மகராசனாய் இரு !

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 11, 2017
பார்வையிட்டோர்: 5,587 
 
 

விநாயகர் படத்தருகில் இருந்த வெளிவாசல் லைட்டுக்குரிய சுவிட்சை ‘ஆன்’ செய்து விட்டு, சுவாமிநாதன் , வீட்டின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தார். அப்போது அங்கிருந்த நாய் விடாமல் குரைத்துக் கொண்டிருந்தது. என்ன இந்த நேரத்திலே நாய் கொரைக்குதுன்னு என்று நினைத்துக் கொண்டே சுவாமிநாதன் சுற்றும் முற்றும் பார்த்தார். சுவாமிநாதன் தோற்றத்தை யாரும் பார்த்தால் திரைப்பட நடிகர் பூர்ணம் விஸ்வநாதன்தான் ஞாபகத்திற்கு வரும்.

இளைஞன் ஒருவன் அவர் வீட்டினை நோக்கி வந்து கொண்டு இருப்பது, அவருக்கு தெரிந்தது. ‘வருவது யாரென்று தெரியவில்லையே ! ‘ என அவர் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே வாசல் முன்னே நின்றார். அந்த இளைஞன் அவர் வீட்டுக்கு மிக அருகில் வந்த பிறகுதான் அவருக்குத் தெரிந்தது. அவன் அடுத்த தெருவில், தனது அப்பா, அம்மா பாட்டியுடன் வசிக்கும், தனக்கு நன்கு தெரிந்த , கல்லூரில் படிக்கும் மாணவன் சிவா எனத் தெரிந்தது.

சிவா அருகில் வந்தவுடன் ,சுவாமிநாதன் அவனை உற்றுப் பார்த்தார். அவன் முகத்தில் பயமும் பதட்டமும் தெரிந்தது. சுவாமிநாதன் பதட்டத்துடன் சிவாவைப் பார்த்து “ என்ன சிவா இந்த நேரத்தில் இங்கு, ராத்திரி மணி பனிரெண்டாகப் போகுது .என்ன விஷயம் சொல்லு சிவா சொல்லு ! “ என்று கேட்டார்.

சுவாமிநாதனுக்கு சிவாவை நன்கு தெரியும். அவர்கள் இருவரும் சந்தித்தது பேசியது பழகியது எல்லாம் ஒரு எதிர்பாராமல்தான் நிகழ்ந்தது என்று கூறவேண்டும். மூன்று மாதங்களுக்கு முன், ஒருநாள் சுவாமிநாதன் என்பவர் மயிலாப்பூரில் உள்ள நூல்நிலையத்தில், செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென தலை சுத்தற மாதிரி தெரிந்தது. . எனவே அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தார். தெரிந்தவர்கள் யாரும் அப்போது அந்த நூலகத்தில் இல்லை எனத் தெரிந்தது.

எனவே அவருக்கு அருகில் அவரைப் போல் நூல்நிலையத்தில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த சிவாவைப் பார்த்து, “ தம்பி ! எனக்கு கொஞ்சம் தலை சுத்தற மாதிரி இருக்கு. தயவுபண்ணி என்னைக் கொண்டு போய் என்னோட வீட்டிலே கொண்டு போய் விடமுடியுமா ? “ என்று தயக்கத்துடன் கேட்டார்.

சிவா “ அய்யா உங்க வீடு எங்கே இருக்குன்னு மட்டும் சொல்லுங்கள் ? “ என்று கேட்டான்.

“ தம்பி இங்கு பக்கத்தில்தான் தெப்பக்குளம் அருகில் ஒரு பிள்ளையார் கோவில் இருக்குப்பார் . அதன் அருகில்தான் என்னோட வீடு இருக்கு. தயவுபண்ணி என்னோட வீட்டிலே கொண்டு போய் விடமுடியுமா ? உனக்கு ஒன்னும் சிரமமில்லேயே ! “ என்று மீண்டும் தயக்கத்துடன் கேட்டார்.

உடனே சிவா எவ்வித தயக்கமும் காட்டாமல் அவரைப் பார்த்து “ அய்யா பயப்படாதீங்க ! வாங்க உங்கள் வீடு எங்கேன்னு மட்டும் சொல்லுங்க “ எனக் கூறிக்கொண்டே அவரை கைத்தாங்கலாக நூல்நிலையத்திற்கு வெளியே அழைத்து வந்து, ஓரிடத்தில் உட்கார வைத்து விட்டு , அருகே இருந்த பெட்டிக் கடைக்கு வேகமாக சென்று இஞ்சி சோடா ஓன்று வாங்கி வந்தான். அதனை அவர் வேண்டாம் எனக் கூறியும் வற்புறுத்தி அவரை அருந்தும்படிச் செய்தான். அவர் அதை அருந்தியவுடன் அவருக்கு சிறிது தெம்பு வந்தது.

அவர் வீடு அருகில்தான் இருக்கிறது எனக் கூறியதால் , சிவா அவரை மெதுவாக கைத்தாங்கலாக நடத்தி, பிள்ளையார் கோவில் அருகில் இருந்த அவர் வீட்டிற்குள் சென்று, அவரை கட்டிலில் படுக்க வைத்துவிட்டுச் சென்றான். அவன் செல்லும்போது தன் கைபேசி நம்பரையும் கொடுத்து “ அய்யா வேறு ஏதாவது உதவி வேணுமின்னா இந்த நம்பருக்கு கூப்பிடுங்க” என்று கூறிவிட்டுத்தான் சென்றான்.

அவனுடைய இந்தச் செயலைப் பார்த்து இந்தக் காலத்திலும் இப்படிப்பட்ட பொறுப்பான, பிறருக்கு உதவும் இளைஞர்கள் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள் ‘ என வியந்து, சிவாவை சுவாமிநாதனுக்கு அன்றிலிருந்து மிகவும் பிடித்து விட்டது.

சிவாவும் சுவாமிநாதனும் அடிக்கடி அந்த நூல்நிலையத்திற்கு வரும்போதெல்லாம் இருவரும் சந்தித்து நன்கு பேசி பழகத் தொடங்கினார்கள். ஒருவருக்கொருவர் தங்கள் தங்கள் குடும்பத்தைப் பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டார்கள்.

சிவா பதட்டத்துடன் “ அய்யா ! என் பாட்டிக்கு ரெம்ப முடியல அய்யா !. பாட்டி ரெண்டு மூன்று தடவை வீட்டில் திடீரென்று வாந்தி எடுத்தாங்க அப்படியே மயங்கிட்டாங்க. நானும் அம்மாவும் பலமுறை கூப்பிட்டுப் பார்த்தும், பாட்டி கண்ணை முழிக்கலே ! அப்பா அவசர வேலையாக இன்று காலையில்தான் மதுரைக்கு பொறப்பட்டு போயிருக்கிறார். . அப்பா இல்லாததால் , அம்மாவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அழத்தான் தெரியறது. நானும் பாட்டியை கொண்டுபோய் எங்க தெருவிலே இருக்கும் டாக்டரை போய் பார்க்கலாம்னு, போனால் அவர் நேற்றுதான் குடும்பத்தோட திருப்திக்கு போய்விட்டார் என் தெரிந்தது என்று கவலையில் கூறியவன் மேலும் தொடர்ந்தான்.

“அய்யா ! உடனே பாட்டியை எப்படியாவது ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் சேர்க்கணும்னு, தெப்பக்குளம் அருகில் இருந்த ஆட்டோக்காரங்க ரெண்டு பேரைக் கேட்டேன். நடுராத்திரி ஆகிவிட்டதுன்னு யாரும் வரமாட்டன்காரங்க. மேலும் அவங்க குடித்துவிட்டு நல்ல மப்புலே பேசுறாங்க. அவர்களிடம் நான் என் பாட்டியின் நெலமையை எடுத்துக் கூறியும் அவர்களிடம் ஒன்னும் எடுபடவில்லை “ என்று படபடவென்று பதட்டத்துடன் சிவா கூறினான்.

மேலும் சிவா ஏதோ கூற முற்பட்டவனை சுவாமிநாதன் தடுத்து நிறுத்தினார். அவன் கூறியதிலிருந்து சிவாவின் பாட்டியின் உடல் நிலையையும், அவனுக்கும் அவன் அம்மாவுக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் பதட்டப்படுவதும், சுவாமிநாதனுக்கு நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. அவனுடைய பாட்டியை ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்ற வேண்டும் என்பதையும் நன்கு தெரிந்து கொண்டார்.

சுவாமிநாதன் சிவா மாதிரி பதட்டப்படாமல், அவனுக்கு நம்பிக்கையூட்டும் முறையில் “சிவா நீ ஒன்னும் கவலைப்படாதே. தெப்பக்குளம் அருகில் உள்ள வடக்குத் தெருவில், எனக்குத் தெரிந்த ஒரு ஆட்டோக்காரன் வீடு இருக்கு. அவனைப் போய் பார்த்து, நாம் அவனைக் கூட்டிக்கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு போகலாம் ….” என்று அவர் கூறிக்கொண்டு இருக்கும்போது , திடீரென்று கரண்ட் கட்டாகி , அந்த இடமே இருளில் மூழ்கியது. அப்போது வானம் வேறு மழை மேகத்துடன் காணப்பட்டது.

சுவாமிநாதன் சிவாவை பார்த்து “ சிவா , இரு வரேன் “ எனக் கூறிவிட்டு, வீட்டிற்குள் சென்று, ஒரு டார்ச் லைட், குடையுடனும் வெளியே வந்தார். அவர் வெளியே வந்தவுடன், மழைத் தூறல் தூற ஆரம்பித்தது.

‘ பகவானே ! என்ன சோதனையடா ! ஒரு உயிரைக் காப்பத்தனும்னு நெனைக்கும்போது , லைட்டும் போச்சு, மழையும் தூற ஆரம்பித்து விட்டதே ‘ என சுவாமிநாதன் தனக்குள்ளேயே நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டார். இருவரும் ஒரு குடையின் கீழ் நடந்து சென்றார்கள். மயிலாப்பூர் தெப்பக்குளத்தை ஒட்டியுள்ள வடக்குத் தெருவில்தான் ஆட்டோக்காரன் குடிசை வீடு இருந்தது.

சுவாமிநாதன் ஆட்டோகாரன் குடிசை வீட்டுக் கதவை தட்டிக் கூப்பிட்டார். இரண்டு மூன்று தடவைக் கதவை தட்டிய பிறகுதான் ஆட்டோக்காரன் வெளியே வந்தான் கதவை திறந்து கொண்டு. அவன் வீட்டிற்கு வெளியே வரவும், கரண்ட் வரவும் அங்குள்ள தெருவிளக்கு எரிந்தது. விளக்கு வெளிச்சத்தில் ஆட்டோக்காரன் குடிசை வீடு நன்கு தெரிந்தது.

வெளியே வந்த ஆட்டோக்காரன், தூக்க கலக்கத்துடன் கண்களை கசக்கிக்கொண்டு, சுவாமிநாதனைப் பார்த்தவுடன்
“ சாமி ! என்ன சாமி ! இந்த அர்த்த ராத்திரியிலே …” எனக் கேட்டான்.

உடனே அவர் பதில் சொல்வதற்கு முன்பாக, அவர் அருகில் இருந்த சிவா குறுக்கிட்டு ,“ என்னோட பாட்டிக்கு ரெம்ப முடியலே. அவங்களை உடனே இங்க பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்க்கணும். அதான் ஆட்டோவை கூப்பிட்டு போகணும்னு நாங்கள் வந்தோம், உடனே ஆட்டோவவை எடுத்துக் கிளம்புங்க “ என ஆட்டோக்காரனை அவசரப் படுத்தினான்.

“இந்த அர்த்த ராத்திரியிலே வந்து ஆட்டோவை வந்து கூப்பிடரேயே. அதெல்லாம் என்னால் சவாரிகெல்லாம் வரமுடியாதுப்பா ! வேற ஆட்டோவைப் போய்ப் பாருப்பா ! ~ என்றான் தயவு தாட்சனியம் இல்லாமல் கூறினான். .

“அப்படியெல்லாம் சொல்லாதீங்க. என் வயதான பாட்டிக்கு முடியலேனுதான் இந்த நேரத்தில் வந்திருக்கோம்.”
என்று கூறிக்கொண்டே சுவாமிநாதனை சிவா பார்த்தான்.

சுவாமிநாதன் ஆட்டோக்கார்னைப் பார்த்து “இந்த தம்பியின் பாட்டிக்கு ரெம்ப முடியலேப்பா. உடனே ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்க்கணும். ஆட்டோ வேணும் உடனே கிளம்புப்பா ..” என்று அவசரப்படுத்தினார்.

“என்ன சாமி! இந்த அர்த்த ராத்திரியில் வந்து ஆட்டோவை கூப்பிடுறீங்க சாமி. அதெல்லாம் என்னால் இப்போ வரமுடியாது சாமி.! “ என சிவாவிடம் கூறியது போலவே கூறினான். ஆனால் அவரிடம் பேசும்போது மெதுவாக பேசினான்.

சுவாமிநாதன் உடனே மீண்டும் அவனை நோக்கி
“எனக்காக வாப்பா . சிவா தம்பி எனக்கு ரெம்ப வேண்டியவருப்பா அவன் பாட்டி ரெம்பா சீரியஸாக இருக்காங்க. மறுக்காமல் வாப்பா “ என்று ஆட்டோக்காரனை வற்புறுத்தினார்.

ஆட்டக்காரர் “சரி சாமி ! உனக்காக வரேன் சாமி. ஆனால் இருநூறு ரூபா கொடுக்கச் சொல்லு. தம்பிட்டே சரியானு கேளு சாமி “ என்று பேரம் பேசினான்.

அவன் வருகிறேன் என்று கூறியதே, பெரிய புண்ணியம் என சிவா நினைத்து, உடனே அவனிடம் “இருநூறு ரூபாய் இல்லே முன்னூறு ரூபா கூட கொடுக்கிறேன். உடனே ஆட்டோவை எடுத்து சீக்கிரமா வாங்க “ என்று பரபரத்தான்.

சிவாவும் சுவாமிநாதனும் , பாட்டியை பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் ஆட்டோ மூலம் கொண்டு சேர்த்தனர். பாட்டியின் உடல் நிலையை சோதித்த டாக்டர் பாட்டிக்கு வயதாகி விட்டதாலும், அதிகமாக வாந்தி எடுத்து விட்டதாலும் மயங்கிவிட்டார். வேறு ஒன்றும் இல்லை என சிகிச்சை அளித்து அரைமணி நேரத்திற்குள் டாக்டர் அனுப்பி விட்டார். சுவாமிநாதனை அவர் வீட்டில் விட்டு விட்டு, சிவா ஆட்டோவில் தனது வீட்டுக்கு பாட்டியுடன் திரும்பினான்.

பாட்டி சிவாவுடன் வீட்டிற்குள் வந்து கட்டிலில் படுத்துக்கொண்டே தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு சிவாவை நோக்கி “சிவா நல்லவேளை, நீ இன்னக்கி வீட்டிலே இருந்ததாலே நான் பிழைச்சேன். “ என்றாள்.

அதற்கு சிவா பாட்டியைப் பார்த்து “ பாட்டி ! உன்னை உண்மையில் காப்பாத்தியது நான் இல்லே பாட்டி ! . இந்த உன் கட்டுலுக்கு பக்கத்திலே நிற்கார்ரே, இந்த ஆட்டோகாரர்தான் பாட்டி ! நன்றி சொல்லணும்னா அவருக்குச் சொல் பாட்டி! “ என அருகில் உள்ள ஆட்டோகாரனைச சிவா சுட்டிகாட்டினான்.

அப்போது பாட்டி, தன் கட்டிலுக்கு அருகே இருந்த ஆட்டோக்காரரை பார்த்து , தன் இரு கரம் கூப்பி அருகே அழைத்து “பேராண்டி !நீயும் உன் குடும்பமும் பிள்ளைகுட்டிகளும் நல்ல இருக்கணும். நீயும் மகராசனாக இரு ! “ என்று கண்களில் கண்ணீர் பெருக, நன்றி பெருக்குடன் வாழ்த்தினாள்.

அருகே இருந்த ஆட்டக்காரர் பாட்டியை பார்த்து “ பாட்டி! உடம்பை நல்ல பார்த்துக்க. நான் வரேன் “ என்று கூறிக் கிளம்பியவனைப் பின் தொடர்ந்து சென்ற சிவா, அவனிடம் முந்நூறு ரூபாயை ஆட்டோக்காரனிடம்’ நன்றி ‘எனக் கூறிக் கொண்டே நீட்டினான்.

ஆட்டோக்காரன் “பரவாயில்லை தம்பி ! “ என்று சிவாவிடம் கூறியதோடு சிவா கொடுத்த முன்னூறு ரூபாயை வாங்க மறுத்து விட்டு , தம்பி இந்த முந்நூறு ரூபாய் உங்க பாட்டிக்கு, இந்த பேராண்டியோட, உதவியாக இருக்கட்டும். உன் பாட்டி, என்னையும் பேராண்டின்னு சொல்லி என்னை வாழ்த்தியது கோடி ரூபா பெறும் தம்பி.! வர்றேன் தம்பி பாட்டியை நல்ல பாத்துங்க தம்பி ! “ என்று கூறிக்கொண்டே வெளியே சென்று, தனது ஆட்டோவை ‘ஸ்டார்ட்’ செய்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *