“டார்லிங், இன்னிக்கு ஒரு முக்கியமான போர்ட் மீட்டிங் இருக்கு. கம்பெனி செகரட்டரி, செக்சன் ஹெட், லாயர் அப்புறம் சில போர்ட் மெம்பர்கள் கவர்ன்மெண்ட் நாமினி இப்படி பெரிய கும்பலை கூட்டிக்கிட்டுப் போகணும் . நான் அதனால இன்னோவாவை எடுத்துக்கிறேன். நம்ம நீ நல்லிக்கு போக நம்ம மாருதி ஆல்டோ வை எடுத்துக்க பிளீஸ்” என்று மனைவியிடம் கெஞ்சினார் சங்கரன். நான் மட்டும் என்னங்க லேடிஸ் கிளப் மெம்பர்கள் ஆறு பேர் போறோம். எப்படிங்க ஆல்டோவில போக முடியும். இதுல நம்ம கௌரவமும் இருக்கு புரிஞ்சிக்குங்க என்றாள்.
சங்கரன் ஒரு கணம் யோசித்தார். வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கும் தன்னால் இப்போது முரண்படுதல் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. வெளியில் சிரித்தபடி “ஓகே டார்லிங், நான் ஃபாஸ்ட் டிராக் புக் பண்ணிக்கிறேன். யூ கேரி ஆன்” என்று சொல்லியபடி கழுத்துப்பட்டியின் இறுக்கத்தை தளர்த்தியபடி கிளம்பினார்.
போன வாரம் அதிகம் விற்பனை இல்லாத தாய்மையின் குரல் பத்திரிக்கையின் ஆசிரியர் இந்திர சாமியை ரவுண்டு கட்டிய உரிமையாளர் எப்படியும் இந்த மாதம் சர்க்குலேஷனை அதிகப்படுத்திக் காட்டாவிட்டால் பத்திரிக்கையை ஊத்தி மூட வேண்டியதுதான் என்று அபாய அறிவிப்பு செய்திருந்தார். இந்திர சாமிக்கு வாய்த்த துணை ஆசிரியர்களில் அதிகம் துடிப்பான ஆள் பால்துரை. சும்மா அட்டகாசமான திறமைகள் கொண்ட ஆள். அவன்தான் அவருக்கு தேறுதல் சொல்லி “எல்லாம் பண்ணிடலாம் சார். கவலைபடாதீங்க. உங்க பத்திரிக்கை தர்மம் அது இது எல்லாத்தையும் கொஞ்சம் ஒதுக்கி வையுங்க. நான் இரண்டு மாசத்தில் நம்ம பத்திரிக்கையை மார்க்கெட்டில் கும்முன்னு தூக்கிடறேன்” என்றான்.
“யப்பா, எல்லாம் செரிதான். நான் இருபது வருஷமா பத்திரிக்கை நடத்தியிருக்கேன். என் பேர் ரிப்பேர் ஆகாம பார்த்துக்க” என்றார் இந்திரசாமி.
“சரிங்க அய்யா” என்றவன் “ஒரு வாரத்தில் நல்ல செய்தியுடன் வருகிறேன் என்னைத் தேட வேண்டாம்” என்று காதலனுடன் ஓடிப்போக இருக்கும் காதலிகள் எழுதிவைக்கும் கடித வரிகளைச் சொல்லிப் பறந்தான்.
போன வாரம் கன்னிமாரா நூலகத்தில் எதையோ தேட வந்த பால்துரைக்கு “தொழில் அதிபர்களின் வளர்ச்சியில் மனைவியர் பங்கு” என்ற கட்டுரை கண்ணில் பட்டது. அதில் அதிகம் பிரபலமாகாத பத்து பெயர்களை முதலில் எடுத்துக் கொண்டு வரிசையாக தொலபேசியில் அழைத்தான். முதலில் மாட்டியது நம் மங்களம் சங்கரன் அவர்கள்தான். மங்க்களம் சங்கரன் பெரும் பணக்காரத் தந்தைக்கு ஒரே மகளாக பூமியில் ஜனித்ததுதான் அவரது சாதனை. மற்றபடி பணக்கார வீட்டுப் பெண்களுக்கே உரிய அலட்டல்கள் வெட்டி அரட்டைகள், ஸ்டேட்டஸை காட்ட என்று உள்ள கடைகளை தினமும் போய் ஷாப்பிங் செய்தல் , வாட்ஸப், ஃபேஸ்புக் , ஐந்து நட்சத்திர ஹோட்டல் விருந்துகள், பணக்கார கிளப்புகள் போன்ற இத்தியாதி நித்திய கர்மானுஷ்டானங்கள் அவளுக்கும் உண்டு. வழக்கம் போல ஒன்றும் ஐவேஜி இல்லாத நல்ல பழக்க வழக்கம் கொண்ட புத்திசாலியான கட்டின பசுவான அப்பா தேர்ந்தெடுத்த மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கொண்டது . தந்தை கம்பெனியில் சேர்மன், மகள் வைஸ் சேர்மன், மாப்பிள்ளை நிர்வாக இயக்குனர். இப்போ சொல்லுங்கள் சங்கரன் அலுவலகத்திற்கு செல்ல ஃபாஸ்ட் டிராக் ஏற்பாடு செய்து கொண்டது சரியா இல்லையா என்று.
போனில் அம்மணியிடம் பேசிய பால்துரை முதலில் கட்டுரையைப் படித்து வியந்ததாக சொல்லி நேரில் சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினான். சந்திப்பின் போது, நிறையவே முகஸ்துதி செய்தவன் “அம்மா, உங்க சாதனைகள் இப்படி குடத்திலிட்ட விளக்காக இருக்கக் கூடாது. உலக அளவில் பரிணமிக்க வேண்டும். நீங்க மட்டும் கொஞ்சம் ஒரு இரண்டு மூணு லட்சம்செலவு பண்ணினால் போதும். அந்தப் பணமெல்லாம் உங்களைப் போன்ற மகாலட்சுமிக்கு சில்லரைக் காசு.அது நீங்க வாங்கும் ஒரு சாதாரண சேலை விலைதான். உங்க திறமைகளை உலகறியச் செய்து விடலாம் என்று ஆசை காட்டினான்.
“அப்படியா ஆனால் நான் ஒன்றும் பெரிசா சேவை எதுவும் செய்யவில்லையே” என்று அப்புராணியாகக் கேட்ட மங்களத்தை
“அம்மா, அநுமனுக்கு அவன் பலம் தெரியாதாம். அத மாதிரி உங்க உயரம் உங்களுக்கு தெரியவில்லை. அதை தெரியவைப்பது என் கடமை” என்று சொல்லி இருபதாயிரம் தனது சேவைக் கட்டணமாக அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு வந்தான்.
ஒரு வாரம் கழித்து வண்ண வழு வழு அழைப்பிதழை எடுத்துக் கொண்டு வந்தவன் மங்களம் கையில் கொடுத்தான். பிரித்துப் பார்த்த மங்களத்திற்கு சந்தோஷத்தில் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. தங்க நிற எழுத்துக்களில் வரும் மகளிர் தினத்தன்று எழுச்சியுடன் சமூக வளர்ச்சிக்கு பாடுபட்ட திருமதி. மங்களம் சங்கரன் அவர்களை ‘பணிபுரியும் பாவையர் பேரவை’ என்ற உழைக்கும் மகளிர் அமைப்பு தாய்மையின் குரல் பத்திரிக்கையுடன் இணைந்து “ஒப்பிலா அன்னை” விருது வழங்கிக் கௌரவிக்கிறது. அன்னாரின் சேவைகளைப் பாராட்டி நகரின் நான்கு முக்கிய பிரமுகர்கள் பேசுவார்கள் என்றும் விழாவின் ஒரு அங்கமாக பணிபுரியும் பாவையருக்கான நலத்திட்ட உதவிகளை செய்யவிருக்கிறார் என்று விளம்பியது. அழைப்பிதழைக் கண்டு மிரண்டு போன மங்களத்தை மேலும் மிரட்ட பத்துக்கு எட்டு வண்ணச் சுவரொட்டி, சிறு துண்டு பிரசுரங்கள் என்று கலங்கடித்தான். மொத்தமே அவன் அடித்தது எல்லாவற்றிலும் 100 தான். பத்திரிக்கை சாதாரண ஆட்களுக்கெல்லாம் வேண்டாம் . உங்க நட்பில் உள்ள பெரிய ஆட்களை மட்டும் அழையுங்கள், நிறைய கும்பல் இருந்தால் விழா கட்டுப்பாடாக இராது என்று அறிவுறுத்தினான். இப்போது செலவுக்கு மேலும் எண்பதாயிரம் வாங்கிக் கொண்டான்.
அடுத்தது காஜா மொகிதீனைப் பார்த்து நல உதவி வாங்க ஆள் ஏற்பாடு செய்ய வேண்டும். காஜா பிகு பண்ணிக் கொண்டான்.
“அப்பா பால்துரை, லேடிஸ் எல்லாம் கூட்டி வரது மகா தொந்திரவு. பத்திரமா கூட்டிப் போய் கொண்டு விடணும். பிரச்சினை வரக் கூடாது.”
“ என்னடா, உன்னய நம்பி கமிட்டாயிட்டேன். பார்த்து சொல்லுடா” என்றவனிடம்,
“ சரி. காலை எட்டுமணியிலிருந்து எட்டு மணி நேரம்தான் அதாவது மாலை நான்கு மணி வரை. இருட்டுக்கு முன்ன அவங்களை வூட்டில் விட்டிறணும் . இருபது பேரை கூட்டிப் போக திரும்ப கொண்டுவர டெப்போ டிராவலர் இரண்டு ஏற்பாடு பன்ணிடறேன். கூலி தனியா ஆளுக்கு ஐநூறு தரணும். அது தவிர இரண்டு வேளை டிபன், காபி ஒரு வேளை சாப்பாடு. எல்லாம் சேர்த்து மொத்தமா ஒரு ஐம்பதாயிரம் ஆகும் பரவாயில்லையா” என்றான். பால் துரை , மங்களத்திடம் விவரம் சொல்லி கூடுதாலாக ஒரு ஐம்பதாயிரம் கறந்தான்.
ஒரு நாள் கூலி ஐநூறு போயிடும், என்றவர்களைக் காஜா மொகிதீன் பொக வர ஏ.ஸி வேன் , மாலை ஐந்து மணிக்கெல்லாம் திரும்பிடலாம். காலை எட்டு மணிக்கு வீட்டில் வந்து ஏற்றிக் கொள்கிறேன் என்று உறுதி கொடுத்தும் சரிகைக் கரை போட்ட புடவை, நானூறு ரூபாய் பணம், டிபன், சாப்பாடு அப்படி, இப்படி ஒரு வாரமா சொல்லிச் சொல்லி வேப்பிலை அடித்து பரமு,முத்து, ரோசம்மா, மரியா, சக்தி என்று அப்படியும் இப்படியுமா இருபது பேரை தேத்திவிட்டான்.
ஊருக்கு வெளியே பெரிய கல்யான மண்டபத்தில் விழா. விழாவை ஒரு நாப்கின் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. பால்துரை அவர்களிடம் விளம்பரம் செய்து கொள்ள, போஸ்டர், அழைப்பிதழ், சிறு பிரசுரங்கள் செலவை அவர்களிடம் விட்டு விட்டான். விழாவில் வாழ்த்துரை வழங்கும் பெரிய மனிதர்கள் அதிகாரமிக்க பதவியில் இருந்து ஓய்வு பெற்று தற்சமயம் வீட்டில் அதிகம் பேச வாய்ப்பில்லாத, பேச மைக் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருக்கும் ரிட்டயர்ட் ஆசாமிகள். அவர்களைக் கிட்டத்தட்ட இலவசமாகவே பிடித்து விட்டான். அவர்களின் உரையை வீடியோ கவரேஜ் செய்து , பத்திரிக்கையில் எழுத ஏற்பாடு செய்தாகி விட்டது. ஆசிரியரிடம் நூறு பிரதிகளிக்கான ஒராண்டுச் சந்தாவுக்கான தொகை ரூ. ஒரு லட்சம் மங்களத்தால் செலுத்தப்படும். எல்லாச் செலவும் போக அவனுக்கு எப்படியும் ஒரு இருபத்தையாயிரம் நிற்கும். மங்களத்திற்குப் புகழ், விருது, பெருமை, நாப்கின் கம்பெனிக்கு விளம்பரம், முதிய அறிஞர்களுக்கு மேடை, பத்திரிக்கைக்கு அனாமத்தாக நூறு ஓராண்டுச் சந்தா, ஏழைகளுக்கு உதவி என்று பல் நோக்காக இப்படி கவனமாகத் திட்டமிட்டு அருமையாக வலை பால்துரை பின்னியிருந்தான்.
இன்னிக்கு மகளிர் தினம் கொண்டாட காரப் பாக்கத்தில் ஒரு கல்யாண சத்திரத்தில் விழாவை அந்த பன்னாட்டு நாப்கின் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. காலையில் ஒன்பது மணிக்கு ஏ. சி .வேனில் விழாவுக்கு போனதுமே டிபன் பொங்கல், இட்லியுடன் வடை மற்றும் காபி எல்லாம் காஜா மொகித்தீன் ஏற்பாடு செய்திருந்தான். இருபது பேருக்கும் 200 ரூபாயில் நைலக்ஸ் புடவை, ஒரு நாப்கின் பாக்கெட், வாசனை சோப்பு முதலான பொருட்கள், நானூறு ரூபாய் பணம் என்று எல்லாம் ஐம்பதாயிரம் ரூபாயில் அவன் ஏற்பாடு. அடுத்தது எல்லாரையும் படம் எடுத்தாங்க. ஒரே சந்தோசம்தான். மேடையில் மட்டும் இல்லாம கண்ணில் படும் எல்லா இடத்திலும் நிறைய நாப்கின் விளம்பர பேனர்கள். மேடையில் எண்ணி ஏழு நாற்காலிகள். நடு நாயகமாக மங்களத்திற்கு சிவப்பு வெல்வெட் சிம்மாசனம்.
காலை பது மணிக்கு விழாஆரம்பித்தது. சாரி சாரியாக கார்களில் விதவிதமான நறுமண வாசனையுடன் நூற்றுக்கணக்கில் மேல்தட்டு வர்க்க பெண்மணிகள் வந்திறங்கினர். யார் யாரோ பேசினார்கள். கை தட்டினார்கள். இவங்களுக்கு ஒன்னும் புரியலை. ஆனா மகளிர் விடுதலை எனற வார்த்தை வந்தா கைதட்ட சொல்லிட்டதாலே பிரச்சனை இல்லை.
முக்கிய பிரமுகரான மங்களம் பட்டுப்புடவையில், வைர அட்டிகையுடன் மேடைக்கு வந்தாங்க.
அவங்களைப் பார்த்த ரோசம்மாவுக்கு மயக்கம் வராத குறை. சக்தியிடம் வா, போயிடலாம் என்றாள்.மற்றவர்கள் புடவை வாங்கிட்டுப் போகலாம் என்று அவளை அடக்கி விட்டனர்.
மங்களம் பெண் விடுதலை பற்றி ஆங்கிலத்தில் பொரிந்து தள்ளினாங்க.
ஏகப்பட்ட பாராட்டு. வந்திருந்த நான்கு ரிட்டயர்ட் முன்னாள் அதிகாரிகளும் தங்கள் பதவிக்கால பிரதாபங்களை அல்ளி விட்டு அரை மணி நேரம் பேசிய பின்னர் மங்களத்தையும் தர்மதேவதை, கருணையின் பிறப்பிடம், தமிழ் நாட்டின் அன்னை தெரசா என்றெல்லாம் முன்பின் தெரியாத மங்களத்தை கூச்சநாச்சமின்றி என்று புகழ்ந்து தள்ளினர். ரோசம்மாவுக்கு மட்டும் தான் தெரியும் மேடையில் பேசும் தன் எசமானியம்மா புடவையில் லேசா துருக்கறை பட்டதுக்கு எகத்துக்குத் திட்டியதுமில்லாமல் நாலு நாள் சம்பளத்தை வேறு பிடிச்சது. இன்னிக்கு புடவை வாங்க விடுப்பு எடுத்தது தெரிந்தால் ருத்ர தாண்டவம் ஆடி, இந்த மாத சம்பளத்தை முழுசா பிடிச்சிடும்.
மங்களத்திற்கு ஆளுயர மாலை போட்டு பாராட்டுப்பத்திரம் பால் துரை யால் உருவாக்கப்பட்ட லெட்டர்பேட் அமைப்பான பணிபுரியும் பாவையர் பேரவைத் தலைவி என்ற வேடத்தில் வந்த ரோசம்மா வீட்டின் அருகில் வசிக்கும் துணை நடிகையைக் கொண்டு தரச் செய்த போது கூட்டத்தின் கவனம் தன் மீது இல்லாததை கவனித்தாள் ரோசம்மா. நைசாக பாத்ரூம் போவது போல் மெல்ல நகர்ந்து பாத்ரூமில் ஒளிந்து கொண்டாள்.
புடவை மற்றும் நாப்கின் வாங்கிக்க ரோசம்மா பேரை மைக்கில் கூப்பிட்ட போது, ரோசம்மா தப்பித்து விட்ட மகிழ்ச்சியுடன் பாத் ரூமுக்குள் மகளிர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்தாள்.