மணியக்கா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 9, 2024
பார்வையிட்டோர்: 1,397 
 
 

சந்திப்பிழை போன்ற
சந்ததிப்பிழை நாங்கள்
காலத்தின் பேரேட்டைக்
கடவுள் திருத்தட்டும்
— நா.காமராசன் – கறுப்பு மலர்கள்

மணியக்கா லயித்து ஆடிக்கொண்டிருந்தாள்.என்னதான் மாயம் இருக்குதடி… கண்ணண் இசைத்திடும் தேன்குழல் தான்…. இதயம் உருக்குதடி….என பாடலுக்குள் தன்னை இழந்தவளாக அனிச்சையாக உடல் வளைத்து ஆடிக்கொண்டிருந்தாள்.பரதம் தான் அவள்.அவள் தான் பரதம்.கண்கள் கிறங்கி, கண்ணணோடு ஒன்றாக கலப்பது போலவும், அவனோடு காற்று வெளியில் கை கோர்த்து நடப்பது போலவும் ஆடிக்கொண்டிருந்தாள். பெரிய பெரிய சபாக்களில் எல்லாம் அரங்கேற்றம் செய்தவள் மணியக்கா. ஆடிய காலும் பாடிய வாயும் சும்மாயிருக்காது என்பது போல் இன்று இந்த ஊர் மக்களின் ரெக்கார்ட் டான்ஸ் மேடையில் ஆடுகிறாள்.

மணியக்கா முறையாகப் பயின்ற நடனமங்கையாய் இருப்பாள் என யாருமே அறிந்திருக்கவில்லை. ஊரே வாய் திறந்து பார்த்துக் கொண்டிருந்தது. விமலனும் கண்வெட்டாமல் மணியக்காவையே பார்த்துக் கொண்டிருந்தான். வானிலிருந்து விழுந்து தெறிக்கும் ஆலங்கட்டிகளைப் போல வண்ண ஒளிகள் மணியக்காவின் மீது விழுந்து உருண்டு ஓடியது.

அவள் இடுப்பின் நெளிவும், மேல் துணியின் விலகலும் விமலனுக்குள் ஹார்மோனைத் தூண்டியது. குடித்திருந்த சாராயம் மணியக்கா சொன்ன அண்ணாச்சியின் சேட்டைகளை நினைத்து நினைத்து அவனுக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. ஆட்டம் முடியட்டும் என்று விமலன் பொறுமையின்றிக் காத்துக் கொண்டிருந்தான்.

மணியக்காவை முதன்முதலில் பார்த்த போது விமலனுக்கு வயிற்றுக்குள் ஏதோ பிசைந்தது.பேருந்தில் தூங்கிக்கொண்டிருந்தவனின் தோளில் ஒரு கை விழுந்து நெல்லூருக்கு எம்புட்டு தூரம் என்ற போது விமலன் திடுக்கிட்டுட்டான். பக்கத்தில் வாய் நிறைய வெற்றிலையும், நெற்றியில் பெரிய பொட்டும், பாவாடைக்குப் பதில் வேட்டியும், இரண்டு நாள் மீசை தாடியும் பின்னப்பட்ட தலைமுடியுமாக ஐந்தரை அடி உயரத்தில் இருந்தாள். ஒன்னுக்கொன்னு முரணா இருந்தாலும் கண்ணுல ஒளியும், முகத்துல ஒரு தேஜசும் இல்லாம இல்ல. நாலாவது இறக்கம் என்று விட்டேத்தியாய் சொல்லிவிட்டு திரும்பி மறுபக்கம் இருந்தவனிடம் வாடகைக்கு வீடு புடிக்க முடியுமா என்றாள். எண்ணங்களுக்குள் மூழ்கிக் கிடந்த விமலனுக்கு அவள் குரல் குளிக்கப் போகும் பௌபு செட்டுக் கிணத்துக்குள்ளிருந்து ஒலிப்பது போல இருந்தது.

விமலனுடைய உடலுக்குள் திடீரென ஏற்படும் மாற்றங்களுக்கும், மனதில் தோன்றும் விசித்திர எண்ணங்களுக்கும் உருவம் கொடுத்தது போல் இருந்தாள் அவள்.நானும் ஒரு நாள் இப்படித் தான் போய்விடுவேனோ என்ற எண்ணம் மேலோங்க உடல் சிலிர்த்தது. ஆம்பளையாடா நீ, நெளியாம நேரா நில்லுடா, ஒழுங்கா நட, நகத்தைக் கடிக்காத, நிலத்துல கோலம் போட்ட கட்ட விரலை உடைச்சுடுவேன், விமலா வாடா குளிக்கப் போலாம், அங்கல்லாம் கையை வைக்காதீங்க மாமா என்ற வார்த்தைக் கோர்வைகள் ஒன்றன் மேல் ஒன்றாய் விமலனின் காதுக்குள் விழுந்து மனதை நிறைத்துக் கொண்டிருந்தது.ஆம்பளைனா கோவப் படனும்டா, எல்லாத்துக்கும் அழுதுகிட்டு மூக்க வடிச்சிகிட்டா வந்து நிக்கிறதுனு அம்மா சொன்னது நினைவுக்கு வர, உனக்கெல்லாம் வீடு புடிச்சுக் குடுக்கிறது தான் எனக்கு வேலையான்னு நெஞ்சை நிமிர்த்திய போது பேருந்தில் இருந்தவர்கள் விமலனை ஒரு மாதிரியாய் பார்த்தார்கள். ஊருக்கு புதுசு அதான் கேட்டேன் முடியலன்னா விட்டுரு என்று பலகீனமாய் முனங்கிவிட்டு நெற்றியில் பூத்திருந்த வியர்வையை ஆட்காட்டிவிரலால் வழித்து, கட்டை விரலோடு சேர்த்து நளினமாய் சுண்டினாள்.

ஒரு துளி விமலனில் தெறிக்க தலையை உலுப்பித் திரும்பிப் பார்த்தான். அவள் அவனையே பாவமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். என்ன பேரு என்றான். சுப்பிரமணி, மணியக்கானு கூப்பிடுவாக என்றாள்.

வேப்பங்குளத்துள ஒரு பெரிய வீடு வந்திருக்கு.கான்ராக்ட் எடுத்தாச்சு, வேலையாள் மட்டும் தான் பாக்கி. விமலா நீயும் வாறியா என்று பெயிண்டர் அண்ணாச்சி கேக்கும் போதே விமலன் சைக்கிளை எடுத்துக் கொண்டு தயாராகினான். முன்னாடி போயிட்டிரு விமலா. மாரியம்மன் கோயில் முக்குல நில்லு. இன்னும் ரெண்டாள பாத்து கூட்டியாந்திடுறன்னு போன அண்ணாச்சி அரை மணிநேரம் கழித்து மணியக்காவையும், சேகரையும் கூட்டிக் கொண்டு வந்துட்டிருந்தார்.

சைக்கிள் பாரில் ஒரு காலைப் போட்டுக் கொண்டு ஒரு காலால் ஊன்றி நின்று வேப்பமரத்தில் ஓடிக்கொண்டிருந்த அணில்களைப் பார்த்துக் கொண்டிருந்த விமலனுக்கு மணியக்காவைப் பார்த்ததும் கால்கள் வலுவிழந்து நிலத்தில் சரிவது போல இருந்தது. என்ன விமலா நாறின மீன நாயி பாக்காப்ல பாக்க… அதுவும் உன்னப்போல ரெண்டுங்கெட்டான் தான் என்ற அண்ணாச்சியின் தொனியில் நக்கல் தூக்கலாக இருந்தது.

முட்டிக் கொண்டு நின்ற கண்ணீரை அடக்கியபடி நா.. ஒன்னும் அப்டி இல்ல அண்ணாச்சி. சும்மா வாய்க்கு வந்தத பேசி ஆளுக முன்னாடி அவமானப் படுத்தாதிக என்று மட்டுமே விமலனால் சொல்ல முடிந்தது. அண்ணாச்சி விமலனைப் பற்றிச் சொன்ன தகவல் மணியக்காவிற்கு புதிதாக இருந்தது. ரொம்பத் தான் அலுத்துக்குறடே. அண்ணாச்சி இல்லாததையா சொல்லிட்டாக நீ ஆம்பளனா நாலு அடி நெளியாம நடந்து காட்டு என அண்ணாச்சியோடு சேர்ந்து கொண்டான் சேகர்.

அண்ணாச்சி வேலை கொடுக்கிறீக எங்கிறதுக்காக எது வேணும்ணானும் பேசலாம்னு நினைச்சிக்கிடாதிக. இந்த வேலை இல்லன்னா இன்னொரு வேலை. சின்னப் பயல அழ வைச்சிப் பாக்காதீக என்று மணியக்கா சொல்ல விமலனுக்கு மணியக்காவின் மீது முதல் முறையாக மரியாதை வந்தது.

உனக்கென்ன மணி. வாயிருக்கு .. பிழச்சுக்குவ. நம்மால அப்டியெல்லாம் முடியாது. பெயிண்ட் அடிச்சா தான் சோறு. பேசிகிட்டே நிக்காம நீயும் விமலனுமா அந்த கதைவுகளையும் சுவரையும் சாண்ட் பேப்பர் போட்டு தேச்சிருங்க. சேகரு சுண்ணாம்பை வடிச்சு நீலத்தைக் கலந்து ஒரு கோட்டிங் அடிச்சிட்டிருடேன்னு சொல்லிட்டே அண்ணாச்சி சைக்கிள எடுத்துட்டு கிளம்பிட்டாரு. அண்ணாச்சி திரும்ப வரும் போது மப்புல தான் வருவார்னும் விமலனுக்குத் தெரியும்.

அண்ணாச்சியோடு வெள்ளையடிக்க வருவது அவனுக்கு இது முதல் முறையில்ல. அண்ணாச்சிக்கு ஆள் கிடைக்கலன்னா விமலனையும் சேத்துக்குவார். விமலனுக்கு முக்காச் சம்பளம் குடுத்தாப் போதும். மேலதிகமா வேணும்னு கேட்கக் தெரியாதவன்.மேற்பார்வைக்கு ஆளில்லைனாலும் குடுத்த வேலையை செய்வான். இப்புடி எத்தன பேரு சம்பளத்த புடிச்சுகிட்டு குடுத்தாலும் புள்ளபேறுக்கு போயிருக்கிற அண்ணாச்சி பொண்டாட்டிக்கு பத்தவே பத்தாது.அவ வயிரும் வத்தவே வத்தாது.

ஆளில்லாத வீட்டில் ஆளுக்கொரு மூலையில் நின்று வேலை செய்வது ரெண்டு பேருக்குமே சங்கடமாக இருந்தது. யாரு முதலில் பேசுறதுன்னு யோசித்துக் கொண்டிருக்கும் போதே விமலன் தும்மினான். விமலா மூக்க மறைச்சு துண்ட கட்டிக்கோ. தூசியால்ல இருக்கு என சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டாள் மணியக்கா.

இரண்டாம் நாளிலேயே நீண்ட கால நண்பர்களைப் போல இருவரும் பேசிச் சிரித்துக் கொண்டே சைக்கிளில் போகும் போது ”ரெண்டுங் கெட்டான் ரெண்டும் ஒண்ணா போகுது.. இவனுக முகத்துல முழிச்சா உருப்பட்டாப் போல தான்” என்று தொப்பையைத் தள்ளிக்கொண்டே போனார் தலையாரி.

தனக்குள் ஏற்படும் எதிரும் புதிருமான எண்ண அலைகளை மணியக்காவிடம் எப்படியாவது சொல்ல வேண்டும் என விமலன் நினைத்தாலும் கூச்சம் தடுத்தது. எப்படியாவது பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக மணியக்கா, நீ நல்லா உயரமா ஆம்பளை மாதிரி தானே இருக்கிற, பிறகெதுக்கு பொம்பிளை மாதிரி நடந்துக்குற என்றான்.

கேட்டுக் கேட்டு புளிச்சுப் போய் எரிச்சல் படுத்துற கேள்வியா இருந்தாலும் அறிஞ்சுக்கனும்னு கேக்கிறவனுக்கு சொல்றது தானே நியாயம்னு மணிக்கு தோணிச்சு. பிறக்கிறப்போவும், வளர்றப்போவும் நானும் உன்ன மாதிரி ஆம்பிளயா தான் இருந்தேன். போக போக மனசோட ஆசை அதிகமாகி மூளையை கட்டிப் போட்டிருச்சு. நானும் இப்படியெல்லாம் இருக்கக் கூடாதுன்னு தான் முயற்சி பன்றேன். முடியலயே. மூளை தோத்துருது..ஆசை ஜெயிச்சுருது.

மனுசனோட வேறுவேறான குணாதிசயங்களுக்கும் காரணமான வெவ்வேறு மரபணுக்களை கற்றையாக ஒருங்கே கொண்டிருப்பது தான் குரோமோசோம். இந்த 46 குரோமோசோம்களும் இரண்டிரண்டாக மொத்தம் 23 ஜோடிகளாக இருக்கும். இதுல 22 ஜோடிகள் உடலின் பால் சம்பந்தப்படாத மற்ற அனைத்துப் பண்புகளையும் கட்டுப்படுத்தும். கடைசி ஜோடி குரோமோசோம்கள் பாலினம் சம்பந்தப்பட்டவை. அது எக்ஸ் எக்ஸ் என்று ஆண்களிலும் எக்ஸ் வை என்று பெண்களிலும் இருக்கும். இனப்பெருக்கத்தின் போது ஆண்களில் அது எக்ஸ் மற்றும் வை ஆகவும், பெண்களில் இரண்டு எக்ஸ்களாகவும் அளவில் மட்டுமல்ல பண்புகளிலும் சரிபாதியாக பிரிந்து கரு உருவாக உதவும். உருவாகும் கருவில் ஆணின் எக்ஸ்சும் பெண்ணின் எக்ஸ்சும் இணைந்து ரெண்டு எக்ஸ் குரோமோசோம் உருவானால் அது பெண்ணாக வளரும். ஆணின் வையும் பெண்ணின் எக்ஸ்சும் இணைந்து எக்ஸ்வை குரோமோசாமாக உருவானால் ஆணாகவும் வளரும். இன்னும் வேறுவிதமாக கூறினால் உருவாகும் கருவில் Y குரோமாசோம் இருந்தால் அது ஆணாகவும் Y இல்லையென்றால் அது பெண்ணாகவும் வளர்ச்சியடைகிறது எனலாம். ஒரு எக்ஸ் அல்லது ஒரு வை குரோமோசோம் அதிகமாகிவிட்டால் அந்தக் குழந்தை என்னைப் போல் பிறந்துவிடுகிறது.ஆண் பெண் என்பதனை உறுப்பின் மூலமாக அறிஞ்சிரலாம். ஆனா திருநங்கை என்பதை ஆணும் பெண்ணும் பருவ மாற்றம் அடையும் பதிமூனு வயசிக்கு மேல தான் கண்டுபிடிக்கலாம்ன்னு அறிவியல் விளக்கமும் குடுத்தா மணியக்கா. ஆனா அது ஒன்னும் விமலனுக்குப் புரிவதாக இல்லை.மணியக்கா பேசிட்டிருக்கிறப்பவே சாராய நெடியோடு அண்ணாச்சி உள்ளே நுழைந்தார்.

வாங்குற சம்பளத்துக்கு வேலை செஞ்சா தான் உடம்புல ஒட்டும். ஆராய்ச்சி என்ன வேண்டிக் கிடக்கு. பேசிட்டே நின்னு பழகினா உடம்பு தினவெடுத்திரும் விமலா. வேலை செய்ய வளையாது. மணி நீ மேல வா, வேலையிருக்குனு சொல்லிட்டே அண்ணாச்சி மாடிப்படியேறி மேல் அறைக்குள் போனார். பின்னாலயே மணியும் போனா. போன வேகத்துலயே திரும்பின மணி நீ எல்லாம் மனுசனாடா.இப்புடிப் பொழைக்கிறதுக்கு சாகலாம்னு அண்ணாச்சியை வசைபாடிகிட்டே மாடிப்படிகளில் கீழிறங்கினாள்.

பின்னாலேயே ஓடி வந்த வந்த அண்ணாச்சி பாதிப் படிகளிலேயே மணியின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஆரஞ்சு மிட்டாய்க்கு அடம் பிடிக்கும் சிறு குழந்தையைப் போல கெஞ்சினார். புரிஞ்சுக்கோ மணி.. பொண்டாட்டி வேற ஊரில இல்ல. சம்பளத்துல வேணும்னா இருபது ரூபா கூட்டித் தாறேன். மண்ணு தின்னுற உடம்ப மனுசன் தின்னுறதுல என்ன தப்பிருக்கு சொல்லு.அப்புடியே காப்பாத்தி வச்சு நீ யாருக்கு குடுக்கப் போறனு சொல்லிட்டே மணியக்காவை மேல் மாடிக்கு இழுத்துட்டுப் போனார்.

இதே போல தான் விமலன் பம்பு செட்டுல குளிச்சுட்டு இருக்கிறப்போ அங்க வந்த தலையாரி கிணத்துக்குள் குதிச்சு குளிக்க ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்துல விமலா நீச்சல் தெரியுமாடே உனக்குன்னு கேட்டவரிடம் எட்டிப் பார்த்து இல்லையென்று தலையாட்டினான். நீச்சல் தெரியாதவன்லாம் ஆம்பளையாடா . வா நா நீச்சல் பழக்கி விடுறேன்னு கூப்பிட தண்ணிக்குப் பயந்து படிகளில் இறங்கினான் விமலன்.

பயப்படாதடே இறங்கி வா நா இருக்கன்லே.. முதல்ல தண்ணிப் பயம் போகனும். பயப்படாம குதிச்சிரு.. முங்க விடாம நா தூக்கிடுறன்னு தலையாரி கரிசனையாய் சொல்ல விமலனும் குதித்தான். குதிச்சதும் தண்ணி வாய் மூக்கெல்லாம் போயி நாசியில ஏற மூச்செடுக்க முடியாமல் ஒரு நிமிடத்தில் சாவு இப்புடித் தான் வரும் போல என விமலன் நினைத்துக் கொண்டான். அதற்குள் தலையாரி விமலனின் முடியைப் புடிச்சு இழுத்து கடைசிப் படியில போட்டார். தலையாரி தொப்பையை நீருக்கு மேல் விட்டு ஒரு தவளை தலைகீழாய்க் கிடப்பது போல் மிதப்பதை பார்க்கும் போது விமலனுக்கும் நீச்சலை எப்படியாவது பழகிரனும்னு வைராக்கியம் வந்துருச்சு. மூச்சிரைப்பு அடங்கியதும் படியில புடிச்சுக்கிட்டே காலை மட்டும் அடிக்கத் தொடங்கினான். அதைப் பார்த்து பெரிதாய் சிரித்த தலையாரி தண்ணிக்குள்ள வந்தாத் தானுடா நீச்சல் பழகலாம்.என் கையப் புடிச்சுக்கோன்னு சொல்லி விமலனை நடுக்கிணத்துக்கு கூட்டிட்டு போயி அவன் எதிர்பார்க்காதப்போ இறுக்கி உதட்டோடு உதடு பதித்தார்.

சீய் விடுய்யா மானங்கெட்டவனேன்னு விமலன் உதறித் தள்ளி தண்ணிக்குள் மூழ்கி மூச்சுத் திணறி ஒரு கல்லைப் பிடித்து படியேறும் போது தலையாரி கட்டியிருந்த துண்டு விமலனின் கையில் இருந்தது.தலையாரி எதுவும் நடக்காதது போல் சிரித்துக் கொண்டே போகப் போக பழகிரும் வான்னு சொல்ல அருவருப்பாய் பார்த்த விமலன் துண்டைத் தூக்கி அவன் மேல் எறிந்துவிட்டு படியேறினான்.

படியிலிருந்து வேர்க்க விறுவிறுக்க இறங்கி வந்த அண்ணாச்சி நின்னுட்டே கனவு காணுறியோடே, இன்னைக்குள்ள தேய்ப்பு வேலையை முடிச்சுடனுன்னு சொல்லிட்டே போனார்.மணியக்காவுக்கு என்ன ஆயிருக்கும்னு அறிய விமலன் மாடிக்கு ஓடினான். அங்க மணியக்கா குப்புறக் கிடந்தா. விமலனைக் கண்டதும் உடையை ஒதுக்கியபடி எழுந்து கழிப்பறைக்குள் போனாள். உதடு கொஞ்சம் வீங்கியிருந்தது. பிறகு அன்றைய நாள் முழுவதும் ரெண்டு பேருமே பேசிக்கல.

வேலை முடிந்தும் இருவரும் பேசிக் கொள்ளாமலேயே வந்தார்கள்.விமலனின் வீட்டைக் கடக்கும் போது அப்பறங்காட்டி வீட்டுக்கு வா விமலா, ரெக்கார்ட் டான்ஸ் பாக்கப் போகலாம்னு மணியக்கா சொல்ல அதைக் கேட்டுக்கொண்டு நின்ற விமலனின் அம்மா சேர்க்கை சரியா இருந்தாத் தானடே நீ சரியா இருப்ப. இப்புடி ரெண்டுங் கெட்டாங் கூட திரியறதுக்கா ஒத்தப் பிள்ளையப் பெத்தன். நீ பசங்க கூட திரியறது தானே. எதுக்கு இது கூடல்லாம் சேருறன்னு கத்தினா.

எல்லாம் எனக்குத் தெரியும்னு சொன்னபடியே விமலனும், எதையுமே கேட்காதது போல மணியக்காவும் ஆளுக்கொரு பக்கமாய் போனார்கள். குளிச்சு, சாப்பிட்டுட்டு கொஞ்சம் இருட்ட ஆரம்பிக்க மணியக்கா வீட்டுக்குப் போனான் விமலன். மணியக்கா நல்லா குடிச்சுட்டு கிறங்கிய கண்களுடன் வீட்டிற்கு வெளியில் இருந்தாள். விமலனைக் கண்டதும் நா குழற எதோ சொல்லிவிட்டு கைகளை ஆட்டி பக்கத்தில் கூப்பிட்டாள். அவனுக்குள் கொஞ்சம் ஊத்திக் கொடுத்தா. முதலில் வேண்டாம் என மறுத்த விமலன் பிறகு மணந்து பார்த்துவிட்டு வாங்கிக் குடிச்சுட்டு மாங்காய் ஊறுகாயையும் முறுக்கையும் கடித்தான்.

மாடியில் என்ன நடந்திருக்கும் என்பதை எப்படியாவது அறிய வேண்டும் எனும் துடிப்பில் விமலன் காலையில் விட்ட கதையின் மீதியை மணியக்காவிடம் கேட்டான். மணியக்காவிற்கும் ஏதாவது சொல்ல வேண்டும் போல இருந்தது. ஆலய குருக்களா இருந்த அப்பாவுக்கு சேவை செய்ய கோயிலுக்குப் போனது, சங்கீதம், நாட்டியம் படிச்சது, முதல் முறையா சேலையோடு தன்னை பார்த்த தகப்பனார் கோயில் ஆனையின் காலில் கொண்டு போய் கட்டி விட்டது, காப்பாத்துறன் பேர்வழின்னு கூட்டிட்டுப் போய் இரவு முழுக்க தூங்க விடாம இம்சை பண்ணின சின்னக் குருக்கள் என்று எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா மணியக்கா சொன்னா.

விமலனும் தன் பங்குக்கு தனக்கு நடந்த சில சம்பவங்களையும் சொல்லி அழுதான். அழாதடா விமலா. எல்லாரும் குரோமோசோம் மாற்றத்தால இப்படி ஆகிறதில்ல.. சில பேர் வளர்ப்புலயும், முறையான பாலியல் கல்வி இல்லாததாலயும் இலகுவாக் கிடைக்கிற கலவி இன்பத்துக் அடிமைப்பட்டும் மனசளவில தன்னை ஒரு பெண்ணா நம்புறதாலயும் இப்படியாயிடுறாங்க. சம்போகிச்சு சுகம் அனுபவிக்கிற வரைக்கும் ஒவ்வொரு ஆம்பளையும் தன்னைத் தானே சந்தேகப்பட்டுக் கொண்டுதான் இருப்பான். ஆம்பளயாவோ பொம்பிளையாவோ பிறந்தா சந்தோசப்படனும்டா விமலா. அத விட்டுட்டு இவனுக நான் தான் பெருசு, நீ தான் பெருசுன்னு சண்டை போட்டுட்டே செத்துப் போயிடறானுக. வாழ்க்கையில நமக்கு ஒரு பொருள் கிடைக்கவே கிடைக்காதுன்னு தெரியறப்போ தான் அதன் வலியை உணர முடியும்.

எல்லாரையும் போல புருசன் வேணும், புள்ள வேணும்னு எனக்கும் ஆசை தான். ஆனா இவனுக எல்லாம் சம்போகிக்க மட்டும் தானே வருவானுக. இவனுகளுக்கு அன்புன்னா என்னன்னே தெரிய மாட்டேங்குது. தெரிஞ்சிருந்தாலும் அதை ஏன் என்கிட்ட காட்ட மாட்டேனுறானுக. நல்ல சினேகிதனாக் கூட பழக ஒருத்தனுக்கும் மனசில்லையே விமலா. நீ என் கூட சிநேகிதனா இருப்பியா, என் மேல அன்பா இருக்கியான்னு போதை உச்சத்துக்கு ஏற மணியக்கா விமலனிடம் அலம்பிக் கொண்டே கையை நீட்டி சத்தியம் செய்யச் சொன்னாள். விமலன் சத்தியம் செய்தபடி அவள் கையைப் பிடித்து எழுப்பி வா ரெக்கார்ட் டான்ஸ் பாக்கப் போகலாம்னு கூட்டிட்டுப் போனான்.

மணியக்கா ஆடிக் களைத்து மேடையில் நிற்கையில் ஒரு இரசிகக் குடிமகன் தள்ளாடிக் கொண்டே மேடையில் ஏறி மணியக்காவின் நெஞ்சுச் சட்டையில் 100 ரூபாயைச் செருவிட்டு விசிலடித்துக் கொண்டே இறங்கினான். அவன் பின்னாலேயே மணியக்காவும் தள்ளாடிக் கொண்ட இறங்க தலையாரியும் அண்ணாச்சியும் வழியை மறித்துக் கொண்டு நின்றார்கள்.அண்ணாச்சி தலையாரியிடம் சொல்லியிருப்பான். தலையாரி பல்லைக் காட்டிக் கொண்டே மணி எனக்காக நீ வீட்டுக்கு ஒருக்க வந்து ஆடனும், வெளிநாட்டு சரக்கு வாங்கி வெச்சிருக்கேன்னு தலையைச் சொறிந்தார்.

அண்ணாச்சியையும் தலையாரியையும் இடித்துக்கொண்டு நடுவில் புகுந்த விமலன் சொருகிய கண்களோடு வா போகலாம் என மணியக்காவின் கையைப் பிடித்து இழுத்தான். அந்தப் பிடி அண்ணாச்சி காலையில் பிடித்து இழுத்ததைப் போலவே இருந்தது. கைய விடு விமலா என உதறி முடியாமல் போகவே விமலனின் பின்னால் போனாள் மணியக்கா.

நீ வா, நா சொல்றேன்னு பிடியைத் தளர்த்தாமல் இழுத்துப் போனான் விமலன். மணியக்கா ஆடும் போது வண்ண விளக்குகளில் மின்னித் தெறித்த அங்கங்கள் அவனுக்கு திரும்பத் திரும்ப கண்ணுக்குள் வந்தது. கொஞ்ச தூரம் இழுத்துப்போன விமலன் எதிர்ப்பட்ட மரத்தின் மறைவில் மணியக்காவை தள்ளினான். நடக்கப் போவதை புரிந்து கொண்ட மணியக்கா, விமலா நீ சத்தியம் பண்ணினடா, மறந்துட்டியா, நாம சிநேகிதனுகடாண்ணூ ஏக்கத்தோடு முணங்கிக் கொண்டே விழுந்தாள்.

– ஜீவநதி – 2011 டிசம்பர் இதழ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *