்டையும் ஒன்றாய்க் கலந்த கலவைதானே செங்கட்டி, அதை உன்தலையிலை போட்டால் மட்டும் எப்படி நோகும் என்கிறாய்?’ என்றார்.

‘குருவே உண்மைத் தத்துவத்தைப் புரிந்து கொண்டேன், விதண்டா வாதத்திற்காக நான் அப்படி நடந்து கொண்டது தப்புத்தான், என்னை மன்னித்து விடுங்கள்’ என்றான் சீடன்.

‘நல்லது மகனே, தீயதைக் கண்டால் விலத்திக் கொள்வதும், நல்லதைத் தெரிந்து கொண்டு வாழப்பழகிக் கொள்வதும் உன்னைப் பொறுத்தது. ஏனென்றால் உன்னுடைய எதிர்காலம் உன்னில்தான் தங்கியிருக்கிறது’ என்று சீடனுக்குப் புத்திமதி சொன்னார் சாது.

இதனால் தானோ என்னவோ, குடி குடியைக் கெடுக்கும் என்று ஊரிலே பெரியோர் சொல்வர். இங்கே எப்படியோ?

நன்றி: தூறல்

குரு அரவிந்தன் கனடாவில் வாழ்ந்து வரும் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம் எழுதுவதுடன் கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனங்கள், மற்றும் நாடகங்களும் எழுதி வருகிறார். வாழ்க்கைக் குறிப்பு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தந்தை பெயர் அருணசலம் குருநாதபிள்ளை. காங்கேசன்துறை நடேசுவரா கல்லூரி, தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர். எழுத்துத் துறையில் இவரின் சிறுகதைகள், தென்னிந்திய சஞ்சிகைகளான ஆனந்த…மேலும் படிக்க...

1 thought on “மண்ணாங்கட்டி என்ன செய்யும்? – ஒரு பக்க கதை

  1. திரு குரு அரவிந்தன் அவர்கள் எழுதிய வணிக வகுப்பும் ரெட் வைனும் என்கிற கதையில் ‘க்ளைமாக்ஸ்’ஸாக வந்த அதே விவேகானந்தரின் கருத்தை மையமாக வைத்து இந்த ஒருபக்கச் சிறுகதையும் உறுவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *